தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

செவ்வாய், 3 ஆகஸ்ட், 2021

நீங்கள் யார்?

 


“நீங்கள் யார்?”

“நீங்கள் யார்?” என்று யாராவது கேட்டால் என்ன சொல்வீர்கள். வீட்டில் வந்துகேட்டால் “நான் இன்னாரது மகன் அல்லது மகள் ; இன்னாரது தந்தை அல்லது தாய்” என்று யாரேனும் ஒருவரை மையமிட்டு அடையாளம் காட்டுவீர். சாலையில் கேட்டால், கேட்பவர் யாரென்று பார்த்து, “எதற்காகக் கேட்கிறீர்கள்” எனக் கேட்பதுண்டுதானே? அவர் பணம் கொடுப்பவராக இருந்தால் விருப்பாகவும் ; பணம் கேட்பவராக இருந்தால் வெறுப்பாகவும் விடை சொல்வதும் இயல்புதானே. காகிதப்பணம்தான் குணத்தைத் தீர்மானிக்கும் திறமுடையதாக இருக்கிறது. ஒரு அலுவலகத்தில் இதே கேள்வியைக் கேட்டால் “இந்தப் பதவி” எனக்கூறுவதனையும் காணமுடிகிறது. கையூட்டு பெறுபவர்தான் பதவியினையும் பெயரினையும் சொல்ல அஞ்சுவர். அதனால்தான் யாரேனும் தவறுசெய்தால்,  “உன் பெயர் என்ன?” என்று  கேட்டுப்பாருங்கள். உடனே, கோபம் பலூனில் வெடித்துவரும் காற்றுபோல் “ஏன்…கேட்கிறாய்?” என வேகத்துடன் ஒலிக்கும்.

“நீங்கள்” என்பது அத்தனை வலிமையுடைய சொல். உங்கள் ஊரிலிருந்து நகரத்திற்குச் செல்லும்போது “நீங்கள் யார்?” எனக் கேட்டால்  என்ன சொல்வீர்கள். ‘இந்த ஊரன்” எனச் சொல்வீர். வேறு மாநிலத்திற்குச் சென்றிருக்கிறீர். என்ன சொல்வீர்?. “இந்த மாநிலத்தன்” என்று சொல்வீர். வேறு நாட்டிற்குச் சென்றிருக்கிறீர். என்ன சொல்வீர். உங்கள் நாட்டின் பெயரைத்தானே சொல்வீர். அப்படியென்றால் உங்களுடைய பெரிய அடையாளம் உங்கள் நாடுதானே? அந்த நாட்டை நீங்கள் நன்றாக அறிந்து வைத்திருக்கிறீரா?. ‘இல்லை’ என்றாலும் ‘ஆம்’ என்றாலும் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிக்க. எத்தனை மதிப்பெண் என்று கேட்கிறீரா? ஒவ்வொரு வினாவிற்கும் பத்து மதிப்பெண் போட்டுக்கொண்டு எத்தனை மதிப்பெண் என நீங்களே கணக்கிட்டுக்கொள்க. அந்த மதிப்பெண்தான் உங்களுக்குரிய மதிப்பெண். மதிப்பெண் கூடுதலாக இருந்தால் நீங்கள் உங்களை பெருமிதமாகக் காட்டிக்கொள்வதில் வல்லவர் என நீங்களே தோளில் தட்டிக்கொள்ளுங்கள். மதிப்பெண் குறைவாக இருந்தால், நேர்மையாக ஒப்புக்கொண்ட உம் நற்குணத்திற்காக நீங்களே உங்களைப் பாராட்டிக்கொள்ளுங்கள்.

வினா 1. உங்களுடைய நாடு இறைமை நாடு – அப்படியென்றால்?

“இறைமை” என்பது இத்தகைய பெருமை உடையது என வரையறுக்க இயலாத பெருமையினை உடையது. தானேதன்னை இயக்கிக்கொள்ளும் முழுமையினை உடையது. பிறநாடுகளின் தலையீடு இல்லாமல் முழுமையாகச் செயல்படும் திறமுடையது

வினா -2 : உங்கள் நாடு குடியரசு நாடு - அப்படியென்றால்?

குடிமக்களால் இயக்கப்படுவது. குடிமக்களே தம் தலைவரைத் தேர்வுசெய்து ஆளச்செய்வது. பரம்பரையால் வருவதில்லை.

வினா -3 : உங்கள் நாடு பொதுவுடைமை நாடு – அப்படியென்றால் ?

தன்னுடைமைக்கு எதிரான சொல் பொதுவுடைமை. தனக்காகப் பொருளைவைத்துக்கொள்ளாமல் அனைவருடனும் பங்கிட்டுக்கொள்வது.

வினா -4 : உங்கள் நாடு மதச்சார்பற்ற நாடு – அப்படியென்றால்?

அனைத்து மதத்தினருக்கும் ஒரே வகையான உரிமையினையும் சுதந்திரத்தையும் அளிப்பது.

வினா -5 : உங்கள் நாடு சமத்துவத்தைப் பின்பற்றும் நாடு – அப்படியென்றால்?

சாதி, மதம், நிலை என எவ்வகை வேறுபாடுமின்றி ஒரே நிலையில் அனைவரையும் நோக்குவது.

வினா -6 : உங்கள் நாடு அரசியல் உரிமை உடைய நாடு – அப்படியென்றால்?

எத்தகைய மனிதராக இருந்தாலும் அவர்களுக்கு ஓட்டுரிமை உண்டு. ஒவ்வொரு ஓட்டிற்கும் சமமான மதிப்பெண் அளிக்கப்படுவது.

வினா – 7 : உங்கள் நாடு நீதிமன்றத்தையே உச்சநிலையாகக் கொண்டு செயல்படுவது – அப்படியென்றால்?

அனைவர்க்கும் அரசியல் நிர்ணயச்சட்டத்தின்படி ஒரே வகையான நீதியினை வழங்குவது.

வினா – 8 : உங்கள் நாடு சகோதரத்துவத்தைப் பின்பற்றுவது – அப்படியென்றால்?

அனைத்து மக்களையும் உடன் பிறந்தவராக எண்ணி அன்பு பாராட்டுவது.

வினா- 9 : மக்களாட்சியை மூன்று தூண்களே தாங்கிக்கொண்டிருக்கிறது . அப்படியென்றால் ?

சட்டமன்றம், நீதித்துறை, நிர்வாகத்துறை என மூன்றும் மக்களைக் காக்கச் செயல்படுவது.

வினா – 10 : உங்கள் நாட்டிற்கென ஒரு உறுதிமொழி உண்டு – அப்படியென்றால்?

இந்தியா என் நாடு . இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தோர்.

என் நாட்டை நான் பெரிதும் நேசிக்கிறேன். இந்நாட்டின் பழம்பெருமைக்காகவும், பன்முக மரபுச்சிறப்புக்காகவும் நான் பெருமிதம் அடைகிறேன். இந்நாட்டின் பெருமைக்குத் தகுந்து விளங்கிட என்றும் பாடுபடுவேன். என்னுடைய பெற்றோர், ஆசிரியர்கள் எனக்கு வயதில் மூத்தோர் அனைவரையும் மதிப்பேன். எல்லோரிடமும் அன்பும் மரியாதையும் காட்டுவேன். என் நாட்டிற்கும் என் நாட்டும் மக்களுக்கும் உழைத்திட முனைந்து நிற்பேன். அவர்கள் நலமும் வளமும் பெறுவதிலேதான் என்றும் மகிழ்ச்சி காண்பேன். ஜெய் ஹிந்த்.

இப்போது நீங்கள் நூற்றுக்கு நூறு பெற்றிருந்தால் உங்களுடைய மதிப்பினை நீங்கள் முழுமையாக உணர்ந்துவிட்டீர்கள். அப்படி உங்கள் குழந்தைகளையும் பெரியோர்களை மதித்து வாழக் கற்றுக்கொடுத்துவிட்டால்போதும். நாட்டில் சோம்பல் இருக்காது ; குடி இருக்காது ; முதியோர் இல்லம் இருக்காது ; வறுமை இருக்காது.

இந்தக்கருத்துக்களை எல்லாம் குழந்தைகள் காதில் நூல்போல் நுழையவிடுங்கள். அவர்கள் ஆடையாக்கி தங்கள் மானத்தைக் காத்து நாட்டையும் காத்துவிடுவார்கள்.

வறுமை நிலையில் வளர்ந்த குழந்தைகள் எல்லாம் டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக்கில் கலந்துகொண்டு நாட்டுக்குப் பெருமை தேடித்தந்துள்ளார்களே. சில குழந்தைகள் வறுமை நிலையிலிருந்து ஆட்சியராக, பட்டயக்கணக்கராக, மருத்துவராக வந்தார்கள் ; வருகிறார்கள் ; வருவார்கள். உங்கள் குழந்தையையும் அப்பெருமைக்குரியவரில் ஒருவராக மாற்றலாம்தானே? மாற்றிவிட்டால் நீங்கள் நீங்கள் தான்.

 

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2021

உழவு மட்டுமில்லை நலிந்தது

 


உழவு மட்டுமில்லை நலிந்தது

     தாய்மொழியில் பாடங்களைக் கற்பிக்கவேண்டும் என்று சொல்லாதவர் எவரேனும் உண்டா? எல்லோரும் அதற்காகப் பாடுபடுகிறார்கள். ஆனால் நடைமுறையில் நடைபெறவில்லை. எப்படி? இதற்கான சதியில் பின்னால் இருந்து யாரோ தடுத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பது வெள்ளிடைமலை. உணவில் உப்பு போன்றது, சமூகத்தில் கல்வி. அது இல்லாவிட்டால் வாழ்க்கை சுவைக்காது. ஆனால், உப்பு என்பது கெடுதியானது. உயிருள்ள நுண்ணுயிரிகளைக் கொன்றுவிடுகிறது. அதனால்தன் இறந்தவற்றைக் கூட கெடாமல் வைத்திருக்க உப்பு பயன்படுத்தப்படுகிறது. அந்த உப்பிலும் கல் உப்பா? பொடி உப்பா? எனக் கேள்வி கேட்டு ஒவ்வொரு நாளும் இது நல்லது ! அது நல்லது ! என மக்களைக் குழப்பிவிடும் நிலையினையும் காணமுடிகிறது. யார் என்று கேட்கிறீர்களா?

இன்று வீட்டில் பெரியவர்கள் இருந்தால் பெரியவர்கள் சொல்வதைக் கேட்போம். வீட்டில் இருந்த பெரியவர்கள் எல்லாம் முதியோர் இல்லங்களிலும் வீட்டு மூளைகளிலும்  முடங்கித்தானே கிடக்கிறார்கள். அவர்களுக்குரிய மதிப்புடன் அவர்கள் மதிக்கப்படுகிறார்களா? இல்லைதானே. அப்படி மதிப்பதாயிருந்தால் உலகம் வெப்பமயமாகி இருக்காது ! வெள்ளம் ஊருக்குள் புகுந்திருக்காது ! முப்போகம் விளைவது கனவாகி இருக்காது ! உழவு நிலம் வறண்டிருக்காது ! உழவன் வறுமையில் உழன்றுக்கொண்டிருக்கமுடியாது ! குளங்களில் வீடுகள் கட்டப்பட்டிருக்காது ; தொழிற்சாலைகள் மூடப்பட்டிருக்காது. இன்னும் எத்தனையோ காதுகள் சொல்லலாம். ஆனால், காது கொடுத்து கேட்பவர்கள் எத்தனை பேர்?. உங்களைப்போல் சில நல்லவர்களைத் தவிர.

உழவுத்தொழில் வேர். மற்றவை கிளைகளும் இலைகளும். மற்றதொழில்களுக்கு அடிப்படையாக வேர் போன்ற உழவுத்தொழில் உணவிடும். மற்ற தொழில்கள் இலைகள் பச்சையம் சேர்ப்பதுபோல் சேர்த்து வேருக்குப் பலம் சேர்ப்பதுபோல் உழவைக் காக்கவேண்டும். ஆனால், செய்கிறதா? அனைத்துத் தொழில்களும் வானைத் தொட முயற்சிக்கின்றனவே அன்றி உழவுத்தொழிலைக் கவனிக்க மறந்துவிட்டது.  கதிரவன் எழும் முன்னே எழும் கதிரவன்கள் உழவர்கள்தானே. மற்றவர்கள் எவ்வெவ்வாறோ வளர்ச்சியடைந்துவிடும்போது உழவர்கள் மட்டும் எப்படி ஏழையாகவே இருக்கிறார்கள். எண்ணிப்பார்க்கவேண்டும்தானே? இதற்குப் பின்னணி என்ன?

அன்றைய இளைஞர்கள் தலைவர்கள் அழைத்த பாதையில் சென்று நாட்டு விடுதலைக்குப் போராடினர். விடுதலை பெற்றனர். பின்னர் இளைஞர்களுக்கு என்ன வேலை? புதிது புதிதாகத் தொழில் தொடங்கினரா? மகாகவி பாரதியார் கூறிய ‘ஆலை அமைப்போம்.. ஊசிகள் செய்வோம்” என்றெல்லாம் பாடினாரே. எத்தனை இளைஞர்கள் முன் வந்தார்கள். நாட்டில் சட்டங்களும் வாய்ப்புகளும் குவிந்துகிடக்கின்றன. முன்வரவேண்டியது யார் பொறுப்பு? இன்றைய இளைஞர்களுக்குத் தலைவர்களாக திரைநாயகர்களே இருக்கிறார்கள். அவர்கள் கூறினால்தான் ஒரு தொழிலைத் தொடங்குவார்கள் என்னும் நிலையில் இருப்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது. இதை உணர்ந்து நாயகர்கள் தொழிற்சாலைகளை உருவாக்கச்சொல்லலாம்தானே? எல்லைகளில் அச்சுறுத்திக்கொண்டிருக்கும் நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான பொருட்களை வாங்கிக்கொண்டிருப்பதுதான் இன்றைய கவலைக்குரிய நிலை. நாமே எதிரிக்குக் காசு கொடுத்தால் என் செய்வது? இதற்குப் பின்னணியில் இருப்பதுயார்?

இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும் யார் இத்தகைய செயல்களுக்கு எல்லாம் பின்னால் இருந்துகொண்டு செயல்படுவார்கள் என்று. ஆம், நாட்டிற்கு எதிரானவர்கள்தான். “அவர்கள் யார்?” என்று கேட்கிறீர்களா? எந்த நாட்டிலெல்லாம் தங்கள் பொருட்களை விற்பனையாக வேண்டும் என எண்ணுகிறார்களோ, எங்கே நம் நாடு வளர்ந்துவிட்டால் அவர்கள் வருமானம் குறையும் என்று நினைக்கிறார்களோ அந்த நாடுகள்தான். அவர்களே, நம் நாட்டில் உள்ளவர்களை சோம்பேறிகளாக ; போதைக்கு அடிமைகளாக ; குடிகாரர்களாக ; புகைப்பவர்களாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். பசியை மறக்க இப்பழக்கத்திற்கு அடிமையானவர்களையும் பார்த்திருக்கிறேன். அவர்களையெல்லாம் காப்பாற்றுவது யார்? இளம் வயதிலேயே போதைப்பொருட்களில் சிக்கிக்கொண்டு இறப்பவர்களைக் காப்பாற்றுவது யார்? அவர்களின் குடும்ப உறுப்பினர்களைக் காப்பது யார்? அநாதைக் குழந்தைகளை உருவாக்கும் சூழலை உருவாக்குவது யார்? இந்த இத்தனை யாருக்குப் பின்னும் பெருமுதலைகள் ஒளிந்துகொண்டிருக்கின்றன. விழிப்புணர்வோடு பாருங்கள்.

நம் நாடு முதலிடத்தில் வந்துவிடக்கூடாதென எண்ணும் கயவர்களே அவர்கள். நாளிதழைப் புரட்டிப்பாருங்கள். சொத்தினைக் கேட்ட மகனைக் கொன்ற தந்தை ; குடிகாரக் கணவனைத் திருத்தமுடியாமல் தாயும் மகளும் தற்கொலை ; குடிப்பதைக் கண்டித்ததால் கணவன் தற்கொலை என ஒரே நாளில் ; ஒரே பக்கத்தில் வெளிவந்த செய்திகள்தான் இவை. இப்படி இறப்பவர்கள் பெரும்பாலும் இருபது முதல் நாற்பது வயதுக்குள் இருப்பவர்கள் தான். யாரால் உலகில் உள்ள நாடுகள் அனைத்து வளம் பெற்றுக்கொண்டிருக்கிறதோ அத்தகைய மக்களை தெருக்களில் மயங்கிக்கிடக்கவைத்திருக்கிறது அந்நியரின் ஆளுமை.

எப்போதிலிருந்து தொடங்கியது எனக் கேட்கிறீரா? இதற்கு இயற்கை வேளாண் அறிஞர் காலஞ்சென்ற நம்மாழ்வாருடைய சொற்களைச்சொல்கிறேன், எளிமையாகப் புரிந்துகொள்வீர்.  “ஆங்கிலேயர்கள் பாலில் தண்ணீரைக் கலக்க மாவினைக் கண்டுபிடித்தார்கள். ஆனால், தமிழர்கள் பாலில் தண்ணீரைக் கலந்துகுடித்தார்கள். தமிழர்களின் அறிவுத்திறத்தைக் கண்டு வியந்த ஆங்கிலேயன் மாட்டின் வளத்தை அறிந்தான். இதனால்தான் இவர்கள் எவ்வளவு பஞ்சத்தை உண்டாக்கினாலும் நன்றாக விளைவித்து உடம்பைத் தேக்குபோல் வைத்திருக்கிறார்கள் என எண்ணுகிறான். எனவே, மாடுகளைக் கொல்வதற்கென்றே சாவடிகளைக் கொண்டுவருகிறான். நாடுமுழுதும் இலட்சக்கணக்கான மாடுகள் கொல்லப்பட்டன. மாடுகள், மனிதர்கள் எதைத் தின்பதில்லையோ (புல், வைக்கோல்) அதனைத் தின்று குழந்தைகளுக்குப் பால்கொடுத்தன. மாடுகளைக் கொன்றபிறகு போனவை: குழந்தைகளுக்குப் பால் போனது ; பயிர்களுக்கு எரு போனது ; ஏர் உழும் உழவு போனது. வந்தவை : டிராக்டர் வண்டி , புகை, டீசல் எரிபொருள், குப்பை குவிதல், எந்திரங்கள். இவை அனைத்தும் இயங்க மின்சாரம். இவை அனைத்திலும் எவ்வளவும் பணம். எவ்வளவு சிக்கல்கள். இத்தனை சிக்கல்களையும் தீர்க்கும் ஒரே தீர்வாக மாடுகள் இருந்தன. அவை மிகவும் நன்றியுணர்வுடன் தன்னை வளர்ப்பவர்களுக்குத் துணைசெய்ய வருடந்தோறும் கன்றினைக்கொடுத்தது. அந்தக் கன்றினைக்கொன்று பொள்ளாச்சியில் பஜ்ஜி செய்துவிடுகின்றனர் ; அப்படியும் விலைபோகாவிட்டால் கேரளாவுக்கு அடிமாட்டுக்கு விற்றுவிடுகின்றனர். குருடனிடம் அரிக்கன் விளக்கு கிடைத்தது போல் ஆகிவிடுகிறது” என உழவுத்தொழில் நலிந்ததற்கான காரணத்தைத் தெளிவாகவும் வருத்தத்துடனும்  குறிப்பிட்டுள்ளார்.

அன்று இந்தியாவிற்குள் அவர்கள் நின்றுகொண்டு கெடுத்தார்கள். இன்று அவர்களுடைய எந்திரங்களும் பொருட்களும் எடுபிடிகளும் கெடுத்துக்கொண்டிருக்கின்றன.

விழிப்புணர்வுடன் வாழ்ந்தால்தான் உழவர்களைக்காக்கமுடியும். மாடுகளைப் பெருக்குவோம் ; உழவுத்தொழிலைப் பெருக்குவோம் ; பிற தொழில்களை உருவாக்குவோம். அதுவே நம் கடமை.  

 

சனி, 31 ஜூலை, 2021

விடுதலையைப் போற்றலாம் வாருங்கள்

 


விடுதலையைப் போற்றலாம் வாருங்கள்

     வீட்டில் இருக்கும்போது, விடுதலை உணர்வுடன் எத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறோம். நாம் விரும்பும் ஆடை, நாம் விரும்பும் பணி, நாம் விரும்பும் பேச்சு என அத்தனை வாய்ப்புகளையும் மொத்தமாய்க் கொடுப்பது வீடுதானே. அதனால்தானே வீட்டிற்குள் எப்போது நுழைவோம் என ஏங்கியிருப்போம். ஆனால், இன்று வீட்டுக்குள்ளேயே இருக்கவேண்டும் என அடைத்துவிட்டால், எப்போது வெளியே சுதந்திரமாக நடக்கமுடியும் என்றுதானே மனம் அலைகிறது.  அனைத்துமே விடுதலை உணர்வுதானே?

     சுதந்திரமான நாட்டில் இருக்கும் நமக்கே விடுதலையாக வாழ்வதில் எத்தனை விருப்பம் இருக்கின்றதெனில் அடிமைப்பட்டுக்கிடந்த இந்தியாவின் நிலையினை எண்ணிப்பாருங்கள். தன்னை மதிக்கவில்லை என்பதற்காகவே ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றான் ஜெனரல் டயர். பதவியைக் கூறினால்தான் உங்களுக்குப் புரியும் என்பதால் அப்படிக்குறிப்பிட்டேன். பொறுத்தருள்க !. கொடுங்கோலன் டயர் என்றே குறிப்பிட்டிருக்கவேண்டும். ஆனால் சொல்லிக்கொடுக்கப்பட்ட வரலாறுகள் எல்லாம் உயிர்களை வேட்டையாடிய கொடுங்கோலர்களை, ஜெனரல், துரை, கவர்னர் என உயர்வான பெயர்களால் குறிப்பிட்டுள்ளன. இது வரலாற்றுப்பிழைதானே. இல்லையென்கிறீர்களா? இதோ அவர்கள் நிகழ்த்திய ஜாலியன் வாலாபாக் படுகொலை பற்றி கூறுகிறேன். ஒத்துக்கொள்வீர்கள்.

     பஞ்சாப் மக்களின் சமூகவிழாவான பைசாகி விழா 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் பதிமூன்றாம் நாள் கொண்டாடப்பட்டது. மக்கள் மகிழ்ச்சியாகக் கொண்டாடிக்கொண்டிருந்தனர்.  எத்தகைய முன்னறிவிப்புமின்றி ஜெனரல் டயர் துப்பாக்கிச்சூட்டை நடத்தினான். பெண்கள், குழந்தைகள் என ஈவு இரக்கமின்றி ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்டோரைக் கொன்றுகுவித்தான் கொடுங்கோலன். மக்கள் அங்கும் இங்கும் ஓடுவதைக்கண்டு மகிழ்ந்த கயவனை, ஒருவரும் எதுவும் கேட்கமுடியவில்லை. ஆனால், அவனை அனுப்பிய ஆங்கிலஅரசு கேட்டது. “என்பேச்சை கேட்காததால் சுட்டேன்” என ஆணவமாக விடைகூறினான். என்னிடம் இருந்த தோட்டாக்கள் முழுவதையும் சுட்டுவிட்டேன். இன்னும் இருந்திருந்தால் இன்னும் நிறைய இந்தியர்களைக் கொன்றிருப்பேன்” என்றான்.  டயரின் ஆணவப் பேச்சினைக் கேட்ட ஆங்கிலேய அரசு உடனே அவனுக்குப் பதவி உயர்வு வழங்கியது.

பெற்றோருடன் வாழ்ந்தவர்கள் எல்லோரும் பார்த்துக்கொண்டிருந்தனர். ஆதரவற்ற உத்தம்சிங் என்னும் இளைஞன் இந்தியர்களைக் கொன்ற டயரினைக் கொல்லவேண்டும் என முடிவுசெய்கிறார். இருபது ஆண்டுகள் அதற்கான வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார். 1940 ஆம் ஆண்டு மார்ச் பதிமூன்றாம் நாள் இலண்டனில் ஒரு விழாவில் சிறப்புப்பேச்சாளராகப் பங்கேற்கிறார். அவ்விழாவிற்கு உத்தம்சிங் ஒரு புத்தகத்தோடு செல்கிறார். புத்தகத்தின் நடுவே பக்கங்களுக்கு மாற்றாகத் துப்பாக்கி இருக்கிறது. புத்தகம் மிகச்சிறந்த ஆயுதம் என்பதனை உணர்த்தினார். “வறுமையில் நின்றவர்க்கு எப்படி துப்பாக்கி கிடைத்தது?” என்றுதானே கேட்கிறீர். அவர் கப்பலில் பயணம் செய்யும்போது பாத்திரங்கள் கழுவினார். பெற்ற சம்பளத்தில் துப்பாக்கி வாங்குகிறார். இருபது வருட தவம் ; இந்தியத்தாயிடம் கொண்ட பற்று ; இந்திய மக்களிடம் கொண்டபற்று தன்னலத்தை மறக்கச் செய்தது.  தன்னலமே நாட்டு நலம் என மாறியது. கனவு நினைவானது.

பெயருக்கேற்றார்போல் வாழ்ந்துகாட்டினார். உத்தமர் என்பவர் பிறர்வாழ தன்னைக்கொடுப்பவர்தானே. ‘உத்தம் சிங்’ என்னும் பெயர் பின்னாளில் வைக்கப்பட்டது அதுவும் பொருத்தமாயிற்று. அவருடைய இயற்பெயர் ஷேர்சிங். ஷேர் என்றால் சிங்கம். அதுவும் பொருத்தம்தானே. அவருடைய செயலை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மிகவும் பாராட்டினார். இலண்டன் நாளிதழான “டைம்ஸ் ஆஃப் லண்டன்” உத்தம் சிங் சுதந்திரப் போராட்ட வீரர். ஒடுக்கப்பட்ட இந்தியரின் உணர்ச்சி வெளிப்பாடு எனப் பாராட்டியது.

ஷேர்சிங் சுட்டுவிட்டு ஓடவில்லை. பெயருக்கேற்றார் போல் சிங்கம் போலவே நின்றார்.  ரோம் நகர் இதனை ‘தீரச்செயல்’ எனப் பாராட்டியது. ஜெர்மனி வானொலி இந்தியர்கள் யானையைப்போன்று மறக்காமல் பழிவாங்கும் திறமுடையவர்கள். உத்தம்சிங் இருபது ஆண்டுகள் கழித்துப் பழிதீர்த்துக்கொண்டார் எனப் பாராட்டியது. ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்திற்கு ஒரு மிகப்பெரிய ஊக்கச்செயலாகவே உத்தம்சிங்கின் செயல்பாடு அமைந்தது.

முத்தாய்ப்பாக ஒன்று சொல்லவேண்டுமானால், உத்தம்சிங்கின் சொல்லைத்தான் சொல்லவேண்டும். “என் தாய்நாட்டிற்காக உயிரைவிடுவதைவிட வேறுபெருமை என்ன இருக்கிறது” என எழுதிச்சென்றிருக்கிறார். அதுமட்டுமன்று, தான் தூக்கிலிடப்படுவதை முன்னரே அறிந்த உத்தம்சிங், சாவினைக் கண்டு அஞ்சவில்லை. “என்னை நீங்கள் தூக்கிலிட்ட பிறகு எனது உடலை லண்டனிலேயே புதையுங்கள். எங்கள் மண்ணை நீங்கள் பிடித்துக்கொண்டீர். உங்கள் மண்ணின் ஆறடி மண்ணை நான் ஆள்வேன்” என்றார். பொன்னேடுகளில் பொறிக்கவேண்டிய சொற்களைத் தன் கடைசி ஆசையாகக் கூறினார் உத்தம்சிங்.

தாய்நாட்டில் விளையும் பொருட்களை உண்டு உடல்வளர்க்கும் ஒவ்வொருவரும் தாய்நாட்டிடம்பற்றுகொண்டுதானே வாழவேண்டும். நுனிக்கிளையில் அமர்ந்துகொண்டு வெட்டினால் விழுவது யார்?. “பத்துமாதம் தன் வயிற்றில் சுமந்த தாயைக் காப்பாற்றாவிட்டால், மகனுடைய மகளுடைய சம்பளத்தைப் பிடித்தம்செய்து நேரடியாக பெற்றோருக்கு அனுப்பிவிடுவோம்” எனச் சில மாநிலங்களில் சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. அவ்வாறே தாய்நாட்டைப் பழிப்போருக்கும் உரிய தண்டனை வழங்கவேண்டும். தண்டனை அவர்களை வருத்துவதற்கன்று ; திருத்துவதற்கே. நன்றியுணர்வின் அருமையினைச் சொல்லிக்கொடுக்காததால் வந்தவிளைவு அது

ஒரு பேருந்தில்  எண்பது பேர் பயணம் செய்கிறார்கள். எட்டு குண்டர்கள் நடுவழியில் பேருந்தை மறித்து கொள்ளை அடிக்கிறார்கள். எட்டுபேரை எண்பதுபேரால் ஒன்றும் செய்யமுடியாது. ஆயுதம் இருக்கிறது என்ன செய்வது? எனக் கூறாதீர்கள். ஆயுதம் இல்லாவிட்டாலும் ஒன்றுபட்டுவிட்டால் ஒழிந்துபோய்விடுவார்கள் எதிரிகள். நாம் செய்கின்ற தவறினைப் புரிந்துகொள்ள நான் படித்த ஒரு கதையைச் சொல்லட்டுமா?

     ஒரு விடுதியில் பல நாட்கள் உப்புமா தான் சிற்றுண்டி. நூறு பேரில் எண்பது பேர்  எதிர்த்தனர். காப்பாளர் ஓட்டெடுப்பு நிகழ்த்தினார். பெருவாக்குப்படியே சிற்றுண்டி என்றார். மீண்டும் உப்புமாவே தேர்வாகிறது. “எப்படி?” என்றுதானே கேட்கிறீர். உப்புமா விரும்பிகளின் ஓட்டு இருபதும் சரியாக விழுந்தது. மற்ற எண்பதுபேர்  இட்லி – 19, தோசை -19, பூரி -19, பரோட்டோ-19, சப்பாத்தி -4 என விழுந்தது. இப்படி விழுந்தால் காப்பாளர் என்ன செய்வார்? ஒன்றுபடுவோம். நாட்டைக்காப்போம்.

 

 

சனி, 24 ஜூலை, 2021

உழைப்பின் அருமை

 


உழைப்பின் அருமை

     இருபதாம் நூற்றாண்டுக் கடைசியில் பிறந்தவர்கள் “ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும்” என்னும் பாடலையும் “உழைத்து வாழவேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே” என்னும் பாடலையும் அறிந்திருப்பார்கள் ; பாடியிருப்பார்கள். அத்தனை அழகான பாடல். அழகு என்பது அறிவுடன் கூடியது மட்டும்தான். ஏனெனில் புற அழகிற்குக் காலஎல்லை உண்டு.  இந்தப்பாடலடிகள் எத்தனை வேகமாகவும் எத்தனை அன்பாகவும் காலம் கடந்தும் கருத்துக்களைப் பதித்துவிட்டிருக்கிறது. அதனால்தான் உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்தனர். வாழ்க்கை அழகானது. வாழ்வதிலும் விருப்பம் உண்டானது.

     இன்றைய இளைஞர்களைப்பற்றி கேட்டுப்பாருங்கள். “அவன் சொன்ன பேச்சை கேட்கமாட்றான்” “அவன் இந்த வேலைக்கெல்லாம் போகமாட்டானாம்” “அவன் எப்பபார்த்தாலும் கைப்பேசியில் படம்பாத்துக்கிட்டு இருக்கான்” “அவன் திறன்பேசியில் விளையாடிக்கிட்டே இருக்கான்” இப்படித்தான் சொல்வார்கள். அப்படி சொல்லாமலிருந்தால் அவர்களே தவத்தின் பயனாகப் பிள்ளைகளைப் பெற்றோர் ஆவர். இளைஞர்களிடம் ஒரு குறையும் இல்லை. இந்தச்சூழல்தான் அவர்களை அவ்வாறு கெடுத்துவிட்டிருக்கிறது.

     “உழைப்பது நம்ப உடம்புக்கு ஆகாது” என்று ஒரு திரைப்படத்தில் கதாநாயகர் சொல்கிறார். அவருக்கு ஒரு துணை நடிகர் “என்னை எங்கம்மா வேலைக்குப் போகச் சொல்லி கொடுமைப்படுத்துறாங்க” எனக் கிண்டலாகப் பேசுகிறார். இவை, பிஞ்சு மனத்தில் பதியத்தானே செய்யும். இளைஞர்கள் என்றாலே பல்துலக்காமல் பேருந்து நிலையத்தில் குளிர்க்கண்ணாடியைப் போட்டுக்கொண்டு (ஒவ்வொருவரும் ஒவ்வொரு நேரத்தில் என கண்ணாடியை மாற்றிப்போட்டுக்கொண்டு) நிற்பதாகக் காட்டுவது எத்தனை அவலம். உலகம் இப்படங்களைப் பார்க்கும்பொழுது என்ன நினைக்கும்? எதையாவது நினைத்துக்கொண்டு போகட்டும். திரைப்படம் என்பது மாயைதானே. விட்டுவிடலாம்  என நினைத்தால் பல மதுக்கடைகளில் இளைஞர்கள் கூட்டம்தான் அதிகமாக இருக்கிறது.

நாட்டை தலைநிமிர்ந்து நடத்தவேண்டிய தலைமுறை தெருஓரங்களில் விழுந்துகிடக்கிறது. அவர்களை நம்பிய நாட்டுக்கும் வீட்டுக்கும் எத்தனை இழப்பு. அதுமட்டுமா? அவர்களுக்கே எத்தனை இழப்பு. திரை நாயகர்கள் ஒழுக்கங்கெட்டவர்களாக நடிக்கிறார்களே ஒழிய உண்மையான வாழ்வில் யோகப்பயிற்சியும் உடற்பயிற்சியும் செய்து அழகாகத் தம்மைப் பாதுகாத்துக்கொள்கின்றனர். ஏமாற்றுவது அவர்கள் பாத்திரம் ; ஏமாறுவது இளைஞர்களின் அறியாமை.

     “இதையெல்லாம் எப்படிச் சொல்கிறீர்?” என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இதோ நான் கண்ட ஒரு அருமையான நேர்காணல், ஒரு தொழிலதிபரிடம் நீங்கள் தமிழராக இருந்தும் ஏன் தமிழர்களுக்கு உங்கள் நிறுவனத்தில் வேலை கொடுப்பதில்லை. பெரும்பாலும் வடநாட்டார்தான் வேலைசெய்கிறார்களே” எனக் கேட்டார். “நான் தமிழர்களைத்தான் ஒவ்வொரு மாவட்டமாகச் சென்றுதேடுகிறேன். ஒருவரும் வேலைக்கென்றால் வருவதில்லை. அதனால் வடமாநிலங்களிலிருந்து விமானம் வழியாக இலட்சக்கணக்கில் பணம் செலவுசெய்து அழைத்துவருகிறேன்” என்றார். அது மட்டுமன்று “சனிக்கிழமை கூலிகொடுப்பதால், ஞாயிற்றுக்கிழமை குடித்துவிட்டு, திங்கள் கிழமை எழமுடியாமல், செவ்வாய்க்கிழமைதான் வேலைக்கு வருகிறார்கள்” எனக்கூறுகிறார். இந்நிலையை உருவாக்கியது யார்?.” இக்குரல் ஒவ்வொரு தாயாரின் குரல் ;  வறுமையில் தவிக்கும் மனைவியின் குரல் ; பசியோடு தவிக்கும் குழந்தைகளின் குரல்.  இதற்குத்தீர்வு காணவேண்டிய பொறுப்பு ஒவ்வொரு தமிழர்க்கும் உண்டு.

நாயகர்கள் நினைத்தால் மாற்றமுடியும். ஒவ்வொரு நடிகரும் உழைப்பின் அருமையினை விளக்கவேண்டும். தொழிற்சாலைகள் உருவாக்க வேண்டும் என்னும் எண்ணத்தைப் பரப்பவேண்டும். குடிப்பது தவறு என்பதனை துணிந்து அனைவர்க்கும் சொல்லவேண்டும். பிறநாட்டிலிருந்துவரும் இறக்குமதியைக் குறைக்கவேண்டும். உறபத்தியால் ஏற்றுமதி நிறையவேண்டும். செய்வார்களா ?

     முன்னைய காலத்தில் இலக்கியங்கள்தான் மக்களுக்கு நல்வழிகாட்டின. இந்த வேலையைப் புலவர்கள் என்ன அழகாக செய்திருக்கிறார்கள். உலகநாதர் இயற்றிய ‘உலகநீதி’ சொல்லும் கருத்துக்களைப் பாருங்களேன்.

     சேராத இடம் தனிலே சேரவேண்டாம்

     செய்த நன்றி ஒருநாளும் மறக்கவேண்டாம்

ஊரோடும் குண்டுணியாய்த் திரியவேண்டாம்

உற்றாரை உதாசினங்கள் சொல்லவேண்டாம்

பேரான காரியத்தைத் தவிர்க்கவேண்டாம்

பிணைபட்டுத் துணைபோகித் திரியவேண்டாம்

வாராரும் குறவரிடை வள்ளிபங்கண்

மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே        (உலகநீதி:8)

 

என எத்தனை வலிமையான கருத்துக்களையெல்லாம் தரமான பூக்களைக்கொண்டு கட்டிய மாலைபோல் கட்டியிருக்கிறார் உலகநாதர்.

     சேராத இடத்தில் சேர்வது முதல் தவறு. அப்படித் தவறி சேர்ந்தால் உடனே விலகிவிடு. தாய்தந்தை செய்த நன்றியை மறந்துவிடாதே. தேவையில்லாத செய்திகளை ; பழிச்சொற்களை வீசாதே. நல்வழி சொல்லும் உறவினர்களை இழிவாகப்பேசாதே ; புகழ்தரும் பணி கிடைக்குமாயின் அதனைத் தவிர்க்காதே. வீணாணவர்களுடன் நின்று பெருமைகளை இழந்துவிடாதே. இவையெல்லாம் அமையவேண்டுமெனில் மனதை ஒருநிலைப்படுத்து என்கிறார். அவர் முருகபக்தர் ஆதலால், அவர்கண்ட மயிலேறும் பெருமானாகிய முருகப்பெருமானை வாழ்த்தவேண்டும் என்கிறார். அதுவும் வள்ளி மகளை இணையாகக் கொண்ட முருகப்பெருமானை எனக் கூறியுள்ளார். இதனுள் பெண்களை மதிக்கவேண்டும் என்னும் குறிப்பும் அடங்கியுள்ளதுதானே.

     தாய்,தந்தை சொல்லை மதிக்காமல் இருப்பதிலிருந்து தவறு தொடங்குகிறது. அதனால் தவறானவர்களின் நட்பு கிடைக்கிறது. தவறுசெய்யும்போது சிக்கிக்கொண்டால் பொய்சொல்ல நேரிடுகிறது. பிறரைப்பழிசொல்லி ; துன்பம்செய்து தப்ப மனம் நினைக்கிறது. இத்தகைய தவறுகளைச்செய்யக்கூடாது என எவரேனும் சொல்லிவிட்டால் என்செய்வது என உறவுகளை எதிர்க்கிறது. தவறான வழியில் செல்வம் சேர்ப்பது எளிதாக இருப்பதனால், புகழான வழியில் வரும் செல்வத்தை ஏற்க மறுக்கிறது. தீயவர்களுடன் இருப்பதே நல்லதெனத் தோன்றிவிடுகிறது. அதனால் வாழ்க்கைவாழ்வதே வீணென்று எண்ணத்தோன்றுகிறது. இத்தகைய குற்றங்களிலிருந்து மீளவேண்டுமெனில் மனதை ஒருநிலைப்படுத்தவேண்டும். பெற்றோரின் பேச்சைக்கேட்டு உழைத்து வாழவேண்டும் என்கிறார் உலகநாதர்.

     உழைப்பில் இருக்கும் உப்பு தான் வாழ்க்கையைப் பெருமையாக்கும். ‘உப்பில்லா பண்டம் குப்பையிலே” எனக்கூறியது உழைப்பின்றி உண்பது அனைத்தும் குப்பை என்பதனை உணர்த்தத்தானோ?

 

வெள்ளி, 23 ஜூலை, 2021

தாய் கடவுளன்று ; தாய் தாய் தான்

 


தாய் கடவுளன்று ; தாய் தாய் தான்

     பலாப்பழத்தையே அறியாதவனிடம், மாம்பழம்போல் பலா இனிக்கும் எனக்கூறினால், அது உண்மையாகவா இருக்கும்? இல்லைதானே !. ஒரு பொருளுக்கு ஈடாக மற்றொரு பொருளைக் கூறிவிட்டால் அப்பொருளினை முழுமையாக அறிந்துகொள்ளமுடியாது ; அறிந்தாலும் தவறாகிவிடும். கடவுள் அனைத்து உயிர்களையும் ஒன்றுபோல்காப்பவர் ; தாய் அப்படியன்று. தன்னுடைய குழந்தை என்னும் தன்னலம் எப்போதும் அவளுக்குள் உயிர்போல் ஒளிந்திருக்கும். இன்னொரு குழந்தையை தன் குழந்தை அடித்துவிட்டாலும் தவறென ஒப்புக்கொள்ளாத மனம் தாய்மனம்.   தன்குழந்தை யாரையாவது அடித்துவிட்டால், அப்போதும் வேறுகுழந்தையே தவறு செய்ததாகப் பேசுவதே தாயுள்ளம்.

     ஒரு தாயனவள் பள்ளி முதல்வரிடம், “என்மகனை அவன் வகுப்புத்தோழன் ஒருவன் நகத்தால் முகத்திலே கீறிவிட்டிருக்கிறான். நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?” என வேகமாகப் பேசினாள். மகனோ திருவிழாவில் காணாமல்போனவன்போல் விழித்துக்கொண்டிருந்தான். முதல்வர் உடனடியாக வகுப்பாசிரியரை அழைத்தார். “நானே உங்களிடம் சொல்லலாம் என்றுதான் வந்துகொண்டிருந்தேன். இப்போதுதான் இவனுடன் சண்டையிட்ட மாணவனுக்குக் கையில்கொட்டிய குருதியைத் (ரத்தத்தை) துடைத்துவிட்டு வந்தேன். இவன் அவனுடைய கையை கடித்ததிலே அப்படியாகிவிட்டது” என்று தாயுடன் நின்றிருந்த சிறுவனைப் பார்த்துக்கொண்டே கூறினார் ஆசிரியர். அதுவரை வானைக் கிழித்த தாயின் குரல் மெலிதானது. மகனைப் பார்த்து, “என்ன கண்ணா! ஏன் அவன் கையைக் கடித்தாய்” எனக்கேட்டாள். அப்போதும் முழித்துக்கொண்டிருந்தான். பின் முதல்வரைப் பார்த்து ‘குழந்தைகள் அப்படித்தான் அடித்துக்கொள்வார்கள்” எனச்சொல்லி அமைதியாக அங்கிருந்து நழுவிச்சென்றாள். “அடுத்து வரும் பெற்றோர்க்கு என்சொல்வேன்” என முதல்வரும் பெருமூச்சு வாங்கினார். இதுவும் தாயன்புதானே?

     ஒரு கலைஞர்,  தாயன்பின் வலிமையினை படம் வழியே காட்டிச்சென்றார். சொல்லட்டுமா?. ஒருவர் ஆட்டினை முழுமையாகவாங்கினார். மகிழ்வுந்துக்குள் வைக்க மனமில்லாமல் அதனைச் சாகடித்து காருக்குப் பின்னாலே கட்டிவிடச்சொல்கின்றார். அதனைக்காரில்கட்டி இழுத்துக்கொண்டுபோகையிலே அந்த ஆட்டின் குட்டி கொஞ்சதூரம் பின்னால் ஓடி .. ஓடி முடியாமல் நின்றது. அது ‘மே ! மே’ எனத்தாய் உடல் தரையில் இழுத்துக்கொண்டுபோவதனைப் பார்த்து வருந்தியது. கொஞ்சநேரத்தில் மகிழ்வுந்து காணாமல்போனது. அந்தக் குட்டியின் ஒவ்வொரு குரலும் “இது இறைச்சியல்ல. என் தாய்” என்று உணர்த்துவதனைப் படம்பிடித்துக்காட்டினார். இக்குறும்படம், தாயன்பினை காட்சியின் வழியே புலப்படுத்திவிடுகிறது. அந்தக்குட்டி,  பால் குடிக்க முடியாமல் எங்கு செல்லும்? தாயின்றி வாழ்வேது? சாகும் வரை வாழ்வதற்குக் கற்றுக்கொடுப்பவள் தாய்தானே? இவ்வாறு, பல எண்ணங்கள் வந்துபோகும்.

     தாயில்லாத ஒரு உயிர் உலகில் உண்டா? இல்லைதானே. எத்தனை துயரம் இருந்தாலும் குழந்தைமுகம் பார்த்தபின்னே அத்தனை துயரத்தையும் மறந்துவிடுபவள் தாய்தானே. அதனால் பத்து ; எட்டு ; ஐந்து  ; இரண்டு என எத்தனையோ தாய்மார்கள் குழந்தைகளைப் பெற்றதனை ;  பெறுவதனைக் காணமுடிகிறது. பத்துத்திங்கள் குழந்தைகாக உணவுண்டு ; ஒருபக்கமாக உறங்கி ; நடைதளர்ந்து வாழ்ந்த பெருமைக்கு ஈடேது. அவளின்றி  இவ்வுலகம் செழித்திடுமா? எனவே, நம்நாட்டை ‘தந்தைநாடு’ எனக்கூறாமல் ‘தாய்நாடு’ எனச்சான்றோர்கள் குறிப்பிட்டனர்.  போராடிக்காத்தால்தான் நாடு வளமாகும் என எண்ணியே அவ்வாறு குறிப்பிட்டுள்ளனர் என எண்ணத்தோன்றுகிறது.

      “காதற்ற ஊசி கூட நீ இந்த உலகை விட்டுச்செல்லும்போது வராது” என மகனாய் வந்த குருவின் சொல்கேட்டு பொன்னை ; பொருளை ; உறவை ; வரவை  என அனைத்தையும் துறந்தார் பட்டினத்தார்.  ‘துறந்தால் பட்டினத்துப்பிள்ளையைப்போல் துறத்தல் அரிதெனச்’ சான்றோர்கள் பாடும் அளவிற்குத் துறந்தவர் பட்டினத்தார். அத்தகைய பட்டினத்தாரே தாயன்பிலிருந்து விடுபடமுடியாதவர் ஆனார். அத்தகைய பெருமையினை உடையவள் தாய். அவளைப் போற்றவேண்டியது ஒவ்வொருவருடைய கடமை.

     வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்

     கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து – முட்டச்

     சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாய்க்கோ

     விறகிலிட்டுத் தீமூட்டு வேன்           (பட்டினத்தார்)

 

என்னும் பாடலே தாயன்பினை விளக்கிச்சொல்லும். கோழியானது தன் சிறகிடையே குஞ்சுகளைவைத்துக்காப்பதுபோல, தாயானவள் முந்தானை என்னும் சிறகால்மூடி வெயிலிலும் மழையிலும் காத்த அன்பினை பட்டினத்தார் பாடியுள்ளது எத்தனை அழகு.

     இப்படி வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும் கட்டிலிலும் இட்டு என்னைப் பாதுகாத்தவளை, விறகில் இட்டு தீ மூட்டுகிறேன் எனப்பட்டினத்தார் பாடுவது தாயன்பில் இமயம்தானே?

     காதல் என்பது உயர்ந்தவகையான அன்பு. அச்சொல்லையே தாயன்பிற்கு எடுத்துக்காட்டாகக் காட்டியுள்ள அழகினையும் காணலாம்.

     தேசபக்தர்கள்  எத்தனையோபேர் பூமியினையே தாயாக எண்ணி செருப்பணியாமல் நடப்பதனையே கொள்கையாகக் கொண்டுள்ளனர். அத்தகையோர் பேரன்பினை ; நன்றியுணர்வை என்சொல்வது?. இதுவும் தாயன்புதானே.

     தாயென்பவள் தாயாக மட்டுமின்றி முதல் ஆசிரியையாகவும் திகழ்கிறாள்தானே. அவள் கற்பிக்காத பாடமில்லை. ‘உள்ளம் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்’ என்னும் சொல்லுக்கு இலக்கணம் அவள். வறுமை தனக்கிருப்பினும் குழந்தைகளின் பெருமைக்கு உழைப்பவள் அவள். ஜோத்பூரில்  ‘ஆஷா கந்தாரா’  என்னும் பெண்மணி திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகிறார். கணவன், விட்டுவிட்டு ஓடிவிடுகிறான். குழந்தைகளைக் காப்பாற்ற என்செய்வது? என வருந்துகிறார். தெருக்களைச் சுத்தம்செய்யும் துப்புரவுப்பணிசெய்கிறார்.  ஒரு நாளைக்கு எட்டுமணி நேரம் படித்து, அஞ்சல் வழியில் பட்டம்முடித்து ;ஆட்சியர் தேர்வும் எழுதி வெற்றிபெறுகிறார். இன்று துணை ஆட்சியராகப் பணிசெய்கிறார். இதுவும் தாயின் பெருமைதானே !