தமிழில் விளையாட்டு
‘தமிழ்’ மூன்றெழுத்து முத்து. அது மூவுலகையும்
மகிழ்விக்கும் அருமொழி. அதனால்தான், எவ்வளவு காலமாகவோ தமிழ்மொழியை, தமிழரே படிக்கக்
கூடாதென எத்தனையோ ஆங்கிலப்பள்ளிகள் தடுத்து நின்றாலும் தமிழின் பெருமையினைக் குறைக்கமுடியவில்லை.
ஏனெனில், இது தெய்வத்தமிழ். தமிழுக்கு எதிராக நின்றோரெல்லாம் தமிழ்ப்படித்து மயங்கி
நின்றார் ; தமிழுக்கு உறவானார் ; நூல் படைத்தார்.
உருகி நின்றார் ; தமிழராக இறப்பதிலே பெருமை கொண்டார் ; அடுத்த பிறவியில் தமிழராகப்
பிறந்திடவே வேண்டி நின்றார். உலகமொழிகளிலேயே ஒரு மொழிக்குத்தலைமையாகத் தெய்வமே இருக்கிறதெனில்,
அது தமிழுக்கு மட்டும்தான். ‘தமிழ்க்கடவுள் முருகன்” சினந்து நின்றபோது தமிழால் திருத்திய
‘தமிழ் மூதாட்டி’ ஔவையின் தமிழறிவை அறியாதார் யார்?
ஔவையாரின் தமிழ் விளையாட்டு ஒன்றைப்பற்றிப் பேசுவோமா?.
இவ்விளையாட்டு கவிச்சக்கரவர்த்தி கம்பரிடம். முத்துக்களை இருவரும் வாரி இரைத்தால் மகிழாதார்
யார்?
கம்பன் ஔவையைக் கண்டு புதிர்போடுகிறார். அதனை
விடுவிக்கவேண்டும் என்பதே விளையாட்டு.
ஒருபுதிரை – இரு
பார்வையில் நோக்குவோம்
முதல் பார்வை:
“ஒரு காலடி நாலிலைப் பந்தலடி” இதுவே புதிர்.
ஒரு காலுடையது.
நான்கு இலைகள் உள்ளது எது? என்பதனை ஒரே அடியில் இரண்டு அடி’ போட்டுக் கேட்கிறார்.
விளையாட்டு என்றாலும்
விதிமுறைகள் இருக்கும்தானே? விதிமுறை இல்லாத விளையாட்டு ஏது? ஆனால், கம்பன் மகழ்ச்சியில்
மதிப்பின்றி விளித்துவிடுகிறார்.
இதைக் கேட்டு
ஔவையார் விட்டுவிடுவாரா? மகாகவி காணாத புதுமைப்பெண்ணாயிற்றே அவர்.
எட்டே கால் இலட்சணமே
எமன் ஏறும் வாகனமே பரியே
மட்டில் பெரியம்மை
வாகனமே – முட்டமேல்
கூரையில்லா வீடே
குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னாய்
அடாது. (ஔவையார் பாடல்)
எட்டே கால் இலட்சணமே
: அகரம் எட்டைக் குறிக்கும். வகரம் கால் அளவினைக் குறிக்கும். எனவே எட்டேகால் என்பது அ+வ = அவ
என வரும்தானே. எனவே அவலட்சணமே என்பது முதல்
வசை.
எமன் ஏறும் வாகனம்
: எருமை - இரண்டாம் வசை
பெரியம்மை வாகனம் : ஸ்ரீதேவிக்கு மூத்தவளான மூதேவியின் வாகனம் – கழுதை – மூன்றாம் வசை.
கூரையில்லா வீடு
: குட்டிச்சுவர் – நான்காம் வசை.
குலராமனின் தூதுவன்
: குரங்கு – ஐந்தாம் வசை
ஆரையடா : ‘ஆரைக்கீரை’தான் விடை என்றாள்.
சொன்னாய்? : சொல்
நாய் – ஆறாம் வசை
அடா : மதிப்பு
குறைவாக சொல்லுதல்.
என்னே புலமை?
‘ஆரைக்கீரை’ என விடையை நேரடியாகக் கூறாமல்
பாடலில் சொல்லும் அழகே அழகுதானே?. ‘முள்ளை முள்ளால்தானே எடுக்கமுடியும்’ என இரண்டு
‘அடி’ போட்டு மதிப்பின்றி விளித்துப்பாடிய புலவனை ‘அடா’ என இரு முறை கூறியதோடு ஆறு
வசைச்சொற்களுடன் பாடினார்.
இது இருவரும்
அரங்கேற்றிய நாடகமாகத்தான் இருக்கும். மக்கள் மதிப்புடன் பேசப்பழகவேண்டும் என உணர்த்துவதற்காகவே
இந்நாடகம். இல்லையெனில், ஒழுக்க சீலரான இராமனையும், பொறுமைக்கு பெருமை சேர்த்த சீதையையும்
பாடிய கம்பர் தமிழ் மூதாட்டியை இப்படிப் பாடி இருப்பாரா? இல்லைதானே. இப்படி எண்ணுவதால்
யாருக்கும் கேடில்லை எனில் இப்படியே எண்ணுவோம்.
இரண்டாவது பார்வை
கவிச்சக்கரவர்த்தி
தமிழ்மூதாட்டியை மதிப்பின்றி பேசியிருக்கமாட்டார். “ஔவையார், இவ்வாறு பாடியது தவறு”
எனக் கம்பரின் அடியார் ஔவையாரின் அடியாரிடம் கேட்கிறார்.
“ஒரு காலடி நாலிலைப் பந்தலடி”
என்பதன் முதல்
‘அடி’ அளவினைக் குறிக்கும். ஆரைக்கீரையினது காம்பு ‘கால் அடி’ என்னும் அளவினைத்தானே
குறிப்பிட்டார். இரண்டாவது ‘அடி’யானது ‘கீழ்’ என்னும் பொருளினைக் குறிக்கிறது. நான்கு
இலைகள் கீழே அந்த காம்பு உள்ளது என்பதனை உணர்த்தவே அவ்வாறு பாடினார் எனக் கூறுகிறார்.
உடனே ஔவையாரின் அடியார் விடையளித்தார். அவர்மட்டும்
புலமையில் குறைந்தவராகவா இருப்பார்?. கம்பரைப் போலத்தான் ஔவையாரும் மதிப்புடன் பாடியுள்ளார்
எனக் கூறினார். “ஔவையாருடைய பாட்டில் குற்றம்
இல்லை. உம் நோக்கில்தான் குற்றம் இருக்கிறது.” என்றார்.
எட்டே கால் இலட்சணமே : எட்டி அடிவைத்து விரைந்து
நடக்கும் கால் அழகன்.- முதல் வாழ்த்து
எமன் : எமக்கு உற்றவனே – இரண்டாம் வாழ்த்து
ஏறும் வாகனம்
: வளர்கின்ற செல்வம் உடையவனே - மூன்றாம் வாழ்த்து
முட்டமேல் கூரையில்லா
வீடு : இணையற்ற உலகமாகிய தேவலோகம் போன்றவனே –நான்காம் வாழ்த்து
குலராமனின் தூதுவன்
: இராமனின் பெருமைகளை எடுத்தியம்பியவனே –
ஐந்தாம் வாழ்த்து
ஆரையடா சொன்னாய் : ஆரைக்கீரை புதிரை என்னிடமா சொன்னாய்
?
அடா : வெற்றிகொள்ளமுடியுமா?
முடியாது.
என வாழ்த்தித்தானே
பாடியுள்ளார். சரியாகப் பாருங்கள் என்றார்.
புலவர்கள் தமிழில் விளையாடுவதும், புலவரின் வழித்தோன்றல்கள்
தமிழில் விளையாடுவது அழகுதானே. பாடல் இயற்றிய புலவரின் உள்ளத்தை அவரன்றி யாரறிவார்?
எவர் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பொருள்கொண்டு மகிழலாம். ஆனால், அது ‘பெரியோர்
பாட்டில் பிழை சொன்னேனோ?” என வருந்தும் அளவிற்கு இல்லாமல் பார்த்துக்கொள்ளுதல் நன்று.
வள்ளலார் வழியில் சென்றால் அனைவருக்கும் நன்மைதானே?
************