தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

வியாழன், 1 ஜூலை, 2021

கதாநாயகன் யார்? – திருக்குறள் சொல்லும் ‘வீரம்

 


 

கதாநாயகன் யார்? – திருக்குறள் சொல்லும் ‘வீரம்

     ஊடக நண்பர் ஒரு ஆளுமையைப்  பேட்டி காண்கிறார். “உங்களுக்குப் பிடித்த ஹீரோ யார்?”.” … என்ன? “கேள்வியை மீண்டும் கேட்கிறார். “உங்களுக்குப் பிடித்த நடிகர்…” எனக் கேட்கிறார் பேட்டி காண்பவர். அக்கேள்விக்குக் கூறிய விடை இன்றைய இளைஞர்களுக்கு ஓர் அருமையான பாடம். “மக்களைக் காக்கப் போராடும் முப்படை வீரர்களும், காவலர்களும் தான் கதாநாயகர்கள். அவ்வேடத்தில் நடிக்கும் நடிகர்கள் நடிகர்கள் மட்டுமே. அவர்கள் கதாநாயகர்கள் அன்று.  ஏழ்மையான நிலையிலிருந்து குழந்தைகளைப் படிக்கவைக்கும் பெற்றோர்கள்தான் கதாநாயகர்கள் என்றார்.

“நடிப்பவர்களை எல்லாம் கதாநாயகர்களாக எண்ணுவதால்தான் குழந்தைகள் மது குடித்து, புகை பிடித்து, ஆசிரியர்களிடம் மதிப்பின்றி, தாய்தந்தையை எதிர்த்துப் பேசி நாளும் கெடுகின்றனர்” என்பதனை உணர்த்தும் அவருடைய அறிவுரையை எத்தனைத் தமிழர்கள் உணர்ந்திருக்கிறார்கள். நடிகர்களின் நடிப்பினைப் பாராட்டுவதோடு நின்றுவிடவேண்டும். நடிகர்கள் எப்படி நடித்துமுடித்தவுடன் இயல்பான மனிதர்களைப்போல் நடந்துகொள்கிறார்களோ அவ்வாறே மக்களும் நடிப்பினை நடிப்பாக மட்டுமே கொள்ளவேண்டும். நடிகர்களை கிள்ளிப்பார்ப்பது, தொட்டுப்பார்ப்பது நடிகர்களுக்கு எரிச்சலைத்தான் ஊட்டும் என்பதனை உணர்தல்வேண்டும்.

வாழ்க்கையின் வழிகாட்டியாக, தேசத்திற்காகப் போராடும் வீர்ர்ர்களை ; தேசத்தின் புகழைக்காக்கும் வீரர்களைக் கொண்டாடவேண்டும். இருபத்தோரு வயதில் எல்லையில் எதிர்களைப் பந்தாடும் வீர்ர்களின் உண்மையான வீர்த்தைக் கொண்டாடவேண்டும். ஒரு இந்திய இராணுவ வீர்ர் எதிரே நின்ற முந்நூறு பகைவர்களை வீழ்த்திய பெருமையினைக் கொண்டாடவேண்டும். உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருந்த ஆங்கிலேயனின் கடுங்காவல் உள்ள கோட்டையிலேயே நுழைந்து, ஆங்கிலக்கொடியை இறக்கி இந்தியக்கொடியை ஏற்றிய வீரரைக் கொண்டாட வேண்டும். பொய்களை விட்டுவிட்டு உண்மையைக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுத்தால்தான் நாட்டுப்பற்றை ஊட்டிவிடமுடியும்.  

விழித்தகண் வேல்கொண்டு எறிய அழித்து இமைப்பின்

ஒட்டுஅன்றோ வன்கண் அவர்க்கு (திருக்குறள் – 775)

 

என்னும் திருக்குறள் போர்க்களத்தை எதிர்கொண்ட தமிழரின் வீரத்தைப் படம்பிடித்துக்காட்டுகிறது.  எதிரி எறியும் வேலினைக் கண்டு கண்களை இமைக்காது எதிர்கொள்வான். அப்படி இமைப்பானாயின் அதனைத் தோல்வி எனக் கருதுவான். இதுவன்றோ வீரம். இவர்களைத்தானே நாயகர்களாகக் கொண்டாடவேண்டும். அப்படி எண்ணற்றோர் வரலாற்றில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

விளையாட்டுக் களத்தைப் போர்க்களம் போலும், போர்க்களத்தை விளையாட்டுக்களம்போலும் தொலைக்காட்சியில் பார்க்கும் நிலையினைக் காணமுடிகிறது. அப்படியெனில் விளையாட்டினை உயிர்ப்போராட்டம் போன்றும், மக்களைக்காக்கும் உயிர்ப்போராட்டம் விளையாட்டு போன்றும் காணும் அறியாமையைக் கற்றுக்கொடுத்தது யார் என்பதனை எண்ணிப்பார்க்கவேண்டும்.  சமூகக் காவலர்களின் குற்றமா? அந்தச் சமூகத்தில் காவலராக தன்னை எண்ணாத மக்களின் குற்றமா?

உண்மையாக நடக்கும் வாழ்க்கையை உணராமல், திரைப்படங்களின் காதல்கதையை உண்மை என நம்பும் இளையோரை என்னென்பது? பெற்றோரை அழவைத்துவிட்டு ஓடிப்போய் திருமணம் செய்யக் கற்றுக்கொடுக்கும் திரைப்படங்கள் பல. காதலுக்குப்பின் என்ன நடக்கும்? எனக்கூறும் துணிவுடைய படங்கள் எடுப்பது கடினம். திருமணம் செய்துகொள்ள முடியாத சகோதர சகோதரிகள் ; நடைபிணமாய் தாய் ; தலைநிமிர்ந்து நடக்கமுடியாத தந்தை என எத்தனையோ சோகங்கள். காவல் நிலையங்களில் இக்காட்சியைக் அன்றாடம் காணமுடிகிறது. அவர்களுடைய துன்பத்தைத் துடைப்பது யார் பொறுப்பு? காவலர்களும் பெற்றோர்போல் அறிவுறுத்திக்கொண்டுதான இருக்கின்றனர். அவர்களும் கதாநாயகர்கள்தான்.

 மக்களைப் பாதுகாக்கும் வீர்ர்களை மட்டும்தான் கொண்டாடவேண்டுமா? என்றுதானே கேட்கிறீர்கள். நாட்டிற்குப் பெருமை சேர்ப்போர்; வீட்டின் வறுமையினைப் போக்குவோர் என எவரையும் வாழ்க்கை வழிகாட்டிகளாகக் கொள்ளலாம். ஏன் பிற உயிர்களிடமும் இரக்கம்கொண்டு காக்கும் உண்மையான மனிதர்களையும் வாழ்க்கை வழிகாட்டியாகக் கொள்ளலாம்தானே? ஒரு கதையைக் கூறினால் நீங்களே ஒத்துக்கொள்வீர்.  

ஆற்றுப்பாலத்திலிருந்து தவறிவிழுந்த ஒரு நாய்  ஆற்றில் சிக்கிக்கொள்கிறது. வேகமான நீரோட்டம். மேலும் நடந்தால் இழுத்துக்கொண்டு பள்ளத்தில் வீழநேரும் என உணர்ந்து ஒரே இடத்தில் நிற்கிறது. ஆற்றுப்பாலத்திலிருந்து மேலிருந்து நால்வர் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அந்தப் பக்கமாகச் சென்ற ஒருவர் இவர்கள் வேடிக்கைப்பார்ப்பதைப் பார்த்தார். நாய் மரணவாயிலில் நிற்பதைப் புரிந்துகொண்டார். கீழே கவனமாக இறங்குகிறார் ஆற்றின் சரிவான பக்கவாட்டில் மெதுவாக இறங்குகிறார். வேகமான நீரோட்டம் குறித்து கவலைப்படவில்லை. மெதுவாக நாய்க்கருகே சென்று அதனை இருகைகளாலும் பிடித்துக்கொண்டு வருகிறார். நாயாலும் சரிவில் ஏறமுடியவில்லை. அவராலும் ஏற்றமுடியவில்லை. வேடிக்கைப் பார்த்த நால்வரும் ஒருவர் கையை மற்றொருவர் பிடித்து கீழே   தவறிவிழுந்த நாயைப்பிடிக்க முயல்கின்றனர். முடியவில்லை. அந்தப்பக்கம் செல்லும் ஒருவர் இக்காட்சியைப் பார்த்து அவரும் கைகொடுக்கிறார். உடனே மற்றொருவரும் உதவ வருகிறார். இப்பொழுது  நாயைப் பற்றிக்கொண்டு கரைசேர்கிறார் அந்தக்கதாநாயகர். எல்லோர்க்கும் மகிழ்ச்சி. அன்பின் புன்னகை எல்லோருடைய முகத்திலும். அங்கிருந்தோர்க்கிடையே நட்போ, உறவோ இல்லை. ஒருவர்க்கு மற்றொருவரைத் தெரியாது. ஆனால், அன்பு அவர்களை ஒன்றிணைத்தது எத்தனை அழகு!. அடுத்து என்ன நடக்கும் என்ற எண்ணம் சிறிதுமின்றி நாயைக் காப்பாற்றிவிட வேண்டும் என எண்ணம் கொண்டவர் கதாநாயகர்தானே?

நாத்திகம் பேசுவதில் வல்லவரான நடிகர் நடிகவேள் எம்.ஆர். ராதா. அவரைப்போல் பிறரைக் கிண்டல்செய்ய எவராலும் இயலாது. யார் மேடை போட்டு பேச அழைத்தார்களோ அவர்களையே திட்டுவார்.  அதைத் தவறாக எண்ணமாட்டார்கள். உண்மைதானே பேசுகிறார் என ரசிப்பார்கள். அதுபோல “நடிகர்களை நம்பாதே. அவன் நல்லவன் மாதிரிபேசுவான். ஆனால் மக்கள் வரிப்பணத்தை ஒழுங்கா கட்டமாட்டான்” எனக்கூறுவார்.  ஒரு திரைப்படத்தில் கவியரசு கண்ணதாசனை கிண்டல் செய்தார்.  திரைப்படக்காட்சியானாலும் இருவரின் உள்ளத்தையும் படம்பிடித்துக்காட்டும் காட்சி.  நடிகவேள் கவியரசரிடம் கேட்பார் “ஏன்பா. உனக்கு கிருஷ்ணரைத் தவிர வேறுகடவுளே தெரியாதா? எனக் கேட்பார். உடனே, கவியரசர் “என் கண்ணுக்கு அவன் தான் எங்கும் காட்சி அளிக்கிறான் என்பார். “எங்க கண்ணுக்குத் தெரியலையே” என்பார் நடிகவேல்.  உடனே கவியரசர், ஞானக்கண்ணால் தான் பார்க்க முடியும் எனக் கூறிவிட்டு,

“இல்லை எனச் சொன்னவர்தான் இருந்தாரா? வாழ்ந்தாரா?

எனது தேவன் எல்லையில்தான் போய்ச்சேர்ந்தார்”

 

என்பார்.  “லட்டுகள் சண்டை போட்டால் பூந்தி கிடைக்கும்” எனச் சொல்வார்கள். அப்படி அந்தக் காட்சி அமைந்திருக்கும். நாத்திகம் எங்கும் பரவிநின்ற காலத்தில் ஆத்திகத்தைப் பேசிய கவியரசரும் ஒரு கதாநாயகர்தானே?

     எத்தனை துன்பம் வந்தாலும் அதனைப் பொருட்படுத்தாது துணிவுடன் நிற்பவரே, ஊக்கம் உடையவர் என்கிறார் தெய்வப்புலவர். களிறானது, எத்தனை அம்புகள் தைத்தாலும் தம் பெருமையை நிலைநிறுத்தும் வீர்ர்க்களே வீர்ர்கள்.

சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பின்

பட்டுப் பாடூன்றும் களிறு (திருக்குறள் :597)

 

என்னும் திருக்குறளின்வழிவாழ்வோர் வழியில் செல்வோம்.

     இப்படி வாழ்க்கைக்குத் துணைநிற்கும் ; வாழ்க்கையை மேம்படுத்தும் பெருமையுடையவர்களை மட்டுமே நாயகர்களாகத் தமிழர் கொண்டாட வேண்டும். தெய்வப்புலவர் காட்டிய வீரம்தான் தமிழர் வீரம் என்பதனை உணர்ந்திடுவோம் ; உணர்த்திடுவோம்.

புதன், 30 ஜூன், 2021

குழந்தைகள் ஊமைகளாகின்றன

 


ஊமைகளாகும் குழந்தைகள் – தாய்மொழியை வாய்மொழியாக்குவோம்

மூளை,  தலைக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதால்தானே “எண் சாண் உடம்புக்குச் சிரசே பிரதானம்” என்னும் பொன்மொழி  உண்டாயிற்று. அந்த மூளையை எல்லாக் குழந்தைகளுக்கும் ஒன்றுபோலவே இறைவன் படைத்துள்ளார். அதனை உணர்ந்துகொள்ளவேண்டியது முதல்கடமை. இதை உணர்ந்துகொண்டாலே மற்றவையெல்லாம் தெளிவாகிவிடும். எப்படி? என்றுதானே கேட்கிறீர்கள். உடல் என்னும் அரசாங்கத்தின் தலைமைச்செயலகம்தான் மூளை. பிறக்கும்பொழுது எல்லோருக்கும் 300 கிராம் தான்.  வளரவளர ஆண்களுக்கு 1,500 கிராம் அளவிற்கு வளர்கிறது. பெண்களுக்கு 1,300 கிராம். உடனே பெண்களுக்கு …? என இழுக்காதீர். எடை தான் குறைவு. செயல்பாடு அனைவருக்கும் ஒன்றுபோலவே இருக்கும். பெண்கள், சரியாகப் பயிற்சி கொடுப்பதால் எல்லாவற்றையும் நினைவில்வைத்துக்கொள்கின்றனர். எடையுள்ள கைப்பேசியைவிட எடைகுறைந்த கைப்பேசிதான் விலை அதிகம்.

 இப்போது ஒரு உண்மையை உணர்ந்துகொண்டீர்தானே. குழந்தைகள் அறிவுமிக்கவர்களாக வளர்வது வளர்ப்பவர்களின் பொறுப்பன்றி குழந்தைகளின் பொறுப்பில்லை. எந்தக் குழந்தையையும் அறிவு இருக்கா? எனக் கடிந்துகொள்ளக்கூடாது. அப்படிக் கடிந்துகொண்டால் கடிந்துகொள்பவரின் அறிவைத்தான் ஆய்வுசெய்யவேண்டும்.

*எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே

பின் நல்லவராவது தீயவராவது அன்னை வளர்க்கையிலே

 

என்னும் புலவர்  புலமைப்பித்தனின் பாடலடிகளைப் பாடிப்பாருங்கள். குழந்தைகள் அறிவும் குணமும் மாறுவதற்கான காரணத்தைப் புரிந்துகொள்ளமுடியும்.

     அன்னை என்றால் அன்னையை மட்டுமன்று, இந்த உலகத்தில் அந்தக் குழந்தை வளர்ச்சிக்குத் துணைசெய்வோர் அனைவரும்தான் காரணம். சூழலால்தானே குழந்தைகள் வளர்கிறார்கள். இவ்வரிசையில் முதல் இடம் பெறுவோர் ஆசிரியர்கள்.

     அதனால்தான் “ஆசிரியர்கள் சம்பளத்திற்குக் கணக்குப் பார்க்கக்கூடாது. விதை நெல்லுக்குக் கணக்குப் பார்க்கலாமா?” எனக்கேட்டார் கல்விக்கண் திறந்த காமராசர். கல்விச்சாலை என்னும் கோவிலை நன்றாகக் கட்டிவிட்டு பணிசெய்வோர்க்கு உரிய வசதிகள் செய்யாவிட்டால் என்னாகும். கடவுள் என்னும் கல்வியைப் போற்ற இயலுமா? முடியாதுதானே? ஆசிரியர்கள் சுதந்திரமாகச் செயல்பட வழிவகை செய்யவேண்டும். அப்படியென்றால், தாய்மொழியில் கற்பிப்பதுதானே சிறப்பாக அமையும். கற்போருக்கும் கற்பிப்போருக்கும் அதுதானே எளிமை. அங்குதானே கற்பித்தல் சீராக அமையும்.

     தாய்மொழியில் கேள்வி கேட்க எண்ணும் ஆசிரியர், அவருக்கு அறிவுறுத்தப்பட்டபடி ஆங்கிலத்தில் “Flowers Name …” எனக் கேள்வி கேட்கட் தொடங்குகிறார். “செவ்வந்தி, சாமந்தி, கனகாம்பரம், செம்பருத்தி, மல்லி, அல்லி, லில்லி, ரோஜா… எனக் குழந்தைகள் அடுக்கிக்கொண்டே சென்றனர். உடனே ஆசிரியர் “நோ டமில். ஒன்லி இங்க்லீஷ்” என்றார். சுடுகாட்டு மௌனம் நிலவிற்று. குழந்தைகளுக்கு நன்றாக விடைதெரிந்தும் தாய்மொழியில் கூறக்கூடாதென்பதால் ஊமைபோல் நிற்கின்றனர். ‘ஊமை’ என்னும் சொல்லால், இங்கு குறிப்பிடுவது வாய்பேசமுடியாத மாற்றுத் திறனாளிகளை அன்று. வாயிருந்தும் பேசமுடியாத ; பேச விடாத சமூக அமைப்பில் சிக்கிக்கொண்டவர்களையே குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

     தாய்மொழிக்குத் தடைவிதித்ததால், நன்றாக விடைதெரிந்தும் கூற முடியாது தவிக்கும் குழந்தைகளின் அறிவாற்றால் மேம்படுமா? கீழ்ப்படுமா? இப்படி நாளுக்கு நாள் தன்னம்பிக்கை இழக்கும் குழந்தைகள், கல்வியை விட்டுவிடும் சூழலும் மேற்படிப்பினைத் தொடரமுடியாத சூழலும் பெருகிவிடுகிறது. அரசு பள்ளிகளில் நாளுக்குநாள் குழந்தைகள் குறைவதற்கு அதுதானே மிகப்பெரிய காரணமாக இருக்கிறது. இனி, தாய்மொழியில் கற்றோர்க்கு மட்டுமே கல்வி, மேற்படிப்பு, வேலைவாய்ப்பு எனில் என்னாகும். அரசுப்பள்ளியில் பிள்ளைகள் குவிவார்கள்தானே?

     வீட்டு மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீர் இருந்தால் அனைத்துக் குழாய்களிலும் தண்ணீர் வரும்தானே? தாய்மொழிக்கான வாய்ப்பு இருந்தால் சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் தமிழ்ப்பயிலும் குழந்தைகள் வளமாக வாழ்வார்கள்தானே.

     ஆங்கிலம் தெரியாவிட்டால் பெரியகுற்றம்போல் நினைக்கும்நிலை மாறவேண்டும். நம் நாட்டில் பிறநாட்டுமொழி செம்மாந்து நடக்க, தாய்மொழி கற்ற குழந்தைகள் தலைகுனிந்து நடக்கும் சூழல் எத்தனை இழிவானது.

     *பாதை தவறிய கால்கள், விரும்பிய ஊர் சென்று சேர்வதில்லை

     நல்ல பண்பு தவறிய பிள்ளையைப் பெற்றவர், பேர்சொல்லி வாழ்வதில்லை.

 

என்னும் புலவர் புலமைப்பித்தனின் அடிகளை உணர்ந்து சரியான பாதையில் சென்றால் விரும்பிய ஊரினை அடையமுடியும். குழந்தைகளுக்கும் நல்ல பண்பினை வளர்க்கமுடியும். பேர் சொல்லும் பிள்ளையாக சிறப்புடன் வாழவழிகாட்டமுடியும்.

 

     தமிழர்கள் அனைத்துத் துறைகளிலும் சிறந்துவிளங்கியதைப் பொறுத்துக்கொள்ளமுடியாத ஆங்கிலேயர்கள், அடிமையாக்கவே தங்கள் மொழியான ஆங்கிலக்கல்வியைப் புகுத்தினார். அம்மொழியைக் கற்றவர்க்கும் மட்டுமே அரசு வேலையும் கொடுத்தனர். இக்கொடும்போக்கினை எதிர்த்த தமிழர்கள் தங்கள் அரசுப்ப்பணியினை விட்டு விடுதலை வீரர்களாக மாறினர். இச்சூழலைப் பயன்படுத்திக் கொண்ட சில துரோகிகள் ஆங்கிலேயர்களுடன் கைகோத்துக்கொண்டு தமிழர்களைப் பேசவிடாது ஊமைகளாக்கினர். “இம் என்றால் சிறைவாசம், ஏன் என்றால் வனவாசம்” என்னும் கொள்கையைப் பின்பற்றினர். இப்படி மொழியின் வழி ஊமைகளாக்கும் நிலையினை அந்நியர்கள் வழிவகை செய்தனர். அவர்கள்வழியிலிருந்து விடுபட்டு, தாய்மொழியில் கற்றுக்கொடுத்தால்  பேசாத குழந்தைகளும். எங்கும் தமிழ்மணம் வீசும். உண்மைதானே?

 

(‘நீதிக்குத்தலைவணங்கு’ என்னும் திரைப்படப்பாடலான “இந்தப் பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப்பூவைத் தொட்டிலில் கட்டிவைத்தேன்” என்னும் பாடலிலுள்ள அடிகள்)

திங்கள், 28 ஜூன், 2021

தேநீர் கவிதை

 


சிங்கைப்பெண்ணின் தங்கக் கவிதை 


(மொழிபெயர்ப்பு மட்டுமே நான். கவிதை பேராசிரியர் லீ சூ பெங்க் , சிங்கப்பூர் பண்பாட்டுப் பதக்க வெற்றியாளருடையது)

 

தேநீர் கவிதை

 

தேநீரை சுவைத்திடு நீ

அழகாகவும் மெதுவாகவும் ….

இறுதிப் பயணம்

எப்போதென்று யாரறிவார்?

இருக்கும்வரை மகிழ்ந்திடுவாய்

 

தேநீரைச் சுவைத்திடு நீ

அழகாகவும் மெதுவாகவும்  

 

பனித்துளி வாழ்க்கை

கடலாய்த் தெரியும்

உலகமே உன்னால் விடிவதாய்த் தெரியும்

செய்யும் செயலெல்லாம் தடையாய் முடியும்

போராட்ட வாழ்க்கை இது. எதிர்கொள்ளக் கற்றுக்கொள்

காலம் கடந்தபின் ஞானம் வழிந்தென்ன?

காலன் இங்கே காத்திருக்கிறான்

 

தேநீரை சுவைத்திடு நீ

அழகாகவும் மெதுவாகவும்

 

நட்புகள் சில மலர்ந்திருக்கும்

இன்னும் சில மாய்ந்திருக்கும்

வானவில்லாய் உடன் நின்றபலரும்

வானத்தின் முகவரியில் மறைந்தே போயிருப்பர்

குழந்தைகளுக்கு இறக்கை முளைக்கும்

பறந்துசென்றே பார்வை மறைக்கும்

வாழ்க்கை இப்படித்தான் கடக்குமென்று

கணித்திட ஒருவர் பிறந்திடவில்லை.

 

அதனால், தேநீரை சுவைத்திடு நீ

அழகாகவும் மெதுவாகவும்

 

இறுதிவாழ்க்கை அன்பால் நிறையும்

உலகம் முழுதும் உறவாய்த் தெரியும்

விண்மீன் வெளிச்சம் அன்பால் ஒளிரும்

பாசத்துடன் வாழ்ந்தோரைப் பாராட்டிடுவோம்

 

புன்னகையோடு சுவாசிப்போம்

கவலைகள் யாவும் ஓடிவிடும்

 

அதனால், தேநீரை சுவைத்திடு நீ

அழகாகவும் மெதுவாகவும்

 

உறவுகளைக் கடந்தது இக் கவிதை

அனைவர்க்குமானது இக்கவிதை

 

நான் இறந்தபின்னே

கண்ணீர்துளிகளை  காணிக்கையாக்குவீர்

அப்போது அதைநான்  அறிவேனோ?

இன்றே என்னுடன் அழுதிடுவீர்.

 

மலர்களைத் தூவி வணங்கிடுவீர்

என்னால் பார்க்க இயலாதே?

இன்றே மலர்களைக் கொடுத்திடுவீர்.

 

என்னை அன்று புகழ்ந்திடுவீர்

எனது செவிக்குள் நுழையாது

இன்றே என்னைப் புகழ்ந்திடுவீர்

 

எந்தன் பிழைகளை மன்னிப்பீர்

எனக்கு ஒன்றும் தெரியாது

இன்றே என்னை மன்னிப்பீர்

 

என்னை இழந்து வருந்திடுவீர்

என்னால் உணர முடியாதே

இன்றே என்னை இழந்திடுவீர்.

 

என்னுடன் பழக விரும்பிடுவீர்

என்னால் அறிய  முடியாதே

இன்றே பழக வருவீரே.

 

 

பல்லாண்டாய் பிரிந்த நண்பரெல்லாம்

அஞ்சலி செலுத்த வந்திடுவீர்

அப்போது நானும் அறிவேனா?

இப்போதே என்னைத் தேடிடுவீர்.

 

நேரத்தை யாவர்க்கும் செலவிடுவீர்

உதவிகள் செய்து  மகிழ்ந்திடுவீர்

குடும்பத்தை நட்பை மதித்திடுவீர்

எப்போதும் எதுவும் நடந்திடலாம்

யாரை இழப்பீர் அறியீரே

 

தனியாக நீங்கள் புலம்பலாம்

இணைந்தால்தானே பேசலாம்

தனியாக நீங்கள் மகிழலாம்

இணைந்தால்தானே கொண்டாடலாம்

தனியாக நீங்கள் புன்னகைக்கலாம்

இணைந்தால்தானே சிரிக்கலாம்

 

இப்போதில்லையெனில் எப்போது?

 

 

 

நகைச்சுவை மருந்து – திருவள்ளுவர் வழியில்

 


நகைச்சுவை மருந்து – திருவள்ளுவர் வழியில்

     இம்மருந்து கசக்காது ; புளிக்காது ; துவர்க்காது .கரிக்காது ; காராது, இனிக்கமட்டுமே செய்யும்.  மருந்து கொடுப்போர்க்கும் இனிக்கும் ; உண்போர்க்கும் இனிக்கும். பக்கத்தில் நின்று கேட்போர்க்கும் இனிக்கும்.

     நகைச்சுவை என்பது பிறரைக் காயப்படுத்துவதல்ல ; காயத்திற்கு மருந்திடுவது. நகைச்சுவை எவ்வகையிலும் பிறரைக் காயப்படுத்திவிடக்கூடாது என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.

நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி  பகையுள்ளும்

பண்புள பாடறிவார் மாட்டு (திருக்குறள் – 995)

 

என்னும் அடிகளில் பண்புடையவர்களின் மாண்பை நகைச்சுவையிலும் காணமுடியும் எனத் தெளிவுறுத்துகிறார்தானே? சில நகைச்சுவைகளைக் காண்போமா?

 

நகை : 1

 

     ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டு இருக்கிறார். “திணை – இரண்டு, உயர்திணை, அஃறிணை, திணையிலிருந்து பால் பிரியும்.  உயர்திணை – ஆண் பால், பெண்பால், பலர் பால் என மூன்றாகப் பிரியும்” எனப் பாடம் நடத்திக்கொண்டிருக்கிறார். ஒரு மாணவன் கவனிப்பதுபோல கண்களைத் திறந்தே தூங்கிக்கொண்டிருக்கிறான். “அது ஒரு கலைதானே”. அவனைப் பக்கத்திலிருந்த மாணவன் சீண்டுஉலுக்குகிறான். உலுக்கிய வேகத்தில் “ஐயா” என்கிறான். பால் எதிலிருந்து பிரிகிறது. பசுவின் பால் என நினைத்து “மடியிலிருந்து” என்றான். எல்லோரும் சிரித்தார்கள். ஆசிரியர் அவனுடைய திறமையைப் பாராட்டினார். உண்மைக்குப் பாராட்டுக் கிடைப்பது இயல்புதானே.

நகை - 2

பெண்கள், தங்களுக்குப் பிரச்சினை ஏற்படக்கூடும் என எண்ணும்பொழுதே, அதனைத் தடுத்துவிடவேண்டும். வளர்ந்துவிட்டால் தடுக்கமுடியாது.  மருத்துவரான மகனுக்கு மருத்துவரான மருமகளையே திருமணம் செய்வித்தார் ஒரு பெரியவர். நாட்கள் நகர்கின்றன. ஒருநாள், மருமகளும் மகனும் பணி முடித்துவந்தபின், மகன் இருக்கையில் அமர்ந்து ஓய்வெடுக்கிறார். மருமகள் காஃபி கலந்துவந்துகொடுத்தார். காஃபியை ஒரு வாய் குடித்துவிட்டு, “காஃபியா இது” எனக் கீழே தட்டிவிட்டார். காஃபி குறித்த அன்று காலை நடைபெற்ற முதியோர் கலந்துரையாடலில் “மருமகளை முதலிலேயே அடக்கிவைக்கவேண்டும்” என ஆலோசனைக் கூறப்பட்டதன் விளைவு அது. மீண்டும், செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்த அவர் காலுக்கருகே பாத்திரம் தவறி விழுந்த சத்தம் கேட்டது. திருமகளாய் நின்ற மருமகள் காளியாக அவர்முன் நின்றுகொண்டிருந்தாள். அவள்தான் பால் பாத்திரத்தை அவர்முன் போட்டுடைத்தாள். வீடு முழுதும் பால் சிதறிக்கிடந்தது. காளி முன் சிவன் போல் அமைதியாக எழுந்து வெளியே போனார் மகன்.  மருமகளின் கோபம் அரை லிட்டர் பாலுடனும் பாத்திரம் நசுங்கியதோடும் முடியவில்லை. காளியின் கோபத்தால் என்ன விளையுமோ? என்னும் அச்சம் பெரியவர் முகத்தில் பரவியிருந்தது. தன் தவறை உணர்ந்தார். அடுத்தநாள் காலை, மருமகள் மகளாகி இருந்தாள். மிகுந்த பாசத்துடன் பேசினார். காளி திருமகளானாள். மாமனார் தந்தையானார்.

நகை - 3

குழந்தைக்குச் சோறூட்டும் கலை – குழந்தைக்குச் சோறூட்டும் தாய் தனக்குப் பக்கத்தில் குழந்தைக்கு நிகரான உருவத்தில் ஒரு பொம்மையை வைத்திருக்கிறாள். குழந்தைக்கு முதலில் சோறூட்டாமல் பொம்மைக்குச் சோறூட்டுவதுபோல் ஊட்டுகிறாள். “வேண்டாம்” என்பதுபோல் அவளே பொம்மையின் தலையினை இடதுகையால் ஆட்டுகிறாள். வேண்டாமா? எனக் கேட்டுவிட்டு, பக்கத்தில் இருந்த பூரிக்கட்டையால் வேண்டாமெனத் தலையாட்டிய பொம்மையை இரண்டு அடி அடிக்கிறாள். மீண்டும் சோறூட்டுவதுபோல் கையை எடுத்துச்செல்கிறாள். பொம்மை அமைதியாக இருக்கிறது. “சாப்பிட்டுவிட்டாயே” எனக் கூறிவிட்டு தனது குழந்தையின் பக்கம் திரும்புகிறாள். குழந்தைக்கும் சோறூட்ட கையினை வாயருகே கொண்டு செல்கிறாள். உடனே மறுக்காமல் குழந்தை உண்டுவிடுகிறது. பொம்மை அடிவாங்கியதைப் பார்த்த குழந்தையாயிற்றே. பாம்பின் கால் பாம்பறியும் என்பது இதுதானோ?

நகை - 4

கைப்பேசியால் குடும்பங்கள் சீரழிந்து வருவது உண்மைதானே?  அன்று, வேவ்வேறு இடத்தில் இருந்தாலும் மனிதர்கள் ஒன்றாக இருந்தனர் ; பாசத்துடன் இருந்தனர். ஆனால், இன்று ஒரே இடத்தில் இருந்தாலும் ஆளுக்கு ஒரு கைப்பேசியில் இருக்கிறார்கள். உலகத்தவரோடு நட்பு கொள்ள விரும்புவோர், பக்கத்தில் இருக்கும் உறவுகளோடு பேசுவதில்லை.  ஒரு காட்சி எல்லோரையும் திருத்திவிடுகிறது. ஓர் அறையில் கணவன், தம்பி, குழந்தைகள் என ஆளுக்கு ஒரு கைப்பேசியைப் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். மனைவி கணவரிடம் கைப்பேசியைக் கேட்கிறாள். அவர் கொடுக்கவில்லை. ‘பளார்’ என்று கன்னத்தில் ஒரு அடி. உடனே கொடுத்துவிடுகிறார். பக்கத்தில் இருந்த குழந்தைகளும் கையை நீட்டியதும் கொடுத்துவிடுகின்றன. என்ன அழகான ஆளுமை. திட்டமிட்டு செய்தது தான் என்றாலும் கணவரின் நடிப்பால்தான் எல்லாம் சாத்தியமானது. உண்மைதானே?. மனைவி இதுதான் வாய்ப்பென்று நடிகர்திலகம் போல் முழுத்திறமையையும் வெளிப்படுத்தியிருந்தாள். எப்படி என்று கேட்கிறீர்களா? கணவனின் சிவந்த கன்னம் தான் அதற்குச் சாட்சி. 

“நல்லதா நாலு வார்த்தை சொல்” என்றுதானே பெரியோர் சொல்வார்கள். அதனால் நான்கு நகைச்சுவைகளை மட்டும் கூறியுள்ளேன். இதைப் படித்தபின்னும் உங்கள் கவலை விலகவில்லையா? நீங்கள் ஆழமான ஒரு பிரச்சினையில் சிக்கிக்கொண்டிருக்கிறீர்கள் என்றுபொருள். இனி, நீங்கள் காலையில் எழுந்தவுடன் நாள்காட்டியில் நாள் தாளைக் கிழிக்கும் போது பழைய எண்ணங்களையும் கிழித்துவிடுங்கள். புதிதாக நாளைத் தொடங்குங்கள். மகிழ்ச்சியாக இருப்பதுபோல் நடியுங்கள். நாளடைவில் அதுவே பழகிவிடும். உலகமே மகிழ்ச்சியாக இருப்பதுபோல் தோன்றும். இருளாக இருந்த வாழ்வில் வெளிச்சம் கூடும்.

நகல்வல்லார் அல்லார்க்கு  மாயிரு ஞாலம்

பகலும்பாற் பட்டன்று இருள் (திருக்குறள் – 999)

 

என்னும் திருக்குறளின் வழிநின்று இருளை விலக்குவோம். இலக்கியம் காலம் காட்டும் கண்ணாடி. அது உங்களைத் திருத்தாது. அதனைக் கண்டு நீங்கள்தான் திருந்தவேண்டும். உண்மைதானே? திருவள்ளுவர் வழியில் நின்று மகிழ்வோம் ; மகிழ்விப்போம்.

ஞாயிறு, 27 ஜூன், 2021

பெண்ணியம் பேசிய முதல்வர் – திருவள்ளுவர்

 


பெண்ணியம் பேசிய முதல்வர் – திருவள்ளுவர்

     பெண்ணியம் பேசிக்கொண்டே காலத்தைக் கடந்துகொண்டேபோகும் சூழலைக் காணமுடிகிறது. எத்தனையோ நூற்றாண்டுகள் ; எத்தனையோ தலைமுறைகள் கடந்தபின்னும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நின்றபாடில்லை. மாறாகப் பெருகிவரும் சூழலையும் காணமுடிகிறது. இன்னும் தெளிவாகக் கூறவேண்டுமாயின் பெண்களை இழிவுபடுத்தும் சூழல் கொடூரமானதாக மாறிவருகிறது.

     “பெண்விடுதலை” என்னும் மாயையினை நம்பி வெளியே துணிவுடன் எதிர்த்து நிற்கும் பெண்கள் நாள்தோறும் காணாமல் போவது வாடிக்கையாகிவிட்டது. நாள்தோறும் அப்பெண்களைப் பெற்ற தாய்மார்களின் கண்ணீர்தான் எழுத்துக்களாக செய்தித்தாள்களில் வெளிவந்துகொண்டு இருக்கின்றன.

     குற்றங்கள் செய்தவர்களைத் தண்டிக்கும் முன் பணம், புகழ், பதவி என எத்தனையோ கவசங்கள் குற்றவாளிகளைக் காப்பாற்றிவிடுகிறது. சரி, பிறரை குறை சொல்லியே தப்பித்துக்கொள்ள நினைப்பதில் ஒரு பயனும் இல்லை. ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற அளவிற்கு பெண்களின் மீதான மதிப்பினை உயர்த்துவஹ்டு ஒன்றுதான் வழி. விதைகள் நன்றாக அமைந்துவிட்டால் செடி நச்சுடையதாக அமையாதுதானே? எனவே சிறுவயது முதலே பெண்களை மதித்துவாழ ஆண் குழந்தைகளுக்கு ; இளைஞர்களுக்கு ; பெரியோர்களுக்குக் கற்றுக்கொடுக்கவேண்டும். பெண்களைப் பாதுகாப்பாக வளர்க்கவேண்டும். பெண்களைக் காப்பதாக எண்ணி அவர்களுடைய திறமையை முடக்கிவிடக்கூடாது.

     ஆண்களுக்குப் பெண்ணிய அறிவை ஊட்டுவது முள் மேல் படர்ந்துவிட்ட சேலையை எடுக்கும் அளவிற்கான கவனம் தேவை. வீடுகளில் ; பள்ளிகளில் ; கல்லூரிகளில் ; பணியிடங்களில் ; சாலைகளில் ; மண்ணில் ; விண்ணில் என அனைத்து இடங்களிலும் பெண்கள் மதிக்கப்படவேண்டும்.

     ‘பெண்ணிய முழக்கம்’ என்பது பெண்களின் திறத்தை மதிக்கவேண்டும் என்பதற்கான ஒரு வழக்குதானே? மனிதர்களை மனிதனாக எண்ணவேண்டும் என்னும் இயல்பான ஒரு வாழ்வைக்கூடப் போராடித்தான் பெறவேண்டுமென்றால், மனித இனத்துக்கு ஆறறிவிருந்து என்ன பயன்? என்றுதானே கேட்கத்தோன்றுகிறது. அதனால் வீட்டில் பெண்குழந்தைகளை ஆண்குழந்தைகளுக்கு இணையாக; மேலாக வளர்க்கவேண்டும். அப்பொழுதுதான் மதிக்கவேண்டும் என்னும் எண்ணம் ஆண் குழந்தைகளுக்கும், வீரத்துடன் வளரவேண்டும் என்னும் எண்ணம் பெண்களுக்கும் ஏற்படும். முதலில் இப்படி வளர்ப்பது சாத்தியமில்லாததாகத் தோன்றினாலும் காலப்போக்கில் பழகிவிடும்.

     காசுக்காக தன் உடலையே விற்கும் பெண்களைக் கூட “வரைவின் மகளிர்” என எத்தனை மதிப்புடன் சுட்டியிருக்கிறார் திருவள்ளுவர். வரைவு எனில் திருமணம் என்று பொருள். திருமணம் செய்யாத பெண்கள் எனக்கூறுவது எத்தனை மேன்மை.

     “வரைவுஇலா மாண் இழையார் மென் தோள்”  (திருக்குறள்- 919) எனக் குறிப்ப்பிடுகிறார். மேலும் “இருமனப் பெண்டீர்” (திருக்குறள் – 920)  பொது நலத்தார் (திருக்குறள் – 915) பொருட்பெண்டீர் (திருக்குறள் -914) என எத்தனை மதிப்புடைய சொற்களால் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இன்று வாடி, போடி என ஊடகங்களில் பெண்களை அழைப்பது, பெண்ணே மற்றொரு பெண்ணை, ஆணை அழைத்துக் கொடுமை செய்யச்சொல்வது என எத்தனைக் காட்சிகளைக்காணமுடிகிறது. இதுவா வளர்ச்சி? சமூகத்திற்கே இகழ்ச்சிதானே?

பெண்களை ‘கட்டை’ என அழைப்பதும் ‘குட்டி’ என அழைப்பதும் பாடல் எழுதுவதும் இன்னும் எத்தனையோ இழிவான சொற்களால் பெண்களைக் குறிப்பது வாடிக்கையாகிவிட்டது.

தமிழர்களுடைய வாழ்வில் பசுவானது மிகவும் புனிதமானது. அதனால்தான் மாட்டுப்பொங்கல் அன்று காளைகளை மட்டுமின்றி பசுக்களையும் வணங்குவர். பசு புனிதமானது என்பதனை பண்பாட்டு அடிப்படையில் மட்டும் குறிக்கப்படுவதில்லை. தாயனவள் குழந்தைக்குப் பாலூட்டி வளர்ப்பதுபோல், பசுவும் பாலினைக் கொடுத்து குழந்தையைக் காக்கிறது. கைக்குழந்தை முதல் இறக்கும் நிலையில் உள்ளவர் வரை பால் எத்தனை முக்கியத்துவம் பெறுகிறது. ஏன்? இன்னும் சொல்லப்போனால் இறந்த பின்னும் பாலூற்றும்நிகழ்வு நடக்கத்தானே செய்கிறது. என்ன கட்டுரைக்குத் தொடர்பில்லாமல் பால் குறித்துப் பேசப்படுகிறதே என்றுதானே எண்ணுகிறீர்கள். காரணம் இருக்கிறது. சொல்லட்டுமா?

கன்று உயிருடன் இருக்கும்வரை, முதலில் கன்றினை பசுவின் மடியினை முட்டச்செய்து பால் கறப்பர். பசு தன் கன்றுக்குப் பால் சுரக்கும். அதனை மனிதன் பிடித்துக் குழந்தைகளுக்குக் கொடுத்துவிடுவான். அது தன் குழந்தையாக இருக்கலாம். அல்லது சமூகத்தில் ஏதேனும் ஒரு குழந்தையாக இருக்கலாம். ஆனால் பயன் அடைவது மனித குலமே. பசுவினது கன்று இறந்துவிட்டாலும், வைக்கோலைவைத்து கன்று வடிவத்தில் பசுவின் முன் காட்டுவர்கள். அப்பொழுதுதான் பால் கறக்கும். பசுவிற்கு கன்று இறந்துவிட்டது. இது பொம்மை எனத்தெரியும். ஆனால், அதன் பாசம், பாலாக வடியும்.  

அப்படித்தான் பெண்களும். பசுவிடம் கன்றின் பொம்மையைக் காட்டி மயக்குவது போல கயவர்கள் பெண்ணின் இரக்க உணர்வுகளைப் புரிந்துகொண்டு, பாசம் என்னும் பெயரில் பெண்களை அடிமையாக்கிவிடுகின்றனர். ஆசை வார்த்தைகளால் மோசம் செய்கின்றனர். “நீ இல்லை என்றால் தற்கொலை” எனப்பேசிப்பேசி வசப்படுத்தி வலையில்வீழ்த்திவிடுகின்றனர். இத்தகைய உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் பக்குவம் பெண்களுக்கு வேண்டும். திட்டமிட்டு ஏமாற்றும் கயவனின் பண்பை அறியாமல் “அவன் தீங்கு செய்யமாட்டான்” என எண்ணினால் பின்னால்வருந்தவேண்டி வரும். எல்லா துன்பங்களுக்கும் அந்த இரக்கமே காரணமாகிவிடும். எல்லோரையும் சந்தேகக்கண் கொண்டு பார்க்கும் காவலர்தான் குற்றவாளிகளை அடையாளம் காண்பார். குற்றம் நிகழாது காப்பார். அவ்வாறே ஒவ்வொரு பெண்ணும் தன்னைக் காத்துக்கொள்ள விழிப்புடன் செயல்படவேண்டும். ஆண்கள் எவராயினும், பெண்களுக்குக் கேடு செய்தால் உடனடியாகத் தண்டிக்க வழி செய்யவேண்டும். தொடக்கத்தில் மன்னித்து விட்டுவிட்டால் நாளுக்கு நாள் பெருகி பெரும் ஆபத்தை விளைவித்துவிடும்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பல பழகியவர்களாலேயே ஏற்படுகிறது எனக் காவல்துறை கூறுகிறது. உங்களுடைய நகம்தானே என வளரவிட்டால் முகத்தைக் கீறிவிடும்தானே?  பகையை வெல்ல பெண்களுக்கு வழிகாட்டுகிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.

     இளைதாக முள்மரம் கொல்க களையுநர்

     கைகொல்லும் காழ்த்த இடத்து (திருக்குறள்- 879)

 

     முளைவிட்ட முள்மரத்தை பார்த்த உடனே வெட்டிவிடவேண்டும். வளர்ந்தபின் வெட்டலாம் என எண்ணினால் அதனால் காயங்கள் ஏற்படும் என அறிவுரை கூறுகிறார். பெண்களைத் துணிவுடன் வாழச்செய்ய அறிவுறுத்துவதால் பெண்ணியம் பேசிய முதல்வர் தெய்வப்புலவர் திருவள்ளுவர் எனக் குறிப்பிடலாம்தானே?