நகைச்சுவை மருந்து
– திருவள்ளுவர் வழியில்
இம்மருந்து கசக்காது ; புளிக்காது ; துவர்க்காது
.கரிக்காது ; காராது, இனிக்கமட்டுமே செய்யும்.
மருந்து கொடுப்போர்க்கும் இனிக்கும் ; உண்போர்க்கும் இனிக்கும். பக்கத்தில்
நின்று கேட்போர்க்கும் இனிக்கும்.
நகைச்சுவை என்பது பிறரைக் காயப்படுத்துவதல்ல
; காயத்திற்கு மருந்திடுவது. நகைச்சுவை எவ்வகையிலும் பிறரைக் காயப்படுத்திவிடக்கூடாது
என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.
நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு
(திருக்குறள் – 995)
என்னும் அடிகளில்
பண்புடையவர்களின் மாண்பை நகைச்சுவையிலும் காணமுடியும் எனத் தெளிவுறுத்துகிறார்தானே?
சில நகைச்சுவைகளைக் காண்போமா?
நகை : 1
ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டு இருக்கிறார். “திணை
– இரண்டு, உயர்திணை, அஃறிணை, திணையிலிருந்து பால் பிரியும். உயர்திணை – ஆண் பால், பெண்பால், பலர் பால் என மூன்றாகப்
பிரியும்” எனப் பாடம் நடத்திக்கொண்டிருக்கிறார். ஒரு மாணவன் கவனிப்பதுபோல கண்களைத்
திறந்தே தூங்கிக்கொண்டிருக்கிறான். “அது ஒரு கலைதானே”. அவனைப் பக்கத்திலிருந்த மாணவன்
சீண்டுஉலுக்குகிறான். உலுக்கிய வேகத்தில் “ஐயா” என்கிறான். பால் எதிலிருந்து பிரிகிறது.
பசுவின் பால் என நினைத்து “மடியிலிருந்து” என்றான். எல்லோரும் சிரித்தார்கள். ஆசிரியர்
அவனுடைய திறமையைப் பாராட்டினார். உண்மைக்குப் பாராட்டுக் கிடைப்பது இயல்புதானே.
நகை - 2
பெண்கள், தங்களுக்குப்
பிரச்சினை ஏற்படக்கூடும் என எண்ணும்பொழுதே, அதனைத் தடுத்துவிடவேண்டும். வளர்ந்துவிட்டால்
தடுக்கமுடியாது. மருத்துவரான மகனுக்கு மருத்துவரான
மருமகளையே திருமணம் செய்வித்தார் ஒரு பெரியவர். நாட்கள் நகர்கின்றன. ஒருநாள், மருமகளும்
மகனும் பணி முடித்துவந்தபின், மகன் இருக்கையில் அமர்ந்து ஓய்வெடுக்கிறார். மருமகள்
காஃபி கலந்துவந்துகொடுத்தார். காஃபியை ஒரு வாய் குடித்துவிட்டு, “காஃபியா இது” எனக்
கீழே தட்டிவிட்டார். காஃபி குறித்த அன்று காலை நடைபெற்ற முதியோர் கலந்துரையாடலில்
“மருமகளை முதலிலேயே அடக்கிவைக்கவேண்டும்” என ஆலோசனைக் கூறப்பட்டதன் விளைவு அது. மீண்டும்,
செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்த அவர் காலுக்கருகே பாத்திரம் தவறி விழுந்த சத்தம்
கேட்டது. திருமகளாய் நின்ற மருமகள் காளியாக அவர்முன் நின்றுகொண்டிருந்தாள். அவள்தான்
பால் பாத்திரத்தை அவர்முன் போட்டுடைத்தாள். வீடு முழுதும் பால் சிதறிக்கிடந்தது. காளி
முன் சிவன் போல் அமைதியாக எழுந்து வெளியே போனார் மகன். மருமகளின் கோபம் அரை லிட்டர் பாலுடனும் பாத்திரம்
நசுங்கியதோடும் முடியவில்லை. காளியின் கோபத்தால் என்ன விளையுமோ? என்னும் அச்சம் பெரியவர்
முகத்தில் பரவியிருந்தது. தன் தவறை உணர்ந்தார். அடுத்தநாள் காலை, மருமகள் மகளாகி இருந்தாள்.
மிகுந்த பாசத்துடன் பேசினார். காளி திருமகளானாள். மாமனார் தந்தையானார்.
நகை - 3
குழந்தைக்குச்
சோறூட்டும் கலை – குழந்தைக்குச் சோறூட்டும் தாய் தனக்குப் பக்கத்தில் குழந்தைக்கு நிகரான
உருவத்தில் ஒரு பொம்மையை வைத்திருக்கிறாள். குழந்தைக்கு முதலில் சோறூட்டாமல் பொம்மைக்குச்
சோறூட்டுவதுபோல் ஊட்டுகிறாள். “வேண்டாம்” என்பதுபோல் அவளே பொம்மையின் தலையினை இடதுகையால்
ஆட்டுகிறாள். வேண்டாமா? எனக் கேட்டுவிட்டு, பக்கத்தில் இருந்த பூரிக்கட்டையால் வேண்டாமெனத்
தலையாட்டிய பொம்மையை இரண்டு அடி அடிக்கிறாள். மீண்டும் சோறூட்டுவதுபோல் கையை எடுத்துச்செல்கிறாள்.
பொம்மை அமைதியாக இருக்கிறது. “சாப்பிட்டுவிட்டாயே” எனக் கூறிவிட்டு தனது குழந்தையின்
பக்கம் திரும்புகிறாள். குழந்தைக்கும் சோறூட்ட கையினை வாயருகே கொண்டு செல்கிறாள். உடனே
மறுக்காமல் குழந்தை உண்டுவிடுகிறது. பொம்மை அடிவாங்கியதைப் பார்த்த குழந்தையாயிற்றே.
பாம்பின் கால் பாம்பறியும் என்பது இதுதானோ?
நகை - 4
கைப்பேசியால்
குடும்பங்கள் சீரழிந்து வருவது உண்மைதானே?
அன்று, வேவ்வேறு இடத்தில் இருந்தாலும் மனிதர்கள் ஒன்றாக இருந்தனர் ; பாசத்துடன்
இருந்தனர். ஆனால், இன்று ஒரே இடத்தில் இருந்தாலும் ஆளுக்கு ஒரு கைப்பேசியில் இருக்கிறார்கள்.
உலகத்தவரோடு நட்பு கொள்ள விரும்புவோர், பக்கத்தில் இருக்கும் உறவுகளோடு பேசுவதில்லை.
ஒரு காட்சி எல்லோரையும் திருத்திவிடுகிறது.
ஓர் அறையில் கணவன், தம்பி, குழந்தைகள் என ஆளுக்கு ஒரு கைப்பேசியைப் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
மனைவி கணவரிடம் கைப்பேசியைக் கேட்கிறாள். அவர் கொடுக்கவில்லை. ‘பளார்’ என்று கன்னத்தில்
ஒரு அடி. உடனே கொடுத்துவிடுகிறார். பக்கத்தில் இருந்த குழந்தைகளும் கையை நீட்டியதும்
கொடுத்துவிடுகின்றன. என்ன அழகான ஆளுமை. திட்டமிட்டு செய்தது தான் என்றாலும் கணவரின்
நடிப்பால்தான் எல்லாம் சாத்தியமானது. உண்மைதானே?. மனைவி இதுதான் வாய்ப்பென்று நடிகர்திலகம்
போல் முழுத்திறமையையும் வெளிப்படுத்தியிருந்தாள். எப்படி என்று கேட்கிறீர்களா? கணவனின்
சிவந்த கன்னம் தான் அதற்குச் சாட்சி.
“நல்லதா நாலு
வார்த்தை சொல்” என்றுதானே பெரியோர் சொல்வார்கள். அதனால் நான்கு நகைச்சுவைகளை மட்டும்
கூறியுள்ளேன். இதைப் படித்தபின்னும் உங்கள் கவலை விலகவில்லையா? நீங்கள் ஆழமான ஒரு பிரச்சினையில்
சிக்கிக்கொண்டிருக்கிறீர்கள் என்றுபொருள். இனி, நீங்கள் காலையில் எழுந்தவுடன் நாள்காட்டியில்
நாள் தாளைக் கிழிக்கும் போது பழைய எண்ணங்களையும் கிழித்துவிடுங்கள். புதிதாக நாளைத்
தொடங்குங்கள். மகிழ்ச்சியாக இருப்பதுபோல் நடியுங்கள். நாளடைவில் அதுவே பழகிவிடும்.
உலகமே மகிழ்ச்சியாக இருப்பதுபோல் தோன்றும். இருளாக இருந்த வாழ்வில் வெளிச்சம் கூடும்.
நகல்வல்லார் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று
இருள் (திருக்குறள் – 999)
என்னும் திருக்குறளின்
வழிநின்று இருளை விலக்குவோம். இலக்கியம் காலம் காட்டும் கண்ணாடி. அது உங்களைத் திருத்தாது.
அதனைக் கண்டு நீங்கள்தான் திருந்தவேண்டும். உண்மைதானே? திருவள்ளுவர் வழியில் நின்று
மகிழ்வோம் ; மகிழ்விப்போம்.