தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

செவ்வாய், 25 மே, 2021

நகைச்சுவை நகைக்க அன்று

 


நகைச்சுவை நகைக்க அன்று

நகைச்சுவை அறுசுவையினைவிட நிறைவு தருகிறது. உண்மைதானே? அதனால்தான் இனிக்கஇனிக்கப் பேசும்போது பசி தெரிவதில்லை. நகைத்து முடித்தபின் நன்கு பசிக்கும். நகைக்கத் தெரிந்தவருக்கு பசி மட்டுமன்று வாழ்நாளும் கூடும். உறவுகளிடமும் நண்பர்களிடமும் பேசத்தெரிந்தவரைச் சுற்றி எப்போதும் கூட்டம் இருக்கும். “கண்களில் கருணை  இருந்தால், அனைவரிடமும் நீங்கள் விருப்பமாக இருக்கிறீர்கள்” என்று பொருள்.  “சொற்களில் இனிமை இருந்தால், அனைவரும் உங்களிடம் விருப்பமாக இருக்கின்றார்கள்” என்று பொருள். இரண்டனுள், முன்னதைவிட இரண்டாவதுதான் போற்றப்படுகிறது என்பது பெரியோர் வாக்கு.

நீங்கள் இரண்டு நிமிடம் உங்களைப்பற்றி எண்ணிப்பாருங்கள். உங்களுடைய அருமை உங்களுக்குப் புரியும். அனைவரைப் பற்றியும் அறிந்துகொள்ள விழையும் மனிதர்கள் தங்களைப் பற்றி அறிந்துகொள்ளவிழைவதில்லைதானே. கடந்தகாலத்தில் நடந்த நிகழ்ச்சிகளை எண்ணிப்பாருங்கள். அழுத நிகழ்வுகள் சிரிப்பையும், சிரித்த நிகழ்வுகள் அழுகையையும் கொண்டுவந்துவிடுகிறது. இப்பொழுது நகைச்சுவை என்பது நகைக்க மட்டுமல்ல என உணரமுடிகிறதல்லவா?

உயர்ந்த பொறுப்பில் இருப்பவர்கள் சிரிப்பதில்லை ; சிரிக்கத்தெரிந்தாலும் வெளிப்படுத்துவதில்லை. அப்படி பொறுப்புணர்வுடனும் புன்னகையுடனும் வாழ்பவர்களைக்கண்டால் வணங்கத்தான்வேண்டும். அப்படி சில தாத்தாக்களோ ! பாட்டிகளோ  ! உங்கள் வீட்டில் இருந்தால் நீங்கள் கொடுத்துவைத்தவர்கள்தான். எந்தச் சூழலையும் எளிமையாக எதிர்கொள்ளக்கூடிய வல்லமை அவர்களுக்குள் இருப்பதைக் காணலாம். நடு இரவில், குழந்தை, வயிற்றுவலியில் துடிக்கிறது. பெற்றோர் பதைக்கிறார்கள். தாத்தாவும் பாட்டியும் அலறும் சத்தம்கேட்டு தூக்கத்திலிருந்து எழுந்து குழந்தையிடம் வருகிறார்கள். பாட்டி, பதற்றப்படாமல் பொறுமையாக, குழந்தை வயிற்றில் விளக்கெண்ணையைத் தடவிவிட்டு, கை, காலை நீவிவிட்டு படுக்கவைத்தார். புன்னகை இல்லாமலே குழிவிழும் புன்னகை முகத்துடன் ‘நீங்க போய் தூங்குங்க. நான் பார்த்துக்கொள்கிறேன்” என்றாள் பாட்டி. தாத்தாவும் அதனையே வழிமொழிகிறார். வானைக் கிழித்த குழந்தையின் அழுகை படிப்படியாக மழை நிற்பதைப்போல் நின்று உறங்கிவிடுகிறது. ஒருவர் மற்றொருவரைப் பார்த்துப்புன்னகைத்த புன்னகை, வாழ்க்கையில் அவர்கள் இப்படி எத்தனை  சூழலை எதிர்கொண்டிருப்பார்கள் என்பதன் வெளிப்பாடு.

சரி, நகைச்சுவையைப் பற்றித்தானே பேசிக்கொண்டிருக்கிறோம். புன்னகைக்குத் தாவிவிட்டீரே. என எண்ணாதீர்கள். புன்னகை, நகைச்சுவையின் ஒன்றுவிட்ட சித்தப்பா முறைதான். மிகவும் நெருக்கமானது என்பதற்காகவே இந்த உவமை. பொறுத்தருள்க.

நகைச்சுவை என்பது பிறர் நகைக்கத் துணைசெய்யலாமே தவிர யாரையும் நகைப்புக்கு உரியவராக ; உள்ளத்தைக் காயப்படுத்துவதாக அமைதல் கூடாது. “நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி” என்னும் தெய்வப்புலவர் வாக்குதானே நம் வாழ்வின் போக்கு. அப்படி, யாரையும் காயப்படுத்தாத நகைச்சுவை நடிகராக விளங்கியதால்தான் என்.எஸ்.கிருஷ்ணன் ‘கலைவாணர்’ ஆனார்.  குழந்தைகளிடம் பேசும்முறை அறிந்துபேசவேண்டும் என்பதனை, “நான் என்ன செய்யட்டும்” எனக் குழந்தைகேட்க, கோபத்தில் “என் தலையில் தீயை வை” என்பார் கலைவாணர். அவர் கவனிக்காதபோது குழந்தை தலைப்பாகையில் தீயைவைக்கும். அவருடைய பதற்றமே நகைச்சுவை காட்சியாகும். இத்துடன் காட்சி முடியவில்லை. “குழந்தைகளிடம் தவறான சொற்களைக் கூறினால் விளைவு இப்படித்தான் இருக்கும்” என்பதனைக் கலைவாணர் படம்பிடித்துக்காட்டிவிடுவார்.  இது படம் மட்டுமல்ல பாடமும்தானே.

“ஒரு நாள் முழுதும் சும்மா இருந்துகாட்டு. பிறகு, அது எவ்வளவு கஷ்டமுன்னு புரியும்” என ஒரு திரைப்படத்தில் சொல்வார் நகைச்சுவை நடிகர் வடிவேலு”. அப்போதுதான், மனிதர்களால் சும்மா இருத்தல் இயலாது. அப்படி முரணாக ஒருவர் இருந்தால் அது நகைப்புக்குரியதாகிவிடும் என்பதனையே அந்த நகைச்சுவைக்காட்சி உணர்த்தியிருக்கும்.

‘இதெல்லாம் அரசியல்ல சாதாரணம்பா” என்னும் நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் புகழ்பெற்ற வசனத்தை அனைவரும் அறிவர். இது நகைச்சுவைக்காக மட்டுமா? பொய்களைக் கூறி மக்களை ஏமாற்றுபவர்களே அரசியல்வாதிகள் என்னும் செய்தியினை உறுதிப்படுத்தும் காட்சியாகவே அக்காட்சி அமைகிறது. இதனை, அரசியலுக்கு மட்டும் உரியதாக எடுத்துக்கொள்ள இயலாது. ஏமாற்றும் இடங்களில் எல்லாம் “அங்கு அரசியல் நடைபெறுகிறது” எனக் கூறுவதனையும் காணமுடிகிறது. அவ்வாறெனில், அரசியலில் நேர்மையாக வாழ்வதற்குப் பழகிக்கொண்டால் நாடு நலம்பெறும்தானே. அரசியலுக்கு வர அஞ்சும் இளைஞர்களும் எளிதில் அரசியலுக்குள் நுழைவார்கள்தானே. இத்தனை உண்மைகளையும் புலப்படுத்தும் காட்சியாகவே அக்காட்சி அமைகிறது.

காவலர்கள் கையூட்டு பெறும் நகைச்சுவைக் காட்சிகள் எத்தனையோ திரைப்படங்களில் இடம்பிடித்துள்ளன. அவை அனைத்தும் நகைச்சுவைக்குரியதா? ‘எந்திரன்’ திரைப்படத்தில் சிட்டியாக வரும் ‘எந்திரன்’ மொழியைப் புரிந்துகொள்ளுமே தவிர குறியீட்டுமொழியினை அறியாது. போக்குவரத்துக்காவலர், சிட்டி வேகமாகக் காரை ஓட்டியதற்காக தண்டம் விதிப்பார். அதிலிருந்து தப்பிக்க கையூட்டு கேட்பார். ‘வெட்டு’ என்பது “கையூட்டுக் கொடு” என்னும் பொருளினைக்குறிக்கும். இதனை அறியாத ‘சிட்டி’ காவலரின் கையை வெட்டிவிடும். இதுதான் காட்சி. 

உலகிலேயே சிறந்த காவல்துறை வரிசையில் இரண்டாவது இடத்தையும், இந்தியாவிலேயே சிறந்த காவல்துறை வரிசையில் முதல் இடத்தையும் பெற்றுள்ள காவல்துறையை இப்படி திரைப்படங்கள் நகைச்சுவைக்காகக்காட்டுவது நாட்டிற்கு நன்மையா? இல்லைதானே.  “நாட்டில் நடப்பதைத்தானே காட்டுகிறார்கள்” எனத் தணிக்கைக் குழுவினர் ஒப்புதல் அளித்ததே இதற்குக்காரணம். அப்படியென்றால் யாரைக் குறைசொல்வது. எங்கும் குற்றம் நிகழாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்னும் விழிப்புணர்வை இக்காட்சி குறித்து சிந்திப்பவர்களுக்கு எழும்தானே?

ஆம், நகைச்சுவைக் காட்சியினைக் கண்டு நகைக்கும் நகை அழகுதான். ஏனென்றால் அந்த நகைதான் ஏழை, பணக்காரன் என்னும் வேறுபாடில்லாமல் அனைவரிடமும் இருக்கிறது.  ஆனால், அதே நேரத்தில் ஒவ்வொரு காட்சியையும் எண்ணிப்பார்த்தால், பின்புலமாக நிற்கும் பல குறைகளைக் களையமுடியும். இனி நகைச்சுவை நகைச்சுவைக்காக மட்டுமில்லை என்பதனை உணரலாம்தானே?

 

 

திங்கள், 24 மே, 2021

மனைவி – மகாலட்சுமியா? மகா …….

 


மனைவி -விளக்கேற்ற வந்த விளக்கு

     மனைவி இல்லாத வாழ்க்கை பூக்கள் இல்லாதசோலைதானே? எத்தகைய அறிஞனுடைய அறியாமையினையும் உணர்த்திவிடுகிறாள் அவன் மனைவி. ஒவ்வொரு வெற்றிக்கும், தோல்விக்கும் அவளே காரணமாகிறாள். தோல்விக்கு வலியாகவும் மருந்தாகவும் இருப்பவளும் அவள்தானே? அன்னையின் கண்களுக்கு குறைகள் தெரிவதில்லை ; மனைவியின் கண்களுக்கு குற்றங்கள் மட்டுமே தெரியும். ஆசிரியரின் கண்களுக்கு தவறுகள் தெரிவதைப்போல.

     அவள் இருந்தால் எல்லாம் இருக்கிறது. அவள் இல்லை என்றால் எதுவும் இல்லை. அவள் வேலைக்காரியாகப் பணி செய்தாலும் வீட்டிற்கு முதலாளியாகவே இருக்கிறாள். பெயருக்கு மட்டுமே தலைவன் முன்னிற்கிறான். இனி, குடும்பத்தலைவிக்குத்தான் குடும்பஅட்டை உதவித்தொகைக் கொடுக்கப்படும் என்று சிலஅரசுகள் அறிவித்ததை அறிவீர்தானே?

குழந்தைகளின் தேவையை மனைவியே எளிதில் அறிந்துகொள்கிறாள்.  கணவன் எளிதில் உணர்ச்சிவசப்படுகிறான். பதற்றத்தில் அண்டாவில் கை நுழையாது என்பதனை அவனுக்கு உணர்த்துபவள் அவளே.

     இல்லது என் இல்லவள் மாண்பானால் ; உள்ளது என்

     இல்லவள் மாணாக் கடை. ( திருக்குறள் :53)

     எதுவும் இல்லையென்றாலும் மனைவி மாண்புடன்  இருப்பாளானால் கணவனுக்கு இல்லாதது ஒன்றுமில்லை. எல்லாம் இருந்தாலும் மனைவி மாண்புடன் இல்லையனால் கணவனுக்கு உள்ளது என்று எதுவும் இல்லை  ஏனென்றால், எல்லாம் அவளே. அதனால்தான் மனைவியின்றி கணவனால் வாழமுடிவதில்லை.  விதிவிலக்குகள் இல்லையா? எனக் கேட்காதீர். நீங்கள் கேட்கும் வினாவிலேயே விடை இருக்கிறதுதானே?

     நடு இரவில் எரிந்துகொண்டிருந்த விளக்கு அணைகிறது. விளக்கு அணைந்ததும் மின்விசிறி நிற்கிறது. மின்தடை தான். சரியாக கணித்துவிட்டீர்கள். இனி உறங்கமுடியாதுஎனப் புலம்பிகொண்டே மெழுகுவர்த்தி ஏற்றுகிறான். அதை நிற்கவைக்கவே முடியவில்லை. “மெழுகுவர்த்தியின் கீழேயும் தீக்குச்சியைக் காட்டுங்கள்” என்றாள் மனைவி. அவனும் தீக்குச்சியைத் தீட்டி சூடுகாட்டி மெழுகுவர்த்தியை நிற்கவைத்தான். அவள் உடல்நிலை சரியில்லாததால், இரண்டு நிமிடவேளை இருபது நிமிடங்கள் ஆனது. வேர்வை ஆடையை நனைத்துக்கொண்டிருந்தது. பெருந்தொற்று காலத்தில் வெளியே போகலாமா? வேண்டாமா? என எண்ணியவன், வேறுவழியே இல்லை. என முகக்கவசம் அணிந்துகொண்டு வெளியே செல்லத்தயாரானான். அவன் கூறிக்கொண்டிருந்தபோதே அணைந்தவிளக்கு எரிந்தது. மெழுகுவர்த்தியை அணைக்க எண்ணி ஊதினான். அணையவில்லை. வேர்வை கொட்டியது. இதயத்துடிப்பு அதிகமானது. உடனே, மனைவியை அழைத்தான். “முச்சுக்காற்று (ஆக்ஸிஜன்) அளவு குறைந்துவிட்டது போலிருக்கிறது” என்று அலறினான். “அணைக்கமுடியவில்லையே” எனப் பதறினான். பதற்றப்படாத மனைவி, “முகக்கவசத்தை கழற்றிவிட்டு ஊதுங்கள்” என்றாள்.  முகக்கவசத்தை கழற்றிவிட்டு  அசடுவழிந்தான். என்ன அழகாக மனைவியின் துணையைச் சொல்லிவிடுகிறது இந்தக்கதை.  இப்படித்தான் ஒவ்வொரு செயல்பாட்டிலும் வேகத்தடையாகிப் பாதுகாக்கிறாள் மனைவி.

     இன்னொரு காட்சியைப் பார்க்கலாமா? கணவனிடம் கோபம்கொண்ட மனைவி “நான் அம்மாவீட்டிற்குப் போகிறேன்” என்கிறாள். “ஓவ்வொரு முறையும் சொல்கிறீர்களே தவிர  போறது இல்லை. ஆசை காட்டி மோசம் செய்கிறீர்கள்” என்கிறான் கணவன். இவ்வளவு மரியாதையாக மனைவியைக் கணவன் பேசுகிறானா? எனக் கேட்காதீர்கள். அவன் ஈழத்தமிழ்க்கணவன். பெண்களை மதிப்பதால் எத்தனை அழகாகிவிடுகிறது தமிழும் ; தலைவனுடைய பண்பும். கணவனின் சொல்கேட்ட மனைவி புன்னகைக்கிறாள். கோபம் தணிகிறது. இது ஒரு சிறிய காட்சிதான். ஆனால் எத்தனை வலிமையானது.

மனைவி தாய் வீட்டுக்குப் போகிறேன் என்று கூறினாலும் கணவனை விட்டுப் பிரிய அவளுக்கு மனம் வருவதில்லை. உணவுக்கு அவன் திண்டாடுவான் என்பதனை அறிவாள்தானே?. கணவனுக்கும் அது தெரியும் இருப்பினும் தாய்வீட்டுக்குச் சென்றாள் ஓய்வெடுப்பாள்.  ஓரிருநாள் துன்பப்பட்டாலும் பரவாயில்லை என நினைக்கிறான் கணவன். இத்தனை அன்பும் தேநீருக்குள் கலந்திருக்கும் தேயிலைபோல் கண்ணுக்குப்புலப்படாமல் வாழ்வினை இனிக்கவைத்துக்கொண்டிருக்கிறது. அப்படி குடும்பத்தை நடத்திச்செல்லும் மனைவி மகாலட்சுமிதானே?

மனைவிக்குப் பிறந்தநாள். குடும்பத்துடன் ஓட்டலுக்குச்செல்கிறார்கள். வேலைக்குச் சென்றுவிட்டு, சமையல்செய்து வேளாவேளைக்குக் கொடுப்பது கடினம்தானே?. விடுப்பும் இல்லை ; அடைப்பும் இல்லை. இன்று அடுப்படிக்கு ஒருவேளை விடுப்பு. கணவன், மனைவி, மகன், மகள்.  இதுதானே இன்றைய கூட்டுக்குடும்பம்?. கொஞ்சம் கொஞ்சமாக தமிழ்க்குடும்பத்தின் அளவு குறைந்துவருவதனை அறிவீர்தானே. முந்தைய காலத்தில் ஒரே வீட்டில் ஐந்து அண்ணன், தம்பிகள் சேர்ந்து வாழ்வார்கள். வீடு  சிறியதாக இருந்தாலும் மக்கள் பெருகி இருந்தனர். இன்று வீடு பெரிதாக இருக்கிறது. மக்கள் சுருங்கிவிட்டனர். எல்லாம் முரணாகிவிட்டதுதானே? வீட்டிற்கு வெளியே இருந்த கழிவறைகள் வீட்டிற்கு உள்ளே வந்துவிட்டது. வீட்டிற்கு உள்ளே இருந்த பெரியவர்கள் வெளியேறிவிட்டார்கள். விளைவு ஓட்டல்களில் உணவு.  திண்ணையில் உணவிட்ட மகிழ்ந்த  இனம். உணவுக்கு காசு கொடுக்கும் அளவிற்கு மாறிவிட்டது எத்தனை அவலம். சரி, இது நமது தலைப்பில்லை.  இல்லத்தலைவியைப் பற்றித்தானே பேசிக்கொண்டிருக்கிறோம்.  

ஓட்டலில் சாப்பிட்டு முடித்தபின் சாப்பிட்டதற்கான தொகையோடு சேவை செய்தவருக்கு இருபது ரூபாய் கொடுத்து “சாப்பாடு அருமை” எனக் கூறிவிட்டு வெளியே வந்தான். மகள் கேட்டாள் “இப்படி ஒரு நாளாவது அம்மாவைப் பாராட்டி இருக்கிறீர்களா?”. மனைவியைப் பார்த்துப் புன்னகைத்தான். புன்னகையில் அவனுடைய தவறுக்கான வருத்தமும் கலந்திருந்ததனைப் புரிந்துகொண்டாள் படித்த மனைவி.  அப்படி கணவனைப் புரிந்துகொண்டு குடும்பத்தை நடத்திச்செல்லும் மனைவி சரஸ்வதிதானே?

உங்கள் மனைவி மகாலட்சுமியா? மகா சரஸ்வதியா?

 

ஞாயிறு, 23 மே, 2021

இனிக்கும் ஈழத்தமிழ்

 


தமிழின் அழகினைப் பழக்கிடுவோம்

தமிழ் என்றாலே அமிழ்தம். மூன்று முறை ‘தமிழ்’ என்னும் சொல்லைத் தொடர்ந்து கூறினால் முத்தமிழ் அமிழ்தாவதனை உணரமுடியும். அமிழ்தம் என்னும் சொல்லை ‘அம் + தமிழ்’  என எழுத்துக்களை மாற்றிப் பிரித்தால் “அழகான தமிழ்” எனப் பொருள்தரும்.  ஐந்து எழுத்துக்களையும் உள்ளடக்கியிருப்பதும் ஓர் அழகுதானே. அத்தகைய பெருமையுடைய உலகின் முதன்மொழி தமிழ்.

தமிழை எப்படிப் பேசினாலும் இனிக்கும்தானே. தேன் எங்கு தொட்டாலும் இனிப்பது அதன் இயல்பு. ஆனால் கொம்புத்தேன், மலைத்தேன் என எத்தனையோ தேன் இருக்கிறதல்லவா? அப்படித்தான் தமிழும் பல நாடுகளில்  இந்தியத்தமிழ், இலங்கைத்தமிழ், சிங்கைத்தமிழ், மலேயத்தமிழ் என  ஒலித்துக்கொண்டிருப்பதனைக் காணலாம்.

ஈழத்தமிழ் அன்னத்தால் பிரித்தெடுக்கப்பட்ட தமிழ். பிறமொழி கலவாத தூய்மையான தமிழ்ச்சொற்கள் அவை.  இன்பத்தால் இனிக்கும் ; பொருளால் சிறக்கும் ; அறத்தால்  அணைக்கும். எப்படி? எனக் கேட்க விழைகிறீர்களா? ‘கம்பவாருதி’ எனப் புகழப்பெறும் இலங்கை ஜெயராஜ் அவர்களுடைய தமிழ் இலக்கியச் சொற்பொழிவினைக் கேட்டுப்பாருங்கள். நான் சொல்வது துளி ; நீங்கள் கேட்டது கடல் என  உணர்வீர்கள்.

“ஈழத்தமிழை ஏன் உயர்வாகச் சொல்லவேண்டியிருக்கிறது?” என நினைக்கிறீர்கள். அப்படித்தானே? எப்போது ஒருவரை உயர்வாகச்சொல்லவேண்டி இருக்கிறது எனில், யாரோ ஒருவர் தாழ்வாக நடந்துகொள்ளும்போதுதான் உயர்வானவர்களை எடுத்துக்காட்டவேண்டியிருக்கிறது. அவ்வாறே, தமிழ்மொழியின் தரத்தைக் குறைக்கும் வகையில் பிறமொழியில் கலந்துபேசும் வழக்கம் பெருகிவருகிறது. தமிழில் ஆங்கிலம் கலந்துபேசும் நிலைமாறிவிட்டது. அப்படியா? எனக் கேட்டு பெருமைகொள்ளாதீர்கள். இன்று, ஆங்கிலத்தில் தமிழ்கலந்துபேசும் அளவிற்கு ஆங்கிலம் குழந்தைகளிடம் அடைக்கலப்பட்டுவிட்டது. “நாநுனியில் என் குழந்தை ஆங்கிலம் பேசும்” என உங்கள் நண்பர்கள் சொல்லக்கேட்டதுண்டுதானே? தாய்மொழியான தமிழின் நிலை என்ன? எனக் கேட்டுவிடாதீர்கள்.  தவறாமல்  கிடைக்கும் தேநீருக்குத் தடைவரலாம்.

மதிப்புமிக்க தமிழ் ஈழத்தமிழ். ஏனென்றால், அவர்கள் “வாங்க!,வாரும்” என்றே அழைப்பார்கள். ஒருமையில் பேசிப்பார்த்ததே இல்லை. சிறுகுழந்தைகளாக இருந்தாலும் சரி, கணவன், மனைவியாக இருந்தாலும் சரி, இத்தனை மரியாதையுடன் அழைப்பதை வேறேங்கும் பார்க்க இயலாது. சிறுவயதிலிருந்தே பெண்களுக்கு மதிப்பும் மரியாதையும்  கொடுக்கும்போது “பெண்களைப் பாதுகாக்கவேண்டும்” எனக் கற்பிப்பதே தேவையற்றதாகிவிடுகிறதுதானே? பண்பாட்டினை மொழியே கற்பித்துவிடும்தானே? மேலும் சில சான்றுகளைப் பார்ப்போமா?

 இயல்பான பேச்சுவழக்கு

ஈழத்தமிழ் - பேச்சுவழக்கு

என்ன பேசிக்கொண்டிருக்கிறீர்கள்?

என்ன கதைக்கிறீர்கள்?

டீ

தேத்தண்ணி 

ஆம்

ஓம்

ஒன்னுமில்லை,காலி

வெறுமையாயிருக்கு

ரொம்ப

கனக்க

கலாட்டா

குழப்படி

தூக்கம்

நித்திரை

ஜுரம்

கா(ய்)ச்சல்

அழகு

வடிவு

ஓவியம் வரை

கீறு

படி

வாசி

ஷூ, செருப்பு

சப்பாத்து

ஆடை

உடுப்பு

பல்துலக்கு

பல்தீட்டு

உட்கார்

இரு

ஸ்கூல்

பள்ளிக்கூடம்

ஒழுங்காக

முறையாக

சொல்ல முடியாது

சொல்ல இயலாது

சமையல்

குசினி

புரிஞ்சுது

விளங்குது

சாய்ங்காலத்தில்

பின் நேரத்தில்

 

இப்படி ஒவ்வொரு சொல்லையும் அடுக்கிக்கொண்டே போகலாம். இச்சொற்களுள் மிகவும் வருந்தத்தக்க சொல் ஒன்று உண்டு. குழந்தைகள் ஸ்கூலுக்குப் போவதுதான். “ஸ்கூலுக்குப் போவதில் என்ன வருத்தம்?” எனக் கேட்காதீர்கள். பள்ளிக்கூடத்தை “ஸ்கூல்” என்றுதான் பல குழந்தைகள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இதனை எண்ணிப்பார்த்தால் தமிழ்க்குழந்தைகள் தாய்மொழி மறந்ததைப் புரிந்துகொள்ளமுடிகிறதல்லவா?

தமிழில் உயர்ந்த சொல்லான “ஓம்” என்னும் சொல்லை ஈழத்தமிழர்கள் அறிந்தோ அறியாமலோ ஒரு நாளில் பலமுறை சொல்லிக்கொண்டிருப்பது எத்தனை அழகு. தமிழில் ‘ஆம்’ என்பதைத்தான் அப்படிச்சொல்லிப் பழகியிருக்கிறார்கள். அதனால்தானோ என்னவோ தமிழ்க்கடவுளின் அருளோடு தமிழ் வளம் குறையாமல் அவர்களுக்கு வசப்பட்டிருக்கிறது.

“நான் உங்களைக் கீறட்டுமா?” என ஒரு குழந்தை உங்களிடம் கேட்டால் அச்சம்தானே வரும். ஆனால், ஈழத்தமிழ் என அறிந்தால் மகிழ்ச்சி உண்டாகும். “நான் உங்களை ஓவியமாக வரையட்டுமா?” எனஒரு குழந்தைகேட்டால் மகிழாதவர்கள் யார்?

பற்களைத் துலக்குவது விட தீட்டுவது நல்லது என்று பல் மருத்துவர்கள் கூறுகிறார்கள். சிலர் பற்களை பாத்திரம் துலக்குவதுபோல் துலக்கி பற்களுக்குத் தேவையான சத்தையும் துலக்கிவிடுவார்கள். இதனால் ஈறுகளும் கெட்டுவிடும். அப்படி இல்லாமல் ஈழத்தமிழில் தீட்டுவது அழகுதானே. பற்களுக்கு மட்டுமன்று ; மொழிக்கும்தான்.

ஈழத்தமிழ்க்குழந்தைகள் பேசும் தமிழ் அழகாக இருக்கிறது. ஆங்கிலப்பள்ளியில் பயிலும் தமிழ்க்குழந்தைகள் ஆங்கிலம் சரளமாகப் (தடையின்றிப்) பேசுவதைப்போல.  

 

சனி, 22 மே, 2021

புறநானூற்றில் "செய்தி "அறம்

 


செய்தி என்னும் நன்றி மொழிதல்  – NEWS – Thanking Words

செய்தியாளர்கள், மக்களைக் காப்பதற்கென்றே அறப்பணி செய்யவந்த அருமனிதர்கள் ; எத்தனையோ இடர்ப்பாடுகளைக் கடந்து செய்திகளைத் தொகுத்துத் தரும் அவர்களின் உழைப்பால்தான் நாடு நலமாகிறது ; கடவுளுக்குப் பயப்படாதவர்கள் கூட செய்தியாளர்களின் ஒளிப்பதிவுக்குப் பயப்படுகிறார்கள். பெற்றோர்களிடம் பிள்ளைகள் நன்றியுணர்வுடன் இருப்பதுதானே அறம். ஏனென்றால், பிள்ளைகளை மட்டுமே பெற்றோர்கள் முழுமையாக நம்புவர். அப்படித்தான், இந்தச் சமூகம் செய்திகளை நம்புகிறது. அப்படியென்றால அந்நன்றியைப் போற்றுவதுதானே செய்தி அறம்.

                நான் செய்தியாளராக என்ன செய்யவேண்டும்? எனக் கேட்கிறார் ஒருவர். நீங்கள் செய்திகளை ‘மை’நிரப்பி எழுத வேண்டும் என்றார் ஓர் அறிஞர். என்ன மை? எனக்கேட்டபோது நேர்மை, வாய்மை, உண்மை எனக் கூறினார் அறிஞர். இக்கூற்று செய்தி அறத்தைச் சுட்டிக்காட்டுகிறதுதானே? அப்படியென்றால் செய்தியாளர்களின் எழுத்து எத்தனைப் பெருமையுடையதாக இருக்கவேண்டும். மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் செய்தியாளர்களுக்கிடையில் அச்சுறுத்தும் செய்தியாளர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள். அவர்கள்தான் ஆபத்தானவர்கள்.

                செய்தி இல்லாமல் உலகம் இயங்குமா? இந்த உலகமே செய்திகளால்தானே நிரம்பியிருக்கிறது. அதன் மெய்ம்மையே உலகின் வளர்ச்சியை எடுத்துக்காட்டும். அதனால்தான், பெரியவர்கள் முதலில் கேட்கக் கூடிய கேள்வி “என்ன சேதி?”. ஒரு மனிதனைப் பற்றி செய்திதானே ஆளுமையின் அளவுகோலாகிறது. எனவே, எத்தனை திறமையும் புலமையும் இருந்தாலும் அதனைச் செய்தியாக்கத் தெரியாவிட்டால், பணி வாய்ப்புகளை இழக்கநேரிடுகிறது. அதுமட்டுமன்று, இல்லாததை இருப்பதாகச் சொல்லிவிட்டாலும் துன்பம்தானே.  உண்மை தெரியும்போது விரட்டிவிடுவார்கள்தானே? சொல்வதனை விளக்கமாகச் சொல்வதில் தவறில்லை. உண்மையை மறைத்து பொய்மையைப் பெருக்கிச்சொன்னால் அதனால் விளையும் துன்பத்தை அனுபவித்துத்தானே ஆகவேண்டும்.

                “இந்தப் பகுதி ஆபத்தானது” “இந்த வளைவு ஆபத்தானது” “மெதுவாகச் செல்லவும்” “இது ஒருவழிப்பாதை” “இங்கு பள்ளி உள்ளது” “ இது மருத்துவமனைப் பகுதி” “சத்தம்போடாதே” “பூக்களைப் பறிக்காதீர்கள்” “குப்பை போடாதீர்கள்” “வரிசையில் நிற்கவும்” “முதியோர்கள் மட்டும்” “வாகனத்தை நிறுத்தாதீர்” என எத்தனைப் பதாகைகள் செய்திகளைத் தாங்கிக்கொண்டிருக்கின்றன. ஓரிடத்தில் நிற்கும் பதாகைகளே எத்தனையோ உயிர்களைக் காக்கின்றன ;  நாட்டை நல்வழிப்படுத்துகின்றன. அப்படியெனில் செய்தியாளர்கள் தவறான செய்திகளை வெளியிட்டு அச்சத்தை விளைவிக்கலாமா? உயிரோடு இருக்கும் பெரியவர்களை இறந்துவிட்டதாகச் செய்தி அனுப்புவது ; காவல்துறைக்குத் தவறான செய்திகளை அனுப்புவது ; உண்மையான செய்திகளைத் திரித்துச்சொல்வது ; குற்றவாளிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு உண்மைச் செய்திகளை மறைத்துவிடுவது  என எத்தனை   செய்திகளைக் காணமுடிகிறது. இப்படிப் பொறுப்பற்ற செய்திகளை வெளியிடும் சில செய்தியாளர்களால்தான் உண்மையாக வாழும் செய்தியாளர்களுக்கு மதிப்பு இருப்பதில்லை.

                எத்தனையோ தலைவர்கள், செய்திகளை மக்களுக்குத் தெரிவிப்பதனையே முக்கியப்பணியாக எண்ணி நாட்டுப்பணிகளுக்கிடையே செய்தி நிறுவனங்களையும் நடத்தியும், எழுதியும் வந்தனர். அதனால்தானே நாடு விடுதலைபெற்றது. ஆங்கிலச் செய்தித்தாள்களும், இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தை ; மக்களின்  உண்மையான மன நிலையினை ; ஆங்கிலேயர்கள் செய்த கொடுமையினை அப்படியே விளம்பியது. அதுதான் செய்தி அறம். ‘செய்தி’ என்றால் ‘நன்றி’ என்றும் பொருள் உண்டு. மக்களால் வளரும் செய்தி நிறுவனங்கள் மக்களுக்குத் தெரிவிக்கும் நன்றிதான் செய்தி. அதனை எப்படி பொறுப்புணர்வுடன் அளிக்கவேண்டும் என்பதனைச் சங்க இலக்கியப்பாடல் எளிதாக உணர்த்திவிடுகிறது.

ஆன்முலை அறுத்த அறனி லோர்க்கும்,

மாண்இழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்,

குரவர்த் தப்பிய கொடுமை யோர்க்கும்,

வழுவாய் மருங்கின் கழுவாயும் உளஎன,

நிலம்புடை பெயர்வ தாயினும், ஒருவன்

செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்’ …’

 

என்கிறது ஆலத்தூர் கிழாரின் புறநானூற்றுப்பாடல்(34).                                                                                                                      

 

வெள்ளி, 21 மே, 2021

வாழ்க்கை அழகானது தான் – Life is really Beautiful

 


தீமைகளைக் கடப்போம் ; நன்மைகளை மதிப்போம் 

என்ன கிழித்துவிட்டாய் ? என யாரையும் கேட்காதீர்கள். எதையும் கிழிக்காமல் இருந்தாலே போதும். ஆம்! வீட்டில் நல்ல பிள்ளையாய் வீடடங்கி நின்றாலே போதும்தானே.

வாழ்க்கை புரியாத புதிர்? இக்கூற்றை ஒத்துக்கொள்ளாதவர்கள்கூட இன்று ஒத்துக்கொள்கின்றனர். எல்லோரும் கடவுளைத் தேடி அலைகிறார்கள். மருத்துவர் மட்டுமன்று ; செவிலியர்களும்  கடவுளாகத் தெரிகிறார்கள். மருத்துவமனையில் இடமில்லை எனத் தடுத்து நிறுத்தாத பாதுகாவலரும் கடவுளாகிறார். ‘தம்பி! வீட்டை விட்டு வெளியே வராதே” எனக் கெஞ்சும் காவலரும் தெய்வமாகத் தெரிகிறார். வணிகர்களும்  தெய்வமாகத்தெரிகின்றனர். பால்காரர் காலையில் வரவிட்டால் தெய்வ அருள் கிடைக்கவில்லையே! என மனம் ஏங்குகிறது. அவர் உடல்நலம் நன்றாக இருக்கவேண்டும் என மனம் வேண்டுகிறது. காய்கறி வீட்டிற்கே கொண்டுவந்துகொடுக்கும் மகராசியிடம் விலைபேசுவது ‘பாவத்தின் உச்சம்’ என்னும் எண்ணம் வந்துவிட்டது. இவர்கள் கண்முன்னே காட்சி கொடுப்பதால் தெய்வமாயினார். உறவுகள், நட்புகள், உடன்பணி செய்வோர், சுற்றி இருப்பவர்கள் யாரும் வந்து பார்ப்பதில்லை. அவர்கள் மீது துளியும் கோபம் இல்லை. மாறாக, அவர்களும் தெய்வம்போல் தெரிகிறார்கள். நம் உடல் நலத்தில் அவர்களுக்கு அக்கறை இருப்பதால்தான் பார்க்கவரவில்லை என்னும் எண்ணம் எல்லோரிடமும் பரவலாகிவருகிறது. எல்லோரும் அன்புடையவர்களாகத் தெரிகிறார்கள்.

இப்படி தொடக்கத்திலேயே இருந்திருந்தால் என்ன அழகாக இருந்திருக்கும்.எல்லோரும் மகிழ்ச்சியாக வாழ்ந்திருக்கலாம்தானே. கையிலோ, காலிலோ அடிபடும்போதுதான் அதன் அருமை தெரிகிறது. தலையில் வெட்டுக்களுக் காயங்களுடன் ஒருவர் வருகிறார்.  எப்படி? என்று மற்றொருவர் கேட்கிறார். முடி திருத்துநரின் பணியை மனைவி செய்ததால்வந்தவினை என்றார்.

இன்னொரு பக்கம்தான் கொடுமையானது. ஒருவருக்கு உடல்நலம் குறைந்தால், என்ன? எனக் கேட்பதற்கு ஆளில்லை. பெற்றோர்களைப் பார்ப்பதற்கு,  பிள்ளைகளே அஞ்சும்போது பேரக்குழந்தைகள் என்ன செய்வார்கள்?. எத்தனையோ மருத்துவமனைகளில் மருத்துவர்களே தொலைபேசியில் தொடர்புகொண்டு, “உங்கள் தாத்தா ; உங்கள் பாட்டி….”  எனக் கூறினாலே இணைப்பைத் துண்டித்துவிடுகிறார்கள். “நலமானார்கள்” எனச்சொல்லும் முன்னே துண்டித்துவிடும் பேரக்குழந்தைகளின் செயலைக் கண்டு ‘இதுதான் கலியுகம்” என்பதனை அனைவரும் உணர்கிறார்கள். முதியவர்கள் சிக்கலான சூழலை புரிந்துகொள்ளமுடியாமலும் வீட்டில் இருக்கவும் முடியாமலும், மருத்துவமனைக்குச் செல்வதும் திரும்புவதுமாக இருக்கிறார்கள். பாதுகாப்புணர்வைத் தரவேண்டிய  ஊடகங்களில் சில அச்சத்தைமட்டுமே தந்துகொண்டிருக்கிறார்கள். இவர்களால் மன உளைச்சல்பெற்று இறப்பவர்கள் தொகைதான் அதிகரித்துவருகிறது.  மரங்கள், விலங்குகளுக்கு ஒரு பாதிப்பும் இல்லை. ஊடகங்களை அவை பார்ப்பதில்லைதானே.

“பள்ளிக்குப் போ, விளையாடப்போ” என வெளியில் துரத்தியவர்கள் “வீடடங்கி இரு” என அடைத்துவைக்கிறார்கள். அரிசி மூட்டை சுருங்கச்சுருங்க பிள்ளைகளின்  எடை பெருகுகிறது. விழித்துக்கொள்ளும் குழந்தைகள் அளவறிந்து உண்கிறார்கள். எதுகேட்டாலும் ஆக்கித்தரும் தாய்மார்கள், குழந்தைகளைப் பருக்கவைத்துவிடுகிறார்கள். இந்நேரத்தில் குழந்தைகளுக்கு எல்லா வேலைகளையும் சொல்லிக்கொடுக்கவேண்டும். இந்த  கொடுமையான சூழலை இனிதாக  மாற்ற அவர்களுடைய திறனை அறிந்து கற்பிக்க வழிவகைசெய்யவேண்டும். இசையோ, கலையோ,  எல்லாவற்றையும் சொல்லித்தர இணையவழியில் குருமார்கள் காத்திருக்கிறார்கள். தெய்வங்களாகிய குருமார்கள் இணையவழியில் உங்கள் வீட்டிற்கேவந்து சொல்லித்தருவர். வீட்டிலிருந்தே கற்க வழிவகைசெய்தால் பிள்ளைகளை மூளைச்சலவையிலிருந்து காப்பாற்றிவிடலாம்.

ஏழைக்குழந்தைகளிடம் திறன்பேசி (ஸ்மார்ட்ஃபோன்) இல்லையே என வருந்தாதீர். அது இல்லாமல் இருப்பதே அவர்கள் கண்களையும் உள்ளத்தையும் பாதுகாக்கும்.

காலை இரண்டு மணிக்கு எழுந்து பல இடர்ப்பாடுகளைக் கடந்து இருபது வருடங்களாக உழைத்து உழைத்து தேய்ந்துபோன எண்ணற்ற மனிதர்கள் வாழ்கிறார்கள். கடைவீதியில் அவர்கள், ஐம்பது, நூறு ரூபாயைக் கையில் வைத்துக்கொண்டு ஒரு வாரத்திற்கு என்ன வாங்கலாம்? என ஒவ்வொரு பொருளுடைய விலையைக்கேட்டுக்கேட்டு, எதை வாங்கலாம்? எனத் தயங்கித்தயங்கி நிற்கின்றனர். ஒருவர் விலையே கேட்காமல் “இது ஒரு கிலோ, அது ஒரு கிலோ” எனத் தேவையானதை வாங்கிவிட்டு 2000 தாளை நீட்டுகிறார். சலவை நோட்டு. “இவர்களுக்கு எப்படி பணம் கிடைக்கிறது?” என ஏழைகள் நினைப்பது இயல்புதானே?

காலைமுதல் மாலை வரை, எரிவாயு உருளை (சிலிண்டர்) எடுத்து மாடிப்படிகளில் சிரமப்பட்டு ஏறிச்செல்லும் ஊழியரைப் பார்த்தால் உழைப்பின் அருமை புரியும். ஆளையே சாய்த்துவிடுவது போல் பெரிய உப்புமூட்டையை வைத்துக்கொண்டு தள்ளமுடியாமல் ‘உப்பு , உப்பு” என குரல்கொடுத்துக்கொண்டே விற்றுக்கொண்டுபோகும் முதியவரைப் பார்த்தால் அவருடைய பிள்ளைகளை வசைபாடத்தோன்றும்.  நேர்மையாக உழைக்கும் இவர்கள் ஒரு புறம். தவறான வழியில் செல்வம் சேர்த்து பணத்தை இரைப்போர் ஒரு புறம். இதுதான் வாழ்க்கை

அரசு என்பது என்ன? மக்கள்தானே? எனவே ஒவ்வொருவரும் பொறுப்பேற்கவேண்டும். நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு விழிப்புணர்வூட்டுவோம். நம்மால் இயன்றவரை சுற்றி இருப்போர்க்கு நன்மை செய்வோம். பணத்தால் உதவலாம் ; பொருளால் உதவலாம் ; தொலைவில் முகக்கவசத்துடன் விலகிநின்று நம்பிக்கையூட்டும் சொற்களால் உதவலாம். எப்படி முகக்கவசம் அணியவேண்டும் எனச்சொல்லித்தருவதும் மருத்துவமே.

மகள் திருமணத்துக்குச் சேர்த்துவைத்த பணத்தை, சாலையோர மக்களின் உணவுக்காகச் செலவிடுகிறார் ஒருவர் ; உறவை இழந்து என்ன செய்வது எனப்புரியாமல் துணையற்று ஏங்குவோருக்காக, “என்னைத் தொடர்புகொள்க” என தனது எண்ணைக் கொடுத்து உதவி செய்யக்காத்திருக்கிறார் ஒருவர். தனது மகன் நோயில் சிக்கிக்கொள்ளக்கூடாதென பணிக்குச் செல்லும் மகனைப் பெற்றோர் தடுத்தாலும், அதனை மறுத்து நாளும் அவசரசிகிச்சை ஊர்தி ஓட்டுகிறார் ஒருவர் ; வாசலிலேயே உணவுண்டுவிட்டு விடைபெறுகிறார் ஆய்வாளர் ஒருவர் ; பகல், இரவு தெரியாமல், தாகத்தில் தண்ணீர் கூட குடிக்கமுடியாமல் மருத்துவம் பார்க்கும் மருத்துவர்கள் ; கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் காலில் விழுந்து வணங்கும் தலைவர்கள் ; குழந்தைகள் ஓய்விலேயே இருந்தால் அறிவு வளர்ச்சி தடைபடும் என்பதனை உணர்ந்து நிகழ்நிலை (ஆன்லைன்) வகுப்பெடுக்கும் ஆசிரியர்கள் ; மின்சாரம் , தண்ணீர், தூய்மை என ஒவ்வொருவரும் தம் இல்லத்தை விட பிறர் நலம் நாடுகின்றனர். பணியினை, பணியாக எண்ணாது சேவையாகச் செய்யும் தெய்வத்துக்கு இணையான அத்தகைய மனிதர்களின் அன்பு எத்தனை உயிர்ப்புடையது. இவர்களை அகக்கண்கொண்டு பாருங்கள் ! வாழ்க்கை அழகானதுதானே.