கற்பிக்க மறந்தபாடம்
கேரளா, மல்லபுரத்துப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவர் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறார். அவரைக் கடந்து சென்ற பெண்மணி, இவரைத் தனது கணித ஆசிரியர் என அடையாளம் காண்கிறார். உணவு அளித்து, உடை கொடுத்து தோழிகளுடன் பேசி தன்னால் இயன்ற உதவிகளைச் செய்துவிட்டு, செய்தியை முக நூலில் பதிவிடுகிறார்.
மனிதநேயத்தின் பதிவினை இவ்வாறு ஒவ்வொருவரும் இளைய தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கவேண்டிய கடப்பாடு இருக்கிறது. நல்ல செயல்களை அடையாளம் காட்டி நல்வழிப்படுத்த வேண்டிய ஊடகங்களில் சில ; விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய ஊடகங்களில் சில ; அச்சத்தை மட்டுமே ஏற்படுத்தும்வகையில் செய்திகளை வெளியிடுவது மிகவும் கொடுமை. ஊடக அறங்கள் படித்தார்களா? இல்லையா? எனத் தெரியவில்லை. எது மனிதப் பண்பை வளர்க்கும் என்பதைப் பார்க்காமல் தங்கள் வளர்ச்சியை மட்டுமே பார்க்கும் ஊடகக்காரர்களை ஒரு கேலிச்சித்திரம் அழகாக எடுத்துக்காட்டுகிறது. நாய்க்கு முகமாக மை ஊற்றி எழுதும் பேனா முனை வரையப்பட்டிருந்தது.
இதை விட கேலியாக ஊடகங்களைச் சித்திரிக்கமுடியாது. கொள்ளையடிப்பவர்கள், கருப்புப்பணம் வைத்திருப்பவர்கள், கொலை செய்பவர்கள் குறித்த செய்திகள் வந்தால் அச்செய்தியின் முக்கியத்துவத்தைப் பார்ப்பதில்லை. சாதி, மதம், பணம் எல்லாம் பார்த்துவிட்டு ; பேசிவிட்டு செய்திகள் , படிந்தால் குப்பைக்கோ ; படியாவிடில் அச்சிற்கோ போகிறது
என்ன தலைப்பைவிட்டு திசை மாறி விட்டீர்களே? என நீங்கள் கேட்பது புரிகிறது. உங்களைப் போல் சிந்திக்கத்தெரிந்தவர்களாக எல்லோரையும் மாற்றவேண்டிய கடமை ஊடகங்களுக்கு உள்ளது. ஆசிரியர்கள் நடமாடும் தெய்வங்கள். அவர்கள் செல்லுமிடமெல்லாம் அறிவு விதைகள் தூவப்பட்டுக்கொண்டே இருக்கும். அவர்களால் அறிவுரைகள் சொல்லாமல் இருக்கமுடியாது. தவறுகள் எளிதில் அவர்களுக்குப் புலப்படும். எப்போது பார்த்தாலும் குறை சொல்கிறாரே? என அவர்களைக் குறை சொல்வது அறியாமை. அதற்காகத்தானே அவர்கள் படைக்கப்பட்டிருக்கிறார்கள். சமுதாயத்தைத் திருத்தவந்தவர்கள் குற்றங்களைச் சகித்துக்கொண்டிருக்கமுடியுமா? ஊடகங்கள் ஆசிரியர்களை கிண்டல் செய்வது எத்தனைக் கொடுமையானது. எத்தனைத் திரைப்படங்களில் 'வாத்தியார்'- ஐ 'வாத்தி' என இழிவுபடுத்தினர். மதிப்பினைக் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்க்கே மதிப்பில்லாத சமுதாயத்தில் பிள்ளைகள் யாரை மதிப்பார்கள்.? தாய், தந்தை பாசம் இருக்குமா? 'அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்' எனக் கற்றுக்கொடுத்ததை மறந்துபோயிருப்பார்கள்தானே? அதன்பின் அவர்கள் ஏன் மற்றவர்களை மதிக்கப்போகிறார்கள். எல்லோரிடம் விருப்புணர்ச்சிக்கு மாறாக வெறுப்புணர்ச்சிதானே பரவும். எங்கு அன்பு மலரும்? வன்முறைதான் தலைவிரித்தாடும்.
மருத்துவர்கள், மனிதர்களைப் பிணமாகாமலும், ஆசிரியர்கள் மனிதர்களை நடைபிணமாகாமலும் பார்த்துக்கொள்கிறார்கள் என்பது எத்தனை அழகான வரிகள். இதில் இறைத்தன்மையும் அன்பும் இழையோடி இருக்கிறதல்லாவா? ஆம்! அதனால்தான் இதை ஆட்சியர் இறையன்பு முத்திரையாகப் பதிவு செய்திருக்கிறார்.
இப்போது, என்ன சொல்லவருகிறேன் என்று தங்களுக்குப் புரிந்திருக்கும். ஆசிரியர்களால் காவலர்களைப் போல வீட்டிற்கு வந்ததும் சீருடையை கழற்றி வீசத் தெரிவதில்லை. அவர்கள் காலம் முழுதும் ஆசிரியர்களாகவே இருக்கிறார்கள். மகனோ, மகளோ, மருமகனோ, மருமகளோ, பேரனோ, பேத்தியோ எல்லோரையும் திருத்த முனைவார்கள். விளைவு முதியோர் இல்லங்களில் 'இடம் காலி இல்லை' என்னும் பதாகை மானுடத்தின் வஞ்சத்தைப் பறைசாற்றும். எல்லை மறந்த ஆசிரியர்களுக்கு இல்லத்திலும் இடம் இல்லை எனப் பிள்ளைகள் கற்பிக்கும் காலம் ; கலிகாலம்.
"தான் பெறாமலே தன் குழந்தைகள் எனச்சொல்லிக்கொள்ளும் பெருமை ஆசிரியர்களுக்கே உண்டு "என எங்கோ நான் படித்த அருமையான வரிகள் நினைவுக்கு வருகிறது. அவர்களுக்கு இந்தச்சமுதாயம் கொடுக்கும் பரிசு என்ன? எத்தனையோ ஆசிரியர்கள் உயிரைக் கொடுத்துப் பாடம் நடத்துவார்கள். அவர்களுக்குக் கொடுக்கப்படும் ஒரு மாதச் சம்பளம் அவர்களுடைய ஒரு நாள் கற்பித்தலுக்கு ஈடாகாது. கட்டிடத்தொழிலாளி சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கு சம்பளம் மட்டுமே பெறும் எத்தனையோ ஆசிரியர்கள் நானும் அறிவேன். நீங்களும் அறிவீர்தானே? இக்கொடுமையிலிருந்து தப்பிக்க கடவுளின் கடைக்கண் பார்வை விழுந்து அரசுப்பள்ளியிலோ, கல்லூரியிலோ வேலை கிடைத்தால், மூன்றுமாத சம்பளம் கட்டினால்தான் சான்றிதழ்களைத் திருப்பித்தருவார்கள்.
ஆசிரியர்கள் அணியும் ஆடையின் ஒழுங்கே மிகச்சிறந்த பாடத்தை மாணாக்கர்களுக்குக் கற்றுக்கொடுக்கும். ஆசிரியரின் ஒவ்வொரு செயலும் அவர்கள் அறியாமலே கற்பிக்கும் பாடம். அப்படிப்பட்ட புனிதமான பணி ஆசிரியப்பணி. "ஆசிரியப் பணி அறப்பணி ;அதற்கே உன்னை அர்ப்பணி" என்னும் பொன்மொழி ஆசிரியர்களை எட்டிவிட்டது ; எட்ட வேண்டியவர்களுக்கு எட்டவேண்டும்தானே? நல்ல திறமையான ஆசிரியர் பல ஆண்டுகள் பணிசெய்துவிட்டால் சம்பளம் அதிகமாகக் கொடுக்கவேண்டுமே என நீக்கிவிட்டு, புதிய ஆசிரியர்களை நியமிப்பது எத்தனை இழிவு. .
தனியார் பள்ளிகளில்; கல்லூரிகளில் எப்போது வேலையை விட்டு அனுப்புவார்கள் என்பதே தெரியாது?. பதற்றமானச் சூழ்நிலையில் ஆசிரியர்களைப் பாதுகாக்க வேண்டிய கல்வி நிறுவனங்கள் விரட்டி விடுகின்றன. முகக்கவசங்களை விற்று தன் வாழ்க்கையை ஓட்டும் ஆசிரியர் குறித்த ஒரு குறும்படம் ஒன்றே அத்தனை ஆசிரியர்களின் துன்பத்தைப் படம்பிடித்துக்காட்டிவிடுகிறதே? எந்த நாட்டில் ஆசிரியர்களுக்கு அதிக ஊதியம் வழங்கப்படுகிறதோ அந்த நாட்டில்தான் சாதனையாளர்கள் உருவாகமுடியும் என எத்தனை உளவியலாளர்கள் ஆய்ந்தாய்ந்து சொல்லி இருக்கிறார்கள். எப்படி உரக்கச்சொன்னாலும் பலருக்கு மரக்காதுகளாகவே இருப்பது வேடிக்கைதானே?
பேராசிரியர் புதுவைக் கிருஷ்ணா - தமிழ் இலக்கியங்கள் - தடங்கலைத் தவிர்க்கும் தடங்கள்
புதன், 12 மே, 2021
ஆசிரியர் ஏன் பிச்சைக்காரரானார்?- why did teacher became beggar.
செவ்வாய், 11 மே, 2021
ஓய்வூதியம் ஓர் வாழ்வூதியம் - Pension Plucks Tension
ஓய்வூதியம் ஓர் வாழ்வூதியம் - Pension Plucks Tension
பென்ஷன் – ஓய்வூதியம்,
அரசு ஊழியர்களுக்குக் கிடைத்த வரமாக முன்னொரு காலத்தில் இருந்தது ; இன்று இல்லை.
அப்படி என்றால் அரசு ஊழியர் அல்லாதவர்களுக்கு பென்ஷன் இல்லையா? . முதியோர் பென்ஷன்,
விதவைப்பென்ஷன் (கைம்பெண்ணுக்கான ஓய்வூதியம்),
இன்ஷூரன்ஸ் பென்ஷன் (காப்பீட்டு ஓய்வூதியம்)
எனப் பல உள்ளன. ‘பென்ஷன்’ எனச் சொல்லக்காரணம்
‘ஓய்வூதியம்’ என்னும் அழகிய தமிழ்ச்சொல் பேச்சு வழக்கில் இல்லாமல் போனதால்தான்.
'பத்து சன்(மகன்) செய்யாத உதவியை பென்ஷன் செய்துவிடும்' என்பது
பொன்மொழி. இன்று ஆங்கிலமும் சிறிது தமிழும் கலந்து பேசும் அளவிற்கு தமிழர் நிலை மாறிவருவது
உண்மைதானே?. இல்லை என்றால் மிகவும் மகிழ்ச்சி. நீங்கள் தமிழார்வம் உடையவர்களிடம் மட்டுமே
பழகுகிறீர்கள். விளம்பரங்களைப் பார்ப்பதில்லை என்பதை என்னால் கணிக்கமுடிகிறது.
முதியோர்கள் சில இல்லங்களில் இந்த ஓய்வூதியத்திற்காக மட்டுமே உயிரோடு பாதுகாத்து வைத்திருப்பதையும்
பார்த்திருக்கிறேன். சரியாக மாதத்தின் முதல் நாள் தாயையோ, தந்தையையோ வங்கிக்கோ, அஞ்சல்
நிலையத்துக்கோ பொறுப்பாக அழைத்துச்சென்று ஓய்வூதியத்தை வாங்கிக்கொண்டுச் (பறித்துக்கொண்டு)
சென்று விடும் அன்பான மகனையும் மகளையும் பார்த்திருக்கிறேன். உயிரோடிருக்கத் தேவையான
உணவு மட்டும் திண்ணைக்கு (பொறுத்தருள்க! இப்போதுதான் திண்ணை இல்லையே.) ஒதுக்கப்பட்ட
இடத்துக்கு வரும். கடவுள் கொடுத்த உயிரை அவர் எடுத்துக்கொள்ளும்வரை
அவமானங்களைப் பொறுத்துக்கொண்டு வாழவேண்டும்தானே. "வாழும் வரை வீட்டுக்கு வெளியே இருந்த
பெரியவர் ; வீட்டிற்குள் சென்றார் ; படமாக” என்ற ஒரு கவிதை இப்போது நினைவுக்கு வருகிறது.
அதெல்லாம் சரி, ஓய்வூதியம் எப்படி வாழ்வூதியம், தலைப்புக்கும்
கட்டுரைக்கும் ……. என நீங்கள் நினைப்பது புரிகிறது.
வாழ்நாளெல்லாம் தான் பெற்ற ஊதியத்தை ஏழைகளுக்குக் கொடுத்த
‘பாலம் கல்யாணசுந்தரம்’ ஐயாவின் வழியில் எண்ணற்றோர் விளம்பரமின்றி தங்கள் ஓய்வூதியத்தை
ஏழைக்குழந்தையின் படிப்புக்கு ; மருத்துவ உதவிக்கு ; கோவிலுக்கு ; குளத்திற்கு ; அன்னதானத்திற்கு எனத் தொடர்ந்து வழங்கி வருகிறார்கள்.
ஓய்வூதியம் மட்டும் இல்லாவிட்டால் யாரிடம் கையேந்தி நிற்கமுடியும். எல்லாம் இருந்தாலுமே உறவுகளும் நட்பும் பார்க்கும் பார்வை பணத்தைப் பொறுத்து மாறுபடுவது உண்மைதானே?
எனக்குத்தெரிந்த ஒரு பெரியவர் தன் ஓய்வூதியத்தை எல்லாம் ஒரு
‘கோ சாலை’ அமைத்து பசுக்களைப் பாதுகாக்கிறார். பால் கறப்பதற்காக என நினைத்துவிடாதீர்கள்.
அவை அத்தனையும் வயதானவை. உழைத்து உழைத்து ஓடானவர்களுக்குத்தானே உழைத்து உழைத்து ஓடான
பசுவின் அருமை தெரியும். தாம் உழைக்கும் காலத்தில் எல்லாம் உறவுக்கும் நட்புக்கும்
செலவு செய்ததை விட இப்படி செலவு செய்வதே ‘வாழ்வூதியம்’ என எண்ணினார். ‘போற இடத்துக்கு
புண்ணியம் தேவைதானே’ என்பது அவர் கொள்கை. உழைத்து
உழைத்து வயதான பின் பசுக்களை, கேரளாவிற்கு அடிமாட்டுக்கு – இறைச்சிக்காக விற்றுவிடும்
பசு வளர்ப்போரிடம் பணம் கொடுத்து வாங்கிவிடுவார். அவை இறக்கும் வரை உணவிட்டு, இறந்தபின்
தம் நிலத்திலேயே புதைத்துவிடுவார். கடைசி காலத்திலாவது சந்தோஷமாக சாகட்டுமே என்னும்
அந்த உயர்ந்த குணம்தான் அவருடைய‘வாழ்வூதியம்’ ஆனது. இவருக்குச் சொர்க்கத்தில் ஒரு இடம் நிச்சயம்
இருக்கும்தானே?,
வேறோரு ஊருக்கு ஒரு நாள் சென்று தங்குவதனாலும் முன்பே அதற்கான முன்பதிவு செய்து விடுகிறோம் அல்லவா? அப்பயணம் மாறினாலும் மாறும். ஆனால், என்றோ ஒரு நாள் உறுதியாக செல்லக்கூடிய இடத்திற்கு புண்ணியம் என்னும் பதிவினைச் செய்து விட்டால் பதற்றம் விலகி ஓடிவிடும்தானே?
திங்கள், 10 மே, 2021
பனிரெண்டா? பன்னிரெண்டா? பன்னிரண்டா? | 'Tamil' the meaningful combination
பனிரெண்டா? பன்னிரெண்டா? பன்னிரண்டா?
தமிழ்ச் சொற்கள் பிரித்தாலும் சேர்த்தாலும் பொருள் தருபவை. காரண, காரியத்துடன் புணரும் (சேரும்) அருமையான மொழி. தமிழ்மொழி.
செவ்வாய் + கிழமை - செவ்வாய்க்கிழமை, செவ்வாய் - செம்மை+வாய்,
அமெரிக்க நாடு 'செவ்வாய்' என்னும் 'மார்ஸ்' கிரகத்துக்குச் சென்று அக்கிரகத்தின் நிறத்தை 1997 ஆம் ஆண்டுகளில்தான் 'செம்மை' எனக் கண்டுபிடித்தது.
இதனை, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் 'செவ்வாய்' என நிறத்தைக் குறித்து கோளுக்குப் பெயரிட்டனர். தமிழர்கள் வானை அளந்த பெருமையும், கோளை அளந்த பெருமையும் என்னென்பது?
பிரித்தாலும் சேர்த்தாலும் பொருள் மாறாமல் சொற்கள் அமையவேண்டுமெனில் எத்தனை மொழி வளம் இருக்கவேண்டும். 'தண்ணீர் (தண்மை +நீர் - குளிர்ந்த நீர்) கொடுங்கள்' என ஒரு சொல்லிலேயே இருபொருளை உள்ளடக்கிக் கேட்கும் அழகும் அழகுதானே?
உலகில் உள்ள அனைத்து மனிதர்களிடம் அழகானவர் யார்? என்று கேட்டுப்பாருங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விடை கூறுவர். எந்த விடை கூறினாலும் விருப்பும் மறுப்பும் இருக்கு. ஆனால்' அம்மா' என்ற விடைக்கு மறுப்பே இருக்காதுதானே.
அம் +மா- அழகு + பெரியது. - 'அம்' என்பது அழகினையும் 'மா' என்பது பெரியது என்னும் பொருளையும் குறிக்கும். அழகில் சிறந்தவள் 'அம்மா' எனத் தமிழ் குறிப்பிடுவது எத்தனை அழகு. அதற்குப் பின் தோன்றிய மொழிகள் அனைத்திலும் இச்சாயல் இல்லாமல் இருக்கிறதா? ஆய்வு செய்து பாருங்கள். தமிழின் அருமை புரியும். உமக்கு உயிர் கொடுக்க உம்முடைய தாய் தன் உயிரைப் பணயம் வைத்தவராயிற்றே. ஒரு குழந்தை பிற்ககும் போது ஒரு தாயும் பிறக்கிறாள் என்பது எத்தனை உண்மை.
பன்னிரண்டைப் பற்றி கூறுவதாகத்தானே தலைப்பு என்கிறீர்களா?
'ரெண்டு' என்பது தமிழில் மொழி முதலாகாது. எனவே 'பன்னிரெண்டோ', 'பனிரெண்டோ'? வராது.
எனவே 'பன்னிரண்டு' என்பதே சரி. எப்படி என்கிறீர்களா?
பத்து + இரண்டு - பத்தில் உள்ள 'து' கெடும் - பத்+ இரண்டு என்றாகும்.
அடுத்து 'த்' 'ன்' ஆக மாறும் - பன்+ இரண்டு என்றாகும்.
தனிக்குற்றெழுத்து முன் ஒற்று வந்தால் இரட்டும் எனற விதிப்படி
பன்ன் + இரண்டும் - பன்னிரண்டு எனப் புணரும். சொல்வதற்கு என்ன அழகாக இருக்கிறது. வேறு எப்படி மாற்றினாலும் இந்த அழகு வரவே வராது.
மனிதனுடைய ஏதாவது ஒரு உறுப்பை மாற்றி வைக்கும் ஆற்றல் உங்களுக்குக்கொடுத்தால் எந்த உறுப்பை மாற்றுவீர்கள். பெரும்பாலானோர் சொல்வது 'ஒரு கண்ணை தலைக்குப் பின்னால் வைத்துவிடுவேன். இரண்டு பக்கமும் பார்க்கலாம் என்பார்கள். இரண்டு கண்களும் ஒரே பொருளைப் பார்க்கும் ஆற்றலிருந்தே பல விபத்துகள். வேறு வேறு பக்கம் பார்த்தால் என்ன ஆகும்? கற்பனை செய்து பார்க்காதீர்கள். கொடுமையாகத்தான் இருக்கும்
அப்படித்தான் தமிழை ஆய்ந்து ஆய்ந்து சொற்களை ஆக்கி இருக்கிறார்கள்.
சுவைத்து மகிழ்வோமே.
ஞாயிறு, 9 மே, 2021
தமிழே முதல்மொழி – தமிழா ! நீ விழி – Tamil Language is the world’s first Language.
தமிழே ! அமுதே ! அழகிய மொழியே ! எனதுயிரே
தமிழ்மொழி உலகின் முதல்மொழி என்பதற்கான சான்றுகள் காலந்தோறும் கிடைத்துவருகின்றன.
மன்னர் காலத்துச் செப்பேடுகள், கோட்டை, கோவில் கல்வெட்டுகள் முதலாக இன்று கிடைக்கும்
காலடி அகழ்வாய்வுகள் வரை சான்றுகள் கொட்டிக்கிடக்கின்றன. உங்கள் மொழி பழமையானதா? இல்லவே
இல்லை என ஒன்றும் தெரியாதவர்களெல்லாம் எளிதில் தமிழரின் பெருமையை மறைத்துவிடுகின்றனர்
; மறுத்து வருகின்றனர்.
தமிழ் மூத்தமொழி என ஒத்துக்கொள்வதில் உலகத்தவர்க்குத் தயக்கம் உண்டு.
அத்தயக்கத்தை நீக்குதல் ; உரிய சான்று அளித்தல் , தமிழர் கடன். நம் தாயின் பெருமையினைச்
சொல்வதற்கே நாமே தயங்குவது எத்தனை இழுக்கு. சொல்லத்தெரியவில்லையெனில் எத்தனை அறியாமை?
இளைய தலைமுறையினரிடம் கேட்டுப்பாருங்கள். விழிப்பார்கள். அவர்கள் சொல்வதற்கு என்ன கற்றுக்கொடுத்திருக்கிறோம்?
யாரிடம் பிழை? இக்குறையை நீக்கவேண்டுமெனில் ஒவ்வொரு கோவில் கல்வெட்டுக்களையும் ஆய்வு
செய்யவேண்டும். ஆவணங்களை ஆய்வு செய்யவேண்டும். இலக்கியத் தரவுகளை ஆய்வுசெய்ய வேண்டும். இப்பணிகளை மேற்கொண்டால் உலகறியச் செய்ய இயலும்
சரி, இத்தனைப் பணிகளையும் ஒவ்வொரு தமிழரும் செய்யத்தொடங்கினால் என்னாகும்?
தமிழின் அருமையினை உலகம் அறியும். உலகமே தமிழைக்கற்க வேண்டிய சூழல் உருவாகும்?. தமிழர் உலகாளும் சூழல் உருவாகிவிடுமோ? என்னும் அச்சமும்
கூட இப்பணிகளைச் செய்யத்தூண்டாமல் இருக்க காரணமாக இருக்கலாம்தானே.
ஓலைச்சுவடிகளின்
அருமையினை அறிந்தும், கோவில் சிலைகளின் அருமையினை அறிந்தும் எத்தனை வெளிநாட்டினர் அதனைக்
கடத்திச்சென்றுள்ளனர். எத்தனையோ மருத்துவச் சுவடிகள் எல்லாம் கோடிக்கணக்கான பணம் கொடுத்து
அந்நிய நாடுகள் போட்டிபோட்டு வாங்கிக்கொள்கின்றன. அந்த ஓலைச்சுவடியின்படி மருந்து தயாரித்து
நமக்கே அவை விற்றுவருவதனையும் காணமுடிகிறது.
அப்படி
எத்தனையோ நாடுகளில் எத்தனையோ சுவடிகள், எத்தனையோ சிலைகள் பாதுகாப்பாகத்தான் இருக்கின்றன.
வெளிநாட்டார் தமிழர்கள் செய்த சிலையின் அருமையினை உணர்ந்தே அதனை வாங்கிக்கொள்கின்றனர்.
அவர்கள் வாங்காவிட்டால் இங்கு ஏன் சிலை திருடுபோகிறது. அத்தனையும் பொக்கிஷங்கள். தமிழரின்
கலை வடிவங்கள். காக்கவேண்டியது நம் கடமை. இதனை உணர்தலே தமிழரின் தலையாய கடன். இதையெல்லாம்
பலமுறை கேட்டு, காது புளித்துவிட்டது என்கிறீர்களா? நாக்கு தானே புளிக்கும். காது எப்படி
புளிக்கும்?. எனக்கேட்டால் உங்களுக்குக் கோபம் வருகிறது இல்லையா? இந்த மரபு கூட தெரியாத
இவனிடம் பேசினோமோ என்று. உண்மைதான் மரபு தெரியாவிட்டால் முட்டாளாகிவிடுவோம். அதனால்தான்
ஒவ்வொருவரும் நம் மொழியைப் பாதுகாக்கவேண்டும் ; போற்றவேண்டும்.
தமிழ் மூத்தமொழி என்பதற்கான சான்றுகள் என்ன? அதனை முதலில் சொல் என்கிறீர்களா?
ஒரு சான்று கொடுத்தால்போதும்தானே. பிறவற்றைத் தாங்களே கண்டுபிடித்துவிடுவீர்கள்.
உலகிலேயே பழமையான மொழி கிரேக்கம், அம்மொழியில் தமிழின் தாக்கம் மிகுதியாக உள்ளதெனில்
என்ன பொருள் தமிழ் அதனைவிட மூத்த மொழி என்பதுதானே?
‘எறி திரை’ என்னும் கடலை ‘எறுதிரான்’ என்றும்
‘நீர்’ என்னும் தண்ணீரை ‘நீரியோஸ்’
என்றும்
‘நாவாய்’ என்னும் கப்பலை ‘நாயு’ என்றும்
‘தோணி’ என்னும் படகினை ‘தோணீஸ்’ என்றும்
கிரேக்கச்சொற்கள்
தமிழ்மொழியிலிருந்து சிறிய மாற்றத்துடன் வழங்கப்படுவதனை ஆய்வாளர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர்.
இனியேனும், தமிழர்கள் தங்கள் மொழியின் முதன்மையை உலகறியச் செய்யலாம்தானே?
சனி, 8 மே, 2021
சிலப்பதிகாரம் - தமிழ்த்தாயின் சிலம்பு -Cilappathikaram - An ornament of Tamil Mother
மதுரையை எரித்த மல்லிகை
என்றும் நிலைத்திருக்கும்
அதிகாரம் சிலப்பதிகாரம்தானே. மற்ற அதிகாரங்கள் மாறிக்கொண்டே இருக்கும். தமிழரின் பெருமைகளைக்
காத்து நிற்கும் ஐம்பெருங்காப்பியங்களுள் தலை சிறந்ததாகத் திகழ்வது சிலப்பதிகாரம்.
தமிழ்த்தாத்தா உத்தமதானபுரம் வெங்கடப்பர் மகனாகிய சாமிநாதர் தான் 1892 ஆம் ஆண்டு ஓலைச்
சுவடியில் இருந்த சிலப்பதிகாரத்தை நூல்வடிவில்
கொண்டு வந்து தமிழரின் பெருமைகளை ஆவணப் படுத்தினார். “என் உயிரைவிட தமிழ் பெரிது”
எனத் தமிழ்ச்சுவடிகளைக் காப்பதற்காக பல ஆபத்தான சூழ்நிலைகளைக் கடந்தவராயிற்றே. “தமிழுக்காக
உயிரையும் கொடுப்பேன்” என்று பேசும் வழக்கம் இவரிடமிருந்தே வந்திருக்கவேண்டும். ஓலைச்சுவடியைக்
காக்க ஒவ்வொரு ஊராக இரவுபகல் பாராது எத்தனையோ இடங்களுக்குச்சென்று சேகரித்தார். பின்
இரவுபகல் பாராது படி எடுத்தார். அவரைத் தமிழ்த்தாத்தா
என்பது மிகவும் பொருத்தம்தானே. அவருடைய சொத்தை அல்லவா இன்றும் நாம் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம்.
அத்தகைய சொத்துக்களுள் சிலப்பதிகாரம் மிக்க சிறப்புடைத்து.
சிலப்பதிகாரம்
– சிலம்பினால் அதிகரித்த கதை மட்டுமல்ல. சிலம்பினால் அதிகாரம் பெற்ற கதையும் கூட. அதனால்
தான் காலாட் படை, குதிரைப் படை , யானைப் படை
, தேர்ப்படை, என எப்படையாலும் வெல்ல முடியாத
பாண்டியன் நெடுஞ்செழியனை சிலம்பு வென்றது. அதுவும் போரால் அல்ல ஊழால். ஊழ் வினை மன்னனேயாயினும்
விடுவதில்லை என்னும் அறத்தினை உணர்த்தி அறத்துடன் வாழ வழி காட்டுவதே சிலப்பதிகாரம்.
காப்பியத்தின்
பண்பு அறவழியில் நின்று பொருள் ஈட்டி இன்பம் துய்த்து வாழ வேண்டும் என்பதே. அவ்வாறு
வாழ வழிகாட்டுவதுதான் சிலப்பதிகாரம். ஒருவர்
அறவழியில் நிற்க வேண்டுமாயின் என்ன செய்ய வேண்டும்?. ஒரு தாய் குழந்தைக்கு சோறு ஊட்ட வேண்டுமானால் என்ன
சொல்லிச் சோறூட்டுகிறாள். நீ ஒழுங்காகச் சாப்பிடவில்லை என்றால் அஞ்சுகண்ணன் வந்து பிடித்துக்கொள்வான்.
பூதம் வந்து பிடித்துக்கொள்ளும் எனப்பொய்சொல்லி அச்சமூட்டித் தன் குழந்தையை உண்ண வைப்பாள். அது போல மற்றொரு தாய்,
சாலையில் சென்றால் ஏதாவது வண்டி வந்து இடித்து விடும். கவனமாகப் பார்த்துச் செல்ல வேண்டும்
என உண்மையைக் கூறி அறிவுறுத்துகிறாள். அப்படித்தான்
இளங்கோவடிகளும் தாய் போல நின்று வாழ்க்கை என்னும் பாதையைக் கடக்க கவனமாகச் செல்ல வேண்டுமென,
சேய் போன்ற தமிழர்களுக்கு ஊழ்வினையின் வழி
நின்று வழி காட்டுகிறார்.
நீங்கள் செய்யும்
ஒவ்வொரு வேலையும் அதற்கான பலனை உங்களுக்குத் தருவது உறுதி. எனக் கூறி எல்லோரையும் நல்வழிப்
படுத்த வேண்டும் என எண்ணுகிறார். அதன் விளைவாகவே இந்தக் காப்பியத்தில் மூன்று உண்மைகளை
முன் வைக்கிறார்.
1. அரைசியல்பிழைத்தோர்க்குஅறங்கூற்றாகும் ,
2. உரைசால்பத்தினியைஉயர்ந்தோர்ஏத்துவர்
3. ஊழ்வினைஉருத்துவந்துஊட்டும். என்பன.
ஒரு நாடு நன்றாக
இருக்க வேண்டுமானால் வீடு நன்றாக இருக்க வேண்டும். வீடு நன்றாக இருக்க வேண்டுமானால்
அந்த வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் நன்றாக இருக்க வேண்டும். அப்படி ஒவ்வொருவரும் ஒழுக்கத்துடன்
வாழ வேண்டுமானால் எல்லோரையும் வழிப்படுத்திக் கொண்டிருக்க ஒருவரால் மட்டுமே முடியும்.
நான் என்பவரே அவர். அவரவர் அவரவர்களையே திருத்த
முயன்றால் மட்டுமே சமூகத்தில் குற்றம் நிகழாமல் பார்த்துக்கொள்ள முடியும் அந்த உணர்வை
ஊட்டுவதற்குத் தான் நமக்கு ஒரு வழிகாட்டித் தேவைப்படுகிறார். அவர் தான் இளங்கோவடிகள்.
அதற்கு அவர் எடுத்துக் கொண்ட ஆயுதம் தான் ஊழ்.
இத்தனையும் கற்பித்த தமிழை நாம் மகிழ்ச்சியுடன் கற்கலாம் ; கற்பிக்கலாம்தானே.
தமிழ்த்தாய் நம்மை வளர்க்க எவ்வளவு பாடுபட்டாள். ஆனால் நாம் தமிழைக் காக்க என் செய்கின்றோம். சிலம்பு அணிந்த கால்களுக்கு விலங்கைப்பூட்டிச் சிறையிலிட்டோம். தமிழ்க்குழந்தைகள் தமிழின் வழி ஆங்கிலம் கற்கும் நிலை மாறிற்று. ஆங்கிலத்தின் வழியே தமிழைக் கற்கின்றனர். 'ஆறாம் வாய்ப்பாடு சொல்' என்றால் புரிந்துகொள்ளமுடியவில்லை. 'சிக்ஸ்த் டேபிளா' எனக் கேட்கிறார்கள். எத்தனை இடர்ப்பாடு.
ஒருகதை தான் நினைவுக்கு வருகிறது. ஐம்பது வயது மகன் நொறுங்கி வளைந்த தட்டில் இரண்டுபிடி சோறு, ஒரு ஓரத்தில் சாம்பார், ஒரு ஓரத்தில் ரசம், மற்றொரு ஓரத்தில் தயிர் என ஊற்றி, மீதமிருந்த இடத்தில் தொடுகறியோடு கொண்டு சொல்கிறான். பொறுப்புணர்வோடு அல்ல ; கடமைக்காக. அந்தத் தட்டினை, பக்கத்து அறையில் கட்டிலில் காத்திருந்த எண்பது வயது தாய்க்கு வேண்டா வெறுப்பாக தட்டை ஒலியுடன் வைத்துவிட்டு வருகிறான். அந்த ஒலி தான் 'அம்மா ! சாப்பாடு" என்பதற்கானப் பொருளாக இருக்கவேண்டும்.
பசியில் இருந்த தாய் மெதுவாகத் தேடித்தேடி கைகள் நடுங்க உண்ணத் தொடங்குகிறாள். அவன் வெளியே வரும்போது மனைவி குழந்தைகளுக்குச் சோறூட்டுகிறாள். அதனைக் கண்டதும், இத்தனை நாள் கரையாத உள்ளம் கரைகிறது. சிறு வயதில் வெள்ளித் தட்டில் வீதி வீதியாகத் தூக்கிச்சென்று பறவைகளையும் விலங்குகளையும் காட்டி, வானத்தையும் மரங்களையும் காட்டி சிரித்து சிரித்து, கதை சொல்லிச் சோறூட்டிய நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. மீண்டும் தாய் இருந்த அறைக்குச் செல்கிறான். தாய்க்குச் சோறூட்ட வேண்டும் என நினைத்து அவள் காலடியில் அமர்கிறான். உடனே, நடுங்கிய கைகள் அவனுக்குச் சோறூட்டின. கண்கள் குளமாயின. கண்ணீர் தாயின் கால்களில் சிந்தியது. இது தான் கண்ணீரால் கால்களைக் கழுவுவதோ.?
இப்படித்தான் தமிழ்த்தாய் நம் நலனை ; பெருமிதத்தைக் காக்கிறாள். அதனுள் சிலப்பதிகாரத்தின் அருமை பெருமை என அனைத்தையும் படித்து மகிழ்வோம். தொடர்வோம்.