தமிழே ! அமுதே ! அழகிய மொழியே ! எனதுயிரே
தமிழ்மொழி உலகின் முதல்மொழி என்பதற்கான சான்றுகள் காலந்தோறும் கிடைத்துவருகின்றன.
மன்னர் காலத்துச் செப்பேடுகள், கோட்டை, கோவில் கல்வெட்டுகள் முதலாக இன்று கிடைக்கும்
காலடி அகழ்வாய்வுகள் வரை சான்றுகள் கொட்டிக்கிடக்கின்றன. உங்கள் மொழி பழமையானதா? இல்லவே
இல்லை என ஒன்றும் தெரியாதவர்களெல்லாம் எளிதில் தமிழரின் பெருமையை மறைத்துவிடுகின்றனர்
; மறுத்து வருகின்றனர்.
தமிழ் மூத்தமொழி என ஒத்துக்கொள்வதில் உலகத்தவர்க்குத் தயக்கம் உண்டு.
அத்தயக்கத்தை நீக்குதல் ; உரிய சான்று அளித்தல் , தமிழர் கடன். நம் தாயின் பெருமையினைச்
சொல்வதற்கே நாமே தயங்குவது எத்தனை இழுக்கு. சொல்லத்தெரியவில்லையெனில் எத்தனை அறியாமை?
இளைய தலைமுறையினரிடம் கேட்டுப்பாருங்கள். விழிப்பார்கள். அவர்கள் சொல்வதற்கு என்ன கற்றுக்கொடுத்திருக்கிறோம்?
யாரிடம் பிழை? இக்குறையை நீக்கவேண்டுமெனில் ஒவ்வொரு கோவில் கல்வெட்டுக்களையும் ஆய்வு
செய்யவேண்டும். ஆவணங்களை ஆய்வு செய்யவேண்டும். இலக்கியத் தரவுகளை ஆய்வுசெய்ய வேண்டும். இப்பணிகளை மேற்கொண்டால் உலகறியச் செய்ய இயலும்
சரி, இத்தனைப் பணிகளையும் ஒவ்வொரு தமிழரும் செய்யத்தொடங்கினால் என்னாகும்?
தமிழின் அருமையினை உலகம் அறியும். உலகமே தமிழைக்கற்க வேண்டிய சூழல் உருவாகும்?. தமிழர் உலகாளும் சூழல் உருவாகிவிடுமோ? என்னும் அச்சமும்
கூட இப்பணிகளைச் செய்யத்தூண்டாமல் இருக்க காரணமாக இருக்கலாம்தானே.
ஓலைச்சுவடிகளின்
அருமையினை அறிந்தும், கோவில் சிலைகளின் அருமையினை அறிந்தும் எத்தனை வெளிநாட்டினர் அதனைக்
கடத்திச்சென்றுள்ளனர். எத்தனையோ மருத்துவச் சுவடிகள் எல்லாம் கோடிக்கணக்கான பணம் கொடுத்து
அந்நிய நாடுகள் போட்டிபோட்டு வாங்கிக்கொள்கின்றன. அந்த ஓலைச்சுவடியின்படி மருந்து தயாரித்து
நமக்கே அவை விற்றுவருவதனையும் காணமுடிகிறது.
அப்படி
எத்தனையோ நாடுகளில் எத்தனையோ சுவடிகள், எத்தனையோ சிலைகள் பாதுகாப்பாகத்தான் இருக்கின்றன.
வெளிநாட்டார் தமிழர்கள் செய்த சிலையின் அருமையினை உணர்ந்தே அதனை வாங்கிக்கொள்கின்றனர்.
அவர்கள் வாங்காவிட்டால் இங்கு ஏன் சிலை திருடுபோகிறது. அத்தனையும் பொக்கிஷங்கள். தமிழரின்
கலை வடிவங்கள். காக்கவேண்டியது நம் கடமை. இதனை உணர்தலே தமிழரின் தலையாய கடன். இதையெல்லாம்
பலமுறை கேட்டு, காது புளித்துவிட்டது என்கிறீர்களா? நாக்கு தானே புளிக்கும். காது எப்படி
புளிக்கும்?. எனக்கேட்டால் உங்களுக்குக் கோபம் வருகிறது இல்லையா? இந்த மரபு கூட தெரியாத
இவனிடம் பேசினோமோ என்று. உண்மைதான் மரபு தெரியாவிட்டால் முட்டாளாகிவிடுவோம். அதனால்தான்
ஒவ்வொருவரும் நம் மொழியைப் பாதுகாக்கவேண்டும் ; போற்றவேண்டும்.
தமிழ் மூத்தமொழி என்பதற்கான சான்றுகள் என்ன? அதனை முதலில் சொல் என்கிறீர்களா?
ஒரு சான்று கொடுத்தால்போதும்தானே. பிறவற்றைத் தாங்களே கண்டுபிடித்துவிடுவீர்கள்.
உலகிலேயே பழமையான மொழி கிரேக்கம், அம்மொழியில் தமிழின் தாக்கம் மிகுதியாக உள்ளதெனில்
என்ன பொருள் தமிழ் அதனைவிட மூத்த மொழி என்பதுதானே?
‘எறி திரை’ என்னும் கடலை ‘எறுதிரான்’ என்றும்
‘நீர்’ என்னும் தண்ணீரை ‘நீரியோஸ்’
என்றும்
‘நாவாய்’ என்னும் கப்பலை ‘நாயு’ என்றும்
‘தோணி’ என்னும் படகினை ‘தோணீஸ்’ என்றும்
கிரேக்கச்சொற்கள்
தமிழ்மொழியிலிருந்து சிறிய மாற்றத்துடன் வழங்கப்படுவதனை ஆய்வாளர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர்.
இனியேனும், தமிழர்கள் தங்கள் மொழியின் முதன்மையை உலகறியச் செய்யலாம்தானே?