ஓஷோ என்னும் ஓஷன் (கடல்) - Osho is an ocean
“ஓஷோ பிறக்கவும் இல்லை ; இறக்கவும் இல்லை.
இந்த உலகைப் பார்வையிட்டுப் போனவன்” எனத் தன் கல்லறையில் எழுதச்சொன்ன மகான் ; புனிதன்
; மா மனிதன் ; மெய்ஞ்ஞானி ; குரு ; வழிகாட்டி ; வீரத் திருமகன். எத்தனை அடைமொழிகளுக்கும்
அடங்காத கடல். மகாகுரு ஓஷோ போபாலில் பிறந்தவர். ‘சந்திர மோகன்’ என்னும் இயற்பெயரில்
(11.12.1931) தத்துவம் படித்து ; பேராசிரியராக
வளர்ந்தவர். அவருடைய மெய்யறிவு உலகையே ஈர்த்தது. சரஸ்வதி பெற்றெடுத்த பிள்ளையாயிற்றே.
தாயார் சரஸ்வதி பாய்ஜெயின். தந்தை பாபாலால்
ஜெயின்.
இவரைப் பின்பற்றுவது மிகவும் எளிமையானது.
எல்லாம் சரியாக இருக்கும் நிலைக்கு உங்களைப் பக்குவப்படுத்திக்கொள்ளுங்கள் என்கிறார்.
சரியாக இருப்பது என்பது என்ன? என்று கேட்டுப்பாருங்கள். விடைக்காகச் சில நொடிகள் காத்திருங்கள்.
விடைகிடைக்காது ; கிடைத்தாலும் அனைவரும் ஏற்கத்தக்கதாக அமையாது. ஆனால் ஓஷோ சொல்லும்
‘சரி’ என்பதற்கான விளக்கம் எளிமையானது. அமைதியான
சூழலில் இருப்பதுதான் ‘சரி’ என்கிறார். ஆரவாரம், கோபம் செயற்கையானவை. அதனை விடுத்தால்
வாழ்க்கை எளிதாகிவிடும் ; அழகாகிவிடும் என்கிறார். 'கடலின் ஒரு துளியும் கடல்தான்' என்பதனை உணர்ந்துகொண்டதை உணர்த்தும்வகையிலேயே 'ஓஷோ' என்னும் பெயர் பொருந்திவிட்டதனையும் உணர்ந்துகொள்ளமுடிகிறது.
பிரச்சினைகளைக் கண்டு ஓடாதீர்கள் ; எதிர்க்காதீர்கள்.
அது எப்படியும் நடக்கப்போகிறது. அதனைக் கவனியுங்கள். அது நம்மைவிட்டு விலகிவிடும் என
வழிகாட்டுகிறார்.
நாம் நினைப்பது நடக்கலாம் ; நடக்காமலும் இருக்கலாம்.
நடக்கவேண்டாம் என நினைத்தாலும் மரணம் நிகழப்போகிறது. அதனை எதிர்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும்.
உறக்கம் போன்ற இயற்கை நிகழ்வுதான் மரணம் என்பதனை உணர்ந்துகொள்ளும் உள்ளுணர்விருந்தால்
அச்சமில்லை என்கிறார். இன்றும் கூட நாக்பூரில் கருணையுடன் நடந்துகொண்ட நிகழ்வு நெஞ்சை
உருக்குகிறது. மருத்துவமனையில் படுக்கையின்றி நாற்பது வயது நோயாளி தவிக்கிறார். மருத்துவரிடம்
மனைவியும் குழந்தைகளும் கெஞ்சுகின்றனர். மருத்துவர்
படுக்கை இல்லாத நிலையைக் கூறித்தேற்றுகிறார். அந்நிலையில் ‘நாராயண் தபோல்கர்’ என்னும் எண்பத்தைந்து வயது நாட்டுப்பற்றுடைய முதியவர் நாற்பது
வயது நோயாளிக்குத் தன் படுக்கையைக் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார். மூன்று நாள் வீட்டிலேயே
தங்கியிருந்து இறந்தார். தான் உரிய வாழ்க்கை வாழ்ந்துவிட்டதாகவும் அந்நோயாளி வாழவேண்டும்
எனக் கூறியது எத்தனைத் தெய்வீகமான செயல்.
இருப்பு, இறப்பு என்னும் காரணங்களை அறிந்தால்
வாழ்க்கை இலேசாகிவிடும் என்றார் ஓஷோ. மனம்
இலேசாகிவிடும்போது அனைத்து உயிர்களிலும் ஆனந்தத்தை உணரமுடியும். அன்பு பிறரிடம் இருந்து வருவதில்லை. அன்பு உன்னிடம் இருந்தே
பரவி உன்னிடமே திரும்பி வருகிறது. நீ மலரை எறிந்தால் பூமாலையாகவும், கல்லை எறிந்தால்
காயமாகவும் வருகிறது என்கிறார்.
மரணம் அச்சப்பட வேண்டியதில்லை. அது இயற்கை
நிகழ்வு. அது இருளை போல, புதிய இடத்தைப் போல
; புதிய மனிதர்களை நெருங்குவது போல ஓர் அச்சத்தை ஏற்படுத்தும். உணர்ந்துகொண்டபின் அச்சம்
நீங்கிவிடுகிறது. ‘வாழ்வின் உச்சம் மரணம்’ என உணர்ந்துகொண்டால் துறவு மனப்பான்மை கைகூடுகிறது. இன்றும் அதற்கான
சான்று உண்டு. ரிலையன்ஸ் கம்பெனியில் அம்பானியின் வலக்கரமாக விளங்கியவர் பிரகாஷ் ஷா
துறவியானார். எழுபத்தைந்து கோடி ஊதியம் பெற்றவர் வேலையைத்துறந்து துறவியானது எத்தனைப்
பக்குவமான செயல்.
பசியுணர்வும் பாலுணர்வும் இயற்கையானவை. அதுவே
சக்தியாக நம்மைப் பாதுகாக்கிறது. இரண்டையும் முறையாகக் கையாளவேண்டும். அந்த சக்தியின் உணர்வு
தாழ்நிலையில் பாலுணர்வாகிறது. உயர்நிலையில் தியானமாகிறது. பலர் தாழ்நிலையிலேயே
தேங்கிவிடுகின்றனர். சிலர் உயர்நிலையில் தியான நிலைக்குச்சென்று உடலையும் உள்ளத்தையும்
பாதுகாத்துக்கொள்கின்றனர்.
அன்று, உலகிலேயே விலை உயர்ந்த கார் ரோல்ஸ்ராய். அதனை வாங்குவதற்குப் பணமிருந்தாலும்
; கூடுதலாக எத்தனைக் கோடி கொடுத்தாலும் வாங்குபவரின் தரம் சிறப்பில்லாமல் இருந்தால்
அந்தக் காரினை ரோல்ஸ்ராய் நிறுவனம் விற்காது. அப்படிப்பட்ட கார்கள் பலவற்றை உடைமையாகக்
கொண்டிருந்த பெருமைக்குரியவர்தான் ஓஷோ என்னும் தத்துவ மேதை.
ஐந்தாயிரம் மக்களுடன் பாலைவனமாக இருந்த அமெரிக்காவின்
ஒரேகான் என்னும் பாலைவனத்தில் தன் அடியார்களுடன் குடியேறினார். ரஜனிஷ்புரமானது. அவருடைய
முயற்சியால் பாலைவனம் சோலைவனமாக மாறியது. மக்கள் அவருடைய இயற்கை வாழ்வுடன் இணைந்து
வாழ விரும்பினர். படிப்படியாக அடியார்கள் கூட்டம் பதினைந்தாயிரமாக (15000) வளர்ந்துவிட்டது.
நாளும் அவருக்கான அடியார்கள் பெருகப்பெருக மதவாதிகள் மிரண்டனர். தங்களுக்கான மக்களெல்லாம்
அவரிடம் சென்றுவிடுகிறார்களே என எண்ணி அவரை மிரட்டினர். உலகத்தையே வீடாகக் கொண்டவருக்கு நாடு என்ன தடைவிதித்துவிட
முடியும். கடவுச்சீட்டைக் கிழித்துப்போட்டுவிட்டு கடவுச்சீட்டில்லாத குற்றத்திற்காக
கைது செய்தனர். சிறையில் குரு இருப்பதைப் பொறுத்துக்கொள்ளமுடியாத சீடர்கள் கேள்வி கேட்கத்தொடங்கினர். பிரச்சினை பெரிதாகும்
என எண்ணிய மதவாதிகள் சிறையிலேயே கள்ளத்தனமாகக் கொல்ல சதிசெய்தனர். 'தாலியம்’ என்னும்
விஷ ஊசியைச் செலுத்தினர் என அவரே அவருடைய நூலில்
எழுதியுள்ளார் ஓஷோ.
அன்பும் ஆன்மிக உணர்வும் கொண்ட ஓஷோவை உலகில்
உள்ள அனைவருக்கும் பிடித்திருந்தது. அவரைக் கடவுளே மனித வடிவில் வந்ததாக எண்ணினர்.
எனவே ‘பகவான்’ எனவும் குறிப்பிட்டனர். இதனால்
பொறாமை எண்ணம்கொண்ட மதவாதிகளின் அழுத்தத்தால் அனைத்து நாடுகளும் அவரைத் தங்கள் நாட்டிற்குள்
நுழையாமல் தடுத்தன. அவருடைய விமானம் பல நாடுகளில் தரை இறக்கப்படாமலே திருப்பி அனுப்பப்பட்டது.
யோகக்கலையைக் கற்றுக்கொடுத்து நோயின்றி வாழ
வழிகாட்டினார். வாழ்க்கை எவ்வாறு ஆனந்தமாக வாழ்வது என்பதனைக் கற்றுக்கொடுத்தார். யோகம்
செய்து கவலையின்றி வாழ வழிகாட்டினர். நோயின்றி
வாழ்வதற்கான பயிற்சியினைக் கற்றுத்தந்தார். உலகத்தில் பல நாடுகளில் அவருடைய அடியார்கள் முளைத்துக்கொண்டே இருந்தனர்.
வாழ்க்கையின் பொருளை உணர்ந்தனர். “வானம் பூக்கொடுத்து ஆசிர்வதிக்கப்பட்ட மனிதன்’ எனக்
கொண்டாடினர்.
மனிதர்கள் நல்லவர்கள். அவர்களைப் பழிக்காதீர்கள்.
மதம் என்னும் பெயரால் ஒடுக்கிவிடாதீர்கள் எனக் கூறி ‘ஜோர்பா’ என்னும் புதிய மனிதனை
அறிமுகப்படுத்தினார். எந்தக் கட்டுப்பாடுமின்றி மகிழ்ச்சியுடன் அஞ்சாது வாழும் ஒரு
பாத்திரத்தைப் படைத்தார். அப்பெயரையே உலகுக்கு அறிமுகம் செய்தார். அவ்வாறு வாழ்வதற்கான
வழியையும் கற்பித்தார்.
தத்துவமேதை சாக்ரடீஸ் போல் யாருக்கும் தலை
வணங்காமல் தம் கொள்கையிலிருந்து விலகாமல் ஐம்பத்தெட்டு
வயதில் மரணத்திடமும் அன்பு காட்டி ஏற்றுக்கொண்டார். (19.01.1990). ரஜினிஷ் என்னும்
பெயர் உலகையே பிரமிக்கவைத்துவிட்டது. ‘ரஜினி’ என்பது இருளையும் ‘ஈஷ்’ என்பது கடவுளையும் குறிப்பதாக அமைகிறது. ‘ரஜினி’
என்பது இருளையும் ‘நீஷ்’ என்பது ஒளியையும் குறிப்பதாக அமைந்து சந்திரனைக் குறிப்பதாகவும்
அமைகிறது. சந்திரமோகன் என்னும் இயற்பெயரையே சமஸ்கிருதத்தில் அவ்வாறு மாற்றிக்கொண்டுள்ளார்.
எத்தனையோ புக்ஸ் (புத்தகங்கள்) எழுதிய சாமியாரின் அருமையை மடைமாற்ற எண்ணிய மதவாதிகள்
‘செக்ஸ் சாமியார்’ என அடையாளப்படுத்தினர்.
யோகி, பேச்சாளர், பொதுவுடைமையாளர் எனப்பலரும்
கொண்டாடி வரும் பெருமைக்குரியவரின் புகழை அறிந்துகொண்டு அவர்காட்டிய வழியில் ஒற்றுமையாக ; அமைதியாக ; ஆனந்தமாக
வாழ்வோம். வாழ்விப்போம்.