தன்னம்பிக்கை விதைகள்-1
பாடும்போதும், ஆடும்போதும் நாடி
நின்ற தமிழே, சோறூட்டி வளர்க்கும் தாயைப் போல் நாளும் தமிழூட்டி
வளர்த்த தமிழ்த்தாயே. எமைக் காப்பாயே.
கன்னித்தமிழே, தங்கத்தமிழே,
சங்கத்தமிழே, அன்னைத்தமிழே,முத்தமிழே, செந்தமிழே என எத்தனை சொன்னாலும் அத்தனையிலும்
அடங்காத மாத்தமிழே, வான் தமிழே, தேன் தமிழே,
உனை வணங்கித்தொடங்குகிறோம்.
கோடி மலர் கூடி நின்றாலும், இருபது கோடி நிலவுகள் கூடி நின்றாலும் தரமுடியாத அழகினை இங்கு இக்கட்டுரையை வாசிக்கும் தங்களால் தரமுடியும் என்பதனை அறிவேன்.
பகலில் நட்சத்திரங்களைக் காணமுடியாது எனக் கூறியவர்கள் எங்கே? பகலில் நிலாவைக் காணமுடியாது எனக் கூறியவர்கள் எங்கே. உழைப்பவர்களைப் பாருங்கள். இரவு நேரத்தில் பேருந்து நிலையத்துக்குள் நுழைந்தால் எங்கும் தேனீக்களாய் மனிதர் கூட்டம். பகலில் வயல்களைப் பாருங்கள் ஒவ்வொரு நட்சத்திரத்தின் நெற்றியிலும் முத்துக்கள் வேர்வையாக நிலத்தில் சிந்திக்கொண்டிருக்கும். ஐயமாக தெளிய உழவனைப் பாருங்கள்.
உலகத்தில் ஒரு சூரியன் தான் பார்த்திருப்பீர்கள். இவ்வுலகில் தம் வாழ்வைக் காட்டிலும் பிறர் வாழ வேண்டும் என மண்ணில் வலம் வரும் ஒவ்வொருவரும் சூரியன் தான். அத்தகைய சூரியன்களால் எத்தனையோ ஏழைகளின் உள்ளத்தாமரை மலர்கிறது.
திறமையே வெற்றியாகும் POTENTIAL BECOMES ACHEIVEMENT என்பது தான் நம் கொள்கை. இலக்கியம்போல் திரைப்படமும் நல்ல செய்திகளைக் கூறிய காலமுண்டு. அதனால்தான் திரை இலக்கியம் எனத் தனித்துறையாயிற்று. வீணான செய்திகளைச் சிலர் திரைப்படமாக்கி காசை அள்ளிக்குவிக்கிறார்கள். சமுதாயம் எக்கேடு கெட்டால் என்ன என நினைக்கலாமா? " தாயிற் சிறந்த கோயிலுமில்லை", " தாயில்லாமல் நானில்லை" எனத் தாய்ப்பாசத்தை வளர்த்த திரைப்படங்களின் தரம் இன்று தவறான வழி காட்டும் வகையில் வலம் வரலாமா? நடப்பதைத்தானே படமாக எடுக்கிறோம்? எங்களிடம் தவறில்லை. என்கிறார்கள்.
சமுதாயத்தின் மீது தான் தவறு எனத் தப்பிச்செல்ல முனையாதீர். தன்னம்பிக்கை விதைகளைப் புதையுங்கள். அது நாளை விருட்சமாகி உங்களுக்கு நிழல்தரும். காடுகளை வெட்டித்தள்ளிவிட்டால் நாளை காற்றுக்கு எங்கே போவீர்கள்.
ஒரு நாளைக்கு பெண்களுக்கு எதிரான பன்னிரண்டு குற்றச்சம்பங்கள் நடக்கின்றன. அதைத் தடுக்க ஒருவரால் முடியாது. ஆனால் நாம் ஒருங்கிணைந்தால் முடியும் அதுதான் நம் கொள்கை. பெண்களைக்காக்க எத்தனையோ இளைஞர்கள் ஒன்று சேர்ந்துள்ளனர். பெண்களை ; குழந்தைகளை ; நலிந்தவர்களை ; மாற்றுத்திறனாளிகளை தம் உறவாக எண்ணிப் பாதுகாத்து வருகின்றனர்.
ஆமை புகுந்த வீடு உருப்படாது என்பார்கள். அது பொய்யில்லை. இயலாமை,
முயலாமை என்னும் இரண்டு ஆமைகள் தான் அவை. இனி நம்மால் இயன்றவரை நல்லனவற்றை மட்டுமே பேசுவோம் ; செயல்படுவோம். வளமோடு வாழ்வோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக