தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

செவ்வாய், 28 மே, 2019

தமிழ்க் கல்வியும் தமிழர்ப் பின்புலமும் - Tamil Education


தமிழ்க் கல்வியும் தமிழர்ப் பின்புலமும்

முனைவர் ம..கிருட்டினகுமார்உலாப்பேசி : 9940684775

        தமிழர்கள் வரலாற்றின் ; பண்பாட்டின் ; மொழியின் ; நாகரிகத்தின் முன்னோடிகளாகத் திகழ்கின்றனர் என்பதன் அடையாளம் தான் உயர்தனிச்செம்மொழித் தமிழ்என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழன் தன்னுடைய அடையாளத்தைக் கூட அறிய முயலாத போது வெளிநாட்டவரான பார்ப்போலா தமிழரின் பழமையை ; பெருமையை அடையாளம் காட்டினார். அத்தகைய பெருமையுடைய பின்புலத்தைக் கொண்ட தமிழ்மொழியின் பெருமையினைக் காக்கும் வகையில் அமையும் இக்கருத்தரங்கம் எக்காலத்தவரும் போற்றும் சிறப்புக்குரியது. கல்வியாளர்களின் மொழிப்பற்றும் தன்மான உணர்வும் அறம் குறித்த சிந்தனையும் மேம்பட வேண்டும் என்னும் விழைவே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.

அறச்சாலைகளே கல்விச்சாலைகள்
       
         அறத்தைப் போற்றி மக்களைப் பண்படுத்தி நல்ல குடிமகனாக ஆக்குவதே கல்விச்சாலைகளின் பணியாக இருந்தது. வணிக நோக்கில் வளரும் கல்விச்சாலைகள் பிறமொழியினை ஊட்ட விழைகின்றன. அதனால் அம்மொழிக்குரிய பண்பாடும் ஊட்டப்படுகிறது. அதனால் விளையும் கேடுகளே சமூக அவலங்களாகின்றன. எனவே கால ஓட்டத்திற்கேற்ப நாட்டை முன்னேற்றுவது அவசியமெனினும் தமிழர் அறத்தை புறந்தள்ளிவிட்டு முன்னேற எண்ணுவது கண்களை விற்று சித்திரம் வாங்குவதைப் போன்றது.

தமிழர் கற்க வேண்டிய பாடம்

        தமிழரின் பின்புலத்தை அறியாது தமிழ் மொழிக்கு இயன்றவரை கேடு செய்வோரெல்லாம் தமிழ்த்தாயின் உதரத்தில் பிறந்தவர்கள். தமிழ் உதிரத்தில் வாழ்பவர்கள். எனவே அத்தகையோரை குற்றம் கூறுதல் தேவையற்றது. அவர்களுக்கு தமிழ்மொழிக்காக உயிர்நீத்த ; கொடையளித்த ; இலக்கியங்களைக் காத்த படைப்பாளிகளின் வரலாற்றினை உணர்த்த வேண்டியது கல்வியாளர்களின் கடமை. வீழ்ந்தாவரை வாழ வைப்பதே ஆட்சியாளர்களின் கடமையாக இருக்கிறது. வீழாது காப்பதே கல்வியின் மாட்சியாகும். எனவே இலங்கையில் கூட தமிழினத்தின் பெருமையைக் காக்க கல்விச்சாலைகளே நிறுவப்பட்டன. ஆனால் சிங்கள ஆட்சி முதலில் அக்கல்வி நிறுவனங்களை அழித்துப் படிப்படியாக தமிழினத்தையே அழித்துவிட்டது. அதே நிலைதான் இங்கும் மிக மென்மையாக நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கு அடையாளமாகத்தான் சிறப்புத்தமிழ் குறித்த வினா எழுந்துள்ளது.

தமிழரே முன்னோடி

             இலக்கணத்திலும் இலக்கியத்திலும் தனித்தன்மையுடைய தமிழர் அம்மொழி வளத்தை அறியாது இருப்பதனாலேயே பிறமொழியைப் பெருமையாகப் பேசுகின்றனர். ”முற்காலத்தில் சுவடியைநெடுங்கணக்குஎன்று கூறுதலும் எழுத்தறிவிக்கும் ஆசிரியனைக்கணக்காயர்என்று கூறுதலுங் காண்க.

             கற்றதூ உமின்றிக் கணக்காயர் பாடத்தாற்
             பெற்றதாம் பேதையோர் சூத்திர-மற்றதனை
             நல்லா ரிடைப்புக்கு நாணாது சொல்லித்தன்
             புல்லறிவு காட்டி விடும்

என்றநாலடியாரினும் இச்சொல் யாங்கூறிய பொருளில் வழங்குதலுணர்க. தமிழர்க்கு ஆரியர் இந்தியாவிற்கு வருமுன்னரே, எழுதப்படிக்கத் தெரியும். ‘எழுத்து’ ‘சுவடிஎன்பன தனித்தமிழ்ச் சொற்களாதலுங் காண்க. இதனால் அகத்திய முனிவர் தமிழ்ப் பாஷைக்கு நெடுங்கணக்கு வகுத்தனரென்பதும் ஆரியரோடு கலந்த பிரகே தமிழர் தங்கள் பாஷைக்கு நெடுங்கணக்கு ஏற்படுத்திக் கொண்டனரென்பதும் பொருந்தாமை யறிக.” (தமிழ் மொழியின் வரலாறு, . 8) என்னும் பரிதிமாற்கலைஞரின் கூற்று தமிழ்மொழியின் பெருமையினை உணர்த்தும்

மானம் காக்கும் மொழி

        உலகில் அடையாளம் அழிந்த மொழிகளையெல்லாம் மீட்டெடுக்க அம்மொழியைச் சார்ந்தோர் முயன்று வருகின்றனர். அதற்காகச் செய்யும் செலவு பண்பாட்டையும் தன்மானத்தையும் காக்கும் செலவாகவே எண்ணிய அரசுகள் முழுமனதுடன் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறன்றன.

        கி.மு. 4000 அளவில் மெசபொடேமியாவின் தென்பகுதியில் (இன்றைய ஈராக்கில்) ஈஃப்ரேட்ஸ், (Euphrates), டைக்ரெஸ் (Tigres) நதிகளுக்கு இடைப்பட்ட சுமேர் என்னும் சிறிய நிலப்பரப்பில் குடியேறியவர்கள் சுமேரியர்கள் என்ப்படுவர். அவர்களது நாகரிகம் உலகத் தொல் நாகரிகங்களுள் ஒன்றாகப் போற்றப் பெறுகிறது. செமிடிக் குடும்பத்தைச் சார்ந்த மொழிகளுள் ஒன்றான அக்காடியன் என்பது அவர்களுடைய மொழியாகும். அசிரியன், பாபிலோனியன் ஆகிய கிளைமொழிகளை உள்ளடக்கி அக்காடியனென்னும் பொதுப்பெயரால் அம்மொழி சுட்டப்பெறுகிறது. அவர்கள் அந்நாளில் ஒரே கல்லில் தமது கருத்துகளை வெட்டியுள்ளனர். அன்றியும் எழுத்தாணியால் களிமண்ணில் எழுதி அதனை வெயிலில் உலர்த்தி அல்லது தீயில் சுட்டு ஓடுகளாய் (clay tablets) பாதுகாத்தும் வந்துள்ளனர். ஆப்பு வடிவிலான அவர்களது எழுத்துமுறை  cuneiform உலகத் தொல் எழுத்துமுறைகளுள் ஒன்றாகும்……….. மிகத் தொன்மையானதும் ஈராயிரம் ஆண்டு காலமாகப் பேச்சு வழக்கில் இல்லாத்துமான அசிரியன் (Assyrian) மொழிக்கு மேற்குறித்த ஆவணங்களிலிருந்து தரவுகள் திரட்டப்பெற்று அகராதி உருவாக்கப்பெற்றுள்ளது. இவ்வகராதிப் பணி 1921 இல் ஜேம்ஸ் ஹென்றி பிரெஸ்டெட்(James Henry Brested) என்பவரால் தொடங்கப்பெற்றது. அண்மையில் மார்த்தா டி.ரோத் (Martha T. Roth) என்பவர் தலைமையில் நிறைவுற்றது. 80 அறிஞர்கள் 90 ஆண்டுகள் உழைத்து உருவாக்கிய இவ்வகராதி மொத்தம் 21 தொகுதிகளை உடையது…………………………கால வெள்ளத்தில் அடித்துச்செல்லபெற்ற பழம்பெரும்  சமூகத்தை, அதன் நாகரிகத்தை, பண்பாட்டை மீளவும் காண உதவும் சாளரமாக இம்மாபெரும் நன்முயற்சி அமைந்துள்ளது என்பதை உணரவேண்டும். மொழி என்பது ஒலிகளில் குறீயீட்டுக் களஞ்சியம் மட்டும் அன்று; ஓர் இனத்தின் அடையாளமும் பண்பாட்டின் ஆவணமும் ஆகும் என்ற அறிவுத் தெளிவாலேயே அவ்வகராதி ஆக்கப்பெற்றுள்ளது.”(நோக்கு ஜூலை 2011 இதழ் பக். 3,4) என அரிமா நோக்கு இதழில் அதன் இணையாசிரியர் பேராசிரியர் வ.ஜெயதேவன் அவர்கள் குறிப்பிட்டுள்ளதனை எண்ணி மொழியின் முக்கியத்துவத்தினை உணரலாம்.

தமிழனே தமிழனுக்குத் தடைக்கல்

        இலக்கியங்களின் அடிப்படையைக் கொண்டு நோக்குகையில் ஈராயிரம் ஆண்டு பழமை வாய்ந்த ஒரு மொழியின் பெருமையினைக் காக்க முயல்வதற்கு தமிழர்களே தடையாக நிற்பது வேடிக்கைக்குரியது. காலம் தாழ்த்தி தண்ணீர் கொண்டு வந்தான் என்பதற்காக உயிர்விட்ட கணைக்கால் இரும்பொறையின் வழியில் வந்த தமிழினம் தண்ணீருக்காக கையேந்தி நிற்கும் அவலநிலைக்கு வந்துவிட்டது.  இமயத்தில் கொடியைப் பறக்கவிட்டு குமரி வரை ஆட்சி செய்த தமிழன் இன்று ஒரு குறுகிய எல்லைக்குள் ஒடுங்கி நிற்கிறான். சென்னை என்ற ஒரே மாநிலமாகத் திகழ்ந்த தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம் அனைத்தும் இன்று தனி மாநிலமாகப் பிரிந்து தாயையே அடித்துத் துன்புறுத்தும் குடிகாரனைப் போல்  அல்லது நாகரிமாகச் சொல்ல வேண்டுமென்றால் தாய்க்கு தண்ணீர் கொடுக்காத தனையனைப்போல் வருந்த வைக்கிறது. இதற்கெல்லாம் காரணம் தமிழன் தன் வரலாற்றை அறியாதது தான். இந்த அவல்நிலை தொடராதிருக்க தமிழ்க் கல்வி அவசியம் என்பதனை கல்வியாளர்களேனும் உணரவேண்டும்.
        
           தமிழ்மொழி தெரியாமல் தமிழ்த்தாய் வாழ்த்தினைப் பிறமொழியில் எழுதிப் படிக்கும் மாணாக்கர்கள் பெருகிவருகின்றனர். பிறமொழி படிப்பதிலேயே அனைவரும் கவனமும் உள்ளது. காரணம் தாய்மொழிப் பற்றின்மை எனக் கூற இயலாது வேலைவாய்ப்பு எனக் கொள்ளலாம்.
தமிழன் ஏமாந்தான்
        
       தமிழ் மொழியை முதன்மை மொழி (ஃபஸ்ட் லேங்குவேஜ்) எனக் கூறி அதற்கு தேர்ந்தெடுக்கும் நிலையை உருவாக்கிவிட்டனர். ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாகக் கொண்டு அனைவரையும் படிக்கவைத்து தமிழர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டனர் ; கொள்கின்றனர் ; கொள்வர்.
        
       தாய் மொழிச் சிந்தனையால்தான் அறிவு வளரும் என்பதனை அனைவருமே உணர்ந்திருந்தாலும் பிறமொழி மோகத்தில் சிக்கித் தவிக்கின்றனர். அரசி கயல்விழி என்னும் பெயர்கள் ரக்ஷனா, நேத்ரா என்னும் பெயர்களாக மாறிவரும் அவலநிலைத் தொடர்கிறது. பெயரின் பொருள் தெரியாமலே பெயர் வைக்கும் போக்கும் பெருகிவிட்டது. இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் தமிழ்மொழியின் பெருமையினை உணரத் தவறிவிட்டமையே. தமிழன் தன் அடையாளமாக இருந்த பெயரைக் கூட இழப்பதில் மகிழ்ச்சி கொள்கிறானே தவிர வருத்தம் கொள்வதில்லை என எண்ணும்போது தமிழனின் நிலை குறித்து வருந்தவேண்டியுள்ளது.
        
       எங்கெல்லாம் தமிழ் வாழ்கிறதோ அங்கெல்லாம் தமிழன் வாழமுடியும் என்பதனை உணரவேண்டும். ஆங்கிலம் அவ்வாறே உலகையே தன்கைக்குள் கொண்டுவந்ததனை ஏனோ தமிழர்கள் மறந்துவிடுகிறார்கள். அவர்களுக்கு இவ் அறிவை ஊட்ட வேண்டிய கடப்பாடு கல்வியாளர்களுக்கும் உண்டு.
முன்னேறிய நாடுகள்
     
   தாய்மொழியைக் கற்றவர்கள்தான் உலகிலுள்ள கண்டுபிடிப்புகளுக்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்கின்றனர். பிறமொழியில் சிந்தித்தவர்கள் சாதனைப் படைத்தார்கள் எனக் கூறினால் அதற்குப் பின்னால் அவர்களுடைய போராட்டம் எத்தனைக் கடுமையானது எனக் கேட்டால்தான் தெரியும். அவர்களுக்கு தாய்மொழியில் சிந்திக்க வாய்ப்புகள் கொடுக்கப்பட்டிருந்தால் இன்னும் வேகமாக அச்செயலை செய்துமுடித்திருப்பார்கள் என்பதனை சொல்லத்தேவையில்லை.

        தொழில் நுட்பத்தில் சாதனைப் படைத்த ஜப்பானியர்கள், உலகச் சந்தையையே தனது கட்டுக்குள் வைத்திருக்கும் சீனா பொறியியலில் முன்னோடியாக நிற்கும் ஜெர்மனி ஆகிய நாடுகள் அனைத்தும் தாய்மொழியால் மட்டுமே முன்னேறியுள்ளதனைக் காணலாம்.

உலக அரங்கில் தமிழ்

        தனித்தியங்கும் தன்மையற்ற ஆங்கிலம் இன்று உலகம் முழுதும் பயன்பாட்டில் இருக்கிறது. ஆனால் தனித்தியங்கக் கூடிய மொழிவளம் பெற்ற தமிழ் உலக அரங்கில் இல்லை. இந்நிலையிலும் அதிகமான வலைதளங்கள் உள்ள மொழியாகத் தமிழ்மொழி திகழ்கிறது. பலவகையில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டும் தமிழ் தன்னை முன்னிறுத்திக் கொள்கிறது எனில் வாய்ப்புக் கொடுத்தால் தமிழ் மட்டுமின்றி தமிழனும் உலக அரங்கில் தலைமை இடத்தில் அமரமுடியும். இதனை உணர்ந்து கல்வியாளர்கள் செயல்படவேண்டும்.

        தமிழை அழகாகப் பிழையின்றிப் பேசப் பயிற்சி அளிப்பதில்லை. தமிழைப் பிழையில்லாமல் எழுதப் பயிற்சி அளிப்பதில்லை. பத்தாண்டுகளுக்கு முன் அதற்கெல்லாம் ஒரு பாடவேளை இருந்தது. ஆனால் இன்று நீதிக்கருத்துக்களைக் கூறுவதற்கான பாடவேளை நீக்கப்பட்டுவிட்டது. பிறகு எப்படி நாகரிகமானப் பேச்சாற்றலை ,மொழிப்பயன்பாட்டை, நல்லொழுக்கங்களை எதிர்பார்க்கமுடியும்.

        அறம் செய விரும்பு, ஆறுவது சினம் என எழுத்தைக் கற்றுக்கொடுக்கும் போதே அறத்தையும் கற்றுக்கொடுத்த தமிழ்மூதாட்டி போல் உலக மொழிகளுள் எவரையேனும் அடையாளம் காட்ட இயலுமா. அத்தகைய பெருமையுடைய தமிழைப் படிக்கத் தடை விதித்தால் ஆசிரியரை வாத்தி எனக் கூறுபவர்களும். தமிழாசிரியர்களை கிண்டலடிப்பவர்களும் ஆசிரியர்களை எதிர்த்துப் பேசுபவர்களும் பெருகத்தான் செய்வார்கள். ஆனால் அதன் வளர்ச்சி நிலையாக ஆசிரியரையே கொன்ற நிலைதான் மிகவும் கசப்பான செய்தியாகும். அந்தச் செய்திக்குப் பின்னராவது உலகத்துக்கு அறத்தைக் கற்றுக்கொடுத்த இலக்கியங்களைச் சேர்க்காமல்  எவ்வாறு பண்பாட்டை கற்றுக்கொடுத்துவிட முடியும். அதற்கு நேர்மாறாக சில நல்ல மாணாக்கர்களை நல்வழிப்படுத்தும் வகையில் கல்வியாளர்கள் பயிற்றுவித்த சிறப்புத்தமிழ் இன்று நீக்கப்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகிறது எனில் இதைவிட தமிழர் தனக்குத்தானே கேடு செய்துகொள்ள வேறு வழி தேவைப்படாது.
வேண்டுதலும் வேண்டாமையும்

        தமிழ் படித்தவர்கள் அனைவரும் இன்று பிறமொழியில் படிப்பதற்கு தோள் கொடுக்கிறார்கள். ஏனென்றால் எனக்குத் தெரியாதது என் பிள்ளைகளுக்குத் தெரிய வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் ஒழுக்கத்தில் மட்டும் தமிழ்ப்பண்பாட்டோடு இல்லையென்றால் காலம் கெட்டு விட்ட்து என்று தாங்கள் செய்த பிழையைக் காலத்தின்மீது போட்டுவிட்டு தப்பித்துக் கொள்கிறார்கள் என்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது. எதிலும் சிறந்த்தையே பெற வேண்டும் என எண்ணும் பெற்றோர்கள் தமிழ்மொழியின் பெருமையினை அறிந்தால் தமிழையே கற்பிக்க விரும்புவர் என்பதில் ஐயமில்லை. ஒழுக்கமாகவும் வளமாகவும் குழந்தையாக வாழ்வதில்தான் பெற்றோர் மகிழ்ச்சியடைவர். எனவே தமிழ்மொழியை, தமிழர் பண்பாட்டைக் காப்பதில் கல்வியாளர்கள் கவனத்துடன் செயல்படவேண்டும்.

வடமொழியினும் சிறந்த தமிழ்

        தமிழன் ஏமாந்த களங்கள் ஒன்றிரண்டல்ல. வெள்ளைமனம் படைத்த தமிழனின் மொழியை அவன் கட்டிய கோயில்களிலும் கூட அனுமதிக்காத நிலை இருந்தது. சமஸ்கிருதம் தேவபாஷை. தமிழ் நீச பாஷை எனத் தமிழைத் தாழ்த்திய நிலை கண்டும் தமிழன் கவலைகொள்ளவில்லை. ஆனால் கால வெள்ளத்தில் சமஸ்கிருதம் வீழ்ந்தது ; தமிழ் வாழ்ந்தது. இந்நிலை கண்டும் சமஸ்கிருதமே முதல்மொழி என்று கூறும் நிலையும் நிலவிவருவது வேடிக்கைக்குரியது.

        திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற தமது நூலில் கால்டுவெல் ஐயர் அவர்கள், தமிழ் மொழியிலிருந்து வடமொழிச் சொற்களை நீக்கிவிட்டால், எஞ்சியிருக்கும் பழம்பெரும் சிறப்பு வாய்ந்த திராவிடச் சொற்கள் ஆரியக் கலப்பற்ற திராவிட நாகரிக வாழ்க்கை முறையை உணர்த்தவல்லன (திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம், கால்டுவெல் ஐயர், .146) என்று தமிழின் தனித்தன்மையை 18 ஆம் நூற்றாண்டுகளில் வரையறுத்துள்ளார். .”(நோக்கு ஜூலை 2011 இதழ் பக். 15) எனச் செ. சாரதாம்பாள் எடுத்துக்காட்டியுள்ளதன் வழி தமிழின் பெருமையினை அறியலாம்

        சமஸ்கிருதத்தில் இருந்து தமிழ் தோன்றியிருக்கவே முடியாது. ஏனெனில் சமஸ்கிருதம் ஓர் உட்பிணைப்பு மொழி, தமிழ் ஓர் ஒட்டுநிலைமொழி என்னும் எளிய மொழியியல் உண்மை பல்வேறு சிறப்புப்பாடம் பயில்வோருக்கும் தெற்றென விளங்கியிருக்கும். இதற்காக ஒவ்வொரு முறையும் தமிழில் முதுகலையோ, முனைவர்ப் பட்டமோ பெற்ற ஒருவர் வந்து வாதாட வேண்டும் என்னும் சூழ்நிலை தோன்றியிருக்காது. அதை ஒட்டித் தமிழைச் சிறப்புப் பாடமாகப் படித்த ஒருவர் எப்போதும் அதன் தனித்துவங்களை விதந்துரைப்பது இயல்புதான் என்னும் சாய்வுப் பார்வையும் பேரெண்ணிக்கையிரிடம் ஏற்பட்டிருக்காது. .”(அரிமா நோக்கு ஜூலை 2011 இதழ் ப. 6) என வீ.பரிமளா அவர்கள் குறிப்பிடும் கூற்றும் இங்கு எண்ணத்தக்கது.

திராவிடமொழியில் தலையாயது தமிழ்

        தமிழ் தமிழர்களுக்கு மட்டுமின்றை திராவிடர் அனைவருக்கும் தாயாக் விளங்கும் பெருமையினை உடையது. ”இந்தியாவின் தென்பாகத்தில் வழங்கும் மொழிகள் திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை என்று மொழியறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். திராவிட மொழிகளுள் திருந்திய மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளு ஆகியவையாகும். இவற்றுள் மற்றைய நான்கு மொழிகளுக்கும் தலைமை வாய்ந்த தகுதியைப் பெற்றுள்ளது தமிழ் மொழியாகும்.(Encyclopaedia Britannica, Vol. 2, p.733) .”(நோக்கு ஜூலை 2011 இதழ் ப. 14) எனச் செ. சாரதாம்பாள் எடுத்துக்காட்டியுள்ளதன் வழி தமிழின் பெருமையினை அறியலாம்.

மொழியியலிலும் சிறந்த தமிழ்

        இன்று உலகமே ஏற்றுக்கொண்ட துறை மொழியியல் துறை. அத்துறையிலும் தமிழ்மொழிப் பொருத்தப்பாடுடையதாக இருப்பதனை மொழி வல்லுநர்கள் மெய்ப்பித்துள்ளனர். அதனால்தான் கணினிக்கு ஏற்ற மொழியாக தமிழ்மொழி இருப்பதனை எடுத்துக்காட்டியுள்ளனர். தமிழர்கள் பொறுப்புணர்வுடன் பணியாற்றினால் தமிழ்மொழி கணினி மொழியாகும். இதனால் தமிழ் ஓங்குவதோடு தமிழரும் பெருமையடைவர் என்பதில் ஐயமில்லை.

        தமிழ்மொழி திருந்திய வடிவம் பெற்ற தொன்மைத் தன்மை உடைய இலக்கண இலக்கிய வளமுடைய செம்மொழி என்பது மொழியியல் வல்லுநர்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மையாகும் .”(நோக்கு ஜூலை 2011 இதழ் ப. 15) எனச் செ. சாரதாம்பாள் கூற்று இங்கு எண்ணத்தக்கது.

செவ்வியல் மொழி

        தமிழர்கள் இலக்கியங்கள் வழி அறத்தை மட்டுமின்றி இலக்கணத்தையும் கற்பித்தனர். அவ்வாறே இலக்கணம் கற்பிக்கும் போது திணை என வகுத்து ஒழுக்கத்தையும் கற்பித்தனர். இலக்கியத்தைக் கற்பிக்கும்போது தங்கள் பெயரை வெளியிடாமல் கருத்துக்கே முக்கியத்துவம் கொடுத்து தன்னை முன்னிறுத்திக்கொள்ளாத அறத்தையும் கற்பித்தனர். இத்தகைய பெருமைகளே தமிழ் செவ்வியல் மொழி என்பதனை நிறுவியுள்ளது. அதனை அறிந்து வெளிப்படுத்துவதற்கான காலம்தான் நீண்டுவிட்டது.

        செவ்வியல் என்பது மேன்மை பொருந்திய உயர்ந்த பாடுபொருளைக் (Excellence and Dynamic conceptions of thoughts) கொண்டது. அதாவது வாழ்வியல் செய்திகள், மானுடம் தழுவிய பாடுபொருளைச் சுட்டும்.

        மரபு வழிப்பட்ட கவிதை நடையினை உடையது. மரபைப் பின்பற்றும் மரபின் வழி அறிவு முதிர்ச்சி காணப்படும். இதனால் இலக்கியச் செம்மை வெளிப்படும். செம்மைப் பண்பினால் பண்புடைய இலக்கியமாய்த் திகழும்
        படைப்பாளியை இனம் காட்டாது , பாடுபொருளில் கவனம் செலுத்தும்.

        கருத்து வெளிப்பாட்டில் குழுமன வெளிப்பாடு இருக்கும். தனிமனிதச் சிந்தனை என்பதைவிடக் குழுவினரின் சமுதாயச் சிந்தனைகளை வெளிப்படுத்தும் தன்மையுடையது. .”(நோக்கு ஜூலை 2011 இதழ் ப. 14) எனச் செ. சாரதாம்பாள் குறிப்பிட்டுள்ளதனை தமிழ் இலக்கியங்களோடு பொருத்திப்பார்த்துத் தமிழ்மொழி செவ்வியல் மொழியாவதனை எண்ணி மகிழலாம்.

மதிப்பெண்ணும் மனித உயிரும்

        மதிப்புடைய வாழ்வை மதிப்பெண்ணுக்காகத் துறக்கும் அவலநிலை தொடர்கிறது. அறத்தைப் பாடமாகக் கற்பிக்காது போட்டி மனப்பான்மையை மட்டுமே வளர்க்கும் கல்விக்கூடங்கள் மாணாக்கர்களுக்குரிய மயானங்களாகவே மாறிவிடுகிறது தன்னம்பிக்கையினை ஊட்டும் அற இலக்கியங்களையும் அன்பை ஊட்டும் அக இலக்கியங்களையும் வீரத்தை ஊட்டும் புற இலக்கியங்களையும் உடைய தமிழ் புறக்கணிக்கப்படுவது நாளைய தலைமுறையினை பிற இனத்தவர்க்கு அடிமைப்படுத்தும் முயற்சியாகவே அமைகிறது. புரியாத பாடங்களைப் படித்து வெற்றி பெறுவதுதான் வாழ்க்கை எனக் கற்றுக்கொடுத்து எந்திர பொம்மைகளாக உலவவிடுவதில் சமூகம் இன்பம் காண்பது துன்பத்திற்குரியது. “தனது வாழ்க்கையைக் கண்டெடுத்துத் தனக்கும் பிறருக்குமாக அதைப் பகிர்வுசெய்து நிறைவுகாணும் மானுட அறத்திற்கு மாறாக, மற்றவர் தோல்வியின் மீது தனது வாழ்வையும் வருங்காலத்தையும் நிறுவ எத்தனிக்கும் மானுடச்சிறுமையை வளர்த்தெடுக்கும் கல்விக் குற்றம் அழியப்போகும் சமூகத்தின் அடையாளமேயன்றி வேறு என்ன?. மாணவர்களைத் தேர்வுகள் என்னும் அதிரடித் தாக்குதல்களிலிருந்து காப்பாற்ற வேண்டாமா? உண்மையில் இந்த நாட்டில் மாணவர்களை இடர்ப்படுத்தும் தம் காலடியே அவர்களைப் போட்டு மிதித்து நசுக்கும் வன்முறைச் சம்பவங்கள் வேறு எதுவும் உண்டோ? .”(நோக்கு ஏப்ரல் 2012 இதழ் பக். 14) என அரிமா நோக்கு இதழின் ஆசிரியர் ஈரோடு தமிழன்பன் குறிப்பிடுவது இங்கு எண்ணத்தக்கது.

             இக்காலத்தில் ஆங்கில பாஷை கற்ற தமிழ் மக்களிற் பலர் தமது தாய்மொழியாகிய தமிழைப் படிக்க வேண்டுவது அவசியமன்றென்றும், தமக்கு வேண்டிய விஷயங்கள் யாவும் ஆங்கிலத்திலேயே அகப்படுகின்றனவென்றும் பலதிறப்படக் கூறுவர். அவர் ஆங்கில மொழிச் சிறப்புமட்டிற் கூறியமைவதே நன்றாகுமன்றித் தமிழ் கற்கவேண்டிய தவசியமன்று என்பது அறியாமையொடு கூடிய துணிந்துரையாம். இது சுதேசாபிமானமும் சுபாஷாபிமானமு மற்றவர் கூற்றாம்”(தமிழ் மொழியின் வரலாறு, . 93) என்னும் பரிதிமாற் கலைஞரின் கூற்று இன்று தமிழ்மொழியைப் புறக்கணிப்போருக்குக் கொடுக்கும் கசையடி போல் திகழ்கிறது.

நிறைவாக

             தமிழர்களின் மொழி தமிழ் என்பதனை நாளைய தலைமுறைக்குக் கற்றுக்கொடுக்க வேண்டிய நிலை வராத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டிய கடப்பாடு ஒவ்வொரு தமிழர்க்கும் உரியது. அதில் கல்வியாளர்களுக்கு உரிய பங்கு அளப்பரியது. அறிவுக்கு அடிப்படையான பள்ளி முதல் வாழ்வுக்கு வழிகாட்டும் கல்லூரி வரை (எங்கெல்லாம் மனிதன் அறத்துடன் வாழ வேண்டும் என்னும் தேவை உள்ளதோ அங்கெல்லாம்) தமிழ்மொழியைக் கற்பித்தால் (பழி பாவத்திற்கு அஞ்சி அறவாழ்க்கை வாழும்) நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும் எனத் தெளியமுடிகிறது.

****************

தமிழ்மொழி வளர்ச்சிக்குத் தடைக் கற்களும் தீர்வுகளும் - Tamil Language skills


தமிழ்மொழி வளர்ச்சிக்குத் தடைக் கற்களும் தீர்வுகளும்

முனைவர் ம.. கிருட்டினகுமார், உலாப்பேசி - 9940684775
        
    தமிழ் மொழி உலக மொழி என்பதற்குச் சான்று அது உலகலாவிய செய்திகளை உள்ளடக்கியதனாலேயே எனக் கூறலாம். நிலப்பகுப்பு முதல் உயிரினத் தோற்றம் முதல் அனைத்தும் எவ் உலகத்தாரும் ஏற்கும் வகையில் அனைத்துக் கருத்துக்களையும் உள்ளடக்கியதாக அமைந்துள்ளது.
        
        உலகம் யாவையும் எனக் கம்பரும் உலகெலாம் எனச் சேக்கிழாரும் உலகத்தோடு ஒட்ட ஒழுகல் என ஔவையாரும் எவ்வத்துறைவது உலகம் எனத் தெய்வப் புலவர் திருவள்ளுவரும் காக்கைக் குருவி எங்கள் ஜாதி என மகாகவி பாரதியாரும் பாடியுள்ளனர். இக் கூற்றுக்கள் தமிழர்கள் உலகத்தையே தமது நாடாக எண்ணிய திறத்தினை உணர்த்தி நிற்கின்றன.

மொழிச் செல்வாக்கு

        தமிழன் தன்னை முன்னிறுத்திக் கொள்ள விரும்பாததனால் தமிழ் இலக்கியங்கள் பல பிற மொழியில் பெயர்க்கப்பட்டு அம்மொழிக்குரிய சொத்தாகவே மாற்றப்பட்டுவிட்டது.

        உயர்ந்த கருத்துக்களை (மருத்துவம் சோதிடம்,) தமிழ் மொழியில் எளிமையாகக் கூறியதனால் அதன் அருமையினை உணராமலே அக்கருத்துக்களுக்குச் செயல்வடிவம் கொடுத்தனர். அத்தகையோரின் முயற்சியும் பயிற்சியும் அற்ற போக்கால் மக்கள் வருந்தினர். இதனைக் கண்டு மனம் வருந்திய சான்றோர் மறைமொழியில் கூறுவதை வழக்காகக் (இரு குரங்கின் சாறுமுசுமுசுக்கையின் சாறு) கொண்டனர். இதனால் நாளடைவில் அக்குறிப்புகளை தமிழர்களாலேயே பின்னாளில் அறிய இயலாது போனது.  இதனால் பல செல்வங்கள் நாளடைவில் மறந்தும் மறைந்தும் போயின.

        வடமொழி இலக்கியங்கள் செல்வாக்குப் பெற்றிருந்த காலத்தில் தமிழர்கள் வடமொழியில் எழுதுவதையே பெருமையாக எண்ணினர். தமிழர் மருத்துவம், சோதிடம்  பரதக்கலை போன்ற பல அரிய நுட்பங்களை வட மொழியில் எழுதினர். இக்காலத்தில் ஆங்கிலத்தில் எழுதுவதைப் பெருமையாகக் கருதுவதுபோல் அக்காலத்தில் வடமொழியில் எழுதினர். இவ்வாறு வடமொழியில் எழுதப்பட்ட இலக்கியங்கள் நாளடைவில் வடமொழி இலக்கியங்களாயின. இக்கோணத்தில் எண்ணிப்பார்த்துத் தமிழர் தம் சொத்தினை இழந்த நிலையினை ஒருவாறு உணரலாம்.

சமயச் செல்வாக்கு

        தமிழகத்தில் தமிழ் மண்ணில் தோன்றிய சமயங்களைவிட பிற சமயங்களின் செல்வாக்கு நாளடைவில் வளரலாயிற்று. அவ்வாறு பரவிய சமயங்களே சிறுபான்மை சமயங்கள் என்னும் நிலையில் மக்களை மாற்றி ஆதிக்க சக்தியாக கோலோச்சின. அச் சமயங்களின் மறை மொழி வேறொன்றாய் இருந்ததனால் தமிழ்மொழி ஈடுபாடு குறைந்தே காணப்பட்டது.  எனவே தமிழ் மொழியின் பெருமை ஒடுங்கும் நிலை ஏற்பட்டது.

        தமிழில் உள்ள அருமையான சொற்கள்  ஒரு சமயத்தார்க்கு உரியது என அறியும் வகையில் தமிழ்ச்சொற்களை கையகப்படுத்தினர். வணங்கும் தொழிலைக் குறிக்கும் தொழுகை என்னும் சொல்லும் தலைவரைக் குறிக்கும் கருத்தன் என்னும் சொல்லும் இன்று சிறுபான்மை சமயத்துக்குரிய சொற்களாக மாறிவிட்டதனை எண்ணிப் பார்க்கலாம்.

ஒழுகும் பானைகள்

        செல்வம் வாழ்க்கைக்குத் தேவையானது என்பதனை அனைவரும் உணர்வர். ஆனால் பண்பிலான் பெற்ற செல்வம் எவருக்கும் பயன்படாது வீணாகும். அடிப் பண்புகளைடையான பண்பினை ஊட்டும் தாய்மொழிக் கல்வியை தமிழருக்கு ஊட்டுவதனை விட்டுவிட்டு சட்டம் சீர் குலைந்து வருகிறது எனக் கூறுவதனால் ஒரு பயனும் இருக்கமுடியாது.  பண்பினை ஊட்டும் பக்தி இலக்கியங்களை சமயத்தின் பெயரால் பிற சமயத் தொடர்புடைய கல்வி நிறுவனங்கள் மறுத்து விடுகின்றன. தமிழ்மொழிக்குப் பெருமை சேர்க்கும் அறம் செழிக்கும் பக்தி இலக்கியங்களை ஒதுக்கிவிட்டு தமிழைக் கற்பிப்பது ஒழுகும் பானையில் நீருற்றி நிரப்பும் முயற்சிக்கு நிகராகும்.

        எச்சமயத்தாராயினும் தமிழ் மொழியைக் கற்பதில் ஏற்றத்தாழ்வு இருத்தல் கூடாது. மூத்த மொழியான தமிழ் மொழியின் வளத்தை எடுத்துரைக்கும் பக்தி இலக்கியங்களை முறையாகக் கற்காமல் தமிழ்மொழியினைக் கற்றுக்கொண்டதாகக் கூறுவது அறியாமையே. எனவே தமிழ் வாழும் இலக்கியங்களை முறையாகக் கற்றாலே தமிழின் பெருமையினை உணரமுடியும்.

மொழியும் இனமும்

        தமிழர்கள் என்னும் உணர்வு தமிழ் நாட்டில் வாழும் அனைவருக்கும் ஏற்பட்டால் தான் தமிழ் மொழியின் வளர்ச்சி சிறப்புடையதாகும். தமிழ்நாட்டில் வாழ்வோர் மட்டுமின்றி தமிழால் வாழும் அனைவரும் தமிழ் உணர்வுடன் வாழ்தல் வேண்டும். பிற மாநிலங்களுக்குச் செல்லும் போது அம்மொழிக்கு அஞ்சி வாழ்வது போல் தமிழ் மொழியினைக் கற்றுக்கொள்ள ஆவன செய்ய வேண்டும். தமிழருக்குள்ளேயே ஆரியர்கள், திராவிடர்கள் என்னும் வேறுபாட்டுடன் தமிழ் இலக்கியங்களைக் குறை கூறுவது தமிழ் வளர்ச்சிக்கு ஏற்றதாகாது. தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் மொழி உணர்வுடன் நோக்க வேண்டுமேயன்றி இன உணர்வுடன் நோக்குதல் கூடாது.  செம்மொழியான தமிழ் இன்று எல்லை பரப்பில் குறுகி விட்டதற்குக் காரணம் தமிழரிடையே காணும் வேறுபாடே ஆகும்.

        குடிகளைத் தழுவிய கோவில்கள், கோவில்களைத் தழுவிய குடிகள் என்னும் நிலையிலேயே கோவில்கள் அமைந்ததனை குன்றக்குடி அடிகளார் தெளிவுறுத்துவார். ஆனால் அக்கோவில்களையே நாத்திகர்கள் தம்மால் இயன்ற அளவிற்குக் குறை  கூறி தமிழரின் பெருமையினை தம் இனத்தாரே அறியா வகையில் பணியாற்றி வருவது வருந்தத் தக்கது. அவ்வாறே வடமொழிப்பற்றுள்ள ஆத்திகர்கள் தமிழ் மொழியினை இயன்ற அளவிற்கு மறைக்க முயற்சி செய்துள்ளனர். “ஆலயங்களைக் கோயில்கள் என அழைக்கும் வழக்கங்கூட மாறிஸ்தளிஎன்கிற வட சொல்லின் திரிபாகியதளிஎன்றும் இராசஇராசனுக்குப் பின்ஈசுவரம்என்றும் அழைக்கப்படலாயினஎன தொல்லியல் ஆய்வாளர் டாக்டர் சுரேஷ் பிள்ளை (தமிழியல் ஆய்வுகள் ப. 176) குறிப்பிடுவது இங்கு எண்ணத்தக்கது.

ஆங்கிலத் தாக்கம்

        கட்டை மரம் என்பதைச் சொல்ல முடியாமல் கட்ட மரான் என ஆங்கிலேயன் கூறிய வழக்கு ஆங்கில மொழியாகவே நின்று விட்டது. அதைப் போல நம் தமிழ் மொழியில் பிற மொழிச் சொற்கள் வழக்கில் வருமானால் அதனை தமிழாக்கிக்கொள்வதே மொழி வளர்ச்சிக்குரியதாக  அமையும். அவ்வாறின்றி தமிழில் சொல் இருக்க ஆங்கிலச் சொற்களை ஏற்பதோ அச்சொல்லுக்கேற்றவாறு மொழிபெயர்ப்பதோ மொழிச் சிதைவிற்கே வழி வகுக்கும். அருவி என்னும் அழகான சொல்லிருக்க நீர் வீழ்ச்சி (வாட்ட ஃபால்ஸ்) என மொழிப்பெயர்த்திருப்பது இங்கு எண்ணத்தக்கது.

        ஆங்கிலம் பிற மொழிகளின் கூட்டு மொழியாகவே அமைந்துள்ளது. எனினும் அது வணிக மொழியாக உலகளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டதற்குக் காரணம் அம்மொழி பிறமொழிச் சொற்களை ஏற்றுக்கொள்ளும் எளிமையினாலேயே எனத் தெளியலாம்.  கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி தன்னுடைய எழுத்துக்களிலேயே எம்மொழிச் சொற்களையும் தன்வயப்படுத்திக் கொள்ளும் வகையில் அம்மொழியாளர்கள் கூடுதல் எழுத்துக்களைச் சேர்க்காது மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகின்றனர். ஆனால் தமிழ் மொழியில் ஷ, ஹ ஸ க்ஷ் ஸ்ரீ என்னும் வடமொழி எழுத்துக்கள் தமிழ் மொழியில் ஏற்கப்பட்டுள்ளது. “பிற மொழிச் சொற்களை ஆங்கிலம் ஏற்றுக் கொள்கிறது என்றால், அது தன் 26 எழுத்துக்களை நீட்டித்தான் ஏற்றுக் கொள்கின்றது. இதுவே, ஆங்கிலத்தின் வெற்றிக்குப் பின்னால் மறைந்திருக்கும் ரகசியம். ஆங்கிலேயர் இருநூறு ஆண்டுகள் ஆண்டிருந்தும் கூடத் தமிழ் மொழியின் பெயரையோ பழனி என்ற ஊரின் பெயரையோ சாட்சி நலத்தை முன்னிட்டு இல்லாவிட்டாலும் ஆட்சி நலத்தை முன்னிட்டாவது எழுதுவதற்கு இருபத்து ஏழாவது எழுத்தாககரத்தையோ அல்லது திருவரங்கம், திருவில்லிபுத்தூர் என்று எழுதுவதற்காக இருபத்து எட்டாவது எழுத்தாக ஸ்ரீ யையோ சுவீகாரம் செய்யவில்லை (செ.வை. சண்முகம், இக்கால எழுத்துத் தமிழ் ப. 84) என்னும் மகாதேவனின் கூற்று இங்கு எண்ணத்தக்கது.

சீர்ப்படுத்த வேண்டிய கல்வி நிலைகள்

        கல்வி நிலையங்களில் தாய்மொழியில் கற்கும் நிலை மாறிப்போனதனாலேயே தமிழ் மொழிக்குரிய செல்வாக்கு நாளடைவில் குறையத் தொடங்கிற்று. சென்ற தலைமுறையில் உயர்ந்து விளங்கியவர்கள்  தமிழ் மொழியில் படித்தவர்களே. அவர்கள் ஆங்கில மொழி பேசுவதில் மட்டுமின்றி நிர்வாகத் திறனிலும் சிறந்து விளங்கினர். ஒன்பதாம் வகுப்பு வரை ஆங்கில எழுத்துக்களை அறியாதவர்களே இந்நாளில் ஆங்கிலத்தை மொழிபெயர்க்கும் அறிஞர்களாகவும் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் அறிஞர்களாகவும் திகழ்வதனையும் காணலாம். ஆனால் இன்று ஆங்கில மொழி பயிற்று மொழியான பின் பிழையில்லாமல் கடிதம் எழுத எந்த மொழியும் துணை நிற்பதில்லை என்பதனையும் காணமுடிகின்றது.

        தமிழ்மொழியின் பெருமையைக் காக்கவேண்டுமாயின் தமிழ் மொழியைப் பயிற்றும் மொழியாக்க வேண்டும். சீனம், ஃப்ரான்ஸ் போன்ற நாடுகளில் உயர் கல்வியை தாய்மொழியில் படிப்பது போன்றே தமிழகத்திலும் தமிழ்மொழியில் பயில ஆவண செய்ய வேண்டும். பள்ளிக் கல்வி தாய்மொழி வழியும் மேல்நிலை கல்வி ஆங்கில மொழி வழியிலும் படித்தால் தற்கொலைகள் தான் பெருகும் எனபதனை ஊடகங்கள் அன்றாடம் மெய்ப்பித்து வருகின்றன.

        உயிர் போன்ற தாய்மொழியையும் மதிக்காமல் மனித உயிர்களையும் மதிக்காமல் இன்றைய கல்வி ஆங்கில மொழியிலேயே கற்பிக்கப்படுகிறது. வெள்ளையர்களுக்குப் பணி செய்த அடிமை இந்தியர்களுக்கு மாறாக வெள்ளை மொழிக்கு அடிமைப்பட்டுக் கிடக்கும் இந்தியர்களாக இன்றைய  மக்கள் வாழ்வதனை உணர்ந்தாலொழிய இத்தகைய அடிமை மயக்கத்திலிருந்து மீள இயலாது.

        ஆங்கிலம் என்பது ஒரு மொழி. ஒரு மொழியைப் படித்தல் என்பது அறிவு வளர்வதற்குரிய வழி மட்டுமே. அதனையே பயிற்றுமொழியாகக் கொள்வதால் மருத்துவமும் பொறியியலும் படிக்க முடியாமல் தடுமாறும் நிலை உள்ளது. இந்நிலை மாறினால் பல கலைச் சொற்கள் உருவாகும். மேலும் சிந்தனைத்திறனுடைய மருத்துவர்களையும் பொறியாளர்களையும் உருவாக்க முடியும். இம்முயற்சி தொடருமானால் தமிழ் மொழி வளர்வதோடு தமிழரும் வளர்வார்கள் எனத் தெளியலாம்.

இன்றைய தேவை

        காலத்திற்கேற்ப தன்னைத் தகவமைத்துக் கொள்ளும்  உயிரினமே வாழும் என்பது பொதுத்தேற்றம். இக்கூற்று உயிரினங்களுக்கு மட்டுமின்றி மொழிக்கும் ஏற்றதாக அமைந்துள்ளது. இக்காலக் கல்வி கலைகளையோ பண்பாட்டினையோ கற்றுக் கொடுக்கும் வகையில் திட்டமிடப்படவில்லை. பொருளீட்டுவதையே மையமாகக் கொண்டே கல்வி கற்பிக்கப்படுகிறது. எனவே மொழி வளர்ச்சிக்கு செய்ய வேண்டிய முதல் பணி அக்கல்விக்குரிய மொழியாகத் தமிழ் மொழியினை ஆக்குதல் வேண்டும். கணினி இன்று பரவலாகி விட்டதனால் கணினி மொழியாகத் தமிழ் ஊட்டப்பட வேண்டும். தமிழ்மொழி எக்காலத்திலும் புத்தாக்கம் பெறக்கூடிய மொழிவளம் உடையது.  ஆனால் அதற்கான முயற்சியினை எடுக்கத் தயங்குவதனாலேயே ஆங்கிலத்தின் ஆதிக்கம் நாள்தோறும் பெருகிவருகிறது.

        மருத்துவம் , பொறியியல், நிர்வாகவியல் போன்ற துறைகளிலும் தமிழ்வழிக்கல்வி கற்க வழிவகை செய்ய வேண்டும். இது எவ்வாறு இயலும் எனத் தமிழர்களே தமிழுக்கு எதிராக நிற்கக் கூடும். அத்தகையோரின் ஐயத்தை நீக்கும் வகையில் பின் வரும் கூற்று அமைகிறது. ”ஆங்கில மருத்துவத்தைத் தமிழில் வடித்துத் தமிழர்களுக்குப் பாடம் புகட்டித் தமிழர் நலனுக்காகப் பயன்பட வேண்டுமென்று முதன் முதலில் விதை விதைத்து அவர் காலத்திலேயே பழத்தையும் உண்டவர் யாழ்ப்பாணத்தின் வடபால் பருத்தித் துறைக்கு 1847 ஆம் ஆண்டு வந்த அமெரிக்க கிறித்துவப் பாதிரியான மருத்துவர் சாமுவேல் ஃபிஷ் கிறீன் ஆவார். அவர் ஏறக்குறைய 4650 பக்கங்கள் தமிழில் ஆங்கில மருத்துவத்தைத் தன் மாணவர் உதவியுடன் மொழி பெயர்த்துள்ளார்.” (தமிழியல் ஆய்வுகள் ப.204 மணிவாசகர் பதிப்பகம்) என மருத்துவர் முனைவர் சு. நரேந்திரன் குறிப்பிட்டுள்ளதனையும்டாக்டர் கிறீனின் மாணவர்கள் மேல்நாட்டு மருத்துவக் கல்வியைத் தமிழில் படித்தால் பயனுண்டா எனச் சற்று சலனமடைந்தனர். “எனது மாணவர்கள் ஆங்கிலத்திலிருந்து மாறி தமிழில் கற்பது பற்றிச் சலனமடைந்துள்ளனர். அரசு சேவையில் ஈடுபட்டுச் சம்பளம் பெறும் வாய்ப்புக் குன்றுமென அவர்கள் எண்ணுகிறார்கள். உண்மை, ஆனால் வைத்தியர்களை அவரவர் கிராமத்தில் நிலைபெறச் செய்தலே எதிர்கால நோக்கமாகும். எனவே பத்து நாட்கள் ஓய்வு கொடுத்து வைத்தியக் கல்வியைத்தொடர்வார்களா அன்றேல் வேறு தொழிலை நாடுவார்களா எனத் தீர்மானிக்க அவர்களுக்கு அவகாசம் கொடுத்துள்ளேன் எனக் கூறியுள்ளார்.” (தமிழியல் ஆய்வுகள் ப.220) என நரேந்திரன் அவர்களே எடுத்துக்காட்டியுள்ளதனையும் இங்கு எண்ண வேண்டியுள்ளது. மருத்துவம் படித்தவர்களே தமிழ் மொழியின் ஆக்கத்திற்கு அமெரிக்க மருத்துவரின் தொண்டினைக் குறிப்பிட்டுக்காட்டியுள்ளார்கள். எனவே இனியும் தமிழ்மொழிக் கல்விக்குரிய செயற்பாடுகளில் காலம் தாழ்த்துதல் நன்றாகா. சீனம், ஃப்ரான்ஸ், ஜப்பான் போன்ற நாடுகளைக் கண்டு தமிழ்வழிக்கல்விக்கு எதிரானவர்கள் தங்கள் ஐயத்தைப்போக்கிக் கொண்டு அதற்கான முயற்சியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வாராயின் வருங்கால மாணாக்கர் சமுதாயம் எந்திர மனிதர்களாக இல்லாமல் சிந்தனையாளர்களாக, கண்டுபிடிப்பாளர்களாகத் திகழ்வர் எனத் தெளியலாம்.

பிற மொழித்தாக்கம்

        நீரினைக் குறிக்கும் வெள்ளம் என்னும் தமிழ்ச் சொல் மலையாள மொழியில் நிலைபெற்றது. தமிழர் தண்ணீர் கொடுங்கள் என்னும் வழக்கத்தினையே மறந்து விட்டனர். வாட்டர் என்னும் சொல்லே பழகிவிட்டது. மேற்கு என்னும் சொல் படுஞாயிறு என மலையாளத்தில் குறிப்பிடப்படுகிறது. எற்பாடு என்பதன் எளிய வடிவம் படுஞாயிறு என்பதனை உணரலாம். ஞாயிறு மறையும் இடம் மேற்காதலால் அப்பெயர் தனித்தமிழ் பெயராகவே குறிப்பிடப்படுவதனை எண்ணி மகிழலாம்.

           சாபம் என்னும் சொல் வெஞ்சினம் என்னும் சொல்லையும் சபதம் என்னும் சொல் வஞ்சினம் என்னும் சொல்லையும் விழுங்கி விட்டதனைக் காணலாம். மன்னிப்பு என்னும் சொல் பொறுத்தருள்க என்னும் சொல்லைக் காணாமல் செய்துவிட்டது.  கள் என்னும் சொல் இருளைக் குறிப்பது. அவ் வேர்ச்சொல்லிலிருந்து கள்வன் (இருளில் தொழில் செய்பவன்), கள் (போதை) என்னும் சொற்கள் உருவாக்கப்பட்டதனையும் உண்மை (உள்ளத்தின் அறம்) மெய்ம்மை (உடலின் அறம்) வாய்மை (சொல்லின் அறம்) என ஒரே பொருளை உணர்த்தும் நுட்பங்களை வகுத்துள்ள பெருமையினையும் உணர்ந்தால் தமிழ்மொழியின் பெருமையினை உணரலாம். பலூன் என்னும் சொல் பிற நாட்டு வருகை என்பதனால் அச்சொல்லையே பயன்படுத்தினர். ஊதி (ஊதுவதால் பெருமை அடைவது) அப்பொருளை பெரிதாக்குவதால் ஊதி எனவே வழங்கலாம். எவ்வாறெல்லாம் கலைச் சொற்களை உருவாக்கிக் கொள்ள இயலுமோ அவ்வாறெல்லாம் சொற்களை உருவாக்குதல் வேண்டும். இதற்கான முயற்சியில் பல்கலைக் கழகங்களோ நிறுவனங்களோ தான் முழுமையாகச் செய்தல் இயலும். எனவே அதற்கான முயற்சியில் ஈடுபடுதல் வேண்டும். 

        பெருவுடையார் கோயிலை ப்ரகதீஸ்வரர் கோயில் என மாற்றியதன் விளைவாக ப்ரகதீஷ்வர் என்னும் பெயரைக் குழந்தைகளுக்கு இட்டு வேரிலேயே தமிழ்மொழியினை சிதைத்துவிடுவதற்கான வழிவகை செய்யப்பட்டுவிட்டது. இவ்வாறு தமிழ்ப்பெயர்கள் காணாமல் போய்விட்டதனை இன்றைய குழந்தைகளின் பெயர்களை எண்ணிப்பார்ப்பதன் வழி அறியலாம். தாய்மொழியில் பெயர் வைப்பதை விரும்பாத ஒரே இனத்தார் தமிழராகவே இருக்கமுடியும். தமிழ்ப் பண்பாட்டினைக் காத்து குழந்தைகளை நன்னெறியுடன் வளர்க்க விரும்புவோர் தமிழ்ப் பெயர்களைச் சூட்ட வலியுறுத்த வேண்டும். தமிழ்ப்பெயர் சூட்டும் திரைப்படங்களுக்கு வரிவிலக்கு அளிப்பதுபோல் தமிழ்ப் பெயருடைய குழந்தைகளுக்கு அரசு சில சலுகைகளை அளிக்க வேண்டிய சூழல் ஏற்படுமாயின் அரசு அதற்கான நடவடிக்கையில் ஈடுபடுதல் நன்று. அச் செயல் மொழிப் பாதுகாப்பிற்கான செயலாகவே அமையும் எனத் தெளியலாம்.

போராட்டமே தீர்வு

        உலக மொழிக்குரிய தரத்துடன் இலக்கியங்களைப் படைத்த தமிழ்மொழி எவ்வாறு ஒரு இனத்திற்கு உரியதாகவும் ஒரு குறுகிய நிலத்திற்கு உரியதாகவும் குறுக்கப்பட்டது என ஆய்ந்தால் அரசன் முதல் ஆண்டி வரை பலரும் இச் செயலுக்குத் துணைநின்றுள்ளதனைக் காணமுடிகிறது. தமிழ்மொழி தங்களை வளர்த்த மொழி என்பதனை அறியாமலே அம்மொழிக்குக் கேடு விளைவித்ததனாலேயே இன்று அந்நிய மொழிக்கு அடிமைப்பட்டுக் கிடக்கும் நிலை உருவாகிவிட்டதனைக் காணமுடிகிறது. சொத்துக்காக சகோதரர்களுக்கிடையே நடைபெறும் கருத்து வேறுபாட்டினைக் களைவதாகக்கூறி  வந்த அந்நியன் இருவரையும் கொன்று தானே அச்சொத்தை அனுபவித்தல் போல் இன்று அந்நிய மொழி வடமொழியையும் தமிழ் மொழியையும் பின்னுக்குத் தள்ளிவிட்டது. தமிழார்வலர் இடையே வடமொழியின் ஆதிக்கத் தன்மையினை உணர்த்தியும் வடமொழிப் பற்றாளர் இடையே தமிழ் மொழியின் பெருமைகளைக் குறைக்கும் வகையில் வடமொழி இலக்கியங்களை இயற்றச் செய்தும் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாட்டை வளர்த்து மகிழ்ந்தனர் அந்நியர்.

        வடமொழியை உயர்த்த எண்ணுவோர் தமிழ் மொழியைத் தாழ்த்திக் கூறுவதும் தமிழ் மொழியை உயர்த்துவோர் தமிழ் மொழியைத் தாழ்த்தியது இரு மொழியின் பெருமையினையும் குன்றச் செய்ததை உணரவேண்டும்.  இலக்கியம் இலக்கிய நோக்கிலேயே காணப்படும் பக்குவம் அனைவரிடமும் பரவ வேண்டும். மொழிப் போர் தொடர்கதையானதால் தமிழ்ச் சிந்தனைகளை வடமொழியில் எழுதிய திறமும் வடமொழி இலக்கியங்களை தமிழாக்கிய சிறப்பும் நலிந்து பகைமை உணர்வு பெருகிற்று. இதனால் ஒருவர் மற்றொருவரை குற்றம் கூறுவதிலேயே மகிழ்ந்திருந்தனர். இதனால் தமிழில் சிறந்த நூல்கள் அனல் வாதம் புனல் வாதம் என்னும் பெயரில் அழிக்கப்பட்டன. இதனால் தமிழரின் பல் துறை பெருமையினை அறிய இயலாமலே போகும் சூழல் நிலைபெற்றுவிட்டது. தமிழைக் கோவில்களில் இருந்து துரத்தி விட்ட வடமொழி மக்களிடமிருந்து விலகி நின்றதனால் நாட்டிலிருந்து துரத்தப்பட்டது. வடமொழியின் ஆதிக்க உணர்வால் கோவில்களில் மட்டும் வாழும் மொழியாக நிலைபெற்றது. எத்தகைய சூழலையும் எதிர்கொள்ளும் எளிமையான தமிழ்மொழி மீண்டும் கோவில்களுக்குள் குடியேறியது. தமிழர்கள் கட்டிய கோவிலில் தமிழ் இல்லாத நிலைகண்டு பொங்கிய தமிழரின் போராட்டத்தால் தமிழின்நிலை பாதுகாக்கப்பட்டது.அவ்வாறே ஒவ்வொரு துறையிலும் தமிழுக்குரிய நிலையினைப் பாதுகாக்கவேண்டியது தமிழர் ஒவ்வொருவரின் கடமை என்பதனை உணர்தல் வேண்டும்.

நிறைவாக
        தமிழ் நாட்டில் தமிழ் மொழி பேசுவதற்கு தண்டம் விதிக்கும் பள்ளிக்கூடங்களையும் கல்லூரிகளையும் அவர்கள் பரிந்துரைக்கும் மொழி வழங்கும் நாட்டிற்கே சென்று கல்வி நிலையங்களை நடத்த முறையாக அறிவுறுத்தினால் தமிழ் நாட்டின் பெருமையும் தமிழ்மொழியின் பெருமையும் பாதுகாக்கப்படும்.

        கல்வி நிறுவனங்கள் மட்டுமின்றி பிற நிறுவனங்களும் தமிழ் மொழிக்குரிய முக்கியத்துவத்தினை அளிக்க வழிவகை செய்தல் வேண்டும். ஊடகத்தார் உடலுக்கேற்ற ஆடை என்றில்லாமல் ஆடைக்கேற்ற உடலை மாற்றி அமைக்கும் வகையில் ஊடகத்துக்கேற்றவாறு மொழியைச் சிதைத்து வருவதனைத் தடைசெய்தல் வேண்டும்.

        ஆங்கிலம் உலகம் முழுக்க ஆண்டாளும் தனது மொழியில் உள்ள எழுத்துக்களைக் காத்துக் கொண்டது. மேலும் அவ்வெழுத்துக்களுக்குள்ளேயே பிற மொழிச் சொற்களை ஏற்றுக்கொண்ட எளிமையாலேயே உலக மொழியாக சிறப்பதனை உணரவேண்டும். தமிழ்மொழியையும் அவ்வாறே காக்க இனியேனும் ஆவன செய்தல் வேண்டும் எனத் தெளியமுடிகிறது.

        மதம் இன வேறுபாடின்றி மொழி வளர்ச்சிக்கான பணியில் ஒவ்வொருவரும் ஈடுபாட்டுடன் செயல்படுவாராயின் தமிழ் மொழி உலகமொழிகளில் முன்னிற்கும் எனத் தெளியமுடிகிறது.

        பிற மொழி வேர்ச்சொற்களை அடிப்படையாகக் கொண்ட மருத்துவத் துறையிலேயே தமிழ் வழி கல்விக்கான முயற்சி உள்ளதெனில் பிற துறைகளில் அம்முயற்சியை மேற்கொள்ளுதல் எளிதே என எண்ணத்தோன்றுகிறது.

        நாத்திகம் ஆத்திகம் என்னும் வேறுபாட்டின் வழி மொழிச் செல்வாக்கினை உணர்த்தும் இலக்கியங்களைக் குறை கூறுவதனைத் தவிர்த்து மொழி உணர்வுடன் வாழ்ந்தால் மொழி வளத்தினை அனைவரும்  அறியும் வகையில் செய்தல் இயலும் என உணரமுடிகிறது.

        தமிழ்மொழி வளர்ச்சிக்குரிய திட்டங்களை முறையாகத் திட்டமிட்டால் தமிழ்மொழி செழிப்பதோடு தமிழன் வாழ்வும் செழிக்கும் என்பதில் ஐயமில்லை.

*************************

மொழிப் பயன்பாட்டில் கவனம் - Tamil Language skills


மொழிப் பயன்பாட்டில் கவனம்

முனைவர் ம.ஏ. கிருட்டினகுமார், உலாப்பேசி :9940684775

மொழி ஓர் இனத்தின் விழி.அவ்விழிகுருடாயினும் கேடில்லை என எண்ணும் நிலையாலேயே தமிழ்மொழி அனைத்து நிலைகளிலும் பின்தங்கியுள்ளதனைக் காணமுடிகிறது.கல்விச்சாலைகளே மொழியறிவை ஊட்டுவதில் முதலிடம் பெறுகின்றன.அத்தகைய பெருமையுடைய கல்வி நிறுவனங்களிலேயே தமிழுக்குரிய இடம் மறுக்கப்பட்டுவிட்டது.தமிழர்க்கு விளைந்த இக்கொடுமைபோல் உலகில் வேறு எவர்க்கும் தாய்மொழி மறுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.தமிழ்மொழிக்கு எதிராகச் செயல்படுவோரில் சிலர் தமிழராகவே இருப்பது அதனினும் கொடுமை.இந்நிலை மாறவேண்டுமானால் மொழிப் பயன்பாட்டில் கவனம் செலுத்துவது அவசியமாகின்றது என எண்ணியதன் விளைவாகவே இக்கட்டுரை எழுகிறது.

மரபை மறத்தலே கேடு

எழுத்துக்களைக் கற்றுணர்ந்து எவ்வகைப் பிழையுமின்றி எழுதும் முயற்சியால் தமிழ் எழுத்துக்கள் நிலைபெற்றுவிட்டன.எழுத்துக்கள் மரபாகிவிட்டது போல் ஒவ்வொரு நிலையிலும் தமிழர்க்குரிய மரபைக் காத்துநின்றால் மட்டுமே மொழிக்குரிய சிறப்பினைக் காத்தல் இயலும். அந்நிய நாகரிகத்தால் தமிழர்ப் பண்பு மாறிவிடுமாயின் அப்பண்பாட்டிற்குரிய சொல்லும் வழக்கிழந்து பின்னாளில் தமிழ்ச்சொல்லா என்னும் ஐயம் ஏற்படும் நிலை உண்டாகும். இந்நிலைக்கு எடுத்துக்காட்டாக இன்று பல சொற்களை அடுக்க இயலும்.

மொழி என்பது செய்தி பரிமாற்றத்திற்குரிய கருவியே. எனவே அம்மொழிக்குரிய இலக்கணம் அனைத்தையும் அறிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை மொழியால் இருவர்க்கிடையே செய்திப் பரிமாற்றம் நிகழ்ந்தால் போதுமானது  எனக்கூறும் போக்கினையும் காணமுடிகிறது. இக்கூற்று இலக்கண வளமும் இலக்கிய வளமும் இல்லாத மொழியார்க்கு உரியது.இதனைத் தமிழுக்கு ஏற்புடையதாக ஆக்கிக்கொள்ள விழைதல் தமிழினத்துக்குச் செய்யும் கேடேயாகுமன்றி வேறில்லை.அவ்வாறு மொழியில் கவனம் செலுத்த மறந்ததனாலேயே இன்றைய குழந்தைகளுக்கு அந்நிய மொழிகளைக் காட்டிலும் தாய்மொழி கடுமையானதாகிவிட்டது.

நன்கு வளர்ந்த பயிர் நிலங்களுக்கே வேலி தேவை.தரிசு நிலங்களுக்கு வேலி தேவையில்லை.எனவே தரிசு நிலத்தார் வேலி எவர்க்கும் தேவை இல்லை என்னும் விதியினை பொதுமையாக்கினர். பயிருடையோரிடமிருந்து பயிரைக் களவாடும் முயற்சியாகவும் நிலமுடையோர் செழிப்பதனைத் தடுக்கும் முயற்சியாகவும் மட்டுமே இந்நிலை  அமையும் என்பதனை உணர்வுடையோர் உணர்வர். தமிழ் இலக்கிய நிலத்தினை இலக்கண வேலியிட்டுக் காத்தாலன்றி தமிழ் மொழியைக் காத்தல் இயலாது என்பதனை உணர்ந்து இலக்கணத்தையும் இலக்கியத்தையும் பயிற்றுவிக்க வேண்டியது அவசியமாகின்றது.

        ’மரபு நிலை திரியின் பிறிதி பிறிதாகும்” – (தொல்.நூ. 1591)
என்னும் நூற்பாவின் வழி மரபின் அவசியத்தினை உணர்த்துகிறார் தொல்காப்பியர்.எவ் இடங்களில் எல்லாம் மரபு ஒழிந்ததோ அங்கெல்லாம் தமிழர்க்கான அடையாளங்களும் மறைந்து வருவதனைக் காணமுடிகிறது.தமிழரின் உணவு முறைகளில் ஏற்பட்ட மாற்றத்தினாலேயே தினை, வரகு, சாமை என்பன போன்ற உணவு முறைகள் மறைந்து இன்று அச்சொற்களே அருகிவிட்ட நிலையினையும் காணமுடிகிறது. வீடு கட்டும் நிலையில் மாற்றம் ஏற்பட்டதால் திண்ணை என்னும் சொல்லே  மறைந்துவிட்டது. இந்நிலைக்குக் காரணம் திண்ணையுடைய வீடுகளைக் கட்டாததனாலேயே என்பதனையும் உணரலாம். இவ்வாறு தமிழருடைய வாழ்க்கை முறையில் இடையூறாகப் புகுந்த மாற்றங்கள் அனைத்தும் தமிழருடைய மரபினை மறைத்து தமிழ்மொழியின் வளத்தைக் குன்றச்செய்வதனை உணர்வுடையோர் உணர்வர். எனவே மொழியைக் காக்க வேண்டுமாயின் மரபைக் காப்பதில் கவனம் வேண்டும் எனத் தெளியமுடிகிறது.

திரை செய்யும் குறை

        தமிழ் மொழி வளர்ச்சிக்குப் பெருந்துணை செய்ய வேண்டிய திரைப்படங்கள் இன்று தமிழ் மொழியின் வளத்தைச் சிதைத்து வருவதனைக் காணமுடிகிறது.அரை நூற்றாண்டுக்கு முன் திரையிடப்பட்ட திரைப்படங்கள் தமிழைக் கற்றுக்கொடுத்தன.படிக்காதவர்கள் மிகுதியாக வாழ்ந்த அக்காலத்திலேயே திரையின் வழி தமிழ்மொழியை வளர்த்த கலைஞர்கள் உண்டு.இன்றைய திரைத்துறையினர் பிறமொழிக் கலப்போடு உடலுக்கும் உயிருக்கும் கேடு விளைவிக்கும் மரபு நிலை மாற்றங்களையும் புகுத்துவதையே மரபாகக் கொண்டு செயல்படுகின்றனர். இத்தகைய குறைபாடுகள் சமூகத்தைச் சீர்கெடுக்கும் என்பதனையும் அச்சமூகத்திலேயே திரைத்துறையினரின் தலைமுறைகளும் வாழ்கின்றனர் என்பதனையும் திரைத்துறையினர் எண்ண மறந்துவிடுகின்றனர். இனி வரும் காலங்களிலேனும் தமிழ் மொழிக்கும் மரபுக்கும் கேடு நிகழாது திரைத்துறைப் பயணிக்க வேண்டும் என்பதில் மிகுந்த கவனம் செலுத்தினால் மட்டுமே மொழிப்பயன்பாடு சீராகும் என்பதனை உணரமுடிகிறது.

        இசை திரிந்து இசைப்பினும் இயையுமன் பொருளே
        அசை திரிந்து இயலா என்மனார் புலவர்   – (தொல்.நூ. 1141)

என்னும் நூற்பா இசை எவ்வாறு அமையினும் பொருள் திரியாது இலக்கியம் படைத்தல் வேண்டும் என்னும்கொள்கையுடையவர்களாக தமிழர்கள் வாழ்ந்திருந்ததனை புலவர்கள் கூற்றின் வழி நிறுவுகிறார் தொல்காப்பியர். இதன் வழி இன்றைய திரைத்துறையினர் மொழிப்பயன்பாட்டில் கவனம்வைத்து பொருளுடைய உரையாடல்களையும் பாடல்களையும் இயற்றி மொழிக்கும் இனத்துக்கும் பெருமை சேர்ப்பாராயின் மொழி வளம் பாதுகாக்கப்படும் எனத் தெளியலாம்.

மொழி வளம்

        தமிழ்மொழி செயற்கை மொழியன்று ; இயற்கை மொழி. வாயைத் திறத்தலால் ஆ – காரம் பிறப்பதன் வழி உலக மக்கள் அனைவர்க்கும் உரிய இயற்கை மொழியாகத் தமிழ் திகழ்வதனை எண்ணி மகிழலாம்.மொழியின் பழமையே மொழி வளத்திற்குச் சான்றாகும்.ஏனெனில் காலத்தின் வளர்ச்சிக்கேற்ப மொழியும் வளர்ந்துகொண்டே செல்லும் என்பது உலகியல் வழக்கு.அவ்வாறு தமிழ்மொழியில் சொல் வளம் மிகுந்திருந்ததனை தொல்காப்பியர் பல நூற்பாக்களில் எடுத்துக்காட்டுகிறார்.  மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உயிரினங்களை வரையறுத்த பெருமை தமிழர்க்கு இருந்ததனை

மாற்றரும் சிறப்பின் மரபியல் கிளப்பின்
பார்ப்பும், பறழும், குட்டியும், குறளும்
கன்றும், பிள்ளையும், மகவும் மறியும் என்று
ஒன்பதும் குழவியோடு இளமைப் பெயரே – (தொல்.நூ. 1500)

என்னும் நூற்பா தெளிவுற எடுத்துரைக்கிறது.அனைத்து உயிரினங்களின் இளமைப் பெயர்களையும் உள்ளடக்கியுள்ள தமிழரின் பெருமையினை இந்நூற்பாவின் வழி அறிந்துகொள்ளமுடிகிறது.இதன்வழி மொழிப்பயன்பாட்டில் சிறந்து விளங்கிய தமிழரின் திறத்தையும் இங்கு எண்ணிமகிழலாம்.அத்தகைய வளமான சொற்களை மீட்டு மீண்டும் வழக்கில் பயன்படுத்தினால் தமிழரின் மொழிப்பயன்பாடு மேலும் சிறந்து விளங்கும் எனத் தெளியமுடிகிறது..

இயற் பொருளும் குறிப்புப் பொருளும்
சொல்லால் பொருளை அறிதலும் பொருளால் சொல்லை அறிதலும் இயற்கை நிகழ்வு. ஆனால் ஒரே சொல்லானது தெரிநிலையால் ஒரு பொருளினையும் குறிப்பால் வேறொரு பொருளையும் குறிப்பிடும் வகையில் தமிழ் இலக்கியங்களில் இறைச்சி, உள்ளுறை எனப் பல நுட்பங்கள் கையாளப்பட்டுள்ளதனையும் காணமுடிகிறது.

தெரிபுவேறு நிலையலும் குறிப்பின் தோன்றலும்
இரு பாற்றென்ப பொருண்மை நிலையே  – (தொல்.நூ. 642)

என்னும் நூற்பா ஒரு சொல் இயல்பிற்றாய் மொழிதலின் போது ஒரு பொருளையும் சூழலுக்கேற்றார் போல் மொழிதலின் போது வேறொரு பொருளையும் குறிப்பிடுவதாகக் காட்டுகிறது. ’நீ நல்லா இரு’ , நீ மட்டும் முன்னேறினால் போதும்’ என்னும் இரு சொற்றொடர்களும் வாழ்த்துப் பொருளில் மட்டுமல்லாது இகழ்ச்சிப் பொருளிலும் அமைகிறது. இத்தகைய சொற்கள் இன்றைய நடைமுறை வழக்கிலேயேநிலவிவருகின்றன.அத்தகைய சொற்களை ஆய்ந்து தமிழ் அகராதியில் மதிப்பிற்கேற்ற வகையில் இணைப்பதும் தமிழ்மொழிப் பயன்பாட்டிற்குப் பெரிதும் துணை நிற்கும் எனத் தெளியலாம்.

உயர்திணைப் பயன்பாடு

தமிழர்கள் மட்டுமே உயர்திணைக்கு எதிராகத் தாழ்திணை என வரையறுக்காது அஃறிணை எனப் பெயரிட்டனர்.அவ்வாறு திணை, பால், எண், இடம் என ஒவ்வொன்றிலும் ஓர் ஒழுங்கு முறையினைப் பின்பற்றிய இனம் தமிழினமே. இதற்குச் சான்றாவன எழுத்து ஆவணங்களான  இலக்கணங்களே.ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மொழியை வரையறுத்த இனம் தமிழினம் என்பதற்குத் தொல்காப்பியம் அருமையான சான்றாகத் திகழ்வதனைக் காணமுடிகிறது.

அவ்வழி ,
அவன் இவன் உவன்என வரூஉம் பெயரும்
அவள் இவள் உவள் என வரூஉம் பெயரும்
அவர் இவர் உவர் என வரூஉம் பெயரும்  – (தொல்.நூ. 647)

என்னும் நூற்பா உகரச் சுட்டு வழக்கில் இருந்ததனை உணர்த்துகிறாது.இன்று ‘உ’ கரச் சுட்டு வழக்கிழந்துவிட்டது.ஆயினும் கிராமங்களில் உதோ வருகிறார் என இடைப்பட்ட இடத்தில் வருவோரைக் குறிப்பிடும் நிலை இருப்பதனைக் காணமுடிகிறது.கற்றோர்க்குரிய மொழி வளம் கல்லாதோரிடையே புதைந்திருப்பதனையும் அதனை மீட்கும் முயற்சியில் மொழியறிஞர்கள் ஈடுபட வேண்டியதன் அவசியத்தினையும் இதன் வழி உணரமுடிகிறது.

ஊடகங்களில் தமிழ்

        நாளிதழ், வானொலி, தொலைக்காட்சி, கணினி, உலாப்பேசி என நாளுக்கு நாள் ஊடகங்கள் வளர்ந்து வருகின்றன.எனவே மொழியால் இயங்கும் இவ் ஊடகங்களுக்கு மொழியை வளர்ப்பதில் பெரும்பங்குண்டு எனத் தெளியலாம். ஆனால் இவ் ஊடகங்களில் தரமானதாகக் கருதப்படும் செய்திகளிலேயே  செய்திகள் வாசிப்பது, உயர்மட்டக் குழு, பேச்சு வார்த்தை, என்னும் சொற்றொடர்கள் தவறாக வழக்கத்தில் இடம்பெற்று வருகின்றன. இவை போன்ற தவறான சொற்களின் பயன்பாட்டால் இளைய தலைமுறையினர் தவறாகவே மொழியைக் கற்றுக்கொள்கின்றனர்.எனவே ஊடகங்களின் மொழிப்பயன்பாட்டிலும் தமிழறிஞர்கள் கவனம் கொண்டு திருத்த வேண்டியதும் அவசியமாகின்றது.

பிழையின்றி எழுதல்

        மொழியைப் பிழையின்றி எழுதவும் படிக்கவும் துணைசெய்வது இலக்கணம்.இலக்கண அறிவைப் பெற்றவரே தகவல் தொடர்புப் பணிகளில் ஈடுபடவேண்டும்.ல – ள – ழ, ர – ற, ன – ந – ண, என்னும் வேறுபாடுகளை முறையாகக் கற்பிக்க வேண்டும்.இன எழுத்துக்களின் துணைகொண்டே பல பிழைகளைத் தவிர்க்க இயலும் என்பதனை

தங்கம் – க –கரத்திற்கு ங – கரம் இணையாதல்
மஞ்சள் – ச – கரத்திற்கு ஞ – கரம் இணையாதல்
பண்டம் – ட – கரத்திற்கு ண – கரம் இணையாதல்
தந்தம் – த – கரத்திற்கு ந – கரம் இணையாதல்

என்பது போன்ற எடுத்துக்காட்டுகளின் வழி விளக்குதல் வேண்டும்.வல்லின எழுத்துக்களின் பின் வல்லின எழுத்துக்கள் வரக்கூடாது எனத் தெளிவுறுத்தவேண்டும்.இத்தகைய அடிப்படையான கூறுகளைக் கற்பித்தாலே மொழிப்பயன்பாடு குறையற்றதாகிவிடும் எனத் தெளியலாம்.

மொழிப்பற்றும் வெறியும்

ஒற்றுமையுடன் வாழ வேண்டும்.மொழி வெறி கூடாது என நல்லிணக்கம் குறித்துப் பேசுவோர் அனைவரும் தத்தமது தாய்மொழியின் மீது வெறி கொண்டவர்களே.வஞ்சக எண்ணம் படைத்தோர், பிறர்க்கு அறிவுரை கூறும்போது தாய்மொழிப் பற்றினை வெறியெனக் குறிப்பிடுவர். புத்தகங்களைப் படிப்பதை உயிர்மூச்சாக எண்ணி படித்துக்கொண்டே இருப்பவர் மீது பொறாமை கொண்டு அவர்களை இழிவுபடுத்தும் வகையில் புத்தகப்புழு எனக் குறிப்பிடுவது போன்ற செயலே இது. மனிதநேயத்தால் ஒன்றுபட்டு வாழ வழிகாட்டிய தமிழ்மொழியின் பெருமிதத்தைத் தாங்கிக் கொள்ள இயலாது தமிழை அழிக்கப் போராடும் வரலாறு காலந்தோறும் நிகழ்ந்து வருகிறது. எத்தடை வரினும் அத்தடைகளைத் தகர்த்து வாழும் பெருமைக்குரியதாகத் தமிழ்மொழி திகழ்வதனாலேயே தமிழ் ’தெய்வத்தமிழ்’ எனப் போற்றபடுவதனையும் இங்கு எண்ணி மகிழலாம்

நிறைவாக

மொழிப்பயன்பாட்டில் கவனம் செலுத்த வேண்டுமாயின் மொழியை அடித்தளமாகக் கொண்டு செயல்படும் நிறுவனங்களை சீர்படுத்தலேமுதல் பணியாக அமைதல் வேண்டும்

தமிழில் பிழையின்றிப் பேசுவது என்பது தமிழர்களுக்கே அரிதாகி விட்ட நிலையினை இன்றைய ஊடகங்கள் மெய்ப்பித்து வருகின்றன.எனவே ஊடகப்பணிகளில் தமிழறிஞர்களையே பணிக்கமர்த்த வழிவகை செய்தல் வேண்டும்.

அனைத்துப் பாடங்களும் ஆங்கில மொழியில் இருக்க மொழிப் பாடம் மட்டும் தாய்மொழியில் இருப்பதனால் மாணாக்கர்களுக்கு மொழிப்பாடம் கடினமானதாகி விடுகிறது.எனவே தற்சிந்தனை வளரும் பருவமான கல்லூரிப் பருவம் வரை தாய்மொழியிலேயே கல்வி கற்க வழிவகை செய்தல் வேண்டும். தாய்மொழிச் சிந்தனையால் எதனையும் கற்றுச் சிறக்க முடியும் என்பதற்குச் சென்ற தலைமுறையினரே சான்றாவதனை இன்றைய தலைமுறைக்கு எடுத்துரைக்க வேண்டியதும் அவசியமாகின்றது.

பிற மொழி பேசும் மக்கள் பெரும்பாலும் பிறமொழிக் கலப்பில்லாமல் பேசுவதனையே கற்றோர்க்குரிய இலக்கணமாகக் கொண்டிருக்கின்றனர்.ஆனால் தமிழரோ பிற மொழிக்கலந்து பேசுவதனையே நாகரிகமாகக் கொண்டிருப்பதனை கல்வி நிலையங்களிலேயே காணமுடிகிறது.எனவே தாய்மொழியில் பேசுவதனையே பெருமையாகக் கருதும் வகையில் அரசானது பணிக்குஅமர்த்தும்போது, தமிழ்மொழியில் கற்றோர்க்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என வலியுறுத்த வேண்டியுள்ளது.

தமிழ் இனத்தைக்காக்கவேண்டுமாயின் தமிழ் மொழியின் பெருமையினை நிலைநாட்ட வேண்டும்.தமிழ்மொழியின் வளத்தைக் காக்க வேண்டுமாயின் மொழிப்பயன்பாட்டில் தமிழர் அனைவரும்ஒருங்கே கவனம் செலுத்த வேண்டும்.மேலும் அதற்கான மொழியுணர்வுடன்வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தெளியமுடிகிறது.
**********