தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

சனி, 31 ஜூலை, 2021

விடுதலையைப் போற்றலாம் வாருங்கள்

 


விடுதலையைப் போற்றலாம் வாருங்கள்

     வீட்டில் இருக்கும்போது, விடுதலை உணர்வுடன் எத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறோம். நாம் விரும்பும் ஆடை, நாம் விரும்பும் பணி, நாம் விரும்பும் பேச்சு என அத்தனை வாய்ப்புகளையும் மொத்தமாய்க் கொடுப்பது வீடுதானே. அதனால்தானே வீட்டிற்குள் எப்போது நுழைவோம் என ஏங்கியிருப்போம். ஆனால், இன்று வீட்டுக்குள்ளேயே இருக்கவேண்டும் என அடைத்துவிட்டால், எப்போது வெளியே சுதந்திரமாக நடக்கமுடியும் என்றுதானே மனம் அலைகிறது.  அனைத்துமே விடுதலை உணர்வுதானே?

     சுதந்திரமான நாட்டில் இருக்கும் நமக்கே விடுதலையாக வாழ்வதில் எத்தனை விருப்பம் இருக்கின்றதெனில் அடிமைப்பட்டுக்கிடந்த இந்தியாவின் நிலையினை எண்ணிப்பாருங்கள். தன்னை மதிக்கவில்லை என்பதற்காகவே ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றான் ஜெனரல் டயர். பதவியைக் கூறினால்தான் உங்களுக்குப் புரியும் என்பதால் அப்படிக்குறிப்பிட்டேன். பொறுத்தருள்க !. கொடுங்கோலன் டயர் என்றே குறிப்பிட்டிருக்கவேண்டும். ஆனால் சொல்லிக்கொடுக்கப்பட்ட வரலாறுகள் எல்லாம் உயிர்களை வேட்டையாடிய கொடுங்கோலர்களை, ஜெனரல், துரை, கவர்னர் என உயர்வான பெயர்களால் குறிப்பிட்டுள்ளன. இது வரலாற்றுப்பிழைதானே. இல்லையென்கிறீர்களா? இதோ அவர்கள் நிகழ்த்திய ஜாலியன் வாலாபாக் படுகொலை பற்றி கூறுகிறேன். ஒத்துக்கொள்வீர்கள்.

     பஞ்சாப் மக்களின் சமூகவிழாவான பைசாகி விழா 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் பதிமூன்றாம் நாள் கொண்டாடப்பட்டது. மக்கள் மகிழ்ச்சியாகக் கொண்டாடிக்கொண்டிருந்தனர்.  எத்தகைய முன்னறிவிப்புமின்றி ஜெனரல் டயர் துப்பாக்கிச்சூட்டை நடத்தினான். பெண்கள், குழந்தைகள் என ஈவு இரக்கமின்றி ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்டோரைக் கொன்றுகுவித்தான் கொடுங்கோலன். மக்கள் அங்கும் இங்கும் ஓடுவதைக்கண்டு மகிழ்ந்த கயவனை, ஒருவரும் எதுவும் கேட்கமுடியவில்லை. ஆனால், அவனை அனுப்பிய ஆங்கிலஅரசு கேட்டது. “என்பேச்சை கேட்காததால் சுட்டேன்” என ஆணவமாக விடைகூறினான். என்னிடம் இருந்த தோட்டாக்கள் முழுவதையும் சுட்டுவிட்டேன். இன்னும் இருந்திருந்தால் இன்னும் நிறைய இந்தியர்களைக் கொன்றிருப்பேன்” என்றான்.  டயரின் ஆணவப் பேச்சினைக் கேட்ட ஆங்கிலேய அரசு உடனே அவனுக்குப் பதவி உயர்வு வழங்கியது.

பெற்றோருடன் வாழ்ந்தவர்கள் எல்லோரும் பார்த்துக்கொண்டிருந்தனர். ஆதரவற்ற உத்தம்சிங் என்னும் இளைஞன் இந்தியர்களைக் கொன்ற டயரினைக் கொல்லவேண்டும் என முடிவுசெய்கிறார். இருபது ஆண்டுகள் அதற்கான வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார். 1940 ஆம் ஆண்டு மார்ச் பதிமூன்றாம் நாள் இலண்டனில் ஒரு விழாவில் சிறப்புப்பேச்சாளராகப் பங்கேற்கிறார். அவ்விழாவிற்கு உத்தம்சிங் ஒரு புத்தகத்தோடு செல்கிறார். புத்தகத்தின் நடுவே பக்கங்களுக்கு மாற்றாகத் துப்பாக்கி இருக்கிறது. புத்தகம் மிகச்சிறந்த ஆயுதம் என்பதனை உணர்த்தினார். “வறுமையில் நின்றவர்க்கு எப்படி துப்பாக்கி கிடைத்தது?” என்றுதானே கேட்கிறீர். அவர் கப்பலில் பயணம் செய்யும்போது பாத்திரங்கள் கழுவினார். பெற்ற சம்பளத்தில் துப்பாக்கி வாங்குகிறார். இருபது வருட தவம் ; இந்தியத்தாயிடம் கொண்ட பற்று ; இந்திய மக்களிடம் கொண்டபற்று தன்னலத்தை மறக்கச் செய்தது.  தன்னலமே நாட்டு நலம் என மாறியது. கனவு நினைவானது.

பெயருக்கேற்றார்போல் வாழ்ந்துகாட்டினார். உத்தமர் என்பவர் பிறர்வாழ தன்னைக்கொடுப்பவர்தானே. ‘உத்தம் சிங்’ என்னும் பெயர் பின்னாளில் வைக்கப்பட்டது அதுவும் பொருத்தமாயிற்று. அவருடைய இயற்பெயர் ஷேர்சிங். ஷேர் என்றால் சிங்கம். அதுவும் பொருத்தம்தானே. அவருடைய செயலை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மிகவும் பாராட்டினார். இலண்டன் நாளிதழான “டைம்ஸ் ஆஃப் லண்டன்” உத்தம் சிங் சுதந்திரப் போராட்ட வீரர். ஒடுக்கப்பட்ட இந்தியரின் உணர்ச்சி வெளிப்பாடு எனப் பாராட்டியது.

ஷேர்சிங் சுட்டுவிட்டு ஓடவில்லை. பெயருக்கேற்றார் போல் சிங்கம் போலவே நின்றார்.  ரோம் நகர் இதனை ‘தீரச்செயல்’ எனப் பாராட்டியது. ஜெர்மனி வானொலி இந்தியர்கள் யானையைப்போன்று மறக்காமல் பழிவாங்கும் திறமுடையவர்கள். உத்தம்சிங் இருபது ஆண்டுகள் கழித்துப் பழிதீர்த்துக்கொண்டார் எனப் பாராட்டியது. ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்திற்கு ஒரு மிகப்பெரிய ஊக்கச்செயலாகவே உத்தம்சிங்கின் செயல்பாடு அமைந்தது.

முத்தாய்ப்பாக ஒன்று சொல்லவேண்டுமானால், உத்தம்சிங்கின் சொல்லைத்தான் சொல்லவேண்டும். “என் தாய்நாட்டிற்காக உயிரைவிடுவதைவிட வேறுபெருமை என்ன இருக்கிறது” என எழுதிச்சென்றிருக்கிறார். அதுமட்டுமன்று, தான் தூக்கிலிடப்படுவதை முன்னரே அறிந்த உத்தம்சிங், சாவினைக் கண்டு அஞ்சவில்லை. “என்னை நீங்கள் தூக்கிலிட்ட பிறகு எனது உடலை லண்டனிலேயே புதையுங்கள். எங்கள் மண்ணை நீங்கள் பிடித்துக்கொண்டீர். உங்கள் மண்ணின் ஆறடி மண்ணை நான் ஆள்வேன்” என்றார். பொன்னேடுகளில் பொறிக்கவேண்டிய சொற்களைத் தன் கடைசி ஆசையாகக் கூறினார் உத்தம்சிங்.

தாய்நாட்டில் விளையும் பொருட்களை உண்டு உடல்வளர்க்கும் ஒவ்வொருவரும் தாய்நாட்டிடம்பற்றுகொண்டுதானே வாழவேண்டும். நுனிக்கிளையில் அமர்ந்துகொண்டு வெட்டினால் விழுவது யார்?. “பத்துமாதம் தன் வயிற்றில் சுமந்த தாயைக் காப்பாற்றாவிட்டால், மகனுடைய மகளுடைய சம்பளத்தைப் பிடித்தம்செய்து நேரடியாக பெற்றோருக்கு அனுப்பிவிடுவோம்” எனச் சில மாநிலங்களில் சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. அவ்வாறே தாய்நாட்டைப் பழிப்போருக்கும் உரிய தண்டனை வழங்கவேண்டும். தண்டனை அவர்களை வருத்துவதற்கன்று ; திருத்துவதற்கே. நன்றியுணர்வின் அருமையினைச் சொல்லிக்கொடுக்காததால் வந்தவிளைவு அது

ஒரு பேருந்தில்  எண்பது பேர் பயணம் செய்கிறார்கள். எட்டு குண்டர்கள் நடுவழியில் பேருந்தை மறித்து கொள்ளை அடிக்கிறார்கள். எட்டுபேரை எண்பதுபேரால் ஒன்றும் செய்யமுடியாது. ஆயுதம் இருக்கிறது என்ன செய்வது? எனக் கூறாதீர்கள். ஆயுதம் இல்லாவிட்டாலும் ஒன்றுபட்டுவிட்டால் ஒழிந்துபோய்விடுவார்கள் எதிரிகள். நாம் செய்கின்ற தவறினைப் புரிந்துகொள்ள நான் படித்த ஒரு கதையைச் சொல்லட்டுமா?

     ஒரு விடுதியில் பல நாட்கள் உப்புமா தான் சிற்றுண்டி. நூறு பேரில் எண்பது பேர்  எதிர்த்தனர். காப்பாளர் ஓட்டெடுப்பு நிகழ்த்தினார். பெருவாக்குப்படியே சிற்றுண்டி என்றார். மீண்டும் உப்புமாவே தேர்வாகிறது. “எப்படி?” என்றுதானே கேட்கிறீர். உப்புமா விரும்பிகளின் ஓட்டு இருபதும் சரியாக விழுந்தது. மற்ற எண்பதுபேர்  இட்லி – 19, தோசை -19, பூரி -19, பரோட்டோ-19, சப்பாத்தி -4 என விழுந்தது. இப்படி விழுந்தால் காப்பாளர் என்ன செய்வார்? ஒன்றுபடுவோம். நாட்டைக்காப்போம்.

 

 

சனி, 24 ஜூலை, 2021

உழைப்பின் அருமை

 


உழைப்பின் அருமை

     இருபதாம் நூற்றாண்டுக் கடைசியில் பிறந்தவர்கள் “ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும்” என்னும் பாடலையும் “உழைத்து வாழவேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே” என்னும் பாடலையும் அறிந்திருப்பார்கள் ; பாடியிருப்பார்கள். அத்தனை அழகான பாடல். அழகு என்பது அறிவுடன் கூடியது மட்டும்தான். ஏனெனில் புற அழகிற்குக் காலஎல்லை உண்டு.  இந்தப்பாடலடிகள் எத்தனை வேகமாகவும் எத்தனை அன்பாகவும் காலம் கடந்தும் கருத்துக்களைப் பதித்துவிட்டிருக்கிறது. அதனால்தான் உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்தனர். வாழ்க்கை அழகானது. வாழ்வதிலும் விருப்பம் உண்டானது.

     இன்றைய இளைஞர்களைப்பற்றி கேட்டுப்பாருங்கள். “அவன் சொன்ன பேச்சை கேட்கமாட்றான்” “அவன் இந்த வேலைக்கெல்லாம் போகமாட்டானாம்” “அவன் எப்பபார்த்தாலும் கைப்பேசியில் படம்பாத்துக்கிட்டு இருக்கான்” “அவன் திறன்பேசியில் விளையாடிக்கிட்டே இருக்கான்” இப்படித்தான் சொல்வார்கள். அப்படி சொல்லாமலிருந்தால் அவர்களே தவத்தின் பயனாகப் பிள்ளைகளைப் பெற்றோர் ஆவர். இளைஞர்களிடம் ஒரு குறையும் இல்லை. இந்தச்சூழல்தான் அவர்களை அவ்வாறு கெடுத்துவிட்டிருக்கிறது.

     “உழைப்பது நம்ப உடம்புக்கு ஆகாது” என்று ஒரு திரைப்படத்தில் கதாநாயகர் சொல்கிறார். அவருக்கு ஒரு துணை நடிகர் “என்னை எங்கம்மா வேலைக்குப் போகச் சொல்லி கொடுமைப்படுத்துறாங்க” எனக் கிண்டலாகப் பேசுகிறார். இவை, பிஞ்சு மனத்தில் பதியத்தானே செய்யும். இளைஞர்கள் என்றாலே பல்துலக்காமல் பேருந்து நிலையத்தில் குளிர்க்கண்ணாடியைப் போட்டுக்கொண்டு (ஒவ்வொருவரும் ஒவ்வொரு நேரத்தில் என கண்ணாடியை மாற்றிப்போட்டுக்கொண்டு) நிற்பதாகக் காட்டுவது எத்தனை அவலம். உலகம் இப்படங்களைப் பார்க்கும்பொழுது என்ன நினைக்கும்? எதையாவது நினைத்துக்கொண்டு போகட்டும். திரைப்படம் என்பது மாயைதானே. விட்டுவிடலாம்  என நினைத்தால் பல மதுக்கடைகளில் இளைஞர்கள் கூட்டம்தான் அதிகமாக இருக்கிறது.

நாட்டை தலைநிமிர்ந்து நடத்தவேண்டிய தலைமுறை தெருஓரங்களில் விழுந்துகிடக்கிறது. அவர்களை நம்பிய நாட்டுக்கும் வீட்டுக்கும் எத்தனை இழப்பு. அதுமட்டுமா? அவர்களுக்கே எத்தனை இழப்பு. திரை நாயகர்கள் ஒழுக்கங்கெட்டவர்களாக நடிக்கிறார்களே ஒழிய உண்மையான வாழ்வில் யோகப்பயிற்சியும் உடற்பயிற்சியும் செய்து அழகாகத் தம்மைப் பாதுகாத்துக்கொள்கின்றனர். ஏமாற்றுவது அவர்கள் பாத்திரம் ; ஏமாறுவது இளைஞர்களின் அறியாமை.

     “இதையெல்லாம் எப்படிச் சொல்கிறீர்?” என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இதோ நான் கண்ட ஒரு அருமையான நேர்காணல், ஒரு தொழிலதிபரிடம் நீங்கள் தமிழராக இருந்தும் ஏன் தமிழர்களுக்கு உங்கள் நிறுவனத்தில் வேலை கொடுப்பதில்லை. பெரும்பாலும் வடநாட்டார்தான் வேலைசெய்கிறார்களே” எனக் கேட்டார். “நான் தமிழர்களைத்தான் ஒவ்வொரு மாவட்டமாகச் சென்றுதேடுகிறேன். ஒருவரும் வேலைக்கென்றால் வருவதில்லை. அதனால் வடமாநிலங்களிலிருந்து விமானம் வழியாக இலட்சக்கணக்கில் பணம் செலவுசெய்து அழைத்துவருகிறேன்” என்றார். அது மட்டுமன்று “சனிக்கிழமை கூலிகொடுப்பதால், ஞாயிற்றுக்கிழமை குடித்துவிட்டு, திங்கள் கிழமை எழமுடியாமல், செவ்வாய்க்கிழமைதான் வேலைக்கு வருகிறார்கள்” எனக்கூறுகிறார். இந்நிலையை உருவாக்கியது யார்?.” இக்குரல் ஒவ்வொரு தாயாரின் குரல் ;  வறுமையில் தவிக்கும் மனைவியின் குரல் ; பசியோடு தவிக்கும் குழந்தைகளின் குரல்.  இதற்குத்தீர்வு காணவேண்டிய பொறுப்பு ஒவ்வொரு தமிழர்க்கும் உண்டு.

நாயகர்கள் நினைத்தால் மாற்றமுடியும். ஒவ்வொரு நடிகரும் உழைப்பின் அருமையினை விளக்கவேண்டும். தொழிற்சாலைகள் உருவாக்க வேண்டும் என்னும் எண்ணத்தைப் பரப்பவேண்டும். குடிப்பது தவறு என்பதனை துணிந்து அனைவர்க்கும் சொல்லவேண்டும். பிறநாட்டிலிருந்துவரும் இறக்குமதியைக் குறைக்கவேண்டும். உறபத்தியால் ஏற்றுமதி நிறையவேண்டும். செய்வார்களா ?

     முன்னைய காலத்தில் இலக்கியங்கள்தான் மக்களுக்கு நல்வழிகாட்டின. இந்த வேலையைப் புலவர்கள் என்ன அழகாக செய்திருக்கிறார்கள். உலகநாதர் இயற்றிய ‘உலகநீதி’ சொல்லும் கருத்துக்களைப் பாருங்களேன்.

     சேராத இடம் தனிலே சேரவேண்டாம்

     செய்த நன்றி ஒருநாளும் மறக்கவேண்டாம்

ஊரோடும் குண்டுணியாய்த் திரியவேண்டாம்

உற்றாரை உதாசினங்கள் சொல்லவேண்டாம்

பேரான காரியத்தைத் தவிர்க்கவேண்டாம்

பிணைபட்டுத் துணைபோகித் திரியவேண்டாம்

வாராரும் குறவரிடை வள்ளிபங்கண்

மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே        (உலகநீதி:8)

 

என எத்தனை வலிமையான கருத்துக்களையெல்லாம் தரமான பூக்களைக்கொண்டு கட்டிய மாலைபோல் கட்டியிருக்கிறார் உலகநாதர்.

     சேராத இடத்தில் சேர்வது முதல் தவறு. அப்படித் தவறி சேர்ந்தால் உடனே விலகிவிடு. தாய்தந்தை செய்த நன்றியை மறந்துவிடாதே. தேவையில்லாத செய்திகளை ; பழிச்சொற்களை வீசாதே. நல்வழி சொல்லும் உறவினர்களை இழிவாகப்பேசாதே ; புகழ்தரும் பணி கிடைக்குமாயின் அதனைத் தவிர்க்காதே. வீணாணவர்களுடன் நின்று பெருமைகளை இழந்துவிடாதே. இவையெல்லாம் அமையவேண்டுமெனில் மனதை ஒருநிலைப்படுத்து என்கிறார். அவர் முருகபக்தர் ஆதலால், அவர்கண்ட மயிலேறும் பெருமானாகிய முருகப்பெருமானை வாழ்த்தவேண்டும் என்கிறார். அதுவும் வள்ளி மகளை இணையாகக் கொண்ட முருகப்பெருமானை எனக் கூறியுள்ளார். இதனுள் பெண்களை மதிக்கவேண்டும் என்னும் குறிப்பும் அடங்கியுள்ளதுதானே.

     தாய்,தந்தை சொல்லை மதிக்காமல் இருப்பதிலிருந்து தவறு தொடங்குகிறது. அதனால் தவறானவர்களின் நட்பு கிடைக்கிறது. தவறுசெய்யும்போது சிக்கிக்கொண்டால் பொய்சொல்ல நேரிடுகிறது. பிறரைப்பழிசொல்லி ; துன்பம்செய்து தப்ப மனம் நினைக்கிறது. இத்தகைய தவறுகளைச்செய்யக்கூடாது என எவரேனும் சொல்லிவிட்டால் என்செய்வது என உறவுகளை எதிர்க்கிறது. தவறான வழியில் செல்வம் சேர்ப்பது எளிதாக இருப்பதனால், புகழான வழியில் வரும் செல்வத்தை ஏற்க மறுக்கிறது. தீயவர்களுடன் இருப்பதே நல்லதெனத் தோன்றிவிடுகிறது. அதனால் வாழ்க்கைவாழ்வதே வீணென்று எண்ணத்தோன்றுகிறது. இத்தகைய குற்றங்களிலிருந்து மீளவேண்டுமெனில் மனதை ஒருநிலைப்படுத்தவேண்டும். பெற்றோரின் பேச்சைக்கேட்டு உழைத்து வாழவேண்டும் என்கிறார் உலகநாதர்.

     உழைப்பில் இருக்கும் உப்பு தான் வாழ்க்கையைப் பெருமையாக்கும். ‘உப்பில்லா பண்டம் குப்பையிலே” எனக்கூறியது உழைப்பின்றி உண்பது அனைத்தும் குப்பை என்பதனை உணர்த்தத்தானோ?

 

வெள்ளி, 23 ஜூலை, 2021

தாய் கடவுளன்று ; தாய் தாய் தான்

 


தாய் கடவுளன்று ; தாய் தாய் தான்

     பலாப்பழத்தையே அறியாதவனிடம், மாம்பழம்போல் பலா இனிக்கும் எனக்கூறினால், அது உண்மையாகவா இருக்கும்? இல்லைதானே !. ஒரு பொருளுக்கு ஈடாக மற்றொரு பொருளைக் கூறிவிட்டால் அப்பொருளினை முழுமையாக அறிந்துகொள்ளமுடியாது ; அறிந்தாலும் தவறாகிவிடும். கடவுள் அனைத்து உயிர்களையும் ஒன்றுபோல்காப்பவர் ; தாய் அப்படியன்று. தன்னுடைய குழந்தை என்னும் தன்னலம் எப்போதும் அவளுக்குள் உயிர்போல் ஒளிந்திருக்கும். இன்னொரு குழந்தையை தன் குழந்தை அடித்துவிட்டாலும் தவறென ஒப்புக்கொள்ளாத மனம் தாய்மனம்.   தன்குழந்தை யாரையாவது அடித்துவிட்டால், அப்போதும் வேறுகுழந்தையே தவறு செய்ததாகப் பேசுவதே தாயுள்ளம்.

     ஒரு தாயனவள் பள்ளி முதல்வரிடம், “என்மகனை அவன் வகுப்புத்தோழன் ஒருவன் நகத்தால் முகத்திலே கீறிவிட்டிருக்கிறான். நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?” என வேகமாகப் பேசினாள். மகனோ திருவிழாவில் காணாமல்போனவன்போல் விழித்துக்கொண்டிருந்தான். முதல்வர் உடனடியாக வகுப்பாசிரியரை அழைத்தார். “நானே உங்களிடம் சொல்லலாம் என்றுதான் வந்துகொண்டிருந்தேன். இப்போதுதான் இவனுடன் சண்டையிட்ட மாணவனுக்குக் கையில்கொட்டிய குருதியைத் (ரத்தத்தை) துடைத்துவிட்டு வந்தேன். இவன் அவனுடைய கையை கடித்ததிலே அப்படியாகிவிட்டது” என்று தாயுடன் நின்றிருந்த சிறுவனைப் பார்த்துக்கொண்டே கூறினார் ஆசிரியர். அதுவரை வானைக் கிழித்த தாயின் குரல் மெலிதானது. மகனைப் பார்த்து, “என்ன கண்ணா! ஏன் அவன் கையைக் கடித்தாய்” எனக்கேட்டாள். அப்போதும் முழித்துக்கொண்டிருந்தான். பின் முதல்வரைப் பார்த்து ‘குழந்தைகள் அப்படித்தான் அடித்துக்கொள்வார்கள்” எனச்சொல்லி அமைதியாக அங்கிருந்து நழுவிச்சென்றாள். “அடுத்து வரும் பெற்றோர்க்கு என்சொல்வேன்” என முதல்வரும் பெருமூச்சு வாங்கினார். இதுவும் தாயன்புதானே?

     ஒரு கலைஞர்,  தாயன்பின் வலிமையினை படம் வழியே காட்டிச்சென்றார். சொல்லட்டுமா?. ஒருவர் ஆட்டினை முழுமையாகவாங்கினார். மகிழ்வுந்துக்குள் வைக்க மனமில்லாமல் அதனைச் சாகடித்து காருக்குப் பின்னாலே கட்டிவிடச்சொல்கின்றார். அதனைக்காரில்கட்டி இழுத்துக்கொண்டுபோகையிலே அந்த ஆட்டின் குட்டி கொஞ்சதூரம் பின்னால் ஓடி .. ஓடி முடியாமல் நின்றது. அது ‘மே ! மே’ எனத்தாய் உடல் தரையில் இழுத்துக்கொண்டுபோவதனைப் பார்த்து வருந்தியது. கொஞ்சநேரத்தில் மகிழ்வுந்து காணாமல்போனது. அந்தக் குட்டியின் ஒவ்வொரு குரலும் “இது இறைச்சியல்ல. என் தாய்” என்று உணர்த்துவதனைப் படம்பிடித்துக்காட்டினார். இக்குறும்படம், தாயன்பினை காட்சியின் வழியே புலப்படுத்திவிடுகிறது. அந்தக்குட்டி,  பால் குடிக்க முடியாமல் எங்கு செல்லும்? தாயின்றி வாழ்வேது? சாகும் வரை வாழ்வதற்குக் கற்றுக்கொடுப்பவள் தாய்தானே? இவ்வாறு, பல எண்ணங்கள் வந்துபோகும்.

     தாயில்லாத ஒரு உயிர் உலகில் உண்டா? இல்லைதானே. எத்தனை துயரம் இருந்தாலும் குழந்தைமுகம் பார்த்தபின்னே அத்தனை துயரத்தையும் மறந்துவிடுபவள் தாய்தானே. அதனால் பத்து ; எட்டு ; ஐந்து  ; இரண்டு என எத்தனையோ தாய்மார்கள் குழந்தைகளைப் பெற்றதனை ;  பெறுவதனைக் காணமுடிகிறது. பத்துத்திங்கள் குழந்தைகாக உணவுண்டு ; ஒருபக்கமாக உறங்கி ; நடைதளர்ந்து வாழ்ந்த பெருமைக்கு ஈடேது. அவளின்றி  இவ்வுலகம் செழித்திடுமா? எனவே, நம்நாட்டை ‘தந்தைநாடு’ எனக்கூறாமல் ‘தாய்நாடு’ எனச்சான்றோர்கள் குறிப்பிட்டனர்.  போராடிக்காத்தால்தான் நாடு வளமாகும் என எண்ணியே அவ்வாறு குறிப்பிட்டுள்ளனர் என எண்ணத்தோன்றுகிறது.

      “காதற்ற ஊசி கூட நீ இந்த உலகை விட்டுச்செல்லும்போது வராது” என மகனாய் வந்த குருவின் சொல்கேட்டு பொன்னை ; பொருளை ; உறவை ; வரவை  என அனைத்தையும் துறந்தார் பட்டினத்தார்.  ‘துறந்தால் பட்டினத்துப்பிள்ளையைப்போல் துறத்தல் அரிதெனச்’ சான்றோர்கள் பாடும் அளவிற்குத் துறந்தவர் பட்டினத்தார். அத்தகைய பட்டினத்தாரே தாயன்பிலிருந்து விடுபடமுடியாதவர் ஆனார். அத்தகைய பெருமையினை உடையவள் தாய். அவளைப் போற்றவேண்டியது ஒவ்வொருவருடைய கடமை.

     வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்

     கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து – முட்டச்

     சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாய்க்கோ

     விறகிலிட்டுத் தீமூட்டு வேன்           (பட்டினத்தார்)

 

என்னும் பாடலே தாயன்பினை விளக்கிச்சொல்லும். கோழியானது தன் சிறகிடையே குஞ்சுகளைவைத்துக்காப்பதுபோல, தாயானவள் முந்தானை என்னும் சிறகால்மூடி வெயிலிலும் மழையிலும் காத்த அன்பினை பட்டினத்தார் பாடியுள்ளது எத்தனை அழகு.

     இப்படி வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும் கட்டிலிலும் இட்டு என்னைப் பாதுகாத்தவளை, விறகில் இட்டு தீ மூட்டுகிறேன் எனப்பட்டினத்தார் பாடுவது தாயன்பில் இமயம்தானே?

     காதல் என்பது உயர்ந்தவகையான அன்பு. அச்சொல்லையே தாயன்பிற்கு எடுத்துக்காட்டாகக் காட்டியுள்ள அழகினையும் காணலாம்.

     தேசபக்தர்கள்  எத்தனையோபேர் பூமியினையே தாயாக எண்ணி செருப்பணியாமல் நடப்பதனையே கொள்கையாகக் கொண்டுள்ளனர். அத்தகையோர் பேரன்பினை ; நன்றியுணர்வை என்சொல்வது?. இதுவும் தாயன்புதானே.

     தாயென்பவள் தாயாக மட்டுமின்றி முதல் ஆசிரியையாகவும் திகழ்கிறாள்தானே. அவள் கற்பிக்காத பாடமில்லை. ‘உள்ளம் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்’ என்னும் சொல்லுக்கு இலக்கணம் அவள். வறுமை தனக்கிருப்பினும் குழந்தைகளின் பெருமைக்கு உழைப்பவள் அவள். ஜோத்பூரில்  ‘ஆஷா கந்தாரா’  என்னும் பெண்மணி திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகிறார். கணவன், விட்டுவிட்டு ஓடிவிடுகிறான். குழந்தைகளைக் காப்பாற்ற என்செய்வது? என வருந்துகிறார். தெருக்களைச் சுத்தம்செய்யும் துப்புரவுப்பணிசெய்கிறார்.  ஒரு நாளைக்கு எட்டுமணி நேரம் படித்து, அஞ்சல் வழியில் பட்டம்முடித்து ;ஆட்சியர் தேர்வும் எழுதி வெற்றிபெறுகிறார். இன்று துணை ஆட்சியராகப் பணிசெய்கிறார். இதுவும் தாயின் பெருமைதானே !

வியாழன், 22 ஜூலை, 2021

மனைவி என்னும் மந்திரி

 


மனைவி என்னும் மந்திரி

      எந்த மந்திரியாக இருந்தாலும் ‘மனைவி’ என்னும் தந்திரியின் பேச்சைக்கேட்டுத்தானே ஆகவேண்டும்.  தலைகுனிந்து தலைவன் வீட்டிற்குவந்தவள் பின்னர், அந்தக் குடும்பத்தையே தலைநிமிரச் செய்துவிடுகிறாள். ஒரு மரம் பல கிளையாகப் பரவி நிழல்தருவதுபோல ஒவ்வொரு குடும்பமும் செழித்துக்கிளைத்து அழகுடன் வளரச்செய்தவள் மனைவிதானே. கணவன் ‘அவளுக்கு ஒன்றும் தெரியாது’ என எத்தனை எளிமையாகச் சொல்லிவிடுகிறான். ஏமாந்தபின்னால்தான் “பெண்புத்தி பின் (கூர்மை) புத்தி” என்பதனை உணர்கிறான்..  உலகமே எதிர்த்து நின்றாலும் கணவனுக்காக இறுதிவரைப் போராடுபவள் அவள்மட்டும்தானே. வீழ்ந்தபின், வீதி வரும் வரைமனைவியானவள் வாழும்வரை கணவன் வீதிக்கு வராமல் காக்கிறாள்தானே.

     தன்னுடைய நலனைப்பற்றிக்கவலைப்படாதவள் அவள். உறங்குவதும் எழுவதும் தெரியாமல் குடும்பத்திற்குச் சேவைசெய்யும் அளவிற்கு அவளுக்குப்பொறுமையைக் கற்றுக்கொடுத்தது யார்? அதுதான் மரபு. மரபு என்பது அடக்குமுறையல்ல ; அது வாழ்வின் ஒழுங்குமுறை. ஒருவர் பணம் ஈட்ட, ஒருவர் இல்லம் காக்கவேண்டும். அப்போதுதானே வாழ்க்கை ஓடும் ; நடக்காவது செய்யும். அது ஆணாகவோ, பெண்ணாகவோ இருக்கலாம். தவறில்லை. ஆனால், பெரும்பாலும் பெண்கள்தான் தாயுள்ளத்தோடு குழந்தைகளுக்குச் சோறூட்டமுடியும். தன் வயிற்றிலிருந்து பிறந்த குழந்தையினைக் காப்பதில் அவளுக்கும் மகிழ்ச்சி இருக்கும்தானே.

குடும்பத்தின் அனைத்து முடிவுகளையும் அவளே எடுக்கிறாள். அவளுக்குக் குரல் கொடுப்பவனாக மட்டுமே கணவன் இருக்கிறான். அனைத்துச் செயல்களையும் பின்னால் இருந்துசெய்துகொண்டே ஒன்றும் தெரியாதவள் போல் மௌனம் என்னும் அணிகலனை அணிந்திருப்பாள். அவள் பேசினால் கணவனின் அறியாமை புலப்பட்டுவிடுமோ என எண்ணி, அமைதிகாப்பாள். எந்த முடிவைக் கூறினாலும் ‘அவரை ஒரு வார்த்தை கேட்டுட்டுச் சொல்கிறேன்’ என்பாள். தனக்கு முழுமையான ஆற்றல் இருப்பினும் கணவன் செயலால் அன்றி மீளக்கூடாது எனச் சீதை வாழ்ந்தது பெண்ணின் பெருமையால்தானே? அவள் வீரத்தை வெளிப்படுத்தியிருந்தால் இராமனின் வீரத்தினை உலகம் அறிந்திருக்குமோ?

கோவலனின் காலொடித்துக் ‘கேவலன்’ எனத் தவறுதலாக எழுதிவிட்டு, கண்ணகியைப் பிரிந்த கால்களை ஒடித்ததில் தவறில்லையே எனக் கூறும் மாணாக்கர் பலருண்டு. நாடாளும் மன்னனையே தலைகுனியச் செய்தவளுக்கு வீடாண்ட மன்னனாகிய கோவலனையா அடக்கத்தெரியாது. மரபினைக்காக்கவேண்டும் என்னும் குணம்தானே அவளை அடக்கமாக்கிற்று. குழந்தை தன் பேச்சைக் கேட்கவில்லை என எத்தனைப்பெற்றோர்கள் இன்று வருந்துகிறார்கள். குழந்தைகள் குறிப்பிட்ட நேரத்தில் வீடுவந்துசேராவிடில் எந்தப்பெற்றோர் தவிப்பின்றி இருப்பார்? இவை அனைத்தும் மரபைக்காக்கத்தானே. தலைவாரி விடும்போதும், உலைவடித்து இடும்போது எத்தனை அறிவுரைகளை பின்னிவிடுகிறாள் ; ஊட்டிவிடுகிறாள்.

தன்குடும்பம், தன்தலைவன் குடும்பம் என இருகுடும்பத்தின் பெருமைதனைக்காப்பவள் மனைவிதானே. மகன் தறிகெட்டுப்போய்விடுவான் என அஞ்சிக்கால்கட்டுப் போட்டிடவே திருமணம் செய்துவைப்பர். ஊர்திரிந்த கணவனவன்  கரத்தினிலே கைக்கடிகாரம் கட்டிவிட்டு, சிறியமுள், பெரியமுள்ளும் நாம் இருவர் எனச்சொல்லி சரியாக வீட்டிற்கு வரவைத்த பெருமை மனைவிக்குத்தானே?

முருங்கையினை முறுக்கியும், செம்முள்ளங்கியைக் (கேரட்) கீறியும், வெண்டைக்காயை உடைத்தும் வாங்கவேண்டுமென உலகியலை அவள்தானே கற்பித்தாள். வெறும்பயலாய் சுற்றித்திரிந்தவனை குடும்பத்தலைவனென அடையாளம் கொடுத்தாவளும் அவள்தானே. இத்தனைப்பெருமைகளையும் மொத்தமாய்க்கொடுத்ததற்குக் காரணம், திருமணச்சடங்கினிலே, அம்மிமிதித்து, அருந்ததி பார்த்து இறுதி வரை உடனிருப்பேன் ; குலப்பெயரைக் காத்து நிற்பேன் என்னும் உறுதிமொழியால்தானே?.

இன்று, சொன்னசொல்லைக் காப்பாற்றிவிட்டு என்னை வருத்தத்தில்விட்டுவிட்டு மறைந்தாளே என வருந்துகிறான் ஒரு மன்னன். புறாநானூற்று மன்னனவன். சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை. மன்னன்பாடிய கையறு நிலைப்பாடல் இதுதான்

யாங்குப்பெரிது ஆயினும், நோய் அளவு எனைத்தே

உயிர் செகுக்கல்லா மதுகைத்து அன்மையின்?

கள்ளி போகிய களரியம் பறந்தலை

வெள்ளிடைப் பொத்திய விளை விறகு ஈமத்து

ஒள்ளழற் பள்ளிப்பாயல் சேர்த்தி

ஞாங்கர் மாய்ந்தனள், மடந்தை

இன்னும் வாழ்வல் ; என்இதன் பண்பே !       (புறநானூறு :245)

 

இருக்கும் வரை மனைவியின் அருமை தெரியாது. இல்லாதபோது அவளைத் தவிர வேறொன்றும் தெரியாது. அவள் இருக்கின்றாள் என்ற ஒன்றே வாழ்வை வரமாக்கும் என அறியும் பிரிவின் ஆழத்தைப் பாடலாக வடித்துள்ளான் இம்மன்னன்.  

     அவளைப் பிரிந்த துன்பம் பெரியது ; அவளைப்பிரிந்து வாழும் என் உயிர் சிறியது. இருவரும் இணைந்தே வாழ்வோம் என்றவள், அவள் சொல்லைக்காத்தாள். நான் சொல்லைக்காக்காமல் தோற்றேன். மென்மையான அவள் உடலை வன்மையான விறகடுக்கில் படுக்கவைத்து, தீயினை இட்டுவைத்தேன். பின்னும் வாழ்கின்றேன். இந்த இழிவான பிறவிக்கு என் செய்வேன் என வேண்டுகின்றான். மன்னன் தன் மனைவியிடம் கொண்ட அன்பு புலப்படுகிறதுதானே?

     மக்களிடம் உயர்வு தாழ்வு உண்டு. ஆனால் உணர்வுகள் ஒன்றுதானே?. மன்னனாக இருந்தாலும் மனைவியை இழந்தபின்னால் உயிரில்லா உடம்பாகிறான். தேய்பிறையாய்த் தேய்கிறான். இவ்வாறு மனைவியின் அன்பினை சங்க இலக்கியங்கள் உணர்த்திநிற்பது மன்னனின் புகழைக் குறிப்பதற்கு மட்டுமன்று. எவ்வாறு மனைவியுடன் வாழும்போதே அன்புடன் இணைந்து வாழவேண்டும் என்பதற்காகவும்தானே?

     “அப்பாவை எதிர்த்துப்பேசாதே” என மகனிடமும் “தாத்தாவை எதிர்த்துப்பேசாதே” எனப்பேரனிடமும் பாசத்தை வளர்ப்பவள் அவள்தானே.

     எப்போது அன்பாக ; எப்போது கோபமாக ; எப்போது அடக்கமாக ; எப்போது வேகமாக ; எப்போது மென்மையாக ; எப்போது ஊக்கமாக ; எப்போது ஆதரவாக ; எப்போது சோகமாகப் பேசவேண்டுமெனச் சூழலை அறிந்துபேசும் மந்திரி அவளன்றி வேறுயார்? அவளை மதித்து நடப்போம். ஆண்மையின் சிறப்பு அதுவே என உலகிற்கு இயம்புவோம்.    

    

புதன், 21 ஜூலை, 2021

பட்டிமண்டபம்

 


பட்டிமண்டபம்

தலைப்பு : மற்றவர்களைப் புரிந்துகொள்வதில் வல்லவர்கள் ஆண்களா? பெண்களா?

நடுவர்: மலையைக் குடைந்து ; கடலைக் கடந்து ; விண்ணை அளந்து ; மண்ணை அறிந்து ; காற்றைப் புரிந்து அனைத்துக்கலைகளிலும் பிறநாட்டார்க்கு தாயாய் விளங்கும் அன்னைத்தமிழே ! உன்னை வணங்கி இப்பட்டிமண்டபத்தைத் தொடங்குகின்றோம்.

     வாய்பேசும் மொழியைவிட கண்கள்பேசும் மொழி அழகானது. அதனை, அன்புடையவர்கள்மட்டும்தான் புரிந்துகொள்ளமுடியும். கொடுக்கும் கைகளை விட கண்ணீரைத் துடைக்கும் கைகள் மேலானவைதானே. பேச்சினைப்புரிந்துகொள்வதைவிட மௌனத்தைப் புரிந்துகொள்வோர் பெருமையானவர்கள்தானே. சரி, இப்படி மற்றவர்களைப்புரிந்துகொள்வதில் வல்லவர்கள் யார்? “ஆண்களே!” என என்னும் அணியில் மூவரும் “பெண்களே !” என்னும் அணியில் மூவரும் என ஆறு அறிஞர்கள். அறுசுவையுடன் பேசுவர்.

‘ஆண்களே’ என்னும் அணியில் அணித்தலைவர் உட்பட மூவேந்தராய் மூவர். ‘பெண்களே’ அணியில் முக்கனிபோல் மூவர்.  இனி தமிழைச் சுவைக்கலாம்தானே? முதலில் அணித்தலைவர். அடுத்து, அணியுளுள்ளவர் ஒருவர்பின் ஒருவராகத் தங்கள் கருத்தை முன்வைக்கலாம்.

ஆண்களே ! அணித்தலைவர் : தமிழ் படித்த தலைவரே !. நீங்கள் ஓர் ஆண். நாங்கள் எப்படி பேசினாலும் உங்களைப் பாராட்டுவார்கள். “எப்படி? என்று கேட்கிறீரா?” நீங்கள்தான் தொடக்கத்திலேயே ‘அறுசுவை’ யுடன் பேசுவார்கள் எனக்கூறிவிட்டீர்களே. அப்படி என்றால் எப்படியும் விடை சொல்லலாம் என்பதுதானே பொருள்.

எங்களுடைய குழந்தை பள்ளியில் பெற்றோர் நாள் கொண்டாடினார்கள். தாய், தந்தை இருவரும் வரவேண்டும். பெயர் கொடுத்துவிட்டுவர என் மனைவி கூறினாள். போனேன். எனக்கு முன்னால் இருவர் சென்று திரும்பினார்கள். “என்ன கேட்டார்கள்?” எனக் கேட்டேன். “திருப்பி அனுப்பிட்டாங்க.” என்றனர். பதிவிடத்தில் இரு ஆடவர் அமர்ந்திருந்தனர். நான் உள்ளே நுழைந்ததும் அமரச்சொன்னார்கள். “இப்போட்டியில், கணவன், மனைவியைத் தூக்கிக்கொண்டு ஓடவேண்டும். யார் நிறைய தூரம் ஓடுகிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள்” என்றனர். “சரி !” என்று பெயர் கொடுத்தேன். “எனக்கு முன்னால் இருவர் வந்தார்களே ஏன் திருப்பி அனுப்பிவிட்டீர்கள்” எனக்கேட்டேன். முதலில் வந்தவர் “எனக்கு இரண்டு மனைவி’ எந்த மனைவியைத் தூக்கிக்கொண்டு ஓடவேண்டும்?” எனக் கேட்டார். அதனால் திருப்பி அனுப்பிட்டோம். இரண்டாவது வந்தவர், “மனைவியைத் தூக்கிக்கொண்டு ஓடவேண்டும்” என்றதும் “யாருடைய மனைவியை?” என்றார். அதனால் அவரையும் திருப்பி அனுப்பிட்டோம் என்றார். இப்படிப்பட்டவர்களை எல்லாம் அழைத்துப் போட்டி நடத்தமுடியுமா? அதனால்தான் திருப்பி அனுப்பிவிட்டோம் என்றார். பிரச்சினைகள் எவரால் வரும் எனஆய்ந்து முன்னரே தவிர்த்த அந்த ஆசிரியர் மற்றவர்களைப் புரிந்துகொண்டவர்தானே. “நானும் அவர்கள் வருந்தக்கூடாது” என்றுதான் பெயர்கொடுத்தேன். எனக்கும் விருப்பமில்லை. பெயர்கொடுக்காவிட்டால் மனைவி திட்டுவாள். “இப்போட்டி ஒத்துவராது போய்விடலாம்” என்று போட்டியைச் சொன்னேன். ஒத்துக்கொண்டாள் ; தப்பித்தேன் ; வீடுவந்து சேர்ந்தேன். “அப்படி என்ன சொன்னீர்கள்” எனக் கேட்கிறீர்களா?. “மனைவி கணவனைத் தூக்கிக்கொண்டு ஓடவேண்டும் என்று கொஞ்சம் மாற்றிச்சொன்னேன் அவ்வளவுதான். என்னைப்போல் பலரும் காணாமல் போனார்கள் என்றால் ஆண்கள்தானே பெண்களை நன்கறிந்து இருக்கிறார்கள். அதனால், ஆண்களே மற்றவர்களை நன்றாகப் புரிந்துகொள்கிறார்கள் நன்றி.

பெண்களே ! அணித்தலைவர் : பெண்கள் பொருத்தமான கணவனா என்பதனைக் காதலிக்கும்போதே அறிந்துகொள்வார்கள். காத்திருக்கவைப்பது? “அது ஒரு சுகம்” எனக் கவிஞர்கள் பாடுவார்கள்?. சுகமா அது,  போவோர் வருவோர் எல்லாம், வேலைவெட்டி இல்லாதவன் போலப் பார்ப்பார்கள். ஆனால், பெண் அப்படித்தான் சோதிப்பாள். திருமணத்திற்குப் பின் துணிக்கடைக்குப்போனால் காத்திருக்கவேண்டும். பாத்திரக்கடைக்குப் போனால் காத்திருக்கவேண்டும். கல்யாணத்துக்குப் போனால் காத்திருக்கவேண்டும். எங்கு போனாலும் காத்திருக்கவேண்டும். அதற்கான ஒரு முன்னோட்டமாகத்தான் காக்கவைப்பார்கள். அப்படியென்றால் மற்றவர்களைப் புரிந்துகொள்வதில் வல்லவர்கள் பெண்தானே?

     மிகவும் பொறுமையுடையவரைத்தான் திருமணம் செய்வேன், என என்னுடைய தோழி நீண்டநாள் திருமணமாகாமலே இருந்தாள். பல வருடங்கள்கழித்து அவளைப் வழியில் பார்த்தபோது திருமணமாகிவிட்டது என்றாள். “இப்பதாண்டி மகிழ்ச்சியா இருக்கு. கணவன் என்ன செய்றார்?” எனக்கேட்டேன். “புடவை கடையில் வேலை செய்கிறார்” என்றாள். அதனால் பெண்களே நன்றாகப் புரிந்துகொள்கிறார்கள் நன்றி!

ஆண்களே -2 : நான் மனைவியிடம் “பள்ளிவிளையாட்டுவிழாவுக்கு விளையாட்டுவீரரை அழைக்கச்செல்கிறேன். எப்படி பேசுவார்ன்னு தெரியலை” என்றேன். உடனே அவள், “கால்பந்து வீரரா- திறமையாபேசுவார், இறகுபந்து வீரரா - மென்மையா பேசுவார். பூப்பந்து வீரரா - மணமாகப் பேசுவார். ஓட்டப்பந்தய வீரரா - பாய்ச்சல் பாய்ச்சலா பேசுவார். நீளம் தாண்டும் வீரரா - குதிச்சுகுதிச்சுப் பேசுவார். உயரம் தாண்டும் வீரரா -எகிறிஎகிறிப் பேசுவார். குத்துச்சண்டை வீரரா - அடிச்சு அடிச்சுப் பேசுவார்.” என்றாள். இப்படிச்சொன்ன என் மனைவிதான் மற்றவர்களைப் புரிந்துகொண்டு பேசுகிறாள் எனச் சொல்லாதீர்கள். இவர்கள் அத்தனைப்பேர் மாதிரியும் என் மனைவி பேசுவாள் எனப் புரிந்துகொண்டவன் நான்தானே. அதனால் ஆண்களே மற்றவர்களை நன்றாகப் புரிந்துகொள்கிறார்கள் நன்றி !

பெண்களே-2: ஆன்லைனில் வகுப்பெடுப்பது பெண்களுக்கு எவ்வளவு கஷ்டம் தெரியுமா? குழந்தைகளோட பெற்றோர் மனநிலையையும் தெரிந்து வகுப்பெடுக்கவேண்டும். சில நேரம் குடித்துவிட்டு குழந்தைகளின் தந்தைகள் குறுக்கே பேசுவர்.  ஒரு பழக்கூடையில் இருபது மாம்பழம் மூன்றுபேருக்கு சரிசமமாகக் கொடுக்கமுடியுமா? மீதி எவ்வளவு இருக்கும்.” எனக்கேட்டார். பெற்றோர் ஒருவர் இடைபுகுந்து “சாறு பிழிந்து மூன்று குவளையில் கொடுக்கலாமே” என்றார். ஆசிரியர் பொறுத்துக்கொண்டார். அந்த ஆசிரியரை மடக்கிவிடலாம் எனப்பெற்றோர் ஒருவர் ஒரு மாம்பழம் 5 ரூபாய்னா எனக்கு என்ன வயது?” எனக்கேட்டார். “உங்களுக்கு ஐம்பது வயது” என்றார் ஆசிரியர். அவர் “சரி” எனக் காணாமல்போனார். வகுப்பு முடிந்த பிறகு முதல்வர், “எப்படி அவருடைய வயதைச் சொன்னீர்கள்?” என்றார். “எங்க வீட்டருகே அரைகுறையாக மனநிலைபாதிக்கப்பட்ட ஒருவர்க்கு இருபத்தைந்து வயது” என்றார் ஆசிரியர். அதனால் பெண்களே மற்றவர்களை நன்றாகப் புரிந்துகொள்கிறார்கள் நன்றி !

ஆண்களே- 3: கணவன் குடிச்சுட்டு வந்து மனைவியை அடிச்சார். “ஏன்யா அடிக்கிற? மனுஷன் தானா நீ? உன்னை நம்பி வந்த பொண்ண இப்படியா அடிப்ப” எனக் கேட்டனர். உடனே அவன், “எனக்கு மட்டும் பாசம் இல்லைனா நெனக்கிறீங்க . அவதாங்க என் உயிரு”. “அப்ப ஏன்யா அடிக்கிற” எனக்கேட்டனர் “இல்லாட்டி அவ அடிப்பாயா ! அதான்” என்றான். இப்படியும் மனைவியைப் புரிந்துகொள்கின்ற கணவனும் உண்டுதானே.

“அம்மா சமையல் செய்றாங்களான்னு ஆயா,  கைப்பேசியில் கேட்டாங்களே’ ஏன் சொல்லலே.” எனக் கேட்டான் மகன். “சொன்னால், உங்கம்மா என்ன கேட்பாங்கன்னு தெரியாதா? மத்த மருமக எல்லாம் வேலைக்குப் போறா. நான் வீட்ல சமையல் செய்றேன்னு குத்திக்காட்டத்தான் ‘சமைக்கிறாளான்னு’ கேட்டிருப்பாங்க. என அம்மாவைத் திட்டுவாள். இது தேவையா?” என்றான். அதனால், மற்றவர்களை ஆண்களே நன்றாகப் புரிந்துகொள்கிறார்கள். நன்றி.

பெண்களே- 3 :

     தாயானவள் நினைத்தால் ஒரு மகனை வெற்றியாளனாக மாற்றிவிடமுடிகிறது. வீர சிவாஜியை ; மகாத்மா காந்தியை  என எத்தனையோ பேருண்டு.   

“என்னிடம் பத்து மரத்துப் பெயர் கேட்டாங்க. பதில் சொன்னேன். வேலை இல்லைன்னு சொல்லிட்டாங்க” என்றான் கணவன். “நீங்க என்ன பதில் சொல்லி இருப்பீங்கன்னு எனக்குத்தெரியும். “ஐந்து வேப்பமரம் ஐந்து புளியமரமுன்னுதானே சொன்னீங்க”. என்றாள்.

மகனுடைய நண்பன் ஒருவன் :’அம்மா ! உங்க மகனுக்கு எங்க கம்பெனியில வேலை கெடச்சிடுச்சு. என்றான். “தெரியும். இப்பதான் ஜோசியன் அவன் ஜாதகப்படி இந்த மாதம் எதுவும் உருப்படாது” எனச்சொன்னார். இப்படி கணவரையும் மகனையும் புரிந்துகொண்டவள் பெண்தானே? அதனால் மற்றவர்களைப் பெண்களே நன்றாகப் புரிந்துகொள்கிறார்கள் நன்றி.

நடுவர்: பட்டிமண்டபத்து நடுவர் என்றால் நல்ல கருத்துக்களை நடுபவர் என்றே பொருள். அவ்வகையில் நல்ல கருத்துக்களை எல்லாம் இப்போது பேசிய, அறுவர் அல்ல ஆறுபேரும் அழகாகத் தம் கருத்தை முன்வைத்தனர்.

     மனைவியிடம் சண்டைபோட்ட கணவன், சட்டையை மாட்டிக்கொண்டு வெளியே போனான். “வெயிலில் வெளியே போகாதே” எனத் தாய் சொல்கிறாள். கேட்காமல் போகிறான். உடனே மருமகளிடம் “என் புள்ளய கெடுத்து வெச்சுருக்க” என்றாள். “நானா கெடுத்தேன். அவர்தான் கெடுத்தார். அதனால்தான் நாலு பேரக்குழந்தைங்க. என்பேச்சைக் கேட்டு இரண்டோட நிறுத்தி இருக்கலாம். காசு பிரச்சினை இல்லாம இருந்திருக்கும். இப்ப சண்டைனா என்ன பண்றது. சாப்பாட்டு செலவுக்காவது பணம் கொடுக்கணும் இல்லையா?”. என்றாள். “அதுக்கு இப்படியா திட்டி வெயிலில் அனுப்புவ. அவன மடிமேல பூவாட்டம் தாங்கினேன். தெரியுமா” என்றாள் மாமியார். “நீங்க தாங்கும்போது ஐந்துகிலோ. இப்ப அவர் எவ்வளவு கிலோ தெரியுமா? வீட்டுத்தேவைக்கு காசு கொடுத்தா நான் ஏன் அவரை குறை சொல்லப்போறேன்” என்றாள். கணவனையும் மாமியாரையும் கையாள்வது  ஒரு கலை தானே.

     புகுந்தவீட்டினையே சொந்தவீடாக மாற்றும் திறமை ஆணைவிட பெண்ணுக்குத்தானே அதிகம். தனியாக வந்து அனைவரையும் புரிந்துகொண்டு செயலாற்றும் திறனுடையவளாகப் பெண்தானே இருக்கிறாள் ; சிறக்கிறாள்.

எனவே, மற்றவர்களைப் புரிந்துகொள்வதில் வல்லவர்கள் பெண்களே என உங்கள் கரவொலியைக் கொண்டு தீர்ப்பு வழங்குகிறேன். நன்றி ! வணக்கம் !