இலக்கியம் காட்டும் சுவர்க்கம் - Route for Heaven
உடுப்பது
உடையானது போல் கொடுப்பது கொடையாயிற்று.
மக்கட் பிறவியின் பயன் பிறர்க்குக் கொடுத்து வாழ்வதே. இதனை இலக்கியங்கள் ஏதேனும் ஓர் கருப்பொருளைக்கொண்டு காலந்தோறும் உணர்த்திவருவதனைக்
காணமுடிகிறது. தமிழர்கள்
வீடுகட்டும்போது பிறர் ஓய்வெடுத்துச்செல்ல திண்ணை கட்டினர். வெயிலில்
நடந்து செல்லும் போது களைப்பாற நீர்ப்பந்தல், மோர்ப்பந்தல் சத்திரம்,
சாவடி என அமைத்து வழிப்போக்கர்களைக் காத்தனர். இவ்வறத்தைத் தொடர்ந்து செய்தல் வேண்டும் எனச் சிறுபஞ்சமூலம் எடுத்துரைக்கிறது.
மக்களின்
நீர் தேவையினை நிறைவு செய்யும் வகையில் குளம் வெட்டுவர். வெயில் தாக்காத வகையில்
கிளைகளை நட்டு மரமாக்கி நிழற்பாதை அமைப்பர். மேடு பள்ளங்களுடைய
கரடுமுரடான வழியினைச் சீராக்கிப் போக்குவரத்தை எளிதாக்குவர். தரிசு நிலத்தை உழுது விளை நிலமாக்குவர். ஊருக்குள்ளேயே
மக்களின் தாகத்தைத் தீர்க்க கிணறு வெட்டுவர். இவ்வைந்து தொழிலையும்
செய்வோர் சுவர்க்கத்தை அடைவர் எனச் சிறுபஞ்சமூலத்தின் அறுபத்தாறாவது பாடல் வழிகாட்டுகிறது.
குளம்தொட்டுக்
கோடு பதித்துவழி சீத்து
உளந்தொட்டு
உழுவயல் ஆக்கி – வளந்தொட்டுப்
பாகு
படுங்கிணற்றோடு என்றிவ்வைம் பாற்படுத்தான்
ஏகும்
சுவர்க்கத்து இனிது
மானிடர்க்கு மூன்று பக்கம் படிக்கட்டுகள்
வைத்தும் கால்நடைகளுக்கு ஒரு பக்கம் சரிவான பாதையும் அமைத்து குளம் வெட்டுவதும் உண்டு.
நாடாள்பவரே இச்செயல்களைச் செய்யவேண்டும் என்பதில்லை. மக்களும் செய்யலாம் என்பதனையே இப்பாடல் உணர்த்தி நிற்கின்றது. அப்போது சுவர்க்கம் இங்கேயே வந்துவிடும் தானே.
*****************