கடவுளுக்கு உங்களைப் பார்க்கவேண்டுமே
“யாராவது காப்பாத்துங்க” எனச் சொல்லி முடிப்பதற்குள்
மூழ்கி விடுகிறான் ஒரு சிறுவன் அவனுடன் விளையாடியவன் திரும்பிப்பார்ப்பதற்குள் கைமட்டும்
ஆடிக்கொண்டிருந்தது. உடனே மற்றொருவன் அந்தக் கையைப் பிடித்துவிட்டான். ஆனால் அவனையும்
இழுத்துவிட்டான் முதலில் மூழ்கியவன். மூன்றாவது ஒருவன் கைகொடுக்க, அவனும் உள்ளுக்கு
இழுக்கப்பட்டான். கடைசியாக இவர்கள் மூவர் விளையாடுவதை வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருந்த
சிறுவன் கையைக்கொடுக்காமல் தலைமுடியைப் பிடித்து இழுத்தான். ஒவ்வொருவருவராய் வெளியில்
வந்தார்கள். முதலில் சென்றவன் மயங்கிக்கிடந்தான். தண்ணீர் தெளித்து கன்னத்தில் தட்டி
வயிற்றை அழுத்தி போனஉயிரை ஒரு சிறுவன் கொண்டுவந்துவிட்டான். ஒருவர்பின் ஒருவர் மூழ்கினாலும்
ஒருவர் மற்றொருவரை விடாமல் இருந்ததுதான் ஒவ்வொருவரும்செய்த புண்ணியம். கடைசியில் இருந்த
சிறுவனை அனைவரும் தெய்வமாகவே பார்த்தார்கள். ஆம், அந்த நான்கு சிறுவர்களும் வெளியூரிலிருந்து
கோவிலுக்கு வந்தவர்கள்.
கோயிலுக்குப்பக்கத்தில் வயல்வெளி. கொஞ்சமாக
சேற்றுநிலத்தில் தண்ணீர். தாய் தந்தை செல்லவேண்டாம் எனக் கூறினாலும் கேட்காமல் சென்றனர்.
அங்கு மகிழ்ச்சியாக விளையாடியபோது நடந்த நிகழ்வுதான் இது. அந்நிகழ்வுக்கு ஐந்து நிமிடங்களுக்கு
முன்னால்தான் அந்தக்கோவிலில் கூழு கொடுத்தார்கள். கூழினை விரும்பாது மூவர் ஓடிப்போனார்கள்.
சிறுவன் மட்டும் கூழ் குடித்தான். அதனால், அம்மன் அருள்தான் இந்தச்சிறுவனாக வந்து எங்களைக்
காப்பாற்றியது எனத் தலைமேல் தூக்கிவைத்துக்கொண்டாடினர். தாயும் தந்தையும் காப்பாற்றிய
சிறுவனுக்கு கண்ணேறு கழித்தனர். சென்றவாரம் நடந்த நிகழ்வு இது.
“கோவிலுக்குச்
சென்று வா” எனப் பெரியோர்கள் கூறினாலும் இளையோர்கள் “நான் வரல” என்கிறார்கள். என்ன
செய்வது? பெற்ற பாவத்திற்காக பெற்றோரே கோவிலுக்குச் சென்று பிள்ளைகள் நன்றாக இருக்கவேண்டும்
என அர்ச்சனை செய்கின்றனர். உள்ளத்தை மென்மையாக மாற்றும் கலை பக்திக்குத்தானே உண்டு.
மகிழ்ச்சி வெளியே கிடைக்கும் பொருளா? உள்ளிருந்து வருவதுதானே மகிழ்ச்சி. உணர்வுகள் எத்தனை அருமையானவை. அதனை இன்று இளைஞர்கள்
கைப்பேசிகளிடம் மட்டுமே வெளிப்படுத்துகிறார்கள். எப்போதாவது அவர்கள் மன அமைதியுடன்
இருப்பதைக் காணமுடிகிறதா? எப்போதும் கைப்பேசியில் பதற்றத்துடன் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்.
அல்லது கண்ட நிகழ்ச்சிகளைக்கண்டு மனதைக் கெடுத்துக்கொள்கிறார்கள். அவர்களை மாற்றவேண்டியது
பெரியோர்கடமைதானே.
உடைமைகளும் பதவிகளும் பெறுவதற்காக உழைப்பவர்கள்கூட
மன அமைதிக்காகக் கோவிலுக்குச் செல்வதனைக் காணமுடிகிறது. எனவே, நாள்தோறும் கோவிலுக்குச்செல்லவேண்டும்.
நடைபயிற்சியும் மனப்பயிற்சியும் நலம்தரும். எல்லா உயிரினங்களையும் விட அழகாக, அறிவாக
மனிதனைப் படைத்த கடவுளுக்கு நன்றி கூற வேண்டாமா? நன்றியுணர்வுக்காக இன்னொரு இனிய நிகழ்ச்சி
ஒன்றைக் கூறட்டுமா?
ஒரு யானை பள்ளத்தில் விழுந்து எழமுடியாமல்
தவிக்கிறது. அந்தப்பக்கம் பொக்லைன் எந்திரம் ஓட்டிவந்த ஒருவர் யானை தவிப்பதைப் பார்க்கிறார். கை போன்ற அள்ளும் அந்த கருவியை பின் பக்கமாகத் திருப்பி
யானையின் பின்னேமுட்டி தூக்கிவிடுகிறார். யானை மேலேறிவிடுகிறது. மேலேறி வந்தயானை உடனே
அந்த இடத்தைவிட்டுப்போய்விடவில்லை. யானை அந்த எந்திரத்தை திரும்பிவந்து முட்டி அன்பை
வெளிப்படுத்துகிறது. யானை எப்படி தலையை ஆட்டுமோ அந்த பொக்லைன் ஓட்டுநரும் அந்தக்கருவியை
ஆட்டுகிறார். என்ன அருமையான நிகழ்ச்சி. இதுவும் யாரோ படம்பிடித்த அருமையான நிகழ்வுதான்.
நன்றியுணர்வுக்கு இதனைக் கூறலாம்தானே?
பாரா ஒலிம்பிக் என்னும் ஒரு போட்டி. மாற்றுத்திறனாளிக்காக
நடைபெறும்போட்டி. இதில் எத்தனைத்துணிவுடன் போட்டி போடுகிறார்கள். அனைத்து உறுப்புகளையும்
இயல்பாகக் கொண்டவர்கள் சிலர் சோம்பலால் தண்ணீர் கூட எடுத்துக்கொடுக்க பிறரை அழைப்பர்.
இந்நிகழ்வை வீடுகளில் பார்க்கலாம்தானே. எனவே, கடவுளுக்கு நாளும் நன்றி கூறும் பழக்கத்தினை
வழக்கமாக்கிக்கொள்ளவேண்டும்
கோயிலுக்கு எதற்குப் போகவேண்டும். கோவிலுக்குச்
சென்று நீங்கள் இறைவனைப் பார்க்கவேண்டும் என்பதற்காக அன்று. கடவுளுக்கு உங்களைப்பார்க்கவேண்டும்
எனத்தோன்றும்தானே.
உங்களுக்காக மட்டுமே நீங்கள் படைக்கப்படவில்லை.
எத்தனைபேர் உங்களால் பயன்பெறவேண்டியிருக்கும் என அறிவீரா? ஒரு சிலர் இலட்சம் பேருக்கு
வேலை கொடுக்கிறார்கள், பலர் ஆயிரம் பேருக்கு வேலை கொடுக்கிறார்கள். இன்னும் பலர் நூற்றுக்கணக்கான
; பத்துக்கணக்கான மக்களுக்கு வேலைகொடுக்கிறார்கள். ஏன் ஒருவரை வாழவைத்தாலும் அது எவ்வளவு
பெரிய பெருமை. அப்படி சிலர் வேலை கொடுப்பதற்காகப் பிறந்திருப்பார்கள் ; சிலர் வேலை
செய்யப் பிறந்திருப்பார்கள். இருவரும் பெருமைக்குரியவர்கள்தான். கடவுள் யாருக்கு என்ன
கடமை கொடுத்திருக்கிறார் என்பதை உணரமுடியாதே !
குளத்தை வெட்டினால் மழைநீர் தேங்கும். குளம் கட்ட
வேண்டிய இடத்தில் மணலை அள்ளிவிட்டாலோ, வீடுகட்டி விட்டாலே மழைநீர் என்னாகும்?. அதுபோலத்தான்,
கடவுளின் கருணை. ஏற்றுக்கொள்ளும் வகையில் கருணையோடு வாழவேண்டும். எப்போது யாருக்குக்
என்ன கிடைக்கும் எனக் கூறமுடியாது. எவர் வழியாவது நன்மை நிகழும். அந்த ஒருவர் நீங்களாகக்
கூட இருக்கலாம்தானே.
அனைத்து உயிர்களும் கடவுளின் படைப்பு என்பதனை
உணர்ந்தாலே கடவுள் உங்களை கவனிக்கத்தொடங்குவார். ஆனால் உண்மையான கருணையாக இருக்கவேண்டும்.
யாரேனும் ஏழையைப் பார்த்து ‘உச்’ கொட்டிவிட்டு கார் கண்ணாடியை மேலேற்றிவிட்டு படம்பார்த்துக்கொண்டு
செல்வதில் என்ன இருக்கிறது. துளியேனும் பயனுண்டா.
அப்படி பலபேரை நீங்கள் பார்த்திருப்பீர்கள். நான் படித்த ஒருநிகழ்வைக் கூறினால் நீங்களே
வியப்பீர்கள்.
ஒரு வடை விற்கும் சிறுவன் தொடர்வண்டியில் ஏறினான்.
(சமோசா நம் உணவன்று என்பதால் வடைக்கு மாற்றிவிட்டேன்) அவனைப் பார்த்ததும் அங்கு அமர்ந்திருந்த
இளைஞன் பக்கத்தில் அழைத்தான். “ஏன் தம்பி இவ்வளவு கஷ்டப்படுகிறாயே. என்னைப்போல் படித்திருந்தால்
மாதம் இருபத்தைந்தாயிரம் சம்பாதிக்கலாமே” எனக்கேட்டான். உடனே அந்த சிறுவன் “நானும்
படித்திருக்கிறேன். இந்த வேலை பிடித்திருப்பதால் செய்கிறேன்” என்றான். “சரி! ஒரு நாளைக்கு
எத்தனை வடை விற்பாய்?” எனக் கேட்கிறான் இளைஞன். “ஒரு வண்டிக்கு இருநூறு வடை விற்றுவிடுவேன்.
ஒரு நாளைக்கு இருபதுவண்டி. நாலாயிரம் வடை விற்றுவிடுவேன்” என்றான். “அப்படியா ! என
வாயைப்பிளந்துமூடி “எவ்வளவு பணம் இலாபம் கிடைக்கும்” எனக் கேட்கிறான். “ஒரு வடைக்கு
ஒருரூபாய்” என் முதலாளி கொடுப்பார் எனச்சிறுவன் கூற இளைஞன் “நான்தான் சிறுவனிடம் பாடம்
கற்க வேண்டும்” என நினைக்கிறான். வெற்று சொற்களை மட்டுமே சொல்வதை விட்டுவிட்டு முடிந்த
செயலை ஆற்றுவதில்தான் பெருமை இருக்கிறது என்பதனை கூறாமல் கூறிச்செல்கிறான் சிறுவன்.
“நம்மால் இது முடியுமா? முடியாது” என அந்தச்
சிறுவன் சென்ற பாதையையே பார்த்துக்கொண்டிருக்கிறான். கடவுளின் கணக்கினை அறிவார் யார்?