தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

புதன், 21 ஜூலை, 2021

பட்டிமண்டபம்

 


பட்டிமண்டபம்

தலைப்பு : மற்றவர்களைப் புரிந்துகொள்வதில் வல்லவர்கள் ஆண்களா? பெண்களா?

நடுவர்: மலையைக் குடைந்து ; கடலைக் கடந்து ; விண்ணை அளந்து ; மண்ணை அறிந்து ; காற்றைப் புரிந்து அனைத்துக்கலைகளிலும் பிறநாட்டார்க்கு தாயாய் விளங்கும் அன்னைத்தமிழே ! உன்னை வணங்கி இப்பட்டிமண்டபத்தைத் தொடங்குகின்றோம்.

     வாய்பேசும் மொழியைவிட கண்கள்பேசும் மொழி அழகானது. அதனை, அன்புடையவர்கள்மட்டும்தான் புரிந்துகொள்ளமுடியும். கொடுக்கும் கைகளை விட கண்ணீரைத் துடைக்கும் கைகள் மேலானவைதானே. பேச்சினைப்புரிந்துகொள்வதைவிட மௌனத்தைப் புரிந்துகொள்வோர் பெருமையானவர்கள்தானே. சரி, இப்படி மற்றவர்களைப்புரிந்துகொள்வதில் வல்லவர்கள் யார்? “ஆண்களே!” என என்னும் அணியில் மூவரும் “பெண்களே !” என்னும் அணியில் மூவரும் என ஆறு அறிஞர்கள். அறுசுவையுடன் பேசுவர்.

‘ஆண்களே’ என்னும் அணியில் அணித்தலைவர் உட்பட மூவேந்தராய் மூவர். ‘பெண்களே’ அணியில் முக்கனிபோல் மூவர்.  இனி தமிழைச் சுவைக்கலாம்தானே? முதலில் அணித்தலைவர். அடுத்து, அணியுளுள்ளவர் ஒருவர்பின் ஒருவராகத் தங்கள் கருத்தை முன்வைக்கலாம்.

ஆண்களே ! அணித்தலைவர் : தமிழ் படித்த தலைவரே !. நீங்கள் ஓர் ஆண். நாங்கள் எப்படி பேசினாலும் உங்களைப் பாராட்டுவார்கள். “எப்படி? என்று கேட்கிறீரா?” நீங்கள்தான் தொடக்கத்திலேயே ‘அறுசுவை’ யுடன் பேசுவார்கள் எனக்கூறிவிட்டீர்களே. அப்படி என்றால் எப்படியும் விடை சொல்லலாம் என்பதுதானே பொருள்.

எங்களுடைய குழந்தை பள்ளியில் பெற்றோர் நாள் கொண்டாடினார்கள். தாய், தந்தை இருவரும் வரவேண்டும். பெயர் கொடுத்துவிட்டுவர என் மனைவி கூறினாள். போனேன். எனக்கு முன்னால் இருவர் சென்று திரும்பினார்கள். “என்ன கேட்டார்கள்?” எனக் கேட்டேன். “திருப்பி அனுப்பிட்டாங்க.” என்றனர். பதிவிடத்தில் இரு ஆடவர் அமர்ந்திருந்தனர். நான் உள்ளே நுழைந்ததும் அமரச்சொன்னார்கள். “இப்போட்டியில், கணவன், மனைவியைத் தூக்கிக்கொண்டு ஓடவேண்டும். யார் நிறைய தூரம் ஓடுகிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள்” என்றனர். “சரி !” என்று பெயர் கொடுத்தேன். “எனக்கு முன்னால் இருவர் வந்தார்களே ஏன் திருப்பி அனுப்பிவிட்டீர்கள்” எனக்கேட்டேன். முதலில் வந்தவர் “எனக்கு இரண்டு மனைவி’ எந்த மனைவியைத் தூக்கிக்கொண்டு ஓடவேண்டும்?” எனக் கேட்டார். அதனால் திருப்பி அனுப்பிட்டோம். இரண்டாவது வந்தவர், “மனைவியைத் தூக்கிக்கொண்டு ஓடவேண்டும்” என்றதும் “யாருடைய மனைவியை?” என்றார். அதனால் அவரையும் திருப்பி அனுப்பிட்டோம் என்றார். இப்படிப்பட்டவர்களை எல்லாம் அழைத்துப் போட்டி நடத்தமுடியுமா? அதனால்தான் திருப்பி அனுப்பிவிட்டோம் என்றார். பிரச்சினைகள் எவரால் வரும் எனஆய்ந்து முன்னரே தவிர்த்த அந்த ஆசிரியர் மற்றவர்களைப் புரிந்துகொண்டவர்தானே. “நானும் அவர்கள் வருந்தக்கூடாது” என்றுதான் பெயர்கொடுத்தேன். எனக்கும் விருப்பமில்லை. பெயர்கொடுக்காவிட்டால் மனைவி திட்டுவாள். “இப்போட்டி ஒத்துவராது போய்விடலாம்” என்று போட்டியைச் சொன்னேன். ஒத்துக்கொண்டாள் ; தப்பித்தேன் ; வீடுவந்து சேர்ந்தேன். “அப்படி என்ன சொன்னீர்கள்” எனக் கேட்கிறீர்களா?. “மனைவி கணவனைத் தூக்கிக்கொண்டு ஓடவேண்டும் என்று கொஞ்சம் மாற்றிச்சொன்னேன் அவ்வளவுதான். என்னைப்போல் பலரும் காணாமல் போனார்கள் என்றால் ஆண்கள்தானே பெண்களை நன்கறிந்து இருக்கிறார்கள். அதனால், ஆண்களே மற்றவர்களை நன்றாகப் புரிந்துகொள்கிறார்கள் நன்றி.

பெண்களே ! அணித்தலைவர் : பெண்கள் பொருத்தமான கணவனா என்பதனைக் காதலிக்கும்போதே அறிந்துகொள்வார்கள். காத்திருக்கவைப்பது? “அது ஒரு சுகம்” எனக் கவிஞர்கள் பாடுவார்கள்?. சுகமா அது,  போவோர் வருவோர் எல்லாம், வேலைவெட்டி இல்லாதவன் போலப் பார்ப்பார்கள். ஆனால், பெண் அப்படித்தான் சோதிப்பாள். திருமணத்திற்குப் பின் துணிக்கடைக்குப்போனால் காத்திருக்கவேண்டும். பாத்திரக்கடைக்குப் போனால் காத்திருக்கவேண்டும். கல்யாணத்துக்குப் போனால் காத்திருக்கவேண்டும். எங்கு போனாலும் காத்திருக்கவேண்டும். அதற்கான ஒரு முன்னோட்டமாகத்தான் காக்கவைப்பார்கள். அப்படியென்றால் மற்றவர்களைப் புரிந்துகொள்வதில் வல்லவர்கள் பெண்தானே?

     மிகவும் பொறுமையுடையவரைத்தான் திருமணம் செய்வேன், என என்னுடைய தோழி நீண்டநாள் திருமணமாகாமலே இருந்தாள். பல வருடங்கள்கழித்து அவளைப் வழியில் பார்த்தபோது திருமணமாகிவிட்டது என்றாள். “இப்பதாண்டி மகிழ்ச்சியா இருக்கு. கணவன் என்ன செய்றார்?” எனக்கேட்டேன். “புடவை கடையில் வேலை செய்கிறார்” என்றாள். அதனால் பெண்களே நன்றாகப் புரிந்துகொள்கிறார்கள் நன்றி!

ஆண்களே -2 : நான் மனைவியிடம் “பள்ளிவிளையாட்டுவிழாவுக்கு விளையாட்டுவீரரை அழைக்கச்செல்கிறேன். எப்படி பேசுவார்ன்னு தெரியலை” என்றேன். உடனே அவள், “கால்பந்து வீரரா- திறமையாபேசுவார், இறகுபந்து வீரரா - மென்மையா பேசுவார். பூப்பந்து வீரரா - மணமாகப் பேசுவார். ஓட்டப்பந்தய வீரரா - பாய்ச்சல் பாய்ச்சலா பேசுவார். நீளம் தாண்டும் வீரரா - குதிச்சுகுதிச்சுப் பேசுவார். உயரம் தாண்டும் வீரரா -எகிறிஎகிறிப் பேசுவார். குத்துச்சண்டை வீரரா - அடிச்சு அடிச்சுப் பேசுவார்.” என்றாள். இப்படிச்சொன்ன என் மனைவிதான் மற்றவர்களைப் புரிந்துகொண்டு பேசுகிறாள் எனச் சொல்லாதீர்கள். இவர்கள் அத்தனைப்பேர் மாதிரியும் என் மனைவி பேசுவாள் எனப் புரிந்துகொண்டவன் நான்தானே. அதனால் ஆண்களே மற்றவர்களை நன்றாகப் புரிந்துகொள்கிறார்கள் நன்றி !

பெண்களே-2: ஆன்லைனில் வகுப்பெடுப்பது பெண்களுக்கு எவ்வளவு கஷ்டம் தெரியுமா? குழந்தைகளோட பெற்றோர் மனநிலையையும் தெரிந்து வகுப்பெடுக்கவேண்டும். சில நேரம் குடித்துவிட்டு குழந்தைகளின் தந்தைகள் குறுக்கே பேசுவர்.  ஒரு பழக்கூடையில் இருபது மாம்பழம் மூன்றுபேருக்கு சரிசமமாகக் கொடுக்கமுடியுமா? மீதி எவ்வளவு இருக்கும்.” எனக்கேட்டார். பெற்றோர் ஒருவர் இடைபுகுந்து “சாறு பிழிந்து மூன்று குவளையில் கொடுக்கலாமே” என்றார். ஆசிரியர் பொறுத்துக்கொண்டார். அந்த ஆசிரியரை மடக்கிவிடலாம் எனப்பெற்றோர் ஒருவர் ஒரு மாம்பழம் 5 ரூபாய்னா எனக்கு என்ன வயது?” எனக்கேட்டார். “உங்களுக்கு ஐம்பது வயது” என்றார் ஆசிரியர். அவர் “சரி” எனக் காணாமல்போனார். வகுப்பு முடிந்த பிறகு முதல்வர், “எப்படி அவருடைய வயதைச் சொன்னீர்கள்?” என்றார். “எங்க வீட்டருகே அரைகுறையாக மனநிலைபாதிக்கப்பட்ட ஒருவர்க்கு இருபத்தைந்து வயது” என்றார் ஆசிரியர். அதனால் பெண்களே மற்றவர்களை நன்றாகப் புரிந்துகொள்கிறார்கள் நன்றி !

ஆண்களே- 3: கணவன் குடிச்சுட்டு வந்து மனைவியை அடிச்சார். “ஏன்யா அடிக்கிற? மனுஷன் தானா நீ? உன்னை நம்பி வந்த பொண்ண இப்படியா அடிப்ப” எனக் கேட்டனர். உடனே அவன், “எனக்கு மட்டும் பாசம் இல்லைனா நெனக்கிறீங்க . அவதாங்க என் உயிரு”. “அப்ப ஏன்யா அடிக்கிற” எனக்கேட்டனர் “இல்லாட்டி அவ அடிப்பாயா ! அதான்” என்றான். இப்படியும் மனைவியைப் புரிந்துகொள்கின்ற கணவனும் உண்டுதானே.

“அம்மா சமையல் செய்றாங்களான்னு ஆயா,  கைப்பேசியில் கேட்டாங்களே’ ஏன் சொல்லலே.” எனக் கேட்டான் மகன். “சொன்னால், உங்கம்மா என்ன கேட்பாங்கன்னு தெரியாதா? மத்த மருமக எல்லாம் வேலைக்குப் போறா. நான் வீட்ல சமையல் செய்றேன்னு குத்திக்காட்டத்தான் ‘சமைக்கிறாளான்னு’ கேட்டிருப்பாங்க. என அம்மாவைத் திட்டுவாள். இது தேவையா?” என்றான். அதனால், மற்றவர்களை ஆண்களே நன்றாகப் புரிந்துகொள்கிறார்கள். நன்றி.

பெண்களே- 3 :

     தாயானவள் நினைத்தால் ஒரு மகனை வெற்றியாளனாக மாற்றிவிடமுடிகிறது. வீர சிவாஜியை ; மகாத்மா காந்தியை  என எத்தனையோ பேருண்டு.   

“என்னிடம் பத்து மரத்துப் பெயர் கேட்டாங்க. பதில் சொன்னேன். வேலை இல்லைன்னு சொல்லிட்டாங்க” என்றான் கணவன். “நீங்க என்ன பதில் சொல்லி இருப்பீங்கன்னு எனக்குத்தெரியும். “ஐந்து வேப்பமரம் ஐந்து புளியமரமுன்னுதானே சொன்னீங்க”. என்றாள்.

மகனுடைய நண்பன் ஒருவன் :’அம்மா ! உங்க மகனுக்கு எங்க கம்பெனியில வேலை கெடச்சிடுச்சு. என்றான். “தெரியும். இப்பதான் ஜோசியன் அவன் ஜாதகப்படி இந்த மாதம் எதுவும் உருப்படாது” எனச்சொன்னார். இப்படி கணவரையும் மகனையும் புரிந்துகொண்டவள் பெண்தானே? அதனால் மற்றவர்களைப் பெண்களே நன்றாகப் புரிந்துகொள்கிறார்கள் நன்றி.

நடுவர்: பட்டிமண்டபத்து நடுவர் என்றால் நல்ல கருத்துக்களை நடுபவர் என்றே பொருள். அவ்வகையில் நல்ல கருத்துக்களை எல்லாம் இப்போது பேசிய, அறுவர் அல்ல ஆறுபேரும் அழகாகத் தம் கருத்தை முன்வைத்தனர்.

     மனைவியிடம் சண்டைபோட்ட கணவன், சட்டையை மாட்டிக்கொண்டு வெளியே போனான். “வெயிலில் வெளியே போகாதே” எனத் தாய் சொல்கிறாள். கேட்காமல் போகிறான். உடனே மருமகளிடம் “என் புள்ளய கெடுத்து வெச்சுருக்க” என்றாள். “நானா கெடுத்தேன். அவர்தான் கெடுத்தார். அதனால்தான் நாலு பேரக்குழந்தைங்க. என்பேச்சைக் கேட்டு இரண்டோட நிறுத்தி இருக்கலாம். காசு பிரச்சினை இல்லாம இருந்திருக்கும். இப்ப சண்டைனா என்ன பண்றது. சாப்பாட்டு செலவுக்காவது பணம் கொடுக்கணும் இல்லையா?”. என்றாள். “அதுக்கு இப்படியா திட்டி வெயிலில் அனுப்புவ. அவன மடிமேல பூவாட்டம் தாங்கினேன். தெரியுமா” என்றாள் மாமியார். “நீங்க தாங்கும்போது ஐந்துகிலோ. இப்ப அவர் எவ்வளவு கிலோ தெரியுமா? வீட்டுத்தேவைக்கு காசு கொடுத்தா நான் ஏன் அவரை குறை சொல்லப்போறேன்” என்றாள். கணவனையும் மாமியாரையும் கையாள்வது  ஒரு கலை தானே.

     புகுந்தவீட்டினையே சொந்தவீடாக மாற்றும் திறமை ஆணைவிட பெண்ணுக்குத்தானே அதிகம். தனியாக வந்து அனைவரையும் புரிந்துகொண்டு செயலாற்றும் திறனுடையவளாகப் பெண்தானே இருக்கிறாள் ; சிறக்கிறாள்.

எனவே, மற்றவர்களைப் புரிந்துகொள்வதில் வல்லவர்கள் பெண்களே என உங்கள் கரவொலியைக் கொண்டு தீர்ப்பு வழங்குகிறேன். நன்றி ! வணக்கம் !

 

 

 

செவ்வாய், 20 ஜூலை, 2021

நட்பிலக்கணம் : அதியமானும் ஔவையும்

 


புறநானூற்றின் வழி நட்பிலக்கணம் : அதியமானும் ஔவையும்

     வாழ்க்கை என்பது வாழும் தன்மையினைக்கொண்டு மாறுபடுவது. கார்மேகம், ஒருவர்க்கு மகிழ்ச்சியையும் மற்றவர்க்கு வருத்தத்தையும் தரக்கூடும். உழவுத்தொழில் செய்வோர்க்கும் உப்பளம் கொண்டோர்க்கும் ஓரெண்ணம் தோன்றுமெனெ எண்ணுதல் ஏற்புடைத்தன்று. ஆனால், பெரும்பான்மையினரின் நலத்தைக் கொண்டும் பெரும்பயன் கருதியும் மழை போற்றப்படுகிறது. இவ்வுலக உயிர்கள் செழிப்பதற்கு அம்மழையே அடிப்படையாகிறது. எனவே, மழைபோல் வள்ளல் குணம்கொண்ட புரவலர்களாக தமிழ் மன்னர்கள் விளங்கினர். அவ்வாறு வாழ்ந்த தமிழ் மன்னர்கள் என்றும் நிலைபேறுடையவர்களாக விளங்கவேண்டும் என எண்ணிய புலவர்கள் பலர். அத்தகைய இலக்கியங்களில் தலையாயன சங்க இலக்கியங்கள். அவ்விலக்கியங்களுள் புறநானூறு தனித்த சிறப்புடையது. அப்புறநானூற்றில் தமிழ்மூதாட்டி ஔவையாரின் பாடல் மேலும் தனித்த சிறப்புடையது. அவர் பாடிய பாடல்களிலும் அதியமான் குறித்துப்பாடிய ‘கையறு நிலை’ பாடல்வழி, நட்பின் அருமையினைக்காண எண்ணியதன் விழைவாகவே இக்கட்டுரை அமைகிறது.

அதியமானும் ஔவையும்

     புரவலரெனில் இவ்வாறிருக்கவேண்டுமென வாழ்ந்தவன் அதியமான். புலவரெனில் இவ்வாறிருக்கவேண்டுமென வாழ்ந்தவர் தமிழ்மூதாட்டி ஔவையார். இவ்விருவர் கொண்ட நட்பே தலையாய நட்பு. இந்நட்பின் பெருமையினை உலகறிய எடுத்துச்சொல்லும் இலக்கியமாகவே ‘புறநானூறு’ அமைகிறது. ஏனெனில், மன்னர்களின் புகழை உலகறியச்செய்யும் கலைஞர்களாகவே புலவர்கள் திகழ்ந்தனர். அவர்களுடைய சொல்வெட்டுக்கள் அனைத்தும் பாடல்களாக இலக்கியங்களில் இடம்பெற்றன. அத்தகைய பாடல்களின் வழி அதியமானின் இயல்புகளைச் சுட்டிக்காட்டியவர் ஔவையார். அவருடைய பாடல் வழியாக அதியமானுடைய நட்பு இலக்கணத்தை எடுத்துக்காட்டியுள்ளதனைக் காணமுடிகிறது. தனது வாழ்நாள் நீட்டிக்கும் கருநெல்லிக்கனியினை ஔவையாருக்குக் கொடுத்த  அதியமானின் நட்பின் பெருமையே இக்கட்டுரையின் ஆய்வுப்பொருளாகிறது. 

பெண்மையைப் போற்றிய புரவலன்

     ‘பெண்களை ஆண்கள் எவ்வாறு மதிக்கவேண்டும்’  என்பதனை இன்று ‘பெண்ணிய’ இயக்கங்கள் பறைசாற்றுகின்றன. ஆனால், இவை அனைத்தையும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ்ச்சமூகம் இயல்பாகப் பின்பற்றியிருந்ததனை சங்க இலக்கியங்கள் நிறுவுகின்றன. நேர்முகமாகக் குறைகளையும் புறத்தே நிறைகளையும் எடுத்தியம்பும் பெண்ணை சங்க இலக்கியகாலத்தில் காணமுடிகிறது. கல்வி அறிவில் ஆணுக்கும் இணையாகவும் ; மேலாகவும் பெண்கள் இருந்ததனை ஔவையாரின் பாடல்வழி அறிந்துகொள்ளமுடிகிறது. பெண்ணைப் போற்றிய புரவலனாக அதியமான் நின்றதனை

     நரந்த நாறும் தன்கையால்

     புலவு நாறு மென்றலை தைவருமன்னே ( புறநானூறு-235 ; 8-9)

 

என்னும் அடிகளில் புலப்படுத்துகிறார். தாயின் தலையினை வருடிவிடும் மகனைப் போல் புலவரிடம் தலையாயநட்பு கொண்டவனாக அதியமான் விளங்குவதனை இவ்வடிகள் உணர்த்தி நிற்கின்றன. புலால் நாற்றம் வீசும் தலையாயினும் வருடும் அன்பின்வழி, நட்பின் அருமையினை இப்பாடலடிகள் படம்பிடித்துக்காட்டுகிறன.

கள்ளைப் பகிர்ந்த நட்பு

     ‘கள்’ நொதிப்பதால் மட்டுமே மயக்கத்தை ஏற்படுத்தும். புளிக்காத கள் வெப்பத்தை நீக்கும் ; வாய்ப்புண், குடல்புண் நீக்கும். அத்தகைய கள்ளினை (இன்று ‘பதநீர்’) குடித்தல் மக்கள் வழக்கமாகவே இருந்தது. அத்தகைய கள்ளினைக் குடிக்கும்போதும் அதியமானும் ஔவையும் புரவலன் புலவன் என்னும் உயர்வுதாழ்வின்றி தனக்கு நிகராக அமர்த்திய நிலையினை

பெரிய கட் பெறினே

யாம் பாடத்தான் மகிழ்ந்துண்ணு மன்னே  ( புறநானூறு-235 ; 8-9)

 

என்னும் அடிகளில் புலப்படுத்துகிறார்.  ‘கள்’ மயக்கம் ஏற்படுத்துவதாயிற்றே அதனை உயர்ந்தோர் குடிப்பரோ? என்னும் அச்சம் இங்கு ஏற்படுதல் இயற்கை. திராட்சைசாறினைக் குடிப்பவரை ‘மது அருந்தினார்’ எனில், பார்ப்பவரும் கூட நிறத்தைக் கொண்டு நம்புவர். அவ்வாறு ஒவ்வொருவருடைய உணர்வுக்கேற்ப அதனைப் பெருமையாக எண்ணுவதும் சிறுமையாக எண்ணுவதும் இயல்பு. மதுவானது, கள்ளினை விட பத்து மடங்கு மயக்கத்தினை உண்டாக்குவது ; உயிரைப்போக்கும் தன்மையது. மயக்கம் தரும் கள்ளினையே கொண்டாரெனினும் அதியமான் ஔவையாரைப் பாடல்கேட்டு மகிழ்ந்த நிலையினைக் காணமுடிகிறது. இதன்வழி, இன்றைய பெண்ணுரிமை கொள்கைகளுக்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்ந்துள்ளதனையும் காணமுடிகிறது.

இனி இது கழிந்தது

     மனிதன் இறக்கும்பொழுது, அவனுடைய பண்புநலன்களும் அழிந்துவிடுகின்றன. அதியமானின் நட்பும் கொடையும் அவனுடனே அழிந்துவிட்டதனை

அருந்தலை இரும்பாணர் அகன்மண்டைத் துளையுரீஇ

இரப்போர் கையுளும் போகி

புரப்போர் புன்கண் பாவை சோர

அஞ்சொல் நுண்தேர்ச்சிப் புலவர் நாவில்

சென்று வீழ்ந்தன்று, அவன்

அருநிறத்து இயங்கிய வேலே (புறநானூறு-235 ; 10-15)

 

என்னும் பாடலடிகள் உணர்த்துகின்றன. இவ்வடிகளில் ஔவையாரின் உயர் நட்புத்திறம் புலப்படுகிறது. பகைவர் எறிந்த வேலானது,  என்னை நட்பில் வென்ற அதியமானின் நெஞ்சினைத் துளைக்கவில்லை, பாணர்களின் உண்கலத்தை ; இரந்துண்டு வாழ்வோரின் கைகளை ;  மக்களைப் பாதுகாக்கும் கருணையுடையோர் கண்களை ; புலமையுடையோர் நாவினைத் துளைத்துவிட்டது எனப் பாடியுள்ளதன் வழி அதியமானிடம் கொண்ட நட்பு புலப்படுகிறது.

கையறு நிலையில் நட்பு

உறவின் பெருமையினைப் பிரிவில் அறியமுடியும் என்பதனை ஔவையாரின் இக்கையறுநிலைப்பாடல் உணர்த்துகிறது. அதியமானிடம் கொண்ட நட்பின் திறத்தை தந்தையின் அன்போடு புலப்படுத்துவதனை

ஆசாகு எந்தை யாண்டுளன் கொல்லோ (புறநானூறு-235 ; 16)

என்னும் அடிகள் உணர்த்துகின்றன. அதியமான் வாழும்பொழுது இடித்துரைத்த ஔவையார், இக்கையறுநிலைப் பாடலில் அதியமானின் நற்குணங்களை நிரல்படுத்துவதனைக் காணமுடிகிறது.  

நிறைவாக

     தமிழ் மன்னர்களின் பெருமையினை அறிவதற்கு இலக்கியங்களே ஆவணங்களாகின்றன. அவ்வகையில் அதியமானிடம் கொண்ட நட்புத்திறத்தை ஔவையாரின் இப்பாடல் தெளிவுறுத்துகிறது.

     பெண்மைக்குரிய சிறப்பினைப் போற்றுவதில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் சிறப்புற்று விளங்கினர். இதற்கு எடுத்துக்காட்டாகவே அதியமானிடம் கொண்ட ஔவையாரின் நட்பு விளங்குவதனை இப்பாடல் உணர்த்துகிறது.

     ‘இலக்கியங்கள் மக்களின் இலக்கினை ; பண்பு நலன்களைப் போற்றுவதாக அமைகின்றன’ என்னும் கூற்றுக்கு தமிழ்மூதாட்டியின் இப்பாடல் சான்றாவதனை உணர்ந்துகொள்ளமுடிகிறது.

*************

ஞாயிறு, 18 ஜூலை, 2021

நாள்மங்கலம் என்னும் பிறந்தநாள்

 


நாள்மங்கலம் என்னும் பிறந்தநாள்

     இந்தக் கட்டுரையில் உங்களுக்கு மிகவும் பிடித்தமான ஒருவர் குறித்துத் தான் ஆய்வுசெய்ய இருக்கிறோம். “அவர்யார்?” என்றுதானே கேட்கிறீர்கள். ஆம்! அவர் நீங்கள் தான். அதுமட்டுமன்று. உங்களுக்குப் பிடித்தமான நாள் குறித்தே ஆய்வுசெய்ய இருக்கிறோம். அது  என்னவென்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். “ஆம்! உங்கள் பிறந்தநாள்தான்”.

     இலக்கியம் ஒரு கருவூலம். அனைத்து வினாக்களுக்கும் விடைதாங்கி நிற்பது. இவ்வுலகில் வாழும் ஒவ்வொருவரும் அவரவர்க்குரிய வாழ்க்கையை மட்டும்தான் வாழ்வர். அதுவே உலகியல். ஆனால், படைப்பாளிகளையோ அல்லது படிக்கும் பழக்குமுள்ளவர்களையோ பாருங்கள். அவர்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மிடுக்குடன் இருப்பதனைக் காணமுடியும். ஏனெனில், ஒவ்வொரு நாளும் அவர்கள் படிக்கும் இலக்கியத்தின் தாக்கம் அவர்களுடைய செயல்பாட்டில் புலப்படும். அவர்கள் ஒரே வாழ்நாளில், பலராக வாழ்ந்துமகிழ்வார்கள்.

இலக்கியத்தாக்கத்தை எவரையும்விட ஆசிரியர்கள் நன்கறிவர். அவர்கள் பாடம் நடத்திமுடித்தஉடன் அப்பாடத்தின் தாக்கத்தை குழந்தைகளிடம் காண்பார்கள். எனவே, இலக்கியம் படிப்பவர்கள் ஒரே வாழ்நாளில் பல்வேறு வாழ்க்கைக்குரிய இன்ப துன்பங்களை அனுபவித்துவிடுவர். அத்தகைய அருமையான தமிழ் இலக்கியங்களை, இன்றைய தலைமுறைக்குச் சென்று சேர்க்கவேண்டிய கடன் அம்மொழியினைத் தாய்மொழியாகக் கொண்ட ஒவ்வொருவர்க்கும் உரியது. அப்பணியினை சிரமேற்கொண்டு சிலர் செய்து வருவதனையும் காணமுடிகிறது. அவர்களே தமிழ்த்தாயின் தவப்புதல்வர்கள்.

     இக்கட்டுரையில் ஆய்வுக்குரியசொல்லாக ‘நாள் மங்கலம்’ என்னும் சொல்லே அமைகிறது. இச்சொல் வழக்கு அருகிவிட்டது. ஒவ்வொருவரிடமும் ‘சிறந்தநாள் எது?” எனக்கேட்டால் தங்கள் பிறந்தநாளைத்தானே சொல்வார்கள். ஒருவர் நன்றாக வாழ்ந்தால் ‘அவன் பிறந்த நேரம் அப்படி” எனத் தங்களை அமைதிப்படுத்திக்கொள்வார்கள். அத்தகைய பெருமையுடைய நேரத்தைக் கொண்டாடுவதில் தவறில்லைதானே?. அத்தகைய பிறந்தநாளை ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் கொண்டாடுவர்.

சிலர் ஏழைகளுக்கு உணவிட்டு மகிழ்வர் ; சிலர் கோவிலுக்குச் சென்று தம்மைப் படைத்தமைக்காக இறைவனுக்கு நன்றி கூறி வணங்குவர் ; சிலர் நண்பர்களுடன் சேர்ந்து மாவட்டினைத்  (கேக்)  துண்டாக்கி ; முகத்தில் பூசிக் கொண்டாடுவர். ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல் எத்தனையோ குழந்தைகள் இறப்பதனைப் பார்க்கமுடிகிறதுதானே? இப்படி உணவை வீணாக்குவோர், ஓர் ஏழைக்குழந்தையின் பசியைத் தீர்க்கலாம்தானே? இனியாவது அவ்வாறு கொண்டாடினால் அதுவே சிறந்தநாளாகும்.

      தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் நாள்மங்கலம் பெருமையுடையது ; எக்காலத்துக்கும் வழிகாட்டுவது. பாடப்படும் ஆண்மகனது ஒழுகலாறுகளை விளக்கும் ‘பாடாண் திணையின்’ இருபத்து மூன்றாவது துறையான ‘நாள்மங்கல’ வெண்பா இத்திருநாளின் அருமையினைச் சுட்டிக்காட்டுகிறது.

     கரும் பகடும் செம்பொன்னும் வெள்ளணி நாட்பெற்றார்

     விரும்பி மகிழ்தல் வியப்போ- சுரும்பிமிர்தார்

     வெம்முரண் வேந்தரும் வெள்வளையார் தோள்விழைந்து

      தம்மதில் தாம்திறப்பர் தாள்

                                    (புறப்பொருள்வெண்பாமாலை.பா.தி.வெண்பா:23)

என்னும் வெண்பா, நாள்மங்கலத்தை எவ்வாறு கொண்டாடவேண்டும் என வழிகாட்டுகிறது. தான் மகிழ்வதற்காக இவ்வுலகில் பிறப்பு  அமையவில்லை. “பிற உயிர்களுக்குத் தம்மால் இயன்ற நன்மைகளைச் செய்யவேண்டும் என்பதற்காகவே இப்பிறவி” என்பதனை உணர்த்துவதாகவே இவ்வெண்பா அமைந்துள்ளது.

     மன்னன், தான்பிறந்த நாள்மங்கலத்தில் தம்மைச் சார்ந்தோர்க்கு வளம் வாய்ந்த எருதுகளைக் கொடுப்பான். இதனால் ஏழைகள் வறுமைநீக்கி வளமாக வாழ்வர். செம்பொன்னை அளித்து மகிழ்வான் ; அவ்வாறே வெள்ளணிகளையும் அளித்து மகிழ்வான். ஒவ்வொருவரின் தேவையினை அறிந்து அவரவர்க்குத் தேவையான பொருட்களை கொடையளித்து மகிழ்வான்.

கொடையினைப் பெற்றவர்கள் தங்கள் புதுவாழ்வை எண்ணி மகிழ்வர். இந்நிகழ்வோடு நில்லாமல் பகைவரும் மகிழும் வகையில் போர்செய்யான். அத்தகைய அருநாளாம் “நாள்மங்கலத்” திருநாள் என்பதனையும் தெளிவுபடுத்துகிறது இப்பாடல்.

“இத்திருநாளில் மன்னன் போர்செய்யமாட்டான்” எனப் பகை வேந்தரும் எண்ணினர் ; அச்சம் நீங்கினர் ; வெண்மையான அணிகலன்களை அணிந்த தம் மகளிரை அடைவதற்காக அடைத்திருத்த தம் மதிற்கதவுகளைத் திறந்தனர்.

இதுவே நாள்மங்கலத்தின் சிறப்பு. “தம்மவரை மட்டுமின்றி எதிரிகளையும் அச்சத்தில் நிறுத்தாமல் மகிழ்வாக வாழச்செய்யவேண்டும்” என எண்ணிய மன்னனின் சிறப்போடு இந்நாளின் சிறப்பும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

மன்னனது அறநெறி தவறாத செங்கோலின் திறத்தினையும் ; அருள் உள்ளத்தையும் வெளிப்படுத்துவதே ‘நாள் மங்கலம்’ என்பதனை

அறிந்தரு செங்கோல் அருள்வெய்யோன்

பிறந்தநாட் சிறப்புரைத் தன்று

 (புறப்பொருள்வெண்பாமாலை.பா.தி.:23)

என இலக்கணம் வகுத்துள்ளார் புறப்பொருள் வெண்பாமாலையின் ஆசிரியர் ஐயனாரிதனார்.

ஒரு அம்மையார், மிகவும் சோகத்துடன் கோவிலுக்குள் நுழைகிறார். எதிர்வந்த தோழியோ “ஏன் சோகமாக வருகிறீர்” எனக் கேட்கிறார். “மகனுக்குப் பிறந்தநாள்” என்றார். “மகிழ்ச்சிதானே” எனத்தோழி சொல்ல, “நான் கோவிலுக்குள் வரமாட்டேன் என வெளியே நிற்கிறான்”  என வருத்தமுடன் கூறினாள். “இவன் மட்டும் இப்படி இல்லை. இப்படித்தான் சில இளைஞர்கள் கோவிலுக்குள் வருவதில்லை. “திரைப்படநாயகன் இயக்குநரின் சொல்கேட்டு அவ்வாறு நடிக்கின்றார். அதுவே வழியென்று பித்தாகி விடுவதுதான் கொடுமை. விட்டுவிடுங்கள். உங்கள் வேண்டுதலே அவனை நன்றாக வாழ்த்திடும்” எனக் கூறினாள். சோகமுகத்தில் புன்னகை நிரம்பிற்று. தோழி ஒருத்தி ஒரு நொடியில் சோகத்தைத் தீர்த்துவிட்டாள். பெற்ற பிள்ளை பெற்றவளை வருத்தப்படவிடலாமா? செய்யக்கூடாதுதானே?

யார் என்ன கூறினாலும் அன்புடன் வாழவேண்டும் ; பகை நீக்கி வாழவேண்டும். ஒவ்வொரு நாள்மங்கலத்திலும் இதற்கான உறுதியினை ஏற்கவேண்டும். இதுவே வாழ்வின் இலக்கணம். எப்படி எனக் கேட்கிறீரா? இலக்கணத்தின் முன்னோடி, தொல்காப்பியரே முன்மொழிகின்றார்.

சிறந்த நாளணி செற்றம் நீக்கிப்

பிறந்த நாள்வயிற் பெருமங்கலமும்” (தொல்காப்பியம்.புற.தி.88:7-8)

எனத் தொல்காப்பியம் கூறிய வழியில் நாள்மங்கலத்தைக் கொண்டாடலாம்தானே?

 

சனி, 17 ஜூலை, 2021

தலைமையுரை – இப்படி அமையலாமே

 


தலைமையுரை – இப்படி அமையலாமே

ஆடித்திங்களில் அடி எடுத்துவைக்கும் இனிய இந்நாளில் (17.07.2021) எழிலுற நடக்கும் இவ்விலக்கிய விழாவிற்கு வருகை தந்திருக்கும் உங்கள் அனைவரையும் ‘தலைமை’ என்னும் முறையில் வருக ! வருக! என வரவேற்கின்றேன்.

     கற்றோர் தம் படைப்புத்திறனை வெளிப்படுத்திச்செல்ல அமைக்கப்பட்ட சாலை இது ;  புதுவையின் இலக்கியச்சோலை இது.

     ஒவ்வொரு திங்களும் பெரியோரைப் போற்றவேண்டிய கடமை நமக்குண்டு என்பதாலே, இவ்வமைப்பின் நிறுவனர் வடுகை கண்ணன் அவர்களும் தலைவர் சோமசுந்தரனாரும் மூன்று தலைவர்களைத் தலைப்பாகக் கொடுத்துள்ளார்கள்.

திங்களுக்கு ஒரு விழா நடத்துகிறோம். இத்திங்கள் விழாவில் மூன்று திங்களைப்பற்றி பேசவேண்டும். ஏனெனில், ‘இலக்கியச்சோலை, என்றுமே எவரையும் கைவிட்டதில்லை’ என்று சொன்னார் தலைவரவர். அப்போதுதான், இச்சோலையில் மலர்ச்செடிகள் மட்டுமன்று ; மூலிகைச்செடிகளும் உண்டு ; பயன் தரும் கொடிகளும் உண்டு. அதனால்தான் பார்போற்றும் திருவள்ளுவர், ‘வீரத்துறவி’ சுவாமி விவேகானந்தர், ‘செயல்வீரர்’ காமராசர்,  என மூன்று திங்க(தலைவர்)களைப் போற்றும் வகையில் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதென்று நினைத்துக்கொண்டேன். இருளில்தானே திங்கள்தோன்றி ஒளிகொடுக்கும். அப்படி ஒளிகொடுத்தவர்களே இம்மூவர். இதைச்சொல்ல இங்கே கவிஞர் கூட்டம் காத்துக்கொண்டிருக்கிறது.

     பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் விரும்பும் ‘மை’ ஒன்று இருக்கிறதென்றால் அது ‘தலைமை’ தான். அதுமிகவும் ஆபத்தானது. எத்தனைப் பாராட்டுகளுக்குரியதோ அத்தனை வசவுகளுக்கும் உரியது. இரண்டையும் ஒன்றாக நோக்கும் பக்குவம் தலைமைக்கு வேண்டும். “பக்குவம் என்றால் என்ன?” என்று உங்களுக்குத் தெரியும்தானே? ஒருவர் குறை சொன்னாலும் அவரைப் பற்றிய நிறைவினைச் சொல்லுவதே பக்குவம். “நீ ஒரு முட்டாள்”  என்று யாராவது சொன்னால், “ஆம், முள் தாள்தான். என்னைக் கிழியாமல் காப்பாற்றுவது உங்கள் பொறுப்பு” எனக் கூறிவிடவேண்டும். அப்போதுதான் எதிரிகள் கூட உதிரிகள் ஆவர்.

‘தலைமை’ என்பது எல்லோரையும் படியாக வைத்துக்கொண்டு உச்சியில் ஏறிவிடுவது மட்டுமன்று. ஏறியபிறகு, யாரெல்லாம் படியாக நின்றார்களோ அவர்களையெல்லாம் மேலேற்றி அழகுபார்ப்பது. அதுவே தலைமைக்கு அழகு.  அப்படி முன்னோர் காட்டியவழியில்தான் இவ்விழாவில் பங்கேற்றிருக்கின்றேன்.

     இங்கு பலரும்  பல அரங்குகளில் அழகு சேர்த்தவர்கள் ; கவி வார்த்தவர்கள். இவர்கள் அனைவரும் கவிபாடும் அழகினைக் காண்பதற்கே ஐவர் பெருமக்கள் முன்னிலை வகிக்க வந்துள்ளார்.

     முதலாமவர், இலக்கியச் சோலையின் நிறுவனர் வடுகை. கு.கண்ணன் ஐயா, இவர் பெண்களைப் போற்றுவதில் மன்னன் ; அதனால்தான் இவர் கண்ணன். தன் மனைவிக்கென்றே தனி காவியம் படைத்தவர். பூக்களைப் போல பாக்களைத் தொடுத்தவர்.

இரண்டாமவர்,  கவிஞர் பைரவி, இவர் இல்லாத தமிழ்மேடையினைப் புதுவையில் காண இயலாது. தேனீ கூட இவரிடம் தோற்றுப்போகும் எனச் சொன்னால் மிகையாகத்தான் இருக்கும். ஆனால், இவருக்கும் தேனீக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. பூக்களிலிருந்து தேனைச் சேகரிக்கும் தேனீ போல இவர்  கவிஞர்களைக் கூட்டி விழா எடுப்பதில் வல்லவர் ; எம் போன்றோரிடம் பழகுவதில் நல்லவர்.

மூன்றாமவர், சரஸ்வதி வைத்தியநாதன. இவர் பெயரொன்றே இவ்விழா சிறப்படைய வழி செய்யும். தமிழ்ப்பணியைத் தளராமல் செய்பவர். விழாக்களில் பங்கேற்பார் ; கவி தொடுப்பார் ; விழா நிறைவு வரை செவிமடுப்பார்.

நான்காமவர், பேராசிரியர் உரு.அசோகன். பெயருக்கு ஏற்ற புன்னகை முகம் கொண்டவர். இவரிடம், யார் சோகமாக வந்தாலும் அசோகமாக மாற்றிவிடுவார். பின்னாளில், ‘இவர் இப்படித்தான் இருப்பார்’ என உணர்ந்து பெயர் வைத்த தீர்க்கதரிசியான பெற்றோர்க்குப் பாராட்டுக்கள்.

ஐந்தாமவர், கவிஞர் ரவி, இவர் வராமல் உலகம் விடியாதுதானே?.  எழுச்சியை உண்டாக்கும் கவிதைகளைப் பாடும் திறம் படைத்த கவிஞர்  இவர்.

அருமையான திறம் படைத்த முன்னோர்கள் முன்னிலையில் திறமையான கவிஞர்கள் மூவரைப் பற்றி முறையாகப் பாடவந்துள்ளீர். திறம் படைத்த கவிஞர்களே! உங்கள் கவிதையினால் நீங்கள்தான் யாரென்று நானறிவேன். இனி இந்த புவியறிவும். வாழ்த்துக்கள் பல சொல்லி மகிழ்கின்றேன்.

முக்கனிபோல் மூவர் குறித்துச் சிலசெய்தி சொல்வதுதான் தலைமைக்கு அழகாகும் என்பதாலே சொல்கின்றேன்.

திருவள்ளுவர்,  வெண்பாவில் பண்பாட்டை எடுத்துச்சொல்ல இவரைப்போல் பலருண்டு.  ஆனால்,

இரண்டடியில் மூவுலகை அளந்தவரும் இவர்தான்.

பூவுலகில் இவரைப்போல் பாடியவரே எவர்தான்?.

கிணற்றினிலே நீர் இரைக்கின்ற போதினிலும்

இவர்குரலைக் கேட்டுத்தான் ஓடிவந்தார் வாசுகியே

கணவரவர் குரல்கேட்டு அந்தரத்தில் விட்டுவிட்ட

பாத்திரமும் வீழாமல் நின்றதுவே,  ஏனென்றால்

‘பா’திறத்தால் பாடிய வள்ளுவரின் மனைவியன்றோ!

என் மனைவியை நானழைத்தால் பாத்திரத்தை

விட்டுவிட்டு ஓடித்தான் வருவாளா? அறியேனே!

தொடரில்வரும் பாத்திரத்தை விட்டுவிட்டு வாராளே

மற்றகதை என்சொல்வேன். நீரே உணர்வீர்.

 

அடுத்து, இரண்டாமவர் வீரத்துறவி விவேகானந்தர்,

 

இளமையிலே துறவாடை அணிவதென்றால்

பெரும் வீரம் குறையாமல் வேண்டுமன்றோ

‘இளமயிலே’ எனப் பெண்பின்னால் ஓடும்பருவத்தில்

ஆவி உள்ளவரை காவிகட்டிய பெருமகனார்.

நீச்சல் வீர்ர்களும் தயங்கிடும் கடலினிலே

அஞ்சாமல் நீந்தித்தான் தவம்செய்தார் குமரியிலே

அழகான பெண்ணொருத்தி இவர்முன்னே வந்துநின்றாள்

பேசும்ஆங்கிலத்தில் மயங்கினளோ, பேசாஆன்மீகத்தில் மயங்கினளோ

‘உங்களை நான் விரும்புகிறேன்’ என்று சொன்னாள் விருப்புடனே

‘ஏன்என்னை விரும்புகிறாய்’ எனக்கேட்டார், உண்மைத்துறவியவர்

‘உம்போல ஒருபிள்ளை’ நான்பெறவே வேண்டுமென்றாள்.

இதற்காக ஏன்நீங்கள் காத்திருக்கவேண்டுமென, உவப்புடனே

‘இக்கணமே என்னைமகனாக ஏற்பீர்’ என்றார்.

இம்முத்தான சொற்களைச் சொல்வதற்கு இப்புவியில்

எவரேனும் உண்டோ? சொல்வீரே பெருமக்காள்.

 

மூன்றாமவர், செயல் வீர்ர் காமராசர்

 

     பெயருக்கேற்றார் போல் கலியுகத்தின் ராசாதான். (காமராசர்)

எத்தனையோ ஆடு மேய்த்த ரோசாக்களை

வாடாமல் அழைத்துவந்து பள்ளியிலே படிக்கவைத்தார்.

தான்பெறாத கல்வியினைப் பிறர்பெறவே வழிவகுத்தார்.

கற்றோர்தம் நிலம்உயர என்செய்ய வேண்டுமென

     அறியாத வேளையிலே தொழிற்சாலை பாலமென

எத்தனையோ நன்மைசெய்தார்.: இவர்போலே ஒருவருண்டோ?

     “முதல்வரே வந்தாலும் முறையில்லா திரையரங்கு

திறப்பதை நான்சம்மதியேன்” என்றே சொன்ன

ஆட்சியரை மாற்றம்தான் செய்ய வில்லை

வீட்டிற்குச்சென்று முழுமனதாய்ப் பாராட்டி மகிழ்ந்தாரே.

ஆட்சியரின் குழந்தையிடம் தந்தைபோல் வரவேண்டும்என

வாழ்த்து சொன்ன பாங்கினையே என் சொல்வோம்.

 

இப்படி முத்தான செய்திகள் பலவுண்டு. நல்ல பூக்களைத் தேர்ந்தெடுத்துக் கட்டுவதுபோல் அழகான சொல்லையெல்லாம் கோத்துகோத்துக் பாமாலை செய்துவந்தீர். கவிஞர்களே ! கவிஞர் கந்தசாமி, ‘வேலுநாச்சியார்’ கலைவரதன், கவிஞர் குப்புசாமி, சிவத்திரு மண்ணாங்கட்டி அம்மையார், கவிஞர் ஞானசேகரன் ஐயா, கவிஞர் கலியன் ஐயா மற்றும் அனைத்துக் கவிஞர்களுடைய கவிதைகளைக்கேட்க ஆவலுடன் நிற்கின்றேன்.

     இந்த அருமையான வாய்ப்பினை அளித்த இவ்விலக்கியச்சோலையின் தலைவருக்கும் ; நன்றியுரை நவிலக் காத்திருக்கும் சிவநேசர் ; நாள் தவறாமல் நற்செயல்கள் பலவற்றை செய்துவரும் தொண்டுள்ளம் படைத்த ஐயா சோமசுந்தரனார் அவர்களையும் வணங்கி விடைபெறுகிறேன்.

வெள்ளி, 16 ஜூலை, 2021

ஒன்றாகக் காண்பதே காட்சி

 


ஒன்றாகக் காண்பதே காட்சி

     இது தெரியாதா? “திரையரங்கத்திற்குச் சென்றால் எல்லோரும் ஒன்றாகத்தானே பார்ப்போம்” என்றுதானே சொல்கிறீர்கள். சரிதான். ஆனால், இது இவ்வுலகக் காட்சி ; இது பொய்யானது. ஏனெனில், திரைப்படத்தில் நடிப்பவர் படப்பிடிப்புக்குப் பின் அக்காட்சியிலிருந்து வெளியே வந்துவிடுவார். ஆனால், ரசிகன் வாழ்நாளெல்லாம் அப்பாத்திரத்தை உள்ளத்தில் சுமந்திருப்பான். இக்காட்சியால் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு நன்மையேனும் நடந்தால் நன்று. இல்லாவிடில் தீமையேனும் நடக்காமல் இருக்கவேண்டும். நற்குணத்தை மாற்றுவதாக அமைதல் கூடாது. அவ்வளவே.

     இப்போது மெய்யியல் காட்சிக்கு வருவோம். அனைவரையும் ஓர் உயிராக எண்ணி அன்பு காட்டுவதுவே ‘ஒன்றாகக் காண்பது’. இது அனைவராலும் இயலுமா?. இதற்குத் தாயுள்ளம் தேவை. தாயானவள், தனக்கு உணவில்லை என்றாலும் குழந்தைகளுக்கு இட்டு மகிழ்வாளே. அந்த உள்ளம் வேண்டும். “அதுவே ஒன்றாகக் காண்பது”

     பாசத்தை எப்படி வெளிப்படுத்துவது எனத் தெரியாமல் பலர் அல்லல் உறுவதனைப் பார்த்திருப்பீர்கள். ஆண்களுக்கு அதில் முதலிடம். “பெண்குழந்தைக்குத் திருமணம் செய்யவேண்டும்” என மனைவி கூறியவுடனே, “இப்ப என்ன வயசாச்சு பிறகு பார்க்கலாம்” எனக்கூறிவிடுவார். ஆனால், அன்றுமுதல் உறக்கம் இருக்காது. எப்போதுவரை எனக்கேட்காதீர். வாழ்நாள் முழுதும் ஓர் ஓரமாக மகளைப் பற்றிய எண்ணம், கணினித் திரையில் நேரம் காட்டுவதுபோல் ஓடிக்கொண்டே இருக்கும். அதை உற்றுநோக்கினால் அறிந்துகொள்ளமுடியும். திருமணமாகிச் சென்று பல ஆண்டுகள் கழிந்தாலும், “‘மழை பெய்கிறதா? வெயில் காய்கிறதா? எனக் கைப்பேசியில் பேசிக்கொள்வதைப் பார்த்திருப்பீர்கள்தானே?. ‘மாதம் மும்மாரி பொழிந்ததா?’ எனக் கேட்கும் மன்னர் பரம்பரை நாம் அதனால்தான் அப்படி பேசுகிறார்கள்” என எண்ணாதீர்கள். குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள், எனத்தெரிந்துகொள்ளவேண்டும். அதற்கு நான்கு சொற்களைப்பேச வேண்டும். அவர்கள் குரலைக் கொண்டே நலமும், துன்பத்தையும் அறிந்துகொள்வார்கள். அதற்கான முயற்சிதான் அது. “தான் வேறு ; குழந்தைகள் வேறு” என எண்ணாத அன்பு நிறை பேச்சு அது. “அதுவே ஒன்றாகக் காண்பது”

     கண்கள் இரண்டாயினும் காணும் காட்சி ஒன்றுதானே? இரு வேறு காட்சியைக் கண்டால் ஒரு வேலையும் செய்யமுடியாது. அப்படி இருவேறு காட்சியைக் கண்டால் மூளை எதனைச் செயல்படுத்தும். வலப்பக்கம் செல்வதா? இடப்பக்கம் செல்வதா? என்னும் குழப்பமும் ஏற்படும். ஒன்றுபட்டு வேலை செய்வதால்தானே “கண் + அவன்” எனக் கணவனை மனைவியும், “கண்ணே” என மனைவியைக் கணவனும் அன்புடன் கூறமுடிவதனைப் பார்க்கமுடிகிறது. “அதுவே ஒன்றாகக் காண்பது”

     மனிதர்கள் உதவிகேட்டு என்னைத் தொல்லைபடுத்துகிறார்கள்? என்ன செய்வது என இறைவன் இறைவியிடம் கேட்கிறார். “அன்புடன் கேட்டால் கொடுத்துவிடுங்களேன்” என்கிறாள் இறைவி. தாயுள்ளமாயிற்றே !. “உலக உயிர்களிலேயே உயர் அறிவுடன் ; ஆற்றலுடன் மனித இனத்தையே படைத்திருக்கிறேன். அப்படி இருந்தும் இப்படி வேண்டுவது நியாயமில்லை. திறமையுடன் உழைத்தால் வறுமை ஒழியும் ; செல்வம் குவியும்” என்றார் இறைவன். “நீங்கள் எங்கு நின்றாலும் அறிந்துகொள்கிறான் என்பதால்தானே கேட்கிறீர்.  அவன் காண முனையாத ஓர் இடம் இருக்கிறது” என்றாள் இறைவி. ”அப்படியா? சொல்” என்கிறார் இறைவன். “ஆம். அது பக்தர்களுடைய உள்ளம்தான்” என்கிறாள் இறைவி. இதனை அறிந்தே தமிழ் மூதாட்டி ஔவையார், அகத்தில் நிறைந்த இறைவனைக் காண வழிகாட்டுகிறார். புறக்கண்களை மூடிக்கொண்டு அகக்கண்களால்தான் அகத்தைப் பார்க்கமுடியும். “அதுவே ஒன்றாகக் காண்பது”

     முன்னோர்கள், ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் இறைவன் இருக்கிறார் என்பதனை உணர்ந்துதானே ‘வணக்கம்’ சொல்லக் கற்றுக்கொடுத்திருக்கிறார்கள்.  பெரியோர்களைக் கண்டால் வணங்கவேண்டும் எனச்சொல்லிக்கொடுத்ததும் அதனால்தானே? “அதுவே ஒன்றாகக் காண்பது”

     நீதிதேவதையின் கண்கள் மூடப்பட்டிருப்பதும் ; சட்டம் அனைவருக்கும் சமம்  எனக் கூறுவதும் அதனால்தானே?. செய்யும் செயலைக்கொண்டே ஒருவரை உயர்ந்தவர் ; தாழ்ந்தவர் என அறியலாமே அன்றி பிறவற்றால் அறியக்கூடாது.  “அதுவே ஒன்றாகக் காண்பது”

கண்கள் கருணையுள்ளது. அது ஒன்றாகப் பார்க்கும் திறனற்றது. எப்படி என்று கேட்கிறீர்களா? மனுநீதிசோழனைத் தவிர யாரும் கன்றினையும், மகனையும் ஒன்றாகப் பார்க்கவில்லையே. அப்படி பார்க்கத்தொடங்கிவிட்டால் நாட்டில் ஒரு குற்றமேனும் நிகழுமா? “அதுவே ஒன்றாகக் காண்பது”

ஒருவர் ஆட்டினையோ மாட்டினையோ வளர்க்கிறார். அதனை, வெட்டுவதற்காக மற்றொருவர் கத்தியினை எடுக்கிறார். உடனே, அந்த ஆடோ ; மாடோ “இவ்வளவு நாள் நம்மை அன்புடன் வளர்த்தவர் எங்கே?. இங்கே ஒருவனிடம் சிக்கிக்கொண்டோமே” என வருந்திக்கொண்டு அங்கும் இங்கும் பார்க்கிறது. அந்த விலங்கினை வளர்த்தவன் காகிதத்தை எண்ணிக்கொண்டிருக்கிறான். விலங்குகளைப் பொறுத்தமட்டில் பணம் காகிதம் தானே? “அன்பும் பாசமும் பணத்திற்குமுன் ஒன்றுமில்லை” எனக் கற்றவன் மனிதன் ஒருவனே.  மனித இனத்தை ஒன்றாகப் பார்க்கும் இவர்களுக்கு விலங்குகளை ஒன்றாகப் பார்க்கத்தெரியவில்லைதானே? இதை நான் சொல்வதாக எண்ணாதீர். ‘தன் ஊன் பெருக்க பிற ஊன் உண்ணக்கூடாது” என்பது தெய்வப்புலவர் திருவள்ளுவர் வாக்கு. அவர் காட்டிய வழியில் அனைத்து உயிர்களிடமும் அன்புகாட்டவேண்டும். “அதுவே ஒன்றாகக் காண்பது”

அதைவிடக்கொடுமை, நாய் வளர்ப்பவர்களில் சிலர், நாயிடம் பாசத்தைப் பொழிவார்கள். அந்நாயுடனே படுத்துக்கொள்வார்கள் ; கொஞ்சுவார்கள் ; விளையாடுவார்கள். அந்த நாயினால் தங்களுடைய இரத்தக் கொதிப்பைக் குறைத்துக்கொள்வார்கள் ; சர்க்கரை அளவைக் குறைத்துக்கொள்வார்கள் ; மன அழுத்தத்தைக் குறைத்துக்கொள்வார்கள். அத்தகையோரின் அன்பைப் பார்க்கும்போது பெருமையாகத்தானே இருக்கும். அப்படி பாசத்தைப்பொழிந்த நண்பரிடம் ‘எங்கே உங்கள் நாயைக் காணவில்லை” எனக் கேட்டபோது, “அதற்கு உடல்நிலை சரியில்லை, அதனால் வெளியூர் செல்லும் போது ஓரிடத்தில் விட்டுவிட்டேன்” எனக் கூறினார். அவரிடம் கொண்ட அத்தனை மதிப்பும் ஓர் நொடியில் காணமல் போய்விட்டது. ஓர் உயிரை அன்புடன் பார்த்த நிலை மாறிவிடுவது எத்துணைக் கொடுமை!. மனிதர்களாக இருந்தாலும் ஏதேனும் ஒரு காப்பகத்துக்குச் சென்றுவிடுவர். வாயில்லா உயிரான நாய் எங்கு செல்லும்?. அதுவும் செல்வச்செழிப்பில் வளர்ந்த நாய். பாவம்தானே? நாயைக் கடைசிவரை பார்த்திருந்தால் எத்துணைப் பெருமை கிடைத்திருக்கும். “அதுவே ஒன்றாகக் காண்பது”

ஒன்றாகக் காண்பதே காட்சி புலனைந்தும்

வென்றான்தன் வீரமேவீரம்  மற்று – ஒன்றானும்

சாகாமல் கற்பதே வித்தை தனைப்பிறர்

ஏவாமல் உண்பதே ஊண் (ஔவையாரின் தனிப்பாடல்)

என்னும் தமிழ்மூதாட்டியின் பாடல் எத்தனை எண்ணங்களை வளர்த்துவிடுகிறது.  நம்மை வெல்லக்கூடிய தகுதி, நம்மையன்றி வேறு எவருக்கு இருக்கமுடியும்.. இனி அனைத்துக்காட்சிகளையும் ஒன்றாகக் காணலாம்தானே?