நாள்மங்கலம் என்னும் பிறந்தநாள்
இந்தக் கட்டுரையில் உங்களுக்கு மிகவும்
பிடித்தமான ஒருவர் குறித்துத் தான் ஆய்வுசெய்ய இருக்கிறோம். “அவர்யார்?” என்றுதானே
கேட்கிறீர்கள். ஆம்! அவர் நீங்கள் தான். அதுமட்டுமன்று. உங்களுக்குப் பிடித்தமான நாள்
குறித்தே ஆய்வுசெய்ய இருக்கிறோம். அது என்னவென்று
உங்களுக்குத் தெரிந்திருக்கும். “ஆம்! உங்கள் பிறந்தநாள்தான்”.
இலக்கியம் ஒரு கருவூலம். அனைத்து
வினாக்களுக்கும் விடைதாங்கி நிற்பது. இவ்வுலகில் வாழும் ஒவ்வொருவரும் அவரவர்க்குரிய
வாழ்க்கையை மட்டும்தான் வாழ்வர். அதுவே உலகியல். ஆனால், படைப்பாளிகளையோ அல்லது படிக்கும்
பழக்குமுள்ளவர்களையோ பாருங்கள். அவர்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மிடுக்குடன் இருப்பதனைக்
காணமுடியும். ஏனெனில், ஒவ்வொரு நாளும் அவர்கள் படிக்கும் இலக்கியத்தின் தாக்கம் அவர்களுடைய
செயல்பாட்டில் புலப்படும். அவர்கள் ஒரே வாழ்நாளில், பலராக வாழ்ந்துமகிழ்வார்கள்.
இலக்கியத்தாக்கத்தை எவரையும்விட ஆசிரியர்கள் நன்கறிவர். அவர்கள் பாடம் நடத்திமுடித்தஉடன்
அப்பாடத்தின் தாக்கத்தை குழந்தைகளிடம் காண்பார்கள். எனவே, இலக்கியம் படிப்பவர்கள் ஒரே
வாழ்நாளில் பல்வேறு வாழ்க்கைக்குரிய இன்ப துன்பங்களை அனுபவித்துவிடுவர். அத்தகைய அருமையான
தமிழ் இலக்கியங்களை, இன்றைய தலைமுறைக்குச் சென்று சேர்க்கவேண்டிய கடன் அம்மொழியினைத்
தாய்மொழியாகக் கொண்ட ஒவ்வொருவர்க்கும் உரியது. அப்பணியினை சிரமேற்கொண்டு சிலர் செய்து
வருவதனையும் காணமுடிகிறது. அவர்களே தமிழ்த்தாயின் தவப்புதல்வர்கள்.
இக்கட்டுரையில் ஆய்வுக்குரியசொல்லாக
‘நாள் மங்கலம்’ என்னும் சொல்லே அமைகிறது. இச்சொல் வழக்கு அருகிவிட்டது. ஒவ்வொருவரிடமும்
‘சிறந்தநாள் எது?” எனக்கேட்டால் தங்கள் பிறந்தநாளைத்தானே சொல்வார்கள். ஒருவர் நன்றாக
வாழ்ந்தால் ‘அவன் பிறந்த நேரம் அப்படி” எனத் தங்களை அமைதிப்படுத்திக்கொள்வார்கள். அத்தகைய
பெருமையுடைய நேரத்தைக் கொண்டாடுவதில் தவறில்லைதானே?. அத்தகைய பிறந்தநாளை ஒவ்வொருவரும்
ஒவ்வொரு வகையில் கொண்டாடுவர்.
சிலர் ஏழைகளுக்கு உணவிட்டு மகிழ்வர் ; சிலர் கோவிலுக்குச் சென்று தம்மைப் படைத்தமைக்காக
இறைவனுக்கு நன்றி கூறி வணங்குவர் ; சிலர் நண்பர்களுடன் சேர்ந்து மாவட்டினைத் (கேக்) துண்டாக்கி
; முகத்தில் பூசிக் கொண்டாடுவர். ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல் எத்தனையோ குழந்தைகள்
இறப்பதனைப் பார்க்கமுடிகிறதுதானே? இப்படி உணவை வீணாக்குவோர், ஓர் ஏழைக்குழந்தையின்
பசியைத் தீர்க்கலாம்தானே? இனியாவது அவ்வாறு கொண்டாடினால் அதுவே சிறந்தநாளாகும்.
தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் நாள்மங்கலம் பெருமையுடையது
; எக்காலத்துக்கும் வழிகாட்டுவது. பாடப்படும் ஆண்மகனது ஒழுகலாறுகளை விளக்கும் ‘பாடாண்
திணையின்’ இருபத்து மூன்றாவது துறையான ‘நாள்மங்கல’ வெண்பா இத்திருநாளின் அருமையினைச்
சுட்டிக்காட்டுகிறது.
கரும் பகடும் செம்பொன்னும் வெள்ளணி
நாட்பெற்றார்
விரும்பி மகிழ்தல் வியப்போ- சுரும்பிமிர்தார்
வெம்முரண் வேந்தரும் வெள்வளையார்
தோள்விழைந்து
தம்மதில் தாம்திறப்பர் தாள்
(புறப்பொருள்வெண்பாமாலை.பா.தி.வெண்பா:23)
என்னும் வெண்பா, நாள்மங்கலத்தை எவ்வாறு கொண்டாடவேண்டும் என வழிகாட்டுகிறது.
தான் மகிழ்வதற்காக இவ்வுலகில் பிறப்பு அமையவில்லை.
“பிற உயிர்களுக்குத் தம்மால் இயன்ற நன்மைகளைச் செய்யவேண்டும் என்பதற்காகவே இப்பிறவி”
என்பதனை உணர்த்துவதாகவே இவ்வெண்பா அமைந்துள்ளது.
மன்னன், தான்பிறந்த நாள்மங்கலத்தில்
தம்மைச் சார்ந்தோர்க்கு வளம் வாய்ந்த எருதுகளைக் கொடுப்பான். இதனால் ஏழைகள் வறுமைநீக்கி
வளமாக வாழ்வர். செம்பொன்னை அளித்து மகிழ்வான் ; அவ்வாறே வெள்ளணிகளையும் அளித்து மகிழ்வான்.
ஒவ்வொருவரின் தேவையினை அறிந்து அவரவர்க்குத் தேவையான பொருட்களை கொடையளித்து மகிழ்வான்.
கொடையினைப் பெற்றவர்கள் தங்கள் புதுவாழ்வை எண்ணி மகிழ்வர். இந்நிகழ்வோடு நில்லாமல்
பகைவரும் மகிழும் வகையில் போர்செய்யான். அத்தகைய அருநாளாம் “நாள்மங்கலத்” திருநாள்
என்பதனையும் தெளிவுபடுத்துகிறது இப்பாடல்.
“இத்திருநாளில் மன்னன் போர்செய்யமாட்டான்” எனப் பகை வேந்தரும் எண்ணினர் ; அச்சம்
நீங்கினர் ; வெண்மையான அணிகலன்களை அணிந்த தம் மகளிரை அடைவதற்காக அடைத்திருத்த தம் மதிற்கதவுகளைத்
திறந்தனர்.
இதுவே நாள்மங்கலத்தின் சிறப்பு. “தம்மவரை மட்டுமின்றி எதிரிகளையும் அச்சத்தில்
நிறுத்தாமல் மகிழ்வாக வாழச்செய்யவேண்டும்” என எண்ணிய மன்னனின் சிறப்போடு இந்நாளின்
சிறப்பும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
மன்னனது அறநெறி தவறாத செங்கோலின் திறத்தினையும் ; அருள் உள்ளத்தையும் வெளிப்படுத்துவதே
‘நாள் மங்கலம்’ என்பதனை
அறிந்தரு செங்கோல் அருள்வெய்யோன்
பிறந்தநாட் சிறப்புரைத் தன்று
(புறப்பொருள்வெண்பாமாலை.பா.தி.:23)
என இலக்கணம் வகுத்துள்ளார் புறப்பொருள் வெண்பாமாலையின் ஆசிரியர் ஐயனாரிதனார்.
ஒரு அம்மையார், மிகவும் சோகத்துடன் கோவிலுக்குள் நுழைகிறார். எதிர்வந்த தோழியோ
“ஏன் சோகமாக வருகிறீர்” எனக் கேட்கிறார். “மகனுக்குப் பிறந்தநாள்” என்றார். “மகிழ்ச்சிதானே”
எனத்தோழி சொல்ல, “நான் கோவிலுக்குள் வரமாட்டேன் என வெளியே நிற்கிறான்” என வருத்தமுடன் கூறினாள். “இவன் மட்டும் இப்படி இல்லை.
இப்படித்தான் சில இளைஞர்கள் கோவிலுக்குள் வருவதில்லை. “திரைப்படநாயகன் இயக்குநரின்
சொல்கேட்டு அவ்வாறு நடிக்கின்றார். அதுவே வழியென்று பித்தாகி விடுவதுதான் கொடுமை. விட்டுவிடுங்கள்.
உங்கள் வேண்டுதலே அவனை நன்றாக வாழ்த்திடும்” எனக் கூறினாள். சோகமுகத்தில் புன்னகை நிரம்பிற்று.
தோழி ஒருத்தி ஒரு நொடியில் சோகத்தைத் தீர்த்துவிட்டாள். பெற்ற பிள்ளை பெற்றவளை வருத்தப்படவிடலாமா?
செய்யக்கூடாதுதானே?
யார் என்ன கூறினாலும் அன்புடன் வாழவேண்டும் ; பகை நீக்கி வாழவேண்டும். ஒவ்வொரு
நாள்மங்கலத்திலும் இதற்கான உறுதியினை ஏற்கவேண்டும். இதுவே வாழ்வின் இலக்கணம். எப்படி
எனக் கேட்கிறீரா? இலக்கணத்தின் முன்னோடி, தொல்காப்பியரே முன்மொழிகின்றார்.
சிறந்த நாளணி செற்றம் நீக்கிப்
பிறந்த நாள்வயிற் பெருமங்கலமும்” (தொல்காப்பியம்.புற.தி.88:7-8)
எனத் தொல்காப்பியம் கூறிய வழியில் நாள்மங்கலத்தைக் கொண்டாடலாம்தானே?