தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

சனி, 17 ஜூலை, 2021

தலைமையுரை – இப்படி அமையலாமே

 


தலைமையுரை – இப்படி அமையலாமே

ஆடித்திங்களில் அடி எடுத்துவைக்கும் இனிய இந்நாளில் (17.07.2021) எழிலுற நடக்கும் இவ்விலக்கிய விழாவிற்கு வருகை தந்திருக்கும் உங்கள் அனைவரையும் ‘தலைமை’ என்னும் முறையில் வருக ! வருக! என வரவேற்கின்றேன்.

     கற்றோர் தம் படைப்புத்திறனை வெளிப்படுத்திச்செல்ல அமைக்கப்பட்ட சாலை இது ;  புதுவையின் இலக்கியச்சோலை இது.

     ஒவ்வொரு திங்களும் பெரியோரைப் போற்றவேண்டிய கடமை நமக்குண்டு என்பதாலே, இவ்வமைப்பின் நிறுவனர் வடுகை கண்ணன் அவர்களும் தலைவர் சோமசுந்தரனாரும் மூன்று தலைவர்களைத் தலைப்பாகக் கொடுத்துள்ளார்கள்.

திங்களுக்கு ஒரு விழா நடத்துகிறோம். இத்திங்கள் விழாவில் மூன்று திங்களைப்பற்றி பேசவேண்டும். ஏனெனில், ‘இலக்கியச்சோலை, என்றுமே எவரையும் கைவிட்டதில்லை’ என்று சொன்னார் தலைவரவர். அப்போதுதான், இச்சோலையில் மலர்ச்செடிகள் மட்டுமன்று ; மூலிகைச்செடிகளும் உண்டு ; பயன் தரும் கொடிகளும் உண்டு. அதனால்தான் பார்போற்றும் திருவள்ளுவர், ‘வீரத்துறவி’ சுவாமி விவேகானந்தர், ‘செயல்வீரர்’ காமராசர்,  என மூன்று திங்க(தலைவர்)களைப் போற்றும் வகையில் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதென்று நினைத்துக்கொண்டேன். இருளில்தானே திங்கள்தோன்றி ஒளிகொடுக்கும். அப்படி ஒளிகொடுத்தவர்களே இம்மூவர். இதைச்சொல்ல இங்கே கவிஞர் கூட்டம் காத்துக்கொண்டிருக்கிறது.

     பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் விரும்பும் ‘மை’ ஒன்று இருக்கிறதென்றால் அது ‘தலைமை’ தான். அதுமிகவும் ஆபத்தானது. எத்தனைப் பாராட்டுகளுக்குரியதோ அத்தனை வசவுகளுக்கும் உரியது. இரண்டையும் ஒன்றாக நோக்கும் பக்குவம் தலைமைக்கு வேண்டும். “பக்குவம் என்றால் என்ன?” என்று உங்களுக்குத் தெரியும்தானே? ஒருவர் குறை சொன்னாலும் அவரைப் பற்றிய நிறைவினைச் சொல்லுவதே பக்குவம். “நீ ஒரு முட்டாள்”  என்று யாராவது சொன்னால், “ஆம், முள் தாள்தான். என்னைக் கிழியாமல் காப்பாற்றுவது உங்கள் பொறுப்பு” எனக் கூறிவிடவேண்டும். அப்போதுதான் எதிரிகள் கூட உதிரிகள் ஆவர்.

‘தலைமை’ என்பது எல்லோரையும் படியாக வைத்துக்கொண்டு உச்சியில் ஏறிவிடுவது மட்டுமன்று. ஏறியபிறகு, யாரெல்லாம் படியாக நின்றார்களோ அவர்களையெல்லாம் மேலேற்றி அழகுபார்ப்பது. அதுவே தலைமைக்கு அழகு.  அப்படி முன்னோர் காட்டியவழியில்தான் இவ்விழாவில் பங்கேற்றிருக்கின்றேன்.

     இங்கு பலரும்  பல அரங்குகளில் அழகு சேர்த்தவர்கள் ; கவி வார்த்தவர்கள். இவர்கள் அனைவரும் கவிபாடும் அழகினைக் காண்பதற்கே ஐவர் பெருமக்கள் முன்னிலை வகிக்க வந்துள்ளார்.

     முதலாமவர், இலக்கியச் சோலையின் நிறுவனர் வடுகை. கு.கண்ணன் ஐயா, இவர் பெண்களைப் போற்றுவதில் மன்னன் ; அதனால்தான் இவர் கண்ணன். தன் மனைவிக்கென்றே தனி காவியம் படைத்தவர். பூக்களைப் போல பாக்களைத் தொடுத்தவர்.

இரண்டாமவர்,  கவிஞர் பைரவி, இவர் இல்லாத தமிழ்மேடையினைப் புதுவையில் காண இயலாது. தேனீ கூட இவரிடம் தோற்றுப்போகும் எனச் சொன்னால் மிகையாகத்தான் இருக்கும். ஆனால், இவருக்கும் தேனீக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. பூக்களிலிருந்து தேனைச் சேகரிக்கும் தேனீ போல இவர்  கவிஞர்களைக் கூட்டி விழா எடுப்பதில் வல்லவர் ; எம் போன்றோரிடம் பழகுவதில் நல்லவர்.

மூன்றாமவர், சரஸ்வதி வைத்தியநாதன. இவர் பெயரொன்றே இவ்விழா சிறப்படைய வழி செய்யும். தமிழ்ப்பணியைத் தளராமல் செய்பவர். விழாக்களில் பங்கேற்பார் ; கவி தொடுப்பார் ; விழா நிறைவு வரை செவிமடுப்பார்.

நான்காமவர், பேராசிரியர் உரு.அசோகன். பெயருக்கு ஏற்ற புன்னகை முகம் கொண்டவர். இவரிடம், யார் சோகமாக வந்தாலும் அசோகமாக மாற்றிவிடுவார். பின்னாளில், ‘இவர் இப்படித்தான் இருப்பார்’ என உணர்ந்து பெயர் வைத்த தீர்க்கதரிசியான பெற்றோர்க்குப் பாராட்டுக்கள்.

ஐந்தாமவர், கவிஞர் ரவி, இவர் வராமல் உலகம் விடியாதுதானே?.  எழுச்சியை உண்டாக்கும் கவிதைகளைப் பாடும் திறம் படைத்த கவிஞர்  இவர்.

அருமையான திறம் படைத்த முன்னோர்கள் முன்னிலையில் திறமையான கவிஞர்கள் மூவரைப் பற்றி முறையாகப் பாடவந்துள்ளீர். திறம் படைத்த கவிஞர்களே! உங்கள் கவிதையினால் நீங்கள்தான் யாரென்று நானறிவேன். இனி இந்த புவியறிவும். வாழ்த்துக்கள் பல சொல்லி மகிழ்கின்றேன்.

முக்கனிபோல் மூவர் குறித்துச் சிலசெய்தி சொல்வதுதான் தலைமைக்கு அழகாகும் என்பதாலே சொல்கின்றேன்.

திருவள்ளுவர்,  வெண்பாவில் பண்பாட்டை எடுத்துச்சொல்ல இவரைப்போல் பலருண்டு.  ஆனால்,

இரண்டடியில் மூவுலகை அளந்தவரும் இவர்தான்.

பூவுலகில் இவரைப்போல் பாடியவரே எவர்தான்?.

கிணற்றினிலே நீர் இரைக்கின்ற போதினிலும்

இவர்குரலைக் கேட்டுத்தான் ஓடிவந்தார் வாசுகியே

கணவரவர் குரல்கேட்டு அந்தரத்தில் விட்டுவிட்ட

பாத்திரமும் வீழாமல் நின்றதுவே,  ஏனென்றால்

‘பா’திறத்தால் பாடிய வள்ளுவரின் மனைவியன்றோ!

என் மனைவியை நானழைத்தால் பாத்திரத்தை

விட்டுவிட்டு ஓடித்தான் வருவாளா? அறியேனே!

தொடரில்வரும் பாத்திரத்தை விட்டுவிட்டு வாராளே

மற்றகதை என்சொல்வேன். நீரே உணர்வீர்.

 

அடுத்து, இரண்டாமவர் வீரத்துறவி விவேகானந்தர்,

 

இளமையிலே துறவாடை அணிவதென்றால்

பெரும் வீரம் குறையாமல் வேண்டுமன்றோ

‘இளமயிலே’ எனப் பெண்பின்னால் ஓடும்பருவத்தில்

ஆவி உள்ளவரை காவிகட்டிய பெருமகனார்.

நீச்சல் வீர்ர்களும் தயங்கிடும் கடலினிலே

அஞ்சாமல் நீந்தித்தான் தவம்செய்தார் குமரியிலே

அழகான பெண்ணொருத்தி இவர்முன்னே வந்துநின்றாள்

பேசும்ஆங்கிலத்தில் மயங்கினளோ, பேசாஆன்மீகத்தில் மயங்கினளோ

‘உங்களை நான் விரும்புகிறேன்’ என்று சொன்னாள் விருப்புடனே

‘ஏன்என்னை விரும்புகிறாய்’ எனக்கேட்டார், உண்மைத்துறவியவர்

‘உம்போல ஒருபிள்ளை’ நான்பெறவே வேண்டுமென்றாள்.

இதற்காக ஏன்நீங்கள் காத்திருக்கவேண்டுமென, உவப்புடனே

‘இக்கணமே என்னைமகனாக ஏற்பீர்’ என்றார்.

இம்முத்தான சொற்களைச் சொல்வதற்கு இப்புவியில்

எவரேனும் உண்டோ? சொல்வீரே பெருமக்காள்.

 

மூன்றாமவர், செயல் வீர்ர் காமராசர்

 

     பெயருக்கேற்றார் போல் கலியுகத்தின் ராசாதான். (காமராசர்)

எத்தனையோ ஆடு மேய்த்த ரோசாக்களை

வாடாமல் அழைத்துவந்து பள்ளியிலே படிக்கவைத்தார்.

தான்பெறாத கல்வியினைப் பிறர்பெறவே வழிவகுத்தார்.

கற்றோர்தம் நிலம்உயர என்செய்ய வேண்டுமென

     அறியாத வேளையிலே தொழிற்சாலை பாலமென

எத்தனையோ நன்மைசெய்தார்.: இவர்போலே ஒருவருண்டோ?

     “முதல்வரே வந்தாலும் முறையில்லா திரையரங்கு

திறப்பதை நான்சம்மதியேன்” என்றே சொன்ன

ஆட்சியரை மாற்றம்தான் செய்ய வில்லை

வீட்டிற்குச்சென்று முழுமனதாய்ப் பாராட்டி மகிழ்ந்தாரே.

ஆட்சியரின் குழந்தையிடம் தந்தைபோல் வரவேண்டும்என

வாழ்த்து சொன்ன பாங்கினையே என் சொல்வோம்.

 

இப்படி முத்தான செய்திகள் பலவுண்டு. நல்ல பூக்களைத் தேர்ந்தெடுத்துக் கட்டுவதுபோல் அழகான சொல்லையெல்லாம் கோத்துகோத்துக் பாமாலை செய்துவந்தீர். கவிஞர்களே ! கவிஞர் கந்தசாமி, ‘வேலுநாச்சியார்’ கலைவரதன், கவிஞர் குப்புசாமி, சிவத்திரு மண்ணாங்கட்டி அம்மையார், கவிஞர் ஞானசேகரன் ஐயா, கவிஞர் கலியன் ஐயா மற்றும் அனைத்துக் கவிஞர்களுடைய கவிதைகளைக்கேட்க ஆவலுடன் நிற்கின்றேன்.

     இந்த அருமையான வாய்ப்பினை அளித்த இவ்விலக்கியச்சோலையின் தலைவருக்கும் ; நன்றியுரை நவிலக் காத்திருக்கும் சிவநேசர் ; நாள் தவறாமல் நற்செயல்கள் பலவற்றை செய்துவரும் தொண்டுள்ளம் படைத்த ஐயா சோமசுந்தரனார் அவர்களையும் வணங்கி விடைபெறுகிறேன்.

வெள்ளி, 16 ஜூலை, 2021

ஒன்றாகக் காண்பதே காட்சி

 


ஒன்றாகக் காண்பதே காட்சி

     இது தெரியாதா? “திரையரங்கத்திற்குச் சென்றால் எல்லோரும் ஒன்றாகத்தானே பார்ப்போம்” என்றுதானே சொல்கிறீர்கள். சரிதான். ஆனால், இது இவ்வுலகக் காட்சி ; இது பொய்யானது. ஏனெனில், திரைப்படத்தில் நடிப்பவர் படப்பிடிப்புக்குப் பின் அக்காட்சியிலிருந்து வெளியே வந்துவிடுவார். ஆனால், ரசிகன் வாழ்நாளெல்லாம் அப்பாத்திரத்தை உள்ளத்தில் சுமந்திருப்பான். இக்காட்சியால் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு நன்மையேனும் நடந்தால் நன்று. இல்லாவிடில் தீமையேனும் நடக்காமல் இருக்கவேண்டும். நற்குணத்தை மாற்றுவதாக அமைதல் கூடாது. அவ்வளவே.

     இப்போது மெய்யியல் காட்சிக்கு வருவோம். அனைவரையும் ஓர் உயிராக எண்ணி அன்பு காட்டுவதுவே ‘ஒன்றாகக் காண்பது’. இது அனைவராலும் இயலுமா?. இதற்குத் தாயுள்ளம் தேவை. தாயானவள், தனக்கு உணவில்லை என்றாலும் குழந்தைகளுக்கு இட்டு மகிழ்வாளே. அந்த உள்ளம் வேண்டும். “அதுவே ஒன்றாகக் காண்பது”

     பாசத்தை எப்படி வெளிப்படுத்துவது எனத் தெரியாமல் பலர் அல்லல் உறுவதனைப் பார்த்திருப்பீர்கள். ஆண்களுக்கு அதில் முதலிடம். “பெண்குழந்தைக்குத் திருமணம் செய்யவேண்டும்” என மனைவி கூறியவுடனே, “இப்ப என்ன வயசாச்சு பிறகு பார்க்கலாம்” எனக்கூறிவிடுவார். ஆனால், அன்றுமுதல் உறக்கம் இருக்காது. எப்போதுவரை எனக்கேட்காதீர். வாழ்நாள் முழுதும் ஓர் ஓரமாக மகளைப் பற்றிய எண்ணம், கணினித் திரையில் நேரம் காட்டுவதுபோல் ஓடிக்கொண்டே இருக்கும். அதை உற்றுநோக்கினால் அறிந்துகொள்ளமுடியும். திருமணமாகிச் சென்று பல ஆண்டுகள் கழிந்தாலும், “‘மழை பெய்கிறதா? வெயில் காய்கிறதா? எனக் கைப்பேசியில் பேசிக்கொள்வதைப் பார்த்திருப்பீர்கள்தானே?. ‘மாதம் மும்மாரி பொழிந்ததா?’ எனக் கேட்கும் மன்னர் பரம்பரை நாம் அதனால்தான் அப்படி பேசுகிறார்கள்” என எண்ணாதீர்கள். குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள், எனத்தெரிந்துகொள்ளவேண்டும். அதற்கு நான்கு சொற்களைப்பேச வேண்டும். அவர்கள் குரலைக் கொண்டே நலமும், துன்பத்தையும் அறிந்துகொள்வார்கள். அதற்கான முயற்சிதான் அது. “தான் வேறு ; குழந்தைகள் வேறு” என எண்ணாத அன்பு நிறை பேச்சு அது. “அதுவே ஒன்றாகக் காண்பது”

     கண்கள் இரண்டாயினும் காணும் காட்சி ஒன்றுதானே? இரு வேறு காட்சியைக் கண்டால் ஒரு வேலையும் செய்யமுடியாது. அப்படி இருவேறு காட்சியைக் கண்டால் மூளை எதனைச் செயல்படுத்தும். வலப்பக்கம் செல்வதா? இடப்பக்கம் செல்வதா? என்னும் குழப்பமும் ஏற்படும். ஒன்றுபட்டு வேலை செய்வதால்தானே “கண் + அவன்” எனக் கணவனை மனைவியும், “கண்ணே” என மனைவியைக் கணவனும் அன்புடன் கூறமுடிவதனைப் பார்க்கமுடிகிறது. “அதுவே ஒன்றாகக் காண்பது”

     மனிதர்கள் உதவிகேட்டு என்னைத் தொல்லைபடுத்துகிறார்கள்? என்ன செய்வது என இறைவன் இறைவியிடம் கேட்கிறார். “அன்புடன் கேட்டால் கொடுத்துவிடுங்களேன்” என்கிறாள் இறைவி. தாயுள்ளமாயிற்றே !. “உலக உயிர்களிலேயே உயர் அறிவுடன் ; ஆற்றலுடன் மனித இனத்தையே படைத்திருக்கிறேன். அப்படி இருந்தும் இப்படி வேண்டுவது நியாயமில்லை. திறமையுடன் உழைத்தால் வறுமை ஒழியும் ; செல்வம் குவியும்” என்றார் இறைவன். “நீங்கள் எங்கு நின்றாலும் அறிந்துகொள்கிறான் என்பதால்தானே கேட்கிறீர்.  அவன் காண முனையாத ஓர் இடம் இருக்கிறது” என்றாள் இறைவி. ”அப்படியா? சொல்” என்கிறார் இறைவன். “ஆம். அது பக்தர்களுடைய உள்ளம்தான்” என்கிறாள் இறைவி. இதனை அறிந்தே தமிழ் மூதாட்டி ஔவையார், அகத்தில் நிறைந்த இறைவனைக் காண வழிகாட்டுகிறார். புறக்கண்களை மூடிக்கொண்டு அகக்கண்களால்தான் அகத்தைப் பார்க்கமுடியும். “அதுவே ஒன்றாகக் காண்பது”

     முன்னோர்கள், ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் இறைவன் இருக்கிறார் என்பதனை உணர்ந்துதானே ‘வணக்கம்’ சொல்லக் கற்றுக்கொடுத்திருக்கிறார்கள்.  பெரியோர்களைக் கண்டால் வணங்கவேண்டும் எனச்சொல்லிக்கொடுத்ததும் அதனால்தானே? “அதுவே ஒன்றாகக் காண்பது”

     நீதிதேவதையின் கண்கள் மூடப்பட்டிருப்பதும் ; சட்டம் அனைவருக்கும் சமம்  எனக் கூறுவதும் அதனால்தானே?. செய்யும் செயலைக்கொண்டே ஒருவரை உயர்ந்தவர் ; தாழ்ந்தவர் என அறியலாமே அன்றி பிறவற்றால் அறியக்கூடாது.  “அதுவே ஒன்றாகக் காண்பது”

கண்கள் கருணையுள்ளது. அது ஒன்றாகப் பார்க்கும் திறனற்றது. எப்படி என்று கேட்கிறீர்களா? மனுநீதிசோழனைத் தவிர யாரும் கன்றினையும், மகனையும் ஒன்றாகப் பார்க்கவில்லையே. அப்படி பார்க்கத்தொடங்கிவிட்டால் நாட்டில் ஒரு குற்றமேனும் நிகழுமா? “அதுவே ஒன்றாகக் காண்பது”

ஒருவர் ஆட்டினையோ மாட்டினையோ வளர்க்கிறார். அதனை, வெட்டுவதற்காக மற்றொருவர் கத்தியினை எடுக்கிறார். உடனே, அந்த ஆடோ ; மாடோ “இவ்வளவு நாள் நம்மை அன்புடன் வளர்த்தவர் எங்கே?. இங்கே ஒருவனிடம் சிக்கிக்கொண்டோமே” என வருந்திக்கொண்டு அங்கும் இங்கும் பார்க்கிறது. அந்த விலங்கினை வளர்த்தவன் காகிதத்தை எண்ணிக்கொண்டிருக்கிறான். விலங்குகளைப் பொறுத்தமட்டில் பணம் காகிதம் தானே? “அன்பும் பாசமும் பணத்திற்குமுன் ஒன்றுமில்லை” எனக் கற்றவன் மனிதன் ஒருவனே.  மனித இனத்தை ஒன்றாகப் பார்க்கும் இவர்களுக்கு விலங்குகளை ஒன்றாகப் பார்க்கத்தெரியவில்லைதானே? இதை நான் சொல்வதாக எண்ணாதீர். ‘தன் ஊன் பெருக்க பிற ஊன் உண்ணக்கூடாது” என்பது தெய்வப்புலவர் திருவள்ளுவர் வாக்கு. அவர் காட்டிய வழியில் அனைத்து உயிர்களிடமும் அன்புகாட்டவேண்டும். “அதுவே ஒன்றாகக் காண்பது”

அதைவிடக்கொடுமை, நாய் வளர்ப்பவர்களில் சிலர், நாயிடம் பாசத்தைப் பொழிவார்கள். அந்நாயுடனே படுத்துக்கொள்வார்கள் ; கொஞ்சுவார்கள் ; விளையாடுவார்கள். அந்த நாயினால் தங்களுடைய இரத்தக் கொதிப்பைக் குறைத்துக்கொள்வார்கள் ; சர்க்கரை அளவைக் குறைத்துக்கொள்வார்கள் ; மன அழுத்தத்தைக் குறைத்துக்கொள்வார்கள். அத்தகையோரின் அன்பைப் பார்க்கும்போது பெருமையாகத்தானே இருக்கும். அப்படி பாசத்தைப்பொழிந்த நண்பரிடம் ‘எங்கே உங்கள் நாயைக் காணவில்லை” எனக் கேட்டபோது, “அதற்கு உடல்நிலை சரியில்லை, அதனால் வெளியூர் செல்லும் போது ஓரிடத்தில் விட்டுவிட்டேன்” எனக் கூறினார். அவரிடம் கொண்ட அத்தனை மதிப்பும் ஓர் நொடியில் காணமல் போய்விட்டது. ஓர் உயிரை அன்புடன் பார்த்த நிலை மாறிவிடுவது எத்துணைக் கொடுமை!. மனிதர்களாக இருந்தாலும் ஏதேனும் ஒரு காப்பகத்துக்குச் சென்றுவிடுவர். வாயில்லா உயிரான நாய் எங்கு செல்லும்?. அதுவும் செல்வச்செழிப்பில் வளர்ந்த நாய். பாவம்தானே? நாயைக் கடைசிவரை பார்த்திருந்தால் எத்துணைப் பெருமை கிடைத்திருக்கும். “அதுவே ஒன்றாகக் காண்பது”

ஒன்றாகக் காண்பதே காட்சி புலனைந்தும்

வென்றான்தன் வீரமேவீரம்  மற்று – ஒன்றானும்

சாகாமல் கற்பதே வித்தை தனைப்பிறர்

ஏவாமல் உண்பதே ஊண் (ஔவையாரின் தனிப்பாடல்)

என்னும் தமிழ்மூதாட்டியின் பாடல் எத்தனை எண்ணங்களை வளர்த்துவிடுகிறது.  நம்மை வெல்லக்கூடிய தகுதி, நம்மையன்றி வேறு எவருக்கு இருக்கமுடியும்.. இனி அனைத்துக்காட்சிகளையும் ஒன்றாகக் காணலாம்தானே?

 

வியாழன், 15 ஜூலை, 2021

நாக்கு வளையலாம் … வாக்கு : புல்லாங்குழல் சொல்லும் செய்தி

 


நாக்கு வளையலாம் … வாக்கு

ஆயிரக்கணக்கான சுவைகளை அறிந்தாலும் நாக்கு கறைபடாது. வாழை, சாம்பார், குழம்பு, கரும்பு, என எது நாக்கில் பட்டாலும் அதை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுகிறது. அதனால்தான் பேசும்போது ‘ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுவேன்,” என அச்சுறுத்துகிறது. ‘தூக்கிடுவேன்’ ‘முடிச்சிடுவேன்’ ‘காலி செய்திடுவேன்’ ‘வெட்ருவேன்’ ‘போட்ருவேன்’ ‘செஞ்சுருவன்’ என எத்தனையோ சொற்களை திரைநாயகர்கள் குழந்தைகள் வாயில் மிக எளிதாக வரவழைத்துவிடுகிறார்கள். பெற்றோர்கள், அன்பு, பாசம் என எவ்வளவு அழகாகச் சொல்லிக்கொடுத்து அழகுபார்த்த நிலைமாறிவிடுகிறது. குழந்தை, வயது கடந்தபிறகு, சமூகம்தானே சொற்களைக் கற்றுக்கொடுக்கிறது. 

     ‘நாக்கு’ ஒவ்வொரு மனிதனுடைய உள்ளத்தின் நிறத்தைக் காட்டிவிடுகிறது. அதனால்தான் கடவுள் அதனை இளஞ்சிவப்பு நிறத்தில் படைத்துள்ளார். ‘நாக்கு’ உணவுச்சுவையினை அறிவதற்கும் ; வளைவதற்குமேற்ப எலும்புத்தசையினால் ஆக்கப்பட்டிருக்கிறது. ஊடகங்களுக்கெல்லாம் உயிராக நிற்பது நாக்கு.  ஊடகங்கள் வரும் முன்னரே, செய்திகளை  உலகுக்கு உரைத்தது ‘நாக்கு’. மக்களுடைய நாக்கில் இடம்பெற வேண்டும் என்பதனால்தான் பல விளம்பரங்கள் நாள்தோறும் மீண்டும் மீண்டும் வலம்வருகின்றன. ஏனெனில், நாக்கு எதைச்சொல்கிறதோ அதுவே வாக்காகிவிடுகிறது ; அதுவே வாழ்க்கையாகிவிடுகிறது ; அதுவே ஆள்கின்ற அளவுக்கு உயர்த்தியும்விடுகிறது. தெரிந்தோ தெரியாமலோ ஒவ்வொரு நாக்கும் எத்தனையோ பொருட்களை ; பண்புகளை  விளம்பரப்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றன. எனவே, ஒவ்வொருவரும் பேச்சில் மிகக் கவனமாக இருக்கவேண்டியது அவசியமாகின்றது.

     கை, கால்களைக் கட்டுப்படுத்துவது எளிது. நாக்கினைக் கட்டுப்படுத்துவது கடினம். அதனால்தான் ‘தெரியாமல் சொல்லிவிட்டேன். மன்னித்துவிடு’ என்னும் சொல் பலரிடமிருந்தும் வெளிப்படுவதனைக் காணமுடிகிறது. வாயிருக்கிறது என்பதனால் எதை வேண்டுமென்றாலும் உண்டால் நோய் வருவது இயல்பு. அதுபோலவே, சொற்களையும் அளவறிந்துபேசவேண்டும். தவறான உணவு தன்னை மட்டுமே வருத்தும். தவறான சொல்லோ பலரையும் ; பன்னாளும் காயப்படுத்தும்.  எனவே, கவனமாக நாக்கைப் பார்த்துக்கொள்ளவேண்டும் என்பதற்காகவே, முப்பத்திரண்டு காவலர்களைக் கடவுள் படைத்துள்ளார். அவைதானே பற்கள். அந்தக் காவலர்களின் கட்டுப்பாட்டை மீறி வரும்போதுதான் ஆபத்தில் சிக்கிவிட (உடைபட) நேர்கிறது.

     காதல்மொழி பேசும்போது கொஞ்சிய அதே நாக்கு தான் திருமணத்திற்குப் பின் வசைபாடவும் செய்கிறது. திருமணத்திற்கும் முன் ‘ஸ்ரீதேவி’ என்றவன் திருமணத்திற்கு பின் ‘மூதேவி’ என்கிறான்.  ‘மண்மீது சொர்க்கம்வந்து பெண் என்று ஆனதே” எனத் திருமணத்திற்கு முன் பாடுவான். “மரணம் என்னும் தூது வந்தது ; அது மங்கை என்னும் வடிவில் வந்தது” எனத் திருமணத்திற்குப் பின் பாடுவான். திருமணத்திற்கு முன் இருசக்கரவாகனத்தில் செல்லும்போது “எண்பது கிலோமிட்டர் வேகத்தில் சென்றாலும். ‘வேகம். இன்னும்வேகம்’ என்பாள். திருமணத்திற்குப் பின் ‘மெல்ல போ ; மெல்ல போ, கோட்டையாவா பிடிக்கப்போற” என வசைபாடுவாள். எப்படி பேசிய நாக்கு இன்று இப்படி பேசுகிறதே என எண்ணுவது இயல்புதானே?

     மனிதர்களைமட்டுமே இந்நாக்கு வசைபாடுவதில்லை. இயல்பான பொருட்களையும் வசைபாடுகிறது. அதுவும் காதலன் உடன் இருக்கும்போது இனித்த புல்லாங்குழலின் இசையானது, அவன் பிரிந்த பின் துன்பமாகிவிடுகிறது. ஏனென்றால், தலைவனுடைய பிரிவை அந்த  இசை சுட்டிக்காட்டிவிடுகிறதுதானே?

     இவ்வாறு துன்பம்செய்வதால்தான் உன்னைச் சுட்டுவிடுகிறார்கள் எனப் புல்லாங்குழலைப் பழிக்கிறாள் தலைவி. மூங்கிலில் துளையிடுவதனால்தானே இசை பிறக்கிறது ; புல்லாங்குழலாகிறது. அதனை எண்ணி அவள் வசைபாடுவதனை,

     இம்மையால் செய்ததை இம்மையேயாம் போலும்

மும்மையே யாமென்பார் ஓரார்காண் – நம்மை

எளியர் என நலிந்த ஈர்ங்க்குழலார் ஏடி !

தெளியச் சுடப்பட்ட வாறு. (திணைமாலை நூற்றைம்பது – 123)

என்னும் பாடல் எடுத்துக்காட்டுகிறது. ஒருவர் தவறுசெய்தால் அடுத்தபிறவியில் அத்துன்பத்தை அனுபவிக்கவேண்டிவரும் எனக் கூறுவது தவறு. அது இப்பிறவியிலேயே அனுபவிக்க நேரிடும் என்கிறாள் தலைவி. உங்களுக்கு ஐயமாக இருந்தால் புல்லாங்குழலைப் பாருங்கள் என்கிறாள். “புல்லாங்குழலானது இப்பிறவியில் துன்பம் செய்யப்போகிறது என்பதனை அறிந்தே அதனை முன்பே சுட்டுவிட்டார்கள்” எனக் கூறுகிறாள் தலைவி.  தலைவியின் பிரிவுத்துயரை புலவர் கணிமேதையார் இப்பாடலில் எடுத்துக்காட்டியுள்ள திறத்தை என்னென்று வியப்பது! அருமைதானே?

     வலியவர்கள் எளியவர்களைத் துன்புறுத்துவது கொடுமையிலும் கொடுமை. வண்டிமாடு அமைதியாக இழுத்துச்செல்கிறதே என அதற்கு உணவிட்டு மகிழாமல், அளவுக்கு அதிகமாக சுமையினை ஏற்றி அதன் வாலை முறுக்கி வண்டி ஓட்டுவது எத்துணைக் கொடுமை? வாயில்லா உயிரை (ஜீவனை) கொடுமைப்படுத்தலாமா? “வாய்தான் இருக்கிறதே, எப்படி வாயில்லா உயிராயிற்று?” என்றுதானே கேட்கிறீர்கள். வாயிருந்தாலும் பேச முடியாத ; தன் துன்பத்தை வெளிப்படுத்த முடியாத உயிர்கள் அனைத்தும் ‘வாயில்லா உயிர்கள்’தான்.. அவ்வாறே மனிதர்களும் தங்கள் துன்பத்தை வெளியே சொல்லாமல் இருந்தால் அவர்கள் மனிதர்களாகார் ; வாயில்லா உயிர்களாகவே மதிப்பிடுவர். ஏதாவது துன்பம் நிகழப்போகிறது ; நிகழும் எனத் தெரிந்தாலே, உடனடியாக சத்தமான குரலை எழுப்பி உதவிகேட்கவேண்டும். குரல் எழுப்பத் தயங்கினாலே குற்றவாளிகளுக்கு பலம் கூடிவிடும். காகமானது தங்கள் இனத்திற்கு ஏதாவது ஆபத்து என்றால் உடனடியாக கரைந்து அனைத்துக்காக்கைகளையும் கூட்டி எதிரிகளை விரட்டிவிடுகிறதே. அந்தப் பாடத்தை ஒவ்வொருவரும் கற்கவேண்டும்தானே?

     அவ்வாறு, தன்னைக் காத்துக்கொள்ள உதவும் நாக்கிற்கு, நீங்கள் நன்றிக்கடனாக ஏதாவது செய்யவேண்டுமெனில், தூய்மையாகப் பாதுகாக்க வேண்டும். தூய்மை என்றால் அழுக்கு சேராமலா? எனக் கேட்காதீர்.  உண்மையை மட்டுமே பேசுவதே நாக்கிற்கு நீங்கள் செய்யும் நன்றிக்கடன். அதற்காக வேப்பந்தழையால் தூய்மை செய்வதனை விட்டுவிடாதீர்கள்.

     புல்லாங்குழல் குறித்து ஒரு நகைச்சுவை சொல்லட்டுமா?. புல்லாங்குழலை வாங்க ஒருவன் கடைக்கு வந்தானாம். அவன் நீண்ட நேரம் அங்கேயே ஒவ்வொரு புல்லாங்குழலாய் எடுத்துப்பார்த்தானாம். கடைக்காரர் ‘நான் உங்களுக்கு உதவட்டுமா” எனக் கேட்டாராம். “ஏன், உங்கள் கடையில் எல்லா புல்லாங்குழலும் ஓட்டையாக இருக்கிறது” எனக் கேட்டானாம்.

    

 

ஆயிரக்கணக்கான சுவைகளை அறிந்தாலும் நாக்கு கறைபடாது. வாழை, சாம்பார், குழம்பு, கரும்பு, என எது நாக்கில் பட்டாலும் அதை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுகிறது. அதனால்தான் பேசும்போது ‘ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுவேன்,” என அச்சுறுத்துகிறது. ‘தூக்கிடுவேன்’ ‘முடிச்சிடுவேன்’ ‘காலி செய்திடுவேன்’ ‘வெட்ருவேன்’ ‘போட்ருவேன்’ ‘செஞ்சுருவன்’ என எத்தனையோ சொற்களை திரைநாயகர்கள் குழந்தைகள் வாயில் மிக எளிதாக வரவழைத்துவிடுகிறார்கள். பெற்றோர்கள், அன்பு, பாசம் என எவ்வளவு அழகாகச் சொல்லிக்கொடுத்து அழகுபார்த்த நிலைமாறிவிடுகிறது. குழந்தை, வயது கடந்தபிறகு, சமூகம்தானே சொற்களைக் கற்றுக்கொடுக்கிறது. 

     ‘நாக்கு’ ஒவ்வொரு மனிதனுடைய உள்ளத்தின் நிறத்தைக் காட்டிவிடுகிறது. அதனால்தான் கடவுள் அதனை இளஞ்சிவப்பு நிறத்தில் படைத்துள்ளார். ‘நாக்கு’ உணவுச்சுவையினை அறிவதற்கும் ; வளைவதற்குமேற்ப எலும்புத்தசையினால் ஆக்கப்பட்டிருக்கிறது. ஊடகங்களுக்கெல்லாம் உயிராக நிற்பது நாக்கு.  ஊடகங்கள் வரும் முன்னரே, செய்திகளை  உலகுக்கு உரைத்தது ‘நாக்கு’. மக்களுடைய நாக்கில் இடம்பெற வேண்டும் என்பதனால்தான் பல விளம்பரங்கள் நாள்தோறும் மீண்டும் மீண்டும் வலம்வருகின்றன. ஏனெனில், நாக்கு எதைச்சொல்கிறதோ அதுவே வாக்காகிவிடுகிறது ; அதுவே வாழ்க்கையாகிவிடுகிறது ; அதுவே ஆள்கின்ற அளவுக்கு உயர்த்தியும்விடுகிறது. தெரிந்தோ தெரியாமலோ ஒவ்வொரு நாக்கும் எத்தனையோ பொருட்களை ; பண்புகளை  விளம்பரப்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றன. எனவே, ஒவ்வொருவரும் பேச்சில் மிகக் கவனமாக இருக்கவேண்டியது அவசியமாகின்றது.

     கை, கால்களைக் கட்டுப்படுத்துவது எளிது. நாக்கினைக் கட்டுப்படுத்துவது கடினம். அதனால்தான் ‘தெரியாமல் சொல்லிவிட்டேன். மன்னித்துவிடு’ என்னும் சொல் பலரிடமிருந்தும் வெளிப்படுவதனைக் காணமுடிகிறது. வாயிருக்கிறது என்பதனால் எதை வேண்டுமென்றாலும் உண்டால் நோய் வருவது இயல்பு. அதுபோலவே, சொற்களையும் அளவறிந்துபேசவேண்டும். தவறான உணவு தன்னை மட்டுமே வருத்தும். தவறான சொல்லோ பலரையும் ; பன்னாளும் காயப்படுத்தும்.  எனவே, கவனமாக நாக்கைப் பார்த்துக்கொள்ளவேண்டும் என்பதற்காகவே, முப்பத்திரண்டு காவலர்களைக் கடவுள் படைத்துள்ளார். அவைதானே பற்கள். அந்தக் காவலர்களின் கட்டுப்பாட்டை மீறி வரும்போதுதான் ஆபத்தில் சிக்கிவிட (உடைபட) நேர்கிறது.

     காதல்மொழி பேசும்போது கொஞ்சிய அதே நாக்கு தான் திருமணத்திற்குப் பின் வசைபாடவும் செய்கிறது. திருமணத்திற்கும் முன் ‘ஸ்ரீதேவி’ என்றவன் திருமணத்திற்கு பின் ‘மூதேவி’ என்கிறான்.  ‘மண்மீது சொர்க்கம்வந்து பெண் என்று ஆனதே” எனத் திருமணத்திற்கு முன் பாடுவான். “மரணம் என்னும் தூது வந்தது ; அது மங்கை என்னும் வடிவில் வந்தது” எனத் திருமணத்திற்குப் பின் பாடுவான். திருமணத்திற்கு முன் இருசக்கரவாகனத்தில் செல்லும்போது “எண்பது கிலோமிட்டர் வேகத்தில் சென்றாலும். ‘வேகம். இன்னும்வேகம்’ என்பாள். திருமணத்திற்குப் பின் ‘மெல்ல போ ; மெல்ல போ, கோட்டையாவா பிடிக்கப்போற” என வசைபாடுவாள். எப்படி பேசிய நாக்கு இன்று இப்படி பேசுகிறதே என எண்ணுவது இயல்புதானே?

     மனிதர்களைமட்டுமே இந்நாக்கு வசைபாடுவதில்லை. இயல்பான பொருட்களையும் வசைபாடுகிறது. அதுவும் காதலன் உடன் இருக்கும்போது இனித்த புல்லாங்குழலின் இசையானது, அவன் பிரிந்த பின் துன்பமாகிவிடுகிறது. ஏனென்றால், தலைவனுடைய பிரிவை அந்த  இசை சுட்டிக்காட்டிவிடுகிறதுதானே?

     இவ்வாறு துன்பம்செய்வதால்தான் உன்னைச் சுட்டுவிடுகிறார்கள் எனப் புல்லாங்குழலைப் பழிக்கிறாள் தலைவி. மூங்கிலில் துளையிடுவதனால்தானே இசை பிறக்கிறது ; புல்லாங்குழலாகிறது. அதனை எண்ணி அவள் வசைபாடுவதனை,

     இம்மையால் செய்ததை இம்மையேயாம் போலும்

மும்மையே யாமென்பார் ஓரார்காண் – நம்மை

எளியர் என நலிந்த ஈர்ங்க்குழலார் ஏடி !

தெளியச் சுடப்பட்ட வாறு. (திணைமாலை நூற்றைம்பது – 123)

என்னும் பாடல் எடுத்துக்காட்டுகிறது. ஒருவர் தவறுசெய்தால் அடுத்தபிறவியில் அத்துன்பத்தை அனுபவிக்கவேண்டிவரும் எனக் கூறுவது தவறு. அது இப்பிறவியிலேயே அனுபவிக்க நேரிடும் என்கிறாள் தலைவி. உங்களுக்கு ஐயமாக இருந்தால் புல்லாங்குழலைப் பாருங்கள் என்கிறாள். “புல்லாங்குழலானது இப்பிறவியில் துன்பம் செய்யப்போகிறது என்பதனை அறிந்தே அதனை முன்பே சுட்டுவிட்டார்கள்” எனக் கூறுகிறாள் தலைவி.  தலைவியின் பிரிவுத்துயரை புலவர் கணிமேதையார் இப்பாடலில் எடுத்துக்காட்டியுள்ள திறத்தை என்னென்று வியப்பது! அருமைதானே?

     வலியவர்கள் எளியவர்களைத் துன்புறுத்துவது கொடுமையிலும் கொடுமை. வண்டிமாடு அமைதியாக இழுத்துச்செல்கிறதே என அதற்கு உணவிட்டு மகிழாமல், அளவுக்கு அதிகமாக சுமையினை ஏற்றி அதன் வாலை முறுக்கி வண்டி ஓட்டுவது எத்துணைக் கொடுமை? வாயில்லா உயிரை (ஜீவனை) கொடுமைப்படுத்தலாமா? “வாய்தான் இருக்கிறதே, எப்படி வாயில்லா உயிராயிற்று?” என்றுதானே கேட்கிறீர்கள். வாயிருந்தாலும் பேச முடியாத ; தன் துன்பத்தை வெளிப்படுத்த முடியாத உயிர்கள் அனைத்தும் ‘வாயில்லா உயிர்கள்’தான்.. அவ்வாறே மனிதர்களும் தங்கள் துன்பத்தை வெளியே சொல்லாமல் இருந்தால் அவர்கள் மனிதர்களாகார் ; வாயில்லா உயிர்களாகவே மதிப்பிடுவர். ஏதாவது துன்பம் நிகழப்போகிறது ; நிகழும் எனத் தெரிந்தாலே, உடனடியாக சத்தமான குரலை எழுப்பி உதவிகேட்கவேண்டும். குரல் எழுப்பத் தயங்கினாலே குற்றவாளிகளுக்கு பலம் கூடிவிடும். காகமானது தங்கள் இனத்திற்கு ஏதாவது ஆபத்து என்றால் உடனடியாக கரைந்து அனைத்துக்காக்கைகளையும் கூட்டி எதிரிகளை விரட்டிவிடுகிறதே. அந்தப் பாடத்தை ஒவ்வொருவரும் கற்கவேண்டும்தானே?

     அவ்வாறு, தன்னைக் காத்துக்கொள்ள உதவும் நாக்கிற்கு, நீங்கள் நன்றிக்கடனாக ஏதாவது செய்யவேண்டுமெனில், தூய்மையாகப் பாதுகாக்க வேண்டும். தூய்மை என்றால் அழுக்கு சேராமலா? எனக் கேட்காதீர்.  உண்மையை மட்டுமே பேசுவதே நாக்கிற்கு நீங்கள் செய்யும் நன்றிக்கடன். அதற்காக வேப்பந்தழையால் தூய்மை செய்வதனை விட்டுவிடாதீர்கள்.

     புல்லாங்குழல் குறித்து ஒரு நகைச்சுவை சொல்லட்டுமா?. புல்லாங்குழலை வாங்க ஒருவன் கடைக்கு வந்தானாம். அவன் நீண்ட நேரம் அங்கேயே ஒவ்வொரு புல்லாங்குழலாய் எடுத்துப்பார்த்தானாம். கடைக்காரர் ‘நான் உங்களுக்கு உதவட்டுமா” எனக் கேட்டாராம். “ஏன், உங்கள் கடையில் எல்லா புல்லாங்குழலும் ஓட்டையாக இருக்கிறது” எனக் கேட்டானாம்.

    

 

புதன், 14 ஜூலை, 2021

நொதுமல் என்னும் பழிச்சொல்

 


நொதுமல் என்னும் பழிச்சொல்

“நாலுபேர் பாத்தா ஏதாவது சொல்லுவாங்க” என்னும் வழக்கம் நம்மிடையே நிலவி வருவது உண்மைதானே. ஒருவர், மிதிவண்டியில் (ஈருருளி) செல்லும்போது தவறி விழுந்துவிட்டால்கூட, யாரும் பார்க்குமுன்னே எழுந்துவிடவேண்டும் என எண்ணுவதால்தானே விரைந்து எழுகிறார். ஏனென்றால், மிதிவண்டி கூட ஒழுங்காக ஓட்டத்தெரியவில்லை  என்னும் பழிச்சொல் யார் வாயிலிருந்தும் வந்துவிடக்கூடாது என அவர் எண்ணியதால்தானே? என்ன அருமையான எண்ணம். இந்த ஒன்றிற்காகவே அவரை நீங்கள் பாராட்டவேண்டும்தானே?

     ஆனால் இன்று, “யார் என்ன நினைத்தால் என்ன? என விரும்பியபடி அணில்வால்போல் தலைமுடியை வெட்டிக்கொள்வது ; தலையில் படம் வரைந்துகொள்வது ; உள்ளாடை போலிருக்கும் மெல்லிய ஆடை அணிவது ; கிழிந்த கோணிப்பை(ஜீன்ஸ்) அணிவது என வழக்கமாகிவிட்டதெல்லாம் பழிக்கு அஞ்சாததால்தானே. அன்று தலைப்பாகை. வேட்டி, சட்டை எனக் கம்பீரமாக நடந்துவந்ததற்குக் காரணம், தங்கள் மதிப்பு உயரவேண்டும் என்பதனால் மட்டுமன்று. சுற்றியிருந்த பெண்களுக்கு, தங்களது ஆடை அச்சுறுத்துவதாகவோ, கூச்சம் தரக்கூடியதாகவோ அமையக்கூடாது என்பதுவே. எத்தனை உயர்வான எண்ணம். ஆங்கிலேயர் வரவால் ஆடை அலங்காரமும் அவதாரமாகிவிட்டது. பழிச்சொற்களும் பெருகிவிட்டது.  உண்மைதானே.

ஒரு அழகான குறும்படம்.  முதலில் நடுத்தர வயதில் இருபது நபர்கள் கொண்டகுழு அரங்கத்திற்கு வருகிறது. நிகழ்ச்சி நடத்துபவர், ஒவ்வொருவரிடமும் படம் வரையத்தக்க வெண்மையான தாளினை கொடுக்கிறார். “நீங்கள் இயற்கை குறித்து படம் வரையவேண்டும். உங்களுக்காக இருபது மேசைகள் உள்ளன. அங்கு அனைத்து வண்ணக் கரிக்கோல்களும்(பென்சில்) உள்ளன. அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளலாம். உங்களுக்கு அடுத்து ஒரு குழுவரும்” எனக்கூறி அந்த நிகழ்ச்சி நடத்துகிறார். அரைமணி நேரத்தில் வண்ணங்களைப் பயன்படுத்தி வரைந்துவிடுகின்றனர். அவர்களைக் காத்திருப்பு அறைக்கு அனுப்பிவிட்டு, அடுத்த குழுவை வரையச்சொல்கிறார்கள். அவர்கள்  சராசரியாகப் பத்துவயது குழந்தைகள். குழந்தைகள் அரைமணி நேரத்தில் படம் வரைந்துவிடுகிறார்கள்.

இப்போது வலப்பக்கம் ஒரு குழுவும் , இடப்பக்கம் இரண்டாவது குழுவும் கரவொலி எழுப்புகின்றனர். நிகழ்ச்சியை நகர்த்துபவர் முதலில் நடுத்தரவயதுள்ளோரின் படத்தைக் காண்பிக்கச்சொல்கிறார். அவர்கள் வண்ணப்படங்களைக்காட்ட, குழந்தைகள் வாயைப் பிளந்து கரவொலி எழுப்புகின்றனர். பெரியவர்களும் புன்னகையோடு அவர்களுடைய கரவொலியை ஏற்கின்றனர். அடுத்து, குழந்தைகள் படத்தைக் காட்டச்சொல்கிறார் நிகழ்ச்சி நடத்துபவர். குழந்தைகள் கூச்சத்துடன் தாங்கள் வரைந்த படத்தைக் காட்டுகிறார்கள். எல்லாம் கருப்பு நிறம் மட்டுமே. மற்ற வண்ணங்களை முதல் குழு தீர்த்துவிட்டதால் வண்ணமில்லை. எங்கும் சோகம் பரவிவிடுகிறது. பெரியவர்களின் கண்களில் கண்ணீர் வெளியேவராமல் குரல் தழுதழுக்கிறது. குற்ற உணர்வுக்கு மனம் அஞ்சுகிறது. இதுதான் இன்றைய சுற்றுச்சூழலைக் காக்கும் நிலை என அந்த 'டாடா' நிறுவனத்தின் குறும்படம் அழகாகப் படம்பிடித்துக்காட்டிவிட்டது. பழிச்சொல் ஏற்படாமல் வாழ்வதுதானே அழகு. அழகு மட்டுமன்று அறிவும்தான்.

“மரங்களை நாங்கள் போற்றுகிறோம். நீங்கள் எளிதாக வெட்டிவிடுகிறீர்கள்” என அந்நியர்கள் நம்மைக் குறைகூறுகின்றனர். அவர்கள் மரங்களை வெட்டுவதில்லை. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்துகொள்கிறார்கள். அதனால் நம்மைக் குறைகூறுகிறார்கள். இது இன்றைய நிலைதான். முந்நாளில், மரங்களை மரங்களாக அல்ல, தெய்வங்களாகப் போற்றினர் தமிழர். ஒவ்வொரு கோவிலிலும் ‘தல விருட்சம்’ என வணங்கினர். மீண்டும் மரங்களை வளர்த்தால் பழிச்சொல் நீங்கும்தானே.

“பழைய தமிழகம் தாய் ;  புதிய தமிழகம் ஒரு சேய். தாயிடமிருந்து சேய் கற்க வேண்டியவை பல உள்ளன. பழைய தமிழகமாகிய அன்னையின் அனுபவ அறிவுரைகளைப் புறக்கணிக்கமுடியாது. அந்த அறிவுரைகளைப் புதிய தமிழகம் எவ்வளவிற்கு ஏற்கின்றது” (மு.வ. அன்னைக்கு, முன்னுரை) எனத் தமிழறிஞர் மு.வரதராசனார் கூறுவது இப்பழிச்சொல்லை நீக்கவும் துணைசெய்யும்தானே?

புலவர்கள், மக்களுக்கு வழிகாட்டியதோடு மன்னர்களுக்கும் வழிகாட்டியாக விளங்கினர். புலவர் மன்னரிடம் ‘இப்படி செய்வாயாக’ எனக்கூறமுடியாதுதானே? அதனால் ‘இதுதான் இயல்பு’ எனக்கூறுகிறார். இதுவே ‘ஓம்படை” எனப் புறப்பொருள் வெண்பாமாலை ஆசிரியர் ஐயனாரிதனார் தெளிவுபடுத்துகிறார்.  மன்னர்  எவ்வாறு பழிச்சொல் நீக்கி வாழவேண்டுமென்பதனை,

ஒன்றில் இரண்டாய்ந்து மூன்று அடக்கி நான்கினால்

வென்று களங்கொண்ட வேல்வேந்தே – சென்றுலாம்

ஆழ்கடல்சூழ் வையகத்துள் ஐந்துவென்று ஆறு அகற்றி

ஏழ்கடிந்து இன்புற்று இரு

                                        (புறப்பொருள்வெண்பாமாலை; பாடாண்திணை:36)

என்னும் ‘ஓம்படைக்கான” வெண்பா எடுத்துக்காட்டுகிறது.

“ஒன்றாகிய உண்மை ஞானத்தை உணர்ந்து ; இரண்டாகிய வினைகளை ஆய்ந்து ; மூன்றாகிய பகை, நட்பு, நொதுமல் என்னும் மூன்றினையும் எண்ணி ; யானை, தேர், புரவி, காலாள் என்னும் நால்வகைப் படையால் போர்க்களத்தில் வெற்றிகொள்கின்ற வேந்தனே!, ஆழ்ந்த கடல் சூழ்ந்த இவ்வுலகில்  மெய்,வாய்,கண்,முக்கு, செவி என்னும் ஐம்புலன்களையும் வென்று, படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என்னும்  ஆறு உறுப்புகளையும் பெருக்கி, பேராசை ; கடுஞ்சொல் ; மிகுதண்டம் ; சூது ; பொருளீட்டம் ; கள் ; காமம் இவை ஏழு குற்றங்களையும் நீக்கி நெடுங்காலம் வாழ்வாயாக” என வாழ்த்துகிறார்.

ஒன்று முதல் ஏழு வரை அடுக்கி பாடப்பட்டுள்ள இவ்வெண்பாவில் அறிவுரை மட்டுமின்றி அழகுரையும் உள்ளதுதானே?

செவ்வாய், 13 ஜூலை, 2021

ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பு - தமிழரை வேட்டையாடிய அந்நியர்கள் –

 

 



தமிழரை வேட்டையாடிய அந்நியர்கள் – ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பு

      புதுச்சேரிக்கு நீங்கள் வந்திருக்கிறீர்களா? காந்தி, நேரு வீதிகளைப்போன்று பொருட்கள் குவிந்திருக்கும்வீதிதான் ரங்கபிள்ளைவீதி. மொத்தவிலை கடைகள் வரிசையாக இருக்கும். மளிகை, காய்கறி, நெகிழிப் பொருட்களுக்குப் (தார்ப்பாய் உட்பட) பஞ்சமிருக்காது. வீதி ஒழுங்கை இங்குள்ள சாலைகள் சொல்லும். எந்தச் சாலையில் கிழக்கு நோக்கிச்சென்றாலும், கடற்கரை உங்களை வரவேற்கும். இந்தச்சாலைக்கு ‘ரங்கபிள்ளை வீதி’ எனப் பெயர் வரக்காரணமாயிருந்தவர் ஆனந்தரங்கம்பிள்ளை. சரி, கட்டுரைக்கு வந்துவிடுவோமா?

     ‘ரங்கபிள்ளை’ என்னும் பெயரைக்கேட்டால் புதுச்சேரியில் இன்று மட்டுமல்ல ஃப்ரெஞ்சு அரசாங்கம் ஆட்சிசெய்தபோதும்  மிகுந்த மதிப்பு இருந்தது. ஏனெனில், இவர் துபாஷாக அவ்வரசாங்கத்தில் பணியாற்றியவர். துவ பாஷா – இரண்டு மொழி, இருமொழி கற்றுச்சிறந்தவராதலால் அந்நியர்கள் இவரைப்போற்றி தம்முடன் இருத்திக்கொண்டனர். புதுச்சேரி கவர்னராக இருந்த ‘டூப்ளே’வின் துபாஷாகப் பணியாற்றினார்.  ரங்கபிள்ளைக்கு மாற்றாக வேறு யாராவது இருந்திருந்தால் இன்று நமக்குப் பல வரலாறுகள் கிடைக்காமலே போயிருக்கும்.

பெரியோர்கள் அன்று நாட்குறிப்பினை எழுதுவதனை மரபாகவே வைத்திருந்தனர். ஆனால்,  அவர்களுடைய நாட்குறிப்புகள் பெரும்பாலும் வீட்டைப் பற்றிய குறிப்பாகவே இருக்கும். ஆனால், ஆனந்தரங்கம்பிள்ளையின் நாட்குறிப்பு  ஒவ்வொரு நாளும் அரசாங்கத்தின் பல்வேறு நடவடிக்கைகளை உள்ளடக்கியது. எனவே இந்நாட்குறிப்பு ஆவணமாகப் பாதுகாக்கப்படுகிறது.

     1746 முதல் 1763 வரை புதுச்சேரி மண்ணை யார் ஆளலாம்? என ஆங்கிலேயரும் ஃபெரெஞ்சுக்காரர்களும் சண்டைபோட்டுக்கொண்டிருந்தனர். உண்மையாக ஆளவேண்டிய தமிழர்கள், அவர்களுள் யாருக்கு அடிமைப்பணி செய்யலாம் எனக் காத்திருந்தனர். வெள்ளந்தியான மக்கள். அந்நியர்களாக வந்தோரை வரவேற்று மகிழ்ந்தனர். ; நீர் கேட்டான் ; கொடுத்தனர் ; உணவு கேட்டான் ; கொடுத்தனர் ; திண்ணையில் இடம் கேட்டான் ; கொடுத்தனர். எது கேட்டாலும் கொடுக்கிறானே. இவனை அடிமைப்படுத்திவிடுவது எளிமை என முடிவுசெய்கிறான்

ஊர்ப்பெரியவர்களுடன் அந்நியர்கள் பழகுகின்றனர். பொதுமக்கள், ஊர்ப்பெரியவர்களுக்கு வணக்கம் செலுத்தும்போது, அவர்களுடன் அந்நியனுக்கும் வணக்கம் செலுத்த வேண்டியதாகிவிடுகிறது. இவ்வாறு மக்களிடம் வெள்ளையனைக் கண்டால் வணங்கவேண்டும் என்னும் எண்ணத்தை உண்டாக்கிவிடுகிறான்.

“டோடோ” என்னும் பறவை மொரிஷியஸ் தீவில் (1598) இருந்தது. இது மூன்றடிமூன்று அங்குல உயரமும் பத்து முதல் பதினேழு கிலோ எடைக்கு மேலும் இருக்கும். கப்பலில் சென்று கொண்டிருந்த டச்சுக்காரர்கள் தண்ணீர் தாகமெடுத்து உயிரைக்காத்துக்கொள்ள இங்கு வருகின்றனர். அடைக்கலம் கிடைத்தவுடன் ‘டோடோ’ பறவையைப் பார்த்து அஞ்சுகின்றனர். அது நாயைப்போல் அன்புடன் காலைச்சுற்றி வந்தது. உடனே, அதனை வேட்டையாடிவிட்டனர். இன்று ஒரு பறவைகூட இல்லை. அன்பிற்குக் கிடைத்தபரிசு இது. அதைவிடக்கொடுமை ‘டோடோ’ என்றால் போர்த்துகீசிய மொழியில் ‘முட்டாள்’ என்றுபொருள். விழிப்புணர்வு இல்லாவிட்டால் நிலைமை இதுதான். அந்நியர்களிடம் அன்பு காட்டினால் இதுதான் நிலை.

கருணை காட்டிய தமிழரிடம் இனி எதையும் கேட்டுப்பெறக்கூடாது. நாமே இவனுக்குக் கொடுக்கும் அளவிற்கு அடிமைப்படுத்திவிடவேண்டியதுதான் என அந்நியர் முடிவுசெய்கின்றனர். ஆயுதங்களைத் தம்நாட்டிலிருந்து வரவழைத்து தாய்நாட்டுமக்களை அடக்கி ஆள்கின்றனர்.  ‘பாத்திரமறிந்து பிச்சையிடத்’ தெரியாவிட்டால் இதுதான் நிலை என்பதனை பின்னால்தான் தமிழ் மன்னர்களும் மக்களும் உணர்ந்தனர். இவ்வுண்மையை உணர்ந்து விடுதலைபெற முந்நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. இக்கொடுமைகளை நினைத்துப்பார்க்கும்போது நெஞ்சம் கொதிக்கிறதே. நேரில் கண்ட ஆனந்தரங்கம்பிள்ளை தனி மனிதராக என்ன செய்வார். இவற்றையெல்லாம் எழுதி ஆவணமாக்கினார் ; இந்திய வரலாற்றை அறிய தம்மால் இயன்ற பணியைச் செம்மையுறச் செய்தார்.

இருபத்தைந்து ஆண்டுகள் அவர் தொடர்ந்து நாட்குறிப்பு எழுதியுள்ளது ஆவணமாகத் துணைசெய்கிறது. இவை மட்டும் இல்லாவிடில், ஃபெரெஞ்சு கவர்னரைக் கடவுளாகவும் தமிழர்களைக் குற்றம்செய்தவர்களாகவும் வரலாற்றில் பதிவுசெய்துள்ளது உண்மை என எண்ணவேண்டியிருக்கும். தேசத்திற்காகப் போராடியவர்களை எல்லாம் குற்றவாளிகள் எனக் கொன்றுகுவித்த அந்நியர்களைப் புகழவேண்டியிருக்கும். அத்தகைய வரலாறுகளைத்தான் உலகம் அறிந்திருக்கிறது. தலைநிமிர்ந்து இன்றும் சிலைகளாக அவர்கள் நின்றுகொண்டிருப்பதும், அவர்கள் பெயரில் வீதிகள் இருப்பதுமே இதற்கு எடுத்துக்காட்டு. அச்சிலைகளுக்கு மாற்றாக இந்திய விடுதலை வீரர்களின் சிலையும், வீதிப்பெயர்களும் மாற்றியாகவேண்டும்தானே? உண்மை வரலாறுகள் இப்பொழுது இந்தியர்களாலேயே எழுதப்படுகிறது. அதனால் இனி இந்தியர்கள் நாயகர்களாக விளங்குவர்.  கொலையும், கொள்ளையும் அடித்த அந்நியர்களின் கொடுங்குணங்கள் விளக்கமாகத் தரப்படும்.

“மக்களை மதிப்புடன் நடத்தவேண்டும். ஊர்ப்பெரியவர்களுக்குக் கட்டுப்பட்டுவாழவேண்டும்” என நாகரிகத்துடன் அமைதியாக வாழ்ந்த நம் நாட்டில் அந்நியன் நுழைந்து வன்முறையால் அடிமைப்படுத்தினான். ஊர்ப்பெரியவர்களை அவமானப்படுத்தினான். இதனால் மக்கள் அஞ்சினர். மக்களால் மதிக்கப்பட்டவர்களையெல்லாம் கொன்றனர். தலையைவெட்டி நடுவீதியில் பல நாட்கள் தொங்கவிட்டனர். இதனால் ‘அந்நியர்’ என்றாலே மக்கள் அலறும் அளவிற்கு ஆட்சி செய்தனர்.

புதுச்சேரி கவர்னராக இருந்த டூப்ளேவும் அவ்வாறே ஆட்சி செய்ததனை ஆனந்தரங்கம்பிள்ளையின் நாட்குறிப்பானது, வரிசைமுறை தவறாது பதிவுசெய்துள்ளது.

அந்நியர்களைத் தாய்போல் வரவேற்ற தமிழரை நாயினும் இழிவாய் நடத்தினர். “கந்தப்பமுதலி, சவரிராய பிள்ளை, பெரியண்ண முதலி ஆகிய மூவரையும் கட்டி, பதினோரு சொல்தாதுகள் (வீர்ர்கள்) வில்லிநல்லூர் கோட்டைக்கு இழுத்துச்சென்றனர். அவர்களை வழிநெடுகிலும் துப்பாக்கியால் அடித்ததையும் கீழே விழுந்தபோது கால்களைப் பிடித்து இழுத்துப்போனதனையும் பெருந்திரளாக மக்கள் பார்த்தனர்.” (XI:403-404,416) என ரங்கப்பிள்ளைப் பதிவுசெய்துள்ளார். மேலும், “பிரெஞ்சு ராசாவின் துருப்புகள் புதுச்சேரி வந்தன. எல்லாக் கெவுனிகளும் சாத்தப்பட்டு காவல் காக்கப்பட்டன. சொல்தாதுக்கள் சனங்கள் மீதுசெய்த அக்கிரமங்கள் அதிகரித்தன. இதனால், 1757 ஜூலை 24 அன்று ‘குண்டு தாழைக்கு அப்பால் போகிறவர்கள் கொல்லப்படுகிறார்கள். பெண்களின் மார்புகளைப் பிடித்தக் கீழே தள்ளிக்கெடுக்கிறார்கள். … இந்த அநியாயத்தை எல்லாம் கேட்டு ஞாயம் வழங்க ஒருத்தருமில்லை” (XI:21)  எனவும் பதிவுசெய்துள்ளார். திரைப்படத்தில்தானே இத்தகைய கொடிய காட்சிகள் அமையும். ஆனால், உண்மையாகவே பொதுமக்கள் பலரை இவ்வாறு கொடுமைப்படுத்தினார்கள் எனில் என்சொல்வது?

மக்களுக்கு அச்சம் ஊட்டியதோடு கொள்ளையடிப்பதனையே குறிக்கோளாகக் கொண்டனர். “முப்பத்தெட்டு வருடமாக இந்தப் பட்டணத்திலே இருக்கிறேன். எல்லாவித அக்கிரமங்களும் புரியப்படுகின்றன. சேவகர், வெள்ளைக்காரர், அவர்களின் கூலிகள் போன்றோர் வீட்டுக்குள் புகுந்து மாடுகள், குதிரைகள் எல்லாவற்றையும் கொண்டுபோகிறார்கள். யாராவது எதிர்த்துக்கேட்டால் அடி உதை கிடைக்கிறது.” (XI:23)   எனப் பதிவுசெய்கிறார்.

இவ்வாறு ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் முன்னும் பின்னும் என்ன நடந்தது? திட்டங்களும் தீர்வுகளும் எவ்வாறு அமைந்தன. என்பதனையெல்லாம் தம் நாளேட்டில் பதிவு செய்துள்ளார். இவை அனைத்தும் இன்று நூல்களாகக் கிடைக்கின்றன.

இப்படிப் பல்வேறு நாட்குறிப்புகள் கிடைத்திருந்தால் தமிழர்களின் விடுதலைப்போராட்டங்கள் இந்திய விடுதலைப்போராட்டத்தில் பெருமளவில் இடம்பெற்றிருக்கும்தானே. எத்தனையோ வீர்ர்களின் வீரம் அறியப்படாமலே மறைந்துவிட்டதே. இத்தகைய குற்றம் நிகழாமல் காத்த ஆனந்தரங்கம் பிள்ளையின் பெருமையினை எவ்வளவு போற்றினாலும் மழையின் ஒரு துளிதான். சரிதானே?

 

**************