நொதுமல் என்னும் பழிச்சொல்
“நாலுபேர் பாத்தா ஏதாவது சொல்லுவாங்க” என்னும் வழக்கம் நம்மிடையே நிலவி வருவது
உண்மைதானே. ஒருவர், மிதிவண்டியில் (ஈருருளி) செல்லும்போது தவறி விழுந்துவிட்டால்கூட,
யாரும் பார்க்குமுன்னே எழுந்துவிடவேண்டும் என எண்ணுவதால்தானே விரைந்து எழுகிறார். ஏனென்றால்,
மிதிவண்டி கூட ஒழுங்காக ஓட்டத்தெரியவில்லை என்னும் பழிச்சொல் யார் வாயிலிருந்தும் வந்துவிடக்கூடாது
என அவர் எண்ணியதால்தானே? என்ன அருமையான எண்ணம். இந்த ஒன்றிற்காகவே அவரை நீங்கள் பாராட்டவேண்டும்தானே?
ஆனால் இன்று, “யார் என்ன நினைத்தால்
என்ன? என விரும்பியபடி அணில்வால்போல் தலைமுடியை வெட்டிக்கொள்வது ; தலையில் படம் வரைந்துகொள்வது
; உள்ளாடை போலிருக்கும் மெல்லிய ஆடை அணிவது ; கிழிந்த கோணிப்பை(ஜீன்ஸ்) அணிவது என வழக்கமாகிவிட்டதெல்லாம்
பழிக்கு அஞ்சாததால்தானே. அன்று தலைப்பாகை. வேட்டி, சட்டை எனக் கம்பீரமாக நடந்துவந்ததற்குக்
காரணம், தங்கள் மதிப்பு உயரவேண்டும் என்பதனால் மட்டுமன்று. சுற்றியிருந்த பெண்களுக்கு,
தங்களது ஆடை அச்சுறுத்துவதாகவோ, கூச்சம் தரக்கூடியதாகவோ அமையக்கூடாது என்பதுவே. எத்தனை
உயர்வான எண்ணம். ஆங்கிலேயர் வரவால் ஆடை அலங்காரமும் அவதாரமாகிவிட்டது. பழிச்சொற்களும்
பெருகிவிட்டது. உண்மைதானே.
ஒரு அழகான குறும்படம். முதலில் நடுத்தர
வயதில் இருபது நபர்கள் கொண்டகுழு அரங்கத்திற்கு வருகிறது. நிகழ்ச்சி நடத்துபவர், ஒவ்வொருவரிடமும்
படம் வரையத்தக்க வெண்மையான தாளினை கொடுக்கிறார். “நீங்கள் இயற்கை குறித்து படம் வரையவேண்டும்.
உங்களுக்காக இருபது மேசைகள் உள்ளன. அங்கு அனைத்து வண்ணக் கரிக்கோல்களும்(பென்சில்)
உள்ளன. அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளலாம். உங்களுக்கு அடுத்து ஒரு குழுவரும்” எனக்கூறி
அந்த நிகழ்ச்சி நடத்துகிறார். அரைமணி நேரத்தில் வண்ணங்களைப் பயன்படுத்தி வரைந்துவிடுகின்றனர்.
அவர்களைக் காத்திருப்பு அறைக்கு அனுப்பிவிட்டு, அடுத்த குழுவை வரையச்சொல்கிறார்கள்.
அவர்கள் சராசரியாகப் பத்துவயது குழந்தைகள்.
குழந்தைகள் அரைமணி நேரத்தில் படம் வரைந்துவிடுகிறார்கள்.
இப்போது வலப்பக்கம் ஒரு குழுவும் , இடப்பக்கம் இரண்டாவது குழுவும் கரவொலி எழுப்புகின்றனர்.
நிகழ்ச்சியை நகர்த்துபவர் முதலில் நடுத்தரவயதுள்ளோரின் படத்தைக் காண்பிக்கச்சொல்கிறார்.
அவர்கள் வண்ணப்படங்களைக்காட்ட, குழந்தைகள் வாயைப் பிளந்து கரவொலி எழுப்புகின்றனர்.
பெரியவர்களும் புன்னகையோடு அவர்களுடைய கரவொலியை ஏற்கின்றனர். அடுத்து, குழந்தைகள் படத்தைக்
காட்டச்சொல்கிறார் நிகழ்ச்சி நடத்துபவர். குழந்தைகள் கூச்சத்துடன் தாங்கள் வரைந்த படத்தைக்
காட்டுகிறார்கள். எல்லாம் கருப்பு நிறம் மட்டுமே. மற்ற வண்ணங்களை முதல் குழு தீர்த்துவிட்டதால்
வண்ணமில்லை. எங்கும் சோகம் பரவிவிடுகிறது. பெரியவர்களின் கண்களில் கண்ணீர் வெளியேவராமல்
குரல் தழுதழுக்கிறது. குற்ற உணர்வுக்கு மனம் அஞ்சுகிறது. இதுதான் இன்றைய சுற்றுச்சூழலைக்
காக்கும் நிலை என அந்த 'டாடா' நிறுவனத்தின் குறும்படம் அழகாகப் படம்பிடித்துக்காட்டிவிட்டது. பழிச்சொல்
ஏற்படாமல் வாழ்வதுதானே அழகு. அழகு மட்டுமன்று அறிவும்தான்.
“மரங்களை நாங்கள் போற்றுகிறோம். நீங்கள் எளிதாக வெட்டிவிடுகிறீர்கள்” என அந்நியர்கள்
நம்மைக் குறைகூறுகின்றனர். அவர்கள் மரங்களை வெட்டுவதில்லை. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி
செய்துகொள்கிறார்கள். அதனால் நம்மைக் குறைகூறுகிறார்கள். இது இன்றைய நிலைதான். முந்நாளில்,
மரங்களை மரங்களாக அல்ல, தெய்வங்களாகப் போற்றினர் தமிழர். ஒவ்வொரு கோவிலிலும் ‘தல விருட்சம்’
என வணங்கினர். மீண்டும் மரங்களை வளர்த்தால் பழிச்சொல் நீங்கும்தானே.
“பழைய தமிழகம் தாய் ; புதிய தமிழகம்
ஒரு சேய். தாயிடமிருந்து சேய் கற்க வேண்டியவை பல உள்ளன. பழைய தமிழகமாகிய அன்னையின்
அனுபவ அறிவுரைகளைப் புறக்கணிக்கமுடியாது. அந்த அறிவுரைகளைப் புதிய தமிழகம் எவ்வளவிற்கு
ஏற்கின்றது” (மு.வ. அன்னைக்கு, முன்னுரை) எனத் தமிழறிஞர் மு.வரதராசனார் கூறுவது இப்பழிச்சொல்லை
நீக்கவும் துணைசெய்யும்தானே?
புலவர்கள், மக்களுக்கு வழிகாட்டியதோடு மன்னர்களுக்கும் வழிகாட்டியாக விளங்கினர்.
புலவர் மன்னரிடம் ‘இப்படி செய்வாயாக’ எனக்கூறமுடியாதுதானே? அதனால் ‘இதுதான் இயல்பு’
எனக்கூறுகிறார். இதுவே ‘ஓம்படை” எனப் புறப்பொருள் வெண்பாமாலை ஆசிரியர் ஐயனாரிதனார்
தெளிவுபடுத்துகிறார். மன்னர் எவ்வாறு பழிச்சொல் நீக்கி வாழவேண்டுமென்பதனை,
ஒன்றில் இரண்டாய்ந்து மூன்று அடக்கி நான்கினால்
வென்று களங்கொண்ட வேல்வேந்தே – சென்றுலாம்
ஆழ்கடல்சூழ் வையகத்துள் ஐந்துவென்று ஆறு அகற்றி
ஏழ்கடிந்து இன்புற்று இரு
(புறப்பொருள்வெண்பாமாலை; பாடாண்திணை:36)
என்னும் ‘ஓம்படைக்கான” வெண்பா எடுத்துக்காட்டுகிறது.
“ஒன்றாகிய உண்மை ஞானத்தை உணர்ந்து ; இரண்டாகிய வினைகளை ஆய்ந்து ; மூன்றாகிய
பகை, நட்பு, நொதுமல் என்னும் மூன்றினையும் எண்ணி ; யானை, தேர், புரவி, காலாள் என்னும்
நால்வகைப் படையால் போர்க்களத்தில் வெற்றிகொள்கின்ற வேந்தனே!, ஆழ்ந்த கடல் சூழ்ந்த இவ்வுலகில்
மெய்,வாய்,கண்,முக்கு, செவி என்னும் ஐம்புலன்களையும்
வென்று, படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என்னும் ஆறு உறுப்புகளையும் பெருக்கி, பேராசை ; கடுஞ்சொல்
; மிகுதண்டம் ; சூது ; பொருளீட்டம் ; கள் ; காமம் இவை ஏழு குற்றங்களையும் நீக்கி நெடுங்காலம்
வாழ்வாயாக” என வாழ்த்துகிறார்.
ஒன்று முதல் ஏழு வரை அடுக்கி பாடப்பட்டுள்ள இவ்வெண்பாவில் அறிவுரை மட்டுமின்றி
அழகுரையும் உள்ளதுதானே?