தமிழரை வேட்டையாடிய அந்நியர்கள் – ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பு
‘ரங்கபிள்ளை’ என்னும் பெயரைக்கேட்டால் புதுச்சேரியில்
இன்று மட்டுமல்ல ஃப்ரெஞ்சு அரசாங்கம் ஆட்சிசெய்தபோதும் மிகுந்த மதிப்பு இருந்தது. ஏனெனில், இவர் துபாஷாக
அவ்வரசாங்கத்தில் பணியாற்றியவர். துவ பாஷா – இரண்டு மொழி, இருமொழி கற்றுச்சிறந்தவராதலால்
அந்நியர்கள் இவரைப்போற்றி தம்முடன் இருத்திக்கொண்டனர். புதுச்சேரி
கவர்னராக இருந்த ‘டூப்ளே’வின் துபாஷாகப் பணியாற்றினார். ரங்கபிள்ளைக்கு மாற்றாக வேறு யாராவது இருந்திருந்தால்
இன்று நமக்குப் பல வரலாறுகள் கிடைக்காமலே போயிருக்கும்.
பெரியோர்கள் அன்று
நாட்குறிப்பினை எழுதுவதனை மரபாகவே வைத்திருந்தனர். ஆனால், அவர்களுடைய நாட்குறிப்புகள் பெரும்பாலும் வீட்டைப்
பற்றிய குறிப்பாகவே இருக்கும். ஆனால், ஆனந்தரங்கம்பிள்ளையின் நாட்குறிப்பு ஒவ்வொரு நாளும் அரசாங்கத்தின் பல்வேறு நடவடிக்கைகளை
உள்ளடக்கியது. எனவே இந்நாட்குறிப்பு ஆவணமாகப் பாதுகாக்கப்படுகிறது.
1746 முதல் 1763 வரை புதுச்சேரி மண்ணை யார் ஆளலாம்?
என ஆங்கிலேயரும் ஃபெரெஞ்சுக்காரர்களும் சண்டைபோட்டுக்கொண்டிருந்தனர். உண்மையாக ஆளவேண்டிய
தமிழர்கள், அவர்களுள் யாருக்கு அடிமைப்பணி செய்யலாம் எனக் காத்திருந்தனர். வெள்ளந்தியான
மக்கள். அந்நியர்களாக வந்தோரை வரவேற்று மகிழ்ந்தனர். ; நீர் கேட்டான் ; கொடுத்தனர்
; உணவு கேட்டான் ; கொடுத்தனர் ; திண்ணையில் இடம் கேட்டான் ; கொடுத்தனர். எது கேட்டாலும்
கொடுக்கிறானே. இவனை அடிமைப்படுத்திவிடுவது எளிமை என முடிவுசெய்கிறான்
ஊர்ப்பெரியவர்களுடன்
அந்நியர்கள் பழகுகின்றனர். பொதுமக்கள், ஊர்ப்பெரியவர்களுக்கு வணக்கம் செலுத்தும்போது,
அவர்களுடன் அந்நியனுக்கும் வணக்கம் செலுத்த வேண்டியதாகிவிடுகிறது. இவ்வாறு மக்களிடம்
வெள்ளையனைக் கண்டால் வணங்கவேண்டும் என்னும் எண்ணத்தை உண்டாக்கிவிடுகிறான்.
“டோடோ” என்னும்
பறவை மொரிஷியஸ் தீவில் (1598) இருந்தது. இது மூன்றடிமூன்று அங்குல உயரமும் பத்து முதல்
பதினேழு கிலோ எடைக்கு மேலும் இருக்கும். கப்பலில் சென்று கொண்டிருந்த டச்சுக்காரர்கள்
தண்ணீர் தாகமெடுத்து உயிரைக்காத்துக்கொள்ள இங்கு வருகின்றனர். அடைக்கலம் கிடைத்தவுடன்
‘டோடோ’ பறவையைப் பார்த்து அஞ்சுகின்றனர். அது நாயைப்போல் அன்புடன் காலைச்சுற்றி வந்தது.
உடனே, அதனை வேட்டையாடிவிட்டனர். இன்று ஒரு பறவைகூட இல்லை. அன்பிற்குக் கிடைத்தபரிசு
இது. அதைவிடக்கொடுமை ‘டோடோ’ என்றால் போர்த்துகீசிய மொழியில் ‘முட்டாள்’ என்றுபொருள்.
விழிப்புணர்வு இல்லாவிட்டால் நிலைமை இதுதான். அந்நியர்களிடம் அன்பு காட்டினால் இதுதான்
நிலை.
கருணை காட்டிய
தமிழரிடம் இனி எதையும் கேட்டுப்பெறக்கூடாது. நாமே இவனுக்குக் கொடுக்கும் அளவிற்கு அடிமைப்படுத்திவிடவேண்டியதுதான்
என அந்நியர் முடிவுசெய்கின்றனர். ஆயுதங்களைத் தம்நாட்டிலிருந்து வரவழைத்து தாய்நாட்டுமக்களை
அடக்கி ஆள்கின்றனர். ‘பாத்திரமறிந்து பிச்சையிடத்’
தெரியாவிட்டால் இதுதான் நிலை என்பதனை பின்னால்தான் தமிழ் மன்னர்களும் மக்களும் உணர்ந்தனர்.
இவ்வுண்மையை உணர்ந்து விடுதலைபெற முந்நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. இக்கொடுமைகளை நினைத்துப்பார்க்கும்போது
நெஞ்சம் கொதிக்கிறதே. நேரில் கண்ட ஆனந்தரங்கம்பிள்ளை தனி மனிதராக என்ன செய்வார். இவற்றையெல்லாம்
எழுதி ஆவணமாக்கினார் ; இந்திய வரலாற்றை அறிய தம்மால் இயன்ற பணியைச் செம்மையுறச் செய்தார்.
இருபத்தைந்து
ஆண்டுகள் அவர் தொடர்ந்து நாட்குறிப்பு எழுதியுள்ளது ஆவணமாகத் துணைசெய்கிறது. இவை மட்டும்
இல்லாவிடில், ஃபெரெஞ்சு கவர்னரைக் கடவுளாகவும் தமிழர்களைக் குற்றம்செய்தவர்களாகவும்
வரலாற்றில் பதிவுசெய்துள்ளது உண்மை என எண்ணவேண்டியிருக்கும். தேசத்திற்காகப் போராடியவர்களை
எல்லாம் குற்றவாளிகள் எனக் கொன்றுகுவித்த அந்நியர்களைப் புகழவேண்டியிருக்கும். அத்தகைய
வரலாறுகளைத்தான் உலகம் அறிந்திருக்கிறது. தலைநிமிர்ந்து இன்றும் சிலைகளாக அவர்கள் நின்றுகொண்டிருப்பதும்,
அவர்கள் பெயரில் வீதிகள் இருப்பதுமே இதற்கு எடுத்துக்காட்டு. அச்சிலைகளுக்கு மாற்றாக
இந்திய விடுதலை வீரர்களின் சிலையும், வீதிப்பெயர்களும் மாற்றியாகவேண்டும்தானே? உண்மை
வரலாறுகள் இப்பொழுது இந்தியர்களாலேயே எழுதப்படுகிறது. அதனால் இனி இந்தியர்கள் நாயகர்களாக
விளங்குவர். கொலையும், கொள்ளையும் அடித்த அந்நியர்களின்
கொடுங்குணங்கள் விளக்கமாகத் தரப்படும்.
“மக்களை மதிப்புடன்
நடத்தவேண்டும். ஊர்ப்பெரியவர்களுக்குக் கட்டுப்பட்டுவாழவேண்டும்” என நாகரிகத்துடன்
அமைதியாக வாழ்ந்த நம் நாட்டில் அந்நியன் நுழைந்து வன்முறையால் அடிமைப்படுத்தினான்.
ஊர்ப்பெரியவர்களை அவமானப்படுத்தினான். இதனால் மக்கள் அஞ்சினர். மக்களால் மதிக்கப்பட்டவர்களையெல்லாம்
கொன்றனர். தலையைவெட்டி நடுவீதியில் பல நாட்கள் தொங்கவிட்டனர். இதனால் ‘அந்நியர்’ என்றாலே
மக்கள் அலறும் அளவிற்கு ஆட்சி செய்தனர்.
புதுச்சேரி கவர்னராக
இருந்த டூப்ளேவும் அவ்வாறே ஆட்சி செய்ததனை ஆனந்தரங்கம்பிள்ளையின் நாட்குறிப்பானது,
வரிசைமுறை தவறாது பதிவுசெய்துள்ளது.
அந்நியர்களைத்
தாய்போல் வரவேற்ற தமிழரை நாயினும் இழிவாய் நடத்தினர். “கந்தப்பமுதலி, சவரிராய பிள்ளை,
பெரியண்ண முதலி ஆகிய மூவரையும் கட்டி, பதினோரு சொல்தாதுகள் (வீர்ர்கள்) வில்லிநல்லூர்
கோட்டைக்கு இழுத்துச்சென்றனர். அவர்களை வழிநெடுகிலும் துப்பாக்கியால் அடித்ததையும்
கீழே விழுந்தபோது கால்களைப் பிடித்து இழுத்துப்போனதனையும் பெருந்திரளாக மக்கள் பார்த்தனர்.”
(XI:403-404,416) என ரங்கப்பிள்ளைப் பதிவுசெய்துள்ளார்.
மேலும், “பிரெஞ்சு ராசாவின் துருப்புகள் புதுச்சேரி வந்தன. எல்லாக் கெவுனிகளும் சாத்தப்பட்டு
காவல் காக்கப்பட்டன. சொல்தாதுக்கள் சனங்கள் மீதுசெய்த அக்கிரமங்கள் அதிகரித்தன. இதனால்,
1757 ஜூலை 24 அன்று ‘குண்டு தாழைக்கு அப்பால் போகிறவர்கள் கொல்லப்படுகிறார்கள். பெண்களின்
மார்புகளைப் பிடித்தக் கீழே தள்ளிக்கெடுக்கிறார்கள். … இந்த அநியாயத்தை எல்லாம் கேட்டு
ஞாயம் வழங்க ஒருத்தருமில்லை” (XI:21) எனவும் பதிவுசெய்துள்ளார். திரைப்படத்தில்தானே
இத்தகைய கொடிய காட்சிகள் அமையும். ஆனால், உண்மையாகவே பொதுமக்கள் பலரை இவ்வாறு கொடுமைப்படுத்தினார்கள்
எனில் என்சொல்வது?
மக்களுக்கு அச்சம்
ஊட்டியதோடு கொள்ளையடிப்பதனையே குறிக்கோளாகக் கொண்டனர். “முப்பத்தெட்டு வருடமாக இந்தப்
பட்டணத்திலே இருக்கிறேன். எல்லாவித அக்கிரமங்களும் புரியப்படுகின்றன. சேவகர், வெள்ளைக்காரர்,
அவர்களின் கூலிகள் போன்றோர் வீட்டுக்குள் புகுந்து மாடுகள், குதிரைகள் எல்லாவற்றையும்
கொண்டுபோகிறார்கள். யாராவது எதிர்த்துக்கேட்டால் அடி உதை கிடைக்கிறது.” (XI:23) எனப் பதிவுசெய்கிறார்.
இவ்வாறு ஒவ்வொரு
நிகழ்ச்சிக்கும் முன்னும் பின்னும் என்ன நடந்தது? திட்டங்களும் தீர்வுகளும் எவ்வாறு
அமைந்தன. என்பதனையெல்லாம் தம் நாளேட்டில் பதிவு செய்துள்ளார். இவை அனைத்தும் இன்று
நூல்களாகக் கிடைக்கின்றன.
இப்படிப் பல்வேறு
நாட்குறிப்புகள் கிடைத்திருந்தால் தமிழர்களின் விடுதலைப்போராட்டங்கள் இந்திய விடுதலைப்போராட்டத்தில்
பெருமளவில் இடம்பெற்றிருக்கும்தானே. எத்தனையோ வீர்ர்களின் வீரம் அறியப்படாமலே மறைந்துவிட்டதே.
இத்தகைய குற்றம் நிகழாமல் காத்த ஆனந்தரங்கம் பிள்ளையின் பெருமையினை எவ்வளவு போற்றினாலும்
மழையின் ஒரு துளிதான். சரிதானே?
**************