தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

செவ்வாய், 28 மே, 2019

மாணிக்கவாசகர் வாக்கில் அவா அறுத்தல் - Saint Manickavasagar


மாணிக்கவாசகர் வாக்கில் அவா அறுத்தல்

முனைவர் ம.ஏ. கிருட்டினகுமார், உலாப்பேசி – 99406 84775

திருமுறை என்பது திருவை அடையும் முறை எனச் சான்றோர்கள் குறிப்பிடுகின்றனர்.உண்மை அறிவே ஆனந்தம் என்பதே சைவ சித்தாந்தப் பொருளாக அமைந்து சத்சித் ஆனந்தம் எனக் குறிப்பிடப் பெறுவதனையும் உணரமுடிகிறது.இவ்வாறு உண்மையினை அறிந்த பின் பொய்யானவை எல்லாம் வெளிப்பட்டும் விடுபட்டும் போவதனையே அவா அறுத்தல் எனக் குறிப்பிடப்படுகிறது.ஒளி உள்ளே நுழையும் போது இருள் மறைந்து விடுவதும் ஒளி விலகியதும் இருள் இயல்பாகவே வெளிப்படுவது போலவே மாயையானது பிறவிப்பிணியில் சிக்குண்டு விலகாது நிற்கிறது.அதனை உணர்ந்த அருளாளர்கள் அம் முடிச்சை அவிழ்த்தும் பிடித்துப் பிசைந்தும் தாம் அருளொளியில் கலந்துவிடுவர்.அவ்வாறு அவர்கள் மட்டுமின்றி தம் வழி நிற்போர்க்கும் இருள் விலக வழிகாட்டியுள்ளதனை அடியார்களின் வரலாற்றின் வழி உணரமுடிகிறது.தெய்வப் புலவர் திருவள்ளுவர் வழி நின்று நடைபெறும் இம்மாபெரும் கருத்தரங்கில் அவர் வழி நின்று திருவாசகத்தை நோக்கும் முயற்சியாகவே இக் கட்டுரையாக மலர்கிறது.

தெய்வப்புலவரும் மாணிக்கவாசகரும்

        தெய்வப்புலவர் திருவள்ளுவர் ’எல்லா பொருளும் இதன் பாலுள’ என்னும் வகையில் திருக்குறள் படைத்துள்ளார்.அவ்வாறு கல் மனத்தையும் கரைக்கும் வாசகத்தால் பக்தியினை ஊட்டி இறையருளைப் பெற நல்வழி காட்டியவர் மாணிக்கவாசகர். எனவே தமிழ்த்திருமறையில் ஞானத் திருமறையாகத் திருக்குறளும் பக்தி  திருமறையாக திருவாசகமும் திகழ்வதாக பதினாறு கவனகர் கனகசுப்புரத்தினம் அவர்கள் குறிப்பிடுவதனையும் இங்கு எண்ணி மகிழலாம்.

        தெய்வப்புலவர் திருவள்ளுவருடைய திருக்குறள் கற்றோர்க்கு அகராதியாக நின்று வழிகாட்டுகிறது.வள்ளுவம் மொழியும் வரையறையினை உலகமே கொண்டாடும் வகையில் யாக்கப்பட்டதே அதன் தனிச்சிறப்பு என்பதும் வெள்ளிடைமலை.

                        ’அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை’ (திருக்குறள் – 49)
                        ’அற வினை யாதெனில் கொல்லாமை’ (திருக்குறள் – 321)
                        ’இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
                        நல்லாற்றின் நின்ற துணை’ (திருக்குறள் – 41)
                        உறங்குவதுபோலும் சாக்காடு உறங்கி
                        விழிப்பது போலும் பிறப்பு (திருக்குறள் – 339)
                        அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ் ஞான்றும்
                        தவாஅப் பிறப்பீனும் வித்து (திருக்குறள் – 361)

என்னும் வரையறைகள் பெருங்கடலின் சில துளிகள். அவா அறுத்தல் என்னும் நிலை அருளாளர்களிடம் அடிப்படைக் கொள்கையாயிருந்ததற்குக் காரணம் அது பிறவிப் பிணிக்கு வித்து என்பதனாலேயே என்பதனை மேற்கூறிய வரையறையின் வழி உணரமுடிகிறது.

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும் ((திருக்குறள் – 362)

என்னும் திருக்குறளும் அக்கருத்தை வழிமொழிகின்றது.

                        தரிக்கிலேன் காய வாழ்க்கை சங்கரா போற்றி வான
                        விருத்தனே போற்றி எங்கள் விடலையே போற்றி ஒப்பில்
                        ஒருத்தனே போற்றி உம்பர் தம்பிரான் போற்றி தில்லை
                        நிருத்தனே போற்றி எங்கள் நின்மலா போற்றி போற்றி (காருணியத்திரங்கல்- 61)

என மாணிக்கவாசகர் இறைவனிடம் உடல் வாழ்க்கையை வாழ முடியாத நிலையினைக் கூறி அருள் வேண்டுவதனையும் காணமுடிகிறது. இறையடியை அடைய முடியும் என எண்ணுவதும் இறைவன் தன்னுள்ளே இருப்பதனை உணர்வதுவும் தமிழர் தம் நெறியாக நின்றதனையும்

கறங்கோலைப் போல்வதோர் காயப்பிறப்போ டிறப்பென்னும்
அறம்பாவமென் றிரண்டச்சந் தவிர்த்தென்னை ஆண்டுகொண்டான்
மறந்தேயுந் தன்கழல்நான் மறவாவண்ணம் நல்கிய அத்
திறம்பாடல் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ (திருக்கோத்தும்பி -8)

என்னும் மாணிக்க வாசகமாம் திருவாசகத்தின் வழி உணரமுடிகிறது. இறைவன்  பாவ புண்ணியத்தால் ஏற்படும் பிறப்பு அச்சத்தை நீக்கி ஆண்டுகொண்ட அருமையினை இங்கு புலப்படுத்துகிறார் மாணிக்க வாசகர்.

அவாவை அறுக்கும் சிவா

        ’சிவாய சிவ” என்னும் மந்திரமும் ’சிவாய வசி’ என்னும் மந்திரமும் பிறவிக்கடலில் சிக்கலின்றி கடக்கத் துணைசெய்யவும் இப்பூவுலகை மகிழ்ச்சியாகக் கடக்கும் தோணிகளாய் நிற்கின்றன. சிவ சக்தியாய் நிற்கும் சிகரமும் வகரமும் நரகம் அடையாது துன்பத்தில் உழலாது காக்கும் என்பதனை உணரமுடிகிறது.  எனவே இறைவனின் திருவடியைப் பற்றி இவ் உலக வாழ்வை நீத்த அருமையினை

நானேயோ தவஞ்செய்தேன் சிவாயநம எனப்பெற்றேன்
தேனாய் இன் அமுதமுமாய்த் தித்திக்குஞ் சிவபெருமான்
தானேவந் தெனதுள்ளம் புகுந்தடியேற் கருள் செய்தான்
ஊனாரும் உயிர்வாழ்க்கை ஒறுத்தன்றே வெறுத்திடவே (திருவேசறவு – 10)

என்னும் பாடலின் வழி தெளிவுறுத்துகிறார். இவ் உலக வாழ்வில் மகிழ்ச்சியாக வாழ வேண்டுமெனில் தன்னலமின்றி பிற உயிர்களிடம் பற்று கொண்டு வாழ்வதும் அவ் உலக வாழ்வை அடைய வேண்டுமெனில் இவ் உலக வாழ்வையே துறக்க வேண்டுமென்பதனையும்  உணரமுடிகிறது. வேண்டாமை என்னும் மனநலமே மனத்தை மகிழ்வாக வைத்திருக்கும் என்பது இம்மைக்கும் மறுமைக்கும் துணைசெய்யும் என்பதனை

வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
யாண்டும் அஃதொப்பது இல் (திருக்குறள் – 363)

என்னும் திருக்குறள் உணர்த்தி நிற்கின்றது.விழுச்செல்வம் என்பது மனம் கொண்ட பொருளின் தன்மையைப் பொருத்தே அமைவதனையும் இங்கு எண்ண வேண்டியுள்ளது.

உலகியல் பயணம்

        பேருந்தில் பயணம் செய்ய விரும்புவோர் அப்பேருந்தின் மீது மிகுந்த கவனம் செலுத்தி அப்பேருந்தைக் கண்டவுடன் ; காணாததைக் கண்டது போல் மகிழ்ந்து ; மகிழ்ச்சியுடன் ஏறி இருக்கையில் அமர்ந்து ; பெருமூச்சு விட்டு பின் அப்பேருந்தில்  விரும்பி பயணம் செய்து தான் இறங்கும் இடம் வந்தபின் அந்தப் பேருந்தைத் திரும்பிக் கூடப் பார்க்காது தன் வேலையைப் பார்த்துக் கொண்டு போவது இயல்பு. இந் நிகழ்வின் வழி அப்பேருந்திடம் கொண்ட பற்று உண்மையானது போல் தோன்றிடினும் அது மெய்யன்று.தாம் நினைத்த இல்லத்திற்கோ அலுவலகத்திற்கோ செல்ல வேண்டுமென்பதே அவர்களின் இலக்கு.அவ்விலக்கினை அடையும் நிலையினைக் கொண்டே அவர்கள் பயணத்தை இன்பமாக எண்ணியதனை எண்ணிப்பார்த்தால் உணரமுடியும்.இவ் உலக வாழ்வும் அத்தகையதே என்பதனை உணர்ந்தவர்களே ஞானிகள் ; இறையடியார்கள் ; அருளாளர்கள். அவ்வாறே இவ் உலக வாழ்வில் உரிய கடமைகளை தாமரை இலையின் தண்ணீர் போல் உலகப் பற்றுடன் ஒட்டி வாழ்வது போலவே-  ஒட்டாது வாழ்ந்து இறைப்பற்றுடனே கடமையை ஆற்றவேண்டும் என்பதனை

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை
பற்றுக பற்று விடற்கு . (திருக்குறள் – 350)

எனத் தெய்வப்புலவர் உணர்த்தி நிற்கின்றார்.உலகப் பற்றினை நீக்குதல் எளிதன்று.அதனை இறைப்பற்றாலேயே நீக்குதல் இயலும் என்பதனையும் தெளிவுறுத்துகிறார்.தம்முடைய உண்மையான நோக்கத்தை அறிந்தவர்கள் பிற எல்லாவற்றையும் இறைவனின் விளையாட்டாக எண்ணி தம் கடமையை பல்லக்குப் பயணம் போல் எளிதாகக் கடப்பர் என்பதனை

வேண்டத்தக்கது அறிவோய் நீ வேண்ட முழுதுந் தருவோய் நீ
வேண்டும் அயன்மாற் கரியோய் நீ வேண்டி என்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீயா தருள்செய்தாய் யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசொன் றுண்டென்னில் அதுவும் உன்றன் விருப்பன்றே (குழைத்தபத்து -6)

என்னும் பாடலின் வழி நெறிப்படுத்துகிறார் மாணிக்கவாசகர்.அவனருளாலே அவன் தாள் வணங்கும் சிறப்பினையும் இப்பாடல் உணர்த்தி நிற்கின்றது.

சேற்றில் சிக்குதல்

        தேனில் சிக்கிக்கொள்ளும் எறும்பு போல் இவ் உலகச் சேற்றில் சிக்கிக்கொண்டு வந்த வேலையை விட்டுவிட்டு பந்தக்காலை பிடித்துக் கொண்டிருப்போர் பலர்.பலரும் பந்தங்களையே பெரிதென்று எண்ணுவதும் இறைவனைப் பற்றிய சிந்தனையே இன்றி வாழ்வதுமே இயல்பாகி விட்டது.சிலரே மெய்ப்பொருளை உணர்ந்து மெய்வாழ்வு வாழ்வதனையும் காணமுடிகிறது.

இலர் பலராகிய  காரணம் நோற்பார்
சிலர் பலர் நோலாதவர் (திருக்குறள் – 270)

என்னும் தெய்வப்புலவரின் கூற்றினை இங்கு எண்ணி மகிழலாம்.எல்லோருக்கும் இலக்கு என்பது இயல்பாகவே அமைந்திருப்பனும் அதனை உணராது தவத்தை மறந்து அவத்தையே தம் வாழ்வாகக் கொண்டு வாழ்வதனை இங்கு தெளிவுறுத்துகிறார். கருவிலே திருவுடையாரான மாணிக்கவாசகரும் அவ்வாறே வாழ்ந்ததனையும் அதிலிருந்து இறையருள் மீட்டதனையும்

நானாரென் உள்ளமார் ஞானங்க ளாரென்னை யாரறிவார்
வானோர் பிரானென்னை ஆண்டிலனேல் மதிமயங்கி
ஊனா ருடைதலையில் உண்பலிதேர் அம்பலவன்
தேனார் கமலமே சென்றூதாய் கோத்தும்பி  (திருக்கோத்தும்பி -1)

என்னும் மாணிக்கவாசகத்தின் வழி உணர்த்தியுள்ளார் ஆளுடைய நம்பி. இறையருள் தன்னை ஆட்கொள்ளவில்லையெனில் நான் என்னும் அகப் பற்றும்;உள்ளம் என்னும் மாயப்பற்றும் ; ஞானம் என்னும் பொய்ப்பற்றுமே குடிகொண்டிருக்கும். இறையாற்றலின் ஒரு துளியேநான்என்பதனையும் ;இறைச்சிந்தனை  உடையதே உள்ளம்என்பதனையும் ; மெய்யறிவேஞானம்என்பதனையும் அறியாது வாழ்வதுமே மாயை என்னும் சேற்றிலே சிக்குண்டிருக்கும் வாழ்வு என்பதனையும் தெளிவுறுத்தியுள்ளார். தலை என்னும் மண்டை ஓட்டினைக் கொண்டு பிச்சை ஏற்கும் சிவபெருமானின் பெருமையினை எடுத்துக்காட்டி தலையாகிய ஆணவப்பகட்டை அறவே ஒழித்து அதனை ஒன்றுமில்லாததாக்கி அவ் உண்மையை உள்ளத்திற்கு உணர்த்தி பாவத்தை நீக்கி மெய்யறிவை உணர்த்தி அருள்புரியும் தன்மையை இப்பாடலின் வழி புலப்படுத்தியுள்ளார் மாணிக்கவாசகர்.

நன்றே செய்வாய்

        தான் விரும்பிய பொருளை உயிரென எண்ணிப் போற்றிப் பாதுகாத்தவன் வேறொரு முக்கியத் (உண்மை) தேவைக்காக அப்பொருளை அடகுவைத்து விடுகிறான். அவ்வாறு அடகு வைத்த பொருள் குறித்து அடகு வைத்தவனுக்கு ஒரு கவனமும் துளியும் தேவையில்லாதது போலவே இறைவனிடம் தன்னை அடைக்கலம் கொடுத்தவர்க்கு இவ் உலக வாழ்வில் கவனம் துளியும் தேவையில்லாததாகிவிடுகிறது. அதனால் அனைத்துச் செயல்பாடுகளும் இறையருள் என்பதனை உணர்ந்து அனைத்தும் நன்மைக்கே என்பதனை உணர்ந்து வாழும் அடியார்களுக்கு துன்பம் சிறுதும் இல்லை என்பதனை
                   அன்றே என்றன் ஆவியும் உடலும் உடைமை எல்லாமுங்
                   குன்றே அனையாய் என்னை ஆட்கொண்ட போதே கொண்டிலையோ
                   இன்றோர் இடையூ றெனக்குண்டோ எண் தோள் முக்கண் எம்மானே
                   நன்றே செய்வாய் பிழைசெய்வாய் நானோ இதற்கு நாயகமே (குழைத்த பத்து – 7)

என்னும் பாடலின் வழி உணர்த்தியுள்ளார் திருவாதவூரார்.இவ்வுலகில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வுக்குமான காரணத்தை ஆராய்வது என்பது இயலாது.குறிப்பிட்ட சில நிகழ்வுகளுக்கான காரணங்களை ஓரளவு கண்டறிந்த விஞ்ஞானம் அம்முடிவுகளையே கொண்டாடி மகிழ்கிறது. மெய்ஞ்ஞானம் அளவிலாப் பெறாத அருட்பெருஞ்ஜோதியாகவும் அருட்பெருங்கருணையாகவும் இருப்பதனை இயற்கை எனக் குறிப்பிட்டு பேராற்றலின் பெருமையினை ஒத்துக்கொள்வதனையும் காணமுடிகிறது. இவ்வாறு மெய்ப்பொருளான இறையாற்றல் ஒன்றே நிலையான பொருள் என்றெண்ணி அவா அறுத்து வாழ வேண்டியதன் அவசியத்தினை தம் பாடலின் வழி நெறிப்படுத்துகிறார் மாணிக்கவாசகர்.

தனிப்பெருங்கருணை

        அவா என்பது நான் என்னும் அகப்பற்றையும் எனது என்னும் புறப்பற்றையும் உள்ளடக்கியது.எனவே இப்பற்றை உண்டாக்கிய பொய்ப்பொருளை எண்ணத் துணியும் போது அம்மாயை விலகி மெய்ப்பொருள் புலனாகிறது. பாசி விலகிய பின் நீர் தெளிவதும் மீண்டும் பாசி சேர்ந்துகொள்ளும்போது நீரின் தெளிவைக் காண இயலாதது போலவும் வாழ்வில் மெய்ப்பொருளைக் காண இயலாது அவா என்னும் மாயை பற்றிக்கொள்வதனைக் காணமுடிகிறது. இப்பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள விழைந்த மாணிக்க வாசகர் இறையருளை வேண்டியதனை

அம்மையே அப்பா ஒப்பிலா மணியே அன்பினில் விளைந்த ஆரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலை புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே சிவபெருமானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே ( பிடித்தபத்து – 3)

என்னும் பாடல் தெளிவுறுத்துகிறது. இறையருள் கிடைப்பது அரிதெனினும் கிடைத்த அருளை  தக்கவைத்துக் கொள்ளுதல் அரிதினும் அரிது. இதனை உணர்த்தும் வகையில் சிக்கெனப் பிடித்துக்கொண்டதனைஎடுத்துக்காட்டி நல்வழிப்படுத்துகிறார் மாணிக்கவாசகர்.இறைப்பற்று ஒன்றே நிலையானது என அறிந்து பிறபற்றுக்களை எல்லாம் அறுத்தொழிந்த நிலையினையும் புலப்படுத்துகிறார். அன்பு வடிவமான அன்னையையும் அறிவுக்கு வழிகாட்டும் அப்பனையும்  இறைவனாகக் காணும் நிலையினையும் இங்கு காணமுடிகிறது. அவ்வாறு நினையும் போது இறையருள் தனிப்பெருணை கொண்டு அருள் புரிவதனையும் புலப்படுத்தியுள்ளார். காற்றினைக் கைக்குள் பிடித்துவிட்டதாக எண்ணும் குழந்தை பெருமிதம் கொண்டு அக்காற்று வேறுஎங்கும் செல்ல இயலாது போகும் என எண்ணுவது போல பக்தி உணர்வினால் வேறு எங்கும் எழுந்தருள இயலாது இறைவனை சிக்கெனப்பிடித்துக்கொண்ட மாணிக்கவாசகரின் பக்தி உணர்வினையும் இங்கு கண்டு மகிழலாம்.

இருள் மனமும் அருள் மணமும்

        உலகப் பற்றானது ஏதேனும் ஒரு உருவில் மானிடரைச்சூழ்ந்து இறைப்பற்றிலிருந்து விலக்கிவிடவே முயலும் நிலை உள்ளதனைக் காணமுடிகிறது.இம்மாயையில் சிக்குண்டால் அருளொளியை உணராது இருளிலேயே மனம் சிக்குண்டு மகிழ்கிறது.அவ் இருளில் இருந்து விலக அதற்கான முயற்சியில் ஈடுபடுவதே முதல் வழி. அவ்வாறு எம்முயற்சியில் செய்யாமல் இருக்கும் மனத்தை

ஆடுகின்றலை கூத்துடையான் கழற்கன்பிலை என்புருகிப்
பாடுகின்றலை பதைப்பதும் செய்கிலை பணிகிலை பாதமலர்
சூடுகின்றலை சூட்டுகின்றதுமிலை துணையிலி பிணநெஞ்சே
தேடுகின்றலை தெருவுதோறலறிலை செய்வதொன் றறியேனே (ஆத்தும சுத்தி – 1)

என்னும் பாடலின் வழி புலப்படுத்துகிறார். இறைவனைக் காண என்புருகும் அன்பும், எப்போது காணப்போகிறோம் என்னும் பதைப்பும் திருவடி கண்டு மயங்கும் பணிவும் இறைவனை ஏத்திப்பாடும் செயலும் எல்லா இடங்களிலும் தேடும் ஊக்கமும் என எதுவும் இன்றி பிணம் போன்று திரியும் மனத்தை எண்ணி வருந்துகிறார் மாணிக்கவாசகர். இம்மாயையின் தொல்லையிலிருந்து விடுபட தில்லையே வழி என்பதனைக் கண்டறிந்து வழிகாட்டும் நிலையினை

சாதிகுலம் பிறப்பென்னுஞ் சுழிப்பட்டுத் தடுமாறும்
ஆதமிலி நாயேனை அல்லலறுத் தாட்கொண்டு
பேதைகுணம் பிறருருவம் யானெனதென் னுரைமாய்த்துக்
கோதில முதானானைக் குலாவுதில்லை கண்டேனே (கண்ட பத்து – 5)

என்னும் பாடல்  உணர்த்தி நிற்கிறது. பேய் போன்ற மாய உலகில் நாய் போல் திரிந்து இருந்ததனையும் தாய் போன்ற இறைப் பொருளைக் கண்டவுடன் அவை அனைத்தும் நீங்கி விடுவதனையும் இப்பாடலின் வழி புலப்படுத்துகிறார் மாணிக்கவாசகர். குற்றமில்லாத குணமுடையானைக் கண்டதும் பொய்யழுக்கு நீங்கி விடுவதனையும் இங்கு உணர்த்தியுள்ளதனைக் காணமுடிகிறது.இருள் மனம் சுற்றத்தாரை நினைக்க அருள் மனம் இறைவனையே உற்றாராக எண்ணுகிறது. இருள் மனம் தாம் வாழும் ஊரினையும் தம்மைப்புகழும் பேரினையும் கற்றாரையுமே பெரிதாக எண்ண அருள் மனமோ தில்லையையும் சிவபெருமானையும் மெய்ப்பொருளையுமே எண்ணுவதனை

உற்றாரை யான்வேண்டேன் ஊர்வேண்டேன் பேர்வேண்டேன்
கற்றாரை யான்வேண்டேன் கற்பனவும் இனியமையும்
குற்றாலத் தமர்ந்துறையுங் கூத்தாஉன் குரைகழற்கே
கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே (திருப்புலம்பல் – 3)

என்னும் பாடலின் வழி புலப்படுத்துகிறது.கற்ற மனம் ஏன்?எதற்கு என ஆயும் தன்மைத்து. எனவே கற்றாவின் மனம் அன்பு மிகுதியால் வேறெதனையும் உள்ளத்தின் நினையாது தாயை நாடி ஓடுவது போலவே தான் கசிந்துருகுவதனை எடுத்துக்காட்டி அவ்வாறு வாழ நெறிப்படுத்துகிறார் மாணிக்கவாசகர்.

நிறைவாக

        இறையருள் பொய்ந்நெறியாம் அவாவினை நீக்கி மெய்யறிவாம் அன்பினில் விளைந்த ஆரமுதான இறைவழிக்கு நெறிப்படுத்துவதனை மாணிக்கவாசகர் தம் திருவாசகத்தின் வழி உணர்த்தியுள்ளதனைக் காணமுடிகிறது.

        சைவ நெறி அன்பு நெறி.அவ் அன்பே ஆசையினை அறுத்து அனைத்து உயிர்களையும் ஒன்று 
போலவே காணச் செய்கிறது.சிவமே அன்பாதலால் அனைத்து உயிர்களிடமும் அன்பு காட்டி இறையருளைப் பெற்று இறைவனோடே கலத்தல் இயலும் என்பதே சைவ சித்தாந்தம்.எனவே பிற சமயத்தைப் பரப்ப வந்த ஜி.யு.போப் அவர்களும் சைவ சித்தாந்தமே உலகில் உள்ள சித்தாந்தங்களுக்கெல்லாம் தலையாயது எனச் சான்றளித்துள்ளதனையும் காணமுடிகிறது.

        அனைத்து உயிர்களுக்கும் நன்மை செய்யும் இறையாற்றல் அனைத்து உயிர்களிலும் தழைத்துள்ளதனை திருவாசகம் உணர்த்தியுள்ளது.எனவே திருவாசகத்தின் பெருமை சமய வேறுபாடின்றி அனைத்து சமயத்தாரும் பின் பற்ற வேண்டிய அன்பு நெறியையே புலப்படுத்துவதனையும் உணர்ந்துகொள்ளமுடிகிறது.திரு என்னும் சொல்லுக்குக் கண்டாரால் விரும்பப்படும் தன்மை என்னும் பேராசிரியரும் கூற்றும் இங்கு எண்ணத்தக்கது.

        கருவிலேயே திருவுடையாராக விளங்கிய திருவாதவூரர் தம் புலமையால் தென்னவன் பிரம்மராய பட்டம் பெற்று பகட்டான வாழ்வு வாழ்ந்து உலக மக்களின் நல்வாழ்வுக்கு வழி செய்தார்.  இறையருள் பெற்ற பின் பொருட்செல்வப் பற்று நீங்கி அருட்செல்வப் பற்று நிறைந்தது.பட்டாடை துறவாடையானது.அணிகலன் உருத்திராக்கமானது.இறைப்பற்றன்றி பிற பற்றுக்கள் யாவும் இறைவனின் திருவிளையாடலே என உணர்ந்து அவாவினை அறுத்தொழித்த மாணிக்கவாசகர் சிறப்பினையும் உணர்ந்துகொள்ள முடிகிறது.

        இறையருளன்றி எப்பற்றையும் நீக்குதல் இயலாது என்பதனை உணர்ந்து இறைபக்தி செலுத்தி அனைத்துப் பற்றுக்களையும் துறந்தார் மாணிக்கவாசகர்.அதனாலேயே காளை வாகனனாகிய இறைவன் மாணிக்கவாசகர்க்காக குதிரை வாகனத்தில் வந்து அருள் புரிந்தனையும் காணமுடிகிறது.இதன்வழி அவாவினை அறுத்தால் இறையருள் பெற முடியும் எனத் தெளிவுறுத்தியுள்ளதனையும் உணர்வுடையார் உணர்வர் எனத் தெளியமுடிகிறது.

************************

செம்மொழியான தமிழ்மொழி - Tamil is a Classical Language


செம்மொழியான தமிழ்மொழி

முனைவர் ம.ஏ. கிருட்டினகுமார், உலாப்பேசி :9940684775)
          
       எம்மொழிக்கும் முதல்மொழியாய் நிற்கும் மொழி தம் தாய்மொழி எனக் கூறும் மொழியினர் பலர்.அவ்வாறு கூறுதற்கு அவரவர்களுடைய தாய்மொழிப்பற்றே காரணம் என்பதே தெளிவு. எனினும் தமிழர் தம் தமிழ்மொழிசெம்மொழிக்குரிய அனைத்துத் தன்மைக்கும் பொருத்தமுடையதாயிருந்தும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அவ்வாறு நிறுவ முயலாததும் அதற்கான முயற்சியில் ஈடுபடாமலும் இருந்ததற்கான காரணங்களை அறியமுடியவில்லை. ஈராயிரம் ஆண்டுகளாக இடையறாத இலக்கியவளத்தினைக்கொண்டே தமிழ்மொழியினைச் செம்மொழியாகக்கொள்ள இயலும்  என எண்ணுவதும் மறுப்புக்குரியதாகாது. எனினும் செம்மொழிக்குரிய தகுதிகள் எவைஎவையென வரையறுத்த வரையறைகளைக்கொண்டு தமிழ்மொழியினை அவ்வரையறைக்கு உரியதாகவும் அவ்வரையறையினையும் விஞ்சி நிற்கும் பெருமையுடையதாகவும் விளங்கும் சீர்த்தியினை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையிலேயே இக்கருத்தரங்கப்பொருள் அமைந்துள்ளது வெள்ளிடைமலை. அவ்வகையில் தமிழ்மொழியினை அற இலக்கியங்களான பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் வழி செம்மொழியாகக் காட்ட வேண்டும் என எண்ணியதன் விழைவாகவே இக்கட்டுரை அமைகிறது.

செம்மொழி வரையறை

        திருந்திய பண்புஞ்சீர்த்தநாகரிகமும், பொருந்தியதூய்மொழிபுகல்செம்மொழியாம் என்பதுஇலக்கணம். இம்மொழிநூலிலக்கணம்தமிழ்மொழியின்கண்ணும்அமைந்திருத்தல்தேற்றம்.என்னை?

இடர்ப்பட்டசொன்முடிபுகளும்பொருண்முடிபுகளுமின்றிச்சொற்றான்கருதியபொருளைக்கேட்டான்தெள்ளிதினுணரவல்லாதாய்ப்பழையனகழிந்துபுதியனபுகுந்துதிருத்தமெய்திநிற்றலேதிருந்தியபண்பெனப்படுவது. இதுதமிழ்மொழியின்கண்முற்றும்அமைந்திருத்தல்காண்க.

நாட்டின்நாகரிகமுதிர்ச்சிக்கேற்பச்சொற்களும்ஏற்பட்டுப்பாஷைக்கும்நாகரிகநலம்விளைத்தல்வேண்டும்.

அவ்வாறுசொற்களேற்படுமிடத்துப்பிறபாஷைச்சொற்களன்றித்தன்சொற்களேமிகுதல்வேண்டும்.

இவையும்உயர்தனிதமிழ்மொழிக்குப்பொருந்துவனவாம். ஆகவேதமிழ்தூய்மொழியுமாம்

எனவேதமிழ்செம்மொழியென்பதுதிண்ணம். இதுபற்றியன்றேதொன்றுதொட்டுத்தமிழ்மொழிசெந்தமிழ்எனநல்லிசைப்புலவரால்நவின்றோதப்பெறுவதாயிற்று.

ஆகவேதென்னாட்டின்கட்சிறந்தொளிராநின்றஅமிழ்தினுமினியதமிழ்மொழிஎவ்வாற்றான்ஆராய்ந்தவழியும்உயர்தனிச்செம்மொழியேயாம்என்பதுநிச்சயம்”(தமிழ்மொழியின்வரலாறுபக். 95-96)
  எனப்பரிதிமாற்கலைஞர்கூறியுள்ளதன்வழிதமிழ்மொழியின்பெருமையினைஎளிதில்உணரலாம்.எனினும் இன்றைய செம்மொழிக்குரிய வரையறைகளான பழமை, வளமை, தனித்தியங்கும் தன்மை, என்பன போன்றவை திருந்திய பண்போடும் சீர்த்த நாகரிகத்தோடும் உள்ளடங்கியனவாகவே எடுத்துக்கொள்ளமுடிகிறது. இவற்றோடு இயைந்து இக்கூற்றிற்கு எடுத்துக்காட்டாக பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் சான்றாக நிற்பதனைக் காணமுடிகிறது.

திருந்திய பண்பு

          இனம், மொழி, நிறம் என்னும் வேறுபாடின்றி அனைவர்க்கும் பொருந்தக்கூடிய கருத்துக்களை உடைய நூல்கள் உலக இலக்கியங்களில் தமிழ் இலக்கியங்களுக்கெனத் தனியிடமுண்டு.தெய்வப்புலவர் அருளிய திருக்குறள் உலக இலக்கியங்களுள் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டதென்பதே இதற்குச் சான்று.இவ்வாறு எக்காலத்தவரும் உணர்ந்துகொள்ளும் பெருமையுடைய சங்ககாலஇலக்கியங்கள் பல தமிழில் உண்டெனினும் அவற்றை முறையாக எடுத்துச் செல்லாத குறை தமிழர்க்குண்டு.எனவே அந்நூல்களின் பெருமையினை உலகம் அறியாமலே தமிழ் மொழியின் அருமை குறித்து ஐயப்படும் நிலையினையும் காணமுடிகிறது.

          விண்ணும் மண்ணும் கடலும் காற்றும் தீயும் ஆய்ந்தாய்ந்து அதன் பெருமையினை வியக்கும் தன்மை போலவே தமிழ்மொழியின் பெருமையும் இன்று ஆய்ந்தாய்ந்து வியக்கத்தக்கதாகப் போற்றப்படுகிறது. இயற்கையான மொழி தமிழ் என்பதற்கு ’அ’ கரத்தில் அம்மொழி தொடங்குவதன் வழியே அறிந்துகொள்ளமுடிகிறது.தமிழ் மொழியினை உணர்த்தி நிற்கும் வகையில் திருக்குறள் அகரத்தில் தொடங்கி  னகரத்தில் முடிவதனையும் இங்கு எண்ணி வியக்கமுடிகிறது. எழுத்துக்களால் மட்டுமின்றி கூறும் அறக்கருத்துக்களாலும் தமிழர்களைப் பண்படுத்தியுள்ளதும் கண்கூடு. அக ஒழுக்கத்தைப் புலப்படுத்தும் பண்பாட்டினையும் புற ஒழுக்கத்தைப் புலப்படுத்தும் நாகரிகத்தையும் உலகிற்கு உணர்த்திடும் வகையில் முதல்,கரு, உரி என வாழ்க்கையை வகுத்துவாழ்ந்த தன்மையின் வழியும் உணர்ந்துகொள்ளமுடிகிறது.
உயிர்மொழி

          உயிர் தான் உடலை இயக்குவது.அவ்வாறே மக்களை இயக்குவதில் மொழியின் பங்கு அளப்பரியது.அவ்வாறு எழுத்துக்களை இயக்குவதற்குரிய எழுத்துக்களை உயிர் எழுத்துக்கள் என்றும் அவற்றோடு சேர்ந்து இயங்கக்கூடிய எழுத்துக்களை மெய்யெழுத்துக்கள் என்றும் இவை இரண்டும் இணைந்து சார்ந்து வரக்கூடிய எழுத்துக்களை சார்பெழுத்துக்கள் என்றும் தனிநிலையாகும் எழுத்தினை ஆய்தம் என்றும் வறையறுத்த பெருமை உலகில் தமிழ்மொழியைத் தவிர வேறு மொழிக்கு உரியதன்று. ஒவ்வொரு மொழிக்கும் ஒரு தனித்தன்மை உரித்து என்பதனை மறுத்தற்கில்லை. ஆனால் ஈராயிரம் ஆண்டுகள் கழித்தும் சொல்லையும் பொருளையும் உணர்ந்துகொள்ளும் பெருமையுடைய மொழி தமிழ்மொழி மட்டுமே என்பதற்குரிய சான்றுகளை அடுக்கடுக்காக எடுத்துரைக்கும் வகையில் இலக்கியங்கள் வரிசைகட்டி நிற்பதனைக் காணமுடிகிறது.

ஒவ்வொரு எழுத்தினையும் ஆய்ந்து இவை இவை இவ்வாறு இவ்வெவ்விடத்திலிருந்து ஒலிப்பதனைக் கொண்டு இன எழுத்துக்கள் என வரையறுத்துள்ள பெருமையினை உரக்கக்கூறி உணர்ந்தாலன்றி சொல்லால் விளக்குதல் ஏற்புடையதாகாது. ஏட்டுக்கல்வி நிலையில் ஆய்தம் என்பது முப்பாற்புள்ளி எனக் குறிப்பிடப்பெறும்.மெய்யறிவு நிலையில் நின்று பார்ப்பினும் முப்பாற்புள்ளி என்பது மூன்றாவது கண்ணாகிய புருவத்திடையே நிற்கும் கண்ணினைத் திறப்பதே.அச்செயலே கல்வியின் நிறைவாகும் என்பதனை முப்பாற்புள்ளியின் வழி தமிழ்மொழி உணர்த்தியுள்ள சிறப்பினைமெய்யறிவாளர்கள் தெளிவுறுத்தியுள்ளனர்.

கற்றதனால் ஆய பயன்என்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின். (திருக்குறள்:2)

என்னும் திருக்குறள் கல்வியின் பயனை எடுத்துரைக்கிறது.கல்வி கற்றவரே கண்ணுடையவர்.இல்லாவிடில் இவ்வுலகில் பார்வையில்லாதவரைப் போல் கடினப்பட்டு இருளிலேயே வாழ வேண்டி வரும்.

          கண்ணுடையார் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
          புண்ணுடையார் கல்லா தவர் (திருக்குறள் :393)

இது பொருளுடைய வாழ்விற்கும் அருளுடைய வாழ்விற்கும் பொருத்தமுடையதாக நின்று விளக்குமாற்றினை தமிழ் மொழியின் திருந்திய பண்பிற்குச் சான்றாக எடுத்துரைக்கமுடிகிறது.

ஓரடியில் ஓராயிரம்

          தமிழ் இலக்கியங்களில் அற இலக்கியங்கள் பெரும்பான்மையாக உலகுக்கு ஒத்த கருத்துக்களை எழிலுற எடுத்தியம்பியுள்ளதன் வழி திருந்திய பண்பினை ஊட்டும் மொழியாகத் தமிழ் மொழி விளங்குவதனை அறிந்துகொள்ளமுடிகிறது. பல இலக்கியங்களை உலகிற்கு எடுத்துக்காட்ட இயலும் எனினும் தமிழகம் வந்த பிறநாட்டு இலக்கிய அறிஞர்கள் சமயவாதிகள் திருக்குறளிலேயே மனம் செலுத்தினர்.ஏனெனில் அதனைச் சமயம் சாராத நூலாகக் கண்டதொடு ஈரடியில் அருமையான கருத்துக்களை உள்ளடக்கிய பெட்டகமாகவும் உணர்ந்திருந்ததனை அறிந்துகொள்ளமுடிகிறது.எனினும் ஓரடியிலேயே தமிழில் பாடிய பெருமை தமிழ் மூதாட்டியான ஔவையாருக்கு உண்டென்பது இங்கு எண்ணத்தக்கது.

          அவ்வாறே மதுரைக் கூடலூரி கிழார் இயற்றிய முதுமொழிக்காஞ்சி சிறந்த பத்து முதலாக தண்டாப்பத்து  ஈறாக பத்துப்பத்துப் பாடல்களாக நூறு பாடல்களை உடையதாகச் சிறக்கிறது. ஒரு பாடல் என்பது ஒரு வரியினையே குறிக்கிறது.ஆர்கலி உலகத்து மக்கட்கெல்லாம் எனக் கூறி பத்து அறக்கருத்துக்களை உணர்த்தும் வகையில் ஒவ்வொரு வரியினையும் ஒவ்வொரு பாடலாகக் கொண்டு பொருள்கொள்ள முடிகிறது. இவ்வாறு வழங்கப்பெறும் ஓரடியானது ஓராயிரம் கருத்துக்களை உணர்த்தி நிற்பதற்குச் சான்றாக   

          இயைவது கரத்தலிற் கொடுமை இல்லை (முதுமொழிக்காஞ்சி : 6 :5)
          நசையிற் பெரியதோர் நல்கிரவில்லை    (முதுமொழிக்காஞ்சி : 6 : 7)
          இசையிற் பெரியதோர் எச்சமில்லை (முதுமொழிக்காஞ்சி : 6 : 8)

என்னும் அடிகளைக் காணமுடிகிறது.காக்கை கரவாது உண்ணும் தன்மைத்து எனில் மனிதன் கரந்து வாழ்தல் நன்றாகாது எனக் கூறாது கொடுமையானது என உணர்த்துகிறார் கூடலூர்கிழார். அவ்வாறே ஆசையை விட வறுமை வேறொன்று எனக் கூறியுள்ளதனையும் தன் குலத்திற்குக் கொடுப்பதற்குப் புகழை விட சிறந்த செல்வம் வேறில்லை எனக் கூறியுள்ளதனையும் பல்வேறு சிந்தனைகளின் வழி விரித்துணர முடிவதனை அறிந்துகொள்ளமுடிகிறது.

          அவ்வாறே முன்றுரையரையனார் இயற்றிய பழமொழி ஓரடியில் பழமொழியினை ஈறாக வைத்து அதற்குரிய விளக்கமாக மூன்றடியை முன்னே வைத்து உரைக்கப்பெற்றது. ஓரடியில் ஓராயிரம் கருத்துக்களை உணர்ந்துகொள்ளும் வகையில் புனையப்பட்டிருக்கும் சிறப்பிற்கு

          திங்களை நாய் குரைத்தன்று (பழமொழி நானூறு :107:4)

என்னும் அடிகளே சான்றாக நிற்கின்றன.இவ்வுலகில் பிறர் நன்றாக வாழ்வதைப் பார்த்து மகிழ்வோரைக்காட்டிலும் பிறர் நலிவதைப் பார்த்து மகிழ்வோரே பெரும்பாலோனராக இருப்பதனைக் காணமுடிகிறது.அவ்வாறு பிறருக்குத் துன்பம் செய்து மகிழும் இயல்புடையோரைக் கண்டும் காணாதது போல் வாழ்தலே நன்றாகும். அவ்வாறின்றி அவர்களுக்கு விடையளிப்பதையே பணியாகக் கொண்டிருப்பின் முறையாக செய்ய வேண்டிய செயலை மறந்து முன்னேற்றமின்றி வருந்தியே வாழ நேரிடும் என்பதனை இங்கு எடுத்துரைத்துள்ளதன் வழி அறிந்துகொள்ளமுடிகிறது. அவ்வாறு மட்டுமின்றி பகைவரின் ஏளனச் சொற்கள் எவ்வகையிலும் நம்மைக் காயப்படுத்தப்போவதில்லை என்பதனை உணர்ந்து செயல்பட்டாலே பகைவர் மீண்டும் தொல்லைக் கொடுப்பதனைத் தவிர்த்துவிடுவர். இவ்வாறு வாழ்வதன் வழி மனவருத்தமின்றியும் அதனால் நோய்நொடியின்றி வளமாகவும் வாழ இயலும் என்பதனை உணர்ந்துகொள்ளமுடிகிறது.மேலும்மேலும் இது போன்று நானூறு (400) அடிகளை விளக்க ஆயிரத்து அறுநூறு (1600) வரிகளைப் புனைந்துள்ள திறமும் இங்கு எண்ணத்தக்கது.

மாணாக்கர் பண்பு

          பொருளை இழப்பதும் உடல் நலத்தை இழப்பதும் பெரிதன்று.அது இயற்கையாகவே அமையும்.அதனை மீட்டெடுத்தலும் இயல்பே.அது முயற்சியாலும் பயிற்சியாலும் அடைதல் இயலும்.ஆனால் பண்பினை மீட்டெடுத்தல் எக்காலத்தும் இயலாது.வடு போல் வாழ் நாள் முழுதும் ஒட்டிக்கொள்ளும் இயல்பினை உடையது.

          ஆணாக்கம் வேண்டாதான் ஆசான் அவற்கியைந்த
          மாணாக்கன் அன்பான் வழிபடுவான் – மாணாக்கன்
          கற்பனைத்து மூன்றுங் கடிந்தான் கடியாதான்
          நிற்பனைத்தும் நெஞ்சிற்கோர் நோய் (சிறுபஞ்சமூலம் :29)

என்னும் பாடலில் காரியாசான் மாணாக்கர் பெருமையினையும் சிறுமையினையும் எடுத்துரைக்கிறார்.காமம், வெகுளி, மயக்கம் என்னும் மூன்றையும் ஒழித்து ஆசானை அன்பால் வழிபட்டு வாழ்வோரே நல் மாணாக்கராவர். அவ்வாறின்றி இம்மூன்றையும் ஒழிக்காது ஆசானிடம் கற்க வருபவன் தனக்குத்தானே துன்பம் செய்துக்கொள்வதோடு ஆசானுக்கும் நோயாகி நிற்பதனை எடுத்துக்காட்டியுள்ள சிறப்பினை இப்பாடலின் வழி அறிந்துகொள்ளமுடிகிறது.இது எக்காலத்துக்கும் பொருந்தும் வகையில் பாடப்பட்டிருக்கும் சிறப்பினை இங்கு எண்ணி எண்ணி வியக்கமுடிகிறது.

சீர்த்த நாகரிகம்

          தமிழர்கள் எக்காலத்தும் பிறர்க்குக் கொடுத்து வாழ்வதையே தம்மியல்பாகக்கொண்ட பெருந்தன்மையினை உடையவர்கள்.அவ்வாறே நாகரிகத்தையும் பிறர்க்குக் கற்றுக்கொடுக்கும் வகையினாலேயே கற்றுக்கொடுக்கும் இனமாகத் தமிழினம் நிலைப்பதனைக் காணமுடிகிறது.கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் முதல் இமய வரம்பன் நெடுஞ்சேரலாதன் எனத்தொடரும் தமிழர் பெருமை இன்றைய தலைமுறைக்கு உணர்த்த வேண்டியது அவசியமாகின்றது.எக்காலத்தும் தமிழரே கப்பலைச் செலுத்தும் முறைக்கும் இமயம் தொடும் முயற்சிக்கும் உலகிற்கே முன்னோடியாக நின்று வழிகாட்டுவதும் தெளிவாகிறது. அவ்வாறே கோயிற்கலை முதல் சிற்பக்கலை வரை அனைத்துக்கலைகளுக்கும் முன்னோடியாக பெருவுடையார் கோயில் முதல் அனைத்துக்கோயில்களும் தமிழர்தம் பெருமையினை உணர்த்தி நிற்பதனைக் காணமுடிகிறது. அவ்வாறு ஒவ்வொரு நிலையிலும் மக்களைக்காத்து வாழ்ந்த பெருமையினை உலகிற்கே எடுத்துரைக்கும் வகையில் சீர்த்த நாகரிகத்தை புலப்படுத்துகிறது.அவ்வாறே எக்காலத்தவர்க்கும் உணர்த்தி நிற்கும் நாகரிக மொழி நடையாக தமிழ் இருப்பதற்கு எடுத்துக்காட்டாக ஆசாரக்கோவை இயற்றபட்டுள்ளது. இந்நூலில்

          விருந்தினர் மூத்தோர் பசுசிறை பிள்ளை
          இவர்க்கூண் கொடுத்தல்லா லுண்ணாரே யென்றும்
          ஒழுக்கம் பிழையாதவர்  (ஆசாரக்கோவை :21)

என்னும் அடிகளில் பெருவாயின் முள்ளியார் மக்கள் பண்பை எடுத்துரைக்கிறார். தான் மட்டும் உண்டால் மட்டும் போதும் என எண்ணாது விருந்தினர் முதியோர்கள், பசுக்கள், பறவைகள்,பிள்ளைகள்ஆகிய அனைத்திற்கும் உணவிட்டு வாழும் தமிழர்களின் ஒழுக்க நிலையினைக் காணமுடிகிறது. வீடு தேடி வந்த விருந்தினர், பசி தாங்க இயலாத முதியவர், தன் பாலைக் கொடுத்து பிள்ளைகளை வளர்க்கும் பசுக்கள், தம்மை அண்டி வாழும் பறவைகள், பிள்ளைகள் என அனைத்திற்கும் உணவு கொடுத்த பின்னரே தாம் உண்ணும் வழக்கத்தைக்கொண்டிருந்த தமிழர் வாழ்வின் பெருமையினை இப்பாடல் உணர்த்தி நிற்கின்றது.

நாகரிகத்தின் இனிமை

          நாகரிகம் என்பது நகரத்தின் கண் தோன்றுவது என்று குறிப்பிடப்படுகிறது.ஆற்றோரங்களிலேயே மனிதன் வாழத்தொடங்கி நாகரிகத்தை வளர்த்துக்கொண்டான் என்றும் வரலாறு எடுத்தியம்புகிறது.அவ்வாறு உலகத்திற்கே முன்னோடியாக நின்று தீயினை உண்டாக்கியவன் தமிழன் என்பதனை பழங்கால ஆய்வுகளின் வழி உணர்ந்துகொள்ளமுடிகிறது.இரும்பினைக் காய்ச்சி வளைத்து கட்டிடங்கள் கட்டியதும் உலகம் முழுதும் பரவியிருந்த சிறப்புக்குரியவரும் தமிழரே என்பதனையும் இன்றைய ஆய்வுகள் உணர்த்தி வருகின்றன.உலகின் பழமையான மொழி தமிழ் என்பதனை அமெரிக்கா அறிவித்துள்ளதும்.ஆஸ்திரேலியா தமிழின் அருமையினை உணர்ந்து ஆட்சி மொழியாக நடைமுறைப்படுத்தியுள்ள சிறப்பும் தமிழரின் பெருமைக்கு மேலும் சிறப்புச்சேர்ப்பதாகவே அமைகிறது.

பழங்காலத்தில் நால்வகைப்படைகளைக் கொண்டு நாட்டை ஆளக் கற்றிருந்தவன் தமிழன் என்பதனையும் உலகிற்கு உணர்த்துவதும் தமிழரின் திறத்தை உறுதி செய்யும் என்பதில் ஐயமில்லை.வலிமையுடைய யானையைப் போர்க்களத்திற்குரிய படையில் சேர்க்கும் அளவிற்கு தமிழர் வலிமையில் சிறந்திருந்ததனை இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன. யானையை அடக்கும் வலிமையுடைய தமிழர் உணவுக்காகப் பிற உயிர்களைக் கொல்லாது வாழ்ந்த நிலையினையும் ஆற்றங்கரையில் முறையாக வீடு சமைத்து நின்ற சிறப்பினையும் எந்நிலையிலும் மானம் குறையாது வாழ்ந்த தனிப்பெருமையினையும் உடையவராக வாழ்ந்த நிலையினை

யானையுடைய படை காண்டன் முன்னினிதே
யூனைத்தின் றூனைப் பெருக்காமை முன்னினிதே
கான்யாற் றடைகரை யூரினி தாங்கினிதே
மான முடையார் மதிப்பு. (இனியவை நாற்பது :4 )

எனப் பூதஞ்சேந்தனார் பாடி மகிழ்கிறார்.இவையெல்லாம் இனிது எனத் தம் வாழ்வை வகுத்துக்கொண்டதைக் கண்டு பாடியதாகவே இப்பாடலை உணர்ந்துகொள்ளமுடிகிறது.இவ்வாறு வளர்ச்சி பெற்ற நாகரிகமான வாழ்வு எவ்வாறு அமைதல் வேண்டும் என்பதனையும் நாகரிகமான இப்பாடல் உணர்த்தியுள்ளதனையும் காணமுடிகிறது.

நிறைவாக

          தமிழ் இலக்கியங்கள் செம்மொழி இலக்கியங்களுக்குரிய வரையறைக்குப் பெரிதும் பொருந்தி நிற்பதற்கு அற இலக்கியங்களே போதுமான சான்றாக நிற்பதனை அறிந்துகொள்ளமுடிகிறது.

      தெய்வப்புலவர் அருளிய திருக்குறள் அடியால் குறுகியிருப்பதனாலும் அருமையினால் சிறந்திருப்பதனாலும் உலக அளவில் அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட நூலாகத் திகழ்வதனை உணர்ந்துகொள்ளமுடிகிறது. அவ்வகையில் பிற அற இலக்கியங்களையும் கொண்டு சேர்க்க வேண்டிய கடப்பாடு தமிழர்க்கே உரியது எனத் தெளியமுடிகிறது.

         திருந்திய பண்பும் சீர்த்த நாகரிகமும் உடைய மொழியே செம்மொழி என வரையறுத்த பரிதிமாற்கலைஞரின் கூற்றுக்கேற்றவாறு பதினெண்கீழ்க்கணக்கின் அற இலக்கியங்கள் இயற்றப்பட்டுள்ளதனையும் காணமுடிகிறது.

          எக்காலத்துக்கும் பொருந்தும் கருத்துக்களை வளரும் மொழியாக நின்று உயிர்ப்புடன் வழிகாட்டும் பெருமையுடைய மொழியாகத் தமிழ் மொழி விளங்குகிறது என்பதற்கு பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் சான்றாக நிற்பதனையும் அறிந்துகொள்ளமுடிகிறது.
          மொழியின் எளிமையும் அருமையும் அவற்றின் இலக்கியவளத்தைக் கொண்டே அளந்தறிய முடிகிறது. அவ்வாறு சிறியோர் முதல் பெரியோர் வரை கற்றுப் பயனடையும் வகையில் இயற்றப்பட்டுள்ள பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் எளிமைக்கு எளிமையாகவும் அருமைக்கு அருமையாகவும் நின்று தமிழ்மொழி செம்மொழி என்பதனை நிறுவியுள்ளதனைத் தெள்ளிதின் உணரமுடிகிறது.
*******

சுவாமி விவேகானந்தர் - Swamy Vivekanandar


சுவாமி விவேகானந்தர்

(முனைவர் ம.ஏ.கிருஷ்ணகுமார்,உலாப்பேசி : 99406 84775)

        தனக்காக வாழாமல் தம் மக்களுக்காவும் நாட்டுக்காகவும் வாழத் துணிந்தவர்களே மகான்களாகப் போற்றப்படுகின்றனர்.இந்துமதம் போற்றிய அறங்களின் வழி நாட்டில் ஒற்றுமையையும் பண்பாட்டையும் நிலை நிறுத்த பாடுபட்டவர் சுவாமி விவேகானந்தர்.இந்துமதத்தின் அருமையான கொள்கைகளின் வழி உலகையே அமைதியான பாதைக்குக் கொண்டு வர இயலும் என உணர்த்த உலகம் முழுதும் பயணம் மேற்கொண்டார்.அப்பணியில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு அதில் வெற்றியும் பெற்றவர் சுவாமி விவேகானந்தர்.அவருடைய அரும்பணியினை அறிய விழைந்ததன் விளைவாகவே இக்கட்டுரை அமைகிறது.

கொல்கொத்தாவில் உதித்த கதிரவன்

விஸ்வநாத் தத்தாவிற்கும் புவனேஸ்வரி தாய்க்கும் கொல்கொத்தாவில் 12-01-1863 இல் பிறந்தார் நரேந்திர தத்தா. இந்தியாவில் மட்டுமே மகான்களின் தோற்றம் தொடர்ந்து வழிவழியாக இருந்துவருவதனைக்  .காணமுடிகிறது.அவ்வரிசையில் இடம்பெற்று இந்தியாவின் வெளிச்சத்தை உலகம் முழுதும் பாய்ச்சிய கதிரவனாக விளங்கியவர் சுவாமி விவேகானந்தர்.எனவே தேசியக்கவிஞர் தாகூரும் “நீங்கள் இந்தியாவைப் பற்றி முழுமையாக அறிய வேண்டுமெனில் சுவாமி விவேகானந்தரைப் பற்றி அறிந்துகொள்ளுங்கள்” என்றார்.

திறமையுடன் கடைமையைச் செய்வதே யோகம்

        வாழ்வைப் போகத்தில் கழித்து வாழ்வோரிடமிருந்து மாறுபட்டு யோகத்தால் இளமையிலேயே துறவாடை அணிந்து இந்தியாவின் மகத்துவத்தை உலகறியச்செய்தவர் சுவாமி விவேகானந்தர்.தாம் பெற்ற இன்பத்தை வையகமும் பெறும் வகையில் யோகக்கலையையும் பண்பாட்டுப் பெருமைகளையும் நிலைநிறுத்தினார்.அவருடைய எளிமையான ஆழமான பேச்சு கேட்போர் மனத்தை மயக்கியது.இதனை “தங்கக் குடத்தைத் தட்டினால் எழும் கிண்கிணி நாதம் போல் இனிய குரல் – எனப் போற்றியுள்ளதன் வழி அறிந்துகொள்ளமுடிகிறது.

வலிமையே வாழ்வு ; பலவீனமே மரணம்

        உலகத்தின் முதல் நாடாகக் கருதப்பெறும் அமெரிக்காவினையே தன்னுடைய பேச்சால் ஈர்த்த பெருமைக்குரியவர் சுவாமி விவேகானந்தர்.தாய் அழைத்த பெயர் – வீரேஸ்வரன். உண்மையான வீரம் போர்க்களத்தில் வீரத்தைக்காட்டுவதல்ல..அவையில் அஞ்சாது பேசுதலே என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.அவ்வாறு ‘சகோதர சகோதரிகளே’ என அழைத்து அனைவரையும் அன்புப்பிடிக்குள் சிக்கவைத்தவர் சுவாமி விவேகானந்தர்.

வாழ்வது ஒரு முறை.அந்த வாழ்வை எப்படி வாழ வேண்டும் என முடிவு செய்து வீரத்துடன் வாழ வேண்டும் என அறிவுறுத்தினார்.இரும்புத் தசைகளையும் எஃகு நரம்புகளையும் கொண்டு செயல்பட வேண்டும் என்கிறார் சுவாமி விவேகானந்தர். துருப்பிடித்துத் தேயாதே ; உழைத்துத் தேய்’ என்கிறார். இந்தியாவில் இவ்வளவு வளமிருந்தும் ஏழ்மையில் மக்கள் வாடுவதனைக் கண்டு வருந்தினார்.உழைப்பால் எதனையும் மாற்ற முடியும் என எண்ணியவர்.“ஈடுபாடுள்ள நூறு இளைஞர்களைத் தாருங்கள்.நான் புதிய இந்தியாவைக் காட்டுகிறேன்” என முழங்கி இளைஞர்களின் பெருமையினை உணர்த்தினர்.

தவம் செய்தால் வரமுண்டு

மனம் உடல் ஒருங்கிணைந்திருத்தலே யோகம்.கர்மம் வேறு தர்மம் வேறல்ல. தவம் செய்வார் தம் கருமம் செய்வார் என்கிறார் தெய்வப்புலவர்.சுவாமி விவேகானந்தர் பேசுவதோடு நில்லாமல் ராஜயோகம், ஞான யோகம், பக்தி யோகம் என்னும் மூன்று யோகத்தையும் கற்றுக்கொடுத்தவர்.கன்னியாகுமரியில் 24.12.1892 முதல் மூன்று நாட்கள் கடுந்தவம் இயற்றினார்

மனிதர்கள் கூட்டத்தில் இருக்கும் போதும் ஏதோ ஒன்றை நினைத்துக் கொண்டு தனித்து வாழ்வதனையும் தனிமையில் இருக்கும்போது கூட்டத்தில் வாழ்ந்ததை எண்ணி நகைத்துக் கொண்டும் இருப்பதனைக் காணமுடிகிறது. அவ்வாறே தவ ஆற்றல் பெற்றவர்கள் கூட்டத்தில் இருந்தாலும் தனித்து வாழ்வர்.தவம் செய்வதற்கு ஏற்ற இடம் என ஒன்றும் இல்லை.எங்கிருந்தாலும் தவம் செய்ய முடியும் என உணர்த்தியவர் சுவாமி விவேகானந்தர்.எனவே தான் அலைகள் ஆர்ப்பரிக்கும் குமரி முனையில் தவம் செய்து வாழ்ந்து வழிகாட்டினார் சுவாமி விவேகானந்தர்.

குருவைக் கண்ட சீடர்

கொல்கொத்தா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தார்.இசையிலும், உடற்பயிற்சியிலும் கல்வியிலும் தேர்ந்தார்.ஆங்கிலப்பேராசிரியர் வழி பகவான் இராமகிருஷ்ணரின் பெருமைகளை அறிந்தார்.1881 – இல் தட்சணேஸ்வரில் இராமகிருஷ்ணரை முதல்முறையாக சந்தித்தார். ‘நீங்கள் கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா ?என்னும் கேள்விக்கு ’பார்த்திருக்கிறேன்.நீயும் காணமுடியும்’ என விடையளித்த இராமகிருஷ்ணரிடம் மயங்கி அவரையே தமது குருவாக ஏற்றுக்கொண்டார் சுவாமி விவேகானந்தர்.

எல்லா இளைஞர்களைப் போல ஆசைகளைத் தேடி ஓடாமல் (வேலை, பணம்) குருவையே நாடி இருந்தார். தாயாருக்கு உடல் நலமின்றி மருந்து , உணவு தேவைப்பட்ட போது அதற்கான வழி அறியாது வருந்தினார். குருவிடம் ஏன் இந்த கடவுள் நம்பிக்கை ?– எதற்குப் பயன்படும் ? தாயைக் காப்பதற்குக் கூட வழி இல்லாத ஆன்மிகம் எதற்கு ?என்றார். “போ !இதனை கடவுளிடமே கேள் என்றார் குரு – ஒரு மணி நேரம் கடவுளை வணங்கிவிட்டு கேட்க மறந்தேன் என்றார் சீடர்.மீண்டும் போ என்றார் குரு.நான்கு  மணி நேரம் கடவுளை வணங்கிவிட்டு மீண்டும் கேட்க மறந்தேன் என்றார். மீண்டும் போய் கேள் என்றார் குரு.எட்டு மணி நேரம் கழித்து திரும்பியவர் கேட்பதற்கான தேவை இல்லை எனக் கூறி இறை ஆற்றலை உணர்ந்தார்.

நாராயணனே கங்காதரனாக அவதரித்தார் என எண்ணினார் சுவாமி விவேகானந்தர்.சிவபெருமான் அவதாரமாகவும் கண்டார்.முதல்முறை குரு அவரைத் தொட்டபோது அந்த சக்தியைப் பெறும் பேராற்றலை உணராது அலறினார்.இரண்டாம் முறை கைகள் தொட்ட போது – மின்சாரம் பாய்வது போல் உணர்ந்தார்.இவரால் தான் தம் கொள்கைகளை அறநெறிகளை மக்களுக்குக் கொண்டு சேர்க்கமுடியும் என்பதனை உணர்ந்து சிஷ்யனைத் தேடிய குருவாக இராமகிருஷ்ணர் விளங்கினார்.இராமகிருஷ்ணர் காற்றுடன் கலந்தபோது தம் முழு சக்தியையும் சுவாமி விவேகானந்தருக்கு அளித்து அறப்பணியை மேற்கொள்ளுமாறு அருளினார்.

மதங்களின் தாய் இந்துமதம்

        தாயானவள் அனைத்துக் குழந்தைகளின் நலத்திலும் கவனம் செலுத்துவார்.அவ்வாறு அனைத்து உயிர்களிடமும் கருணை கொண்டு போற்றிப் பாதுகாக்கும் மதமாக விளங்குவது இந்துமதம்.இயற்கையை (மரங்கள், மலைகள், சூரியன், சந்திரன்) விலங்குகளை (பசு, யானை) பறவைகளை (கருடன், மயில்) என அனைத்தையும் தெய்வமாக எண்ணி வணங்கிய பெருமை இந்துமதத்திற்கு உண்டு.

மதம் என்பது கொள்கை.ஒவ்வொருவரும் வாழ்க்கையை எவ்வாறு வாழ வேண்டும் என்பதனை எழுதாச் சட்டமாக அறிவுறுத்துவது மதத்தின் அறநெறியாக அமைகிறது.படைக்கும் சக்தி படைத்த பெண்ணைத் தெய்வமாகக் காண வேண்டும் என அறிவுறுத்திய மதம் இந்துமதம்.பெண்ணை சில மதங்கள் ஒதுக்கி வைத்த போது தன்னில் பாதியை அளித்து பெண்ணின் முக்கியத்துவத்தை உணர்த்திய மதம் இந்துமதம்.எனவே சுவாமி விவேகானந்தரும் சக்தி வடிவமாகவே பெண்ணைப் போற்றினார்.அவ்வாறே உண்மையாக வாழ்ந்தார்.அதனால் தான் அவரால் ‘சகோதர சகோதரி்களே’ என்னும் இயல்பான சொல் மந்திரச் சொல்லானது.இந்து மதத்தை ஒருங்கிணைக்க வந்த புதிய சங்கராச்சாரியர்” என்கிறார் வரலாற்றாய்வாளர்பாரிக்கர்.

”மக்களை ஒதுக்கிவிடுவது தேசிய குற்றம்” எனக் கூறிய சுவாமி விவேகானந்தர் அனைத்து மக்களையும் அரவணைத்துச்சென்றார். இவ்வாறு தொடக்கம் முதலே அனைத்து மக்களையும் அரவணைத்துச்சென்றிருந்தால் இன்று  இந்துமதம் உலகமே போற்றிப் பின்பற்றும் மதமாகவும் பாதுகாப்புடன் வாழும் நிலையினையும் உருவாக்கி இருக்கும் என்பதில் ஐயமில்லை. எனவே பகவான் இராமகிருஷ்ணர் சுவாமி விவேகானந்தரை இந்துமதத்தேரினை ஓட்டிச்செல்லும் தேரோட்டியாகக் கண்டதனை உணர்ந்துகொள்ளமுடிகிறது..

மக்கள் சேவையே மகேசன் சேவை

        மதங்கள் பல ஆறுகளைப் போன்றது. அவை சேரும் இடம் கடல்..அந்தக் கடல் தான் கடவுள்.அதுவே மெய்ஞ்ஞான வாழ்க்கை என எண்ணி வாழ்ந்தவர்சுவாமி விவேகானந்தர். வேதம், குரான், விவிலியம் மூன்றிலும் மனிதம் போற்றப்படுவதனை எடுத்துக்காட்டி, கோயில், தர்கா, தேவாலயம் மூன்றும் ஒன்றுதான் எனக் கூறிய பெருமைக்குரிய தலைவராக விளங்கினார் சுவாமி விவேகானந்தர். மதங்களைப் புரிந்து கொள்வதில் புதுமையைப் புகுத்தினார்.அறிவியல் முறையில் – சமயங்கள் முரண்பாடுகளல்ல அது வாழ்க்கைக்குத் துணை நிற்பன என்பதனை நிறுவினார்.மதம் குறித்த புதிய பார்வையைக் காட்டினார்.”நாம் புனிதமானவர்களாக இருக்க வேண்டும் ஏனெனில் புனிதம் தாம் நம் இயற்கை” என்றார்.”உன்னை சுற்றியிருப்பவர்களை நேசி.அங்குதான் கடவுள் இருக்கிறார்” எனத் தெளிவுறுத்தினார்.எனவே, தொண்டு செய்து வாழ்வதே சொர்க்கத்திற்கான வழி என ‘இராமகிருஷ்ணா மிஷனைத் தொடங்கினார்.

உண்ண உணவு, இருக்க இடம், உடுக்க உடை என்பதோடு நில்லாமல் உயர கல்வி என கல்வியையும் சமூக அறங்களையும் வளர்த்தார் சுவாமி விவேகானந்தர்.அவர் 1897 ஆம் ஆண்டுமே முதல் நாள் இராமகிருஷ்ண மிஷனைத் தொடங்கினார்.வேதாந்த வகுப்புகள், சமூகப் பணிகள், மருத்துவமனை, பள்ளி, கல்லூரி, தங்கும் விடுதி எனப் பல பணிகளை மேற்கொண்டது. ”தூய்மை ,பொறுமை விடாமுயற்சி – வெற்றிக்கு அடிப்படை இம்மூன்றை விட அன்பு” என்னும் அவருடைய பொன்மொழிக்கு அவரே இலக்கணமாகத் திகழ்ந்தார். ஏழைகளுக்கு மருத்துவம்,கல்வி, விடுதி, அநாதை இல்லம் எனப் பல சமூகப் பணிகளுக்காக அமைப்பை ஏற்படுத்தியதன் வழி சுவாமி விவேகானந்தரின் பெருமைகளை உணர்ந்துகொள்ளமுடிகிறது.

மனமே மாபெரும் சக்தி

உடல் நலம் குன்றினால் சரி செய்து விடலாம்.மன நலம் குன்றினால் அதனால் ஏற்படும் விளைவு மிகவும் கடுமையானதாக அமையும்.அதனால் உடலைக் காப்பதில் உள்ள கவனத்தை விட மனத்தைக் காப்பதில் கவனம் வேண்டும்.மனத்தை அடக்கக் கற்றதனாலேயே புலன்களை அடக்கி அத்தனையையும் தம் ஆன்மிக ஆற்றலாக வெளிப்படுத்தினார் சுவாமி விவேகானந்தர்.

        வேகமாக வரும் தண்ணீரை தடுத்து முறையே வயலுக்குப் பாய்ச்சினால் அது வளர்ச்சிக்கு வழியாகும்.முறைப்படுத்தாது விட்டுவிட்டால் அத்தண்ணீர் நிலத்தையே பாழ்படுத்திவிடும்.அவ்வாறே ஒவ்வொருவருக்குள்ளும் நிறைந்திருக்கும் ஆற்றலை முறைப்படுத்த வேண்டும்.முறைப்படுத்தாதன் விளைவாகவே நாட்டில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற அவலங்கள் தொடர்கின்றன.ஏழ்மையை ஒழித்தே ஆக வேண்டும் எனப்போராடும் இளைஞர் நன்கு படித்து உயர்நிலையை அடைகிறார்.அவ்வாறின்றி வாழ்க்கை போன போக்கில் வாழ்பவர் தம் ஆற்றலை ஏதேனும் குற்றச்செயல்களில் ஈடுபடுத்திக்கொள்கிறார்.இதனால் அவர்தம் வாழ்வு துன்பமானதாக மாறுகிறது. இதனை உணர்த்தும் வகையில் ”ஞானம் இருக்கும் இடத்தில் காமம் வராது. காமம் இருக்கும் இடத்தில் ஞானம் வராது”.என உணர்த்தியுள்ளார் சுவாமி விவேகானந்தர்.

முதல் பண்பாட்டு தூதுவர் – சுவாமி விவேகானந்தர்.

கிழக்கிற்கும் மேற்கிற்குமான பாலத்தைக் கட்டியவர்.சமய விழிப்புணர்வு மற்றும் பண்பாட்டு மரபு மற்றும் இந்துத்துவத்தை ஒருங்கிணைத்தல் என்னும் பணிகளைச் செய்வதில் முன்னோடியாக இருந்தவர்.ஒரு பண்பாடு என்பது பூ பறித்துப் பூசை செய்வதல்ல. அது எத்தனை ஆண்டு காலமாக எவ்வாறு பராமரிக்கப்பட்டு எவ்வாறு செழுமை மாறாது இருந்தது.அதனை அவ்வாறே பின்பற்றுவதே என்றார் சுவாமி விவேகானந்தர்.

சிகாகோ –வில் 1893 ஆம் ஆண்டு சென்றார்.அந்த ஆண்டிலேயே செப்டம்பர் மாதத்தில் பாராளுமன்றத்தில் பேசினார்.மூன்றரை வருடம் அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும் லண்டனிலும் தம் பணியைச் செம்மையுறச் செய்தார். 1897 – இல் இந்தியா திரும்பினார். 1899 – ஐக்கிய அமெரிக்க நாடுகளின் மேற்குப் பகுதிகளிலும் 1900- பேலூர் மடத்திலும் தம் சமூகப்பணிகளை சிரமேற்கொண்டு சிறப்புறச் செய்தார் .

உன் மீது நம்பிக்கை வைப்பதே முக்திக்கு வழி

        தன்னம்பிக்கையுடன் வாழ்வதே வாழ்வாகும் என உணர்த்தியவர் சுவாமி விவேகானந்தர்.”உனக்காக எதையும் துறக்கலாம்.எதற்காகவும் உன்னைத் துறக்காதே”.”தீமையின்றி நம்மை இருக்குமென்பது சிறுபிள்ளைத்தனம்”.”தேசத்தேர்ச்சக்கரத்தை கிளப்ப இளைஞர்களே தோள்கொடுங்கள்” ”நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே மாறுகிறாய். ”நான் இப்போது இருக்கும் நிலைக்கு நானே பொறுப்பு” என்னும் பொன்மொழிகளின் வழி இளைஞர்களின் தன்னம்பிக்கையினை வளர்த்த பெருமைக்குரியவர் சுவாமி விவேகானந்தர்.


எழுமின் – விழிமின்

இலக்கை அடையும் வரை ஓயக்கூடாது என்பதில் உறுதியாக நின்றவர்.தம் கையில் பணம் இல்லாத போதும் உலகையே தன்னம்பிக்கையால் வலம் வந்தவர்.அவருடைய பேராற்றலைக் கண்டு வியந்த பெரியோர்கள் பலரும் அவருடைய பணிக்குத் துணை நின்றனர்.அதன் விளைவாகவே உலகம் முழுதும் இந்து மதத்தின் பெருமையினை உலகறியச் செய்தார் சுவாமி விவேகானந்தர்.

உலகில் உள்ள அனைத்துத் துன்பங்களுக்கும் விழிப்புணர்வு இல்லாமையே காரணம் என எண்ணினார் சுவாமி விவேகானந்தர்.அயல்நாடுகளில் வாழும் குழந்தைகள் நன்கு கல்வி கற்கின்றனர்.நம் குழந்தைகள் மட்டும் அவ்வாறு கற்க முடியாமல் ஏழ்மையிலேயே வாழ்கின்றனரே என வருந்தினார்.பிறகு அதற்கான வழியினை உருவாக்குதல் நமது கடமை என்பதனை உணர்த்தும் வகையில் “நாமே நம் கண்களைக் கைகளால் மறைத்துக்கொண்டு இருளாக இருக்கிறது எனக் கதறுகிறோம்” எனக் கூறினார்.

நீங்கள் மகத்தான பணி செய்ய வந்தவர்கள்

        ஒவ்வொரு மனிதரும் ஏதேனும் ஒரு உயர்ந்த பணிக்காகவே இந்த உலகத்தில் பிறந்திருக்கிறார்கள் என உணர்த்தியவர் சுவாமி விவேகானந்தர். தான் உண்டு ; தன் வேலை உண்டு என தன்னலத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு வாழ்வது வாழ்வாகாது. கல்வியின் பயன் சமூக நலனே என்பதனை உணர்த்தும் வகையில் “வெறும் புத்தகங்களைப் படித்தவன் வறட்சி அடைகிறான்.துளியளவாவது அன்பை உணர்ந்தவனே படித்தவன்” என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

கால்பந்து விளையாடுவது கடவுளுக்கு அருகே அழைத்துச் செல்லும்

        முழுமையான ஈடுபாட்டினாலேயே கடவுளை அடைய முடியும் என்பதனை உணர்த்தினார் மனதை அடக்காமல் எதனையும் அடைய முடியாது என உணர்ந்த சுவாமி விவேகானந்தர் அதற்கான பக்குவத்தின் நிலையினை அறிவதற்காக சாரதாதேவி அம்மையாரிடம் ஒப்புதல் பெற விழைந்தார். துறவு மேற்கொள்ளப்போகிறேன் என்றதும் சமையல் செய்து கொண்டிருந்த சாரதா தேவி அம்மையார் சுவாமி விவேகானந்தரிடம் ”அங்கிருக்கும் கத்தியை எடுத்து வா என்றார்”. எடுத்து வந்த பிறகு ”சரி” என்றார். கூர்மையான பக்கத்தை தம்மை நோக்கி வைத்துக்கொண்டு பிடி இருக்கும் பக்கத்தை அம்மையாரிடம் கொடுத்ததைச் சுட்டிக்காட்டினார் சாரதா தேவி அம்மையார்.– எவன் தன் நலத்தைப் பாராது பிறர் நலத்தைப் பார்க்கிறானோ அவனே துறவு மேற்கொண்டு சமூகத்தை வழி நடத்திச் செல்லும் திறமை உடையவன் என அதற்கான விளக்கத்தையும் கூறினார். இதன்வழி துறவின் பெருமையினையும் அறிந்துகொள்ளமுடிகிறது.

முன்னே செல் – வழி காட்டு

வெற்றி பெற்றால் தலைமை ஏற்பாய்.தோல்வியுற்றால் வழிகாட்டுவாய்.என இரண்டையும் சமூக நன்மைக்காகவே மாற்றிக்கொள்ள அறிவுறுத்துகிறார் சுவாமி விவேகானந்தர்.கடவுளை அடையும் முயற்சி குறித்து எண்ணுதல் அரிது ; அவ்வாறு எண்ணியவர் அதற்கான முயற்சியில் ஈடுபடுவது அதனினும் அரிது ; அவ்வாறு முயற்சியில் ஈடுபட்டவர் அந்நிலையில் நிற்பது அரிதினும் அரிது. எனினும் கடவுளை அடைதலே பிறப்பின் பயன் என்பதனை உணர்வுடையோர் உணர்வர்.

கடவுளை அடைதல் என்பது கடினமான ஒரு செயல் அன்று.இயல்பான நிகழ்வு என எளிமையாக உணர்த்துகிறார் சுவாமி விவேகானந்தர்.“குழந்தைகள் பொம்மையுடன் விளையாடும் வரை தாயைத் தெரிவதில்லை.ஏதாவது பயம் வந்துவிட்டால் உடனே தூக்கிப்போட்டுவிட்டுத்தாயைத் தேடி ஓடும்” என எளிமையாக கடவுளை அடையும் நிலையினை எடுத்துக்காட்டுகிறார் சுவாமி விவேகானந்தர்..

கோழையிடமிருந்து வீரன் பிறப்பதில்லை. பெண்களே வீரமாக இருங்கள்

ஒரு பெண் கல்வி கற்றால் அந்தக் குடும்பமே கல்வி கற்றது போல் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர் தாயார் புவனேஸ்வரி அம்மையார்.அவருடைய அன்பாலும் அறிவாலும் பல மொழிகளைக் கற்றதோடு ஆன்மிகத்திலும் ஈடுபாடுடையவரானார்.இறைவழிபாட்டில் ஈடுபாட்டுடன் வாழ்ந்த அம்மையாரின் வழி சுவாமி விவேகானந்தருக்கும் ஆன்மிகம் எளிதில் கைகூடியது. சிறுகதை சொல்லும் தாயாரிடமிருந்து குழந்தைகள் ஒழுக்கங்களை எளிதில் கற்றுக்கொண்டு சிறந்த மனிதராகத் திகழமுடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவர் சுவாமி விவேகானந்தர். பிரம்ம சமாஜத்தில் உறுப்பினராகி ஆன்மிகத்தில் தனது ஈடுபாட்டினை வளர்த்துக்கொள்ள அந்தத் தாயின் அறவுரைகளும் அறிவுரைகளுமே துணை நின்றன.பெண்களுக்கு நீங்கள் செய்ய வேண்டியவை என்று எதுவுமில்லை. நீங்கள் எதுவும் செய்யாமல் இருந்தால் போதும். அவர்களே தங்களைத் தாங்கள் நிலை நிறுத்திக்கொள்வார்கள்” என்றார்.பெண்களின் அறிவுத்திறத்தில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவராக சுவாமி விவேகானந்தர் திகழ்ந்ததனை அறியமுடிகிறது.

        சுவாமி விவேகானந்தரின் போதனைகளில் மயங்கி அவரையே குருவாக ஏற்றுக்கொண்டவர் மார்கரெட்நோபுல் (சகோதரி நிவேதிதா).அவருடைய போதனைகளின் வழி துணிவுடன் கொல்கொத்தாவில் பெண் கல்விக்காக தம் வாழ்வை அர்ப்பணித்தார்.

முப்பத்தொன்பதில் விண்ணுலகம்

இளைஞர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என வாழ்ந்து வழிகாட்டியவர் சுவாமி விவேகானந்தர்.1902 ஜீலை திங்கள் நான்காம் நாள் விண்ணுலகை அடைந்தார்.அவருடைய பிறந்த நாளை ஜனவரி 12 தேசிய இளைஞர் நாளாகக் கொண்டாடப்படுகிறது.

நிறைவாக

        நாடு முன்னேற்றம் அடைவதற்காக இன்று மேற்கொண்டு வரும் பல பணிகளை அன்றே அறிவுறுத்திய தீர்க்கதரிசி (முன்னோக்குப் பார்வை) கொண்டவராக சுவாமி விவேகானந்தர் திகழ்ந்தனை உணர்ந்துகொள்ளமுடிகிறது.

        குடிசைகளால் தான் நாடு வாழ்கிறது. ஆனால் அந்தக் குடிசைகளுக்கு நாம் எதுவும் செய்யவில்லை என்னும் கருணை உள்ளத்துடன் சமூகப் பணியினை மேற்கொண்டவர்

        இன்றைய இந்திய அரசியல் நிர்ணயச்சட்டம் போற்றும் மதச்சார்பற்ற தன்மையை தாம் வாழும் காலத்திலேயே போற்றிய பெருமைக்குரியவர்.

        கல்வி என்பது தொழில்நுட்பப் பயிற்சியினையும் தொழிற்சாலை பயிற்சியினையும் உள்ளடக்கியதாகவும் அமைதல் வேண்டும் எனக் கூறியவர்.

        பட்டினியில் கிடக்கும் மனிதருக்கு மதத்தைப் போதிப்பது வேடிக்கைக்குரியது என முழங்கியவர்.

ஏழைகளிலும் நோயாளிகளையும் சிவனைக் காணுங்கள் எனக் கூறி அவர்களுக்குச் சேவை செய்ய அறிவுறுத்தியவர்.

சமூகத்தைத் திருத்த வேண்டியது அனைவருடைய கடமை என்பதனை உணர்த்தும் வகையில் வழக்கறிஞர்களையும் ஆசிரியர்களையும் ஆட்சியாளர்களையும் தொடர்ந்து சந்தித்து அதற்கான முயற்சிகளிலேயே தம் வாழ்வை அர்ப்பணித்தவர் எனத் தெளியமுடிகிறது

ஒரு சமயத்தைச் சார்ந்தவர் என அவருடைய கருத்துக்களை ஒதுக்கி விடாது தேசத்தின் ஒருமைப்பாட்டுக்காக பண்பாட்டுக் கொடியினை ஏந்தி உலகம் முழுதும் வலம்வந்த செயல்வீரர் சுவாமி விவேகானந்தர் எனத் தெளியமுடிகிறது.

இந்தியப் பண்பாட்டை ; மரபினை உலகமே வியக்கும் அளவிற்கு சென்று சேர்த்த பெருமைக்குரியவர் சுவாமி விவேகானந்தர். அவர் வழியில் நின்று தேசத்தின் ஒற்றுமைக்காகவும் வளர்ச்சிக்காகவும் பாடுபட்டால் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாகும் என்பதனை உணர்வுடையோர் உணர்வர்.
*****