தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

ஞாயிறு, 26 மே, 2019

கலித்தொகையில் அன்பும் அறனும் - Kaliththogai


கலித்தொகையில் அன்பும் அறனும்

முனைவர் ம.. கிருட்டினகுமார், தமிழ்ப் பேராசிரியர் (உதவி), புதுச்சேரி – 605008.உலாப்பேசி : 9940684775
      அன்பு பொதுச் சொத்து ; பண்பு தனிச் சொத்து. அரண் எல்லைக்குள் அமைவது. அறன் எல்லையைக் கடப்பது. இவ்வாறு சமூகத்தில் அன்பு தழைக்கவும் மனித நேயம் வளரவும் துணை நிற்பன அன்பும் அறனுமேயாம். இப்பண்புகளை வலியுறுத்தும் வகையிலேயே தமிழ் இலக்கியங்கள் தோன்றின. இல்லறம் செழிக்க அவை இரண்டும் கண்மணிகளாக நின்று வழிகாட்டும் எழிலினை எண்ண விழைந்ததன் விளைவாகவே இக்கட்டுரை அமைகிறது. கால வரையறையினைக் கடந்து நிற்கும் இத்தலைப்புக்கு பக்க வரையறை உள்ளதனால் கலித்தொகையில் உள்ள பாலைக்கலி 35 பாடல்களில் சில மட்டுமே இக்கட்டுரையில் எடுத்தாளப்படுகிறது.
        இறைவாழ்த் தொன் றேழைந்து பாலைநா லேழொன்
        றிறைகுறிஞ்சி யின்மருத மேழைந்துறைமுல்லை
        ஈரெட்டொன் றாநெய்தல் எண்ணான்கொன் றைங்கலியாச்
        சேரெண்ணோ மூவைம்பதே

என்னும் வெண்பா 150 பாடலுடைய பகுப்பினை எடுத்துரைக்கிறது. கலித்தொகையில் 2 முதல் 36 வரையுள்ள 35 பாடல்களைப் பாடியவர் பெருங்கடுங்கோ. இவர் பாடிய. பாலை நிலத்தைப் பற்றிய பாடல்கள் சிறப்புறப் பாடப்பட்டுள்ளதனால் இவரை சேரமான் பாலைப் பாடிய பெருங்கடுங்கோ எனச் சிறப்புடன் அழைக்கப்படுவர். இல்லறத்தில் அன்பும் அறனும் சிறக்க வழி காட்டி நின்ற திறத்தினைஇனி காண்போம்.

அன்பே வாழ்வு

        இல்வாழ்க்கை என்பது உறவுகளை வளர்ப்பது. உறவுகளை விடுத்து வெளிநாடு சென்று பொருள் ஈட்டி அப்பொருளை யாருடன் பகிர்ந்துகொள்வது. உறவுகளைப் போற்றும் காலத்தில் விட்டுவிட்டு அவர்களை இழந்தபின் அப்பொருளைக் கொண்டு ஏதும் செய்தல் இயலாது. அதனால் அன்புடன் வாழ்வதே உயிர்வாழ்க்கை எனத் தெளியலாம். தலைவியை விட்டுப் பிரிதல் என்பது அவர் உயிரைப் பிரித்தலுக்கு நிகராகும் என்பதனை

        மறப்ப காத னிவளீண் டொழிய
        இறப்பத் துணிந்தனிர் கேண்மின்மற் றைஇய                 (கலித்தொகை : 2 : 9-10)

என்னும் பாடலடிகளில் எடுத்துக்காட்டுகிறார் பெருங்கடுங்கோ. மறப்பதும் அறியாத அன்புடைய காதலியை விட்டுப் பிரிவேன் எனக் கூறுதல் அவளை கொல்வதற்கு நிகரானது எனக்கூறித் தலைவனைச் செல்ல விடாது தடுக்கிறாள் தோழி.

அறமே வாழ்வு

        அறம் அன்பின் வெளிப்பாடு. அவ் அறத்தைச் செய்தற்கு பொருள் தேவை. அப்பொருளை ஈட்ட வேண்டிய கடப்பாடு ஆணுக்குரியது. எனவே தனக்காக மட்டுமின்றி பிறர்க்காகவும் பொருளீட்டும் பண்பு தலைவனுக்குரியதாக இருந்தது. அவ்வாறு வாழ்ந்த வாழ்வே தமிழர் வாழ்வு. இதனை

        தொலைவாகி யிரந்தோர்க்கொன் றீயாமை இளிவென
        மலையிறந்து செயல்சூழ்ந்த பொருள்பொரு ளாகுமோ       (கலித்தொகை : 1 : 11-12)

என்னும் பாடல் அழகாக எடுத்துக்காட்டுகிறது. இருந்த பொருளைக் கொடுத்ததன் விளைவாக பொருள் தீர்ந்துவிட்டது. கொடுப்பதற்கு பொருளில்லை என மீண்டும் பொருள் தேடச் செல்கிறான் தலைவன். இல்லையென்று சொல்லாது வாழ்வதே வாழ்வு என வாழும் மனிதர்களால்தான் இவ்வுலகம் வாழ்வதனை இவ் அடிகளில் எடுத்துக்காட்டுகிறார் பெருங்கடுங்கோ.

அன்பும் அறனும்

        தலைவன் பிறரைக் காக்கப் பொருள் ஈட்டுவதைப் பெருமையாக எண்ணுகிறான். அதே போல் தலைவியையும் உயிராக எண்ணுபவன். பொருள் குறைந்த போது பொருள் ஈட்டச் செல்லும் தலைவன் தலைவியை விட்டுப் பிரியநேரும் போது தலைவி உயிர்வாழாள் எனக் கூறி அவன் செலவைத் தவிர்க்கிறாள் தோழி. தோழியைப் பொறுத்தவரை தலைவியுடன் தலைவி சேர்ந்து வாழ்தலே அறம் எனச் சுட்டுவதனை

        நிலைஇய கற்பினாள் நீநீப்பின் வாழாதாள்
        முலையாகம் பிரியாமை பொருளாயி னல்லதை  (கலித்தொகை : 1 : 11-14)

என்னும் அடிகள் எடுத்துக்காட்டுகின்றன. இப்பாடலின் வழி தலைவியிடம் கொண்ட அன்புக்கு நிகராக தலைவன் அறச் செயல்களுக்கு முக்கியத்துவம் அளித்த திறத்தை அறியலாம்.

அகத்தின் அழகு
        அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது தமிழரின் பொன்மொழி. ஒருவரைக் கண்டவுடன் முகம் மலர்வதும் கூம்புவதும் காணப்படுபவரின் பண்பின் வெளிப்பாடு. ஒருவரை எப்படி மற்றொருவர் புரிந்து கொள்கிறார் என்பதைப் பொறுத்தே அவர்களுடைய ஒவ்வொரு செயல்பாடும் அமையும். முகத்தைத் திருப்பிக்கொள்வதும் சுடுசொற்கள் பேசுவதும் ஒரு செயலின் வெளிப்பாடன்றி வேறில்லை. அவ்வாறு தலைவனின் செயல் தலைவிக்கு நோயினை ஏற்படுத்துகிறது. தலைவன் தலைவியை விட்டுப் பிரிகிறான். பிரிதல் துன்பத்தின் ஒரு கூறு. அறிவு அதனை உணர்ந்தாலும் அன்பு அதன் காரணத்தை அறியாது. அவ்வாறே தலைவன் பிரிவை எண்ணி தலைவி வருந்துகிறாள். அவள் உடல் வருத்தமடைவதனை அவள் முகமே காட்டிவிடும். உண்மையான அவ்வருத்தம் அவள் முகத்தில் கண்ணாடியில் பட்ட நீராவி போல பொலிவிழந்து காணப்படும். அழகின்மையான அவ் அழகு  அன்பின் அடையாளமாகிறது. இதனை
        இவட்கே செய்வுறு மண்டில மையாப் பதுபோன்
        மையில் வாண்முகம் பசப்பூ ரும்மே                  (கலித்தொகை : 7 : 7-8)

என்னும் அடிகள் அழகாக எடுத்துரைக்கின்றன. மதியிடத்தே மேகம் பரவினால் மதியின் ஒளி மங்கியிருத்தல் போல் தலைவியின் பொலிவுடைய முகம் தலைவனின் பிரிவினால் பசப்பூர்ந்து இருப்பதனை எடுத்துக்காட்டுகிறார். அன்பு பிரிவினை ஏற்காது. அதனால்தான் தெய்வப்புலவர் திருவள்ளுவரும் தீயவருடன் நட்பு கொள்க என்கிறார். ஏனெனில் அவருடைய பிரிவு துன்பத்தைத் தராது அகம் மகிழுமேயன்றி துன்புறாது எனக் கூறி மகிழ்விப்பதனை இங்கு எண்ணி மகிழலாம்.

அனைத்துயிர்களிடமும் அன்பு

        அன்பு அனைத்துயிர்க்கும் உரியது. பொருளாலேயே அன்பு சிதைகிறது. பொருளிடம் நாட்டம் இல்லாத விலங்குகளிடமும் பறவைகளிடமும் அன்பு குறையாதிருக்கிறது.

        பிடியூட்டிப் பின்னுண்ணுங் களிறெனவு முரைத்தனரே              (கலித்தொகை : 11: 9)
        மென்சிறக ராலாற்றும் புறவெனவு முரைத்தனரே                   (கலித்தொகை : 11 : 13)
        தன்னிழலைக் கொடுத்தளிக்கும் கலையெனவு முரைத்தனரே       (கலித்தொகை: 11:17) 

என்னும் அடிகள் விலங்குகளின் அன்பினைப்படம்பிடித்துக்காட்டுகிறது. தலைவியைப் பிரிந்து சென்ற தலைவன் விரைவில் வந்தடைவான் என்பதனைத் தோழி காட்டிடத்தே நிகழும் இந்நிகழ்வின் வழி எடுத்துரைக்கிறாள்.

        பிடிக்கு ஊட்டிப் பின் தான் உண்ணும் களிறின் அன்பினையும் தன் சிறகால் பெடைக்கு இன்பமளிக்கும் ஆண் புறவின் அன்பினையும் தன் நிழலைக் கொடுத்து பிணை மானைக் காக்கும் கலை மானின் அன்பினையும் படம்பிடித்துக்காட்டுகிறார் பெருங்கடுங்கோ. பெண் இனத்தைக் காக்கும் விலங்குகளுக்கு இருக்கும் அறிவு கூட மனிதனிடம் இல்லாமல் போய்விட்டது. திருமணமானவுடன் தன்  குடும்பத்தைத் துறந்துவிடும் பெண்ணை அடிமையாக எண்ணுவது ஆண்களின் அறியாமையை எடுத்துக்காட்டுவதனை இங்கு எண்ண வேண்டியுள்ளது.
அறத்தில் சிறந்தது அன்பு
        அறம் பொருள் இன்பத்துள் சிறந்தது அறமே. தலைவியை விட்டுப் பிரிதல் அறமாகாது என எண்ணி மீளி என்னும் தலைவன் (காவல் பிரிவை) பொருள் ஈட்டத்தை விட்டு தலைவியுடன் வாழத் துணிகிறான். இந்நிகழ்ச்சி மருத்துவனுடைய மருந்து போல் யாக்கைக்கு இன்பம் பயக்கிறது. மருந்து கசக்கும் அது போல் பொருள் ஈட்டாதிருக்கும் துன்பமும் கசக்கிறது. ஆனால் அது நாளடைவில் மறைந்துவிடும் என்பதனை
        பொருந்தியான் றான்வேட்ட பொருள்வயி நினைந்தசொற்
        றிருந்திய யாக்கையுண் மருத்துவ னூட்டிய
        மருந்துபோன் மருந்தாகி மனனுவப்பப்
        பெரும்பெயர் மீளி பெயர்ந்தனள் செலவே (கலித்தொகை : 17 : 17-21)

என்னும் அடிகள் அழகாக எடுத்துக்காட்டுகின்றன. அன்பான சொற்கள் மருந்து போல் உடலுக்குள் சென்று நன்மை விளைவிக்கிறது. அவ்வாறே மீளியும் செலவைத் தவிர்த்து வாழ்வதனை இப்பாடல் எடுத்தியம்புகிறது.

வருத்தமே வாழ்வு
        தலைவனின் அன்பும் தலைவியின் அன்பும் பிணைந்ததன் விளைவே மகப்பேறு. அன்பின் வெளிப்பாடாக அமையும் அப்பேறே பெண்ணுக்குப் பெருமை சேர்க்கிறது என்பது தமிழர் மரபு. பெண்கள் அழகினையே உயிராகக் கருதுவதுண்டு. ஆனால் குழந்தைப் பேறு என்றவுடன் அந்நலத்தைக் குறித்த கவலை மறைந்துவிடுகிறது. அழகைக் கெடுப்பதோடு வருதத்த்தையும் கொடுக்கும் மகப்பேறினை விரும்பி ஏற்கிறாள் பெண். அவள்படும் அத்துணை வருத்தமும் அந்தக்குழந்தை பிறந்தவுடன் மறைந்து விடுகிறது. இதனை
        தொல்லெழில் வரைத்தன்றி வயவுநோய் நலிதலின்
        அல்லாந்தார் அலவுற ஈன்றவள் கிடக்கைபோற்
        பல்பயம் உதவிய பசுமைதீர் அகன்ஞாலம்
        புல்லிய புனிறொரீஇப் புதுநலம் ஏர்தர (கலித்தொகை : 19 : 1-4)

என்னும் பாடலடிகள் அழகாக எடுத்துரைக்கின்றன. தாயானவள் குழந்தை பெரிதானவுடன் அக்குலத்தின் பெருமையைக் காக்கும் என எண்ணி மகிழ்வாள். பயிர் வைப்பதற்காக தன்னை வருத்திக்கொண்ட உழவன் பின் அந்தப்பயிர் செழித்து உலகின் பசித்துன்பத்தை நீக்கும் பெருமையை எண்ணி மகிழ்வது போல எனத் தாய்மையினை ஒப்பிடுகிறார் பெருங்கடுங்கோ. தாய்மையினை  உழவனுடன் ஒப்பிட்டு இருவரையும் பெருமைபடுத்தும் அழகினை இங்கு எண்ணி மகிழலாம். வருத்தம் கூடாது என நினைத்தால் உலகில் எந்த உயிரும் வாழாது என்பதனை எடுத்துக்காட்டி நல்லவர்களுடைய வருத்தத்தால்தான் இவ் உலகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்னும் அறத்தினை இங்கு எண்ணி மகிழலாம்.

பிரிவும் அறமே

        தலைவியானவள் தலைவனுடன் உடன்போக்கு மேற்கொள்கிறாள். இதனைக் கண்டு வருத்தமுறும் செவிலித்தாயிடம் (முக்கோல்பகவர்) துறவி,  பெண்ணானவள் அவ்வாறு பிறந்த இடத்தை விட்டு நீங்குதலே அறம் என்பதனை உணர்த்தி வருத்த்த்தைக் களைகிறார்.

                        பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க் கல்லதை
                        மலையுளே பிறப்பினும் மலைக்கவைதா மென்செய்யும்
                        நினையுங்கால் நும்மகள் நுமக்குமாங் கனையளே ;
                        சீர்கெழு வெண்முத்த மணிபவர்க் கல்லதை
                        நீருளே பிறப்பினும் நீர்க்கவைதா மென்செய்யும்
                        தேருங்கால் நும்மகள் நுமக்குமாங் கனையளே ;
                        ஏழ்புண ரின்னிசை முரல்பவர்க் கல்லதை
                        யாழுளே பிறப்பினும் யாழ்க்கவைதா மென்செய்யும் (கலித்தொகை 9 12-19)

எனக்கூறி வருத்தமடையும் செவிலித் தாயினைத் தேற்றுகிறாள். இம்மையில் தலைமகளின் விருப்பப்படி அமையும் இல்லறமே அறங்களில் தலையான அறம் எனக்கூறுகிறார் முக்கோற் பகவர். உயர்ந்த பொருள்களான சந்தனமும், முத்தும், இன்னிசையும் பிற இட்த்துக்கு செல்வதனாலேயே பலன்  உண்டாகும் என்பதனையும் இப்பாடலடிகளின் வழி தெளியலாம்.




இல்லறத்தின் பெருமை
        தலைவனால் தலைவியும் தலைவியால் தலைவனும் சிறக்க வாழ்வதே இல்லறம். எனவே ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்தலோடு புகழ்ந்தும் வாழ வேண்டும். விட்டுக்கொடுத்து வாழும் வாழ்வே தமிழர் வாழ்வு. தலைவன் பிரிந்து செல்வதைக்கண்டு ஊரார் இகழ்வார். எனினும் தலைவனின் கடமை உணர்வினை எண்ணி பிரிவு வாட்டத்தை வெளிப்படுத்தாமல் மறைத்து வாழ்வாள் தலைவி. இதனை
        பிரிவஞ்சா தவர்தீமை மறைப்பென்மன் மறைப்பவும்
        கரிபொய்த்தான் கீழிருந்த மரம்போலக் கவின்வாடி
        எரிபொத்தி என்னெஞ்சஞ் சுடுமாயின் எவன்செய்கோ (கலித்தொகை : 34 : 9-11)

என்னும் பாடலடிகள் எடுத்துரைக்கின்றன.  பொய் கூறினால் வாடும் மரம் உண்டு. அம்மரத்தருகே பொய்கூறி மரத்தின் அழகைக்  கெடுத்தல் போல் காலத்தில் வருவேன் எனக்கூறிப் பிரிந்தால்  விளையும் முகவாட்டத்தை என்னால் காத்தல் இயலாது எனக் கூறி தலைவனின் பிரிவைத் தடுக்கிறாள். இதில் இல்லத்தின் பெருமையைக் காக்கும் அறன் தனக்கு இருப்பதனையும் தன்னைக்காக்கும் அறன் தலைவனுக்கு இருப்பதனையும் உணர்த்துகிறாள். தமிழர்கள் சொல்காத்தவர்கள். உண்மையான வாழ்வு வாழ்ந்தவர்கள். தாள்களைக் காட்டிலும் ஆள்களை மெய்யென்று எண்ணியவர்கள். அதனால் அவர்கள் கூறும் உறுதிமொழியே பெரிதென வாழ்ந்திருந்த அறத்தையும் இங்கு எண்ணி மகிழலாம்.

காலம் காத்திருக்காது
        காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. எனவே காலம் கடந்து செய்யும் செயலால் பலனில்லை. எதிர்காலத்தை எண்ணி நிகழ்காலத்தை இழந்தவர்கள் பலருண்டு. நிகழ் காலத்தில் வாழத்தெரிந்தவர்களே மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். முதுமைக்காலத்தை எண்ணி இளமைக்காலத்தை தொலைத்து விடுதல் கூடாதென்பதனை
        புரிபுநீ புறமாறிப் போக்கெண்ணிப் புதிதீண்டிப்
        பெருகிய செல்வத்தாற் பெயர்த்தர லொல்வதோ (கலித்தொகை : 15 : 10-11)

என்னும் அடிகளில் எடுத்துரைக்கின்றன.     புறப் பொருளை விரும்பி அகப்பொருளை கைவிட்டால் தலைமகளது அழகு கெடும் . அப்பிரிவால் அவளுக்கு பசப்பூறும். பிரிவு நோயால் உண்டாகும் வருத்தம் அழகை வருத்தும். பின்னாளில் நீ வரும் போது அவ் அழகு மீண்டும் கிடைக்குமா எனக்கேட்டு தலைவனின் பிரிவைத் தடுக்க முயல்கிறாள். காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்னும் பழமொழியினை இங்கு எண்ணி மகிழலாம்..

கண்ணீரே அன்பு

        எண்சாண் உடம்பிற்கு சிரசே முதல் என்பது போல். முகத்திற்கு கண்ணே முதல். அதனால் அன்பு பெருகும்போது கண்ணே என அழைத்தல் காணலாம். அன்பின் அடையாளத்தை கண்ணீரே வெளிப்படுத்தும் என்பது தெய்வப்புலவர் வாக்கு.  தலைவியின் அன்பினை கண்ணீர் வெளிப்படுத்திவிடும் என்பதனை

                        மணக்குங்கான் மலரன்ன தகையவாய்ச் சிறுதுநீ
                        தணக்குங்காற் கலுழ்பானாக் கண்ணெனவு முளவன்றோ (கலித்தொகை 25 13-14)

என்னும் அடிகள் எடுத்துக்காட்டுகின்றன. தலைவனே நீ தலைவியைப் பிரிந்து போகலாம் ஆனால் ஊரார் உன்னைப் பழிப்பர். ஊராரொடு உன்னைப் பழிப்பன பிறவும் உண்டு என்கிறாள். அவற்றுள் கண்களும் ஒன்று என்கிறாள். ஒருவர் இருக்கும் போது வாழ்த்தியும் அவர் சென்ற பின் தாழ்த்துவதும் இழிமக்கள் இயல்பு. அவ்வாறு நீ அருகில் இருக்கும்போது மகிழ்வதும் நீ பிரிந்த பின் தூற்றும் வகையில் எப்போதும் கண்ணீர் விட்டுக்கொண்டே உன்னைப் பழித்துக்கொண்டிருக்கிறது என கண்ணின் மேன்மையினை பழிப்பது போல உயர்த்திக் கூறுகிறாள் தோழி. தலைவன் அண்மையில் இருக்கும்போது மலர்ந்த கண்கள் அவன் பிரிவால் கண்ணீர் உகுத்துக் கொண்டே இருப்பதனைப் புலப்படுத்துகிறார் கடுங்கோ.

குறையாத செல்வம்

        கொடுத்து மகிழ்வதே இல்லறத்தின் மாண்பு. துறவோரையும் காக்கும் கடன் இல்லறத்தார்க்கெ உண்டு என்கிறார் தெய்வப்புலவர். அத்தகைய அறவாழ்வு வாழ்ந்து சிறப்போரே இல்லறத்தார். அதனை அறிந்து இல்லறம் நடத்தும் பண்புடையவன் செல்வமே தீதிலாத செல்வம். அது நாளும் பெருகுமன்றி குறையாது.

                        ஈதலின் குறைகாட்ட தறனறிந் தொழுகிய
                        தீதிலான் செல்வம்போல் தீங்கரை மரநந்த        (கலித்தொகை 27 1-2)

என்னும் அடிகள் எவ்வளவு குறைந்தாலும் வருந்தாமல் மகிழ்வுடனே வாழும் அறநெறியுடையோரின் பெருமையினை எடுத்தியம்புகிறது. த்தகையோரின் செயலை ஆற்றங்கரை மரத்தோடு ஒப்பிடுகிறார் கடுங்கோ. கொடையாளியின் செல்வத்தால் பலரும் நன்மை அடைந்து செழித்திருப்பதைப் போல் ஆற்றங்கரையில் மரங்கள் செழித்திருப்பதனை எடுத்துக்காட்டுகிறார். ஆற்றங்கரை கொடையளிப்பவர்க்கும் மரங்கள் கொடை பெற்றவர்க்கும் கொடையாளியின் புகழ் மரத்தின் செழிப்பிற்கும் எடுத்துக்காட்டாய் திகழ்வதாக உள்ளதனை இங்கு எண்ணி மகிழலாம்.


நன்றி மறவாதே

        அனைவரும் விரும்பும் கடன் நன்றிக்கடன் ஒன்றே. கடனறி மாந்தர் என்பது ஒவ்வொருவரும் தனக்குரிய உறவு நிலையில் , பதவியில் ஒழுக்கமாக வாழ்வது. ஒவ்வொரு நிலையிலும் கடனறிந்து வாழ்ந்தால் உலகம் சிறக்கும்.

                        முன்னொன்றி தமக்காற்றி முயன்றவர் இறுதிக்கண்
                        பின்னொன்று பெயர்த்தாற்றும் பீடுடை யாளர்போல்
                        பன்மலர் சினையுகச் சுரும்பிமிர்ந்து வண்டார்ப்ப
                        இன்னமர் இளவேனில் இறுத்தந்த பொழுதினாள் (கலித்தொகை 34 4-7)

என்னும் அடிகள் முன்னர் செய்த உதவியை எண்ணி ஒருவர்க்கு உதவி செய்யும் செய்யும் நன்றிக்கடனை எடுத்தியம்புகிறது. இந்நிலையினை  வண்டுகள் மொய்க்கும் பூக்களையுடைய நீர்நிலையை ஒப்பிடுகிறார் கடுங்கோ.  கொடியானது தன்னை வளர்த்த நீர்நிலையின் அருமையினை எண்ணி பூக்களைப் பரவி விட்டுள்ளதாகக் காட்டுவதனை எண்ணி மகிழலாம். இம்மலர்கள் வழி நன்றி மலர்களின் அருமையினை எடுத்துக்காட்டி நன்றி மறவாது வாழும் அறத்தினை உணர்த்தியுள்ளதனைக் காணமுடிகிறது.

நிறைவாக

        மனிதன் அறத்துடன் வாழ்ந்தால் பொருளும் இன்பமும் தானே வந்தடையும். அறமின்றி சேரும் பொருளினால் இன்பம் உண்டாகாது. அறமில்லாத இன்பத்தாலும் நன்மை விளையாது. கடனை அறிந்து வாழ்தலே அறம் என்பதனைக் பாலைக்கலிப் பாடல்கள் நன்கு எடுத்துரைத்துள்ளன. கலித்தொகையின் இப்பாடல்களின் வழி அன்புடனும் அறத்துடனும் வாழ்வதே வாழ்வு எனத் தெளியலாம்.

*********************************
       











தமிழ் இலக்கியங்கள் காட்டும் நுகர்வோர் பண்பாடு - Consumer culture in Tamil Literature


மிழ் இலக்கியங்கள் காட்டும் நுகர்வோர் பண்பாடு

முனைவர் ம.ஏ. கிருட்டினகுமார், தமிழ்ப் பேராசிரியர் (துணை), புதுச்சேரி -8 உலாப்பேசி – 9940684775

        தமிழ் இலக்கியங்கள் தமிழ் மொழியின் வளத்தினை மட்டுமே வெளிக்காட்டுவதாக அமையாமல் தமிழர் வாழ்வையும் படம்பிடித்துக் காட்டுவனவாக அமைகின்றன. தமிழ் இலக்கணத்தில் பொருள் இலக்கணம் தமிழர் வாழ்வை விளக்கியுரைப்பது தமிழரின் செம்மாந்த நிலையினைப் பறைசாற்றுகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பிற நாடுகளுடன் வணிகம் செய்த பெருமை தமிழர்க்கு உண்டு என்பதனை இலக்கியங்கள் வழி உணரமுடிகிறது.
உலகில் பல மொழிகள் சொல் அறுவடை செய்து வளர்ந்து கொண்டிருந்த போதே உலகுக்கே நெல் அறுவடை (2,500 ஆண்டுகளுக்கு முன்னரே) செய்து கொடுத்த இனமாகத் தமிழர் திகழ்ந்ததனை தொல்பொருள் ஆய்வாளர்கள் நிறுவியுள்ளனர். இலக்கியங்கள் வரலாற்று ஆவணங்களாக நின்று தமிழர்கள் வணிகத்தில் உலக முன்னோடிகளாகத் திகழ்ந்ததனைப் பறைசாற்றுகின்றன. தமிழர் வாழ்வு நாகரிகத்தாலும் பண்பாட்டாலும் பழமையானது என்பதனைப் பழந்தமிழ் இலக்கியங்களின் வழி அறிந்துகொள்ள முடிகிறது. அத்தகைய பண்பாட்டுச் சிறப்பு மிக்க தமிழர்கள் நுகர்வோர்களாய் வாழ்ந்த நிலையினை அறிய விழைந்ததன் விளைவாகவே இக்கட்டுரை அமைகிறது.
நுகர்வோர் எனப்படுவோர்
        நுகர்தல் என்பது பயனைப்பெறுதல் என்னும் பொருளில் அமைகிறது. ஒரு பொருளைப் பெறுவதற்கு  ஒரு பொருளைக் கொடுத்து வாழ்க்கை நடத்தும் எவரும் நுகர்வோர் எனக் குறிப்பிடப்படுவர். இதன்வழி பெறும் பொருளுக்குரிய ;உரிமை  நுகர்வோர்க்கு உரியதாகிறது. இவ்வடிப்படை உரிமையைக் கொண்டே நுகர்வோரின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. தாம் வாங்கும் பொருளின் உண்மை நிலையினை ஆய்ந்து விழிப்புணர்வுடன் அதற்குரிய பற்றுச்சீட்டினை (ரசீது) பெறுபவரே சிறந்த நுகர்வோர் என உணரமுடிகிறது. நுகர்வோர் பற்றிய விழிப்புணர்வினை கற்றல் இன்றைய வணிக உலகத்தில் மிகவும் அவசியமானதொன்றாகும். கற்க இயலாவிடில் கேட்டாவது விழிப்புணர்வு பெறுதல் வேண்டும். அவ்வாறு விழிப்புணர்வுடன் வாழ்ந்தால் தான் ஏமாறாது வாழ இயலும். இதனை
        கற்றிலனாயினும் கேட்க அஃதொருவற்கு
        ஒற்கத்தின் உற்றாந் துணை                  (திருக்குறள் – 414)

என்னும்  தெய்வப்புலவரின் கூற்றின் வழி தெளிவாக உணரமுடியும். திருவள்ளுவரின் கூற்று நுகர்வோரின் நலனுக்கும் பொருந்துமாற்றை இங்கு உணர்ந்து மகிழலாம். ஒருங்கிணைந்த செயல்பாட்டினை உடைய நிறுவனங்களின் குறைகளை நிறைவாக்க வேண்டுமாயின் ஒருங்கிணையாத நுகர்வோரின் நிலையினை ஒருங்கிணைக்க வேண்டியது அவசியமாகின்றது. நுகர்வோர் கூடிப் போராடத் தயங்குவதனாலேயே நியாயவிலைக்கடைகளில் எடைக் குறைவாகப் பொருள் வழங்குவது  முதல் எரிவாயு குறைபாடு வரை அனைத்து நிலைகளிலும் நுகர்வோர் ஏமாற்றப்படும் நிலையினைக் காணமுடிகிறது. இவ்வாறு அனைத்து நிலைகளிலும் தம் உரிமையை நிலைநாட்டிக் கொள்பவரே விழிப்புணர்வுடைய நுகர்வோர் எனக் குறிப்பிடமுடிகிறது.

நுகர்வோரே முதன்மையானவர்
        நுகர்வோரைப் பொருத்தே வணிகத்தின் வளர்ச்சி நிலை அமைவதனாலேயே மகாத்மாவும் நுகர்வோரை கடவுளுக்கு இணையாகக் குறிப்பிடுகிறார். நுகர்வோரே வணிகர்களை வாழ்விக்கின்றனர். இதனை உணர்ந்து தொழில் செய்வோரே முன்னேற்றமடைய இயலும் என்பதனைக் கூறி வணிகர்களின் மேம்பாட்டுக்கு வழிவகுத்தார் மகாத்மா. வணிகம் என்பது மாறுபட்ட ஒரு கலை. இங்கு விலையைக் குறைக்க குறைக்க வியாபாரம் பெருகுகிறது. விலை அதிகமானால் வியாபாரம் குறைகிறது. எவ்வாறெனினும் மக்களின் பொருளாதரச் சூழலினை உணர்ந்தே பல தொழில்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. இதனால் தமக்குரிய நுகர்வோரைத் தேர்வு செய்துவிட்டு தொழில் தொடங்கும் நிலையும் பரவிவருகிறது.. இதற்கேற்ப பொருளின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
பொருள் விற்கும் இடத்தின் தன்மைக்கேற்ப பொருளின் விலை கூட்டியும் குறைத்தும் விற்கப்படுகிறது. .பொருளின் விலையோடு இடத்தின் விலையும் சேர்ந்துகொண்டு நுகர்வோர் அறியாத வகையில் அவர்களிடமிருந்து கொள்ளை அடிக்கும் நிலையும் வளர்ந்துவருகிறது. பொருளை இழப்பதனால் எவரும் பாதிப்படைவதாகக் கொள்ளமுடியாது. எனினும் பொருளின் மதிப்பினை உணராது செல்வந்தர் செய்யும் செயலானது மற்றவர்களுக்குப் பெரும் பாதிப்பினை உண்டாக்கி விடுகிறது. பொருள் உடைய ஒரே காரணத்தால் தம் விருப்பப்படி பொருளினை செலவு செய்வதனை அறத்தின் அடிப்படையில் சரியெனக் கூற இயலாது. நுகர்வோரின் தரத்தினை வணிக நுட்பமாகக் கொள்ளாது பொருளின் தரத்தை மட்டுமே கணக்கிட்டுப் பொருளை விற்பதும் பெறுவதுமான கொள்கையுடன் வாழ்ந்தவர்கள் தமிழர் என்பதனைப் பட்டினப்பாலை படம்பிடித்துக் காட்டுகிறது. சிறந்த வியாபாரிகள் நுகர்வோரையே கடவுள் போல் எண்ணி அவர்களிடம் கனிவாகவும் குறையின்றியும் நடந்துகொள்வார். அவ்வாறு நேர்மையுடன் பொருளுக்குரிய தொகையினை மிகுதியாகக் கொள்ளாது கொடுக்கும் பொருளின் மதிப்பு குறைவுபடாது கொடுத்தலுமாக நின்ற சிறப்பினை
கொள்வதூஉம் மிகைகொளாது கொடுப்பதூஉம் குறைகொடாது
பல்பண்டம் பகர்ந்து வீசும்
தொல் கொண்டி . . . . . . . . .                 (பட்டினப்பாலை – 210-212)
என்னும் அடிகளின் வழி உணர்த்துகிறார் கடியலூர் உருத்திரங்கண்ணனார். இப் பாடலின் வழி விலையினைத் தெளிவாகக் கூறுவதோடு மட்டுமின்றி வாங்கிய விலை ; விற்கும் விலை ; கிடைக்கும் நிகர லாபம் என மூன்றையும் வெளிப்படையாகக் கூறி வணிகம் செய்த நிலையினைக் காணமுடிகிறது. நுகர்வோர் எவ்வகையிலும் ஏமாறாது பொருளைப் பெறுவதை உறுதி செய்துகொள்ளும் வகையில் வணிகம் செய்ததனையும் பல பண்டங்களை முறையாக விற்ற சிறப்பினையும் இவ்வரிகள் உணர்த்துகின்றன.
நுகர்வோர் பண்பாடு
        நுகர்வோர் நாகரிகம் பெருகிவிட்ட காலம் இது. எவ் வகையான காரணமுமின்றி கடைக்குச் செல்லுதல் என்பதே நாகரிகமாகிவிட்டது. இன்று சிறப்பங்காடிகள் பல்வேறு நிலைகளில் பெருகிவிட்டதனால் இதைத்தான் வாங்க வேண்டும் என்னும் எண்ணத்துடன் செல்பவர்கள் கூட அங்குக் குவிந்திருக்கும் பொருள்களைக் கண்டு தம் பொருளாதார நிலைகளுக்கேற்ப அவசியமில்லாத பொருள்களையும் வாங்கி வீட்டிற்குள் குவித்துவிடுகின்றனர். தேவையான பொருட்களை மட்டும் வீட்டில் வைத்துக் கொள்வது என்னும் மேலை நாட்டார் நிலை  இங்கில்லை. மாறாக அவர்களுக்குரிய அங்காடிகள் போல் பெரும் அங்காடிகள் நடைமுறைக்கு வந்துவிட்டன. எனவே தம்தமக்குரிய பண்பாட்டை விட்டுவிட்டுப் பிற பண்பாட்டு முறைகளைப் பின்பற்றுவதன் விளைவாகவே உயர்வு தாழ்வு மனப்பான்மைகள் பெருகி குடும்பத்தில் குழப்பங்கள் பெருகி வருவதனைக் காணமுடிகிறது.
வீட்டிற்கேற்ற பொருள் என்னும் நிலை மாறி பொருளுக்கேற்ற வீடு என்னும் சூழலும் பெருகிவருகிறது. எவ்வாறெனினும் பொருளை நுகர்வோருக்குக் கொண்டு செல்வதில் இன்றைய வணிக நிறுவனங்கள் விளம்பரங்கள் என்னும் பெயரில் பல்வேறு நடைமுறைகளைக் கொண்டுள்ளன. இவ் விளம்பரங்களுக்கு முன்னோடியாகத் தமிழர்கள் கொடி வைத்து பொருளை அறிமுகப்படுத்திய  நிலையினை “கடைகளில் விற்பனை செய்யப்பட்ட பொருள்கள் கொடிகளில் எழுதித் தொங்கவிடப்பட்டிருந்தன. வாணிகர்கள் பிற ஊர்களுக்கு வாணிகம் செய்யுங்கால் கூட்டம் கூட்டமாகச் செல்வது வழக்கமாக இருந்தது. அக்கூட்டம் வாணிகச்சாத்து என அழைக்கப்பட்டது.” (த.வ.த.ப. ப.83) என்னும் அடிகளின் வழி நுகர்வோரின் கவனத்தை ஈர்க்க விளம்பரம் செய்த தமிழர் நிலையினை எடுத்துக்காட்டுகிறார் வரலாற்றாசிரியர் இராமகிருட்டினன்.
வணிகத்தில் சிறந்த தமிழர்
        தமிழர்கள் கப்பல் வழி உலகில் (சுமேரியா, ரோம், இலங்கை) எனப் பல நாடுகளுக்குப் பயணம் செய்து வணிகம் செய்ததனைக் காணமுடிகிறது. அடைமொழி என்பது அவர்களுடைய சிறப்புடை பண்பால் இடம்பெறுகிறது. அக்காலப் புலவர்கள் பாடல் இயற்றி மகிழ்வித்ததோடு அல்லாமல் வணிகம் செய்தும் பொருள் ஈட்டினர் என்பதனைக் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார், அறுவை வாணிகன் இளவேட்டனார் இளம்பொன் வணிகனார், பண்ட வாணிகன் இளந்தேவனார் (த.வ.த.ப. ப.83) என்னும் பெயர்களின் வழி அறியமுடிகிறது. உயர்ந்த பதவியில் உள்ளோர் மட்டுமேயன்றி நிறுவனங்களும் நுகர்வோரை அணுகவேண்டுமாயின் எளிமையினைக் கையாள வேண்டிய சூழல் அவசியமாகிவிட்டதனைக் காணமுடிகிறது. எனவே வெளிநாட்டு நிறுவனங்கள் விளம்பரப்படுத்தும்போது அந்தந்த  இடத்திற்குரியவர்களைக் கொண்டே பொருளினை அறிமுகம்செய்கிறது. நுகர்வோருக்குரிய மொழி, மனிதர் என்னும் நிலைகொண்டே பொருளை விற்கமுடியும் என்பதனைப் பழங்காலத்திலேயே தமிழர்கள் நெறியாகக் கொண்டிருந்ததனை
மொழி பல பெருகிய பழிதீர் தேஎத்தும்
புலம்பெயர் மாக்கள் கலந்து இனிது உறையும்
முட்டாச் சிறப்பின் பட்டினம் . . . . . . . .(பட்டினப்பாலை : 216 -217)

என்னும் அடிகள் இதனைத் தெளிவாக உணர்த்துகின்றன. காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகம் செய்வோர் பல மொழிகளை அறிந்தவராகவும் எவ்வகையான வேறுபாடுமின்றி ஒற்றுமையுடன் வாழ்ந்ததனையும் அறிந்துகொள்ளமுடிகிறது.  இதனால் அளவிட இயலாத சிறப்புடன் காவிரிப்பூம்பட்டினம் திகழ்ந்ததனையும் இப்பாடலடிகள் எடுத்துக்காட்டியுள்ளன. இவ் இலக்கியங்களின் வழி தமிழரின் வணிகம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சிறந்திருந்ததனைக்  காணமுடிகிறது.
நுகர்வோரைக் காக்க
        மக்களின் தேவையினை உணர்ந்து புதிய பொருளை அறிமுகம் செய்யும் நிறுவனம் நுகர்வோருக்குரிய சேவையினைச் செய்து அதற்குரிய பொருளை மட்டுமே பெறுதல் வேண்டும். நுகர்வோரின் தேவையினை உணர்ந்து தம் மனநிலைக்கு ஏற்றார் போல் விலையினைக் கூட்டி விற்பது வணிக அறமாகாது. இந்நிலை ஒரே நிறுவனத்தால் மட்டுமே கொண்டு வரப்பட்ட பொருளுக்கே ஏற்புடையதாகும். ஆங்கிலேயர்கள் அவ்வாறே கப்பல் போக்குவரத்தைத் தொடங்கி தாம் நிர்ணயித்த படி தம் விருப்பத்திற்கேற்ப கட்டணம் வசூலித்தனர். இந்தியாவை அடிமைப்படுத்தி சர்வாதிகார ஆட்சி நடத்திக் கொண்டிருந்ததைக் கண்ட தமிழர் ஒருவர் வலிமை வாய்ந்த ஆங்கிலேய அரசையே எதிர்த்துக் கப்பலோட்டினார். அத்தகைய பெருமையுடையவர் கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனார். வணிகத்தால் ஆட்சியைக் கைப்பற்றிய ஆங்கிலேயரின் நிலையினை முடக்க வேண்டுமாயின் அவர்களின் வணிகத்தை முடக்க வேண்டும். வணிகத்தை முடக்க வேண்டுமாயின் நுகர்வோரை தம் பக்கம் இழுக்க வேண்டும் என எண்ணி அந்நாளிலேயே கப்பலோட்டிய நிகழ்வினை எண்ணி மகிழலாம். நுகர்வோரின் துணையின்றி எந்த ஆட்சியும் நடைபெற இயலாது. ஒரு நாடோ ; நகரமோ ; ஊரோ எதுவாயினும் அவ் இடம் முன்னேற்றமடைய வேண்டுமாயின் தொழில் பெருகுதல் வேண்டும் என்பதனையும் இங்கு எண்ண இயலும். மகாகவி பாரதியார் அவ்வாறே புதுவை முன்னேற்றப்பாதையை நோக்கி நடைபோடும் நிலையினை
வேதபுரத்திலே வியாபாரம் பெருகுது
தொழில் பெருகுது; தொழிலாளி வாழ்வான் ….”(புதிய கோணங்கி 3)

என்னும் கூற்றின் வழி வாழ்த்துவதனைக் காணமுடிகிறது. தொழில் வளர்வதற்கும் தொழிலாளி வாழ்வதற்கும் வியாபாரமே அடிப்படையாகத் திகழ்வதனைப் புலப்படுத்தியுள்ளார் மகாகவி பாரதியார்.
நுகர்வோர் மகிழ
நுகர்வோரின் நன்மையையே முதன்மையாகக் கொண்டு செயல்படும் நிறுவனங்களே வெற்றி பெறுகின்றன. பொருள் ஈட்டுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படும் நிறுவனங்கள் வெற்றி பெறாது. மக்கள் எளிதில் கையாளும் வகையில் செய்யப்படும் பொருட்களே (நீர்க்குவளை முதல் உலாப்பேசியில் கணினி வரை Water bottle to Mobile Computer) எளிதில் சந்தையைப் பிடித்துவிடுகின்றன. நுகர்வோரின் பொருள் வீணாகாதவாறு பனிக்கூழைக் கொடுக்கும் குவளையையே (Cone Ice cream), உண்ணும் வகையில் அமைத்தது பெரும் வெற்றியைக் கொடுத்தது. அவ்வாறே நுகர்வோரின் பொருளைக் காக்கும் வகையில் உலாப்பேசிக்கான உறை (Mobile Cover) கண்டுபிடிக்கப்பட்டதும் பெரும் வெற்றி பெற்றது. எப்போதெல்லாம் நுகர்வோர் மகிழ்விக்கப்படுகிறார்களோ அப்போது வணிகமும் நாடும் உயர்வு பெறும் எனத் தெளியமுடிகிறது. மக்கள் நலனுக்காக நிறுவனத்தார் பலரும் ஒன்று கூடி பல தொழில்களைத் தொடங்க வேண்டும். நுகர்வோரும் தொழில் முனைவோரும் ஒன்றுபட வேண்டும் என்பதனை
“சிறு முதலால் லாபம் சிறிதாகும் ; ஆயிரம் பேர்
உறுமுதலால் லாபம் உயருமன்றோ தோழர்களே . . .
ஒற்றைக் கை தட்டினால் ஓசை பெருகிடுமோ
மற்றும் பலரால் வளம் பெறுமே தோழர்களே…               (கூடித்தொழில் செய்க)

எனப் பாவேந்தர் பாரதிதாசன் குறிப்பிட்டள்ளதனையும் எண்ணி மகிழலாம். குறைவான பொருட் செலவில் நிறைவான பயனைப் பெறவிரும்புதலே மனித இயல்பு. ஒவ்வொரு மனிதரும் ஏதேனும் ஒரு வகையில் நுகர்வோராகவே இருக்கிறார். எனவே நுகர்வோர் நலனே மக்கள் நலன் ; நாட்டின் நலன் எனத் தெளிந்து செயல்பட வேண்டியது அவசியமாகிறது.
நுகர்வோர் நலமே நாட்டின் வளம்
        நுகர்வோரை நிறைவு செய்யும் நாடே வளர்ந்த நாடாகக் கொள்ளப்படுகிறது. ஏனெனில் சிறிய குறைபாடே ஆயினும் அதனை முழுமையாக மாற்றிக் கொடுக்கும் பொறுப்பு வணிக நிறுவனங்களுக்கு உண்டு. பொருளைத் திரும்பப் பெற முடியாது என்பதே குற்றத்திற்குரியது. இதனை நுகர்வோர் உணர்ந்து தம் உரிமைகளை நிலைநாட்ட வேண்டும். ஓர் இடத்தில்  நுகர்வோருக்குத் தேவையான பொருள் ஒருவரிடம் மட்டுமே கிடைக்கும் என்னும் நிலை ஏற்படும் போது தாம் நினைத்தபடி விலையை நிர்ணயித்தல் (திரையரங்குகள், சுற்றுலா தலங்கள், சிறப்பங்காடிகள், பேருந்து நிறுத்தங்கள் இன்னும் பல) கொள்ளை அடித்தலுக்கு நிகரானது என்பதனை உணரவேண்டும். இது எப்படி கொள்ளை ஆகும். அது தான் வணிகத் தந்திரம் எனக்கூறுவோரும் உண்டு.  இரவு நேரத்தில் தானி (ஆட்டோ) ஓட்டுநர் தம் விருப்பப்படி கட்டணம் கேட்டல், கடையடைப்பு, ஊரடங்கு ஆணை போன்ற நெருக்கடி காலங்களில் தம் விருப்பப்படி விலையை நிர்ணயித்தல் போன்றவை அறம் என எவராலும் ஒத்துக்கொள்ள இயலாது. பிறர் பொருளை எவ்வாறேனும் பெற்றுவிடுதல் என்பது மட்டுமன்று நினைத்தலே குற்றம் என்கிறது தமிழ்மறை திருக்குறள்.
உள்ளத்தால் உள்ளளும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்                          (திருக்குறள் – 282)

என்னும் திருக்குறள் நுகர்வோர் வழி நின்று நோக்கும்போது ஏமாற்றி பொருளைப் பெறுதல் கள்ளத்தனத்திற்கு ஈடானது எனத் தெளிவுறுத்துவதனைக் காணமுடிகிறது
நுகர்வோர் உரிமையைப் பாதுகாத்தல்
        அறிவு எப்படி அனைவர்க்கும் பொதுவானதோ அவ்வாறே அறியாமை என்பதும் அனைவர்க்கும் பொதுவானதே. ஏனெனில் ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு துறையில் விழிப்புணர்வு இல்லாதவராக இருக்கக் கூடும். அவ்வகையில் ஏதேனும் ஒரு பொருள் குறித்த விழிப்புணர்வு இல்லாதவர்க்கும் அப்பொருளை வாங்க வேண்டிய நிலை ஏற்படும். பெரும்பாலானவர்கள் வாங்கும் பொருளின் நுட்பங்கள் தெரியாமலே பயன்படுத்தி வருவதனைக் காணமுடிகிறது. எனினும் அவர்களை ஏமாற்றி ஒரு பொருளை விற்று விடுவது என்பது ஏற்புடையதாகாது. அதற்காகக் கொண்டு வரப்பட்டதே நுகர்வோர் பாதுகாப்பு என உணரமுடிகிறது.
படிக்காதவர்கள் இருந்த காலத்தில் ஏமாற்றுதல் என்பது வழக்கில் இருந்ததாகப் பெரிய சான்றுகள் எதுவும் இல்லை. ஆனால் இன்று படித்தவர்களே பல்வேறு வகைகளில் புதிது புதிதாக ஏமாற்றுகின்றனர். இவ்வாறு ஏமாந்தவர்கள் நிலை மிகவும் வருந்தத்தக்கது. தாமே விரும்பி எவ்வளவு பொருளை இழந்தாலும் அதனால் கேடு விளைவதில்லை. ஆனால் ஏமாற்றப்பட்டோம் என்னும் நிலை ஏற்படும் போது பொருள் இழப்பு சிறிதாயினும் பெருந்துன்பம் ஏற்படும். இதனை உணர்ந்த மகாகவி பாரதியார்
படிச்சவன் சூதும் பாவம் பண்ணினால்
போவான் போவான் ஐயோவென்று போவான் (புதிய கோணங்கி 2)

எனக் கூறி ஒழுக்கத்துடன் வாழ வழிகாட்டுகிறார். இக்கூற்று உணவுப் பொருளில் கலப்படம் செய்து நுகர்வோரை ஏமாற்றுவோர்க்கு மிகவும் பொருத்தமாக அமைவதனை உணரமுடிகிறது.
சந்தையும் நுகர்வோரும்
        இன்றைய சந்தைகள் அனைத்தும் மக்களை ஏமாற்றுவதுமாகவும் அச்சுறுத்துவதாகவுமே நிலவுகின்றன. வயதானவர்களுக்கு மூட்டு வலி இயல்பானதே. அதிலிருந்து விடுபட தினமும் நடைப்பயிற்சி போன்றவற்றை மேற்கொண்டால் போதுமானது. அதனை உணர்த்த வேண்டியது வணிக நிறுவனங்களின் தேவை இல்லை. எனினும் தங்கள் பொருளை விற்பதற்காக ’உங்களுக்கு மூட்டு வலி வரக்கூடும் அதிலிருந்து விடுபட எங்கள் நிறுவன பானங்களைக் குடியுங்கள்’ என விளம்பரத்தின் வழி அச்சுறுத்துகின்றனர். குழந்தைகள் தேர்வில் தேர்ச்சியடைய வேண்டுமானால் எங்கள் நிறுவனத்தின் பானங்களைக் குடியுங்கள் என விளம்பரம்படுத்தலும் அச்சுறுத்தலே. நீங்கள் இன்னும் எங்கள் நிறுவனப் பொருளைப் பயன்படுத்தவில்லையா அப்படியெனில் நீங்கள் இந்த சமூகத்தால் மதிக்கப்படுபவராக வாழ்தல் கடினம் என்பதைப் போல் ஆடைகளை விளம்பரம்படுத்துவதும் நடைமுறையாகி விட்டது.  அழகில்லையெனில் உலகில் வாழவே இயலாது என்பது போல் தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கி அழகுபடுத்தும் பொருட்களை விளம்பரப்படுத்தி பல கோடி இலாபம் பெறும் நிறுவனங்களும் உள்ளன. பெண்களை முழுமையாகத் தங்கள் பக்கம் ஈர்த்துக் கொண்ட நிறுவனங்கள் இன்று ஆண்களையும் அழகுபடுத்தும் பொருட்களை பயன்படுத்தத் தூண்டுகின்றன. வயிற்றுக்குச் சோறுண்ணுதலை விட அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிலை வளர்ந்துவிட்டதனால் ஊட்டமில்லாத சமுதாயத்தை இந்தச் சந்தை உருவாக்கி வருவதனைக் காணமுடிகிறது. ஏற்கெனவே வெள்ளையாக இருக்கும் பெண்களுக்கும் மை பூசி கருப்பாகக் காட்டி பின் அதனை நீக்கி வெண்மையாகக் காட்டும் ஏமாற்று வேலையை நுகர்வோர் உணரவேண்டும்.
அறன் ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்                                       (திருக்குறள் – 754)

என்னும் குறள் மக்கள் நலனில் அக்கறை கொண்டு உருவாக்கும் பொருளே இன்பத்தைத் தரும் என்பதனை நுகர்வோர் நோக்கில் நின்று உணர்த்துவதைக் காணமுடிகிறது. வெண்மை என்பது தான் அழகு என்பதே தவறான கண்ணோட்டம். இவ் உணர்வை ஏற்றுக்கொள்ள மனம் இல்லாதது வருந்தத்தக்கது. இவை பின்னாளில் உடல்நலக் கேட்டினையே உண்டாக்கும். ’நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பதனை உணர்ந்தே நுகர்வோர் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியது அவசியமாகிறது.
இந்தியாவில் நுகர்வோர்
        இந்தியா மிகச் சிறந்த சந்தையாக விளங்குவதற்குக் காரணம் இந்தியாவின் குடும்ப அமைப்பு முறையே. பொருளைச் சேமித்தல் என்னும் வழக்கம் குடும்ப அமைப்பு முறையினால் மட்டுமே அமைகிறது. எனவே, அனைத்து நாடுகளும் 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவையே சிறந்த சந்தையாக எண்ணிச் செயல்படுவதனைக் காணமுடிகிறது. இத்தகைய அடர்த்தியான மனித வளம் கொண்ட நிலம் நல்ல பொருட்களை மட்டுமே நுகர்வோரிடையே கொண்டு செல்ல வேண்டும். ஆட்சியாளர்களும் அதற்குரிய நடவடிக்கைகளை விழிப்புணர்வுடன் மேற்கொள்ள வேண்டும். அம்முயற்சியில் தளர்வு ஏற்படுமாயின் தேவையில்லாத பொருட்கள் உள்ளே நுழைந்து நாட்டின் பொருளாதாரத்தையும் மனித வளத்தையும் குன்றச்செய்துவிடும். ஒரு நாட்டின் அதிகாரத்தில் உள்ளோரின் விழிப்புணர்வின்மையால் அந்நாட்டின் புகழே ஒழிந்து விடும் என்னும் நிலையினை
வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்                     (திருக்குறள் - 239)

என்னும் தெய்வப்புலவரின் கூற்றினைக் கொண்டு உணரமுடிகிறது. எத்தகைய வளமுடைய நாடாயினும் குற்றமுடையோரைப் பொறுத்துக் கொண்டிருந்தால் தன் நிலை குன்றும் என்பதனை நுகர்வோர் நலனுடனும் பொருத்தி அறியமுடிகிறது.
மக்களாட்சியில் நுகர்வோர்
        மன்னராட்சியே ஆயினும் மக்களை முன்னிலைப்படுத்தி ஆட்சி நடத்தியோரே நல்லாட்சி நடத்தியோரென வரலாறு இயம்புகிறது. இன்றைய மக்களாட்சியில் முதலாளித்துவ நோக்கில் விலையை நிர்ணயித்தல் கூடாது. உழைப்பின் பயனை மக்கள் பெற வேண்டும் என்னும் எண்ணம் அடிப்படையாக அமையவேண்டுமே ஒழிய பொருளை மட்டுமே நோக்கமாகக் கொண்டு வணிகம் நடைபெறக்கூடாது. வணிக நிறுவனங்களுக்கு மட்டுமின்றி நுகர்வோருக்கும் மூலதனம் என்பது உழைப்பின் அருமையே என்பதனை உணர்த்தவேண்டும். ”மூலதனம் இன்றியமையாதது. ஆனால் முதலாளித்துவம் அப்படியன்று மூலதனம் என்பது கூட பென்சான் கூற்றுப்படி ‘சேமிக்கப்பட்டுள்ள உழைப்பு என்பதே” (தி இந்து நாளிதழ் 15-09-2014) என்னும் அறிஞர் அண்ணாவின் கூற்றினை  நாகநாதன் குறிப்பிட்டுள்ளது இங்கு எண்ணத்தக்கது. உழைப்பின் மதிப்பை உணர்வதனால் பொருளின் மதிப்பும் பாதுகாக்கும் திறனும் கூடும் என்பதனை உணரமுடிகிறது.
சிறந்த நுகர்வோரே உயர்வர்
        நுகர்வோரின் தேவையே பொருளை உருவாக்குகிறது. நுகர்வோரின் நிறைவே சிறந்த பொருளை உருவாக்குகிறது. நுகர்வோரின் தேவையினை நிறைவிக்க இயலாத நிலையினைக் கண்டு நுகர்வோரே நிறுவனத்தாரவதும் உண்டு. தம்முடைய நலனுக்காக மட்டுமின்றி தம்மைச் சுற்றி இருப்பவரின் நலனுக்காகவும் பாடுபடுபவர் எவரோ அவர் மேன்மேலும் பெருமையடைவார் என்பதனை
        விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
        ஆக்கம் பலவும் தரும்                                         (திருக்குறள் – 522)

என்னும் குறளின் வழி தெளிவுறுத்துகிறார் திருவள்ளுவர். நுகர்வோர் பண்பாட்டின் வழி நோக்குகையில் இக்குறளுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார் ஸ்டீவ் ஜாப்ஸ்.
நுகர்வோரே நிறுவனத்தாராக மாறுவதன் வழி நுகர்வோரின் தேவைக்கும் வசதிக்கும் விருப்பத்திற்கும் ஏற்ற சிறந்த பொருளை உருவாக்குதல் இயலும்.  அவ்வாறு மேன்மேலும் உயர்ந்தவர் தான் ஸ்டீவ் ஜாப்ஸ். இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற  நிறுவனரான (ஆப்பிள்) ஸ்டீவ் ஜாப்ஸ் இனிய இசை சுவைஞராக இருந்தார். அப்போது தரமற்ற இசையையே பதிவு இறக்கம் (டவுன் லோட்) செய்ய முடிந்த நிலையினை எண்ணி வருந்தினார். எனவே தரமான இசையைப் பெற விரும்பிய அவர் பிறர்க்கும் தம்மைப் போலவே நல் இசை கேட்கும் தேவை இருப்பதனை உணர்ந்து தாமே தம் நிறுவனத்தின் வழி அத்தேவையை நிறைவு செய்தார். அதன் விளைவாக “ஒரு பாட்டுக்கு டவுன் லோட் கட்டணம் வெறும் 96 சென்ட்கள் மட்டுமே (சுமார் 60 ரூபாய்) வசூலில் 70 சென்ட் ரெகார்ட் கம்பெனிக்கு 29 சென்ட் ஆப்பிளுக்கு. 2,000 –க்கும் அதிகமான இசைக் கம்பெனிகள் 3 கோடி 70 லட்சம் பாடல்கள் 45,000 சினிமாக்கள், 20,000 டி.வி. நிகழ்ச்சிகள் இந்த ஆன்லைன் ஸ்டோரில் கிடைக்கின்றன. கடந்த 13 வருடங்களில் 7,000 கோடி டவுன் லோடு செய்யப்படுகின்றன. இதனால் 2,000 கோடி” டாலர்களுக்கு (1,20,000 கோடி ரூபாய் அதிகம்) (மூர்த்தி க.ஆ. தி இந்து நாளிதழ் செப்டம்பர் 23) வணிகம் நடைபெற்றுள்ளதனைக் குறிப்பிட்டுள்ளது இங்கு எண்ணத்தக்கது.
அற வாழ்வே அடிப்படை
        எந்நிலைக்கும் அறம் அடிப்படையாயினும் மக்களுடன் நேரடித் தொடர்பு கொண்ட வணிகத்தில் அதனைப் பின்பற்றுதல் தலையாயதாக அமைகிறது. இதனை உணர்ந்த சங்க கால மன்னன் எத்தகைய சிறப்புப் பெறுவதாயினும் அறத்திலிருந்து வழுவாது வாழ வேண்டும் என அறிவுறுத்துகிறான். தன்னலம் கருதாது பொது நல நோக்குடன் வாழ்பவராலேயே இந்த உலகம் வாழ்கிறது எனப் பாடியுள்ளதனை
உண்டால் அம்ம இவ்வுலகம் ! இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும் இனிதெனத்
தமியர் உண்டலும் இலரே ; முனிவிலர் ,துஞ்சலும் இலர்
பிறர் அஞ்சுவது அஞ்சிப் புகழெனின் உயிரும் கொடுக்குவர் பழியெனின்
 உலகுடன் பெறினும் கொள்ளலர் அயர்விலர் ; அன்னமாட்சி அனையர் ஆகி
தமக்கென முயலா நோன்றாள் ; பிறர்க்கென முயலுநர் உண்மையானே (புறம் ; 182)

என்னும் அடிகளின் வழி அறியமுடிகிறது. இப்பாடலை நுகர்வோரின் நலனை  நாடி அறத்துடன் வணிகம் செய்யவேண்டுமென அறிவுறுத்தக்கூடிய பாடலாகவும் நோக்க முடிகிறது. நுகர்வோர் நலனை முதன்மையாகக் கொண்டு தம் நிறுவன நலனைப் பின்னதாகக் கொண்டு செயல்படும் வணிக அறத்தையே இப்பாடலின் வழி இங்கு உணரவேண்டியுள்ளது.
நிறைவாக
        தமிழர்கள் உலக இலக்கியங்களுக்கு மட்டுமின்றி வணிகத்திலும் முன்னின்றனர் என்பதனை பட்டினப்பாலை இலக்கியம் தெள்ளிதின் உணர்த்துகிறது. அவ் வழியில் இன்றைய வணிகம் செயல்படுமாயின் மீண்டும் வணிகத்தில் ஒரு பொற்காலம் அமையும் எனத் தெளியமுடிகிறது.
        நுகர்வோரே வணிகர்களின் முன்னேற்றத்திற்கு முதன்மையானவர்களாக இருக்கின்றனர். இதனை உணர்ந்து நுகர்வோரின் நலனையே முதன்மையாகக் கொண்டு செயல்பட்ட நிறுவனங்களே பெருமையுடையனவாக நிலை பெற்றிருப்பதனைக் காணமுடிகிறது.
        அற வாழ்க்கை என்பது தனி வாழ்க்கையினின்றும் பொதுவாழ்க்கைக்கு மிகவும் தேவையானது என உணர்ந்த வணிகர்களாலேயே நுகர்வோரின் தேவையினை நிறைவு செய்ய முடிகிறது.
        அழகிய விளம்பரங்களால் மக்களை மயக்கி பொருளை விற்பனை செய்து நுகர்வோரின் உடல் நலத்திற்குக் கேட்டினை விளைவிப்பது வணிகத்தின் இழி நிலையினையே காட்டுகிறது. அவ்வாறு செய்வது அறமாகாது என்பதனைத் தமிழ் இலக்கியங்களின் அறநெறி தெளிவாக உணர்த்தியுள்ளதனைக் காணமுடிகிறது.
        நுகர்வோரின் நெருக்கடி நிலையினை உணர்ந்து தம் விருப்பம் போல் பொருளினை விற்பது கொள்ளையடிக்கும் குற்றத்திற்கு நிகராகும் என்பதனையும் தமிழ் இலக்கியங்களின் வழி உணர்ந்துகொள்ள முடிகிறது.
        சிறந்த நுகர்வோர் மக்கள் நலனில் அக்கறை கொண்டு செயல்படுவாராயின் அவரே சிறந்த நிறுவனராகவும் வளர இயலும் என்பதனை தமிழ் இலக்கியங்கள் வழியும் நன்குணர முடிகிறது.
        அறிவு அற்றம் காக்கும் கருவி என்னும் திருக்குறளை  நுகர்வோரின் உரிமையினைக் காக்கவும் பொருந்தும் நிலையினை உணர்ந்து விழிப்புணர்வுடன் வாழ வேண்டியது அவசியமாகிறது.
நுகர்வோர் சிறப்பார் விழிப்புடனே தம்உரிமை
        புகன்றே பொருளைப் பெறின்

என்னும் புதுக்குறளை நுகர்வோர்க்குரியதாக உருவாக்கிக் கொள்ள முடிகிறது.
*****************************









அறவியல் நோக்கில் சிலப்பதிகாரம் - Cilappathikaram


அறவியல் நோக்கில் சிலப்பதிகாரம்

முனைவர் ம.ஏ. கிருட்டினகுமார். தமிழ்ப்பேராசிரியர் (துணை),  புதுச்சேரி -8 உலாப்பேசி – 99406 84775

        சிலம்பினால் எழுந்த அதிகாரத்தின் நிலையினைக் கூறுவது சிலப்பதிகாரக் காப்பியம்.அறமே வாழ்வின் ஒவ்வொரு நிலையையும் முடிவு செய்கிறது.அறத்தின்நிலையினைக் கொண்டு வாழ்வைக் கணக்கிட இயலாததால் எச்செயலையும் ஊழ்வினையால் விளைந்தது என எண்ணிக்கொள்வதே மானிட இயல்பாகி விடுகிறது.
இயற்கை அறம் பொய்ப்பின் சமூகம் பொய்க்கும் ; நாடு பொய்க்கும் ; உலகம் பொய்க்கும். இயற்கைஅறம் செழிக்குமாயின் சமூகமும் நாடும் உலகமும் பெருமை பெறும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.எனவே அறத்தைப் போற்றி வாழும் வாழ்வே அறவாழ்வாகிறது.இந்நிலையினைச் சிலப்பதிகாரச் சூழலின் வழி நோக்க விழைந்தததன் விளைவாகவே இக்கட்டுரை அமைகிறது.
அறமாவது
        எண்ணம் - சொல் – செயல் - பழக்கம் – ஒழுக்கம் -ஆளுமை - சான்றாண்மை என்னும் வளர்ச்சி நிலைகளே மானிடப் பண்பை உணர்த்தி நிற்கும் அறத்தினை வரையறுக்கின்றன.இது காலந்தோறும் மாறுபட்ட வளர்ச்சியினைக் கொண்டிருப்பினும் சான்றோரின் வழக்கைக் கொண்டே அறத்தின் நிலை வரையறுக்கப்படுகிறது.நல்வினை தீவினை எவ்வினையாயினும் அறத்தின் சார்பு கொண்டே கணக்கிடப்படுகிறது.நல்லார் ஒருவர் பொருட்டு உலகமே மழை பெறுவதை உணர்த்தி அறவழி நிற்க அறிவுறுத்திய பெருமை தமிழினத்திற்கே உண்டு.
        ’மனத்துக்கண் மாசிலன் ஆதல் அறம்’ என்னும் தெய்வப்புலவர் திருவள்ளுவரின் வரையறையே அறவியலுக்கான உலகியல் கோட்பாடாகக் கொண்டு ஒழுக வேண்டும்.இவ் வரையறையை விடுத்து வேறு வரையறையை பொருந்தக் கூறுதல் இயலாதெனவே எண்ணத் தோன்றுகிறது.அறக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டே சிலப்பதிகாரம் படைக்கப்பட்டுள்ளது.ஏனெனில் இக்காப்பியம் உணர்த்தும் மூன்று உண்மைகள் பதிகத்திலேயே முறையாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.இவ் வரையறையைக் கொண்டு சிலப்பதிகாரத்தை நோக்குவதனால் அறத்தின் நிலையினையும் இக்காப்பியத்தின் நிலையினையும் மேலும் சுவைக்க இயலும் எனத் தெளியமுடிகிறது.
சிலம்பில் அறம்
உலகில் நின்ற இலக்கியங்கள் பலவும் தலைவனையோ தலைவியையோ காப்பியப் பெயராக இட்ட காலத்தில் கதை நிகழக் காரணாமாக இருந்த சிலம்பினையே காப்பியப் பெயராக இட்ட பெருமை இளங்கோவடிகளுக்கே உரியது. சிலம்பே அறத்தை உணர்த்தும் காப்பியத்தின் காரியத்துக்குக் காரணமாவதனால் சிலப்பதிகாரம் எனப் பெயரிட்டிருக்கக் கூடும் எனவும் எண்ணமுடிகிறது.அச் சிலம்பின் வழி தனி மனித அறம், இல்லறம், துறவறம், அரசியல் அறம் சமூக அறம் எனப் பல அறங்களை உணர்த்தும் வகையிலேயே இக்காப்பியம் புனையப்பட்டுள்ளதனைக் காப்பியக் கூறுகளின் வழி நன்கு உணரமுடிகிறது.
அரசியல் பிழைத்தோர்
        அரசு அறத்தின் ஆணி வேர்.அரசே குடிமக்களுக்கு நெறி காட்டி திறம் ஊட்டி வளம் நாட்டி வாழச் செய்வது.மன்னவன் கோல் நோக்கி வாழும் குடியைக் காக்க வேண்டிய கடமை அரசனுக்கே உண்டு.அரசு எனின் அரசாளும் அரசன் மட்டுமன்று.அரசுக்குத் துணை நிற்கும் அனைவருக்கும் இக் கூற்று பொருந்தும்.அரசு செயல்பாட்டில் தளர்வு உண்டாகத் தொடங்கும் நிலையினைக் கொண்டே நாட்டின் தளர்வும் தொடங்கி விடுகிறது.இதனைப்பொறுப்பில் உள்ளோர் உணர்ந்து வாழ்ந்தால் நாட்டில் எக்குற்றமும் நிகழ்வதற்கான வாய்ப்பின்றிப் போகும். அவ்வாறின்றி அறத்திற்கு மாறுபாடாகச் செயல்படின் அவ் அறமே கூற்றாக நின்று வருத்தும் என்பதனை
        அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம் (சிலம்பு. பதிகம் அடி:55)
என்னும் அடியின் வழிசுட்டிக் காட்டுகிறது சிலப்பதிகாரம்.அரசன் எச்செயலையும் ஆய்ந்து செய்ய வேண்டிய கடப்பாடுடையவன்.உணர்ச்சி வயப்படுபவனுக்கு அறிவு வேலை செய்வதில்லை.அறிவு வயப்படுபவன் உணர்ச்சிக்கு ஆட்படுவதில்லை.எனவே உயர்ந்த பதவிக்கு உடல் வலிமையைக் காட்டிலும் அறிவு வளமைக்கே முதன்மை இடம் கொடுக்கப்படுவதனை இங்கு எண்ண வேண்டியுள்ளது.இக்கருத்து முடியாட்சி முதல் குடியாட்சி வரை எக்காலத்துக்கும் பொருந்துவதாக அமைகிறது. இவ் அறத்தை நிலை நிறுத்தும் வகையில் பாண்டிய மன்னன் என்ன கூறுகிறோம் எனஆராயாது உணர்ச்சிவயப்பட்டு
தாழ்பூங் கோதை தன்கால் சிலம்பு
கன்றிய கள்வன் கையது ஆகில்
கொன்று அச் சிலம்பு கொணர்க ஈங்கென (கொலைகளக்காதை அ.151-153)
எனக் கூறினான். மன்னன் கூற்று வெறும் உரையல்ல ;ஆணை என்பதனைக் கோவலனிடம் கருணை கொண்ட காவலர்களுக்குஉணர்த்துகிறான்பொற்கொல்லன். இதன்வழி மன்னனின் கூற்றையே ஆயுதமாக்கிக் கோவலனைக் கொன்றான். இதன் விளைவாக பின்னாளில் தான் செய்த தவறினை கண்ணகியின் வழி உணர்ந்த பாண்டியன் நெடுஞ்செழியன்
“யானோ அரசன் யானே கள்வன்
மன்பதை காக்கும் தென்புலம் காவல்
என்முதல் பிழைத்தது கெடுக என் ஆயுளென
மன்னவன் மயங்கி வீழ்ந்தனனே  ...(வழக். காதை அ:75-78)
எனக் கூறி தன் உயிரை அறத்திற்காக இழக்கிறான்.அற நிலையில் நின்று மக்களுக்கு நல்வழி காட்ட வேண்டியவன் அந்நிலை தவறியதை எண்ணி தன் உயிரைக் கொடுத்து அறத்தை வாழ்விக்கிறான் என்பதனைச் சிலப்பதிகாரம் தெள்ளிதின் உணர்த்துகிறது.
உரை சால் பத்தினி
        துறவறத்தை விட இல்லறம் பெரிது.ஏனெனில் இல்லறமே துறவையும் போற்றிப் பாதுகாக்கிறது.கண்ணகி கோவலனைப் பிரிந்து வருந்திய வருத்தத்திற்கான காரணங்களில் முதன்மையானதாக பிறரைப் போற்றிப் பாதுகாக்கும் மாண்பினை இழந்ததையே குறிப்பிடுகிறாள்.
அறவோர்க்கு அளித்தலும் அந்தணர் ஓம்பலும்
துறவோர்க்கு எதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை (கொ.க.கா அ:71-73)
என்னும் அடிகளின் வழி இதனைப் புலப்படுத்துகிறாள்.பிறர் நலம் போற்றும் தாயுள்ளம் கொண்ட கண்ணகி  விருந்தோம்பலில் சிறந்து நின்றதனை இதன்வழி அறியமுடிகிறது. மேலும் இல்லறத்திலும் அறம் வழுவாது கணவனைப் போற்றிய பண்பிலும் நிறைவாகச் செயல்பட்டதனை
“கைவல் மகடூஉக் கவின்பெறப் புனைந்த
செய்வினைத் தவிசில் செல்வன் இருந்தபின்
கடிமலர் அங்கையில் காதலன் அடிநீர்
சுடுமண் மண்டையில் தொழுதனள். . .(கொ.க.கா.அ:36-40)
என்னும் அடிகள் புலப்படுத்துகின்றன.பெண்ணால் நேர்த்தியுடன் செய்யப்பட்ட அழகிய இருக்கையில் அமரச்செய்து மலர் போன்ற கைகளினால் கோவலனின் கால்களைக் கழுவிவிட்டு அன்புடன் தொழுது உணவிட்ட நிலையினை எடுத்துக்காட்டுகிறது. இத்தகைய பெருமையுடைய கண்ணகி இல்லற வாழ்விலும் செம்மையுற வாழ்ந்த நிலையினைக் காணமுடிகிறது.
பெண்மைக்குரிய குணங்களாகிய அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்னும் குணங்களில் சிறந்து நின்ற கண்ணகி கணவனாகிய கோவலனைக் கொன்ற செய்தி கேட்டு பொங்கி எழுவதனால் பத்தினித் தெய்வமாக மாறுகிறாள்.
மென்மை குணம் கொண்ட கண்ணகி வன்மையாக மாறுகிறாள். சிலம்பில் உள்ள மெல்லினமாகிய ’ம’ கரம் அதிகாரத்துடன் புணரும் போது வல்லினமாகிய ’ப’ கரமாக மாற்றம் பெற்று சிலப்பதிகாரமாக நின்றதனை கண்ணகியின் மாற்றத்தினாலேயே எனக் கூறுவதனையும் இங்கு எண்ணி மகிழலாம்.  
சிறுமுதுக்குறைவி எனப் போற்றப்பெறும் கண்ணகி எந்நிலையிலும் அறத்தினின்று வழுவாது உண்மையை ஆய்ந்து செயல்படும் பத்தினித் தெய்வமாகத் திகழ்ந்ததனை கண்ணகியின் செயல்பாட்டினைக் கொண்டு புலப்படுத்துகிறார் இளங்கோவடிகள். தன் கணவன் நல்லவன் என்பதனை நன்கு உணர்ந்திருப்பினும் ஏதேனும் குற்றம் செய்திருக்கக்கூடுமோ என அஞ்சி கதிரவனிடம் உண்மை நிலையை அறிவுறுத்த வேண்டுகிறாள். பத்தினியின் வினாவிற்கு ஒரு குரலின் வழி கதிரவன் விடையளித்த நிலையினை
காய்கதிர் செல்வனே கள்வனோ என்கணவன்
கள்வனோ அல்லன் கருங்கயல் கண் மாதராய்
ஒள்ளெரி உண்ணும் இவ்வூரென்றது ஒருகுரல் (துன்பமாலை அ:51-53)
என்னும் அடிகள் உணர்த்தி நிற்கின்றன.உண்மை நிலையினை அறிந்த கண்ணகி தனக்குத் துணை செய்ய சுற்றியுள்ள அனைவரையும் வேண்டுகிறாள்.எவரும் துணை நிற்காத போதும் மனம் தளராது தனியொருவளாக மன்னனைக் கண்டு உண்மையை உணர்த்த விரைகிறாள். அறத்தை மன்னனுக்கு உணர்த்திய பின்னரே கணவனைக் காண்பேன் எனவஞ்சினம் கூறும் கண்ணகியின் நிலையினை
        காய்சினம் தணிந்தன்றிக் கணவனைக் கூடேன்
        தீவேந்தன் தனைக்கண்டு இத்திறங்கேட்பல் யானென்றாள் (ஊர்சூழ்வரி அ.:70-71)
என்னும் அடிகள் எடுத்துரைக்கின்றன.இவ்வாறு அனைத்துச் செயல்பாடுகளிலும் மனைவியாக, மருமகளாக, குடிமகளாக அனைத்து நிலையிலும் அறம் வழுவாது வாழ்ந்த கண்ணகி அறத்தைக் காக்கும் பத்தினித் தெய்வமாகச் செயல்பட்டதனாலேயே அவ்வூர் மக்கள் அவளைத் தெய்வமாக வழிபட்டனர்.  அவள் மதுரையையே எரித்தாலும் அச்செயலில் நிறைவேயன்றி குறைவில்லை என்பதனை மண்ணோர் மட்டுமின்றி விண்ணோரும் போற்றிப் புகழ்ந்ததனை
“இலங்கு பூண் மார்பின் கணவனை இழந்து
சிலம்பின் வென்ற சேயிழை நங்கை
கொங்கைப் பூசல் கொடிதோ அன்றென
பொங்கெரி வானவர் தொழுதனர் ஏத்தினர்  (அழற்படுகாதை அடி134-137)
என்னும் அடிகள் எடுத்துரைக்கின்றன. பெண்ணானவள் எந்நிலையிலும் தன் கடமையிலிருந்து வழுவாது வாழ்ந்தால் உலகமே போற்றும் என்னும் அறத்தினை
        உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும் (பதிகம். அ:56)
கண்ணகியின் வழி சிலப்பதிகாரம் உணர்த்தி நிற்பதனைக் காணமுடிகிறது.தனது அறத்தினின்று வழுவாது வாழும் கண்ணகியிடம் நிலமகள் மாறாத அன்பு கொண்டிருந்தாள்.எனவே அவளுக்குப் பின்னால் நிகழும் துன்பத்தை எண்ணி நிலமகள் வருந்தி மயக்கமுற்றாள்.இவ் அன்பினை எடுத்துரைக்க விழைகிறார் இளங்கோவடிகள்.
கோவலனுக்கு கண்ணகி சோறிடும் முன் இலை போடும் இடத்தில் நீர் தெளித்த நிகழ்வினை
மண்ணக மடந்தையை மயக்கொழிப் பனல் போல்” .                                                                                         (கொ.க.கா.அ:40-41)
எனக் கூறுகிறார் இளங்கோவடிகள். அறவாழ்வில் சிறந்து விளங்கும் கண்ணகிக்கு துன்பம் நேரப்போவதனை எண்ணி மயக்குற்ற நிலமகளின் மயக்கத்தைத் தெளிவிப்பது போல் அக்காட்சி இருந்ததாக எடுத்துக்காட்டியுள்ளதனை இங்கு எண்ணி மகிழலாம்.
ஊழ்வினை உருத்தும்
        வாழ்க்கை எவ்வாறு நடக்கிறதோ அதுவே ஊழ் எனக் குறிக்கப்பெறுகிறது.வாழ்க்கைப் போக்கிலேயே வாழ்ந்து காட்டுவதும் அவ்வாறின்றி மாற்ற முயல்வதும் ஊழ் வினைப் பயனே.இதனை உணர்ந்தே சான்றோர்கள் வாழ்வில் இன்பத்தையும் துன்பத்தையும் ஒன்று போலவே கருதினர். இவ் அறத்தை உணர்த்தும் வகையிலேயே  இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் பல இடங்களில் ஊழின் வலிமையை எடுத்துரைக்கிறார்.
        கடக் களிறிடம் சிக்குண்ட மறையவனைக் காத்து கருணை மறவனாக, பாவம் செய்த பார்ப்பனியை விட்டுச் சென்ற கணவனைச் சேர்த்து வைத்த செல்லாச் செல்வனாக, மகனை இழந்த தாயின் வருத்தம் நீக்க தானே மகன் போல் தாயையும் சுற்றத்தாரையும் காத்த இல்லோர் செம்மலாகச் செயல்பட்டான் கோவலன். இப்பிறவியில் பெருமைக்குரிய செயல்கள் பல செய்த கோவலன் முற்பிறவியில் செய்த ஊழ்வினையாலேயே வருந்த நேர்வதனை
        ”இம்மைச் செய்தன யானறி நல்வினை
        உம்மைப் பயன்கொல் . . . . (அடைக்.காதை அ:91-92)
என்னும் மாடல மறையோனின் கூற்று வெளிப்படுத்துகிறது.இதன்வழி ஊழின் வலிமையை இளங்கோவடிகள் தெள்ளிதின் புலப்படுத்துகிறார். இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ என்னும் அச்சத்தை ஊட்டி வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் நன்னெறி வழுவாது வாழவேண்டும் என அறிவுறுத்தியுள்ளதனை இதன் வழி உணரமுடிகிறது.
காதல் மயக்கம் எந்த உறவையும் இழக்கும் துணைவைத் தருவது.அவ்வாறே கோவலன் கண்ணகியை விடுத்து மாதவியிடம் வாழத் துணிகிறான்.மாதவியிடம் நீங்காத காதல் மயக்கம் கொண்ட கோவலனின் நிலையினை  
மணமனை புக்கு மாதவி தன்னொடு
அணைவுறு வைகலின் அயர்ந்தனன் மயங்கி
விடுதல் அறியா விருப்பினன் ஆயினன்
வடுநீங்கு சிறப்பின்தன் மனையகம் மறந்தென் (அரங்கேற்று காதை அ:172-175)
என்னும் அடிகளின் வழி உணர்த்துகிறார் இளங்கோவடிகள்.காலம் காதலை மட்டுமின்றி எதனையும் மாற்றும் வல்லமை கொண்டது.விடுதல் அறியா விருப்பினனான கோவலன் ஊழின் வலிமையால் மாதவியை விலகிச் சென்றதனை
        யாழிசைமேல் வைத்துத்தன் ஊழ்வினைவந்து உருத்ததாதலின்
        உலவுற்ற திங்கள் முகத்தாளைக் கவவுக்கை ஞெகிழ்ந்தனனாய்
 (கானல் வரி  பா - 52 அ.3-4)
என்னும் அடிகளின் வழி உணர்த்துகிறார்.ஊழ் வினை என்பது எவரையும் எத்தகைய நிலையிலிருந்தும் மாற்றும் வல்லமை உடையது.இல்லாரை உள்ளோராகவும் உள்ளோரை இல்லாராகவும் மாற்றும் வல்லமை ஊழுக்கு மட்டுமே உண்டு.எனவே செய்யும் செயல்களை ஆய்ந்து, பிறருக்கு நன்மை உண்டாக்கும் செயல்களை மட்டுமே செய்தல் வேண்டும்.அவ்வாறு இயலாவிடில் எவ்வகையிலும் கேடு நிகழாத செயல்களைச் செய்ய வேண்டும்.ஏனெனில் எச்செயலுக்கும் உரிய பலன் கிடைத்தே தீரும் என்னும் அறத்தை
ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதூஉம் (பதிகம். அ.55)
என்னும் அடியின் வழி சிலப்பதிகாரம் உணர்த்துகிறது.
நிறைவாக
’எழுகென எழுந்த’ கண்ணகியின் கற்புத் திறமும் கருணை மறவனாக நின்ற கோவலனின் ஆண்மைத் திறமும் தலைக்கோல் பட்டம் பெற்றாலும் புத்த சமயம் தழுவி நின்றமாதவியின் உள்ளத் திறமும் பண்புடை வாழ்வில் வழுவாது நிற்கும் அறத்தின் செழுமையை எடுத்துரைக்கின்றன.
 கோவலன் கொலையுறுதலும் பாண்டியன் உயிர் துறத்தலும் கோப்பெருந்தேவி உடன் இறத்தலும் மதுரை தீக்கிரையாவதும் அறத்திலிருந்து வழுவியதால் விளையும் கேட்டினை உணர்த்தி நிற்கின்றன.
தொடக்கத்தில் இல்லோர் செம்மலாக வாழ்ந்தவன் இடைக்காலத்தில் ஊழ்வினையால் மாதவியின் பின் திரிந்து முடிவில் நல்வினையால் கண்ணகியுடன் சேர்ந்து வாழும் நிலைபெற்ற அறத்தினால் கோவலனின் புகழ் நின்றதனைக் காணமுடிகிறது.
கண்ணகி துன்புறும் வகையில் கோவலனுடன் சேர்ந்து வாழ்ந்தாலும்  ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் கற்றுத்தேர்ந்து தம் குலவழக்கத்துக்கு மாறாக கோவலனைத் தவிர பிற ஆண்மகன் மனத்தில் புகா அறத்தினால் மாதவியின் புகழ் நின்றதும் புலனாகின்றது.
எந்நிலையிலும் அறத்தில் வழுவாது நின்ற கண்ணகியின் கற்புத் திறமே காப்பியத்தின் பெருமைக்கு உரமாவதனால் அவளே காப்பியத்தலைவியாகி நீங்கா புகழுடன் நிலைபெற்றுள்ளதனையும் உணரமுடிகிறது. இதன்வழி அறவாழ்வு வாழும் சிறப்பினைக் கொண்டே தலைமையிடம் பெறும் நிலை அமைவதும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
மனிதன் தெய்வமாகும் திறம் அறச் செயல்களாலேயே நிகழ்வதனை கண்ணகியின் வாழ்வின் வழி இளங்கோவடிகள் உணர்த்தியுள்ளதனையும் நன்குணர முடிகிறது.
பாவம் புண்ணியம் என்னும் கணக்கினைக் கொண்டே வாழ்வமைகிறது என்பதே ஊழ்வினை.இதனைப் பல்வேறு அறவியல் கூறுகளின் வழி எடுத்துக்காட்டி சிலப்பதிகாரம் மனித சமூகத்திற்கு நல்வழி காட்டியுள்ளது எனத் தெளியமுடிகிறது.
********