தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

சனி, 25 மே, 2019

திருக்குறள் அதிகார வைப்புமுறையில் மானுட மேன்மை Thirukkural


திருக்குறள் அதிகார வைப்புமுறையில் மானுட மேன்மை

முனைவர் ம.ஏ. கிருட்டினகுமார், துணைப்பேராசிரியர், காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையம், புதுச்சேரி-605 008. உலாப்பேசி – 99406 84775

        எழுத்துக்களைக் கூட்டிச் சொல்லாக்கும் முயற்சியில் உலகில் பலமொழிகள்  தடுமாறிக்கொண்டிருந்த போது ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கல்லில் சொல் வடித்த பெருமை தமிழரையே சாரும். அத்துனைப் பழமையானதும் சிறப்புடையதும் தமிழ்மொழியே. அத்தகைய மொழிக்குப் புதல்வர்கள் என்னும் பெருமை தமிழர்க்கே உரித்து. பண்பாடு, நாகரிகம், ஒழுக்கம் என அனைத்தையும் உள்ளடக்கிய மானுடமேன்மை என்னும் சொல்லின் பொருள் இலக்கணமாகத் திகழ்ந்தவர்கள் தமிழர்கள் என்பதனைத் திருக்குறளின் வழி விளக்க விழைந்ததன் விளைவாகவே இக்கட்டுரை அமைகிறது.

திருக்குறளின் அதிகாரவைப்பு முறை

        அறிந்ததிலிருந்து அறியாதது என்னும் நிலையில் புரிந்துகொள்வதே இலக்கணமுறை. அவ்வாறு திருக்குறள் ஒவ்வொன்றும் எல்லா நிலைகளிலும் எளிதாக விளக்கும் வகையில் இயற்றப்பட்டுள்ளமையே தமிழரின் பெருமைக்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு. இதனை அதிகாரத்தின் பெயரிடும் முறையிலும் வைப்புமுறையின் வழியுமே தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது. கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம்பிள்ளை முதல் பேராசிரியர் சாலமன் பாப்பையா வரை பலரும் திருக்குறளின் அதிகார வைப்புமுறையை ஆய்ந்து தம் விருப்பத்திற்கேற்ப , விளக்கத்திற்கேற்ப மாற்றி அமைத்துள்ளனர். எனினும் பெரும்பாலான தமிழறிஞர்கள் வழக்கத்தில் நிற்கும் பழமையான முறையினையே ஏற்றுக்கொள்கின்றனர். மொழிபெயர்ப்புகளும் அவ்வாறே இடம்பெற்றுள்ளதனைக் காணமுடிகிறது. இவ்வதிகார வைப்புமுறையினை ஆய்ந்தாலே தமிழரின் பண்புநலன்களையும் அறிவுத்திறத்தையும் காண இயல்வதோடு மானுடமேன்மைக்கு வழிகாட்டும் திறத்தையும் உணர்ந்துகொள்ளமுடிகிறது.

தெய்வப்புலவர் திருவள்ளுவரும் கடவுள் வாழ்த்தும்

        ’திக்கற்றவர்க்குத் தெய்வமே துணை’ என்னும் பழமொழி மானுட வாழ்விற்குப் பற்றுக்கோட்டினை ஏற்படுத்தும், கடவுளின் துணைகொண்டு வாழ்வை முன்னெடுத்துச்செல்ல முதல் அதிகாரமான ‘கடவுள் வாழ்த்து’ - இன் வழி அறிவுறுத்துகிறார் தெய்வப்புலவர். ஒவ்வொன்றாகப் பூத்த ஐம்பூதங்களைக் கண்டு அறியாமையால் அஞ்சிய மனிதர்கள் அவற்றைத் தெய்வமாகக் கருதினர். பின்னர் அவற்றுடன் இயைந்து வாழ்ந்து, அவற்றைப் பயன்படுத்தி வளமாக வாழத் தொடங்கியதன் வழியும் மக்களின் வளர்ச்சி நிலையினை தெய்வப்புலவர் தெளிவுறுத்துகிறார் நற்பண்போடு வாழ்வோர்க்குத் தெய்வம் துணைநிற்கும் என்னும் கோட்பாட்டினை

வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல (திருக்குறள் -4)



என்னும் திருக்குறள் எழிலுற எடுத்தியம்புகிறது. இதன்வழி இறைவன் படைத்த உயிர்களுக்கு கேடு நிகழாதவாறு வாழ்வோர் இறைவனின் அன்பைப்பெற்று துன்பமின்றி வாழமுடியும் எனத் தெளிவுறுத்தியுள்ளதனைக் காணமுடிகிறது. முதல் அதிகாரத்தின் வழியே எல்லா உயிர்களின் மேன்மைக்கும் துணைநிற்கும் மானிடர்க்கே கடவுளின் அருளுண்டு என்பதனைப்புலப்படுத்தி அவ்வாறு வாழ வழிகாட்டியுள்ளதையும் காணமுடிகிறது.

வான்சிறப்பும் மானுடமேன்மையும்

        தனிமனித ஒழுக்கத்தின் மேன்மையே மானுடமேன்மைக்கு வழி என வாழ்வை நோக்குவோர்க்கு இரண்டாவது அதிகாரமான ‘வான் சிறப்பு’-இன் வழி தெய்வப்புலவர் விடையிறுப்பதனைக் காணமுடிகிறது. அறவாழ்விற்கு வளமான வாழ்வே அடிப்படையாகிறது. எனவே வளம் குன்றின் நலம் குன்றி அறநெறியினின்று பிறழ்ந்து மனிதர்கள் பிற உயிர்களை ஏய்த்து வாழும் நிலை உண்டாகிவிடும் என்பதனைத் தெளிவுறுத்துகிறார். இவ்வற வாழ்விற்கு மாரியன்றி வேறு துணை இல்லை என்பதனை

        கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை (திருக்குறள் - 15)



என்னும் திருக்குறள் தெளிவுறுத்துகிறது. மானுடமேன்மை சிறப்பதும் குன்றுவதும் மழைப்பொழிவாலேயே நிகழ்கிறது. மேலும் அதனால் விளையும் நிலச்செழிப்பாலுமே அமையும் என்பதனைத் தெளிவுறுத்தியுள்ளதனைக் காணமுடிகிறது. மானுடமேன்மையில் சிறந்துள்ள நாடு என ஏதேனும் ஒன்றைக் குறிப்பிட இயலுமாயின் அது அந்நாட்டின் வளத்தினைக் கொண்டே அளவிட்டிருப்பதனைக் காணவியலும் என்பதனை இதன்வழி உணர்ந்துகொள்ளமுடிகிறது.

இல்லறமே நல்லறம்

        பெரியோரைப் போற்றுவதும் அறவழி வாழ்தலின் முக்கியத்துவத்தையும் அடுத்தடுத்துச் சுட்டிக்காட்டிய திருவள்ளுவர் இல்லறமே தெய்வ நிலைக்கு உயர்த்திச் செல்லும் என்பதனை ‘இல் வாழ்க்கை என்னும் ஐந்தாவது இயலில் எடுத்துரைக்கிறார்.

        வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப்படும் (திருக்குறள் - 50)



என்னும் திருக்குறள் ஏழை எளியவர்களுக்கு மட்டுமின்றி பிற உயிர்களுக்கு நன்மை செய்து வாழும் மானுட நேயம் தெய்வ நிலைக்கு உயர்த்தும் என்பதனைத் தெளிவுறுத்துகிறது.

மானுடமேன்மையில் பெண்ணும் ஆணும்

பெண்ணையே முதன்மைப்படுத்தும் தமிழர் வாழ்க்கை முறையின் பெருமையினை இல்லறத்தை அடுத்து ‘வாழ்க்கைத் துணை நலம்’ என்னும் அதிகாரத்தின் வழி புலப்படுத்துகிறார். தன் படைக்கும் திறனை பெண்ணுக்கு அளித்து அனைத்து உயிர்களையும் போற்றும் மானுடமேன்மைக்கு உருவாகப் பெண்ணைக்காட்டியுள்ளதனைக் காணமுடிகிறது. 

பெற்றான் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்

புத்தேளிர் வாழும் உலகு (திருக்குறள் - 58)



என்னும் திருக்குறள் பெண்ணானவள் பிற உயிர்களுக்கு நன்மை செய்து வாழ்தலைப் போலவே தன்னைப் பெற்றவனாகிய கணவனையும் பெருஞ்சிறப்புடையவனாக வாழச்செய்தல் பெருமைக்குரியது எனத் தெளிவுறுத்துகிறது. இவ்வாறு ஒவ்வொரு பெண்ணும் தன்னைச்சுற்றியுள்ள ஆண்களை நல்வழிப்படுத்துவதன் வழி மானுடமேன்மை சிறக்கும் எனத்    தம் ஆறாவது அதிகாரமான ‘வாழ்க்கைத் துணைநலத்தின் வழி தெளிவுறுத்துகிறார் தெய்வப்புலவர்.  

கடவுள் வாழ்த்தும் ஊழும்

        அறத்துப்பால் கடவுளில் தொடங்கி ஊழில் முடிகிறது. மானுடமேன்மைக்கு வழிகாட்டாத எவ்வகை வாழ்வும் சிறக்காது என்பதனை உணர்த்தும் வகையிலேயே முப்பத்தேழு அதிகாரங்களையும் படைத்துள்ளார் தெய்வப்புலவர், அந்நிலையிலிருந்து மாறுபட்டு அறச்செயலில் சிறந்திருப்பினும் சில வீடுகளும் நாடுகளும் ஏழ்மையில் இருப்பதனை ‘ஊழ்’ என்னும் அதிகாரத்தின் வழி நிறைவுசெய்கிறார்.

        வகுத்தான் வகுத்த வகை அல்லால் கோடி

தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது (திருக்குறள் -377)



என்னும் திருக்குறள் இறையருளாலேயே வாழ்வமைகிறது என்பதனைத் தெளிவுறுத்தி மானுடமேன்மைக்குத் துணைசெய்யாத எவர்வாழ்வும் சிறக்காது என அறிவுறுத்தி வழிகாட்டியுள்ளதனைக் காணமுடிகிறது.

இறைமாட்சியும் கயமையும்

        அற வாழ்விற்கும் இன்ப வாழ்விற்கும் அடிப்படையாக அமைவது பொருளுடைய வாழ்வேயாகும் என்பதனாலேயே பொருளதிகாரத்தை இடைவைத்து மற்ற இரண்டையும் முன் பின்னாக வைத்துள்ளதனைக் காணமுடிகிறது. மேலும் பொருளுக்கே நூற்றி முப்பத்துமூன்று அதிகாரங்களில் எழுபது அதிகாரங்களை இடம்பெற்றிருக்கச்செய்வதன் வழி அதன் முக்கியத்துவத்தினை உணர்த்தியுள்ளார் தெய்வப்புலவர். மானுடமேன்மைக்குப் பொருள் துணைசெய்யும் அருமையினை இதன்வழி உணர்ந்துகொள்ளமுடிகிறது. உலகையாளும் கடவுளான இறைவனை அறத்துப்பாலில் எடுத்துரைத்த தெய்வப்புலவர் பொருட்பாலில் மண்ணாளும் இறைவனாகிய மன்னனை ’இறைமாட்சி’ என்னும் அதிகாரத்தின் வழி முன்னிலைப்படுத்துகிறார். இறைவனாகிய மன்னனின் ஆளுமையைக் கொண்டே மக்களின் வாழ்க்கை நிலையும் அறவாழ்வும் சிறக்கும் என்பதனை உணர்த்தியுள்ளார். அவ்வாறு பொருளைக் கொண்டு பிறருக்குக் கேடு நிகழ்த்துவராயின் அது ‘கயமை’யிலேயே  முடியும் என்பதனாலேயே நூற்றெட்டாவது அதிகாரமாக கயமையைப் படைத்துள்ளதனைக் காணமுடிகிறது.

அரசனே இறைவன்

        அரசன் இறையென்று போற்றப்படுவதற்குக் காரணம் அவன் மக்களைப் போற்றிப் பாதுகாப்பதனாலேயே என்பதனை

        முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு

இறையென்று வைக்கப் படும் (திருக்குறள் -388)



என்னும் திருக்குறளின் வழி தெளிவுறுத்துகிறார் தெய்வப்புலவர். பகையினின்று மக்களைக்காத்து மானுடமேன்மைக்கு வழிகாட்டும் அரசன் கல்வி அறிவும் கேள்வி அறிவும் உடையவனாகி அறிவுடைமையுடன் திகழவேண்டும் என்பதனாலேயே அடுத்தடுத்து அதிகாரத்தை அமைத்துள்ளதனைக் காணமுடிகிறது. இவ்வறிவின்றி குடிகளைக் காத்தற்கும் மானுடமேன்மைக்கும் வழிகாட்டுதல் இயலாது என்பதனைத் தெளிவுறுத்துகிறார் தெய்வப்புலவர்.

வாழ்வின் தேர்ச்சிக்கு கல்வி

        மானுடமேன்மைக்கு வழிகாட்டுவதாகவே கல்வி அமைதல் வேண்டும் என்பதனாலேயே அதனை ஒரு பணியாக மேற்கொள்ளாது அதனை ஒரு தொண்டாக மேற்கொள்வதனைக் காணமுடிகிறது. நாற்பது விழுக்காடு மதிப்பெண் பெற்றால் தான் தேர்வுகளிலே வெற்றிபெறமுடியும் என்பது போலவே ‘கல்வி’ கற்றாலே வாழ்வில் தேர்ச்சி பெறமுடியும் என்பதை உணர்த்தும் வகையில் நாற்பதாவது அதிகாரமாகக் கல்வி அதிகாரத்தை அமைத்துள்ளதாகக் கொள்ளமுடிகிறது.

        தாம் இன்புறுவது உலகுஇன் புறக்கண்டு

காமுறுவர் கற்றறிந் தார் (திருக்குறள் - 399)



என்னும் திருக்குறள் மானுடமேன்மையினைப் போற்றி வாழ்வதே கல்வியின் பயன் எனத் தெளிவுறுத்தியுள்ளதனைக் காணமுடிகிறது. தான் மட்டும் இன்புற பிறர் நலிவடைதல் உண்மையான கல்வியாகாது எனவும் மானுடமேன்மைக்காக அமையும் கல்வியே சிறப்புடைய கல்வி என அறிவுறுத்தியுள்ளதனையும் அறிந்துகொள்ளமுடிகிறது. பொருளுக்காக மட்டுமே வழிகாட்டும் கல்வியாக இல்லாமல் மானுட நேயத்துடன் வாழ வழிகாட்டும் கல்வியே சிறந்தது என்பதனையும் தெளிவுறுத்தியுள்ளதனையும்  காணமுடிகிறது. பல மனிதர் நோக சில மனிதர் வாழும் நிலை அவலத்திற்கு உரியது என்பதனை உணர்த்துவதாகவும் இவ்வதிகார வைப்பு முறையினை உணர்ந்து கொள்ளமுடிகிறது.

சுற்றம் தழுவும் வாழ்வு

        தன்னைக் காத்துக் கொள்வதைக் காட்டிலும் தம்மைத் தழுவிவாழும் குடிகளைக் காக்கும் அரசனைப் போலவே குடிகளும் தங்கள் சுற்றத்தைத் தழுவி வாழவேண்டும் என்பதனை அறிவுறுத்தும் வகையிலேயே ‘சுற்றம் தழால்’ என்னும் அதிகாரத்தை பொருட்பாலில் ஐம்பத்துமூன்றாவது அதிகாரமாகப் படைத்துள்ளார் தெய்வப்புலவர். வாழ்வில் அரைப்பங்கு மகிழ்ச்சி சுற்றத்தாலேயே அமைவதனையும் இங்கு எண்ணி மகிழலாம்.

        சுற்றத்தால் சுற்றப்படஒழுகல் செல்வம்தான்

பெற்றத்தால் பெற்ற பயன் (திருக்குறள் - 524)



என்னும் திருக்குறள் செல்வத்தின் பயன் சுற்றத்தைப் போற்றி வாழ்தலே என அறிவுறுத்துகிறது. ஒருவன் நல்ல நிலைக்குச் சென்ற பிறகு தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என எண்ணாது தம்மைச் சுற்றி இருப்போருக்கும் வழிகாட்டி மானுடமேன்மைக்கு வழி காட்டுவதே சிறப்புடையது எனத் தெளிவுறுத்துகிறார் தெய்வப்புலவர். அத்தகைய வாழ்வே பொருளுடைய வாழ்வாகி வாழ்வின் அரைப்பங்கு மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்னும் நிலையிலேயே ஐம்பத்துமூன்றாவது அதிகாரமாக இடம்பெற்றிருப்பதனையும் எண்ணிப்பார்க்கமுடிகிறது.

மானுட மேன்மைக்கு வழிகாட்டும் நட்பு

        சுற்றம் சிறக்க அமைந்தவர் வாழ்வால் வாழ்வின் ஐம்பது விழுக்காடு மகிழ்ச்சியுடன் வாழமுடியும் எனில் நட்பைச் சிறப்பாகப் பெற்றவர்கள் எண்பது விழுக்காடு மகிழ்ச்சியுடன் வாழமுடியும் என்பதனைத் தெளிவுறுத்துவதாக் கொள்ளமுடிகிறது. தெய்வப்புலவர். நல்ல சுற்றம் அமைந்தவர்க்கும் நட்பு சிறப்பாக அமையாவிடில் வாழ்வில் தீய பழக்கங்களுக்கு உடன்படுவதும் நல்ல நட்பால் தீயபழக்கங்கள் ஒழிந்து விடுவதனையும் காணமுடிகிறது.

        உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு  (திருக்குறள் -388)



என்னும் திருக்குறள் மானுடமேன்மைக்குத் துணை நிற்கும் நட்பின் அருமையினை எடுத்துரைக்கிறது. நட்பிற்கு பெரிதும் முக்கியத்துவம் கொடுத்த திருவள்ளுவர் முறையே நட்பு, நட்பாராய்தல், பழைமை, தீ நட்பு, கூடா நட்பு என ஐந்து அதிகாரங்களைப் படைத்துள்ளதனைக் காணமுடிகிறது. எனவே சுற்றத்தால் முடியாத மானுடமேன்மை நட்பால் சிறக்கும் என்பதனையும் இங்குத் தெளிவுறுத்தியுள்ளதனையும் காணமுடிகிறது.

தகையணங்கு உறுத்தலும் ஊடல் உவகையும்

        காதலிக்கத் தொடங்கும் போது வாழ்க்கை அழகாகிறது என்பதனாலேயே காமத்துப்பாலைப் படைத்துள்ளார் தெய்வப்புலவர். காதலினால்தான் நன்கு வாழவேண்டும் என்னும் எண்ணமும் மற்றவர்களை வாழவைக்கவேண்டும் என்னும் எண்ணமும் உறுதிப்படும். இயற்கையின் படைப்பில் ஒருவர் மற்றவரைப் பொருளால் மட்டுமின்றி அன்புகாட்டும் பண்பாலும் மனமகிழ்வோடு வாழவைக்க இயலும் என்பதனை வலியுறுத்துவதாகவே மூன்றாவது பாலான காமத்துப்பாலை நோக்கமுடிகிறது. கண்களால் தொடங்கும் காதலானது உவகையில் முடிவதே மானுடமேன்மைக்கு வழிவகுக்கும் என்னும் நிலையிலேயே அதிகாரவைப்பு அமைந்துள்ளதனைக் காணமுடிகிறது.

        காதல் உயர்வானது ; அதனால் விளையும் அன்பு அளவுகடந்த செயல்பாட்டினை உணர்த்தும் என்பதனை

        நெஞ்சத்தார் காதல் அவராக வெய்துண்டால்

அஞ்சுதும் வேபாக்கு அறிந்து (திருக்குறள் -388)



என்னும் திருக்குறள் உணர்த்திநிற்கின்றது. காதலானது சூடான உணவையும் தவிர்க்கிறது எனும் போது அத்தகைய காதல் எவ்வகை அன்பைக் காட்டிலும் உயர்ந்துநிற்பதனை உணர்ந்துகொள்ளமுடிகிறது.. எனினும் பொய்யான காதலால் எத்தனையோ மக்களுடைய வாழ்வு சீரழிந்து ஏமாற்றத்துக்கு உள்ளான நிலையினையும் காணமுடிகிறது. பெண்களுடைய அன்பின் வலிமையினை உணர்ந்துகொள்ளாது அவர்களின் அன்பையே ஆயுதமாகக்கொண்டு ஏமாற்றும் சூழலாலேயே நாட்டில் பல பெண்கள் நாள்தோறும் சீரழிந்துவருவதனை நடைமுறையில் காணமுடிகிறது. இவ்வாறு முறையின்றி வாழும் வாழ்க்கையை விடுத்து அனைத்து உயிர்களிடமும் காதல் கொண்டு மானுடமேன்மைக்கு வழிவகுக்க வேண்டும் என அறிவுறுத்துகிறார்.

நிறைவாக

        திருக்குறளின் ஒவ்வொரு அதிகாரத்தையும் வைப்புமுறையின்  வழி அந்நூலின் அருமையினை விளக்கமுடியும் எனினும் கட்டுரையின் விரிவுகருதி ஒருசில அதிகாரங்களின் வழியே திருக்குறளின் அதிகார வைப்பு முறையில் மானுடமேன்மைக்குரிய சிறப்பு அமைந்துள்ளது எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

        மானுடமேன்மைக்கு அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று நிலைகளிலும் திருக்குறள் வழிகாட்டியுள்ளதனைக் காணமுடிகிறது.

        அறத்துப்பால் கடவுள் வாழ்த்தில் தொடங்கி ஊழில் முடிவதன் வழி கடவுளில் தொடங்கி கடவுளில் முடியும் வகையில் பல்வேறு அதிகாரங்கள் முறையாக வரிசைப்படுத்தப்பட்டிருப்பது எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. இதன்வழி எல்லா உயிர்களையும் புரக்கும் கடவுளின் அருளைப் பெறவேண்டுமாயின் எல்லா உயிர்களையும் அரவணைத்துப் போற்றிக்காக்க வேண்டும் என அறிவுறுத்தி மானுடமேன்மைக்கு வழிகாட்டியுள்ளதனைக் காணமுடிகிறது.

        பொருட்பால் இறைமாட்சியில் தொடங்கி கயமையில் முடிகிறது. பொருட்பாலானது பொருளினை முறையாகச் செலவிடுவதன் வழியும் முறையாகச் செலவிடாத போது கயமையை வெளிப்படுத்துவதனைப் புலப்படுத்துகிறது. முன்னதைப் பெருக்கி பின்னதைச் சுருக்கும் இறைமாட்சியே மானுடமேன்மைக்கு வழிவகுக்கும் எனத் திருக்குறள் தெளிவுறுத்துகிறது.

        காமத்துப்பாலானது காதலின் அருமையினாலேயே உலக இயக்கம் நடைபெறுவதனையும் அக்காதலின் அருமையினை உணர்ந்து செயல்படுவதானாலேயே மானுடமேன்மை சிறக்கிறது என்பதனையும் இருபத்தைந்து அதிகாரங்களின் வழி தெய்வப்புலவர் உணர்த்தியுள்ளதனை எடுத்துரைக்கிறது.

        திருக்குறளின் அதிகாரவைப்புமுறையானது மானுடமேன்மைக்கான முறையான படிக்கட்டுகளாக அமைந்துள்ளதனையும் முறையான வாழ்விற்கும் வழிகாட்டுவனவாகவும் அமைத்துள்ள பெருமை தெய்வப்புலவர் திருவள்ளுவர்க்கு மட்டுமே உரியது எனத் தெளியமுடிகிறது.



*******







         


மகாகவியின் பெண்ணியக் கனவும் நினைவும் Mahakavi Bharathiyars feminism



முனைவர் ம.ஏ. கிருட்டினகுமார், துணைப்பேராசிரியர், புதுவை அரசு காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்புமையம், புதுச்சேரி – 605 008



உலகம் முழுதும் பெண்ணியத்துக்கான குரல் ஓங்கி வரும் நிலை இன்று பரவலாக்கப்பட்டு வருவதனைக் காணமுடிகிறது. பெண்ணியம் என்னும் சொல்லே, பாவமாகக் கருதப்பட்ட காலத்திலிருந்து மாறுபட்டு இன்று தலைநிமிர்ந்து பேசும் நிலைக்கு வளர்ந்துள்ளதனைக் காணமுடிகிறது. இதனைப்  பெண்ணிய வளர்ச்சிப்போக்காகவே நோக்கமுடிகிறது. பெண் விடுதலையினை விரிவாகப் பேச  சொற்களையும் பொருள்களையும் மிக அழுத்தமாக எடுத்துக் கூறியவர் மகாகவி பாரதியார். ”வருமுன் காப்பவன் தான் அறிவாளிஎன்னும் தமிழ்மூதாட்டியின் சொற்களுக்கு உரமூட்டியவர் ; வாழ்ந்து காட்டியவர் ; வழியும் காட்டியவர் மகாகவி பாரதியார். அவருடைய பெண் விடுதலைக்கான சொற்கள் இன்று எங்ஙனம் வளர்ச்சியுற்றுள்ளது என்பதனைக் காண விழைந்ததன் விளைவாகவே இக்கட்டுரை அமைகிறது.

பெரியசாமியான மகாகவி

மகாகவி பாரதியைச் சின்னசாமி பெற்றெடுத்த பெரியசாமி என்றும் இலக்குமி பெற்றெடுத்த சரஸ்வதி என்றும் முண்டாசு கட்டிய பட்டாசு என்றும் குறிப்பிடுவர் சான்றோர். இவை மூன்றுமே பெண்ணுக்கு முக்கியத்துவம் கொடுத்தமைக்காக அடுக்கப்பட்ட அடைமொழிகளாகவே கருதமுடிகிறது. தன் குழந்தைகளை மட்டுமே பார்க்காது உலகத்தில் உள்ள அனைத்துக் குழந்தைகளுக்காகவும் போராடியதால் சாமியில் பெரிய சாமி எனவும், பெண் கல்விக்காகக் குரல்கொடுத்ததால் சரஸ்வதி என்றும் சமூகத்தில் பெண்ணடிமைத்தனம், குழந்தைத் திருமணம், உடன்கட்டை ஏறுதல் எனப் பல கொடுமைகளை இழைத்தோர்க்கு  பாட்டால் வேட்டு வைத்ததால் பட்டாசு எனக் காரணப்பெயராகவும் இவ்வடைகளை நோக்கமுடிகிறது. 

வையம் தழைக்கபெண்ணை மதிக்க

                பெண் நிலை உயர வேண்டும் என்னும் கருத்தில்லார் ஒருவருமிலர்.  அவ்வாறு நினைத்து தம்மை ஈடுபடுத்திக்கொண்டவர் ஒரு சிலர். அச்சிலருள் தம் குடும்பத்தில் பெண்ணிய உரிமையை நிலைநாட்டியவர் மிகமிகச் சிலர். அத்தகையோரில் மக்கள் நெஞ்சில் நிலைத்து நிற்கும் பேறுபெற்றவர் மகாகவியே. ஏனெனில் வீடும் நாடும் சீராக முன்னேற வேண்டுமானால் ஆண் பெண் இருவருக்கும் நிகரான வாய்ப்புக் கொடுக்கப்படவேண்டும்.  பெண்கள் இரண்டாம் தர குடிமக்கள் என எண்ணும் நிலையினைக் களைய வேண்டும். இதற்கு அடிப்படையாக அமையும் பெண் சிசுக்கொலையினை முற்றிலும் ஒழிக்கவேண்டும். இதற்கு ஒரே வழி

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்

அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம்.



என்னும் அடிகளில் மகாகவி உணர்த்திவிடுகிறார். மகாகவியின் இக்கனவு இன்று நினைவானதாலேயே அனைத்துத் துறைகளிலும் பெண்கள் முன் நின்று வழிநடத்துவதனைக் காணமுடிகிறது.

பதுமைகளல்ல புதுமைகள்

                பெண்கள் மெல்லியலார் என்பதனாலும் அவர்களின் குரல் ஈர்ப்பு கொண்டதென்பதனாலும் எப்பொருளை அறிமுகம் செய்வதனாலும் அதற்கான ஊடகக் கருவிகளாகப் பெண்களையே பயன்படுத்தப்படுவதனைக் காணமுடிகிறது.  ஆண்கள் ஓட்டும் வாகனத்திற்கும் பெண்களே பதாகைகளாகப் பயன்படுத்தப்படுவது இதற்குச் சிறந்ததொரு காட்டு. பெண்களை இவ்வாறு இழிவுபடுத்தும் போக்கினைக் கண்டு பெண்கள் உமிழ்ந்து தள்ளவேண்டும் எனப் புதுமைப்பெண் கூறுவதனை

                அமிழ்ந்து பேரிருளாம் அறியாமையில் ; அவலமெய்திக் கலையின்றி வாழ்வதை

உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணறமாகும் ; உதய கன்னிகள் உரைப்பதைக் கேட்டீரோ



என்னும் அடிகளில் தெளிவுபடுத்துகிறார் மகாகவி.  பெண் நினைத்தால் எதையும் வெல்லமுடியும் எனத் தம் நிலையினை உணர்ந்துகொண்டபோது தம் இனத்தின் பெருமையைக் காத்தல் எளிதெனவும் தெளிந்துகொண்டதனை உணர்த்தியுள்ளார். இதற்கு ஆண் இனம் துணை செய்யத்தேவையில்லை. தடைக்கல்லாக இல்லாமல் இருந்தாலே நன்று. பெண்ணின் வலிமையினை

சக்தி வெள்ளத்திலே ஞாயிறு ஓர் குமிழியாம் ; சக்தி பொய்கையிலே ஞாயிறு ஒரு மலர்

சக்தி அனந்தம் எல்லையற்றது ; முடிவற்றது

எனச் சக்தியின் பெருமையை உணர்த்தியுள்ளார் மகாகவி. சக்தியைப் பெண்ணாகவும் ஞாயிற்றினை ஆணாகவும் எண்ணில் பெண்ணின் பெருமையை எளிதில் உணர்ந்துகொள்ள இயலும். அறிவியல் கருத்தின்படி பெண் உயிரே முதலில் படைக்கப்பட்டதென்பதும் ; பெண் இனம்  மட்டுமே உள்ள உயிர்கள் இன்றும் நிலைபெற்றிருப்பதனையும் அறிவதன்வழி இவ்வுண்மையின் பெருமையினை எளிதில் உணர்ந்துகொள்ள இயலும். எனவே இனியேனும் பெண்கள் சக்தியற்றவர்கள்  எனக்கூறும் வழக்கத்தை மாற்றிக்கொள்ளவேண்டும் என மிக அழகாகப் பதிவு செய்துள்ளார் மகாகவி.

பழியைப் போக்குவோம்

குணம் எனின் அது ஆண் இனத்துக்கே உரியது என்றும் குற்றம் எனில் அது பெண் இனத்துக்கே உரியது என்றும் எண்ணும் காலத்தை மாற்ற விழைந்தார் மகாகவி. எனவேகற்பு நிலை எனச் சொல்ல வந்தால்  இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம் என்றார். அந்நிலையிலும் பெண்ணே குற்றங்களுக்குக் காரணம் எனக் கூறியதைக் கேட்ட மகாகவி தம் கட்டுரையில் அடப் பரம மூடர்களே ஆண்பிள்ளைகள் தவறினால் ஸ்திரீகள் பதிவிரதைகளாக எப்படி இருக்கமுடியும்என மிகவும் எளிதாக அனைவருக்கும் விளங்கும் வண்ணம் எடுத்துரைத்துள்ளார். பெண்ணுக்கு மட்டுமே அறிவுரை கூறித் திருத்த எண்ணும் சமூகத்தில் ஆணுக்கு அறிவுரை கூறும் அழகினை இங்கு எண்ணி மகிழமுடிகிறது. இன்று ஒவ்வொரு வீட்டிலும் ஆண் குழந்தையினை பெருமிதம் கொண்டவர்களாகச் செல்லம் கொடுத்து வளர்ப்பதனாலேயே பெண் குழந்தைகளை இழிவானவர்களாகக் கருதும் போக்கு நிலவி வருவதனைக் காணமுடிகிறது. ஆண் குழந்தைகளை மிடுக்குடனும் பெண் குழந்தையை அடக்கத்துடனும் வளர்க்கவேண்டும் என்னும் எண்ணமே இருபாலருக்குமான பிற்போக்குத்தனத்தை வளர்த்துவிடுவதனைக் காணமுடிகிறது. அவ்வாறின்றி எக்குழந்தையாயினும் அன்பும் பண்பும் நிறைந்தவர்களாக வளர்க்கவேண்டிய பொறுப்பு குறித்து இன்று அனைவரும் விழிப்புணர்வு பெற்றுள்ளது போற்றத்தக்கதாகவே அமைகிறது. இத்தகைய நிலைக்கு முன்நின்று வழிகாட்டிய பெருமை மகாகவியையே சாரும்.

தன்னிலிருந்து தொடங்குக

                மாற்றம் வேண்டுமாயின் அதை உன்னிலிருந்து தொடங்குஎன்னும் மகாத்மாகாந்தியின் சொற்களை வாழ்க்கைப்பாடமாக்கிக்கொண்டவர் மகாகவி.  ஒரு முறை தனது மகள் தங்கம்மாவை மலைக்கோயிலுக்கு அழைக்க ;அவர் தனியாக வரும் இடர் கருதி மறுக்க ; கோழைத்தனம் எனக்கருதிய மகாகவி தன் அன்பு மகளை அடித்துவிடுகிறார்,  ஊருக்கு உபதேசம் என்றில்லாமல் தன் வீட்டிலேயே தன் எண்ணத்திற்கு செயல்வடிவம் கொடுத்தவர். காதலைப்பற்றிப் பெருமையாகப் பேசுவோர் கூட தங்கள் வீட்டில் காதல் எனின் மறுத்துவிடுவதும் உண்டு ; மடியச்செய்வதும் உண்டு. ஆனால் மகாகவி தன் மகளிடம் காதலுக்குத் தடையில்லை எனக்கூறியது தம் சொல்லுக்குத் தாமே செயல்வடிவம் கொடுத்த பெருமிதம் எனத்தெளியமுடிகிறது.  பின்னாளில் காதலனைத் தேர்வுசெய்தமைக்கு வருந்தாத அளவிற்குப் பெண்கள், தேர்வுசெய்யும் பக்குவமுடையவர்களாக ; திறமுடையவர்களாக தம் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தினையும் இதன்வழி உணர்த்தியுள்ளார். தெளிவின்றி கயவர்களிடம் சிக்குண்டு தம் வாழ்க்கையைத் தாமே அழித்துக்கொள்ளும் அறியாமைச் செயலினை இக்கூற்றுடன் ஒப்பு நோக்கலாகாது.

பெண்ணுக்காக நிற்பதே பெருமை

                பெண்ணிலிருந்து பிறந்த ஆண் அப்பெண்ணுக்கு எதிராகவே செயல்படுவது அறியாமையின் உச்சம் ; இழிநிலையின் எச்சம் ; கேடுகளின் உச்சம் என்பதனைத் தெளிவுபடுத்துகிறார் மகாகவி. எனவே தனக்காகத் தன் குடும்பத்தை ; இனத்தை ; சுற்றத்தை ; இல்லத்தை விட்டுவரும் பெண்ணைக் காக்கவேண்டிய கடமையினை ஆண்கள் நன்குணரவேண்டும் என்கிறார். “விவாகம் செய்து கொண்ட புருஷனுக்கு ஸ்திரி அடிமையில்லை; உயிர்த்துணை; வாழ்க்கைக்கு ஊன்றுகோல்; ஜீவனிலே ஒரு பகுதி; சிவனும் பார்வதியும் போலே; விஷ்ணுவும் இலட்சுமியும் போல எனக்கூறி பெண்களின் பெருமிதத்தை உணர்த்தியுள்ளார்.

                மனையாளைத்தவிர எப்பெண்ணையும் தாய், மகள் , தங்கை, தமக்கை, தோழி என்னும் நிலையிலேயே நோக்கவேண்டும். இவ்வாறு தன் வீட்டுப்பெண் என நினைத்தாலே தந்தையாக, மகனாக, சகோதரனாக, தோழனாக நின்று பெண் இனத்தைக் காத்துப் பெருமிதத்துடன் வாழ இயலும். அவ்வாறு வாழும் நிலை ஒவ்வொரு ஆணுக்கும் உண்டாக வேண்டும் ; உண்டாக்க வேண்டும். இதனையே ஆறிலும் சாவு நூறிலும் சாவு தர்மத்திற்காக மடிகின்றவர்களும் மடியத்தான் செய்கிறார்கள். ஸாமான்ய ஜனங்களும் மடியத்தான் செய்கிறார்கள். ஆதலினால் ஸகோதரிகளே, பெண் விடுதலைக்காக இந்த ஷணத்திலேயே தர்மயுத்தம் தொடங்குங்கள். நாம் வெற்றிபெறுவோம். நமக்கு மகாசக்தி துணை செய்வாள் என மிக அழகாகத் தம் கட்டுரையில் பதிவுசெய்துள்ளார்.  மேலும் பெண்களே பெண்களை அடிமைகொள்ளும் நிலையினையும் மாற்ற வேண்டும்.பெண்கள் அறிவை வளர்த்தால் வையம் பேதைமை அற்றிடும் காணீர்என்னும் மந்திரத்தொடர் இன்று மெய்யாகி வையத்தில் பேதைமையகற்றி இருப்பதனைக் காணமுடிகிறது. எனவே மாமியாரை அம்மாவாகவும் மருமகளை மகளாகவும் கருதி அழைக்கும் போக்கு வளர்ந்து வருவதனைக் காணமுடிகிறது. பணியிடங்களிலும் அவ்வாறே ஒரே பணி ; ஒரே ஊதியம் என்னும் நிலைக்கு மாறியுள்ளதனையும் காணமுடிகிறது. இதன்வழி மகாகவி கண்ட கனவு நினைவாகியுள்ளதனை உணர்ந்துகொள்ளமுடிகிறது.

சித்தர்களும் பித்தர்களும்

ஆண் பெண் என்னும் வேறுபாடு மட்டுமின்றி உயர்திணை அஃறிணை  என்னும் திணை பாகுபாடுமின்றியும் உயிர்களை ஒன்றாக நோக்கியவர்கள் சித்தர்கள். தம் இனத்தில் தம் உடன் பிறந்தோரையே ஏற்றத்தாழ்வுடன் நோக்குவோர் பித்தர்கள். அறிவு கொண்ட உயிர்களை அடிமையாக்க முயல்பவர் பித்தராம் என்கிறார் மகாகவி. எந்தப் பெண்ணிலிருந்து தோன்றினானோ அதே பெண் இனத்தை அடிமையாக்க நினைக்கும் மூடர்கள் மூடத்தனத்தின் முழு உரு என்பதனை இக்கூற்றின் வழித்தெளியமுடிகிறது.

யாருக்குக் கற்பிப்பது

                எல்லா உயிர்களும் பெண்ணிலிருந்தே பிறக்கிறது. இதனை நன்குணர்ந்த ஆறறிவு படைத்த மக்கள் மட்டும் பெண் இனத்தைத் தாழ்த்தி நடத்துவது அவலத்திலும் அவலம். எனவே சிறுவயது முதலே பெண்ணைப் பெருமைப்படுத்தும் வகையில் நடத்துதல்  வேண்டும். குழந்தைகளின் வளர்ச்சிக்கும் வலிமைக்கும் அடிப்படையாக அமைவது தாயின் பாலே.  எனவேவலிமை சேர்ப்பது தாய் முலைப் பாலடாஎனக் குழந்தை பருவத்திலேயே அடிப்படையினையை உணர்த்தி விடுகிறார்.  ஆண்களால் மட்டுமே குடும்பம் பொருளாதார நிலையில் உயர்வதால் அவர்களே உயர்வானவர்கள் எனக் கருதப்படுகிறது. ஆண்களுக்குக் கொடுக்கப்படும் அதே வாய்ப்பு பெண்களுக்குக் கொடுக்கப்படுமானால் ஆண்களை விஞ்சி பெருமை சேர்ப்பர் என்பதனை இளைஞர்களுக்கு உணர்த்தும் வகையில் உயிரினும் இந்தப் பெண்மை இனிதடாஎன்கிறார். ஓய்வில்லாது இல்லறத்தைக் காக்கும் பெண்ணின் உழைப்பினைப் போற்றாது இல்லத்தின் பெருமைக்குத் தான் மட்டுமே காரணம் என என்னும் ஆண்களின் எண்ணத்தை மாற்றும் வகையில்மானம் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள் என்கிறார். பெண் பெருமையாகச் சொல்லாவிடில் ஆணுக்குப் பெருமையில்லை என்பதனை உணர்த்தியுள்ளார். மருமகளை மகளாக நோக்காது அடிமையாக எண்ணும் மாமியார்களிடமிருந்து காக்க வேண்டிய பொறுப்பு கணவனுக்கும் மாமனாருக்கும் இருப்பதனை உணர்த்துகிறார். மருவி வரக்கூடிய மகளே மருமகள் என்பதனை உணர்ந்து போற்றிக்காக்க வேண்டியதன் அவசியத்தினை உணர்த்துகிறார். அவ்வாறு மருமகளை மகளாக அரவணைத்து வாழ்ந்தால் பின் முதுமைக்காலத்தில் மகள் போல் அவளே தாங்குவாள். அத்தகைய குடும்பமே செழிக்கும் என்பதனைத்துன்பம் தீர்வது பெண்மையினாலடாஎன்னும்  கூற்றின் வழித் தெளிவுபடுத்துகிறார்.

திறம்பாத பெண்கள்

                நிமிர்ந்த நன்னடை ; நேர் கொண்ட பார்வையும் ; நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும் ; திமிர்ந்த ஞானச்செருக்கும் இருப்பதால்; செம்மை மாதர் திறம்புவதில்லையாம் என்னும் கூற்று இன்று மெய்ப்பட்டிருக்கிறது. காவல் துறை முதல் விமானப்படை வரை அஞ்சக்கூடிய துறைகள் அனைத்தும் இன்று பெண்களால் ஆளப்பட்டு வருகின்றன. டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் அன்று தனித்தேயாயினும் துணிந்து கற்றதால் இன்று மருத்துவத்துறையில் பெண்கள் பல சாதனைகளைச் செய்து வருவதனைக் காணமுடிகிறது.  பிறந்த பின் கள்ளிப்பாலும் நெல்லும் கொடுத்து  பச்சிளங்குழந்தைகளைக் கொன்ற பெண்களின் கரங்கள் இன்று மகப்பேற்றிற்காகத் தவிக்கும் பெண்களுக்குக் கரம் நீட்டுகின்றன. இதனால் பெண் அறம்  காக்கப்படும் என்னும் கனவு இன்று நினைவாகியுள்ளதனைக் காணமுடிகிறது.  

நாணும் அச்சமும்

                பெண்களுக்குப் பெருமை சேர்க்கும் நாணம், அச்சம் என்னும் இவ்விரண்டு நற்பண்புகளை ஆண்கள் கொச்சைப்படுத்தி தம் இச்சைக்கேற்றார் போல் பயன்படுத்திக்கொண்டு அடிமையாக்க முயன்றனர் ; அடிமையாக்கினர். கல்வி கற்கத் தடையும், குழந்தைத் திருமணமும், உடன்கட்டை ஏறுதலும் என அனைத்து மூடப்பழக்கங்களுக்கும் இப்பண்பையே எடுத்தாண்டனர். எனவே எதையும் துணிந்து கேட்கும் வல்லமை பெறவேண்டும் என்பதனாலேயேநாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டும்எனப் பாடினார் மகாகவி.

பெண்மை வெல்கவென்று

                வாழ்க வாழ்க என வாழ்த்தியும் அழகே அழகே எனப் போற்றியும் பெண்ணை அழகுப்பதுமைகளாகவும் விளம்பரப்பொருட்களாகவும் பயன்படுத்திய நிலையினை மாற்ற வேண்டும் என்னும் மகாகவியின் கனவு இன்று மெய்யானது. “பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடாஎனப்போற்றிய மகாகவி அத்துடன் நில்லாமல் அனைத்துத் துறைகளிலும் அவர்கள் வெற்றி காணவேண்டும் என எண்ணி  பெண்மை வெல்கவென்று கூத்திடுவோமடாஎனவும் பாடியுள்ளதனைக் காணமுடிகிறது.

காதல் ஒருவனைக் கைப்பிடித்தே அவன் காரியம் யாவினும் கைகொடுத்துஎன மணமுடிக்கும் உரிமையினையும் பெண்ணிடமே கொடுத்து விடுகிறார் மகாகவி. ஆனால் அதற்கு முன் அவள் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதனையும் உணர்த்தியுள்ளார். கைகொடுத்து எனக்கூறி துணிவுடன் தன்னம்பிக்கையுடன்  சரிநிகர் சமானமாக வாழவேண்டியதன் அவசியத்தினையும் உணர்த்தியுள்ளார்.

பெண் மானல்ல மனிதப்பிறவி

                விலங்குகளைத் தன் விருப்பப்படி வளர்த்து விற்று விடுவதுபோல் பெண்ணைக் கட்டிக்கொடுப்பது கொடுமையிலும் கொடுமை எனக் குறிப்பிட்டுள்ளார் மகாகவி. எனவே வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக்கொடுக்கும் வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்என்கிறார். மகாகவியின் இக்கனவு இன்று பரவலாக விழிப்புணர்வினை ஏற்படுத்தியுள்ளதனைக் காணமுடிகிறது. இதன் விளைவாகவே இன்று பெண்கள் கணவனைத் தேர்வுசெய்து மணந்துகொள்ளும் நிலை  பெருகியுள்ளதனையும் எண்ணி மகிழமுடிகிறது.

மனையாளும் தெய்வம்

                தாலி கட்டி விடுவதால் வேலி போட்டுவிட்டதாக எண்ணிப் பெண்ணின்  வெளியினைக் குறுக்கிவிடும் நிலை ஆண்களிடம் இருந்ததனைக் கண்ட மகாகவி பெரிதும் வருந்தினார். விடுதலை உணர்வுடன் தாய் வீட்டில் வளர்ந்தவள் புகுந்த வீட்டில் அடிமை போல நிற்கும் நிலையினை மாற்றவேண்டும் என விழைந்தார் மகாகவி. எனவேமண்ணுக்குள் எவ்வுயிரும் தெய்வமென்றால் மனையாளும் தெய்வமன்றோ  எனப்பாடி பெண்கள் மதிக்கப்பட வேண்டிய அவசியத்தினை உணர்த்தினார். அதன் விளைவாகவே இன்று மனையினை ஆளக்கூடியவளாக “மனையாள்எனக் குறிப்பிடும் நிலை உண்டாகிவிட்டதனைக் காணமுடிகிறது. மனையாளும் தெய்வம் என்பதனை மனையை ஆளும் தெய்வம் என விரித்துப் பொருள் கொள்வதன் வழி மேலும் பெண்ணின் பெருமையினை நன்குணர்ந்துகொள்ளமுடிகிறது.

கனவுகளும் நினைவுகளும்

                குழந்தைத் திருமணம் ஒழிக்கப்பட வேண்டும் ; கைம்பெண்ணுக்கு மறுமணம் செய்ய வேண்டும் ; பெண்ணுக்குச்  சொத்தில் சம உரிமை கொடுக்கவேண்டும் ; பெண்கள் உயர்கல்வி பயில வேண்டும் ; பெண்கள் சட்டங்கள் இயற்றவேண்டும் ; பெண்கள் பாரினை நடத்தவேண்டும் என்னும் கனவுகள் அனைத்தும் இன்று கண்முன்னே காணக்கிடப்பது மகாகவியின் பெருமைக்குச் சான்றாகிறது.

மகாகவி பாரதியாரைப் பெற்று மகிழ்ந்தவள் தாயார் இலக்குமி அம்மையார். காத்து மகிழ்ந்தவள் துணைவி செல்லம்மாள். மகிழ்ந்து காத்தவள்  மகள் தங்கம்மா. பெண்ணறிவை ஊட்டி மகிழ்ந்தவள் நிவேதிதா அம்மையார். கவிதை எழுத வந்தவள் கண்ணம்மா கவிதை எழுத நின்றவள் மகாசக்தி ,. எனப் பெண்களுடனேயே தம் வாழ்வைப் புதைத்துக்கொண்டவர் மகாகவி பாரதி. எனவே அவர் பெண்களைப் பேசுவதற்கான  படைப்புக்களாக தம் கவிதை நடையினையும் உரை நடையினையும் கட்டமைத்துக்கொண்டதனையும் அவையே இன்று  பெண்ணியத்திற்கான புதையலாகவும் திகழ்வதனை அறிந்துகொள்ளமுடிகிறது.

நிறைவாக

                மகாகவி பாரதியார்  நாட்டு விடுதலைக்கு மட்டுமின்றி சமூக விடுதலைக்கும் வித்திடும் கவிதைகளை ; கட்டுரைகளைப் படைத்ததனால் இருபதாம் நூற்றாண்டு கவிஞர்களுள் முன்னோடிக் கவிஞராகத் திகழ்கிறார் எனத் தெளியமுடிகிறது.

                பெண்ணியம் என்பது பெண்களுக்காகப் பெண்களே போராட வேண்டும் என்னும் கொள்கையினை உடையதன்று. அது தன்னிலிருந்து பிறந்த ஆணினத்தையும் உள்ளடக்கியது . இக்கூற்றுக்கு வித்திட்ட மகாகவி பாரதியார் தம் படைப்புகளின் வழி இயன்ற இடங்களில் எல்லாம் பெண்ணின் பெருமையினை நிலைநாட்ட முயன்றுள்ளதனைக் காணமுடிகிறது.

                பூனைக்கு யார் மணி கட்டுவது என அனைவரும் ஒதுங்கி நின்ற வேளையில் துணிந்து நின்று பெண்ணுரிமைக்காகப் போராடிப் புதுமைப்பெண்களைப் படைத்து நல்ல விடியலுக்கு வழிவகுத்தவர் மகாகவி பாரதியார் என்பதனை அவருடைய படைப்புகள் உணர்த்திக்காட்டுகின்றன.

                தேவையே கண்டுபிடிப்பின் தாய் என்னும் அறிவியல் கூற்று மகாகவியின் படைப்புகளுக்கும் பொருத்தமாக அமைந்துள்ளது. பெண்ணின் முழுமையான விடுதலைத் தேவைக்கு மகாகவியின் படைப்புகளே தாயாக நின்று சித்திரித்திருப்பதனை அறிந்துகொள்ளமுடிகிறது.

                நிமிர்ந்த நன்னடையும்  நேர் கொண்ட பார்வையும் உடைய மகாகவியின் எழுத்துக் கனவுகள் அனைத்தும் இன்று நினைவானதன் விளைவாகவே சரிநிகர் சமானமாக பெண்களும் ஆண்களும் பெருமிதத்துடன் வாழும் நிலை ஏற்பட்டுள்ளதனை அவர் சொல்லாடல்கள் வழி நின்று உணர்ந்துகொள்ளமுடிகிறது.



****************


அவ்வையார் வரலாற்று நாடகக்காப்பியத்தில் தமிழர் நலம் -Historical Drama


அவ்வையார் வரலாற்றுக் நாடகக்காப்பியத்தில் தமிழர் நலம்

முனைவர் ம.. கிருட்டினகுமார், தமிழ்ப்பேராசிரியர் (துணை), காஞ்சிமாமுனிவர் பட்டமேற்படிப்பு மையம், புதுச்சேரி – 605 008. உலாப்பேசி – 99406 84775

தமிழ் இலக்கியங்கள் எக்காலத்தும் நிலம், இனம் என்னும் எத்தகைய எல்லையும் இன்றி     மக்களை நெறிப்படுத்தி நிற்பதனை தமிழ் இலக்கிய வரலாறு தெள்ளிதின் உணர்த்தி நிற்கின்றது. அவ்வகையில் முத்தமிழில் முதலிடம் பெற்றுத்திகழும் நாடகத்தமிழின் பங்கு அளப்பரியது. இன்றும் நாடகத்தமிழே திரைத்துறையாக வளர்ச்சிபெற்று உலகத்தின் கவனத்தை ஈர்ப்பதில் முதலிடம் பெற்றுத் திகழ்வதனைக் காணமுடிகிறது. எனவே மக்களுக்கு அறிவூட்டுவதிலும் மகிழ்விப்பதிலும் முதலிடம் பெற்ற நாடக இலக்கியங்களைப் படைத்து நாடகத்தமிழைக் காக்கவேண்டியது தமிழறிஞர்களின் ; படைப்பாளிகளின்  இன்றியமையாக் கடமையாகிறது.

இருபதாம் நூற்றாண்டில் காப்பியம் படைக்கும் தமிழ்ப்புலமை அரிதினும் அரிதாகவே இருந்துவந்ததனைக் காணமுடிகிறது. எனினும் நாடகப்பாங்கினையும் காப்பிய அழகினையும் எடுத்துரைக்கும் வகையில் நாடக இலக்கியத்தைப் படைத்துப் பெருமை சேர்த்துள்ளவர் கவிஞர் அவ்வை நிர்மலா அவர்கள். தமிழ் மூதாட்டியான அவ்வையின் பெருமையினை இக்காலத்து மக்கள் உணர்ந்துகொள்ளும் வகையில் தமிழ்த்துறைப்பேராசிரியராகவும் தலைவராகவும் சிறக்கப்பணியாற்றும் அவ்வை நிர்மலா அவர்கள் வரலாற்று நாடக்காப்பியமாகப் படைத்துள்ளார். அக்காப்பியத்தில் இடம்பெற்றுள்ள தமிழர் நலத்தைக் காணவிழைந்ததன் விளைவாகவே இக்கட்டுரை அமைகிறது.

காப்பிய வடிவம்

                செய்யுள் என்பது உள்ளே நிலைக்கச்செய்யும் திறமுடைத்து. சொல் நயங்களாலும் பொருள் நயங்களாலும் சிறக்கச்செய்யும் திறம் காப்பியத்திற்கே உரிய தனித்தன்மையாகிறது. தமிழ்மொழியின் வளத்தை உணர்த்தும் காப்பிய நெறியினைப் புலப்படுத்த கவிஞர் மரபுக்கவிதையினைத் தேர்வுசெய்துகொண்டதனை

இலக்கண வரம்புடன் இயற்றுவ தாலே ; ஈரா யிரம் ஆண்டு களாக

நிலையாய் நிலத்தில் ஊன்றுத லாலே ; நின்றேன் மரபுக் கவிதையின் பக்கம்


என்னும் அடிகளில் புலப்படுத்துகிறார்.  காப்பியம் என்பது புலவரின் பரந்துபட்ட அறிவினைப் புலப்படுத்தும் இலக்கியப்போக்காக இருப்பதனை பல்வேறு காப்பியங்களின் வழி அறிந்துகொள்ளமுடிகிறது. காப்பியமே தமிழ்மொழியின் பெருமைகளைத் தமிழர் பண்பாட்டை எடுத்துரைப்பதில் தனித்தன்மையுடன் விளங்குவதனை

சம்பங் கோரையால் வேய்ந்ததோர் சிற்றில் ; கம்பும் வரகும் காய்ந்திடும் முன்றில்

சிம்புள் கோழிகள் நெல்மணி கிளற ; அம்பு விழியார் எறியும் காதணி (..நா.கா. .92)

என்னும் காப்பியத்தின் முதற்காட்சியின் தொடக்க அடிகளே எடுத்துரைக்கின்றன. கிடைக்கும் புல்லை வைத்து வீடுகட்டிய தமிழரின் அறிவுத்திறமும்  சிறுதானியங்கள் எனப்படும் உடல் நலத்தைக்காக்கும் பெருமையுடைய தானியங்களான கம்பு, வரகு ஆகியனவற்றைப் பயிரிட்டு உணவுண்ட நலமும், வளமான கோழிகள் நெல்மணிகளை கிளறும் காட்சியின் வழி பயிர் வளத்தினைப் பேணிக்காத்த வேளாண் வளமும், அங்கு வாழ்ந்த மக்கள் கோழியை விரட்ட காதணிகளை எறிந்த செல்வச்சீரும் எனத் தமிழர் நலத்தினை ஒருங்கே எடுத்துக்காட்டியுள்ளது கவிஞரின் புலமைத் திறத்தினை எடுத்துரைக்கிறது.

பெண்ணுக்குப்பெருமை சேர்த்த தமிழ்நிலம்

                இருபத்தோராம் நூற்றாண்டில் வாழ்பவரும் நாகரிக மக்கள் எனக் கூறிக்கொள்வோரும் கூட இன்று பல சமூகங்களில் ஆணுக்கு இணையாகப் பெண்ணைக்கொள்ளாத நிலையினைக் காணமுடிகிறது. ஆனால் மன்னர் காலத்திலேயே பெண்பாற்புலவர்களின் புலமைத்திறத்தை நிறுவியவர் தமிழ்மூதாட்டி ஔவையார்.

                ஆண்கள் மட்டுமே அறிவு படைத்தவர் ; என்றொரு எண்ணம் இதுவரை இருந்தால்

                என்னால் அதுதூள் ஆகக் கடவது ; அருகில் இருக்கும் அரசியார் தமையும்

                அப்படி யாக நினைப்பீர் போலும் ……………………………… (..நா.கா. .148)

என்னும் அடிகளின்வழி இதனை தமக்கேயுரிய நடையில் எழிலுற எடுத்துக்காட்டியுள்ளார் கவிஞர். அரசியாரையும் அப்படித்தான் நினைப்பீரெனின் அதுவும் தவறு எனக் கேட்கும் துணிவுடைமையை இங்குணர்த்தி கவிஞர் பெண்ணியச்சிந்தனையாளராகவும் இருப்பதனைப் புலப்படுத்தியுள்ளார்.

அன்புடையார் எல்லாம் தமக்குரியர்

                உலகத்தவரையே தம்மவராக எண்ணும் பண்புடையோர் தமிழர். இதனை “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்னும் புறநானூற்று அடிகள் தெள்ளிதின் உணர்த்தி நிற்கின்றன. தமிழர்கள் வழிப்போக்கர்களும் ஓய்வெடுத்துக்கொள்ள திண்ணை சமைத்த சிறப்பினையும் இங்கு எண்ணி மகிழலாம். தமிழர்கள் இயல்பாகவே நண்பர்களைச் சுற்றத்தாராகவும், சுற்றத்தாரை உறவினராகவும், உறவினரை உடன்பிறப்புக்களாகவும், உடன்பிறப்புக்களைத் தம் உயிராகவும் எண்ணும் பண்புடையராகச் சிறக்கின்றனர். இதனை

உயிருக் குயிராய்ப் பாசம் கொள்வதில் ; பாலினக் கவர்ச்சியின் பதிவைத் தேடுதல்

பாமரத்தனத்தின் உச்சமாகும் ; பண்பிலார் அழுக்கின் எச்ச மாகும் !

கணவனின் தாயைப் பெண்டிர் அன்புடன் ; அம்மா என்றே விளிப்பது நடைமுறை

அதனைக் கண்டு அண்ணன் தங்கை ; என்றே அறைதல் அறிவிலார் மடமை

(..நா.கா. .119)

என்னும் அடிகளின் வழி உறவுகளை சிறக்கச்செய்யும் தமிழர் பண்பினை எழிலுற எடுத்துரைத்துள்ளார் கவிஞர்.

தமிழர் தொழில்

                செய்யும் தொழிலே தெய்வம் எனத் தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுத்த இனம் தமிழினம். கடமைக்காக வேலையைச் செய்யாமல் கடமையெனத் தம் தொழிலை விரும்பிச் செய்தனர். அவர்களுக்குரிய அடிப்படைத் தேவையான நீர் வளத்தைப் பேணிக்காத்துக் கொடுப்பதே அரசின் கடமை. தொழிலாளர்களுக்கு உரிய அடிப்படை நலன்களைச் செய்துவிட்டால் தொழில் வளரும். தமிழர் திறத்தை உலகமே வியக்கும் என்பதனை உணர்த்தும் வகையில்

குயவன் சேற்றைக் குழைத்துத் தானே ; வழுவழு வென்ற பானைகள் செய்வான்

சேற்றைக் குழைக்கச் செம்புத் தண்ணீர் ; போதும் என்று வாதிடுவீரோ ?

ஊரின் நடுவில் உட்கார்ந் திருந்தால் ; நீங்கள் எப்படி உலைவைப் பீரோ ? (..நா.கா. க்.149-150)

என்னும் அடிகளின்வழிப் புலப்படுத்துகிறார் கவிஞர். மறைந்துபோகும் தமிழர் கலைகளை மீட்டெடுத்தால் தமிழரின் பெருமை தரணியெங்கும் புலனாகும் என்னும் விழைவினையும் இவ்வடிகளின் வழிக் கவிஞர் புலப்படுத்தியுள்ளதனை உணர்ந்துகொள்ள முடிகிறது.

                சங்குகள் சுட்டுச் சுண்ணம் ஆக்கவும் ; தென்னங் கீற்றை வேய்ந்திடப் பின்னவும்

                நாணல் கொண்டு பாயை நெய்யவும் ; மற்றிது போலே எல்லாப் பணியும் …

(..நா.கா. .150)

என்னும் அடிகள் தமிழர்கள் இயற்கை வளத்தைக் கொண்டு பொருள்களைச் சமைத்த திறத்தைப் புலப்படுத்தியுள்ளார் கவிஞர். இன்று நாகரிக உலகம் நெகிழியால் பல புதுமையான பொருட்களைச் செய்து அதனால் பல கேடுகளை அடைந்துவந்துள்ளதனைக் காணமுடிகிறது.  இன்று உலகமே மீண்டும் இயற்கைப் பொருட்களுக்கே திரும்பிவருவதனையும் எண்ணும்போது தமிழரின் பெருமையினை உணர்ந்துகொள்ளமுடிகிறது.

உண்மை அழகு

                முக அழகை விட அக அழகே பெருமையுடைத்து என்பதனை காலந்தோறும் தமிழர்கள் உணர்த்திவருகின்றனர். இந்நிலையினை உலகுக்கு உணர்த்துவதில் முன்னோடியாகத் திகழ்பவர் அவ்வையார் என்பதனை உணர்த்துகிறார் கவிஞர்.

                ”திருமணம் பேசிட வந்தவர் முன்னே ; தலையில் சாம்பலை நரையாய்த் தீட்டி

                நெடுங்கோல் ஊன்றி  நடுக்கொடு தோன்றி ; முதுமை வேடம் புனைந்தீர் ஆதலின்

                உங்கள் பெயரை ஊரார் மறந்து அவ்வை என்றே அழைத்திடலானார் (..நா.கா. .157)

என்னும் அடிகளில் அவ்வையின் தோற்றத்தினைப் படம்பிடித்துக்காட்டுகிறார். திருமணம் என்றால் அழகைக் கூட்டிக்கொள்ளும் இயல்பான நிலையிலிருந்து மாறுபட்டுத் தம் இளமை அழகை முதுமையாக மாற்றிக்கொண்ட வலிமையினை இங்குப் புலப்படுத்தியுள்ளார் கவிஞர்.  மக்கள் பணியாற்ற அழகு தடையாகுமெனில் அதனைத் துறப்பதே நன்று என எண்ணிய தமிழ் மூதாட்டி அவ்வையின் திறத்தையும் இதன்வழி உணர்ந்துகொள்ளமுடிகிறது.

தலைமுறை வாழ

                தமிழர்கள் தமக்காக வாழ எண்ணாது பிறர்க்காக வாழும் பொதுநலமுடையவர்களாக வாழ்ந்தனர். எனவே இம்மை மறுமை என இரு உலகத்தையும் கணக்கில்கொண்டு எல்லா உயிர்க்கும் அன்பு செய்து வாழ்ந்ததனைக் காணமுடிகிறது. தாம் நடும் தென்னையும் பனைமரங்களும் தமக்குப் பயன் தராது எனினும் அவற்றை அடுத்த தலைமுறைக்காக நட்ட பெருமை தமிழர்களுக்கே உரித்தானதாகக் கொள்ளமுடிகிறது.

தமிழக மெல்லாம் நன்செய்ப் பயிராய்க் ; கரும்புகள் விளையக் கண்டோம் பலனை

பனையில் இருந்து பெறப்படும் இனிப்பினும் ; கரும்பைக் காய்ச்சிக் கிடைத்திடும் பாகு

பானகம் பாயசம் பலவித இனிப்பாய் ; வானக சொர்க்கம் வாழ்க்கை தந்தது (..நா.கா. .190)

என்னும் அடிகள் தமிழர் உடல்நலத்தைக் காக்கும் பானங்களைக் குடித்து மகிழ்ந்த நிலையினைப் புலப்படுத்துகிறது. இந்நிலையினை ஆங்கிலேயர்கள் மாற்றித் தேநீரைப்பழக்கி அடிமையாக்கிவிட்ட சூழலையும் உணர்த்துகிறார். மக்கள் உடல்நலக்கேட்டினைப் பெருக்கும் பானங்களை உணர்ந்து மீண்டும் தமிழர் தம் முறைக்கே செல்ல அறிவுறுத்துகிறார் கவிஞர்.  

புலமைக்குப் பரிசு

                புலவர்களின் வாழ்வைப் புரவலர்கள் பேணிக்காப்பதும் புரவலர்கள் புகழைப் புலவர்கள் பேணிக்காப்பதும் தமிழர் மரபு. எனினும் புலமைக்கேற்ற பரிசில் அளித்த புரவலர்களின் சிறப்பினையும் அப்பரிசிலை பிறர்க்கு அளித்துவாழ்ந்த புலவர்களின் சிறப்பையும்

பெற்றிடும் பரிசில் புலமையின் அளவுகோல் ; வறுமைப்பிடியில் உள்ளவர்க் கெல்லாம்

வரும்படி தன்னில் உதவலாம் அன்றோ ; நூற்றுக்கணக்கில் மடிவர் பசியால்

உறுபொருள் அளித்தே அவரைக் காக்கலாம் ………………(..நா.கா. .195)

என்னும் அடிகள் உணர்த்தி நிற்கின்றன. கவிஞராக நின்று பல அறப்பணிகளைச் செய்து வரும் இக்காப்பிய ஆசிரியர் தம் கருத்தை ஏற்றிக் கூறுவதாகவும் இவ்வடிகளை உணர்ந்துகொள்ளமுடிகிறது.

மனிதம் வளர்த்த தமிழர் மாண்பு

                சங்க இலக்கிய காலம்தொட்டு இக்காலம் வரை அறம் வளர்த்த பெருமையில் முன்னோடியாக நிற்பவர் அவ்வையார். குழந்தைகளுக்கு ஓரடியிலும் பெரியோர்க்கு நான்கடியிலும் அறக்கருத்துக்களை அழகழகாய் கூறிய பெருமை தமிழ்மூதாட்டிக்கே உண்டு என்பதனை அவருடைய ஆத்திச்சூடி முதல் நல்வழி, மூதுரை முதலான நூல்களின் வழி தெள்ளிதின் உணர்ந்துகொள்ளமுடிகிறது. உலகத்தைத் தெளியவைக்கும் எண்ணத்துடன் அவர் பாடிய பாடலுக்குச் சேந்தனாரின் அறிவுரையே அறவுரையாகி தம் வாழ்வுக்கு அடிப்படையாக விளங்கி நின்றதனை

ஐயா நீங்கள் அளித்த அறிவுரை ; கலங்கிய நீரில் இட்ட படிகமாய்

தெளிவைத் தந்தது, தெளிந்தேன் ஐயா ; ஓரிடம் கிடக்கும் கல்போல் அன்றி

பாரெலாம் உலவும் கால்போல் எழுவேன் ; சேரம், சோழம், பாண்டியம் என்றும்

மனிதன் எழுப்பிய எல்லைகள் கடந்து ; மனிதம் வளர்க்கும் முயற்சியில் வெல்வேன் (..நா.கா. .196)

என்னும் அடிகள் புலப்படுத்தி நிற்கின்றன. அவ்வாறே தம் வாழ்நாள் முழுதும் மனிதம் வளர்ப்பதனையே தம் கடமையாகக் கொண்ட அவ்வையின் சிறப்பினை இவ்வடிகளின் வழி உணர்த்தியுள்ளார் கவிஞர்.  மனிதம் காத்தால் மட்டுமே தலைமுறையை வாழவைத்தல் இயலும்  என்பதனையும் இதன்வழி அறிந்துகொள்ளமுடிகிறது.

தமிழர் வாழ்வே மலருடை வாழ்வு

                தமிழர்கள் அகவாழ்வில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனவும்  புறவாழ்வில் வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை என மலரின் பெயராலேயே வாழ்வினை வகுத்துள்ளதனைக் கொண்டு தமிழர் வாழ்வு மலர் வாழ்வு எனத்தெள்ளிதின் அறிந்துகொள்ளமுடிகிறது. மலர்கள் மீது மிகுந்த காதல் கொண்ட கவிஞர்

மழைத்துளி பட்டதால் மலர்கள் விரிந்தன ; புதுப்புது மலர்கள் புன்னகை புரிந்தன

முல்லை சண்பகம் முரட்டிதழ் ரஞ்சிதம் ; பன்மலர் பறித்தேன் பாங்காய்த் தொடுக்க

மலரைத் தொடுப்பதில் மனமதை வைத்தேன் ; நிறங்களை வகுத்தொரு நீர்மையில் தொடுக்க

எண்ணம் கொண்டேன் என்னை விடுங்கள் …………………………(..நா.கா. .252)

என்னும் அடிகளில் உப்பை என்னும் பாத்திரத்தின்வழித் தம் கருத்தைப் புலப்படுத்தியுள்ளதனைக் காணமுடிகிறது. தமிழர்கள் தோட்டங்கள் அமைத்து மலரினைச் சூடி இயற்கை மணத்துடன் வாழ்ந்த சிறப்பினையும் இவ்வடிகளின் வழி உணர்த்தியுள்ளதனைக் காணமுடிகிறது.

தூதின் முன்னோடி அவ்வையார்

                தமிழர் சிறப்பினைத் தூதின் வழி வெளிப்படுத்திய பெருமை அவ்வையாரையே சாரும். தூது என்னும் சொல்லே நெடிலையும் குறிலையும் உள்ளடக்கிய ஒரே சொல்லாக அமைந்துள்ளது. அவ்வாறே ஒரே இனமான எதிரெதிர் மன்னர்களைப் பக்குவமாக அமைதிப்படுத்தும் சிறப்புடையவரே சிறந்த தூதராவார். அவ்வரிசையில் முன்னிற்பவர் அவ்வையார் என்பதனை

                அந்தோ அதியன் நிலையோ நேரெதிர் ; தொடர்ந்து போரினில் ஈடுபட் டதனால்

                வேல்களின் முனைபல உடைந்து கிடக்கும் ; வேழம் குத்திய கூரிய ஈட்டிகள்

                மழுங்கிக் கிடக்கும் மலையின் அடுக்காய் ; குந்தப் படைகளின் ஒடுக்கை எடுக்கக்

                கொல்லர் உலைகள் நாளெலாம் பகையும் ; அம்புகள் கூர்மை ஏற்றிட முனையும்

                சம்மட்டி ஓசையில் சாலைகள் அதிரும் ; வியர்வைத் துளிகள் நெருப்பில் பட்டு

                சுர்சுர் என்று பொறிகள் தெறிக்கும் ; உலைகள் தொடர்ந்து எரிவதனாலே

                புகையோ மேகப் பரப்பொடு நெறிக்கும் ……………………..(..நா.கா. .392)

என்னும் அடிகளின்வழிக் கவிஞர் புலப்படுத்துகிறார். சொல்லாலேயே போரினை அடக்கி உயிரைனைக் காத்த அவ்வையின் கருத்தினைத் தம் புலமைத் திறத்தோடு புலப்படுத்தியுள்ள திறத்தினைக் காணமுடிகிறது.

தமிழில் பெயர்கள்

மொழியே இனத்தின் அடையாளமாகத் திகழ்கிறது. எனவே இனத்தை அழிக்கவேண்டும் என்னும் எண்ணம் கொண்டோரும் இனத்தை அடிமை கொள்ளவேண்டும் என்னும் எண்ணம் கொண்டோரும் தமிழ்மொழியை அழித்து தம் மொழியை முன்னிலைப்படுத்தி அடிமை நாடாக்கிய நிலையினை வரலாறு உணர்த்தி நிற்கிறது. எனினும் தமிழ்ப்பெயர்களை இடாத நிலையே நாளும் பெருகிவருகிறது. அந்நிலையினை மாற்றுவதற்கான முயற்சியாக இந்நாடகத்தில் பல தமிழ்ப்பெயர்கள் இடம்பெற்றிருப்பதனைக் காணமுடிகிறது. அவ்வையார் குறித்த தமிழ் நாடகம் என்பதனால் தமிழில் பெயர்கள் இடம்பெறுதல் இயல்பு தானே என எண்ணுதல் இயல்பு, எனினும் தமிழ்ப்பெயர்கள் வைக்கவேண்டும் என எண்ணுவோர்க்குத் தமிழ்ப்பெயர்களே தெரியாத வகையில் இன்று வடமொழிச் செல்வாக்கு நிலைபெற்றுவிட்டதனைக் காணமுடிகிறது. பாலர்பள்ளி, தொடக்கப்பள்ளி வருகைப்பதிவேட்டினைக் காண்பதன் வழி இதனை நன்கு அறிந்துகொள்ளமுடிகிறது. எனவே தமிழ்ப்பெயர்களை எடுத்துக்காட்டித் தமிழர் பண்பினை மீட்டுருவாக்கம் செய்யும் வகையில் இக்காப்பியம் படைக்கப்பட்டுள்ளதாக எண்ணமுடிகிறது.

                திமிலன், அல்லி, உறுவை, சேயோன், அதியன், கரியன், சேந்தனார், எயினி, வள்ளி, வெள்ளையன், உப்பை, மலையமான் திருமுடிக்காரி, அழகன், எழிலி, கீரன், பாரி, அங்கவை, சங்கவை, மாவெண்கோ, பாண்டியன் உக்கிரப்பெருவழுதி,  சோழன் பெருநற்கிள்ளி, வீரன், தொண்டைமான் இளந்திரையன், கபிலர், உட்புரிகுடி கிழார், உருத்திரசன்மனார், அரிசில் கிழார், பரணர், வெள்ளிவீதியார், திருவள்ளுவர், இடைக்காடனார், பெருஞ்சித்திரனார், ஐயூர்மூலங்கிழார், ஒரு சிறைப்பெரியனார், உலோச்சனார், மோசிகீரனார், மருதன் இளநாகனார், பெருஞ்சாத்தனார்  என்னும் பெயர்களை எடுத்துக்காட்டி அவ்வையின் வரலாற்றின் பெருமையினை உணர்த்தியுள்ளார் கவிஞர். ஒவ்வொரு பெயருக்கும் பின்னால் தமிழ் வரலாறு இருப்பதனைப் படம்பிடித்துக்காட்டியுள்ளது இக்காப்பியத்தின் தனிச்சிறப்பாக அமைந்துள்ளது. மேலும் தமிழரின் பெருமிதத்தினை உரைப்பதாகவும் இப்பாத்திரங்கள் படைக்கப்பட்டுள்ளதனைக் காணமுடிகிறது.

நிறைவாக

                நாடகத்தமிழ் மக்களின் பண்பாட்டைப் படம்பிடித்துக்காட்டுவதில் முதலிடம் பெறுகிறது. எனவே நாடகத்தமிழின் வழி தமிழர் பெருமைகளைப் புலப்படுத்தியுள்ளார் கவிஞர் அவ்வை நிர்மலா.

                தமிழ் மூதாட்டி அவ்வையார் காலந்தோறும் இலக்கியத்தின் வழி தமிழர் நலத்தைக் காத்து நெறிப்படுத்தியுள்ள திறத்தினை உணர்த்தவிழைந்த கவிஞர் நாடகத்தையே ஊடகமாகக் கொண்டு புனைந்துள்ள திறம் போற்றத்தக்கதாக அமைகிறது.

                தமிழர்கள் தன்னலத்தோடு வாழாது பிறர்க்காக வாழும் நல் மனம் படைத்தவர்கள் என்பதனை நாடகம் முழுதும் பல்வேறு பாத்திரங்களின் வழி உணர்த்தியுள்ளதனைக் காணமுடிகிறது.

                தமிழர்களின் அருந்தொழில்கள் காலந்தோறும் மறைக்கப்பட்டும் மறுக்கப்பட்டும் வந்திருப்பதனைக் கண்ட கவிஞர் வருந்தியுள்ளார். அந்நிலை மீட்கப்படவேண்டும் என்னும் விழைவினை தமிழர் தொழில்களை நன்கு விரித்துரைத்துள்ள திறம் சிறப்புடைத்ததாகிறது.

                காப்பியங்கள் படைத்தல் அரிது ; நாடகக் காப்பியங்கள் படைத்தல் அரிதிலும் அரிது; அதனினும் அரிது வரலாற்று நாடகக் காப்பியம் படைத்தல். அவ்வகையில் இன்று அவ்வையார் வரலாற்று நாடகக் காப்பியம் படைத்துள்ள கவிஞர் அவ்வை நிர்மலா தமிழ் இலக்கிய உலகிற்கு அளித்துள்ள தமிழ்க்கொடை பெருங்கொடை என்பதனைத் தெள்ளிதின் உணர்ந்து கொள்ளமுடிகிறது.



*************************