தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

செவ்வாய், 22 நவம்பர், 2022

அரசியல் அமைப்பு நாள் - நவம்பர் 26 (CONSTITUTION DAY - NOVEMBER 26)

Indian Parliament Pdf in Tamil

ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசியல் சாசனம் என்னும் இந்திய அரசியலமைப்பு நாள் நவம்பர் 26 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்தியா என்பது தாய். அதன் குழந்தைகள் மாநிலங்கள். குழந்தைகளுக்கு ஏதேனும் பாதிப்போ குழந்தைகளுக்கிடையே ஏதேனும் பாதிப்போ வந்தால் தாய்போல் மத்திய அரசு காக்கும். மாநில அரசுகளால் கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலை உருவானால் மத்திய அரசின் உதவியை நாடும். தம்பியை அண்ணன் அடித்துவிட்டால், தம்பி தாயின் உதவியை நாடுவதுபோல் மத்திய அரசை மாநில அரசுகள் உதவிகள் கேட்கும். அந்நிய நாட்டினர் ஊடுருவல், தீவிரவாதம், குண்டுவெடிப்பு, வெள்ள பாதிப்பு, நில நடுக்கம், கலவரங்கள், போராட்டங்கள் என அனைத்து இடர்பாடுகளுக்காகவும் மாநில அரசு மத்திய அரசினை அணுகும். சில மாநிலங்களின் நிலம், மக்கள், வேலைவாய்ப்பு, நிர்வாகம், என அனைத்துக் காரணங்களையும்கொண்டு மக்களின் வேண்டுகோளுக்கிணங்க தேவைகளுக்கேற்ப மாநிலத்தை இரண்டாகப் பிரித்தும் அல்லது ஒன்றாகச்சேர்த்தும் நிர்வாகம் சீரடைய மத்திய அரசு உதவும். இவ்வாறு ஒவ்வொரு மனிதரின் வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்கும் துணைநிற்க உருவாக்கப்பட்டதே இச்சட்டம்.  ஒரு குடும்பத்தின் ஒழுங்குமுறைபோல இந்நாட்டை நல்வழிப்படுத்த உருவாக்கப்பட்டதே அரசியலமைப்புச் சட்டம்.

            இந்திய மக்கள்  மக்களாட்சி முறையில் மக்களே ஆளும் வகையில் ஏற்றத்தாழ்வின்றி சரிநிகர்சமானமாக வாழ்வதற்காகவே இவ் அரசியல் அமைப்பு அமைந்துள்ளது. அனைவருக்கும் ஒரே வகையான வாய்ப்பு வழங்கப்படவேண்டும் என்பது கொள்கை. மனிதர்கள் அனைவரும் மதிக்கப்படவேண்டும். அதுபோலவே நிலம், கடல், மலை, நதி அனைத்தும் மதிக்கப்படவேண்டும்.  அனைவரின் தேவைக்காகவுமே அவை உள்ளன. அனைவருக்கும் உடுக்க உடை, இருக்க இடம், உண்ண உணவு உறுதி செய்யப்படவேண்டும். மக்கள் அனைவரும் நோயற்ற ; நலமான வாழ்வுவாழும்வகையில் அரசு செயல்படவேண்டும் எனக் குறிப்பிடுகிறது.

            இந்திய நாட்டில் எங்கு செல்லவும், பேசவும், கற்கவும், சங்கம் அமைக்கவும், அச்சுறுத்தாமல் அமைதியாக வாழவும்,  விருப்பமுடடைய முறையான தொழில்கள் செய்து பிழைக்கவும் பிறசமயங்களைக் குறைகூறாது தம் சமயங்களைப் பின்பற்றி வாழ்தலுக்கான உரிமையும் வழங்கப்பட்டுள்ளது.

            ஆயுதங்கள் மட்டுமின்றி எவ்வகையிலும் பிறருக்கு அச்சமூட்டும் வகையில் நடக்கவும், பிறரை வற்புறுத்தும் வகையில் வேலை வாங்குதலும் சிறார்களைப் பணியில் சேர்த்தலும் கால்நடைகளை வன்கொலை செய்வதும் சுற்றுச்சூழலைக் கெடுப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.

             அரசியலமைப்புச் சட்டத்தை மதித்தல், நாட்டுக்கொடி, நாட்டுப்பண்,  ஆகியனவற்றை மதித்து நடப்பதும், ஒற்றுமையுடன் வாழ்தல், நாட்டைக்காக்க  முன்வருதல், பெண்களை மதித்தல், பண்பாட்டைப் போற்றுதல், மரபுகளைக் காத்தல் பொதுச்சொத்துக்களைக் காத்தல் போன்றவை இந்திய மக்களின் கடமையாக்கப்பட்டுள்ளது.

            கடமையைச் செய்வது முதற்பணி ; உரிமை பெறுவது இரண்டாம் பணி

இந்திர அரசியல் அமைப்பு   1949 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் நாள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவ்வமைப்பினை ஏற்படுத்த  இரண்டு ஆண்டுகள் 11 மாதங்கள் 18 நாட்கள் தேவைப்பட்டது. 395 பிரிவுகளும் எட்டு அட்டவணைகளும் இருந்தது. இன்று பன்னிரண்டு அட்டவணைகளாகிவிட்டது. உலகிலேயே பெரிதானதாகவும் கையால் எழுதப்பட்டதாகவும் அமைந்துள்ளது. இந்த சாசனத்தில் ஒரு இலட்சத்து பதினேழாயிரத்து முந்நூற்று அறுபத்தொன்பது சொற்கள் உள்ளன. இதனை நாடாளுமன்ற நூலகம் ஹீலியம் வாயுவால் பாதுகாத்து வருகிறது.  

இருபத்து இரண்டுமொழிகளை அலுவலக மொழியாக அரசியலைப்பு சாசனம் குறிப்பிட்டுள்ளது சிறப்பு. பிரிட்டன், அயர்லாந்து ஜப்பான், அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, கனடா என பத்து நாடுகளில் உள்ள சட்டங்களில் சிறந்தனவற்றை தேர்வு செய்து ஆக்கப்பட்டுள்ள இந்திய அரசியலமைப்புச்சட்டம் சிறப்பாக அமைகிறது

அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவராக நின்றவர் டாக்டர் அம்பேத்கர். இந்திய அரசியலமைப்பு (சாசனம்)  தந்தை எனக் குறிப்பிடப்படுகிறார்.

அண்ணல் அம்பேத்கரின் பெருமையினை உணர்த்தும் வகையிலும் இச்சாசனத்திற்காகப் பாடுபட்ட அனைவருக்கும் நன்றி கூறும் வகையிலும் பாரதப்பிரதமர் நரேந்திரமோடி 2015 ஆம்ஆண்டு நவம்பர் 26 ஆம் நாளை அரசியலமைப்பு சாசன நாளாகக் கொண்டாடும் திட்டத்தைத் தொடங்கினார்.  

.           . இந்திய அரசு சிறப்பாகச் செயல்பட  நாட்டின் முதல் குடிமகனாராகிய குடியரசுத்தலைவர் முதல் அனைத்து மக்களுக்களுக்கான கடமைகளையும் உரிமைகளையும் அரசியலமைப்பு சாசனம் நிர்ணயித்துள்ளது. இத்தகைய சட்டங்களை உள்ளடக்கியுள்ளதால் இந்நாளை இந்தியச் சட்ட நாளாகவும் கொண்டாடப்படுகிறது. நம்மைக் காக்கும் அன்னை பாரதத்தை நாமும் காக்க உறுதிகொள்வோம். ஒற்றுமையுடன் வெல்வோம்.

சனி, 19 நவம்பர், 2022

கம்பன் பாடிய கீதை - மொழியாக்கத்தின் அருமை


 

            கம்பன் பாட்டும் கீதை சாரமும்

 

கம்பன் கவிச்சக்கரவர்த்தி. கம்பன் கவிதைக்குக் கொம்பன். விருத்தம் பாடும் விருத்தன் கம்பன். என்றெல்லாம் புகழப்படும் கம்பன் சிறந்த மொழியாக்கம் செய்பவராகவும் திகழ்ந்துள்ளார்.

தமிழ்க் குழந்தைகளுக்கு கீதையின் சாரம் உணர்த்தப்படவேண்டும் என எண்ணுகிறார் கம்பர். தன்னம்பிக்கை இழக்கும் பொழுதெல்லாம் கடவுளின் துணை எப்போதும் இருக்கிறது என நம்பிக்கையூட்டும் பாடலை எழுத விரும்புகிறார். அப்படி எழுதப்பட்ட பாடலை, ஒழுங்காகப் படித்தாலோ அல்லது கற்றுக்கொடுத்தாலோ தோல்வி எண்ணமோ, தற்கொலை எண்ணமோ, கடமையில் கவனக் குறைவோ விளையாது. ஓராண்டுக்கு 1 லட்சத்து 64 ஆயிரம் பேர் தற்கொலை செய்துகொள்கின்றனர். இதனைத் தடுக்கமுடியும்.  நாட்டிலேயே உயர்ந்த தொழிலாகக் கருதப்படும் மருத்துவத் தொழிலிலேயே கவனக் குறைவால் ஆண்டுதோறும் 50 இலட்சம் பேர் இறக்கின்றனர். இப்பாடலைப் படித்து  உணர்ந்தால் தர்மத்தை அறிந்து தன்னம்பிக்கையுடன் வாழமுடியும்.

இராமனின் பெருமையினை உணர்த்த விழைந்த கம்பர், அனுமன் வாயிலாக

‘பிணி வீட்டுப் படலத்தின் எண்பத்தோறாவது பாடலை, எவராலும் எட்ட முடியாத பெருமையுடையவனாக இராமன் திகழ்வதனைப் பாடுகிறார்.

 அறம்தலை நிறுத்தி வேதம் அருள் சுரந்து அறைந்த நீதி

திறம் தெரிந்து உலகம் பூண செந்நெறி செலுத்தித் தீயோர்

இறந்து உகநூறி தக்கோர் இடர் துடைத்து ஏக ஈண்டுப்

பிறந்தனன் தன் பொற்பாதம் ஏத்துவார் பிறப்பு அறுப்பான்

எனப் பாடியுள்ளார். அறத்தை நிறுத்த ; வேதத்தின் அருள் பொழியும் நீதியை உலகம் உணர்ந்து ஏற்றுக்கொள்ள; நல்லோர் செம்மையாக வாழ ; தீயோர் வீழ்ந்தொழிய ; தகுதியுடையோர் துயர் துடைக்க ; இவ்வுலகில் பிறந்தான்.  அத்தகைய இராமனின் பொற்பாதங்களை வணங்குவோர்க்கு பிறவித்துயர் இல்லை எனப்பாடியுள்ளார் கம்பர். இத்தகைய அரும்பொருளை உணர்த்தும் பாடல்  கீதையின் சாரமாக விளங்கும் பாடலின் மொழியாக்கப் பாடலாக அமைகிறது. இராமனும் கிருஷ்ணனும் ஒரே நோக்கத்திற்காக இவ்வுலகில் அவதாரம் எடுத்ததனை இப்பாடல் உணர்த்திவிடுகிறது.  “அறம் வெல்லும் பாவம் தோற்கும்” என்னும் கொள்கையே அது.

பவித்ராணாய சாதூநாம்

விநாசாயச துஷ்க்ருதாம்

தர்ம ஸம்சாத்பநார்த்தாய

சம்பவாமி யுகே யுகே

என்னும் பகவத் கீதையின் சாரத்தைத் தான் கம்பர் மிக அழகான தமிழில் பாடியுள்ளார். “பவித்ராணாய சாதூநாம்”  என்றால் தூய்மையான அருள்பொழியும் வேதப்பொருளை உணர்த்த  ; “விநாசாயச துஷ்க்ருதாம்” என்றால் தீயவர்களை ஒழிக்க ; “தர்ம ஸம்சாத்பநார்த்தாய” என்றால் தர்மத்தை நிலைநாட்ட ; “சம்பவாமி யுகே யுகே” ; ஒவ்வொரு காலத்திலும் தோன்றுகிறேன்.

 

இது மொழிபெயர்ப்பு அல்ல ! அருமையான மொழியாக்கம். கீதையின் சாரத்தைத் தமிழாக்கம் செய்துள்ள கம்பனின் புலமை அருமைதானே

            நன்றி ! வணக்கம்.

 

சனி, 14 ஆகஸ்ட், 2021

ராணி காயிதின்லியு : ‘மலையின் மகள்’

 



ராணி காயிதின்லியு : ‘மலையின் மகள்’

என்னை எங்காவது வெளியில் அழைத்துச்செல்கிறீர்களா? எனக் கேட்காத குழந்தைகள் உண்டா? அல்லது பெரியவர்கள்தான் உண்டா? சுதந்திரமாகத் திரிவதில் இருக்கும் சுகமே சுகம்தான். எல்லாவசதிகளும் இருந்தாலும் நான்கு சுவர்களுக்குள் சிறைபட்டிருப்பது கொடுமைதானே. அப்படித்தான் ஆங்கிலேயர்கள் இந்தியர்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தனர்.  அதனை எதிர்த்துப்போராடியவர்கள் வேர்களைப் போல் அடையாமல் காணப்படாமலே மறைந்துவிட்டனர். அவர்களைக் கண்டறிந்து நினைவுகொள்வது நல்லோர் கடமை.

  ராணி காயிதின்லியு, நாகா இனத்தைச் சார்ந்த ஆன்மிகத்தலைவராகப் போற்றப்பட்டவர். தம் மக்களை ஆங்கிலேயர்கள் மலைவாழ்மக்களின் சமயத்திலிருந்து மாற்றியதால் அவர்களை எதிர்த்துப்போராடினார்.

ஆயுதமேந்தி வருபவர்களுக்கு நேராகப் புறாக்களை விடுவதும் மலர்களைக் கொடுத்து அமைதிப்பேச்சு நடத்துவதும் தவறென எண்ணியவர் அவர். எதிரிகள் எந்தமொழியில் பேசுகிறார்களோ அதே மொழியில் பேசினால்தான் அவர்களுக்குப் புரியும் என்னும் கொள்கையை முன்னிறுத்தியவர். ஆயுதத்தால் அடக்கிய ஆங்கிலேயரை ஆயுதம் கொண்டே எதிர்த்தவர்.    26 ஜனவரி 1915 இல் மணிப்பூர்  அருகில் ‘நுங்கோ’ என்னும் இடத்தில் பிறந்தார். நாகா மக்களிடையே பெரும் இனமாக விளங்கிய ‘ரோங்க்மீ’ என்னும் மலைவாழ்மக்கள் இனத்தில் பிறந்தார். கற்றுக்கொள்ளக்கூடிய ஆர்வமும் திறமையும் உடையவராக இருந்தாலும் பள்ளிகள் இல்லாததால் அவரால் முறையான கல்வியைக் கற்கமுடியவில்லை. ஆங்கிலேயர்கள் அங்குள்ள மக்களையெல்லாம் தம்சமயத்துமக்களாக மாற்றுவதில் தீவிரம் காட்டினர். இதனை எதிர்த்து, இவருடைய உறவினர் ‘ஜெடாநங்க்’ தோற்றுவித்த ‘ஹெரேகா’ என்னும் இயக்கத்தில்தான் தம்மை இணைத்துக்கொண்டார். பழமையான ‘நாகா’ மக்களின் பண்பாட்டைக் காப்பாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டார். இவருடைய இனக்குழுவுடன் பிற இனக்குழுக்களும் தம் இனப் பண்பாட்டினை ஆங்கிலேயரிடமிருந்து மீட்பது குறித்து எண்ணி ஆங்கிலேயருக்கு எதிராகப்போராடத்தொடங்கினர்.  ஆங்கிலேயர்களால் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைக் கண்டு வருந்தினர். எனவே, பெண்குழந்தைகளையும், மகளிரையும் இணைத்துக்கொண்டார். பெண்களும் தம்முடைய வீரத்தை வெளிப்படுத்த இவ்வாய்ப்பை மகிழ்வுடன் ஏற்றுப் போராடினர்.

துப்பாக்கிகளைக் கண்டறியாத மலைவாழ்மக்களை ஆங்கிலேயர்கள் அன்றைய புதியகண்டுபிடிப்புகளானத் துப்பாக்கிகளைக் கொண்டு கொன்றுகுவித்தனர். எனவே, மறைந்திருந்து தாக்கும் கொரில்லா போர் முறையிலேயே ஆங்கிலேயரை எதிர்த்தனர்.  “சுதந்திரம் எங்களது பிறப்புரிமை” என்னும் விடுதலை மந்திரத்தை முழக்கிய பாலகங்காதர திலகரின் பொன்மொழியினைப் பின்பற்றினார். “நாங்கள் சுதந்திரமான மனிதர்கள். வெள்ளைக்காரர்கள் எங்களை அடிமைப்படுத்தக்கூடாது’ என்னும் முழக்கத்துடன் போராடினார்.

1931 ஆம் ஆண்டு தமது உறவினரான ‘ஹெரேகா இயக்கத்தின் தலைவர் ஜடோனங்க்,-ஐ கைது செய்து தூக்கிலிட்டது. உடனே  ஆங்கிலேயரைக் கண்டு அஞ்சாது, குருவாகத் தாம் எண்ணிய ஜடோங்கின் தலைமைப்பொறுப்பினை கயிதான்லியு ஏற்றுக்கொண்டார். மக்களுக்குத் தன்னம்பிக்கையூட்டுவதற்காகவும் தலைமையின்றித் தடுமாறாமல் இருக்கவும் தம்இனத்தைக் காப்பதே முதல் கடமை என விழிப்புணர்வூட்டினார். ஆங்கிலேயரின் சதி வலையில் சிக்காதீர். என மக்களுக்கு அறிவுறுத்தினார். தேசிய உணர்வினை உண்டாக்கினார். நாட்டுப்பற்று இருந்தால்தான் பண்பாட்டினைக் காக்கமுடியும் எனத் தெளிவுறுத்தினார். மத அமைப்புகள் மக்களை அடிமைப்படுத்தும் வேளையில் ஆங்கிலேயருக்கு ஆதரவாக நின்றன. எனவே இவர் மதத்துவ அமைப்புகளையும் எதிர்த்தார். இவரைக் கண்டுபிடிக்க முடியாமல் ஆங்கிலேய அரசு திணறியது. மேலும், கண்டுபிடித்துத்தருவோர்க்கு 500 பணமும், பத்தாண்டுகளுக்கான வரிவிலக்கும் அளிக்கப்படும் என அறிவித்தது. ஆனால் மக்கள் அவரைக் காட்டிக்கொடுக்கவில்லை. ஆசை வார்த்தைகளுக்கு மயங்காமல் நின்றனர். அத்தனை மதிப்புக்கொண்டிருந்தனர். அன்று அப்பகுதியில் பலரும் இவருடைய பெயரையே வைத்திருந்தனர். இதனால் காவல்துறை திண்டாடியது.   மக்கள் கொண்ட ஈடுபாட்டால் காவலர்களிடம் சிக்காமலே போராடினார்.  மரத்தால் கோட்டை கட்டும் பணியில் ஈடுபட்டிருக்கும் பொழுது ‘புலோமி’ கிராமத்தில் இவரை ஆங்கிலேயர் கைதுசெய்தனர்.

1932 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு வயது 16. ஆயுள்தண்டனை வழங்கப்பட்டது. அவருக்குத் துணை நின்றவர்களுக்கும் ஆயுள்தண்டனையும் தூக்குத்தணடனையும் வழங்கப்பட்டன. 1933 முதல் 1947 வரை பதினைந்து ஆண்டுகள் பல்வேறு சிறைகளில் அடைத்துக் கொடுமை செய்தனர். பதினைந்து ஆண்டுகள் விடுதலைப்போராட்டத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டவர் இவரே.  நாட்டு விடுதலைக்குப் பின்னரே விடுவிக்கப்பட்டார். விடுதலையான பின்னரும் இவர் ‘நாகா’ மக்களின் பண்பாடு மறைந்துபோவதனைக் கண்டு மனம்வருந்தினார். மலைவாழ்மக்களின் பண்பாட்டை விட்டுவிட்டு ஆங்கிலேயர் மதத்திற்கு ‘நாகா’ மக்கள் மாற்றப்படுவதனை எதிர்த்துப் போராடினார்.  எனவே மக்கள் இவரை அவர்களுடைய கடவுளாகவே பார்த்தனர்.  வடகிழக்கு மாநிலங்களின் விடிவெள்ளியாகவே இவர் விளங்கினார். நாகா மக்களின் தெய்வமான ‘சேராச்சாமுண்டி’ -இன் வடிவமாகவே இவரைக்கண்டனர். 

ஆங்கிலேயர்களை எதிர்த்துப்போராடிய இவரை 1937 இல்  சிறையிலிருந்தபோது பண்டிட் ஜவஹர்லால் நேரு சந்தித்து அவர் விடுதலைக்கு உறுதியளித்தார்.  ‘ராணி’ என்னும் பட்டத்தை வழங்கினார். தியாகியான இவருக்கு 1982 ஆம் ஆண்டு ‘பத்மபூஷன்’ விருதும் வழங்கியது. ‘விவேகானந்தா’ சேவைவிருது 1972 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. தியாகிகளுக்காக வழங்கப்படும் ‘தாமரைப்பத்திர’ விருதும் வழங்கப்பட்டது.  1993 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் பதினேழாம் நாள் 78 வயதில் மறைந்தார். இவருக்கும் ‘பிர்ஸா முண்டா’ விருதும் இறப்புக்குப்பின் வழங்கப்பட்டது. அவர் மறைந்தாலும் இன்றும் அவருடைய வீரம் கொண்டாடப்படுகிறது.

‘மலையின் மகள்’  என ராணி கயிதன்லியு கொண்டாடப்படுகிறார். மக்களுக்காகப் போராடியவர்களின் வரலாறுதான் மக்களுக்கு வழிகாட்டுதலாக அமைகிறது. எத்தனையோ மழைத்துளிகளின் தியாகத்தால்தானே நிலம் செழிக்கிறது. இப்படி எத்தனையோ தியாகிகளின் இரவு பகல் பாராத உழைப்பால்தான் நாடு பாதுகாப்புடன் திகழ்கிறது.

 

வியாழன், 12 ஆகஸ்ட், 2021

படிப்பு எதற்கு ? - கடவுளே சொன்ன கதை

 


படிப்பு எதற்கு ? - கடவுளே சொன்ன கதை

“கடவுளே ! படிக்காத குழந்தையா கொடு” மருத்துவமனையில் பிரசவப்பிரிவுக்கு வெளியே காத்துக்கொண்டிருந்த கணவன் வேண்டுகிறான். “குழந்தை பிறக்க வைப்பதுதான் என் பொறுப்பு. அதற்குப் பின் நீதான் குழந்தையை வளர்க்கிறாய். படிக்கவைப்பதும் மறுப்பதும் உன் பொறுப்பு. புரிகிறதா” என்றார் கடவுள். “என்ன கடவுளே. இப்படி சொல்லிவிட்டீர்” என்றான் அந்த பக்தன். “சரி! கவலைப் படாதே ! அந்த வேலையைத் திரைப்படமும் தொடர்களும் பார்த்துக்கொள்ளும். இல்லாவிட்டால் மதுவும், புகையும் பார்த்துக்கொள்ளும். அதுவும் இல்லையெனில் தீய பழக்கமுடைய நண்பர்கள் பார்த்துக்கொள்வார்கள்” என்று கடவுள் சொல்கிறார். “அப்படியென்றால் என்மகனை நீ இந்த நிலையிலிருந்து காப்பாற்றமாட்டாயா?” எனக்கேட்கிறான். “யார் என்ன கேட்கிறார்களோ அதைத்தான் கொடுப்பேன். எது நல்லது? எது கெட்டது ? யாரை நம்பவேண்டும்? யாரை நம்பக்கூடாது? என்னும் தெளிவையும் கொடுத்துவிட்டேன். வேறு என்ன செய்யவேண்டும்” எனக் கடவுள் கேட்டார். வேறு எதுவும் பேசமுடியாமல் திகைத்துவிடுகிறான் பக்தன்.

அந்த இடைவெளியில் கடவுள் கேட்கிறார் “நான் ஒன்று உன்னைக் கேட்கட்டுமா?”. “கேளுங்கள்” என்றான் பக்தன். “நீ எதற்குப் படிக்காத குழந்தையைக் கேட்கிறாய்” என்றார் கடவுள். “படித்தால் வேறு எந்த வேலையும் செய்யமாட்டன். குழந்தை படிக்கிறான் என எந்த வேலையும் சொல்லவும் முடியாது. கடைக்குச் செல்லவும், திருமணம், விழாக்கள் என எந்த விழாக்களுக்கு அழைத்துச்செல்லவும் முடியாது. திருநீறு அணிவது, கயிறுகட்டுவது பொட்டுவைத்துக்கொள்வது என எந்தப் பழக்கவழக்கமும் பின்பற்றமுடியாது. தாய்மொழியில் பேசமுடியாது. பிறமொழியில் பேசத்திணறவேண்டும். தாய்மொழியில் பேசினால் தண்டம் விதிப்பார்கள். எந்தக்கேள்வியும் கேட்கமுடியாது. கேட்டால் வீட்டுக்கு அனுப்பிவிடுவோம் என அச்சுறுத்துவார்கள். படித்தால் இப்படி எத்தனையோ பிரச்சினைகள் இருக்கின்றன” எனக் கூறினான் பக்தன். “அடடா ! இவ்வளவு பிரச்சினைகளா ! இது எதுவும் தெரியாமல் நாள்தோறும் எத்தனையோபேர் என்னிடம் வந்து என் பிள்ளைக்கு நல்ல படிப்பைக்கொடு” என என்னிடம் வேண்டுகிறார்களே” என்றார் கடவுள்.

     “அப்படித்தான் வேண்டுவார்கள் கடவுளே. காலம் போகப்போகத்தான் குழந்தைகளின் மனநிலையை சரியாக்குதல் எத்தனை கடினம் என்பது புரியும். குழந்தையாக இருக்கும்போதுதான் அவர்களைப் பாதுகாப்பது கடினம். ‘வளர்ந்தபின்னாலே நிம்மதியாக இருக்கலாம்’ என எண்ணுவார்கள். ஆனால் காலம் செல்லச்செல்ல அவர்களுக்கு பிரச்சினைகள் பெருகிக்கொண்டுதான் இருக்குமேயன்றி குறைவதில்லை. அப்போதுதான் உன்னிடம் வருவார்கள் கடவுளே” என்றான். “நீ மட்டும் எப்படி பிறப்பதற்கு முன்னரே கேட்டுவிட்டாய்” என்றார் கடவுள்.

     “அதுவா! நேற்று எங்கள் வீட்டுப் பக்கத்துவீட்டில் ஒரு கோடீஸ்வரர் இறந்துவிட்டார். அவர் பிணத்தை எரித்து சடங்குகளைச்செய்ய வெளிநாட்டில் பணிசெய்துகொண்டிருந்த மகனை வரச்சொன்னார்கள். “வீடியோ காலில் வாருங்கள். இங்கிருந்தே கொள்ளிவைத்துவிடுகிறேன். நீங்கள் தொடர்ந்து சடங்குகளைச் செய்துவிடுங்கள்” எனக் கூறினான். அதனைக்கேட்டு அவனுடைய தாய் அழுதுஅழுது கன்னங்கள் வீங்கி காய்ச்சல்வந்து மருத்துவமனையில் இருக்கிறார். அப்போதுதான் பணம் எவ்வளவு இருந்தாலும் குணம்தான் முக்கியம் என்பது தெரிந்தது. அதுமட்டுமன்று படித்ததால்தானே வெளிநாட்டுக்குச் செல்கிறான். படிக்காவிட்டால் தாய்தந்தையோடு நிலத்தையும் ஆடுமாடுகளையும் பார்த்துக்கொள்வான். இயற்கையான உணவு உண்பான். உடல் நலமும் நன்றாக இருக்கும். நாள்தோறும் கடவுளை வணங்கமுடியும். திருநீறு அணியமுடியும். கையிலும் கழுத்திலும் கயிறு அணிந்துகொள்ளமுடியும். யாருடைய தலையீடும் இல்லாமல் சுதந்திரமாக வாழமுடியும்” என்றான். “படிப்பதில் இவ்வளவு சிக்கல் இருக்கிறதா?” என்றார் கடவுள்.

“நீங்கள் பள்ளிக்கூடம் சேர்ந்தால்தான் தெரியும். காலையில் ஆட்டோவிலோ வேனிலோ உங்களை அடைத்துச்செல்லும் ஒரே நாளில் அவ்வளவுதான். நீங்கள் தனியாக ஒரு அறையில் இருந்து பழக்கப்பட்டவராயிற்றே. உங்களால் முடியுமா? அதுவும் நல்ல ஆட்டோ ஓட்டுநராக இருந்தால் தப்பித்தீர். இல்லாவிட்டால் ஆட்டுகிற ஆட்டத்தில் பள்ளிக்குச்சேர்வதற்குள் அவ்வளவுதான்” என்றான் பக்தன். “சரி! உன் புலம்பலைக்கேட்டு வந்தால் என்னையே நீ பள்ளியில் சேர்த்துவிடுகிறாய். நான் வருகிறேன்” எனக்கூறிவிட்டு கடவுள் புறப்படுகிறார்.

“கடவுளே கொஞ்சம் நில்லுங்கள். எங்கள் உணவுக்குத் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக்கொள்ளவும் வேண்டும்” என்றான் பக்தன். “மனிதர்களின் தேவைக்கு மேலாகவே உணவு கொடுத்துவிட்டேன். அதனை ஒளித்துவைத்துக்கொள்ளாமல் இருந்தால் ஒருவர்கூட வறுமையில் சாகமாட்டார்கள். தன்னலத்தால் திருட்டுத்தனமாக ஒளித்துவைப்பவர்களால்தான் நாள்தோறும் பலர் வறுமையால் இறக்கிறார்கள்.  இதையெல்லாம் என்னால் பார்க்கமுடியவில்லை. கோவிலுக்குள் இருப்பதே நன்றாக இருக்கிறது. அன்புடையவர்கள் மட்டுமே அங்குவருவதால் அவர்களுக்கு அருள்வது எளிமையாகவும் இருக்கிறது” என்றார் கடவுள். “அப்படியென்றால் வறுமையில் சாவது உங்களுக்குச் சம்மதமா?”எனக்கேட்டான் பக்தன்.

“நான் ஒருகதை சொல்லட்டுமா” எனக்கேட்டார் கடவுள். “சொல்லுங்களேன்” என்றான் பக்தன். ஒரு ஓட்டலுக்கு நான்குபேர் குடும்பத்துடன் செல்கின்றனர். செல்வந்தர்கள் போல நால்வர் சாப்பிட எட்டுபேர் சாப்பிடுவதுபோல் பல உணவுகளைக் கேட்டார்கள். பணிவுடன் பரிமாறப்படுகிறது. விருப்பமான உணவுகளை உண்டுவிட்டனர். மீதமுள்ள உணவை அப்படியே விட்டுவிட்டார்கள்.  கடைசியில் கட்டணத்திற்கான சீட்டினைக் கொடுத்தார்கள். இரண்டு சீட்டு இருந்தது ஒன்றில் முந்நூறு என்றும் இரண்டாவது சீட்டில் அறுநூறு என்றும் இருந்தது. மொத்தம் தொள்ளாயிரம் என்றனர். “ஏன்” எனக்கேட்டார் செல்வந்தர். “இந்த முந்நூறு ரூபாய் சீட்டு நீங்கள் உண்ட உணவிற்கு. அறுநூறு ரூபாய் நீங்கள் வீண்செய்த உணவிற்கான தண்டம்” என்றார் உணவு பரிமாறியவர் கூறினார். “ஏன்” எனக்கேட்டார் செல்வந்தர். நீங்கள் உண்ட உணவு கடவுள் உங்களுக்காக கொடுத்த உணவு . நீங்கள் வீண்செய்த உணவானது,  வேறு ஒருவருக்கான உணவு. அதனால் அதற்கு இருபங்கு கட்டணம். மேலும் இனி உங்களுக்கு இந்த ஓட்டலில் உணவு வழங்கத்தடையும் விதிக்கப்பட்டுவிட்டது. இனி தயவுசெய்து இந்த ஓட்டலுக்கு வரவேண்டாம் என்றனர். “ஏன்” எனக் கேட்டார் செல்வந்தர். “இந்த ஓட்டல் கடவுளின் கருணையால் நடைபெறுவது. எத்தனை ஏழைகளின் உழைப்பை வீணாக்கினீர்” என்றார் பணியாளர். “பொறுத்தருள்க” என்றார் செல்வந்தர். “பெரிய சொற்களையெல்லாம் சொல்லாதீர்கள். இந்த வீணான உணவை நீங்கள் விரும்பினால் கட்டிக்கொடுக்கிறோம். அதை யாராவது ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டால் உங்களை அடுத்தமுறை வரவேற்போம்” என்றார். “அப்படியா கொண்டுவந்துகொடுங்கள். யாருக்காவது கொடுத்துவிடுகிறேன்” என்றார் செல்வந்தர். புன்னகையுடன் கட்டிக்கொடுத்தனர். இப்படி ஒவ்வொருவரும் பொறுப்புடன் வாழ்ந்தால் வறுமை இருக்குமா?” எனக்கேட்டார் கடவுள். எல்லாவற்றிற்கும் நாங்களே காரணமாகிவிட்டு உன்னைக் குறைசொல்கிறோம் பொறுத்தருள்க கடவுளே” என்றான் பக்தன்.

“சரி நான் செல்லட்டுமா?”. என்றார் கடவுள். உள்ளே “குவா குவா” என்று புதிய உயிரின் ஓசை கேட்கிறது.

புதன், 11 ஆகஸ்ட், 2021

அடிப்படை உரிமைகள் ஏழு

 


அடிப்படை உரிமைகள் ஏழு

  அடிப்படை உரிமைகள் ஏழும் உங்களுக்குத் தெரியுமா? 1. அனைவரையும் சமமாக நடத்தும் உரிமை 2. சுதந்திரமாக வாழும் உரிமை 3. சுரண்டலை எதிர்க்கும் உரிமை 4. சமயத்தைத் தேர்வு செய்யும் உரிமை 5. பண்பாடு மற்றும் கல்வியைப்  பின்பற்றுவதற்கான உரிமை 6. அரசியல் நிர்ணயச்சட்டத்தை தீர்வுகளை செயல்படுத்துவதற்கான உரிமை 7. கல்வி கற்பதற்கான உரிமை.

     இந்த ஏழு உரிமைகளையும் நீங்கள் பின்பற்றுகிறீரா? பின்பற்றினீர்கள் என்றால் நீங்கள் சுதந்திரமானவர்தான். ஒலிம்பிக் போட்டியில் இரண்டு முறை பதக்கம் பெற்ற வீராங்கனை சிந்துவின் வாழ்க்கை வரலாற்றைப் படியுங்கள். பெற்றோர் துணை நின்றதால் எத்தனை வெற்றிகளைக் குவித்து இந்தியாவிற்கே பெருமை சேர்த்திருக்கிறார். தம் திறமையை வெளிப்படுத்த முடிந்த விடுதலை உணர்வின் வெளிப்பாடுதான் சிறந்த வீரங்கனையாக மிளிர்வதன் காரணம். சிலர் தம் ஆற்றலை அறிவார் ; செயல்படுத்த இயலாது. சிலரால் செயல்படுத்த முடியும். ஆனால் அதற்கான முயற்சி இருக்காது.

தன்னம்பிக்கை, குறிக்கோள், திறமை இவற்றின் முதல் மூன்றெழுத்தும் அவர்களுக்கான தகுதியினை கூறிவிடும்தானே. இவை மூன்றையும் முறையாகச் செயல்படுத்தி தங்கப்பதக்கம் பெற்றுத்தந்த நீரஜ் சோப்ராவையும், பளுதூக்குதலில் வெள்ளிப்பதக்கம் பெற்ற மீராபாய் சானுவையும், வெண்கலப்பதக்கம் வென்ற வளைதடி அணியையும், மலியுத்த வீரர் ரவிகுமார் தஹியா, பஜ்ரங் புனியா வீராங்கனை லவ்லினாபோர்கோஹைன் அனைவரும் தம் தகுதியைப்போற்றி நாட்டுக்குப் பெருமை சேர்த்தவர்கள்தானே. இவர்கள் அனைவரும் இவ்வேழு உரிமைகளையும் பெற்றவர்கள்.

     முதல் உரிமை, அனைவருக்கும் ஒன்றுபோலவே வாய்ப்பு. பாதுகாப்புப்படையில் சேரவேண்டுமானால் உடல்நலத்தில் சிறந்தவர் எவரும் சேரலாம். வணிகம் தெரிந்த எவரும் வணிகம் செய்யலாம். கற்றவர் எவரும் கற்பிக்கலாம். உழைக்கத்தெரிந்தவர் எவரும் உழைக்கலாம். கேட்பதற்கே மகிழ்ச்சியாகத்தானே இருக்கிறது. இதனை உணர்ந்து செயல்படுவதே முதல் விடுதலை.

     இரண்டாவது உரிமை, ஒரு பெண் சாலையில் தனியாக நடந்து செல்கிறார். இருவர் கிண்டல் செய்கின்றனர். தப்பித்தால்போதும் என வீட்டிற்குவந்து தம்பியிடம் சொல்கிறாள். தம்பி “யாரது? எங்கே?” எனத் திரைப்படத்தில் வருவதுபோல் இல்லாமல், “என்னிடம் ஏன் சொல்கிறாய்.” என்றான். ‘பளார்’ என அறைந்துவிட்டு “சரியான கோழை” என்கிறாள். “உன்னையே நீ காப்பாற்றிக்கொள்ளமுடியாவிட்டால் நீ எப்படி குடும்பத்தை ; நாட்டைக் காப்பாற்றப் போகிறாய். பகல் நேரம். பலரும் நடமாடும் சாலை. சத்தமாக குரல் எழுப்பினாலே போதும். அரசு 1098 என்னும் எண்ணையும் கொடுத்திருக்கிறது. பிறகு ஏன் இப்படி ஓடி வருகிறாய். பெண்ணுக்குச் சம உரிமை எனப்பேச மட்டும் தெரிகிறது. இன்று ஓடிவந்தால் நாளையும் அப்படித்தானே கிண்டல் செய்வார்கள்” என்றான். உடனே, கிண்டல் செய்த அதே இடத்திற்குச் செல்கிறாள். இருவரையும் “பளார்” என்று அறைகிறாள். அவர்கள் ஓடிவிடுகிறார்கள். தம்பி பின்னால் நின்று இப்படித்தான் ஒவ்வொரு பெண்ணும் வீரத்துடன் இருக்கவேண்டும் என்கிறான். சுதந்திரமாக வாழ்வதன் பொருளை அறிந்து தம்பிக்கு நன்றி கூறுகிறாள்.

     மூன்றாவது உரிமை, இயற்கை அனைவருக்குமான சொத்து. இதனை எவரும் கொள்ளையடிக்க உரிமை இல்லை. நீர், மணல், கல், மலை, கனிமம் அனைத்தும் மக்களுக்கானது. இதனை எவர் சுரண்டினாலும் தவறுதான். சிலர் பணத்தையும் சிலர் உழைப்பையும் சுரண்டுவர் எதுவானாலும் தவறுதான். அதனால்தான் இத்தனை மணிநேர உழைப்பு  என அரசு நிர்ணயித்து இருக்கிறது. இயற்கையாக ஓடும் நீரை குடுவையில் அடைத்து அதிக விலைக்கு விற்பது எத்தனை ஏமாற்றுத்தனம்தானே. ஆயிரம் லிட்டர் தண்ணீர் பத்துரூபாய்க்குப் பெற்று ஒரு லிட்டர் நீரை இருபது ரூபாய்க்கு விற்கும் நிலையினைக் காணமுடிகிறதுதானே. இப்படி உணவுப்பொருட்களை அதிக விலைக்கு விற்பது. குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் வேலைவாங்குவது. திருமணமாகாத பெண்களை மட்டுமே வேலைக்கு வைப்பது. திருமணமான பெண் எனில் சமைப்பது ; குழந்தையைப் பார்த்துக்கொள்வது எனக் கூறுவது. பெண்கள் எனவும் பாராமல் இரவு காலம் கடந்து பணியிலிருந்து அனுப்புவது. மகப்பேறுக்கு விடுப்பு கொடுக்காமலிருப்பது ; அப்படியே கொடுத்தாலும் சம்பளப்பிடித்தம் செய்வது. இப்படி எத்தனையோ சுரண்டல்கள் உள்ளன. இவற்றைச்செய்வோர் அனைவரும் குற்றவாளிகளே. தவறான பாதையில் வேகமாகச் செல்வதைவிட நல்லவழியில் மெதுவாகச் செல்வதே பெருமை என்று உணரவேண்டும். தண்ணீர் அனைத்தையும் விற்று பணமாக்கியவர்கள் நாளைய தலைமுறைக்குத் தண்ணீர் கிடைக்காது வாடும்நிலை ஏற்படுவதனை உணரவேண்டும். பணத்தைவைத்து வாழமுடியாதுதானே.

     நான்காவது உரிமை, எந்தச்சமயத்தையும் எவர் வேண்டுமானாலும் பின்பற்றும் உரிமை. எவருடைய தலையீடும் இல்லாமல் எந்தக்கடவுளையும் வணங்கும் உரிமை. மன அமைதியைத் தருவதற்கும் நாட்டில் அமைதி நிலவுவதற்கு சமயம் துணையாக நிற்கவேண்டும். அதற்கான சுதந்திர உரிமை.

     ஐந்தாவது உரிமை, முன்னோர் மரபினைப் பின்பற்றுவதில் உரிமை. முன்னோர்கள் காரணமறிந்தே பழக்கவழக்கங்களை வரையறுத்தார். அதனை உணர்ந்து பின்பற்றவேண்டும். அவற்றை மறந்து புதிய வழக்கங்களுக்கு ஆட்பட்டதனாலேயே நோய்கள் பெருகி வருந்துவதனைப் பார்க்கமுடிகிறது. அவ்வாறே விருப்பம்போல் விரும்பிய கல்வியினைப் படிப்பதிலும் உரிமை. யாரையும் கட்டாயப் படுத்தக்கூடாது. இன்றுகூட ‘தானே’ என்னுமிடத்தில் பதினைந்து வயது சிறுமியை ‘நீட்’ தேர்வுக்குப் படித்தே ஆகவேண்டும் என வற்புறுத்தியுள்ளார்கள். தாய்க்கும் மகளுக்கும் நடந்த சண்டையில் என்ன செய்கிறோம் எனத் தெரியாமல் தாயைத்தள்ளிவிடுகிறாள் மகள். தலை கட்டிலின்மீது பட்டதும் ரத்தம் தெறிக்கிறது. தாய் இறக்கிறாள். எத்தனை கொடுமை. கட்டாயப்படுத்துவதால் ஒரு குடும்பம் என்ன நிலைக்கு மாறிவிடுகிறது. எனவே, ஒவ்வொருவரும் தாங்கள் விரும்பும் கல்வியைப் பயில்வதற்கான உரிமை.

     ஆறாவது உரிமை, அரசியல் நிர்ணயச்சட்டம் செயல்படுத்தப்படவேண்டிய நிலையினைப் பின்பற்றும் உரிமை. நாட்டை வழிநடத்தும் சட்டதிட்டங்களை எவர் அவமதித்தாலோ, பின்பற்றப்படாவிட்டாலோ அதனை உணர்த்துவதற்கான உரிமை.

     இந்த ஆறு உரிமையுடன் ஏழாவது உரிமையாகச் சொத்துரிமை இருந்தது. ஆனால், இந்தச் சொத்துரிமையைத் தவறாகப் பயன்படுத்தி அளவுக்கு மீறிய சொத்துக்களைச் சேர்த்தனர். அரசுக்குத்தேவையானபோது சாலை, தொடர்வண்டி போக்குவரத்து பாலம், தொழிற்சாலை, என ஏதேனும் ஒரு நாட்டு நலனுக்காக ; மக்களின் வேலை வாய்ப்புக்காக ; அந்நிய இறக்குமதியைக் குறைப்பதற்காக ; அந்நிய ஏற்றுமதியை ஊக்குவிக்க என அரசு பல திட்டங்கள் வைத்திருக்கும்தானே. நாடு வல்லரசாவதனைப் பிறநாடுகள் விரும்புமா? அதனால் யாருக்காவது காசுகொடுத்து போராட்டம் நடத்தி நாட்டுநலனைக் கெடுத்துவிடுவர். பணத்திற்கு ஆசைப்பட்டு, “அரசு தரும் நிலத்தைப் பெற்றுக்கொள்ளமாட்டோம்” எனத் தங்கள் அரசையே எதிர்ப்பர். எனவே இந்தச் சொத்துரிமை அடிப்படை உரிமையிலிருந்து 1978 ஆம் ஆண்டு நீக்கப்பட்டது. அதனால் ஆறாக மட்டுமே இருந்தது. ஆனால் குழந்தைகளின் கல்வி குறித்து எண்ணிய அரசு அதற்கான உரிமையை ஏழாவது உரிமையாகக் கொண்டுவந்தது.  

     ஏழாவது உரிமை:  சில குழந்தைகள் கற்கவும் ; சில குழந்தைகள் பணிக்குச் சென்று உழைப்பதும் ஏற்றத்தாழ்வாகும். எனவே, அனைத்துக் குழந்தைகளும் கல்வி கற்க அரசு ஆவன செய்யவேண்டும். இச்சட்டம் 2010ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் நாள்முதல் நடைமுறைக்குக்கொண்டு வரப்பட்டுள்ளது.  எனவே, ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி கற்பிப்பதன் முக்கியத்துவம் உணர்த்தப்படுகிறது. இதுவே கல்வி உரிமை.

     இந்த ஏழு உரிமையினை அனைவரும் அறிந்து செயல்படுத்தினால் நாடு வல்லராசாகும். பின் என்ன நாட்டு மக்களும் வல்லரசர்தானே.