தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

சனி, 19 நவம்பர், 2022

கம்பன் பாடிய கீதை - மொழியாக்கத்தின் அருமை


 

            கம்பன் பாட்டும் கீதை சாரமும்

 

கம்பன் கவிச்சக்கரவர்த்தி. கம்பன் கவிதைக்குக் கொம்பன். விருத்தம் பாடும் விருத்தன் கம்பன். என்றெல்லாம் புகழப்படும் கம்பன் சிறந்த மொழியாக்கம் செய்பவராகவும் திகழ்ந்துள்ளார்.

தமிழ்க் குழந்தைகளுக்கு கீதையின் சாரம் உணர்த்தப்படவேண்டும் என எண்ணுகிறார் கம்பர். தன்னம்பிக்கை இழக்கும் பொழுதெல்லாம் கடவுளின் துணை எப்போதும் இருக்கிறது என நம்பிக்கையூட்டும் பாடலை எழுத விரும்புகிறார். அப்படி எழுதப்பட்ட பாடலை, ஒழுங்காகப் படித்தாலோ அல்லது கற்றுக்கொடுத்தாலோ தோல்வி எண்ணமோ, தற்கொலை எண்ணமோ, கடமையில் கவனக் குறைவோ விளையாது. ஓராண்டுக்கு 1 லட்சத்து 64 ஆயிரம் பேர் தற்கொலை செய்துகொள்கின்றனர். இதனைத் தடுக்கமுடியும்.  நாட்டிலேயே உயர்ந்த தொழிலாகக் கருதப்படும் மருத்துவத் தொழிலிலேயே கவனக் குறைவால் ஆண்டுதோறும் 50 இலட்சம் பேர் இறக்கின்றனர். இப்பாடலைப் படித்து  உணர்ந்தால் தர்மத்தை அறிந்து தன்னம்பிக்கையுடன் வாழமுடியும்.

இராமனின் பெருமையினை உணர்த்த விழைந்த கம்பர், அனுமன் வாயிலாக

‘பிணி வீட்டுப் படலத்தின் எண்பத்தோறாவது பாடலை, எவராலும் எட்ட முடியாத பெருமையுடையவனாக இராமன் திகழ்வதனைப் பாடுகிறார்.

 அறம்தலை நிறுத்தி வேதம் அருள் சுரந்து அறைந்த நீதி

திறம் தெரிந்து உலகம் பூண செந்நெறி செலுத்தித் தீயோர்

இறந்து உகநூறி தக்கோர் இடர் துடைத்து ஏக ஈண்டுப்

பிறந்தனன் தன் பொற்பாதம் ஏத்துவார் பிறப்பு அறுப்பான்

எனப் பாடியுள்ளார். அறத்தை நிறுத்த ; வேதத்தின் அருள் பொழியும் நீதியை உலகம் உணர்ந்து ஏற்றுக்கொள்ள; நல்லோர் செம்மையாக வாழ ; தீயோர் வீழ்ந்தொழிய ; தகுதியுடையோர் துயர் துடைக்க ; இவ்வுலகில் பிறந்தான்.  அத்தகைய இராமனின் பொற்பாதங்களை வணங்குவோர்க்கு பிறவித்துயர் இல்லை எனப்பாடியுள்ளார் கம்பர். இத்தகைய அரும்பொருளை உணர்த்தும் பாடல்  கீதையின் சாரமாக விளங்கும் பாடலின் மொழியாக்கப் பாடலாக அமைகிறது. இராமனும் கிருஷ்ணனும் ஒரே நோக்கத்திற்காக இவ்வுலகில் அவதாரம் எடுத்ததனை இப்பாடல் உணர்த்திவிடுகிறது.  “அறம் வெல்லும் பாவம் தோற்கும்” என்னும் கொள்கையே அது.

பவித்ராணாய சாதூநாம்

விநாசாயச துஷ்க்ருதாம்

தர்ம ஸம்சாத்பநார்த்தாய

சம்பவாமி யுகே யுகே

என்னும் பகவத் கீதையின் சாரத்தைத் தான் கம்பர் மிக அழகான தமிழில் பாடியுள்ளார். “பவித்ராணாய சாதூநாம்”  என்றால் தூய்மையான அருள்பொழியும் வேதப்பொருளை உணர்த்த  ; “விநாசாயச துஷ்க்ருதாம்” என்றால் தீயவர்களை ஒழிக்க ; “தர்ம ஸம்சாத்பநார்த்தாய” என்றால் தர்மத்தை நிலைநாட்ட ; “சம்பவாமி யுகே யுகே” ; ஒவ்வொரு காலத்திலும் தோன்றுகிறேன்.

 

இது மொழிபெயர்ப்பு அல்ல ! அருமையான மொழியாக்கம். கீதையின் சாரத்தைத் தமிழாக்கம் செய்துள்ள கம்பனின் புலமை அருமைதானே

            நன்றி ! வணக்கம்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக