தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

ஞாயிறு, 11 டிசம்பர், 2022

தும்மல், மூக்கடைப்பு நெருங்காதிருக்க பதஞ்சலியார் சொல்லிய எளிய முறைகள்

 

 

 Close up of baby looking at camera with blue eyes Close up of a baby girl looking at camera with a big blue eyes with a green unfocused background sneezing stock pictures, royalty-free photos & images

முதுகெலும்பு வலி கழுத்துவலி இல்லாத குழந்தைகள் முதல் பெரியவர் வரை எவரும் செய்யலாம்.

மூன்று வேளையும் உணவு உண்ணும்முன் செய்யவேண்டியது.

முதலில் –

நிமிர்ந்து நன்றாக அமர்க.  இயல்பாக அமர்வதே சுகாசனம் – ஒரு உள்ளங்கை மேல் இன்னொரு உள்ளங்கை வைத்து மூச்சினை கவனிக்க. மெதுவாக 10 எண்ணிக்கை. மனம் அமைதி அடையும்

இரண்டாவது

நிமிர்ந்து முதுகெலும்பு நேராக அமர்க.  நடுவிரல், சுண்டு விரலை விட்டுவிட்டு மற்றா மூன்று விரல் நுனிகளைச் சேர்க்கவும். இரண்டு விரலையும் நீட்டி 2 முதல் 5 நிமிடம் வரை மூச்சை சீராக கவனிக்க.

 மூன்றாவது

மோதிர விரல் மடித்துவிடுக. சுண்டு விரல் நீட்டுக. மற்ற மூன்று விரல்நுனிகளைச் சேர்க்க. . ஒரு விரலை மட்டும் நீட்டி 2 முதல் 5 நிமிடம் வரை மூச்சை சீராக கவனிக்க.

 

உசட்டாசனம்

            வஜ்ராசனம்; - முட்டி போட்டுஇரண்டு கால்களிடைய அமர்தல். பின் வஜ்ராசனத்திலேயே நிமிர்ந்து இரண்டு கைகளால் இரண்டு கால்களை முன்னிருந்து பின்னோக்கிச் சென்று கால்களைப் பற்றுக. முடிந்தவரை பின்னால் கழுத்தை பூமிநோக்கித் தள்ளவும். மெதுவாக 10 எண்ணிக்கை. மனம் அமைதி அடையும்

 

பிறை ஆசனம் – நுரையீரல் சுத்தம்

            கால்களை ஒரு அகலமாக வைத்து நிற்க. பின்னால் வளைந்தால் விழாமல் இருக்க இரு கைகளையும் இடுப்பில் வைக்க. மெதுவாக பின்னால் முடிந்தவரை வளைக.

 

நிறைவாக

            சுகாசனம் – மெதுவாக மூச்சை இழுத்து , அடக்கி, விடவேண்டும். 5 எண்ணிக்கை அளவில் அளந்து விடுக.

            அனைத்து துன்பமும் ஓடிவிடும். வரவே வராது. வருமுன் காப்போம்.

வெள்ளி, 9 டிசம்பர், 2022

பாரதி - பன்மொழிப்புலவர்

 

பாரதியார் வாழ்க்கை வரலாறு#barathiyaar katturai#tamil - சிறுவர்களுக்கான  அறிவுத்திறன் வளர்ச்சிக்குரிய வழிகாட்டல்கள்

சின்னசாமி பெற்றெடுத்த பெரியசாமி

இலட்சுமி பெற்றெடுத்த சரஸ்வதி.

அவர் முண்டாசு கட்டிய பட்டாசு

என்பார்கள் . அது மட்டுமா

பகைவர்படையும் அவர்க்கு கால்தூசு

அவர் தமிழுக்கில்லை ஒரு மாசு.

தேசமும் தெய்வமும் இரு கண்கள்

பேச்சும் எழுத்தும் விண்மீன்கள்

 

சுப்பிரமணியன் ஆறு வயதில் ‘பாரதி’  ஆனார்.

தமிழ்க்கடவுள் கல்விக் கடவுளானார்.

யார் இந்த பாரதி ?

எத்தனை முறை கேட்டாலும் இனிக்கும்

ஏனென்றால்

அவன் வாழ்ந்த வாழ்க்கை இலக்கியமாய் கனக்கும்

பரங்கியன் ஆண்ட காலத்தில்

மண்ணுரிமை கொண்டோரெல்லாம் மண்டியிட்டுக் கிடந்தனர்.

அந்நியர் நம்மை அடிமையாக்கி  நாய்போல் நடத்திய காலத்தில்

‘அச்சமில்லை அச்சமில்லை’ எனத் துணிந்து நின்று நடுங்கவைத்தவர்.

வளைந்த முதுகெலும்பை பாட்டு சிகிச்சையால் நேராக்கினார் ; மதியைக்கூறாக்கினார்.

பாரதி உன்னால்தான் தமிழ் எழுத்துக்கள் அத்தனையும் ஆயுத எழுத்துக்களாய் மாறின.

பாரதத்தாயை வரைய வேண்டும் – செல்வத்தாயாகவா? அடிமைத்தளையில் சிக்குண்ட வறுமைத்தாயாகவா? எனக் கேட்டார் ஓவியர்

தாய் என்றும் தாயாகத்தான் இருக்கிறாள். காக்க வேண்டிய பிள்ளைகள்தான் பரங்கிய நரிகளின் கால்களைப் பிடித்தன.  அவள் என்ன செய்வாள்.

படையில் உள்ள யானைக்கும் குதிரைக்குமே தங்கத்தில் படாம் செய்து அழகுபார்த்தவள் தமிழ்த்தாய்.

நெற்றியில் அக்னிப்பொட்டைத் தவிர அனைத்தும் தங்கம்தான். அணிகலன்கள் அனைத்தும் அவள் சொத்து. அதை அணியமறந்தால் அதுவே பித்து.

            சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே ; அதை தொழுது படித்திடடி பாப்பா என்றவர்

            செல்வ மிகுந்த இந்துஸ்தானம் – அதை  தினமும் புகழ்ந்திடடி பாப்பா

என்றார். தேசபக்தி குழந்தைக்கு அவசியம் என்றுணர்த்தியவர் பாரதியார்.

தமிழர்களை வட நாட்டார் வெறுத்த காலம் மலையேறிவிட்டது. தமிழைக் காசியோடு இணைத்தவன் பாரதி. அவன் கண்ட கனவால் இன்றும் தமிழர்கள் காசியில் தமிழ்பாடச் சென்றார்கள் ; வென்றார்கள்.

இரயில் பெட்டியில் இருக்கையில் அமரவிடாமல் விரட்டிய காலத்தை மாற்றினார்.  தமிழர்களை இன்று ஆரத்தி எடுத்து வரவேற்க வைத்தவன் பாரதி.

நீர் காசியில் வாழ்ந்ததால்தான் தமிழன் காசிக்குச் சென்றான்.

நீர் காஷ்மீரம் சென்றிருந்தால் அங்கும் தமிழன் சென்றிருப்பான்

நீர் முப்பத்தொன்பதில் வாழ்க்கைப்பயணத்தை முடித்துக்கொண்டாய்

ஆனாலும் நூற்றாண்டுக்குப் பின்னும் நீயே மாகாகவியாய் உள்ளத்தில் நின்றீர்.

‘மந்திரம்போல் வேண்டுமடா சொல்லின் இன்பம்’ என்று சொல்லிவிட்டுப்போகாமல்

 ஒவ்வொரு சொல்லையும் மந்திரமாக்கினாய்.

 திரைப்படத்திற்கு பெயர் வைப்பதற்குக்கூட உன் கவிதைப்புத்தகம் தான் அகராதியாகிறது.

அன்று நீர் எழுதிய கவிதைதான் வழிநடத்தியது. அதனால்தான் விடுதலைப்போராட்டம் விண்ணை முட்டியது.

வேடந்தாங்கள் பறவைகளாய் வாழ்ந்த நம்மை

வேடம் தாங்கி வணிகராய் வந்தவர்கள் நாடாளச் சூழ்ச்சிசெய்தார்கள்.

அவ்வலையில் சிக்கிய நாய்கள் எல்லாம் அவன்போட்ட ரொட்டித்துண்டுக்கு ஆசைப்பட்டு வளர்த்தவர்களையே கடிக்கத்தொடங்கின.

“மனதில் உறுதி வேண்டும் என்றாய்” உன் பாடலை கேட்டவர்க்கு சொரணை வந்தது ; அந்நியர்க்கு மட்டும் பயமே நின்றது. அதனால் தான் உன் கவிதைகளை குண்டுகள் எனச்சொல்லி ஆயுதம் தாங்கிய குற்றம் சொல்லி தேடிவந்தான். .

தேசியக்கொடியைப் பார்க்கும்போதெல்லாம் நீ எனக்குள் வந்துவிடுகிறாய்

செந்நிறம் உன் நெற்றித் திலகத்தையும்

வெந்நிறம் உன் கம்பீர முண்டாசையும்

பச்சைநிறம் உன் பசுமை மாறாத பாடல்களையும்

சக்கரம் உன் கண்ணன் பக்தியையும் நினைவுறுத்தி விடுகின்றன.

“தாயின் மணிக்கொடி பாரீர்” என உன் பாடலைப் பாடி மகிழ்கிறோம்

 

பன்மொழிப் புலவர் பாரதி. தமிழுக்கும் வடமொழிக்கும் பாலம் கட்டியவர் பாரதி. அதனால்தான் மொழி எல்லைகளைக் கடந்து ஒற்றுமையுடன் வாழமுடிந்தது. பிரிவினைப் பள்ளங்களைக் கடக்கமுடிந்தது. அதனால் தான் புண்ணியம் சேர்க்கும் காய்த்ரி மந்திரத்தை தமிழரும் பாடவேண்டும் என எண்ணினார் பாரதி

                    ஓம் பூர்புவஸ் வஹ ; 

                    தத் சதுர்வரேண்யம் ;

                    பர்கோ தேவஸ்ய தீமஹி ; 

                    தியோ யோஹ ப்ரசோதயாத்

.என்னும் மந்திரத்தை

                        செங்கதிரோனே தேவனே

                        சிறந்த ஒளியைத் தேர்கின்றோம்

                        எங்கள் அறிவைத் தூண்டிடுவாய்

                        நடத்திடுவாயே எம்மையே

எனப் பாடினான் பாரதி.

பாரதியே ! உன்னால் தமிழ் மட்டும் இமயம் தொடவில்லை

தமிழரும் இமயம் தொட்டனர்.

“திறமையான புலமையெனில் வெளிநாட்டார் அதை வணக்கம் செய்ய வேண்டுமென்றீர்”

தமிழ்க்கவிதைகளை  உலகக்கவிதைகளாகினாய் பாரதி  !

அப்படியென்றால் நீதான் தமிழுக்கு உண்மையான சாரதி !

நூறு வருடங்கள் ஆன பின்னும் உன் கவிதை புதுக்கவிதையாகவே வலம் வருகிறது. புது ரத்தம் தருகிறது.

உன் மீசையில் கூட பரங்கியன் முளைத்துவிடக்கூடாதென முப்பத்தொன்பதுக்குள் முந்தியவனே !

மீண்டும் நீ பிறக்க வேண்டும் என்பதனால் இன்றும் உன் 141 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறோம்.  மகாகவியே வணக்கம் ! உம் புகழ் இமயமாய் நிலைக்கும்.  

பாரதி 2022 - பாரதியும் பாரதமும்

பாரதியார் கட்டுரை | Bharathiyar Katturai in Tamil

பாரதி நீர் சொல்லில் மட்டுமல்ல பெயரிலும் தீ வைத்திருந்தீர்

அதனால் தான் நாங்கள் அடிமை இருட்டிலும் வெளிச்சத்தைப் பெற்றோம்

உன் கனவெல்லாம் மெய்யானது பாரதி. எங்கும் விடுதலை.

புதுமைப்பெண்கள் இரவிலும் நடக்கின்றார் ; எத்தடையாயினும் கடக்கின்றார்.

‘வந்தே மாதரம் என்போம்’ என்றீர். அதனையே மந்திரச்சொல்லாய் மாற்றிக்கொண்டோம்

பயம் கொல்லச்சொன்னீர் – தேசம் துணைநிற்குமென நம்மவர் அச்சத்தையும் உலகோர் அச்சத்தையும் ஒருங்கே கொன்றோம்.

பகை வெல்லச் சொன்னீர் – பகை நாடுகளும் பாராட்ட வரிசையில் நிற்கச் செய்தோம்

வெள்ளிப் பனி மலையின் மீதுலவச் சொன்னீர் – சுற்றுலா தளமாக்கி உறவுகளோடு உலவச்செய்தோம்

கடல் முழுதும் கப்பல் விடச்சொன்னீர் – கப்பலுடன் விமானமும் பறக்கச்செய்தோம்

பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்யச்சொன்னீர் – கோயில்கள் கட்டி வியக்கச் செய்தோம்

பாரததேசமென்று தோள் கொட்டச் சொன்னீர் – நாடெங்கும் ‘ வந்தே மாதரம்’ முழங்கச் செய்தோம்.

பாலம் அமைக்கச் சொன்னீர் -  பாலங்களோடு பாதாளங்களையும்   கட்டச்செய்தோம் – பறக்கும் ரயிலில் பயணம் செய்தோம்

வீதி சமைக்கச் சொன்னீர் – பாறைகளைக் குடைந்து 8 வழி வீதிகளைச் சமைத்துவைத்தோம் – நான் கு எல்லைகளையும் இணைக்கச்செய்தோம்

வங்க நதியால் மையநாடுகளில் பயிர் செய்யச்சொன்னீர் – நதிகளை இணைத்துவிட்டோம் ; பயிர்களை செழிக்க வைத்தோம்

பல பொருளைத் தோண்டி எடுக்கச்சொன்னீர் – சொக்கத்தங்கம் முதல் கருப்புத்தங்கம் வரை  அனைத்தையும் எடுத்து வைத்தோம். அதில் மின்சாரத்தால் ஒளிரவிட்டோம்

எட்டுத்திசை சென்று விற்கச்சொன்னீர் –  கோதுமை முதல் மருந்துகள் வரை அனைத்தையும் கொடுத்துவிட்டோம்

எண்ணும் பொருளைக் கொண்டுவரச்சொன்னீர் – திறன்பேசி முதல் மின்கல வாகனம்வரை அனைத்தையும் கொண்டு வந்துவிட்டோம்

உலகமே விருப்பத்துடன் நம்மருள் வேண்டச்சொன்னீர் – இன்று நம் தலைமையை உலகமே நாடச்செய்தோம் ; ஒன்றாகக் கூடச் செய்தோம்

கோதுமை வெற்றிலைக்கு மாற்றச்சொன்னீர் – எல்லோருக்கும் கோதுமையினை பகிர்ந்தளித்தோம் ; நாடியோர் பசி நீக்கச் செய்தோம்.

மராட்டியக் கவிதைக்கு சேரத்துத் தந்தங்கள் தரச்சொன்னீர் – நாங்கள் யானையையே பரிசளித்து மகிழ்வித்தோம்.

காசியையும் காஞ்சியையும் இணைக்க கருவி செய்யச்சொன்னீர் – காசினியையே இணைக்கும் கருவி செய்தோம் ; அதில் காணவும் செய்தோம்

ராசபுதானத்து வீரர்க்கு கன்னடத்தங்கம் அளிக்கச்சொன்னீர் – தங்கப்பதக்கங்களை அளித்தே மகிழ்ந்தோம்

ஆடை மற்றும் உடைகளை குவிக்கச்சொன்னீர் – குவித்துவைத்தோம் ; அகதிகளுக்கும்  பகுத்து தந்தோம்

காசினி வணிகர்க்கு கொடுக்கச் சொன்னீர் – கொடுத்துவிட்டோம் – அள்ளிக் கொடுத்துவிட்டோம்

ஆயுதம் செய்யச் சொன்னீர் - விடுதலை நாள் அணிவகுப்பில்  நம் நாட்டு துப்பாக்கிகளைக் கொண்டே ஒலிக்கச் செய்தோம் – விண்ணை அதிரச்செய்தோம்

காகிதம் செய்யச்சொன்னீர் – பிறநாடுகளும் மதிக்கும் வகையில் பணக் காகிதங்களை செய்துவிட்டோம் ; மதிப்பைக் கூட்டிவிட்டோம்

ஆலைகள் வைக்கச்சொன்னீர் – மருத்துவத்தேவைக்கான ஆலைகள் முதல் பல ஆலைகள் வைத்தோம்

கல்விச்சாலைகள் வைக்கச்சொன்னீர் – உலகத் தரத்தினில் அயல்நாட்டினர் வந்து கற்கும் வகையில் கல்விச்சாலைகள் வைத்தோம்

ஓயுதல் செய்யோம் என்றீர் – உலக நாடுகளே அழைத்து, பணி கொடுக்கும் அளவிற்கு ஓய்வை மறந்துவிட்டோம் – பறக்கும் ட்ரோனை விட்டோம்

தலை சாயுதல் செய்யோம் என்றீர் – தோல்வி என்னும் சுவடே இன்றி பகைவரை எல்லை தாண்டியே விரட்டிவிட்டோம் – வந்தால் நோவாய என மிரட்டிவிட்டோம்

உண்மைகள் சொல்வோம் என்றீர் – எந்த நாடு எந்த நாட்டுடன் பகைகொண்டாலும் உண்மை நிலைக்கச் சொன்னோம் அதையும்உரக்கச் சொன்னோம்.

வண்மைகள் செய்யச் சொன்னீர் – உலகமே கண்டு மகிழும் வகையில் விமான தளங்கள் செய்தோம் – வள நிலங்கள் செய்தோம்

 குடைகளும் படைகளும் செய்யச் சொன்னீர் – படைகளைச் செய்தோம். பிறநாடுகளுக்கு பயிற்சியும் செய்தோம்

கோணிகளையும் இரும்பாணிகளையும் செய்யச்சொன்னீர் – பிறநாடுகளுக்கு செயற்கை கோள்கள் செய்தோம் – அவற்றை விண்ணில் உலவச்செய்தோம்

வண்டிகளும் அஞ்சி நடுங்கும் கப்பல்களை செய்யச்சொன்னீர் – விண்ணைக் கிழிக்கும் ராக்கெட்டுகள், போர் செய்யும் நீர்மூழ்கிக் கப்பல்கள் என ஓட்டச்செய்தோம்

மந்திரம் கற்கச்சொன்னீர் ; வேதபாட சாலை அமைத்தோம் – யோக சோலை அமைத்தோம்.

வினைத்தந்திரம் செய்யச் சொன்னீர் – உலகமே நம் தேசத்தை நட்பு நாடாகக் கொள்ளச்செய்தோம் ; வறுமையை வெல்லச் செய்தோம்

வானை அளக்கச்சொன்னீர் – வானின் நிலையை  அறியச்செய்தோம் – வானெல்லை வகுக்கச் செய்தோம்.

கடல் மீனை அளக்கச்சொன்னீர் – மீனவன் எப்போது செல்ல வேண்டும் என முன் கூட்டியே அறிவித்தோம் – உயிர் காத்தோம்

சந்திர மண்டலத்தியல் கண்டு தெளியச்சொன்னீர் – சந்திர மண்டலத்தில் நீருள்ளதையே கண்டறிந்தோம் ; ஆய்வைத் தொடர்ந்தோம்

சாத்திரம் கற்கச் சொன்னீர் – சாத்திரத்தோடு தோத்திரமும் கற்கச் செய்தோம் ; அதன் வழியே நிற்கச் செய்தோம்

காவியம் செய்திடவும் காடுகள் வளர்த்திடவும் வேண்டுமென்றீர் -  பாலைவனங்களையும் சோலைவனமாக்கச் செய்தோம் ; கவி பாடச் செய்தோம்

கலையும் உலையும் வளர்க்கச்சொன்னீர் –கலைகளோடு தொழில் நுட்பம் வளர்த்து உலகுக்கே உருக்காலை சமைத்தோம்

சாதி இரண்டென்றீர் ; நேர்மையர் மேலோர் என்றீர் - கீழவர் மற்றோர் என்றீர்; மேலோரை ஒன்றிணைத்தோம்  ; மற்றோர்க்கு வாய்ப்பளித்தோம்.

            நம் பெருமை நாம் அறிவோம் ; பிறர் அறிய வழிவகுப்போம்.

செவ்வாய், 22 நவம்பர், 2022

அரசியல் அமைப்பு நாள் - நவம்பர் 26 (CONSTITUTION DAY - NOVEMBER 26)

Indian Parliament Pdf in Tamil

ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசியல் சாசனம் என்னும் இந்திய அரசியலமைப்பு நாள் நவம்பர் 26 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்தியா என்பது தாய். அதன் குழந்தைகள் மாநிலங்கள். குழந்தைகளுக்கு ஏதேனும் பாதிப்போ குழந்தைகளுக்கிடையே ஏதேனும் பாதிப்போ வந்தால் தாய்போல் மத்திய அரசு காக்கும். மாநில அரசுகளால் கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலை உருவானால் மத்திய அரசின் உதவியை நாடும். தம்பியை அண்ணன் அடித்துவிட்டால், தம்பி தாயின் உதவியை நாடுவதுபோல் மத்திய அரசை மாநில அரசுகள் உதவிகள் கேட்கும். அந்நிய நாட்டினர் ஊடுருவல், தீவிரவாதம், குண்டுவெடிப்பு, வெள்ள பாதிப்பு, நில நடுக்கம், கலவரங்கள், போராட்டங்கள் என அனைத்து இடர்பாடுகளுக்காகவும் மாநில அரசு மத்திய அரசினை அணுகும். சில மாநிலங்களின் நிலம், மக்கள், வேலைவாய்ப்பு, நிர்வாகம், என அனைத்துக் காரணங்களையும்கொண்டு மக்களின் வேண்டுகோளுக்கிணங்க தேவைகளுக்கேற்ப மாநிலத்தை இரண்டாகப் பிரித்தும் அல்லது ஒன்றாகச்சேர்த்தும் நிர்வாகம் சீரடைய மத்திய அரசு உதவும். இவ்வாறு ஒவ்வொரு மனிதரின் வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்கும் துணைநிற்க உருவாக்கப்பட்டதே இச்சட்டம்.  ஒரு குடும்பத்தின் ஒழுங்குமுறைபோல இந்நாட்டை நல்வழிப்படுத்த உருவாக்கப்பட்டதே அரசியலமைப்புச் சட்டம்.

            இந்திய மக்கள்  மக்களாட்சி முறையில் மக்களே ஆளும் வகையில் ஏற்றத்தாழ்வின்றி சரிநிகர்சமானமாக வாழ்வதற்காகவே இவ் அரசியல் அமைப்பு அமைந்துள்ளது. அனைவருக்கும் ஒரே வகையான வாய்ப்பு வழங்கப்படவேண்டும் என்பது கொள்கை. மனிதர்கள் அனைவரும் மதிக்கப்படவேண்டும். அதுபோலவே நிலம், கடல், மலை, நதி அனைத்தும் மதிக்கப்படவேண்டும்.  அனைவரின் தேவைக்காகவுமே அவை உள்ளன. அனைவருக்கும் உடுக்க உடை, இருக்க இடம், உண்ண உணவு உறுதி செய்யப்படவேண்டும். மக்கள் அனைவரும் நோயற்ற ; நலமான வாழ்வுவாழும்வகையில் அரசு செயல்படவேண்டும் எனக் குறிப்பிடுகிறது.

            இந்திய நாட்டில் எங்கு செல்லவும், பேசவும், கற்கவும், சங்கம் அமைக்கவும், அச்சுறுத்தாமல் அமைதியாக வாழவும்,  விருப்பமுடடைய முறையான தொழில்கள் செய்து பிழைக்கவும் பிறசமயங்களைக் குறைகூறாது தம் சமயங்களைப் பின்பற்றி வாழ்தலுக்கான உரிமையும் வழங்கப்பட்டுள்ளது.

            ஆயுதங்கள் மட்டுமின்றி எவ்வகையிலும் பிறருக்கு அச்சமூட்டும் வகையில் நடக்கவும், பிறரை வற்புறுத்தும் வகையில் வேலை வாங்குதலும் சிறார்களைப் பணியில் சேர்த்தலும் கால்நடைகளை வன்கொலை செய்வதும் சுற்றுச்சூழலைக் கெடுப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.

             அரசியலமைப்புச் சட்டத்தை மதித்தல், நாட்டுக்கொடி, நாட்டுப்பண்,  ஆகியனவற்றை மதித்து நடப்பதும், ஒற்றுமையுடன் வாழ்தல், நாட்டைக்காக்க  முன்வருதல், பெண்களை மதித்தல், பண்பாட்டைப் போற்றுதல், மரபுகளைக் காத்தல் பொதுச்சொத்துக்களைக் காத்தல் போன்றவை இந்திய மக்களின் கடமையாக்கப்பட்டுள்ளது.

            கடமையைச் செய்வது முதற்பணி ; உரிமை பெறுவது இரண்டாம் பணி

இந்திர அரசியல் அமைப்பு   1949 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் நாள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவ்வமைப்பினை ஏற்படுத்த  இரண்டு ஆண்டுகள் 11 மாதங்கள் 18 நாட்கள் தேவைப்பட்டது. 395 பிரிவுகளும் எட்டு அட்டவணைகளும் இருந்தது. இன்று பன்னிரண்டு அட்டவணைகளாகிவிட்டது. உலகிலேயே பெரிதானதாகவும் கையால் எழுதப்பட்டதாகவும் அமைந்துள்ளது. இந்த சாசனத்தில் ஒரு இலட்சத்து பதினேழாயிரத்து முந்நூற்று அறுபத்தொன்பது சொற்கள் உள்ளன. இதனை நாடாளுமன்ற நூலகம் ஹீலியம் வாயுவால் பாதுகாத்து வருகிறது.  

இருபத்து இரண்டுமொழிகளை அலுவலக மொழியாக அரசியலைப்பு சாசனம் குறிப்பிட்டுள்ளது சிறப்பு. பிரிட்டன், அயர்லாந்து ஜப்பான், அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, கனடா என பத்து நாடுகளில் உள்ள சட்டங்களில் சிறந்தனவற்றை தேர்வு செய்து ஆக்கப்பட்டுள்ள இந்திய அரசியலமைப்புச்சட்டம் சிறப்பாக அமைகிறது

அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவராக நின்றவர் டாக்டர் அம்பேத்கர். இந்திய அரசியலமைப்பு (சாசனம்)  தந்தை எனக் குறிப்பிடப்படுகிறார்.

அண்ணல் அம்பேத்கரின் பெருமையினை உணர்த்தும் வகையிலும் இச்சாசனத்திற்காகப் பாடுபட்ட அனைவருக்கும் நன்றி கூறும் வகையிலும் பாரதப்பிரதமர் நரேந்திரமோடி 2015 ஆம்ஆண்டு நவம்பர் 26 ஆம் நாளை அரசியலமைப்பு சாசன நாளாகக் கொண்டாடும் திட்டத்தைத் தொடங்கினார்.  

.           . இந்திய அரசு சிறப்பாகச் செயல்பட  நாட்டின் முதல் குடிமகனாராகிய குடியரசுத்தலைவர் முதல் அனைத்து மக்களுக்களுக்கான கடமைகளையும் உரிமைகளையும் அரசியலமைப்பு சாசனம் நிர்ணயித்துள்ளது. இத்தகைய சட்டங்களை உள்ளடக்கியுள்ளதால் இந்நாளை இந்தியச் சட்ட நாளாகவும் கொண்டாடப்படுகிறது. நம்மைக் காக்கும் அன்னை பாரதத்தை நாமும் காக்க உறுதிகொள்வோம். ஒற்றுமையுடன் வெல்வோம்.