தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

வெள்ளி, 9 டிசம்பர், 2022

பாரதி - பன்மொழிப்புலவர்

 

பாரதியார் வாழ்க்கை வரலாறு#barathiyaar katturai#tamil - சிறுவர்களுக்கான  அறிவுத்திறன் வளர்ச்சிக்குரிய வழிகாட்டல்கள்

சின்னசாமி பெற்றெடுத்த பெரியசாமி

இலட்சுமி பெற்றெடுத்த சரஸ்வதி.

அவர் முண்டாசு கட்டிய பட்டாசு

என்பார்கள் . அது மட்டுமா

பகைவர்படையும் அவர்க்கு கால்தூசு

அவர் தமிழுக்கில்லை ஒரு மாசு.

தேசமும் தெய்வமும் இரு கண்கள்

பேச்சும் எழுத்தும் விண்மீன்கள்

 

சுப்பிரமணியன் ஆறு வயதில் ‘பாரதி’  ஆனார்.

தமிழ்க்கடவுள் கல்விக் கடவுளானார்.

யார் இந்த பாரதி ?

எத்தனை முறை கேட்டாலும் இனிக்கும்

ஏனென்றால்

அவன் வாழ்ந்த வாழ்க்கை இலக்கியமாய் கனக்கும்

பரங்கியன் ஆண்ட காலத்தில்

மண்ணுரிமை கொண்டோரெல்லாம் மண்டியிட்டுக் கிடந்தனர்.

அந்நியர் நம்மை அடிமையாக்கி  நாய்போல் நடத்திய காலத்தில்

‘அச்சமில்லை அச்சமில்லை’ எனத் துணிந்து நின்று நடுங்கவைத்தவர்.

வளைந்த முதுகெலும்பை பாட்டு சிகிச்சையால் நேராக்கினார் ; மதியைக்கூறாக்கினார்.

பாரதி உன்னால்தான் தமிழ் எழுத்துக்கள் அத்தனையும் ஆயுத எழுத்துக்களாய் மாறின.

பாரதத்தாயை வரைய வேண்டும் – செல்வத்தாயாகவா? அடிமைத்தளையில் சிக்குண்ட வறுமைத்தாயாகவா? எனக் கேட்டார் ஓவியர்

தாய் என்றும் தாயாகத்தான் இருக்கிறாள். காக்க வேண்டிய பிள்ளைகள்தான் பரங்கிய நரிகளின் கால்களைப் பிடித்தன.  அவள் என்ன செய்வாள்.

படையில் உள்ள யானைக்கும் குதிரைக்குமே தங்கத்தில் படாம் செய்து அழகுபார்த்தவள் தமிழ்த்தாய்.

நெற்றியில் அக்னிப்பொட்டைத் தவிர அனைத்தும் தங்கம்தான். அணிகலன்கள் அனைத்தும் அவள் சொத்து. அதை அணியமறந்தால் அதுவே பித்து.

            சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே ; அதை தொழுது படித்திடடி பாப்பா என்றவர்

            செல்வ மிகுந்த இந்துஸ்தானம் – அதை  தினமும் புகழ்ந்திடடி பாப்பா

என்றார். தேசபக்தி குழந்தைக்கு அவசியம் என்றுணர்த்தியவர் பாரதியார்.

தமிழர்களை வட நாட்டார் வெறுத்த காலம் மலையேறிவிட்டது. தமிழைக் காசியோடு இணைத்தவன் பாரதி. அவன் கண்ட கனவால் இன்றும் தமிழர்கள் காசியில் தமிழ்பாடச் சென்றார்கள் ; வென்றார்கள்.

இரயில் பெட்டியில் இருக்கையில் அமரவிடாமல் விரட்டிய காலத்தை மாற்றினார்.  தமிழர்களை இன்று ஆரத்தி எடுத்து வரவேற்க வைத்தவன் பாரதி.

நீர் காசியில் வாழ்ந்ததால்தான் தமிழன் காசிக்குச் சென்றான்.

நீர் காஷ்மீரம் சென்றிருந்தால் அங்கும் தமிழன் சென்றிருப்பான்

நீர் முப்பத்தொன்பதில் வாழ்க்கைப்பயணத்தை முடித்துக்கொண்டாய்

ஆனாலும் நூற்றாண்டுக்குப் பின்னும் நீயே மாகாகவியாய் உள்ளத்தில் நின்றீர்.

‘மந்திரம்போல் வேண்டுமடா சொல்லின் இன்பம்’ என்று சொல்லிவிட்டுப்போகாமல்

 ஒவ்வொரு சொல்லையும் மந்திரமாக்கினாய்.

 திரைப்படத்திற்கு பெயர் வைப்பதற்குக்கூட உன் கவிதைப்புத்தகம் தான் அகராதியாகிறது.

அன்று நீர் எழுதிய கவிதைதான் வழிநடத்தியது. அதனால்தான் விடுதலைப்போராட்டம் விண்ணை முட்டியது.

வேடந்தாங்கள் பறவைகளாய் வாழ்ந்த நம்மை

வேடம் தாங்கி வணிகராய் வந்தவர்கள் நாடாளச் சூழ்ச்சிசெய்தார்கள்.

அவ்வலையில் சிக்கிய நாய்கள் எல்லாம் அவன்போட்ட ரொட்டித்துண்டுக்கு ஆசைப்பட்டு வளர்த்தவர்களையே கடிக்கத்தொடங்கின.

“மனதில் உறுதி வேண்டும் என்றாய்” உன் பாடலை கேட்டவர்க்கு சொரணை வந்தது ; அந்நியர்க்கு மட்டும் பயமே நின்றது. அதனால் தான் உன் கவிதைகளை குண்டுகள் எனச்சொல்லி ஆயுதம் தாங்கிய குற்றம் சொல்லி தேடிவந்தான். .

தேசியக்கொடியைப் பார்க்கும்போதெல்லாம் நீ எனக்குள் வந்துவிடுகிறாய்

செந்நிறம் உன் நெற்றித் திலகத்தையும்

வெந்நிறம் உன் கம்பீர முண்டாசையும்

பச்சைநிறம் உன் பசுமை மாறாத பாடல்களையும்

சக்கரம் உன் கண்ணன் பக்தியையும் நினைவுறுத்தி விடுகின்றன.

“தாயின் மணிக்கொடி பாரீர்” என உன் பாடலைப் பாடி மகிழ்கிறோம்

 

பன்மொழிப் புலவர் பாரதி. தமிழுக்கும் வடமொழிக்கும் பாலம் கட்டியவர் பாரதி. அதனால்தான் மொழி எல்லைகளைக் கடந்து ஒற்றுமையுடன் வாழமுடிந்தது. பிரிவினைப் பள்ளங்களைக் கடக்கமுடிந்தது. அதனால் தான் புண்ணியம் சேர்க்கும் காய்த்ரி மந்திரத்தை தமிழரும் பாடவேண்டும் என எண்ணினார் பாரதி

                    ஓம் பூர்புவஸ் வஹ ; 

                    தத் சதுர்வரேண்யம் ;

                    பர்கோ தேவஸ்ய தீமஹி ; 

                    தியோ யோஹ ப்ரசோதயாத்

.என்னும் மந்திரத்தை

                        செங்கதிரோனே தேவனே

                        சிறந்த ஒளியைத் தேர்கின்றோம்

                        எங்கள் அறிவைத் தூண்டிடுவாய்

                        நடத்திடுவாயே எம்மையே

எனப் பாடினான் பாரதி.

பாரதியே ! உன்னால் தமிழ் மட்டும் இமயம் தொடவில்லை

தமிழரும் இமயம் தொட்டனர்.

“திறமையான புலமையெனில் வெளிநாட்டார் அதை வணக்கம் செய்ய வேண்டுமென்றீர்”

தமிழ்க்கவிதைகளை  உலகக்கவிதைகளாகினாய் பாரதி  !

அப்படியென்றால் நீதான் தமிழுக்கு உண்மையான சாரதி !

நூறு வருடங்கள் ஆன பின்னும் உன் கவிதை புதுக்கவிதையாகவே வலம் வருகிறது. புது ரத்தம் தருகிறது.

உன் மீசையில் கூட பரங்கியன் முளைத்துவிடக்கூடாதென முப்பத்தொன்பதுக்குள் முந்தியவனே !

மீண்டும் நீ பிறக்க வேண்டும் என்பதனால் இன்றும் உன் 141 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறோம்.  மகாகவியே வணக்கம் ! உம் புகழ் இமயமாய் நிலைக்கும்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக