மனைவி என்னும் மந்திரி
எந்த மந்திரியாக
இருந்தாலும் ‘மனைவி’ என்னும் தந்திரியின் பேச்சைக்கேட்டுத்தானே ஆகவேண்டும். தலைகுனிந்து தலைவன் வீட்டிற்குவந்தவள் பின்னர்,
அந்தக் குடும்பத்தையே தலைநிமிரச் செய்துவிடுகிறாள். ஒரு மரம் பல கிளையாகப் பரவி நிழல்தருவதுபோல
ஒவ்வொரு குடும்பமும் செழித்துக்கிளைத்து அழகுடன் வளரச்செய்தவள் மனைவிதானே. கணவன் ‘அவளுக்கு
ஒன்றும் தெரியாது’ என எத்தனை எளிமையாகச் சொல்லிவிடுகிறான். ஏமாந்தபின்னால்தான் “பெண்புத்தி
பின் (கூர்மை) புத்தி” என்பதனை உணர்கிறான்.. உலகமே எதிர்த்து நின்றாலும் கணவனுக்காக இறுதிவரைப்
போராடுபவள் அவள்மட்டும்தானே. வீழ்ந்தபின், வீதி வரும் வரைமனைவியானவள் வாழும்வரை கணவன்
வீதிக்கு வராமல் காக்கிறாள்தானே.
தன்னுடைய நலனைப்பற்றிக்கவலைப்படாதவள் அவள். உறங்குவதும்
எழுவதும் தெரியாமல் குடும்பத்திற்குச் சேவைசெய்யும் அளவிற்கு அவளுக்குப்பொறுமையைக்
கற்றுக்கொடுத்தது யார்? அதுதான் மரபு. மரபு என்பது அடக்குமுறையல்ல ; அது வாழ்வின் ஒழுங்குமுறை.
ஒருவர் பணம் ஈட்ட, ஒருவர் இல்லம் காக்கவேண்டும். அப்போதுதானே வாழ்க்கை ஓடும் ; நடக்காவது
செய்யும். அது ஆணாகவோ, பெண்ணாகவோ இருக்கலாம். தவறில்லை. ஆனால், பெரும்பாலும் பெண்கள்தான்
தாயுள்ளத்தோடு குழந்தைகளுக்குச் சோறூட்டமுடியும். தன் வயிற்றிலிருந்து பிறந்த குழந்தையினைக்
காப்பதில் அவளுக்கும் மகிழ்ச்சி இருக்கும்தானே.
குடும்பத்தின் அனைத்து முடிவுகளையும் அவளே
எடுக்கிறாள். அவளுக்குக் குரல் கொடுப்பவனாக மட்டுமே கணவன் இருக்கிறான். அனைத்துச் செயல்களையும்
பின்னால் இருந்துசெய்துகொண்டே ஒன்றும் தெரியாதவள் போல் மௌனம் என்னும் அணிகலனை அணிந்திருப்பாள்.
அவள் பேசினால் கணவனின் அறியாமை புலப்பட்டுவிடுமோ என எண்ணி, அமைதிகாப்பாள். எந்த முடிவைக்
கூறினாலும் ‘அவரை ஒரு வார்த்தை கேட்டுட்டுச் சொல்கிறேன்’ என்பாள். தனக்கு முழுமையான
ஆற்றல் இருப்பினும் கணவன் செயலால் அன்றி மீளக்கூடாது எனச் சீதை வாழ்ந்தது பெண்ணின்
பெருமையால்தானே? அவள் வீரத்தை வெளிப்படுத்தியிருந்தால் இராமனின் வீரத்தினை உலகம் அறிந்திருக்குமோ?
கோவலனின் காலொடித்துக் ‘கேவலன்’ எனத் தவறுதலாக
எழுதிவிட்டு, கண்ணகியைப் பிரிந்த கால்களை ஒடித்ததில் தவறில்லையே எனக் கூறும் மாணாக்கர்
பலருண்டு. நாடாளும் மன்னனையே தலைகுனியச் செய்தவளுக்கு வீடாண்ட மன்னனாகிய கோவலனையா அடக்கத்தெரியாது.
மரபினைக்காக்கவேண்டும் என்னும் குணம்தானே அவளை அடக்கமாக்கிற்று. குழந்தை தன் பேச்சைக்
கேட்கவில்லை என எத்தனைப்பெற்றோர்கள் இன்று வருந்துகிறார்கள். குழந்தைகள் குறிப்பிட்ட
நேரத்தில் வீடுவந்துசேராவிடில் எந்தப்பெற்றோர் தவிப்பின்றி இருப்பார்? இவை அனைத்தும்
மரபைக்காக்கத்தானே. தலைவாரி விடும்போதும், உலைவடித்து இடும்போது எத்தனை அறிவுரைகளை
பின்னிவிடுகிறாள் ; ஊட்டிவிடுகிறாள்.
தன்குடும்பம், தன்தலைவன் குடும்பம் என இருகுடும்பத்தின்
பெருமைதனைக்காப்பவள் மனைவிதானே. மகன் தறிகெட்டுப்போய்விடுவான் என அஞ்சிக்கால்கட்டுப்
போட்டிடவே திருமணம் செய்துவைப்பர். ஊர்திரிந்த கணவனவன் கரத்தினிலே கைக்கடிகாரம் கட்டிவிட்டு, சிறியமுள்,
பெரியமுள்ளும் நாம் இருவர் எனச்சொல்லி சரியாக வீட்டிற்கு வரவைத்த பெருமை மனைவிக்குத்தானே?
முருங்கையினை முறுக்கியும், செம்முள்ளங்கியைக்
(கேரட்) கீறியும், வெண்டைக்காயை உடைத்தும் வாங்கவேண்டுமென உலகியலை அவள்தானே கற்பித்தாள்.
வெறும்பயலாய் சுற்றித்திரிந்தவனை குடும்பத்தலைவனென அடையாளம் கொடுத்தாவளும் அவள்தானே.
இத்தனைப்பெருமைகளையும் மொத்தமாய்க்கொடுத்ததற்குக் காரணம், திருமணச்சடங்கினிலே, அம்மிமிதித்து,
அருந்ததி பார்த்து இறுதி வரை உடனிருப்பேன் ; குலப்பெயரைக் காத்து நிற்பேன் என்னும்
உறுதிமொழியால்தானே?.
இன்று, சொன்னசொல்லைக் காப்பாற்றிவிட்டு என்னை
வருத்தத்தில்விட்டுவிட்டு மறைந்தாளே என வருந்துகிறான் ஒரு மன்னன். புறாநானூற்று மன்னனவன்.
சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை. மன்னன்பாடிய கையறு நிலைப்பாடல் இதுதான்
யாங்குப்பெரிது
ஆயினும், நோய் அளவு எனைத்தே
உயிர் செகுக்கல்லா
மதுகைத்து அன்மையின்?
கள்ளி போகிய
களரியம் பறந்தலை
வெள்ளிடைப்
பொத்திய விளை விறகு ஈமத்து
ஒள்ளழற்
பள்ளிப்பாயல் சேர்த்தி
ஞாங்கர்
மாய்ந்தனள், மடந்தை
இன்னும்
வாழ்வல் ; என்இதன் பண்பே ! (புறநானூறு
:245)
இருக்கும்
வரை மனைவியின் அருமை தெரியாது. இல்லாதபோது அவளைத் தவிர வேறொன்றும் தெரியாது. அவள் இருக்கின்றாள்
என்ற ஒன்றே வாழ்வை வரமாக்கும் என அறியும் பிரிவின் ஆழத்தைப் பாடலாக வடித்துள்ளான் இம்மன்னன்.
அவளைப் பிரிந்த துன்பம் பெரியது ; அவளைப்பிரிந்து
வாழும் என் உயிர் சிறியது. இருவரும் இணைந்தே வாழ்வோம் என்றவள், அவள் சொல்லைக்காத்தாள்.
நான் சொல்லைக்காக்காமல் தோற்றேன். மென்மையான அவள் உடலை வன்மையான விறகடுக்கில் படுக்கவைத்து,
தீயினை இட்டுவைத்தேன். பின்னும் வாழ்கின்றேன். இந்த இழிவான பிறவிக்கு என் செய்வேன்
என வேண்டுகின்றான். மன்னன் தன் மனைவியிடம் கொண்ட அன்பு புலப்படுகிறதுதானே?
மக்களிடம் உயர்வு தாழ்வு உண்டு. ஆனால் உணர்வுகள்
ஒன்றுதானே?. மன்னனாக இருந்தாலும் மனைவியை இழந்தபின்னால் உயிரில்லா உடம்பாகிறான். தேய்பிறையாய்த்
தேய்கிறான். இவ்வாறு மனைவியின் அன்பினை சங்க இலக்கியங்கள் உணர்த்திநிற்பது மன்னனின்
புகழைக் குறிப்பதற்கு மட்டுமன்று. எவ்வாறு மனைவியுடன் வாழும்போதே அன்புடன் இணைந்து
வாழவேண்டும் என்பதற்காகவும்தானே?
“அப்பாவை எதிர்த்துப்பேசாதே” என மகனிடமும் “தாத்தாவை
எதிர்த்துப்பேசாதே” எனப்பேரனிடமும் பாசத்தை வளர்ப்பவள் அவள்தானே.
எப்போது அன்பாக ; எப்போது கோபமாக ; எப்போது அடக்கமாக
; எப்போது வேகமாக ; எப்போது மென்மையாக ; எப்போது ஊக்கமாக ; எப்போது ஆதரவாக ; எப்போது
சோகமாகப் பேசவேண்டுமெனச் சூழலை அறிந்துபேசும் மந்திரி அவளன்றி வேறுயார்? அவளை மதித்து
நடப்போம். ஆண்மையின் சிறப்பு அதுவே என உலகிற்கு இயம்புவோம்.