சூரிய ஒளியில் சந்திரக் கவிதைகள் – ரவியின்
கவிப்பயணம்
(முனைவர்
ம.ஏ. கிருட்டினகுமார், துணைப்பேராசிரியர், காஞ்சிமாமுனிவர் அரசுப் பட்டமேற்படிப்பு
மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், புதுச்சேரி-8. உலாப்பேசி :99406 84775)
எழுத்து வளர்ந்து சொல்லாகிறது ; சொல் வளர்ந்து தொடராகிறது. தொடர்கள்
வளர்ந்து படைப்பாகிறது. இவ்வாறு வெளிவரும் ஒவ்வொரு படைப்பின் பின்னும் ஒரு படைப்பாளியின்
பிரசவ முயற்சி இருப்பதனைக் காணமுடிகிறது. தாயாகும் பெண்ணின் தவத்தால் பிறக்கும் குழந்தைபோலவே
படைப்பாளியின் எண்ணம் கருவாகி உருவாகி தருவாகிறது. படைப்பென்னும் இத்தரு சமூகத்திற்கு
பூ, காய், கனி, நிழல் எனப் பல நிலைகளில் பயன்தருவதாக அமைதல்வேண்டும். சில தருக்கள்
மருந்தாகவும் சில தருக்கள் விருந்தாகவும் அமைவதும் உண்டு. அவ்வகையில் தன்வரலாற்றினை
; கவிதைப் பயணத்தைக் குறித்துக் கட்டுரையாகத் தொகுத்துள்ள ‘வானவில்’ கே. ரவியின் ‘காற்று
வாங்கப் போனேன்’ படைப்பின் திறத்தைக் காண்பதே என்னுடைய உரைப்பொருள்.
வானவில்
படைப்புகளுள் கவிதை வண்ணம்
ஏழு நிறங்களைக் கொண்ட வானவில்லைப் போல் –
“நமக்குத் தொழில் கவிதை, உன்னோடு நான், மின்னற்சுவை, சொற்களுக்குள் ஏறிக்கொள், வள்ளுவரின்
வாயிலில், காற்று வாங்கப்போனேன், இருபதாம் நூற்றாண்டு இயல்பியல் வரலாறு, என்னும் ஏழு படைப்புகள் படைப்பாளி ரவியின் எண்ண நிறங்களைக்
காட்டுகின்றன.
இப்படைப்புகளுள் ‘காற்று வாங்கப் போனேன்’ என்னும் நூலில் தனது
கவிப் பயணத்தைக் கட்டுரையாகப் படைத்துள்ளார் நூலாசிரியர். கவிதைகள், கற்பனை வழிந்த கலை மட்டுமன்று ; உயிரைப்
பிழிந்து வடிக்கும் கலை என்பதனை அவருடைய ‘காற்று வாங்கப் போனேன்’ என்னும் கவிப்பயணக்கட்டுரை
நூலின் தொடக்க நிலையிலேயே உணர்த்திவிடுகிறார். அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது.
அதனினும் அரிது வழக்கறிஞராக சிறத்தல் ; அதனினும் அரிது வழக்கறிஞர் கவிஞராக சிறத்தல்.
ஆனால் இரு துறைகளிலும் முத்திரைப் பதித்த படைப்பாளியின் திறத்தைக் ‘காற்று வாங்கப்
போனேன்’
இயல்பாக ஒரு நதியின் பயணத்தைப் போல எடுத்தியம்புகிறது.
கவிதையின் வழி கவிஞனின் உள்ளத்தை அறிவது அரிது ; அதனைக் கட்டுரையாக
வடித்துக்கொடுத்தபின் அறிதல் எளிது. அத்தனை முயற்சிகளையும் - முயலாமைகளையும் அருள்நிலையோடு எழுதிய தருணங்களையும்
ரவி இந்நூலில் எளிய நடையில் எடுத்தியம்ப விழைந்துள்ளார். மன மகிழ்வோடும் - வலிகளோடும்
எழுதிய நிலைகளையும் எழுத்து வண்ணங்களாக்கியுள்ளதனை ஐம்பத்து மூன்று பகுதிகளாக வகுத்துக்
கொடுத்துள்ளார். தம் வாழ்க்கை வண்ணத்தை உயிரோட்டமான கட்டுரைகளாக வடிக்கவேண்டும் என்னும்
விழைவு, முயற்சி அத்தனையும் உயிர்பெற்று ‘காற்று வாங்கப் போனேன்’ என்னும் நூல் வடிவில்
வெளிவந்துள்ளதனைக் காணமுடிகிறது.
ரவி எழுதிய
கவி
கவிதைக்கும் காற்றுக்குமான வயதினை அறிதல் இயலாது.
இவை ஏதேனும் ஒரு வகையில் உருக்கொள்ளும்போது பிறப்பின் அடையாளம் பதிவாகிவிடுகிறது. காலம்
இரண்டினையும் தேவைக்கேற்ப உருவாக்கிக்கொள்கிறது. அவ்வாறு கவிதையே தன்னைத் தேர்வு செய்துகொண்டதனை
இக்கட்டுரையாசிரியர் எடுத்தியம்பியுள்ளார். “கவிதை எனக்குப் பயன்படுகிறது என்பதைவிட,
அதை நான் பயன்படுத்திக்கொள்கிறேன் என்பதைவிட, ஒரு கருவியாகக் கவிதை என்னைப் பயன்படுத்திக்கொள்கிறதோ
என்றுதான் எண்ணத்தோன்றுகிறது” (காவாபோ.,ப.5) கவிஞனை எடுத்துக்காட்டும் கட்டுரையாசிரியராகவே
படைப்பாளி இந்நூலில் புலப்படுவதனால் கட்டுரையாசிரியர் என்பதே சாலவும் நன்று என எண்ணி
அவ்வாறே குறிப்பிடலாம் என எண்ணுகிறேன்.
பேரறிவே
கவிதை
கவிதை
கற்பனையின் பிழிவு என்பதே பொதுவான கருத்து. கவிதை என்பதே (க)விதையினை உள்ளடக்கியதுதானே.
அதிலிருந்து விருட்சங்கள் எழுவதும் விதைகள் விழுவதும் தொடர் நிகழ்வு. எனவே, ஒரு கவிதையானது
கவிதையை மட்டுமன்று ; ஒரு கவிஞனையும் உருவாக்கிவிடுகிறது.
கவிதை பொழுதுபோக்கு என்னும் நிலையினின்று உயர்ந்து நிற்பதனைக்
காணமுடிகிறது. எனவே, அதனைக் கவிஞனின் அறிவிப்
பிழிவு எனக் காட்டுகிறார் ரவி. அறிவினை, சிற்றறிவு, பேரறிவு என இருவகைப்படுத்துகிறார்
ரவி. “அறிவு ஆயிரம் சொல்லும். அதனால்தான் அதைச்
சிற்றறிவு என்கிறோம். அதனைக் கடந்துபோனால்தான் பேரறிவாகிய அருட்கடலில் நீந்தமுடியும்.
கவிதை அந்தப் பேரறிவோடு சம்பந்தப்பட்டது” (காவாபோ.,ப.6) எனக் குறிப்பிட்டுள்ளதன் வழி
கவிஞர்களுக்குரிய பெருமிதத்தைப் புலப்படுத்துகிறார் ரவி.
“அறிவு ஆக்கும் கருவி இல்லை. அதனால்தான் அதனைச் சிற்றறிவு என்கிறோம்.
பேரறிவு என்ன என்றால் ... அட, காற்று நின்றுவிட்டதே! மரம் செடி கொடிகள் ஆடாமல் அசையாமல்
மௌனத்தை அடைகாக்கின்றன. காற்று மீண்டும் வரக்கூடும். வரும் . காத்திருக்கிறேன். வரட்டும்
மேலும் எழுதுகிறேன். வந்தால்” (காவாபோ.,பக்.7,8) என்னும் அடிகளின்வழி கவிதை பிறக்கும்
சூழலை ; பெருமிதத்தை சுட்டிக்காட்டுகிறார் ரவி.
செய்யுளின்
பிறப்பு – தமிழ்மொழியின் சிறப்பு
தமிழ்மொழி கவிதை வடிவில் எழுதப்பட்ட முதல்மொழி.
அதனால் தமிழ்மொழியைக் கவிதை மொழி என்பதே சிறப்பு. எத்தனை அருமையான வடிவில் வளமான கருத்துக்களைச்
சுருக்கிச் செதுக்கி வைத்துள்ளது தமிழ் . இன்றைய தமிழ் வாரிசுகளாலேயே எளிதில் உணர்ந்துகொள்ளஇயலாத
அளவிற்கு வளமான சொற்கள் கொண்டவை அவை. அத்தகைய செழுமையான வடிவில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு
முன்னரே புனையப்பட்டதெனில், எத்தனை ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ் தோன்றியிருக்கவேண்டும்
என்பதனை எண்ணிப் பார்த்தால் அந்நியரும் வியப்பர் ; தமிழரை மதிப்பர். அவ்வாறு சுருக்கி
எழுதப்பட்டதற்குக் காரணம் பனையோலையில் எழுதும்
வழக்கம் இருந்தமையாலேதான் என்பதனையும் எண்ணிப்பார்க்க முடிகிறது.
பனை ஓலை சிதைந்தாலும் மொழி சிதையாமல் இருக்கவேண்டும் என்னும்
நோக்கில் அருமையான இலக்கிய வடிவத்தைக் கையாண்ட திறத்தை வியக்காதிருத்தல் இயலாது. இதனையே
“அச்சுத் தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்படாதபோது, எழுதி வைப்பவற்றைத் தக்கமுறையில் பாதுகாக்க
வசதிகள் இல்லாதபோது, தான் சொல்வதைக் கேட்பவர் மனப்பாடம் செய்து அப்படியே பிறருக்குச்
சொல்லக் கூடியவாறு சொல்லும் வழக்கம் உண்டாயிற்று.” (காவாபோ.,ப.6) எனக் குறிப்பிட்டுள்ள
ரவியின் எண்ணம் கவிஞர்களின் படைப்புத் திறனை எடுத்துரைக்கிறது. ஓய்வு நேரங்களில் மனனம்
செய்துச் சொல்லும் அழகு எத்தனை தவம் என்பதனை எடுத்துக்காட்டியுள்ளார் கவி ரவி.
சொற்கள்
– சுடர்ப்பொறிகள்
இயற்கை தன்னையே கவிதையாக வடித்துக்கொள்கிறது.
கவிஞன் இயற்கையைக் கவிதைக்குள் அடக்கிவிட எண்ணுகிறான். அவ்வாறு எழுத முனைந்து தோற்பதிலும்
மகிழ்ச்சிகொள்கிறான்.
மனமலரைத் தென்றல் வருடிவிடும் –
ஒளி மகரந்தங்கள் சிதறி விழும்
தினமிது போல் சில கவித்துளிகள்
எட்டுத்திசைகளிலும் விழும் சுடர்ப்பொறிகள்” (காவாபோ.,ப.10)
என்னும்
ரவியின் கவிதை கவிஞர்களின் எண்ணத்தைப் படம்பிடித்துக்காட்டிவிடுகிறது.
தன்னை
இழப்பவனே கவிஞன்
பெண் தன்னை இழந்து மகவைப் பெற்றெடுப்பது போல்
கவிஞன் தன்னை இழந்து கவிதையைப் பெற்றெடுக்கிறான்.
“மனைவி மக்கள் என்பதெல்லாம் மரணம் வரையிலே
மனையும் பொருளும் தேகத்தை நான் மறக்கும் வரையிலே – நீ ...
இந்த இடத்தில்
ஏனோ என் தொண்டையடைத்துக் கொண்டு விட்டது. மேலும் பாடவரவில்லை” (காவாபோ.,ப.14,15) என்னும்
அடிகள் ரவி கவிப்பொருளுக்குள் மூழ்கித் தன்னை மறந்த நிலையினை எடுத்துரைக்கின்றன.
இறைவன்
என்னும் கவிஞன்
இறைவன்
எழுதும் ஒவ்வொரு கவிதையும் இவ்வுலகில் ஒவ்வொரு உயிராக வலம்வருகிறது. அதில் சிறந்த கவிதையாக
மனிதன் இருப்பதனாலேயே ‘அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது’ எனத் தமிழ்மூதாட்டி
விளக்கியுள்ளார். அதிலும் கவிஞர்கள் இறைவனின்
ஆகச்சிறந்த படைப்பாக இருப்பதனை
நீ
ஏற்றி வைத்த தீபம் மட்டும் அணைவதில்லையே
எந்தக்காற்று வந்து மோதினாலும் கலைவதில்லையே
இறைவனே ! இறைவனே !
என்னை எழுதிடும் கவிதையே (காவாபோ.,ப.15)
என்னும்
ரவியின் கவி எழிலுற எடுத்தியம்புகிறது.
உயிரில்
கலந்த நகைச்சுவை
‘புன்னகை பொன்னகையை விட சிறந்தது’ என அறிந்திருந்தும்
செயல்வடிவம் கொடுப்போர் ஒரு சிலரே. அவ்வரம் பெற்றோர் வரிசையில் இடம்பெறுகிறார் கட்டுரையாசிரியர்
ரவி. கவிதையிலும் கட்டுரையிலும் நகைச்சுவை விரவி நிற்பது இவருடைய படைப்பிற்குப் பெருமை
சேர்க்கிறது. சுவைஞர்களின் ஆர்வத்தைக் கூட்டுகிறது.
நூலாசிரியரின் வளர்ப்புத் தந்தை கல்யாணராமனின் அன்பில் கரைந்தவர்
ரவி. அவருடைய அளவில்லாத அன்பினை “இருபதாவது பிறந்தநாள் பரிசாகத் தன் மகனுக்குச் சாய்வு
நாற்காலி வாங்கித்தந்த ஒரே தந்தை” (காவாபோ.,ப.18) என நகைச்சுவைப் பூச்சுடன் அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.
கவியரசர் கண்ணதாசன் எந்நிலையிலும் அஞ்சாது கவிபாடும் திறன் பெற்றவர்
என்பதனைத் தமிழுலகம் அறியும். அவரிடமே துணிந்து அறிவுரை கூறிய ரவியின் திறத்தை “அன்று
இளமைக்கே உள்ள துடிப்போடும் குறும்போடும் கவிதை படித்தேன் ; மன்னிக்கவும். இப்பவும்
உண்டுங்க. நான் எப்பவும் இளைஞன் தானுங்க. (அடடா, இந்தப் பல்லவி நல்லா இருக்கே!) (காவாபோ.,ப.48)
என்னும் அடிகள் எடுத்துக்காட்டுகின்றன.
“குடியாலே
குழறுகிற நாவில் உண்மை குடியிருக்க முடியாது மறந்துவிட்டார்
பிடிவாதம்
செய்யாமல் விடச்சொல்கின்றேன்-பிழைதிருத்த வரவில்லை. விண்ணப்பம்தான்.
(காவாபோ.,ப.48)
என்னும்
கவியரசிடம் ரவி கொண்ட காதல் கண்டிப்பினை எண்ணி மகிழலாம்
ரவியின்
கவியுள்ளம்
பாடாத
பொருளைப் பாடவேண்டும் என்பதே கவிஞனின் விழைவு. கவிதை எழுதுவது கடிதம் எழுதுவதைக் காட்டிலும்
எளிமையானது என எண்ணும் ரவியின் எழுத்துக்கள் புலமைக்குக் கட்டியம் கூறுவன.
“முதிராத
மகரந்தப் புதிரோடு தவம்செய்யும் மொட்டுக்களுக்கு ஒரு பாட்டிசைப்பேன்- அந்த
மௌனத்தின் வாசலை மோதித் திறக்கும் – பனி முத்துக்களுக்கு ஒரு
பாட்டிசைப்பேன்” (காவாபோ.,ப.6)
என்னும் அடிகள் ரவியின் கவிபாடும் திறனை எடுத்துரைக்கின்றன.
புத்தி சிகாமணியும் மனோன்மணியும்
கவிஞர்கள் கட்டுரை எழுதுவது அரிது. கவிதையில்
மக்களுடன் நேருக்குநேர் பாடிப் பழகியவன் கவிஞன்.
அத்தகைய கவிஞன் கட்டுரை எழுதும்பொழுது கவிதை நடை இயல்பாகவே வசியப்பட்டுவிடுகிறது.
அவ்வகையிலேயே ரவியும் தன்னுடைய கட்டுரைப்பொழிவிற்காக தன் மனசாட்சியினைப் பாத்திரமாக்கிக்
கொண்டிருக்கிறார். அப்பாத்திரங்களோடே வினா விடை அமைத்துள்ளது சிறப்பாகவே அமைகிறது.
அப்படி அமைந்த எண்ண நாயக நாயகியே புத்தி சிகாமணியும் மனோன்மணியும். கவிஞனை வேறு யாரும்
கேட்க முடியாத கேள்விகளை மிக எளிதாகக் கேட்டு விளக்கம் தரும் பாத்திரங்கள் அவை. இப்போக்கு
கவியின் எண்ண ஓட்டத்தின் அருமையினை ; படைப்பாளியை வெளிப்படையாக விளக்கி நிற்கும் போக்கினைக்
காணமுடிகிறது. காற்றுக்கும் கவிதைக்குமான நெருக்கத்தினை ரவியும் சிகாவும் பேசிக்கொண்டிருக்கின்றனர்.
அதற்குப்பின் திருக்குற்றாலக்குறவஞ்சி “வானரங்கள் கனிகொடுத்து மந்தியோடு கொஞ்சும்”
என்னும் சந்தத்துடன் ஒத்த பாடலைப் புனைகிறார் ரவி.
“காற்றுவந்து கைப்பிடித்துக் கூட்டிச்செல்வதெவ்விடம்
காதல் கவிதை பாடல் நெஞ்சில் கண்சிமிட்டும் ஓவியம்
தோற்றம் என்பதா – ஒரு தொடர்கதையாய்
வளர்கிறதா (காவாபோ.,ப.23)
காற்று
வேறு கவிதை வேறு
இரண்டும்
ஒன்றாய் இணையும்போது பாடல் உருவாகும் –
அதில்
பார்வை தெளிவாகும் (காவாபோ.,ப.25)
என்னும் அடிகளின் வழி இயற்கையழகு கவிஞனை உருவாக்கிவிடும்
திறத்தினைப் புலப்படுத்துகிறார் ரவி. “நாம் காற்றைத் தேடுவதுபோல் காற்றும் கவிதை தேடுகிறதோ
என்று சகோதரி கீதா மதிவாணன்” (காவாபோ.,ப.26) குறிப்பிட்ட அழகினையும் எடுத்துக்காட்டி
காற்றுக்கும் கவிதைக்குமான இணக்கத்தைத் தெளிவுபடுத்துகிறார் ரவி.
நாடகப் போக்கில் கட்டுரை
கட்டுரை என்பது கருத்துக்களின் செறிவு. சொற்களைப்
பொருளோடு கட்டி உரைக்கும் கலை. அவ்வகையில் தாம் கடந்து வந்த பாதையினை நாடகப்போக்கில்
எடுத்துரைப்பதனைக் காணமுடிகிறது. “புத்தி சிகாமணிக்கு ஒரு மனைவி உண்டு என்று சொன்னேன்
இல்லையா? அவள் பெயர் மனோன்மணி என்று வைத்துக்கொள்ளலாமே. அவள் ஒரு கற்பனைப் பாத்திரமென்று
எண்ணிட வேண்டாம். அவள்தான் கற்பனை. கற்பனைதான் அவள்” (காவாபோ.,ப.28) என்னும் இவ்வடிகள்
படைப்பாளியின் நாடகப்பாங்கில் அமைந்த தெளிவான எண்ண ஓட்டத்திற்குச் சான்றாக கிறது.
வரங்களே
திறன்களாக
பேச்சுக்கலையில் வல்லவராக இருப்பது அரிது
; நகைச்சுவை கலந்து பேசுவது அதனினும் அரிது. திறமாகச் சட்ட நுணுக்கங்களை அறிந்து பேசுவது
அதனினும் அரிது ; பேச்சோடு கவிதை புனைதல் அதனினும் அரிது ; கவிதைப் புனைந்து மனம் நெகிழப்பாடுதல்
அதனினும் அரிது ; அப்பாடலையும் ராகத்துடன் பாடுதல் அதனினும் அரிது ; அவ்வாறு பாடிய
சூழலை கட்டுரையாகச் சுவை குன்றாமல் கூறுதல் அதனினும் அரிது. அவ்வாறு இந்நூலில் ஒவ்வொரு
சூழலில் எந்த ராகத்தில் என்ன பாடலைப் பாடினார் எனக்குறிப்பிட்டுச் செல்வதனை இசை அறிந்தவர்கள்
மேலும் சுவையாகப்பாடி மகிழ இயலும். இத்தனைக் கலைகளைப் பெற்றிருந்தாலும் தன்னை உயர்ந்தவராகக்
காட்டிக்கொள்வதற்கு பிறிதொரு காரணத்தைக் கூறிச்செல்வது படைப்பாளியின் தன்னடக்கத்தின்
வெளிப்பாடு ; அடக்கம் அழகினுள் உய்க்கும் அந்த அடிகள் –“சுரதா, ஔவை நடராஜன், சுகிசிவம்,
இசைக்கவி ரமணன், வ.வே.சு. போன்ற பெரிய மனிதர்களோடு என் வாழ்க்கை நிகழ்ச்சிகள் பின்னியிருப்பதால், சுயசரிதை எழுதும் அளவுக்கு நானும்
பெரிய மனிதன்தான் என்ற நம்பிக்கையோடு எழுதுகிறேன்” (காவாபோ.,ப.31) எனத் தன் பெருமைக்கு
அளவுகோலாக இலக்கியச் சிகரங்களை எடுத்துக்காட்டியுள்ளார்.
ஊற்றெடுத்து
வந்த கவிதை
கவிதை எழுதுவது கலை ; இறைவனைப் பற்றி எழுதுவது
தெய்வீகக் கலை. இறைவன் தான் உணர்த்த விழையும் மந்திரச்சொற்களை காலந்தோறும் ஒரு படைப்பாளியின்
வழி எழுதவைத்துவிடுவதனை தமிழ் இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன. தோத்திரப்பாடல்களான
திருவாசகமும், திருக்குறளும், சாத்திரப் பாடல்களான திருவருட்பாவும், திருமந்திரமுமே
இக்கூற்றுக்குச் சான்று. அவ்வாறு ஒவ்வொரு படைப்பாளிக்கும் இறையருள் துணை நின்று அரிய
கருத்துக்களை வெளிப்படுத்தும். ரவியும் இறையருள் பெற்று இலக்கியம் படைத்துள்ளதனை “திருமூலரின்
திருமந்திரம் சாயலில் இருந்ததால் அவற்றை என் கவிதைத் தொகுப்பில் ‘குரு மந்திரம்’ என்னும்
தலைப்பில் சேர்த்தேன்” (காவாபோ.,ப.39) என்னும் அடிகள் எடுத்துரைக்கின்றன.
“வெளியே இருந்து விளக்கேற்றி வைக்காமல்
ஒளியாகி உட்புகுந்து ஊடுருவிச் சென்று
வெளியையே உட்கொள்ளும் வித்தை அறிவித்து
ஒளியாக்கும் உண்மை உபதேசமாமே (காவாபோ.,ப.39) என உபதேசத்தின்
அருமையினை விளக்கும் அடிகள் விளக்கொளி போல் ஒளிகாட்டி நிற்பதனை உணர்ந்துகொள்ளமுடிகிறது.
கருவிலும் உருவிலும்
தமிழரின் விருந்தோம்பல் அன்பின் அடையாளம்
; உணவிட்ட பின்னரே, உரையாடும் வழக்கம் கொண்ட அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ். அவ்வாறு
ரவியின் பரம்பரை உணவிட்டு மகிழ்ந்த நிலையினைக் குறிப்பிட்டுக்காட்டியுள்ளார் ரவி.
“மாமா, அதாவது என் வளர்ப்புத்தந்தை கல்யாணராமனிடம் மேலோங்கி இருந்த குணம் விருந்தோம்பல்.
வருவோர்க்கெல்லாம் வீட்டில் நல்ல சாப்பாடு போடவேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்தார்.
1956-57....வெளியே எங்கும் சாப்பிடாத எம்.ஜி.ஆர் அவர்கள் கூட இசையமைப்பாளர் ஜி. ராமநாதன்,
தஞ்சை ராமையாதாஸ் ஆகிய இருவருடனும் சேர்ந்து காலைச் சிற்றுண்டி அருந்த, அப்பொழுது தினமும்
எங்கள் அலுவலகத்திற்கு வந்துவிடுவார்” (காவாபோ.,ப.60) என்னும் அடிகளின்வழி விருந்தோம்பலின்
பெருமிதத்தை வெளிப்படுத்தியுள்ளார் ரவி. சத்துணவு போட்டவர்க்கே சிற்றுண்டி பரிமாறியது
எத்தனைப் பேறு.
இசையிடம் இசைவு வந்த காரணத்தினை “நாலு வயதுச்
சிறுவனான என்னைத் தம் மடியில் அமர்த்திக்கொண்டே ஜி. ராமநாதன் ஆர்மோனியத்தில் பல பாடல்களுக்கு மெட்டுப் போட்டிருக்கிறார். என் இசை ஈடுபாடு எப்படி
வந்தது தெரிகிறதா? கருவில் வந்தது பாதி. ஜி.ராமநாதன் உருவில் வந்தது மீதி. பத்து விரல்களிலும்
வைரக்கல் மோதிரங்கள் பளபளக்க அவர் ஆர்மோனியம் வாசித்த அழகை அங்கிருந்து ரசிக்கும் பேறு
எனக்குக் கிட்டியது” (காவாபோ.,ப.60) என்னும் அடிகளில் தாம் பெற்ற பேறினை கவிதை வடிவில்
அழகாக வெளிப்படுத்துகிறார் ரவி.
தமிழ்
விதை
தாய்மொழியில் வளமைபெறும்போது வாழ்க்கையே வளமாகிவிடுகிறது.
தாய்மொழி அறியாதவர்கள் அநாதைகளாகவே உணரப்படுகின்றனர். ஒரு துறையில் அல்லது வாழும் முறைமையில்
தாய்மொழி இல்லாதபோது வெறுமையுடன் குற்ற உணர்வுடன் மக்கள் வாழ்ந்துவருந்துவதனைக் காணமுடிகிறது.
சிலர், அன்னியமொழியான ஆங்கிலத்தில் பேச முடியாமைக்கு வருந்துகின்றனர். அவர்கள், தாய்மொழியாம்
தமிழைப் பிழையாகப் பேசுவதற்கு வருந்தாதிருக்கின்றனர். இவ்வாறு சிறுவயதிலேயே வருந்திய
வருத்தம்தான், விருத்தம் பாடி தமிழில் நிருத்தம் ஆடும் அளவிற்கு ரவியினை வளர்த்துவிட்டிருக்கிறது.
இதனை அவருடைய படைப்புகளே பறைசாற்றுகின்றன.
தமிழைப் பிழையில்லாமல் எழுதிய வருத்தம் உள்ளத்துள் இருப்பினும் உச்சரிப்புத் திறனைப் பாராட்டினார்
தமிழாசிரியர். அப்பெண்மணி தூவிய விதையே முதல்விதையானதைக் குறிப்பிட்டுள்ளார் ரவி. ‘கோழி’
என்பதனைக் ‘கேழி’ என எழுதிவிட்டு அவமானப்பட்டதை வெகுமானமாக மாற்றவேண்டும் என எண்ணி
நூலகத்தில் தவம் கிடந்ததனை எடுத்துக்காட்டுகிறார். “கோடை விடுமுறையில் நான் தினமும்
சென்னை, மவுண்ட் ரோட்டில் இருந்த மத்திய நூலகத்தில் 3,4 மணிநேரம் செலவிட்டுத் தமிழ்
இலக்கிய நூல்களை எடுத்துப்படிப்பேன்” (காவாபோ.,ப.66) என்னும் ரவியின் கூற்று இன்றைய
தலைமுறை கற்றுக்கொள்ளவேண்டிய பாலபாடம்.
முதல்
கவிதை – முத்தாய்ப்புக் கவிதை
“அகத்திய முனிவரின் அகத்தினில் உதித்தவள்”
(காவாபோ.,ப.67) எனத் தொடங்கும் முதல்கவிதையினை
‘தமிழ்ச்சங்கு’ எனத் தாம் தொடங்கிய கையெழுத்துப் பத்திரிகையில் வெளியிட்டுள்ளார் ரவி.
முதல் கவிதையே இலக்கிய இலக்கண நயத்துடன் அமைந்துள்ளதனைக் காணமுடிகிறது.
மின்னலாய்
வந்த கன்னல்
மின்னல் தோன்றி மறைவது . இயற்கையானது. ரவி
கண்ட மின்னல் நாற்பத்தைந்து ஆண்டுகளாக உடன் நின்று இல்லறவாழ்வில் இனிமை சேர்க்கிறது.
அந்த மின்னலே ‘ஷோபனா’ எனப் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார். நண்பர்களிடம், மனைவியின்
பெயரைச் சொல்லி வீட்டிற்கு நழுவிச்செல்லும் ஆண்களைப்போல், இடர்ப்பாடுகளையெல்லாம் கடக்கத்துணைநின்ற
துணைவியாரின் பொறுமையின் பெருமையினைக் குறிப்பிட்டுள்ளார் ரவி. இந்நூலில் திரைப்பட
நாயகன் போல நின்று நாயகியை மாமல்லபுரத்துக்கு அழைத்துச்சென்ற காதல் கதையினைச் சுவைபட
எழுதியுள்ளார். தமிழ் அவர்களை ஒன்றிணைத்ததையும் தமிழால் வாழ்க்கைச் சிறந்ததனையும் எடுத்துக்காட்டியுள்ளமை
இக்கால இல்லறம் புகுவோர்க்கு இனியதொரு எடுத்துக்காட்டு. ‘எம்மைப் போல் வாழ்வீராக’ என
வாழ்த்துவதற்கேற்ற துணிவு பெற்ற வாழ்வாக அகவாழ்வு அமைந்துள்ளதனை அவருடைய எழுத்துக்கள்
படம்பிடித்துக்காட்டுகின்றன.
கொஞ்சம் பேசும் குணமுடையாளாக மனைவி இருந்தாலே
கணவனுக்கு அலுவலகத்தில் வேலை அதிகமாகிவிடுகிறது. பேசும் கலையில் வரம் பெற்ற மனைவியெனில்
சொல்லத்தான் வேண்டுமோ? என எண்ணத்தோன்றும். ஆனால், பன்மொழிப்புலமையிலும், கவிதைப் புனையும்
திறத்திலும் ; இல்லறம் நடத்தும் இனிமையிலும் ; வீணை வாசிப்பதிலும் சிறந்து வாழ்நாள்
முழுதும் காதலின் மறுவடிவமாக துணைநிற்கும் காதல் மனைவியின் பெருமையினைச் சுட்டிச் செல்கின்றார்
ரவி. “இவள் பெயர் ஷோபனா’ என்று விஜயா சொன்னது
மட்டும் நெஞ்சில் பதிகிறது. அந்தக் காட்சியின் மின்னல் அதிர்ச்சியில் இருந்து நான்
இன்னும் மீளவில்லை. நாற்பத்தைந்து ஆண்டுகள் ஆகியும்” (காவாபோ.,ப.68) என்னும் அடிகள்
காதல் வாழ்வின் அருமையினை உணர்த்தி நிற்கின்றன.
நெகிழ்ந்த
நிகழ்வுகள்
தாயைப் போற்றுவது சிறப்பு ; அதனினும் சிறப்பு
வாழ்நாள் முழுதும் தாங்கி நிற்கும் தேசத்தைப் போற்றுவது ; அதனினும் சிறப்பு இவை இரண்டையும்
உணர்த்திய தெய்வத்தைப் போற்றுவது. அவனருளாலே அவன் தாள் வணங்கும் அத்தகைய பேறு பெற்றோரின்
அன்பைப் பெற்றதனைப் பெரும்பேறாகக் கருதுகிறார் ரவி. “பாரத நாட்டின் எந்தப் பகுதிக்குச்
சென்றாலும் அங்கிருந்து ஒரு பிடி மண் எடுத்துவந்து இந்தக் கலசத்தில் போட்டு வைப்பேன்.
இது எப்பொழுதும் பூஜை அறையில்தான் இருக்கும். இதை நான் பாரத மாதாவாகவே ஆவாகனம் செய்து
பூஜை செய்து வருகிறேன். என்று அவர் சொன்னதும் நான் நெகிழ்ந்து போனேன்.” (காவாபோ.,ப.66)
எனக் கவியரசி சௌந்திரா கைலாசம் குறித்துக் கூறியுள்ளது ரவியின் தேசப்பற்றினைப் புலப்படுத்துகிறது.
ஆங்கிலேயன் நாய்க்கு ‘வந்தே மாதரம்’ எனப் பெயர்
வைத்திருந்தான். இந்தியரை இழிவுபடுத்தியதாக எண்ணினான். அங்கு சென்ற இந்தியர் சிரித்தாராம்.
ஏன் சிரிக்கிறீர். ‘தாய்க்கு வணக்கம்’ என்பதே பொருள். நீங்கள் நாயையே தாயாக்கி விட்டீரே.
அவமானமாகிவிட்டது.
பாடலிலே பாரினையே நிமிர்த்திய மகாகவியின் அருமையினை
அறிவார் யார்? பாம்பின் கால் பாம்பறியும் என்பார்களே. அப்படி அப்பாவலன் சொல்லை இப்பாவலன்
உணர்ந்திருந்தார். உணர்ச்சிப்பெருக்கு கண்ணீரானது. கண்ணீர்த்துளிகள் கவிதையானது
“கானல் நீரில் காணி நிலத்தைக் காண நினைத்தானே
காட்டு வெளியில் பாட்டுச் சுடர்கள் ஏற்றி வைத்தானே
தேடிச்சென்ற திசையெல்லாம் பெருந்தீ வளர்த்தானே
தேகம் எடுத்ததனாலே அவனும் தேய்ந்துவிட்டானே
அவனுக்காக கொஞ்சம் அழக்கூடாதா” (காவாபோ.,ப.88)
என்னும்
அடிகளில் மகாகவியின் தன்னலமற்ற வாழ்வை நினைத்து கண்கள்\ நனைந்ததனைக் குறிப்பிட்டுள்ளார்.
காணி நிலமும் இன்றி அவர்கண்ட கனவு கானல் நீராகிப்போனதனையும்,
சுடர் எத்தனை வெளிச்சம் தந்தாலும் அகலின் இருட்டை நீக்கமுடியாதுபோனதுபோல் வறுமையில்
உழன்றதையும் எடுத்துக்காட்டுகிறார் ரவி. நாளெல்லாம் தேய்ந்ததாலும் விடுதலை தீவளர்த்த
பெருமையினையும் கூறிச் செல்லும் எழில்நடையினை எண்ணிப்பார்த்தால் கல் மனமும் சுடும்பாறை
மேல் இட்ட நெய்யாகும் ; கண்கள் குளமாகும்.
ஆங்கிலத்தில் அருமையான பாடல் என உலகமே நூறு
ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட பாடுபொருளைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு
முன்னரே ஆயிரம் தமிழர்கள் அத்தகைய் பாடுபொருளைத்
தத்தமது இலக்கியங்களில் எண்ணிப்பார்க்கவே இயலாத அளவிற்குப் பாடியிருக்கின்றனர். ஆனால் அத்தமிழ்ப்பாடலை உலகறியச் செய்யாத பிழை தமிழர்க்குண்டு.
அக்குறையை நீக்கப் பன்மொழிப் படைப்பாளிகளால் மட்டுமே இயலும். அவ்வாறு தம் ஆங்கிலப்
புலமைக்குச் சான்றாக 1970- இல் வொர்ட்ஸ்வொர்த் குறித்து எழுதிய கவிதையை நினைவுறுத்துகிறார்
ரவி. நினைவில் பின் தங்கிய அக்கவிதையின் கையெழுத்துப்
படியினை நகலெடுத்து நண்பர் மின் அஞ்சலில் அனுப்பிய போது நெஞ்சம் நெகிழ்ந்ததனைக் குறிப்பிடுகிறார்.
“பாரதியை ஒத்தவனே பார்போற்றும் வித்தகனே
ஓரத்தில் நின்றே மைய ஒளிப்பொருளாய்
உன்னை உணர்ந்தவனே ! ஒப்பில்லா உத்தமனே (காவாபோ.,ப.104)
என்னும்
ரவியின் கவிதை அடிகள் வொர்ட்ஸ்வொர்த்தின் புலமையை உணர்த்தி நிற்பதனைக் காணமுடிகிறது.
உதடுகள் சிரித்தாலும் உள்ளத்தின் நிலையினை
அறிதல் நட்பின் பெருமையினை எடுத்துரைக்கும். மேலும், மௌனத்தின் பொருளைப் புரிந்துகொள்ளும்
நட்பு உறவுகளை விட மேலானது. அவ்வகையில் உணர்வால் ஒன்றிய நட்பு கிடைத்ததன் அருமையினை
சுட்டுகிறார் ரவி. “ அம்பத்தூர் பள்ளியிலே நள்ளிரவு நேரம் வரை, மொட்டை மாடியில், அங்கே
தரையில் பதித்திருந்த சதுரமான கண்ணாடி வழியாக வந்த வெளிச்சத்தில் கவிஞர் முருகு சுந்தரத்தின்
கவிதைகளை நான் படிக்க, சிவமும், சு.ரவியும்
மற்ற நண்பர்களும் சுற்றிப் படுத்துக்கொண்டு
கேட்டு ரசிக்க, ஓ, சொர்க்கமே அதுதானோ என்பதுபோல் சொக்கிக் கிடந்தோம்” (காவாபோ.,ப.105) என்னும் அடிகள் நட்பில் நெகிழ்ந்த தருணத்தை எடுத்துக்காட்டுகிறது.
இன்று மாடிக்கு நண்பர்கள் சென்றாலே அச்சமாக
இருக்கிறது. பூவிலே சிறந்த பூ நட்பு தானே. அதனை வரமாகப் பெற்றவர் கவிஞர்.
கவிஞன் தனக்கென ஒரு தனி உலகத்தைப் படைத்துக்கொள்கிறான்.
எத்தனைபேர் சூழ்ந்திருந்தாலும் தனிமையில் இருப்பதும் ; தான் தனிமையில் இருப்பினும்
பலர் சூழ்ந்திருப்பதுபோல் மகிழ்ச்சியில் திளைப்பதும் கவிஞர்களின் இயல்பு. அவ்வாறு,
ஒருமுறை தம் வழக்கிற்கான நேரம் வந்ததையும் அறியாமல் கவிதையில் மூழ்கிப்போகிறார் ரவி.
இந்நிலையினை உணர்ந்து நீதிபதி, வழக்கறிஞரும் கவிஞருமான ரவிக்காக காத்திருக்கிறார்.
“உங்களுக்கு முந்தைய கேஸ் முடிந்து உங்கள் கேஸ் அழைக்கப்பட்டபோது, நீங்கள் ஏதோ மும்முரமாக
எழுதிக்கொண்டிருந்தீர்கள். தொந்தரவு செய்யவேண்டாம் என்றுதான் காத்திருக்கிறேன். நீதியரசர்
சொன்னதைக் கேட்டு நெகிழ்ந்து போனேன்” (காவாபோ.,ப.111) என்னும் அடிகள் ரவியிடம் நீதிபதி
கொண்டிருந்த மதிப்பினை எடுத்துக்காட்டுகிறது.
நல்ல கலைஞன் ஒரு நல்ல கலைஞனை உருவாக்க வேண்டுமேயன்றி
துணைக்கலைஞனாகவே வைத்திருத்தல் கூடாது. வில்லாற்றலில் சிறந்த ஏகலைவனிடம் கட்டைவிரலை
தட்சணையாகக் கேட்ட துரோணர் போல் அமைதல் கூடாது. அவ்வாறின்றி அருமையான ஒரு இசைக்கலைஞரைக்
காணும் பேறு பெற்றதனைக் குறிப்பிடுகிறார் ரவி. ‘ஏழாவது மனிதன்’ திரைப்படத்தில் காலத்தை வென்று நிற்கும்
பாடல்களைக் கொடுத்தவர் தன்னிடம் உதவியாளராகப் பணியாற்றிய எளிமை பண்பின் அருமையினை “இசையமைப்பாளர் அமரர் எல். வைத்தியநாதன் தம்மைவிட வயதிலும் அனுபவத்திலும்
குறைந்த எனக்கு உதவி செய்யமுன்வந்த பெருந்தன்மையை நன்றியுடன் நினைத்துக்கொள்கிறேன்.
அந்தப் பாடலை எஸ்.பி.பி. எப்படித் தம் இனிய குரலால் வளம் செய்திருக்கிறார் என்பதை நினைத்தால்
இப்பொழுதும் என் கண்கள் குளமாகின்றன” (காவாபோ.,ப.120) என்னும் அடிகள் நன்றிக்கும் திறமைக்கும்
அடையாளமாகத் திகழ்ந்த ரவியின் நன்றியுணர்வை வெளிப்படுத்துகின்றன. கவியழகுடன் இசையழகும் இசையழகுடன் குரலழகும் சேர்ந்தால்
கண்கள் ஈரமாவதில் வியப்பில்லை என்பதும் புலனாகிறது.
குருவால்
உருவானேன்
கரு வழி பிறப்பதால் உண்டாகும் சிறப்பினைக்
காட்டிலும் குருவழி பிறக்கும் பிறப்பினால் உண்டாகும் சிறப்பே சிறப்பு. தமிழ்மொழிக்கு
ஆசிரியர் ‘தண்டமிழ்க் கொண்டல்’ சிதம்பர சுவாமிநாதன் குருவாகி நின்றதனை எடுத்துரைத்துள்ளார்.
வசை பாடிய வாயினின்று வாழ்த்துவந்த பெருமையினை எண்ணி மகிழ்ந்துள்ளதனைப் பல இடங்களில்
சுட்டிச்செல்கிறார்.
“ஒ.பி. நய்யர், நௌஷத், மதன்மோஹன், சலீல் சௌத்ரி, சங்கர் ஜெய்கிஷன்
போன்ற இசை மேதைகளே என் குருநாதர்கள்” (காவாபோ.,ப.109) என இசை
நாட்டத்திற்கான குருநாதர்களை எடுத்துக்காட்டுகிறார்.
தாயை விரும்பித் தேர்வுசெய்து பிறந்த குழந்தை
தரணியில் உண்டோ? அவ்வாறே குருவும் அறியாமலே கிடைக்கும் பொக்கிஷமாக அமைந்துவிடுவதனை
ரவி எடுத்துக்காட்டுகிறார். கரு வழி பிறப்பும் குருவழி பிறப்பும் இவ்வகையில் ஒன்றிணைந்திருப்பதனை
அறிந்துகொள்ளமுடிகிறது. “நாம் எவ்வளவுதான் ஞானத்தைத் தேடியலைந்தாலும் , எவ்வளவு உயர,
உயரப் பறந்தாலும் ஞானம் கிட்டாது. ஞானமே இசைந்து, தாழ்ந்து வந்து, நம்மை வரவேற்று,
நம்முள் இசையாகக் கலந்தாலன்றி. அப்படித்தான் என் குருநாதரும் என்னைத் தேடிவந்து ஆற்றுப்படுத்தினார்.
இன்னும் சரியாகச் சொல்வதென்றால், இறைவனே ஒரு மனித வடிவிலோ அல்லது வேறு வடிவிலோ இறங்கிவந்து
குருநாதனாக ஆற்றுப்படுத்துவான்” (காவாபோ.,ப.135) எனத் தன் குருநாதர் டாக்டர் நித்யானந்ததின்
அருமையினை எடுத்துக்காட்டுகிறார்.
காதலும்
பக்தியும்
காதலினும் பெருமிதமுடையது பக்தி. காதல் துன்பத்தில்
அழச்செய்யும். பக்தி இன்பத்தில் அழச்செய்யும்.
காதலில் தோல்வியுண்டு பக்தியில் வெற்றி மட்டுமே உண்டு. இத்தகைய இழையளவு வேறுபாட்டினை உணர்வுடையோர் உணர்வர். இவ்விழையின்
அருமையினை ரவி உணர்ந்து மகிழ்ந்துள்ளதனை “ஜேசுதாஸ் காதல் பாட்டுப் பாடினாலும் அது பக்திப்
பாடல் போல் இருக்கும். எஸ்.பி.பி. பக்திப்பாடல் பாடினாலும் அது காதல் பாடல் போல இருக்கும்.
அடுத்த காரணம், எனக்கே பக்திக்கும், காதலுக்கும் வேறுபாடு புரியாது. ... நான் காதலைப்
பாடினாலும் பக்திதான் ; மதுரை மீனாட்சியைப் பாடினாலும் காதல்தான்” (காவாபோ.,ப.131) என்னும் அடிகள்
உணர்த்தி நிற்கின்றன. உயர்வகை அன்பினைத் துணையிடம் கொள்ளும்போது காதலாகவும் கடவுளிடம்
கொள்ளும்போது பக்தியாகவும் வெளிப்படும் அருமையினை உணர்ந்துகொள்ளமுடிகிறது.
சூரியனுக்கு
முன்னால் வானவில்
சூரிய வெளிச்சத்தில் கவிதை மழை பொழிய ‘வானவில்’
தோன்றுகிறது. ‘மாணவரிஸம்’ என்னும் பழமையும் புதுமையும் கலந்த இதழின் வழி ரவி இனிய படைப்புலகத்தைப்
படைத்தார். ‘சிந்தனைக்கோட்டம்’ என்னும் இலக்கிய
அமைப்புக்குப் பின் ‘வானவில்’ பண்பாட்டு மையம் என்னும் அமைப்பினைத் தொடங்கினார். இலக்கியப்பணியினைச்
செம்மையுறச்செய்ய வேண்டும் எனத் தொடங்கித் தோற்றவர்கள் பலர். ஆனால் விடாமுயற்சியுடன்
மொழி வளர்ச்சிக்கான உண்மையான அமைப்பாக இன்றும் சிறப்பாக நடத்திவருவதனைக் காணமுடிகிறது.
மகாகவியின் பெருமைபாடும் இவ்விலக்கிய அமைப்பின் பெருமையினை உலகறியும் என்பதே இவ்வமைப்புக்கான
வாழ்த்தாகவும் அமைகிறது.
குடியரசுத்தலைவரிடம் விருது வாங்குவதே பெருமை என எண்ணுவது இயல்பு.
ஆனால் குடியரசுத்தலைவராவதற்கு முன்னரே ஏ.பி.ஜே. அப்துல்கலாமிற்கு விருது வழங்கிப் பாராட்டினார்
ரவி. குடியரசுத்தலைவரின் மாளிகை சைவ மாளிகையாக மாற்றிய தமிழனின் பெருமையை ; சீனர்களே
திருக்குறளை மொழிபெயர்த்து படிக்கவைத்த பெருமையினை உடைய மக்கள் குடியரசுத்தலைவரின்
அருமையினை உணர்ந்து பாராட்டியது (தொலைநோக்குப்பார்வை) சிறப்புடையதாகிறது.
மகாகவியின்
கனவை நினைவாக்கல்
எத்தனையோ கனவுகளால் இந்திய விடுதலைக்கு வித்திட்ட
மகாகவியின் காலத்தை வென்ற எழுத்துக்களின் வலிமையினை நினைத்துக்கூட பார்க்க இயலாது.
‘நதிகளை இணைக்கும் கனவு’ அவற்றுள் ஒன்று. அத்தகைய பெருமையுடைய மகாகவி, தான் எவ்வாறு
மதிக்கப்படவேண்டும் எனத் தனிப்பட்ட கனவொன்று கண்டார். அக்கனவினை மெய்யாக்கிய பெருமை
ரவிக்கு உண்டு. “அவன் தனக்கென்று கண்ட அந்த ஒரே கனவை அவனுக்குப் பிறகாவது நிறைவேற்றி
வைக்க, அவனுடைய பிறந்தநாளான டிசம்பர் 11-ஐக் கவிஞர் திருநாளாகக் கொண்டாடுகிறோம். அன்று
அவனுடைய உருவச்சிலையைப் பல்லக்கில் எழுந்தருளச் செய்து, அதற்குச் சால்வை போர்த்திப்
பொன்முடிப்புக் காணிக்கை வைத்துச் சிறுவர், சிறுமிகள் ஜதிசொல்லிக்கொண்டு நடனமாடிவரக்
கவிஞர் கூட்டம் புடைசூழ, அவனை யானை மிதித்த திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள்
கோவிலில் இருந்து பாரதி இல்லத்திற்குக் கொண்டுவரும் ஜதிபல்லக்கு நிகழ்ச்சியை ஆண்டுதோறும்
நடத்தி வருகிறோம்” என்னும் கூற்று கவிதை உலகத்தின் சார்பாக மகாகவிக்கு நன்றி செலுத்தும்
நிகழ்வாக விளங்கிச் சிறப்பதனை உணர்ந்துகொள்ளமுடிகிறது.
சிறகடித்த
கவிதை
புலவர்கள், மக்களுக்கும் மன்னனுக்கும் இடையே
பதவியில் இல்லாத தூதுவர்களாக செயல்பட்டுநின்றனர். அப்பண்பாடே வழிவழியாக சமூக ஈடுபாடு
கொண்ட கவிஞர்களாக சிலரை உருவாக்கிவருகிறது. அவ்வகையில் ரவியின் சமூக ஈடுபாடும் போற்றத்தக்கதாக
அமைகிறது. “குடிமக்களாகிய நாம் (We The People)
என்ற அமைப்பை நிறுவி ஊழல் எதிர்ப்புக்கூட்டங்களை நடத்தியிருக்கிறேன். என் மீதுள்ள
அன்பு மிகுதியால், என்னுடைய ஊழலெதிர்ப்பு நடவடிக்கை பற்றி ‘அமுதசுரபி’ இதழில் ஒருதனித்தலையங்கமே
எழுதிவிட்டார். அதன் ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன்” (காவாபோ.,ப.165) என்னும் அடிகள்
கவிஞன் சமூக ஈடுபாட்டுடன் செயல்பட்ட திறத்தை எடுத்துக்காட்டுகிறது. கவி உள்ளம் கவிதையினின்று
மாறுபட்டு நின்றதனையும் குறிப்பிடுகிறார் ரவி. “உலகத்தின் அன்றாட மானுட நிகழ்ச்சிகள்
என் கவிதைப் பொறியைத் தூண்டிவிடவில்லை. என் கவிதை வேறெங்கோ சிறகடித்துப் பறந்துகொண்டிருந்தது.” (காவாபோ.,ப.165) என்னும் அடிகளின்வழி
தனது கவியின் பாதை ஒவ்வொரு காலத்திலும் தனிப்பட்டு சிறப்புற்று நின்றதனையும் புலப்படுத்தியுள்ளார்.
கவி உள்ளம் விதியின் வழி எங்கோ சிறகடித்துக்கொண்டிருப்பதனை இக்கூற்று உணர்த்தி நிற்கின்றது.
“மீண்டும் மீண்டும் சொல்கிறேன், கவிதை என்
கைவாள் இல்லை; என் கேடயம் இல்லை, என் ஆயுதமோ, கருவியோ சாதனமோ இல்லை, நானே கவிதையின்
கருவி, ஆயுதம், சாதனம். கவிதையே என்னை ஆட்டி வைக்கும் பிச்சி, பேய், பெருந்தெய்வம்”
(காவாபோ.,ப.168) என்னும் அடிகளின் வழி கவிதையிடம் கொண்டிருக்கும் ஆழ்ந்த காதலைப் புலப்படுத்துகிறார்
ரவி. கவி வேறு ரவி வேறு என எண்ண இயலாத அளவிற்கு ஒன்றிவிட்ட தன்மையினையும் அவருடைய கவிப்பயணம்
அமைந்துள்ளதனை உணர்ந்துகொள்ளமுடிகிறது.
நிறைவாக
அழகான கவிதைப் பயணத்தை ; வாழ்க்கைப் பயணத்தினின்று
வேறுபடுத்த முடியாது. இக்கூற்றுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்த ‘வானவில்’ ரவியின் வாழ்க்கையே
‘காற்று வாங்கப்போனேன்’ என்னும் தன்வரலாற்று நூலாக வெளிவந்துள்ளதனைக் காணமுடிகிறது.
வாழ்க்கை வண்ணங்கள் சேர்க்கப்படும் போதுதானே அழகு. வண்ணங்கள்
இல்லாத ஓவியமும் எண்ணங்கள் சொல்லாத வாழ்க்கையும் சிறப்பாக இருப்பதில்லை. தம் வாழ்க்கையில்
சுவை சேர்த்த கவிதைகளை, களை நீக்கி கலையாக்கி கவி வந்த கதையினை அழகாக எடுத்துரைக்கிறார்
கவிஞர் ரவி.
ரவியின் கவிதைப் பயணத்தை அல்லது வாழ்க்கைப் பயணத்தை அருமையான
கட்டுரைகளாக வடித்துக்கொடுத்துள்ள இந்நூல் சொல்லழகிலும் பொருளழகிலும் போற்றத்தக்கதாக
அமைகிறது.
நகைச்சுவையினை இடையில் புகுத்திச் சொல்லும்
திரைப்படம்போல் இல்லாமல் இயல்பாகவே நகைச்சுவை கலந்த திரைக்காவியம் போல் இந்நூல் புனையப்பட்டிருப்பது
நூலாசிரியரின் கவிப்புலமைக்கும் மொழிப்புலமைக்கும் சான்றாக அமைகிறது.
காலம் கடந்து நிற்கும் மகாகவியிடம் கொண்ட ஈடுபாடு,
கவியரசருக்கே அறிவுரை கூறிய அன்புள்ளம், முன்னைக்
குடியரசுத்தலைவருக்கு விருது வழங்கிய சிறப்பு என எண்ணற்ற தமிழ்ப்பணி செய்த ரவியின்
பெருமை காலத்தை வென்று நிற்கும் செயல்களாக அமைந்துள்ளதனை உணரமுடிகிறது.
ஒரு நூலைப்படிக்கும்போது, அந்தப் படைப்பாளியோடு பயணிப்பதும்.
அந்தப் படைப்போடும் பயணிப்பதும் வாசகர்களின் இயல்பு.. ஒரு நூலகத்தில் அமர்ந்து படிக்கும்போது
எத்தனையோ அறிஞர்களுக்கிடையில் அமர்ந்திருப்பதுபோல் தோன்றுவது கற்றறிந்தவர்களின் உணர்வாகவே
அமைகிறது. . அவ்வாறு இந்நூலானது, சுவைஞர்களை நட்புக்குரியவர்களாக மாற்றிவிடும் அளவிற்கு
எளிய நடையில் புனையப்பட்டிருப்பதனை உணர்ந்துகொள்ளமுடிகிறது.
பனிக்கூழினை (ஐஸ் க்ரீம்)டம் தீர்ந்துவிடக்கூடாதென கொஞ்சம் கொஞ்சமாக
உண்டு மகிழும் குழந்தையைப்போல் வாசகர்கள் நூலினை முடித்துவிடாமல் படிக்கும் உணர்வு
நூலின் பெருமைக்குச் சான்றாகிறது. அவ்வகையில் இந்நூலினை எழிலுறப் பின்னியிருப்பதும்
இந்நூலின் பெருமைக்கும் இந்நூலாசிரியரின் திறமைக்கும் சான்றாவதனை உணர்ந்துகொள்ளமுடிகிறது
வழக்கறிஞர் தொழிலில் இருப்பினும், கவிதையைத்
தொழிலினும் மேலாகக் கருதிய ரவியின் திறத்தை அவருடைய கவிதைகளின் நுண்மாண்நுழைபுலம் வெளிப்படுத்தி
நிற்பதனைக் காணமுடிகிறது.
“கல்வியெனும் சீரேந்தி ; கண்களிலே நீரேந்திச்
செல்கின்றோம் சேவிக்கின்றோம்
என ரவி
பாடிய கவியே, இக்கட்டுரை எழுதிமுடிக்கும்போது உணர்வில் ஒன்றி உள்ளத்துள் நின்று அவர்
பெருமையினைப் பாடி நிற்பதனை உணர்ந்துகொள்ளமுடிகின்றது.
********************