தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

செவ்வாய், 1 டிசம்பர், 2020

தேசிய ஒருமைப்பாட்டு நாள் - National Integration Day

தேசிய ஒருமைப்பாட்டு நாள் – 19.11.2020

தேசத்தின் வலிமையானது, அது சொந்தமாக எதைச் செய்ய முடிகிறதோ அதனைப் பொருத்தே அமைகிறது. அது எவற்றையெல்லாம் கடனாகப் பெற்றது என்பதைப் பொருத்து அல்ல – மேனாள் பிரதமர் இந்திராகாந்தி, அவருடைய பிறந்த நாளை தேசிய ஒருமைப்பாட்டு நாளாகக் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம்.

565 பிரிவாக இருந்த இந்தியாவை ஒருங்கிணைத்த சர்தார் வல்லபாய் படேல் ‘இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்டதைப்போலவே இந்தியாவை ஒருங்கிணைக்கப் பாடுபட்ட இந்திராகாந்தியை ‘இரும்புப் பெண்மணி’ என அழைத்தனர்.

இந்தியர்களிடம் வணிகத்திற்காக  ஒப்புதல் கேட்டு வந்த ஆங்கிலேயர்கள், இந்தியர்களின் இரக்க குணத்தைத் தவறாகப் பயன்படுத்திக்கொண்டனர். திண்ணையில்  அமர இடம் கேட்டு பின் வீட்டையே சொந்தம் கொண்டாடினர். இந்தியர்களைச் சேரவிடாமல் பிரிவினையை உண்டாக்கினர். அடிமைகளாக்கினர். ஒன்றாக, ஒரே குடும்பமாக வாழ்ந்திருந்த இந்தியர்களை சாதியால் பிரித்தனர் ; நிறத்தால் பிரித்தனர்; மொழியால் பிரித்தனர் ; மதத்தால் பிரித்தனர்.

இந்தியத் தலைவர்கள் இவ்வுண்மையை மக்களுக்கு உணர்த்தினர். உணர்ந்துகொண்ட பலர் தேச பக்தர்களாயினர். உணர்ந்துகொள்ளாதவர்கள் தீவிரவாதிகளாயினர். பூனை பல்வேறு நிறத்தில் இருந்தாலும் அது ஒரே இனம் தானே. அதுபோல் இந்தியர்கள் பல நிறத்தில் இருந்தாலும், நாடு என்னும்போது ஒரே துடிப்புடன் ஒன்றுசேரவேண்டும் என்றார் மகாகவி பாரதியார். அவருடைய எண்ணம் ஒவ்வொரு ஆண்டும் வலிமை பெற வேண்டும் என்பதற்காகவே இந்த நாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

இளைஞர்கள் நிறைந்த வலிமையான நாடு இந்தியா. இதன் வலிமையினைப் பொறுத்துக்கொள்ளமுடியாத எதிரி நாடுகள் நம் கையாலேயே நம் கண்களைக் குத்தும் வகையில் கலவரங்களையும், தீவிரவாதத்தையும் உருவாக்கி வந்தது ; வருகிறது. போதைப்பொருட்களையும் கடத்திவருகிறது. இளைஞர்களுக்கு கொடுத்துவருகிறது. இதனால் அவர்களுடைய ஆற்றலை வீணாக்கிவிட முயற்சிக்கிறது. போதையில் சிக்காமல் இருக்கும் இளைஞர்கள் சாதனைப் படைக்கிறார்கள். இதனை உணர்ந்து தேசத்தின் வலிமைக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும். நம்மை யாராலும் பிரிக்கமுடியாது. நாம் யாரும் விலை போகமாட்டோம் என்பதனை உலகுக்கு உணர்த்த வேண்டும்.

       தீபாவளி, பொங்கல் போன்ற மகிழ்ச்சியான விழாக்காலங்களில் கூட எல்லையில் உயிரினைப் பற்றி கவலைகொள்ளாமல் தேசத்தைக் காக்கும் பாதுகாப்புப்படை வீரர்களின் தியாகத்தை எண்ணிப்பார்க்கவேண்டும். அவர்களின் தேசப்பற்றை உணர்ந்துகொண்டாலே நாட்டில் கலவரங்கள் இருக்காது. கலவரம் இல்லையெனில் அமைதி நிலவும். அமைதி நிலவினால் முன்னேற்றப்பாதையில் கவனம் செலுத்த இயலும். இந்தியா உலக நாடுகளை வழி நடத்திச் செல்லும். அதற்கு உங்களைத்தான் இந்தியா எதிர்பார்க்கிறது. உங்களால் இயன்ற அளவிற்கு தேசத்தின் முன்னேற்றத்திற்குப் பாடுபடுங்கள். முடிந்த அளவிற்குப் பிறர்க்கு உதவி செய்யுங்கள்.

       இந்தியர்கள் திறமை இன்று உலகெங்கும் பேசப்படுகிறது. இந்தியர்கள் பிறநாடுகளில் பிரதமராக, துணை ஜனாதிபதியாக, அமைச்சர்களாக, இராணுவ அதிகாரிகளாக, தொழில் நுட்ப வல்லுநர்களாக, மருத்துவர்களாக சிறக்கின்றனர். இதனை உணர்ந்து ‘இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்’. நல்லவர்களுடைய அமைதி தீயவர்களை வளர்த்துவிடும். எனவே, தீமைகளைத் தடுப்போம். அனைவரும் ஒன்றுபட்டு தேசத்தின் நன்மைக்குப் பாடுபடுவோம். நாளைய தலைமுறைக்கு நாம் நல்ல தேசத்தைக் கொடுக்க வேண்டிய கடமை  இருக்கிறது. நமக்குள்ள கடமையை உணர்வோம். ஒன்றுபடுவோம் ; உயர்வடைவோம்.

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக