தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

திங்கள், 21 செப்டம்பர், 2020

எம்.எஸ்.சுப்புலட்சுமி – பாடிய மயில் - Singing Peacock M.S.Subbulakshmi

 

எம்.எஸ்.சுப்புலட்சுமிபாடிய மயில்

       கலைவாணியின் அருள்பெற்ற இசைராணி. மதுரை சுந்தரடிவு சுப்புலட்சுமி. பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா. நிலவின் முகத்தில் சூரியனைப் பார்த்ததுண்டா? பார்க்கலாம் எம்.எஸ் அம்மாவின் நிலவு முகத்தில் சூரியன் திலகமாய் இருக்கும் ; அதுவே அம்முகத்தின் ஒளியைப் பெருக்கும். பெண்களைப் பார்த்தவுடன் வணங்கத் தோன்ற வேண்டும் என்னும் கூற்றுக்கு அடையாளம். குரலில் குயில் ; வடிவில் மயில். மொத்தத்தில் பாடும் மயில்.

       1916 ஆம் ஆண்டு செப்டம்பர் பதினாறாம் நாள் சண்முகவடிவு அம்மையாருக்கும் சுப்பிரமணிய ஐயருக்கும் இந்தியாவின் இசையரசி குழந்தையாய்ப் பிறந்தது.  பூவில் பூ பூக்குமா? ஆம் பூத்தது. தாமரை முகத்தில் குவளைப் பூ போன்ற இரண்டு கண்கள் பூங்கொத்து போல. பூங்கொத்து எனப்பொருள்படும் குஞ்சம்மாள் என கொஞ்சு மொழியில் அழைத்து மகிழ்ந்தார்கள். குஞ்சித பாதம்அழகிய திருவடி, தூக்கிய திருவடி என்பர். குஞ்சு என்றால் தலைமுடி.  சுருண்ட கூந்தல் வளத்தாலும் இப்படிப் பெயர் வைப்பது வழக்கம். அவருடைய சுருண்டகூந்தல் கூட செஞ்சுருட்டியை நினைவுறுத்தும். 

எல்லா குழந்தையும் குவா குவாஎன்று கத்த இந்தக்குழந்தை மட்டும் குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணாஎன இசைத்தது அப்போது யாருக்கும் புரியவில்லை. பின்னாளில் தான் தெரிந்தது. பாட்டி அக்கம்மாள் வயலின் வாசிப்பார். அம்மா வீணை வாசிப்பார். இவரோ குரலிலேயே இவை இரண்டையும் சுவாசிப்பார். இவருடைய இசைப்பயணம் பத்து வயதில் தொடங்கிற்று. தாயார் கச்சேரி தடைப்பட்டபோது மகளை மேடைக்கு அழைத்துப் பாடச்சொல்கிறார். பத்து வயதில் முத்து தெறிப்பது போல் பாடுகிறார். இசைச்சொத்துக்கு வாரிசாகிறார். மரத்தைப் பற்றிக்கவிதை எழுதவேண்டுமென்றால் நீ மரமாக மாறவேண்டும் என்பார்கள். அப்படி மீரா என்னும் படத்தில் மீராவாகவே வாழ்ந்தார். மீரா ஆற்றில் செல்லும்போது மயங்கி விழவேண்டும். கிருஷ்ணர் வந்து காப்பாற்றுவார். இதுதான் காட்சி. அக்காட்சியை படமாக்கும்போது உண்மையில் மயங்கிவிட்டார். படகோட்டி குதித்து காப்பாற்றினார். அந்தப் படகோட்டியின் பெயர் கிருஷ்ணா. அம்மையாரின் பக்தியின் பெருமைக்குச் சான்றாக இந்நிகழ்வினைக் குறிப்பிடுவார்கள்.

       என்.டி. ராமராவ் தெலுங்குத் திரையுலகின் சூப்பர்ஸ்டார். கடவுளாகவே மதிக்கப்பட்டவர். முதலமைச்சராக ஆட்சி செய்தபோது, எங்களுடைய பதவி, மக்கள் எங்களிடம் கொண்ட அன்பு எல்லாம் மாறிப்போகும். ஆனால் எம்.எஸ் அவர்களின் குரல் உலகம் உள்ள வரை வாழும். நாள்தோறும் அவருடைய குரல் கேட்டுத்தான் பெருமாளே எழுகிறார்.  இதை விடப்பெருமை என்ன வேண்டும். அவர்பஜ கோவிந்தம்எனப்பாடினால் எல்லா துன்பமும் கஜ தூரம் ஓடிவிடும்.

       பண்டிட் ஜவஹர்லால் நேரு அவருடைய பாடும் திறனை மௌண்ட்பேட்டனுடன் கண்டு களித்தவர். நான் இந்த நாட்டுக்குத் தான் பிரதமர். அவரோ இசையுலகுக்கே ராணி எனப் பாராட்டினார்.

       இந்தியாவின் பெருமைக்கு அடையாளமான அம்மையாருக்கு ஆந்திராவில் வெண்கலச்சிலை பதினான்கடி அடி உயரம் ; நான்காயிரம் கிலோ வெள்ளி -மும்பையில் சிலை என இசையரசியின் புகழை நிலைநிறுத்திப் பெருமை சேர்த்துக்கொண்டனர். தமிழகத்தின் பெருமைக்குக் காராணமான இராஜராஜ சோழனுக்கு, கடல்கடந்து தமிழனின் கொடி ஏற்றிய இராஜேந்திர சோழனுக்கு, கல்லணை கட்டி உலகுக்கே அணை கட்டக் கற்றுக்கொடுத்த தமிழன் காரிகாலனுக்கு, ஆங்கிலேயரை எதிர்த்து கப்பலோட்டிய தமிழன் சிதம்பரம் பிள்ளைக்கு, விடுதலை முழக்கத்தால் விழிக்க வைத்த சுப்பிரமணிய சிவாவுக்கு வீரத்தின் அடையாளமான வாஞ்சிநாதனுக்கு உலகையே இசையால் வென்ற இசைவாணி எம்.எஸ். அம்மையாருக்கு சிலை எழுப்பினால் அது அவர்களுக்குச் செய்யும் பெருமை அல்ல. நாளை வரும் தலைமுறை தலைநிமிர்ந்து இவர்கள் பிறந்த மண்ணில் பிறந்தவன் என்னும் பெருமையை எடுத்துச்சொல்லிக்கொள்வதற்கு வழியாக அமையும்.

`ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னாளும் ஒரு ஆண் இருக்கிறான். என்பதற்கு எடுத்துக்காட்டு அவருடைய கணவர் சதாசிவம். கணவன் மனைவி என்றால் அத்தனை மதிப்பு. மிகவும் கண்டிப்பு கட்டுப்பாடு நிறைந்தவர். பாடும் பொழுது முதல் வரிசையில் அமர்ந்து கேட்பார். குறையிருப்பின்இப்படிப்பாடுவதற்கு இந்த உயிர் தேவையா?’ எனக் கேட்பாராம். இதைவிடக் கடுமையாக யாராவது கேட்கமுடியுமா? எப்படிக்கேட்டாலும் அமைதியாக இருப்பார். இரு கை தானே ஓசை வரும் என்னும் நுட்பத்தை அறிந்தவர். அவரிடம் பேட்டி காணவேண்டும் என்றால் இவர் தான் பேசுவார். ரோஜாவுக்கு மலர்த்தான் தெரியும். அது எவ்வாறு என்று அதனிடம் கேட்டால் சொல்லத்தெரியாது. அதுபோல்தான் எம்.எஸ். என்று சொல்லிவிடுவார்.

       எப்படியோ ஒரு வகையில் எம்.எஸ் அவர்களையே கேட்டார்கள். உங்கள் கணவர் இவ்வளவு கண்டிப்புடன் இருக்கிறாரே. நான் ஐந்தாம் வகுப்பு வரைதான் படித்திருக்கிறேன். அவர் நன்கு படித்தவர். அவர் எடுக்கும் முடிவுதான் சரியாக இருக்கும் என எண்ணுகிறேன். ஆமைக்கு அதன் ஓடு பாரமல்ல ; பாதுகாப்பு என உணர்த்தியவர்.

       அவர் பிறந்த நாள் பதினாறு. கூட்டினால் ஏழு. அதனால்தானோ என்னவோ ஏழிசை நாயகியாக ஒளிர்ந்தார். ஆங்கிலம் கலந்துசொல்லவேண்டுமெனில்ஏழிசை ஏஞ்சல்’. ஏழு மொழிகளைக் கற்றிருந்தார், தமிழ், ஆங்கிலம், இந்தி மராத்தி, தெலுங்கு, மலையாளம், பெங்காலி.

       இசை அரசி அவர். எப்படி? அரசி என்றால் என்ன செய்யவேண்டும், மக்களுக்கு அள்ளிக்கொடுக்கவேண்டும் அல்லவா. அப்படி தான் பெற்ற பரிசுகளை எல்லாம் அள்ளிக்கொடுத்தவர். நினைத்துப்பாருங்கள்கல்கி கார்டன்என்னும் மிகப்பெரிய இடத்தில் வாழ்ந்தவர். பின்னாளில் வாடகை வீட்டில் வாழ்ந்தார். முப்பெருந்தேவி போல் வலம்வந்தவர்.  அவர் கலையில் வல்லவராதலால் கலைமகள். அள்ளிக்கொடுப்பதில் அலைமகள். சிவத்தின் மனைவியாதலால் மலைமகள்.

       மதுரைக்கு மல்லிக்கு மட்டுமல்ல இசைத்துள்ளி வருவதற்கும்தான் என எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி.

       உங்களைப் புரிந்துகொண்டவர்களுக்கு நீங்கள் எதுவும் சொல்லவேண்டியதில்லை. உங்களை புரிந்துகொள்ளாதவர்களுக்கு எது சொன்னாலும் புரியப்போவதில்லை. என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர். எத்தனை விமர்சனம் வந்தபோதும் அமைதியாகவே நடந்துகொண்டார். எத்தனையோ அலைகளின் ஆராவாரம் அந்த மௌன மலையினை ஒன்றும் செய்துவிடமுடியவில்லை.

       மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் . அது முடிந்தபின்னால் ஒரு பேச்சிருக்கும். என்பதற்கு எடுத்துக்காட்டு அம்மையார். படித்த ஆசிரியர்களை விட படிக்கின்ற ஆசிரியர் வேண்டும் என்பார்கள். இது ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல எந்த்த் தொழில் செய்பவரும் அந்த்த் தொழிலைத் தெய்வமாக எண்ணிச்செய்யவேண்டும். புருஸ்லீ, டெண்டுல்கர், தோனி  யாராக இருந்தாலும் ஏன் சிறந்தார்கள். கடுமையான பயிற்சி தான் காரணம். அப்படித்தான் எந்தத் துறையாக இருந்தாலும் கடும்பயிற்சி, ஈடுபாடு, சமரசம் செய்துகொள்ளாமை, தள்ளிப்போடாமல் நிகழ்ச்சி அமைப்பாளர்களே நன்றாக இருக்கிறது என்று கூறினாலும் சரியில்லை. முதலிலிருந்து பதிவு செய்யலாம் என்னும் கடமை உணர்வு மிக்கவராக வலம்வந்தவர். எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்பதல்ல வாழ்க்கை. இப்படித்தான் வாழவேண்டும் என்பதே வாழ்க்கை.

       இது இசைத்துறைக்கு மிகவும் பொருந்தும். பாடகரை விட பேச்சாளராகப் புகழ்பெறுவது கடினம். ஏனென்றால் ஒரு மேடையில் பேசியதைப் பேசமுடியாது. இதை ஏற்கெனவே பேசிவிட்டீர் என்பார்கள். ஆனால் பாடகர் வேறு பாடலைப்பாடினாலும், நீங்கள் அந்தப் பழைய பாடலைப் பாடுங்கள் என்பர்.      இவர் ஒரு தேசிய ஒருமைப்பாட்டின் அடையாளம். ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் மிகச் சிறந்த கலைஞர்கள் எல்லாம் இவருடைய கச்சேரிக்கு வாசிக்க வருவார்கள். வீரம் மிக்க பெண்மணி. தன்  திறமையில் அலாதியான நம்பிக்கை கொண்டவர். தன்னுடன் இருப்பவர்கள் தங்களுடன் பலமானவராக இருக்கக்கூடாது என எண்ணுவது பொதுவான இயல்பு. ஆனால் இவர்  சிறந்தவர்களைத் தேர்ந்தெடுத்து வரவழைப்பார். அந்த இசையையும் விஞ்சும் வகையில் பாடுவார்.

கொள் எனக் கொடுத்தல் உயர்ந்தன்று ; அதன் எதிர் கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று’ – என்னும் புறநானூற்றுப் பாடலுக்கு இலக்கணமாக வாழ்ந்தவர் அம்மையார். புரட்சித்தலைவர் எம்.ஜி. ராமச்சந்திரன் வள்ளலாக வாழ்ந்தவர். அவர் சத்துணவுத்திட்டம் கொண்டுவந்தபோதுஅன்று சந்திரனைக் காட்டிச்சோறூட்டுவார்கள். இன்று சந்திரனே சோறூட்ட்கிறதுஎன்பார்கள். அவர், வாடகை வீட்டில் அம்மையார் இருப்பதை அறிந்து  இரண்டு வீட்டுப்படங்களைக் கொடுத்து ஏதாவது ஒன்றினைத் தேர்ந்தெடுக்குமாறு கூறினார். சதாசிவம் அவர்களோஎங்களுக்குக் கொடுத்துத்தான் பழக்கம். வாங்கிப்பழக்கமில்லைஎன மறுத்துவிட்டார்.

       திருப்பதி தேவஸ்தானத்தில் அன்னமாச்சாரியார் பாடலைப் பாட வேண்டுதல், பணம் கொடுத்தால் வாங்கமாட்டார் என்பதனால் இந்த ஏற்பாடு. அவருடைய நிலை முன் போல் இல்லை. பாடவேண்டுமென்றால் மீண்டும் படிக்கவேண்டும். பயிற்சி செய்யவேண்டும். என மறுத்துவிடல். இறைப்பணியாயிற்றே எனப் பணிவுடன் கூற வயதான போதிலும் கற்க அஞ்சாதவர்.

மகாத்மா காந்தி இவர் பாடக்கேட்டு மகிழ்ந்தவர். இதைவிட வேறு விருது வேண்டுமோ. ஆனால் பல விருதுகள் இவரைத்தேடிவந்தன.  திருப்பதி தேவஸ்தானத்தில் இவருக்கு பெருமை செய்ய ஆஸ்தான வித்வான் விருதுவழங்க விரும்புவதாக கூறும்போது. என்னுடைய குருவுக்குக் கொடுக்காமல் எனக்குக் கொடுப்பது எப்படிச் சரியாகும் என மறுத்தார். உடனடியாக அவருடைய குருவுக்குக்கொடுத்துவிட்டு இவருக்கு மரியாதை செய்கிறார்கள். இவருடைய குரு செம்மங்குடி ஐயாவிடம் பேட்டி கண்டார்கள். உங்களுடைய சிஷ்யை இப்படிப்பாடுகிறார்களே. நீங்கள் ஏன் பாடுவதில்லை.  சுப்புலட்சுமியால் தான் பாடமுடியும்எனப் பெருமையாக கூறுகிறார்.  குருவை பெருமைப்படுத்தும் சீடர். சீடரைப் பெருமைப்படுத்தும் குரு எத்தனை அழகு. பண்டிட் நாராயண வியாசரிடம் இந்துஸ்தானி இசையைக்கற்றார்.

கண்ணிற்கு மையிட்டு அழகு செய்தார். காதிற்கு கம்மல் பூட்டி அழகு செய்தார். மூக்கிற்கு இருபக்கமும் மூக்குத்தியால் அழகுசெய்தார். வாய்க்கு மட்டும் தம் குரலாலே அழகு செய்தார். ‘சகுந்தலைபடத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோது மறுத்தார். வேறோருவரை கதாநாயகியாக்கிவிட்டனர். நாரதருக்கு ஆள்தேடி இவரைக் கேட்டார்கள். பாடல்கள் பாடும் மிக முக்கியப் பாத்திரம் எனக் கூறி ஒப்புக்கொள்ளவைத்தனர். கல்கி இதழ் தொடங்க பணம் தேவைப்பட்டது. நடிக்க ஒப்புக்கொண்டு பணம் அளித்தார்.

அம்மையார் ஒரு புரட்சிப்பெண். தாயின் பெயரையே தலைப்பெழுத்தாகக் கொண்டவர். அவர் இருநூறுக்கும் மேற்பட்ட அறக்கட்டளைக்கு அடித்தளமாக நின்றவர். பத்து கோடிக்கும் மேல் ந்ன் கொடை திரட்டிக் கொடுத்தவர். அமைதியாக எத்தனைக் குழந்தைகளை, முதியோரை, அநாதைகளைக் காத்தார். எனவேஇசையுலகின் அன்னைத்தெரசாஎன்றும் இவரைக் குறிப்பிடலாம்.

மீரா படத்தில் நடிக்கும்பொழுது யானைகள் குதிரைகள் இடம் பெறும் காட்சி அமைக்க வேண்டும். கிடைக்கவில்லை. என்ன செய்வதென்று தயாரிப்பாளருக்கும் புரியவில்லை. மைசூர் மகாராஜா அவருக்காக என் ராஜ்ஜியத்தையே விட்டுக்கொடுப்பேன். யானை, குதிரைப்படையையா கொடுக்கமாட்டேன் எனக் கொடுத்தார்.

       சாந்த முகம், காந்தக் குரல்இளமையில்  எல்லோரும் அழகாக இருப்பார்கள். முதுமையில் இளமைப் பருவத்தைவிட அழகாக இருந்தவர்கள் இருவர் ஒருவர் மகாத்மா காந்தி. இன்னொருவர் எம்.எஸ் அம்மா.  பாடும்பொழுது கூட முகபாவம் அழகாக இருக்கும். சிலருக்கு முகம் பாவமாக இருக்கும். இவருடைய பாடலால்சேவாசதனம்படம் நன்றாக ஓடியது.

        மீரா படத்திற்குப் பின் எத்தனையோ பட வாய்ப்புகள் வந்தன. புகழின் எல்லைக்குச் சென்றபிறகு அதைவிட சிறந்த படத்தைத் தரமுடியாது எனக் கணவர் கூற அதை அப்படியே ஏற்றுக்கொண்ட  பணிவுமிக்க பெண்மணியாகத் திகழ்ந்தார்.

தங்கத்தட்டுக்களை விட இவருடைய இசைத்தட்டுக்கள்  அதிகம் விற்பனையாயின. பதின்ம வயதிலேயே இவருடைய  பெயரினையே விளம்பரமாக ஓட்டி இசைத்தட்டுக்களை வெளியிட்டனர். இரண்டாயிரத்து ஐநூறு பாடலுக்கு மேல் மனப்பாடமாக வைத்திருந்தவர். யுஎன் ஓ. எனப்படும் பன்னாட்டு அமைப்பில் 1966 இல் பாடினார். இலண்டன், நியூயார்க், மாஸ்கோ, எடின்பர்க் எனப் பல நாடுகளுக்குச் சென்று இந்தியாவின் பெருமையைக் காத்தவர்.

1954 –இல் பத்ம பூஷன்

1956- இல் சங்கீத நாடக அகாதெமி விருது.

1974 – இல் ஆசியாவின் நோபல் பரிசு என்னும் இராமன் மகசேசே விருது(முதல் இசைக்கலைஞர்)

1975- இல் பத்ம விபூஷன்

1975 – சங்கீத கலாசிகாமணி 11 விருது.

1988- காளிதாஸ் சம்மான் விருது

1990- இல் இந்திராகாந்தி விருது

1998- பாரத ரத்னா விருது

என அனைத்து விருதுகளையும் பெற்றுக்கொண்டார். 2005 ஆம் ஆண்டு ஸ்டாம்ப் வெளியிட்டுப் பெருமைப் படுத்தியது. காஞ்சிபுரம் புடவைக்குக் கூடஎம்.எஸ். ப்ளுஎனப் பெயரிட்டுப் பெருமைப்படுத்தினர். ‘தபஸ்வினிஎன லதா மங்கேஷ்கர் பாராட்ட, உஸ்தாத் குலாம் அலிசுஸ்வரலட்சுமிஎனப்பாராட்டினார்.

இவர் குரல் கேட்டால் சொர்க்கம் என உலகமே போற்ற, இவர் குரல் இல்லா விட்டால் சொர்க்கம் இல்லை என நினைத்த சொர்க்கலோகம் 2004 ஆம் ஆண்டு திசம்பர் 11 ஆம் நாள் இவரை அழைத்துக்கொண்டது. ‘காற்றினிலே வரும் கீதம்இருக்கும் வரை இவருடைய குரல்இசைஉலகில்வேதம் போல் நிற்கும் என்பதில் ஐயமில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக