அமைதி
உடனிருப்பு நோக்கில் திருக்குறளில் குணநலனும் சமூக நலனும்
Nobility and Social welfare in Thirukkural for a Peaceful
co-existence
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள், மானுட வாழ்விற்கும்
மானுடமேன்மைக்கும் (HUMAN
RESOURCE DEVELOPMENT) நெறி காட்டிய ; காட்டுகின்ற ; காட்டும்
நூல். காலந்தோறும் மக்களின் வாழ்வைச் செம்மைப்படுத்துவதில் இடையறாத
பங்கினை ஆற்றிவரும் அரிய இலக்கியமாகத் திருக்குறள் திகழ்கிறது. இன, மொழி, நிற வேறுபாடின்றி
அனைவரும் ஏற்றுக்கொள்ளும் ஒரே இலக்கியமாகத் (SECULAR LITERATURE) திகழும் பெருமையுடையதும் இத்திருக்குறளே. அமைதிக்கும் உடனிருப்புக்குமான வழி வகைகளைச் செய்யும்
இலக்கியமாகத் திருக்குறள் திகழ்வதனை, குணநலன்களையும்
சமூக நலன்களையும் எடுத்துரைக்கும் திருக்குறள்களின் வழி நிறுவுவதே இக்கட்டுரையின் நோக்கமாகிறது. (ESTABLISHING THIRUKKURAL IS THE DIDACTIC LITERATURE
FOR PEACEFUL CO-EXISTENCE THROUGH ITS NOBILITY AND SOCIAL WELFARE COUPLETS)
குடிமைப்பணிக்கு அறமே முதல் (VIRTUE IS THE MILE STONE FOR CIVIL SERVICE)
திருக்குறள்
அறத்தை அற வழியில் செய்ய வலியுறுத்தும் நூல் ; பொருளை
அற வழியில் சேர்க்க அறிவுறுத்தும் நூல் ; காமத்தை
அற வழியில் அடக்க நெறிப்படுத்தும் நூல். அறம், பொருள், இன்பம்
என ஒவ்வொன்றிற்கும் இலக்கணம் வகுக்கக்கூடிய நூலாகத் திருக்குறள் இருப்பதனை உணர்ந்துகொள்ளமுடிகிறது. உலக அமைதிக்கு அடிப்படை அறச் சமன்பாடே. அறச்செயல்களேயாயினும் அறத்தினின்று வழுவி செய்தல் கூடாதென்பதனை
ஈன்றாள் பசிகாண்பாள் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை (தி.
656)
THOUGH SHE WHO BEGOT THEE HUNGERS
SHUN ACTS DENOUNCED BE ANCIENT SEERS
எனக்கூறி அறவழியில் மட்டுமே அறத்தை மேற்கொள்ளவேண்டும் என்றும்
தீயவழியில் நின்று அறம்செய்தல் கூடாதென்பதனையும் தெளிவுறுத்துகிறார். நற்குணம் கொண்டோர் ஒருவருடைய அடிப்படைத் தேவைக்கு மிஞ்சி
எதைச் சேர்ப்பினும் அதனைத் தீயபொருளாகவே எண்ணுவர். சமூக நலன் கொண்டு பின்பற்றப்படும் அத்தகைய எண்ணம்
கொண்ட குடிமைப்பணியே பெருமையுடையது என்பதனை
அருளொடும் அன்பொடும் வாராப்பொருள் ஆக்கம்
புல்லார் புரள விடல் (தி.
755)
RICHES DEVOID OF LOVE AND GRACE
OFF WITH IT; IT IS DISGRACE
என்னும் திருக்குறளின்வழி உணர்த்துகிறார் தெய்வப்புலவர். பிறரை வருத்திப் பெறும் செல்வத்தை வெறுத்தாலே சமூகம்
சீரடையும் ; உலகம் நலம்பெறும் ; அமைதி இயல்பாகும் எனத் தெய்வப்புலவர் தெளிவுறுத்துகிறார்.
பசி நீக்கும் மருத்துவம் (HUNGER TREATMENT)
பசிப்பிணி
மருத்துவர்களாக விளங்கும் மக்களாலேயே இவ்வுலகம் வாழ்கிறது என்கிறார் தெய்வப்புலவர்.
அத்தகையோர் துறவிகளைக் காட்டிலும் மேம்பட்டவர்கள் என்பதனை
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல்
அப்பசியை
மாற்றுவார்
ஆற்றலின் பின் (தி.225)
HIGHER’S
POWER WHICH HUNGER CURES
THAN THAT
OF PENANCE WHICH ENDURES
என்னும் திருக்குறள் எடுத்துக்காட்டுகிறது. பசியை நீக்கி
வாழும் எண்ணமே உடனிருப்புக்கான அடிப்படையாகவும் உலக அமைதிக்கான வழியாகவும் அமையும்
என்பதனைத் தெளிவுறுத்துகிறது.
பெருமிதமான வாழ்வு (PROUD LIFE)
வாழ்க்கை
என்பது வாழ் + கை எனப் பிரிக்கத்தக்கதாக அமைகிறது. கை என்பது
சிறிய என்னும் பொருளையும் ; வாழ் என்பது இவ்வுலகத்தில் உயிருடன் வாழ்தலையும் குறிக்கிறது. உயிர்வாழும்
காலம் குறுகியது என்பதனை உணர்த்தும் வகையிலேயே இச்சொல் பின்னப்பட்டிருப்பதனை உணரமுடிகிறது. இதனைச்
செப்பமாக உணர்ந்தாலே அனைத்து உயிர்களையும் அரவணைத்துவாழும் பொதுமைப்பண்புடன் உலக அமைதிக்காகவும் சமூக நலனுக்காகவும் வாழக்கூடிய நிலை ஏற்படும்.
அவ்வாறு வாழ்வோரையே உலகம் போற்றும் என்பதனை
குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு (தி. 1024)
WHO KEEPS HIS HOUSE WITHOUT A BLAME
PEOPLE AROUND, HIS KINSHIP CLAIM
என்னும் திருக்குறளின் வழி
உணர்ந்துகொள்ளமுடிகிறது. நல்லோர் எப்பொழுதும் பலர் சூழ வாழ்வர் என்பதனையும் உணர்த்தியுள்ளார்
தெய்வப்புலவர் திருவள்ளுவர்.
தெய்வம் துணை நிற்கும் (GOD FOR A SOCIAL WORKER)
தான் பெற்ற
குழந்தையைக் காக்கும் கடமை தாய்க்குரியதாக அமைவதைப் போலவே இவ்வுலக உயிர்களைக் காக்கும்
கடமை இவ்வுலகைப் படைத்த தெய்வத்திற்கே உரியது எனத் தெளியமுடிகிறது. தான் செய்ய
வேண்டிய பணியினை எவரேனும் செய்வாராயின் அத்தெய்வம் மகிழ்ந்து அத்தகையோர்க்குத் துணை
நிற்கும் என்பதனை
குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும் (தி.
1023)
WHEN ONE RESOLVES TO RAISE HIS RACE
LOIN GIRT UP GOD LEADS HIS WAYS
என்னும் திருக்குறள் உணர்த்தி நிற்கின்றது. இத்திருக்குறளை ஒரு குடும்பத்தின் முன்னேற்றத்திற்கு ; ஒரு இனத்தின்
முன்னேற்றத்திற்கு ; ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு உழைக்கும் ஒருவர் என எவ்வகையிலும்
பொருள்கொள்ளமுடிகிறது.
அமைச்சின் அருமை (MINISTRY OF EXCELLENCE)
வீட்டின் நிர்வாகத்
திறன் நாட்டு வளத்தையும், நாட்டின் நிர்வாகம் உலக வளத்தையும் மேம்படுத்தும் வகையில்
அமைதல் வேண்டும். உலகின் அமைதியே ஒவ்வொரு நாட்டிலும் எதிரொளிக்கும் என்பதனை உணர்ந்து
உடனிருப்புக்கான வழிவகைகளை செய்தல் வேண்டும். அவ்வாறு சமூக நலன்கொண்டு மக்களைக் காக்கும்
பண்புடையோரே அமைச்சராகப் பணியாற்ற வேண்டும் என்பதனை
வன்கண் குடிகாத்தல்
கற்றுஅறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது
அமைச்சு (தி. 632)
WITH
THESE HE GUARDS PEOPLE BY HIS
KNOWLEDGE
FIRMNESS NAD MANLINESS
என்னும் திருக்குறள் உணர்த்தி நல் அமைச்சுக்கு வழிகாட்டியுள்ளதனைக்
காணமுடிகிறது. அவ்வாறு சமூக நலன் கொண்டு வாழ்வோரால் மட்டுமே நல்ல நாட்டினை ; நல்ல உலகினைப்
படைக்க இயலும் என்பதனைத் தெளிவுறுத்துகிறார் தெய்வப்புலவர்.
பிணியின்மை
செல்வம் விளைவுஇன்பம் ஏமம்
அணிஎன்ப நாட்டிற்கு
இவ்வைந்து (தி.738)
RICH
YIELD, DELIGHT, DEFENCE AND WEALTH
ARE
JEWELS OF LAND WITH BLOOMIN HEALTH
என்னும் திருக்குறள் உலக அமைதிக்கான நெறிகளை எடுத்துரைக்கிறது.
நல்ல விளைச்சல் பிணியின்மையினையும் செல்வ வளத்தையும் இன்பத்தையும் பாதுகாப்பையும் அளித்து
நாட்டின் பெருமைக்கு அணிசேர்க்கும் எனக் குறிப்பிட்டு அவ்வளத்தை உலகத்திற்கே பொதுமையாக்கினால்
உலக அமைதி விளையும் என்பதனை உணர்த்தியுள்ளதனையும் அறிந்துகொள்ளமுடிகிறது.
கண்ணும் பார்வையும் (BENIGN LOOKS)
ஒருவருடைய
பார்வையே பண்பினை எடுத்துக்காட்டும் என்பது தமிழர் வழக்கு. அனைத்து உயிர்களையும் ஒருங்கே
நோக்கும் கருணை கொண்ட பார்வையே உடனிருப்பை உறுதிசெய்யும் என்பதனைத் திருக்குறள் எடுத்துக்காட்டுகிறது.
கண்ணோட்டம்
இல்லவர் கண் இலர் கண் உடையார்
கண்ணோட்டம்
இன்மையும் இல் (தி. 577)
UNGRACIOUS
MEN LACK REAL EYES
MEN OF
REAL EYES SHOW BENIGN GRACE
என்னும் திருக்குறள் அனைத்து உயிர்களையும் ஒன்றாக நோக்கும்
கண்ணுடையவரே கண்ணுடையார் என்றும் மற்றவர் கண்ணிருப்பினும் பார்வையற்றவராகவே கருதப்படுவர்
என்றும் உணர்த்துகிறது. இதன்வழி சமூக நலனுக்காக உழைப்பவரின் அருமையினைத் திருக்குறள்
எடுத்துக்காட்டி அவ்வாறு வாழ வழிகாட்டுகிறது.
வெருவந்த செய்யாமை (AVOIDING TERRORISM)
எளிய மக்களை
வலியோர் கொல்வதே கொடுமையான செயலாகக் குறிப்பிடப்படுகிறது. தனக்கு ஒன்றும் கிடைக்கவில்லையே
என்பதற்காக அமைதியான மக்களை அழிப்பது கோழைத்தனமாகவே அமையும். ஆயுதம் இல்லாதவர்களை ஆயுதங்களால் தாக்கும் கொடுமையினைத் தவிர்க்கவேண்டும்
; வளத்தைச் சீரழிக்காத தன்மையினைப் பரவலாக்க வேண்டும் என்பதனை வலியுறுத்துகிறார் திருவள்ளுவர்.
கடிதோச்சி
மெல்ல எறிக நெடிதுஆக்கம்
நீங்காமை வேண்டு
பவர் (தி. 562)
WIELD
FAST THE ROD OF BUT GENTLY LAY
THIS
STRICT MILDNESS PROLONGS THE SWAY
என்னும் திருக்குறள் உலக வன்முறையினை ஒழித்து அமைதிக்கான
உடனிருப்பினை உறுதிசெய்வதாக அமைகிறது. மென்மையான வழியில் சென்றாலன்றி உலக அமைதியினைக்
காண இயலாது என்பதனைத் தெளிவுறுத்துகிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.
பெண்களுக்கான ஆற்றலுடைமை (WOMEN EMPOWERMENT)
உலக அமைதியானது
பெண்களுக்குரிய இடத்தினை அளிக்காது நிறைவுறாது
என்பதனைத் திருக்குறள் உணர்த்துகிறது. இதனை
சிறைகாக்கும்
காப்புஎவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும்
காப்பே தலை (தி. 57)
OF WHAT
AVAIL ARE WATCH AND WARD?
THEIR
PURITY IS WOMEN’S GUARD
என்னும் திருக்குறள் எழிலுற உணர்த்தி நிற்கின்றது. அடக்கு
முறை கொண்டு பெண்களை ஆளும் இழிநிலையால் எத்தகைய முன்னேற்றமும் அமையாது என்பதனையும்
அவர்கள் தாங்களாகவே தங்கள் வாழ்வை அமைத்துக்கொள்ளும் பெருமையினாலேயே உடனிருப்புக்கான
நிலை காக்கப்படும் என்பதனையும் உறுதிப்படுத்துகிறார் தெய்வப்புலர்.
ஒப்புரவு அறிதல் (DUTY TO SOCEITY)
மனிதனானவன்
தனித்து வாழும் நிலையற்றவன் என்பதனாலேயே சமூக விலங்கு (SOCIAL ANIMAL) எனக் குறிப்பிடப்படுகிறான். அவ்வாறு பிறர் உழைப்பாலேயே
பிறந்து, வளர்ந்து, இறக்கும் மனிதன் பிறரை அரவணைத்து வாழும் எண்ணம் கொண்டோராக வாழவேண்டுமென்பதனைத்
திருவள்ளுவர் ஒப்புரவு அறிதலின் வழி உணர்த்துகிறார். உலகில் உள்ள பொருட்களை தன்னலத்துடன்
உரிமை கொள்ளாது உழைத்தவர்க்கு உரியவகையில் கொடுத்து வாழவேண்டுமென்பதனை
தாள் ஆற்றித்
தந்த பொருள் எல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தல்
பொருட்டு (212)
ALL THE
WEALTH THAT TOILS GIVE
IS MEANT
TO SERVE THOSE WHO DESERVE
என்னும் திருக்குறளின் வழி உணர்த்துகிறார். ஒவ்வொரு நாட்டின்
நிறையினையும் குறையினையும் உணர்ந்து தேவையானதைப் பெற்று தேவைப்படுவதனைக் கொடுத்து வாழ்ந்தால்
நல்லிணக்கத்தோடு வாழமுடியும் என்பதனையும் அதனால் அமைதிக்கான உடனிருப்பினைப் போற்றிப்
பாதுகாக்கமுடியும் என்பதனையும் தெளிவுறுத்துகிறார் திருவள்ளுவர்.
நிறைவாக
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அறம்,
பொருள், இன்பம்
என அனைத்தையும் அறத்தையே அடிப்படையாகக் கொண்டு நெறிப்படுத்தியுள்ளதனை
உணர்ந்துகொள்ளமுடிகிறது.
எப்பணிக்கும்
முதற்பணியாக விளங்கும் பணி குடிமைப்பணி. நன்றியுணர்வுடன்
இப்பணியினை மேற்கொள்ளவேண்டும் எனத்திருக்குறள் அறிவுறுத்தியுள்ளதனைக் காணமுடிகிறது. பிறர் துன்புற
தாம் மட்டும் வாழ்வது வாழ்வாகாது
(NO SOCEITY CAN SURELY BE FLOURISHING AND HAPPY OF WHICH THE FAR GREATER PART
OF THE MEMBERS ARE POOR AND MISERABLE – ADAM SMITH) என்னும் பொருளாதாரத் தந்தை ஆதாம் ஸ்மித் கூற்று திருக்குறளின்
கருத்தினையே மொழிபெயர்த்திருப்பதனை உணர்ந்துகொள்ளமுடிகிறது.
மக்களுக்குச்
சேவை செய்வோரை தெய்வமானது தன் பணியினைச் செய்வதாக எண்ணி துணைநிற்கும் என்பதனைத் தெளிவுறுத்துகிறார் தெய்வப்புலவர்
திருவள்ளுவர்.
உலகின் நலனுக்காக ; உலகின் பாதுகாப்பிற்காக ; உலகின் அமைதிக்காகப்
பாடுபடவேண்டுமாயின் உலகத்தவர் அனைவரும் உடனிருப்புக்கான ஒப்புதலை உணர்ந்துகொள்ளவேண்டும்
எனத் திருக்குறள் உணர்த்தி நிற்கிறது. மானுட மேன்மைக்குத் தனி மனித ஒழுக்கமும் சமூக
ஒழுக்கமும் அடிப்படைக் குணங்களாக அமைதல் வேண்டும் எனத் திருக்குறளின்வழி திருவள்ளுவர்
வலியுறுத்தியுள்ளதனை அறிந்துகொள்ளமுடிகிறது.
குண நலன்களையும்
சமூக நலன்களையும் முன்னிறுத்தும் திருக்குறள்களை ஆய்வதன் வழி அனைத்து மக்களின் நன்மையை
ஒருங்கே நோக்கும் அற இலக்கியமாகத் திருக்குறள் படைக்கப்பட்டுள்ளதனை உணர்ந்துகொள்ளமுடிகிறது. எனவே திருக்குறள்
அமைதி உடனிருப்பை வலியுறுத்தும் நூலாக ; காக்கும்
நூலாக ; வளர்க்கும் நூலாக இயற்றப்பட்டுள்ளது எனத் தெளியமுடிகிறது.
*************
(இராம. கனகசுப்புரத்தினம்,
பதினாறு கவனகர், திருக்குறள் உணர்வுரை, கவியோகி சுத்தானந்த பாரதியாரின் மொழிபெயர்ப்பு,
கவனகர் முழக்கம், ஏழாம் பதிப்பு, 2015)