கல்வியே அழியாச் செல்வம்
எத்தனை ஆண்டு தவம் செய்கிறோமோ அத்தனை சிறப்புடைய வரத்தைப் பெறமுடியும். இது கல்விக்கு மிகவும் பொருந்தும்.
குருவும் சீடனும்
உலகில் செல்வம் பலவுண்டு. அவற்றுள் சிறந்தது எது ? என்று சிந்தித்துப் பார்த்தேன். புரியவில்லை. குருவிடம் கேட்டேன்
அவர் மீண்டும் அதே கேள்வியை என்னிடம் கேட்டார்.
சேர்த்து வைத்த செல்வம் தான் சிறந்தது எனக் கூறினேன்.
ஆனால் அது வெள்ளம் வந்தால் அதனுடன் போய்விடுமே என்றார்.
பணம் பத்தும் செய்யுமாயிற்றே. அதுதான் சிறந்த செல்வம் எனக் கூறினேன்.
ஆனால் அது தீயில் எரிந்துவிடுமே என்றார்.
தங்கம், வைரம் இவைதான் சிறந்தவை எனக் கூறினேன்.
அரசன் நினைத்தால் மக்கள் பெற்றிருக்கும் நிலத்தையோ பொருளையோ கொள்ளமுடியுமே என்றார்.
அரிசி, பருப்பு போன்ற தானியங்கள் தான் சிறந்தவை எனக் கூறினேன்.
ஆனால் அவை கொடுக்கக்கொடுக்க குறைந்து விடுமே என்றார்.
வளமான நிலங்கள் தான் சிறந்தவை எனக் கூறினேன்.
ஆனால் அவற்றைப் பாதுகாக்கா விட்டால் வறண்டு போய்விடுமே என்றார்.
வெள்ளத்தால் போகாமல், தீயில் வேகாமல், வேந்தராலும் கொள்ளமுடியாத, கொடுத்தாலும் குறைவுபடாத, திருடர்களாலும் திருட முடியாத, காப்பதற்கும் எளிதாக இருப்பது எது எனக் கேட்டேன்.
கல்விச்செல்வமே சிறந்தது என்பதனை,
வெள்ளத்தால் போகாது
வெந்தணலால் வேகாது
வேந்தாராலும் கொள்ளத்தான் முடியாது
கொடுத்தாலும் நிறைவொழியக் குறைபடாது
கள்ளர்க்கோ மிக அரிது
காவலோ மிக எளிது
கல்வி என்னும் உள்ளத்தே பொருளிருக்க
உலகெலாம் பொருள்தேடி உழல்வதேனோ
என விடை கூறித் தெளிவுபடுத்தினார்.
ஆசிரியரும் மாணாக்கரும்
அழகில் சிறந்த அழகு எது? கூந்தல் அழகா, ஆடை அழகா ? , மஞ்சள் பூசிய முக அழகா? எனக் கேட்கிறார் ஆசிரியர். பெண்ணுக்கு நீண்ட கூந்தலும் ; வண்ண ஆடையும் ; மஞ்சள் பூசிய அழகும் அழகுதான் என்றாள் மாணவி. ஆனால் அதனை விட அழகு எது? எனக் கேட்கிறார் ஆசிரியர். தெரியவில்லையே? என மாணாக்கர் கூறினர்.
கல்வி தான் அழகு என்றார். ஏன்? எனக் கேட்டாள். இந்த அழகெல்லாம் நிலைபெறாது. கற்ற கல்வி அழகோ வாழ்நாள் முழுதும் அழகுதரும். அழகு மட்டுமல்ல பெருமையும் கல்வியால் தான் விளையும் என்றார் ஆசிரியர். எப்படி? எனக் கேட்டால் மாணவி. ஏனென்றால், கூந்தல் இயற்கையாகவே வளர்வது. அதற்காக மரபணுக்களைத் தான் பாராட்டமுடியும். ஆடை அழகு என்றால் அந்த ஆடையை தயாரித்தவரைத்தான் பாராட்டமுடியும். மஞ்சள் பூசிய முக அழகே அழகு என்றால் மஞ்சலை பூசக்கற்றுக்கொடுத்த தாயாரையே பாராட்டமுடியும். ஆனால் கற்றதால் பெற்ற அழகிற்காக மற்ற எவரையும் பாராட்டுவதில்லை, ஆசிரியர், பெற்றோர் எனப் பலர் பின்னால் இருந்தாலும் கற்ற முயற்சிக்காக கற்றவரே பாராட்டப்படுகிறார். எனவே கல்வி அழகே சிறந்தது என்கிறது ஓர் இலக்கியம். மாணாக்கர்களும் கல்வி அறிவை உணர்ந்துகொள்கின்றனர்.
கல்லாதோர் பெருமை
எத்தனையோ இலக்கியங்கள் கல்வி குறித்த பெருமையை உணர்த்திநிற்கின்றன. பாதிரி மலர் அத்தனைச் சிறப்புடையதாக அமையாவிட்டாலும் நீரில் சேர்ந்தபின் மணம் வீசுகிறது. அது போல கல்லாதவர்கள் கற்றவர்களுடன் சேரும்போது பெருமையடைகின்றனர் என்கிறது ஓர் இலக்கியம்.
கற்றோர் பெருமை
கற்றவர்களை செல்வந்தர்கள் அடக்கிவிடமுடியும் என நினைப்பது தவறு. அப்படி எண்ணுவது தாமரைத் தண்டினால் யானையைக் கட்டிவிடமுடியும் என நினைப்பது போன்றது என்கிறது ஓர் இலக்கியம்.
பெருமை சேர்க்கும் கல்வி கற்போம் கற்ற கல்வி சிறக்க நிற்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக