தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

திங்கள், 3 ஜூன், 2019

தமிழண்ணல் போற்றும் தமிழ்ச்செம்மல் வ.சுப. மாணிக்கனார் - Tamil Scholar Va.Suba. Manickanar

தமிழண்ணல் போற்றும் தமிழ்ச்செம்மல் .சுப. மாணிக்கனார்

முனைவர் .. கிருட்டினகுமார்உலாப்பேசி:9940684775

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய் நன்றி கொன்ற மகற்கு என்னும் தெய்வப்புலவரின் வாக்கிற்கேற்ப தம் வாழ்வை மொழிக்காகவும் இனத்தின் பெருமைக்காகவும் ஈந்த தமிழ்ச்சான்றோர்களில் குறிப்பிடத்தக்கவர் .சுப.மாணிக்கனார்.(.சுப.மா.) பிற்காலத் தமிழறிஞர்களில் மும்மணிகள் எனக் குறிப்பிடப்பெறுபவர்கள் பண்டிதமணி கதிரேசஞ்செட்டியார், கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை, ரசிகமணி தி..சிதம்பரநாத முதலியார், இவர்களுடன் நான்காவது மணியாகத் திகழ்பவர் .சுப. மாணிக்கனார். .சுப.மா. அவர்கள் தமிழுக்காகவும் தமிழர்க்காகவும் தொண்டாற்றிய நிலையினை தமிழறிஞரான தமிழண்ணல் வழி நின்று ஆய விழைந்ததன் விளைவாகவே இக்கட்டுரை அமைகிறது.

தமிழின் நிலை                                                                                   
        மொழிக்காகப் போராடிய சான்றோர்களைத் தன்மானத்தைக் காக்கப் போராடிய சான்றோர்களாகவே கருதமுடிகிறது. அவ்வகையில் தாய்மொழிக்காகப் போராடியவர்கள் மட்டுமே தமிழர் உணர்வினைக் காத்தவர்களாகத் தமிழர் நெஞ்சில் நிலைத்து நிற்பதனைக் காணமுடிகிறது. அறம் வளர்த்து உயர்தனிச்செம்மொழியாக விளங்கிய தமிழ்மொழியின் அருமையினை உணர்ந்த ஆங்கிலேயர் அதற்கீடாகத் தம்மொழி ஈடாகதென உணர்ந்தனர். ஆங்கிலேயர் வேலைவாய்ப்பு என்னும் ஆயுதத்தின் வழி தம் மொழியை இந்தியாவில் ஆழ ஊன்றிவிட்டதனைக் காணமுடிகிறது. எனவே விடுதலையடைந்து இத்தனைக் காலமாகியும் அம்மொழியை விரட்ட முடியாமல் தமிழர்கள் அடிமைக்கட்டுண்டு கிடப்பதனைத் தமிழறிஞர்கள் கண்டு பொறுக்க முடியாமல் தம்மால் இயன்றவரை  தமிழறிவு ஊட்டிவருவதனைக் காணமுடிகிறது. இருப்பினும் ஆங்கிலேயர் பின்பற்றிய வேலைவாய்ப்பு ஆயுதத்தையே கைக்கொண்டு மொழியைக் காத்தாலன்றி மொழி வளர்ச்சி அமையாதெனத் தெளியமுடிகிறது.

அரசின் திட்டங்கள் மட்டுமே மொழியைக் காக்கும் எனக் காத்திருந்தால் மட்டும் தமிழ் மொழியினைக் காத்தல் இயலாதுதமிழர் ஒவ்வொருவர் உள்ளங்களிலும் இல்லங்களிலும் தமிழ்மொழி இடம்பெறவிட்டால் நாளுக்கு நாள் தமிழர் வாழ்வில் பிறமொழி புகும் அவலநிலை உண்டாகும் என்பதனை .சுப.மா. உணர்த்தியுள்ளார். தொடக்கத்தில் பணிக்காக மட்டுமே  பிறமொழிக் கற்கத் தொடங்கி நாளடைவில் அம்மொழியில் பேசுவதே வாழ்க்கை முறையாக மாறிவிட்டதனையும் காணமுடிகிறது.

அம்மாவோ என்னை நீ ஆங்கிலவாய்ப் பள்ளிக்குச்
சும்மாவும் விடாயென்று சொல்லவோ துடிக்கின்றாய்
அப்பா நல்லம்மாவென்று அழகுதமிழ் கூறாமல்
எப்படியோ வாய்பிளக்கும் இழிவுகண்டு நாணினையோ ?

இவருடைய தமிழ் சூடி இவர்தம் இயல்பு, பழக்க வழக்கம், உள்ளக்கிடக்கைகளையும் வெளிப்படுத்தும் நல்ல அழகிய சூடியாகும்எனத் தமிழண்ணல் குறிப்பிடுவது இங்கு எண்ணத்தக்கது.

எழுத்தும் பேச்சும்

        நூல்கள் நூல் பிடித்து வாழும் நேர்மையான வாழ்விற்கு அடித்தளமாக நிற்பன. எனவே எழுத்தானது வாசகர்க்கு மனமெலிவினைத் தராததுமெலிந்த மனத்தை நிமிர்த்துவது, புதுத்தெம்பு மின்னலைப் போல் பாய்ச்சுவது, தற்சிந்தனையைக் கிளறுவது , இதுவே எழுத்தின் அறுவடையாகும்” (இலக்கிய விளக்கம்-16) என எழுத்தாளர்களுக்கு அறிவுறுத்துகிறார் .சுப.மா. நாட்டைக்காப்பதில் பாதுகாப்புப்படையின் தியாக உணர்வு எங்ஙனம் போற்றப்படுகிறதோ அதற்கிணையாகப் பண்பாட்டினைக் காக்கும்  இன உணர்வு எழுத்தாளர்களுக்கே உரியதாவதனை உணரமுடிகிறது. எழுத்துக்கள் சுவைஞர்களின் தரத்தினை மேம்படுத்துவதாக அமைய வேண்டும் என்பதனை  உணர்த்தும் வகையில்வாசகனை மேல்நோக்கிக் கை தூக்கிவிடும் நடையாகவே அமைதல் வேண்டும்என .சுப.மா. அறிவுறுத்துவதனைத் தமிழண்ணல் தெளிவுபடுத்தியுள்ளார்.

தமிழ் உழவர்

        தமிழ்ச்சான்றோர்கள் தமிழ் நிலத்தை உழும் உழவர்களாகவே நின்று தமிழ் இலக்கிய வளத்தைப் பெருக்கி தமிழ்ப்பண்பாட்டைக் காத்து வருவதனைக் காணமுடிகிறது.

தமிழ் மொழியைக் காக்க வேண்டுமாயின் பிறமொழிக் கலவாமை வேண்டும் என அறிவுறுத்துகிறார் .சுப.மா. இயற்கையாகத் தோன்றிய மொழியானத் தமிழை  இயற்கிருதம் என்றும் செயற்கையாகத் தோன்றிய மொழியான வடமொழியைச் சமஸ்கிருதம் எனவும் குறிக்கப்படுகிறது. இதனை உணர்த்தும் வகையில்இயற்கை மொழியாதலின் காலவீழ்ச்சி அதற்கில்லை. அதனால் தான் என்றுமுளதென் தமிழ் என்று உண்மைக் காட்டினார் கம்பர்என .சுப.மா. குறிப்பிட்டுள்ளதனை தமிழண்ணல் எடுத்துரைக்கின்றார்.

அன்னையிடம் கொண்ட பாசம் இயற்கையானது. அப்பாசத்தை வேரறுக்கும் வகையில் பிறமொழிப் பேசுதலே பெருமை என்னும் எண்ணத்தை ஊட்டும் நிலையே இன்று பரவிவருகிறது. இந்நிலை அன்னை மொழிக்கு மட்டுமின்றி அன்னையைப் போற்றும் பண்பாட்டிற்கும் படிப்படியாகக் கேடு விளைவிக்கும் என்பதனைபால்குடி மறவா வளர் இளஞ்செங்காற் குழவிகளைத் தாய்ப்பால் உண்ணவிடாது ஆங்கிலம் முதலான அயல்மடிப்பால்களை வலிந்து மயங்கி ஊட்டும் கடும் கொடும்போக்கினைக் கண்டு கையாறு எய்தியிருக்கின்றோம்என்னும் அடிகளின் வழி .சுப.மா. வருந்தியுள்ளதனைத் தமிழண்ணல் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார்.

சமயங்கள் வளர்த்த தமிழ்

தமிழ் மொழியின் வளர்ச்சிக்குத் துணை நிற்கும் இலக்கியங்களுள் பக்தி இலக்கியங்களின் வளர்ச்சி அளப்பரியது. நாத்திகர்கள் எவரையும் மதிப்புடன் பேசும்தன்மானம் எனக் குறிப்பிடப்பெறும் மதிப்புரைக்கு முதன் முதலாக வித்திட்டவர் தெய்வப்புலவர் சேக்கிழாரே. இதனைப்பெரியபுராணமே முதன்முதல் தலைமை மாந்தர்க்கும் அவர் பற்றிய வினைச்சொற்களுக்கும்கர ஈறு கையாண்டு சிறப்பித்ததுஎன .சுப. மா. குறிப்பிட்டுள்ளதன் வழி பக்தி இலக்கியத்தின் பெருமையினைத் தமிழண்ணல் எடுத்துக்காட்டியுள்ளார்.

தமிழர் கடன்

        தமிழ்மொழி தலைமையிடத்திற்குரிய நிலை பெற்றிருப்பதனை அவ்வப்போது இயன்ற இடங்களில் எல்லாம் மொழியறிஞர்கள் நிறுவிவருவதனைக் காணமுடிகிறது. தமிழ்மொழியைத் தாய்மொழியாகக் கொண்டதனாலேயே தேசியக்கவியாக பெயரளவில் மட்டுமே போற்றப்பட்டவர் மகாகவி பாரதியார். இந்திய மண்ணில் வங்கக்கவிஞர் தாகூரைப் போற்றிய அளவிற்கு தமிழ்க்கவிஞர் போற்றப்படவில்லை என்பது தமிழினத்திற்கே பெருங்குறையாகி விட்டதனையும் உணரமுடிகிறது. எனினும் மகாகவியின் கவிதைகளை முறையாக மொழிபெயர்க்காமல் இந்தியர் அனைவரும் அறியச்செய்யாத குறையும் தமிழினத்திற்கே உரியது. அவ்வாறு செய்தாலன்றி தமிழறிஞர்களின் பெருமைகளை நாடோ உலகமோ அறிதல் இயலாது எனத் தெளியமுடிகிறது. எனவே .சுப. மா. இக்குறையைக் களைய எளிய வழியொன்றினைக் காட்டுகிறார்.  “பாரதிப்பா இந்திய நாட்டுப் பொது என்பதனை எல்லோரும் அறியச் செய்தல் தமிழர் கடன். அது தமிழ்மொழியில் இருத்தலின்தாயின் மணிக்கொடிஎன்னும் கொடிவாழ்த்து இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு எங்கும் இசை பெறுதல் வேண்டும்”(இலக்கிய விளக்கம்-206) என .சுப.மா. அறிவுறுத்தியுள்ளதனைத் தமிழண்ணல் புலப்படுத்துகிறார்

மொழிக் கொள்கை

        தமிழராய் வாழ்வதற்கும் தமிழறிஞர்களாய் வாழ்வதற்கும் இடையே உள்ளே வேறுபாடு தமிழ்மொழியைக் காக்கும் திறத்தைக்கொண்டே அளவிடமுடிகிறது. ஆனால் அவ்வகையினின்று மாறுபட்டுத்  தமிழறிஞர்கள் என்னும் பெயரில் மொழிநடையில் ஒழுக்கத்தைப் பின்பற்றாது பிறமொழிக்கலப்புடன் எழுதும் போக்காலேயே தமிழ்ச்சமூகம் மொழிப்பற்றின்றி வாழ்வதனைக் காணமுடிகிறது. நடைமுறைக்கு ஒத்துவராது என எண்ணித் தாய்மொழியைப் போற்றாத நிலையே இன்றைய வாழ்வாகிவிட்டதனையும் அறிந்துகொள்ளமுடிகிறது.

புதிய படைப்புக்கலையில் மொழியறிவும் தேவை என்பதைப் பலர் ஒப்புவதே இல்லை. கல்லில் சிற்பம் வடிப்பவனுக்குக் கல்லின் தரமும் உளியின் கூர்மையும் பார்க்க வேண்டுமென்ற நினைவுளது. அவற்றைப் பேணிப் பயன்படுத்தும் திறமும் உளது. மண்ணை வெட்டித் தோண்டுபவன் கூட மண்வெட்டியைச் சரிபார்த்துக் கொள்கிறான். இலக்கியக்கலை நுண்கலைகளுட் சிறந்த நுண்கலை. அது பயன்படுத்தும் மொழியோ, அறிவு வடிவான சீரிய கூரிய செவ்வியதொரு கருவி. ஆனால் ஒருவரைப் பார்த்து ஒருவர் படைக்கும் பழக்கம் ஒன்றே போதுமென எண்ணும் தமிழ்ப் படைப்பாளிகள் மொழி இலக்கியம் பற்றிய சிறு சிந்தனை கூடத் தவறென எண்ணியொழிகின்றனர். ‘பண்டித நடை, பண்டித நடைஎன்று கேலி பேசியே தம் தலையில் தாமே மண்ணை வாரிப் போட்டுக் கொள்கின்றனர். எதிர்காலத்திலேனும் தமிழ்ப்புலவர்கள் ஆய்வினும் படைப்புக்கு மிகு முக்கியத்துவம் தந்து அக்கலையில் ஈடுபடவேண்டும்” (மாணிக்கத்தமிழ்-56) என .சுப. மா. வின் மொழிக்கொள்கையினைத் தமிழண்ணல் புலப்படுத்தியுள்ளதனைக் காணமுடிகிறது.

காலம் பலகடந்தும் கம்பர் இன்றைய தலைமுறைக்கும் ஏற்புடையவராக விளங்குவதனைக் காணமுடிகிறது. கம்பராமாயணம் வடமொழி இராமாயணத்தை விட சிறந்து நிற்பதற்கு தமிழ்மொழியின் வளமே அடிப்படையாக இருப்பதனைக் காணமுடிகிறது. அதனாலேயே நாத்திகம் பேசுவோரும் கம்பரை ஏற்றிப்புகழ்வதனைக் கடனாகக் கொண்டுள்ளதும் தெளிவாகிறது. “கதைக்கு வடமொழி மூலமாக இருந்தாலும் கதைமேல் எழுந்த காப்பியக் கட்டிடத்துக்குத் தமிழே மூலமாகும்” (கம்பர்-53) என்னும் வசு..மா- வின் மொழிக்கொள்கையினை கம்பரின் புலமையின்வழிப் புலப்படுத்தியுள்ளதனைத் தமிழண்ணல் எடுத்துக்காட்டியுள்ளார்.

எழுத்தும் ஆர்வமும்

உலகிலேயே இயன்றவரை தாய்மொழியிலேயே பேசவும் எழுதவும் வேண்டும் எனத் தமிழர்களுக்கு மட்டுமே எடுத்துரைக்க வேண்டிய அளவிற்குத் தமிழரகள் நிலை தாழ்ந்துக்கிடப்பதைக் காணமுடிகிறது. இதற்குத் தாய்மொழிப் பற்றின்மையும் பிறமொழி மோகமுமே காரணமாக அமைகிறது. பிறமொழியை எளிதில் கற்று அம்மொழியில் தேறும் சிறப்பு தமிழர்க்கே உரியதாக இருப்பதும் இக்குறைக்குக் காரணமாக அமைகிறது. இவ்வாற்றலுக்கும் தமிழ்மொழி அறிவே துணை நிற்பதனை இன்றைய சமூகத்திற்கு உணர்த்த வேண்டியது தமிழறிஞர்களின் கடமையாகவே அமைகிறது.

பொழுதுபோக்கு என்னும் பெயரில் அமையும் வெற்றுரைகள் இளையோர் மனத்தில் வெறுப்பை உண்டாக்கிவிடுகின்றன. இதைப் படிப்பதால் என்ன பயன் என்னும் நிலையே இன்றைய தலைமுறையிடம் பெருகிவிட்டதனைக் காணமுடிகிறது. எனவே எழுத்தாளர்கள் மிகுந்த கவனத்துடன் எழுதவேண்டியது அவசியமாகின்றது. பிறமொழியை நாடிச்செல்லும் போக்கினைக் குறைக்கும் அளவிற்கு எழுத்தாற்றல் படைத்தவர்களாக இன்றைய சமூகம் தன்னை வளர்த்துக்கொள்ள வேண்டியதும் அவசியமாகின்றது. ”செம்மல் மாணிக்கனார் தம் எழுத்துக்கள் அனைத்துமே சொற்செறிவும் பொருட்செறிவும் கருதி எழுதப்பட்டனவாதலின் அவற்றுள் வெற்றுரை என்றோ கழிக்கத்தக்கன என்றோ ஒரு சிறுபகுதி தானும் அமைந்தில.. . . . . . உடம்பின்கண் உயிர் அணுத்தோறும் விரவிநிற்றல் போல் அவர் தம் நுண்மாண் நுழைபுலம் காணப்படாத இடமே இல்லை எனலாம்”(மாணிக்கத் தமிழ்,-151) என்னும் தமிழண்ணலின் கூற்று .சுப.மா. வின் எழுத்தாற்றலை வெள்ளிடைமலையாக விளக்கி நிற்பதனைக் காணமுடிகிறது.

தமிழ் வளர

      பிழையின்றி எழுதுவது மொழிகாக்கும் கலை. அக்கலை வளரவேண்டுமாயின் அயராத உழைப்பும் மொழியறிவும் சுருங்கச்சொல்லி விளங்க வைக்கும் தன்மையும் புதியன கூறும் திறமும் அவசியமாகின்றது. அத்தகைய படைப்புக்களே காலத்தை விஞ்சி நிற்கின்றன. அவ்வாறு தமிழுக்கு வளம் சேர்க்கும் நூல்கள் அளவிடற்கரியன. அத்தகைய இலக்கியங்களுக்கு வழிகாட்டும் திறத்தனவாக திருக்குறளும் தொல்காப்பியமும் திகழ்வதனால் திருக்குறள் மக்களுக்கு உயிர்நூல்: தொல்காப்பியம் தமிழுக்கு உயிர் நூல்என்கிறார்  .சுப.மா. இக்கோட்பாட்டின் வழிநின்றே எழுதுவதனை  “என் எழுத்துக்கள் கட்டளைச் சொற்களால் கட்டளை நடையில் அமைந்தவை. சொல் பல்குதல் என்ற மிகைக்கு இடமில்லாதவை. செறிவு மிகுந்தவை வேண்டுங்கால் புதிய சொல்லாக்கங்களும் புதிய சொல் வடிவங்களும் புதிய தொடராய்ச்சிகளும் உடையவை” (திருக்குறட் சுடர்-X) என்னும் .சுப.மாவின் கூற்றினைக் கொண்டே தமிழண்ணல் தமிழ் வளர்ச்சிக்கான வழிகாட்டுதலை எடுத்துக்காட்டியுள்ளார்.

எங்கும் தமிழ்

        உலகெங்கும் பரவி நின்ற தமிழர் இன்றும் அவ்வாறே பரவிநிற்க தமிழ்மொழி மட்டும் குறுகிய நிலப்பரப்பில் ஒடுங்கிவிட்ட நிலையினைக் காணமுடிகிறது. இந்நிலைக்குக் காரணம் தமிழர் தம் தாய்மொழியை விட்டுவிட்டுப் பிறமொழியைக் கற்றதனாலேயே எனத் தெளியமுடிகிறது. பிறமொழியைக் கற்க வேண்டும் என்னும் ஆர்வத்தைப் போலன்றித் தம் மொழியைக் காக்க வேண்டும் என்னும் ஆர்வம் இல்லாததே இதற்குக் காரணம் என உணர்ந்துகொள்ளமுடிகிறது. இன்று பல சொற்கள் பிற மொழிகளில் பேசப்படுவதற்குக் காரணம் மக்களென்று எளிதாகக் கூறிவிடலாமேயன்றி அதற்குரிய பொறுப்புணர்வினை ஒவ்வொருவரும் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. தமிழ்மொழியில் உள்ள சொற்கள் பிறமொழி ஆதிக்கத்தினாலேயே வழக்கிழந்துவிட்டதனைக் காணமுடிகிறது. எனவே தமிழ்ச்சொற்களை மீட்டுருவாக்கம் செய்யவேண்டியது தமிழறிஞர்களின் தலையாய கடமையாகிறது. “அதிகாரிஅரசு வினையாளர் திருக்குறட் சுடர்-55), வரதட்சணைவரன்விலை (இலக்கியச் சாறு.14), பஞ்ச சீலம்- ஐந்தொழுக்கம், சிதம்பர ரகசியம்தில்லை மறை (திருக்குறட் சுடர். 15).என்னும் தமிழ்ச்சொற்களை எடுத்துக்காட்டி ஒவ்வொரு எழுத்தாளரும் அவ்வாறே எழுதி பேச வழிகாட்டியாய் இருத்தல் வேண்டும் என .சுப.மா. அறிவுறுத்தியுள்ளதனைத் தமிழண்ணல் எடுத்துக்காட்டுகிறார்.

தமிழர் பண்பாட்டினைக் காத்தல் தமிழறிஞர்களின் கடமை என்பதனை உணர்ந்தாலன்றி தமிழ் மொழி வளமும் தமிழர் நலமும் சிறக்காது என்பதனை அறிவுறுத்துகிறார் .சுப.மா. ”தமிழில் எழுதும்போதுதமிழ் ஊர்தியை ஆங்கிலத் தண்டவாளத்து வேகமாக ஓட்டுகிறோம். தமிழ்நாடு மின்சார வாரியம், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம், இது முறையா? தமிழ் நாட்டுஎன்றல்லவா வர வேண்டும்? மிகவும் சிந்தித்து ஒரு முடிவுக்கு வருகிறார். தமிழ் நாட்டுப் பல்கலைக்கழகம் என்னும்போது தமிழ் நாட்டுக்குரிய , சார்ந்த எனப் பொருள்படும். ஆனால் இங்குதமிழ்நாடுஎன்பது பெயராய்அடைமொழியாய் பொதுப்பட நிற்கிறது. எனவே இங்கு தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் என்பதை இக்கருத்தை ஏற்கலாம். செம்மலார்தமிழ்நாடுஎன்ற சொல் இங்கு வினைமுதலாய் நிற்கிறது என்பார். தமிழ்நாடு அரசு நடத்தும் கழகம் என்பதாக விரிப்பார். அதனால் பெயராக அமையலாம் என வழுவமைதி காண்கின்றார். ஆயினும் வாக்கியமாகக் கூறும்போதுதமிழ்நாட்டுப் போக்குவரத்துக் கழகத்தில் புதிய பேருந்துகள் வாங்கப் பெற்றனஎன்றுதான் கூறவேண்டும்” (மாணிக்கத் தமிழ், -147) எனத் தமிழண்ணல் குறிப்பிடுவதும் இங்கு எண்ணத்தக்கது.

மொழித் திறமே அறிவுத்திறம்

        திறம் அறிவினின்று வேறுபடுவதனைக் காணமுடிகிறது ஓடும் திறனுடையோர் ஓட்டத்தின் தன்மையை விளக்கமுடியாததும் நடக்கவே முடியாதவர் ஓட்டத்தின் அருமையினைப் பற்றி விளக்கமுடிவதுமே திறனுக்கும் அறிவுக்கும் இடையே உள்ள வேறுபாடாக அமைகிறது. எனவே அறிவினை ஊட்ட விரும்பும் எழுத்தாளர்கள் தாய்மொழியில் தம் கருத்தை வெளிப்படுத்துவதில் நேர்மையுடன் மொழிக்கலப்ப்பின்றி மிகவும் பொறுப்புணர்ச்சியுடன் நடந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்துகின்றார் .சுப.மா.

தமிழ்வழிக் கல்வியே தாய்ப்பால் ஆகும்
தமிழ்வழிக் கல்வியே சமநிலை வழங்கும்
தமிழ்வழியோடு பிறமொழி கற்க

என அவர் துண்டறிக்கைகளின் முழக்க வாசகங்களை எழுதி நாடெங்கும் பரப்பினார் என முனைவர் தமிழண்ணல் குறிப்பிடுவது இங்கு எண்ணத்தக்கது.

தமிழ் காக்கும் வழி

தமிழைக் கண்டு அஞ்சிய ஆங்கிலேயர் தம் மொழியைப் பெரிதென தமிழர்களை எண்ணவைத்தலான்றி தமிழகத்தில் காலூன்ற முடியாது எனத் தெளிந்திருந்தனர். எனவே தமிழரை ஆங்கிலம் கற்கச் செய்தனர். அதன் வழி ஆங்கிலம் கற்காதோரை சிறியர் என எண்ணச்செய்தனர். உழைத்து வாழ்ந்தோர் எளியோர் எனவும் ஏய்த்து வாழ்வோர் உயர்ந்தோர் எனவும் எண்ணச்செய்தனர். அரசுப்பணி என்பதற்கு ஆங்கிலம் தேவை என வலியுறுத்தி ஆங்கிலம் கற்றத் தமிழரையே ஆங்கிலம் கற்காத தமிழருக்குப் பகையாக்கி பெரும் வலிமை படைத்த தமிழரை அடிமையாக்கினர். மொழியைக் கற்க விரும்பாதோரை அடிமைகளாக மாற்றிய ஆங்கிலேயர் அவர்களுக்கு வரி விதித்து ஏழைகளாக்கினர். உலகையே அரசாட்சி செய்த தமிழினம் அடிமையாக மாறியதற்குக் காரணம் தமிழ் மொழி வழி கற்கும் நிலையினை மாற்றிவிட்டதே எனத் தெளிவுறுத்துகிறார் .சுப.மா. எனவே தமிழ்மொழியில் கற்றலே தமிழ்மொழியினையும் தமிழரையும் காக்கும் வழி என உணர்த்துகிறார் .சுப.மா. இதற்கான பணியில் எழுத்தால் மட்டுமின்றி களத்தில் இறங்கிப் போராடிய நிலையினையும் .சுப.மா.வின் தமிழ்ப்பணியின் வழி அறிந்துகொள்ளமுடிகிறது.

தமிழ் நாட்டில் ; தமிழ் பள்ளி ஏறுக; தமிழ் கல்லூரி ஏறுக ; தமிழ் பல்கலைக்கழகம் ஏறுக ; தமிழ் ஒன்றே  நம் பயிற்று மொழி என .சுப.மா. துண்டறிக்கைகளில் முழக்க வாசகங்களை எழுதி நாடெங்கும் பரப்பினார் எனத் தமிழண்ணல் கூறுவது இங்கு எண்ணத்தக்கது.

பிறமொழியறிவின் தேவை

தாய்மொழியை மட்டுமே கற்கவேண்டுமே என்பதனை எந்தத் தமிழறிஞரும் குறிப்பிடவில்லை. தமிழ்மொழியைப் பிழையின்றி எழுதவும் பயிற்றுவிக்கவும் வேண்டும் என்றே அறிவுறுத்தியுள்ளனர். பிறமொழியைக் கற்றல் இன்றைய முக்கியத் தேவையாகின்றது. ஏனெனில் உலகமயமாக்கல் என்னும் நிலையில் பிறமொழி கற்க வேண்டும் எனப் பலரும் அறிவுறுத்துவதனைக் காணமுடிகிறது. அவ்வாறு கற்கும்போது அம்மொழியின் நிலையினையும் அவற்றோடு ஒப்பிடுவதன் வழி தமிழ்மொழியின் பெருமையினையும் ஒருங்கே அறிந்துகொள்ளமுடிகிறது. தாய்மொழியைக் கற்காமல் பிறமொழி மட்டும் கற்போரே பிற மொழியை வியந்து நிற்பதனைக் காணமுடிகிறது. “இராமாயணத்தின் பல படலங்கள் தனித்தனி நூல் எனத் தகும் சிறப்புடையன. செகப்பிரியரின் நாடகங்கள் அனைத்தையும் தொகுத்தால் இராமாயணத்தின் பாதியளவு தானே இருக்கும். . . . . . . என 33 படலங்களைக் குறிப்பிட்டு  இவற்றிலுள்ள நாடகப் பண்புகளைத் தேடியறியும்  வேட்கையை நம்முள் கிளறிவிடுகின்றார் (கம்பர்-109) எனத் தமிழண்ணல் குறிப்பிடுவது இங்கு எண்ணத்தக்கது.

பண்பு மாறாத் தமிழர்

        உலகமே தனக்காக வீடு கட்டிய பொழுது உலகத்திற்காக வீடு கட்டிய ஒரே இனம் தமிழினம் என்னும் கூற்றிற்கு முன்னோர்கள் கட்டிய வீடுகளே சான்றாக நிற்கின்றன. திண்ணை கட்டி வழிபோக்கர்கள் இளைப்பாறவும் பசியாறவும் செய்தவர் தமிழர். இதனைத் தமிழர்கள் தம் வாழ்க்கை முறையாகவே கொண்டு சிறந்த நிலையினையும் காணமுடிகிறது. தனிப்பட்ட வகையிலும் நல்லோர்களுடன் சேர்ந்து செய்யும் செயல்களிலும் அறம் தவறாது வாழ்ந்த நிலையினையும் அறிந்துகொள்ளமுடிகிறது. ஒப்புரவு என்பது பொதுக்கொடையினையும் ஈகை என்பது தனிக்கொடையினையும் குறிப்பது எனத் தெளிவுறுத்துகிறார் .சுப.மா. தனி மனித நிலையிலும் பொது நிலையிலும் பிறர்க்கு வழிகாட்டியாக வாழ வேண்டிய பண்புகளை வளர்த்துக்கொள்ளத் தமிழர் வழிகாட்டியுள்ளதனை  .சுப.மா. வின் கூற்றின் வழி தமிழண்ணல் எடுத்துக்காட்டியுள்ளார்

.சுப.மாவின் கடலாராய்ச்சி

        தமிழ் இலக்கியக் கடலில் சங்க இலக்கியமும் தமிழ் இலக்கணக் கடலில் தொல்காப்பியமும் அற இலக்கியக் கடலில் திருக்குறளும் பெரும்பங்கு வகிப்பன. இம்மூன்று கடலையும் ஆய்ந்த பெருமை .சுப.மா. அவர்களுக்கே உண்டென்பதனை அவர்தம் நூல்களின் வழி அறிந்துகொள்ளமுடிகிறது.

        இலக்கணத்தின் அடிப்படையாக விளங்கும் தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என அனைத்து இலக்கணத்திற்கும் எழுத்தெண்ணி விளக்கப்பட்டுள்ளதனைக் காணமுடிகிறது. எனவே தொல்காப்பியரை தமிழ் அளந்த பெருமான் எனக் குறிப்பிடுகிறார் .சுப.மா.

தமிழால் மாணிக்கம் தகுதி பெற்றதும் ; தமிழ் மாணிக்கத்தால் தகுதி பெற்றதும் எவ்வாறென்பதை எடுத்துரைப்பேன் எனத் தமிழண்ணல் பாவேந்தரின் பாடல் அமைப்பில் பாராட்டியுள்ளதே .சுப. மா.வின் தமிழறிவை நிறுவுகிறது.

 நிறைவாக

சங்க இலக்கியம், தொல்காப்பியம், திருக்குறள் ஆகிய மூன்றின் கல்விக்கும் ஆய்வுக்கும் பரப்புதலுக்கும் ஒருகலங்கரை விளக்கம்இம் மாணிக்கத்தமிழ் என்பதைப் பொறுப்புணர்ச்சியோடு கூற விழைகின்றேன் என்னும் தமிழண்ணலின் கூற்றே இக்கட்டுரைக்கு அடித்தளமாக அமைந்துள்ளது.

இன்றைய தலைமுறையினருக்கு பொருள் பற்றிய கவனம் மிகுந்திருக்கிறதேயன்றி ஒழுக்கம், பண்பாடு குறித்த கவனம் நாளும் தேய்ந்து வருவதனைக் காணமுடிகிறது. எனவே இலக்கியங்களின் வழி ஒழுக்கத்தை வளர்க்கும் தமிழறிஞர்களின் நூல்களை எடுத்துரைக்கும் வகையிலேயே .சுப. மா. வின் தமிழ் நூல்கள் அமைந்துள்ளன எனத் தமிழண்ணல் வழி தெளியமுடிகிறது.

இனத்தைக் காக்க வேண்டும் என நினைப்போர் மொழியைக் காத்தலில் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளதனைக் காணமுடிகிறது.

மொழியைக் காப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என எண்ணுவோர் எழுத்து நடையில் மட்டுமின்றி பேச்சு நடையிலும் நேர்மையாக இருத்தல் வேண்டும் என .சுப.மா. தெளிவுறுத்தியுள்ளதைக் காணமுடிகிறது.

தமிழ்மொழி வளர்ச்சியும் தமிழ் இனத்தின் வளர்ச்சியும் தமிழ் அறிஞர்களின் எழுத்துக்களாலேயே பாதுகாக்கப்படுகிறது என உணர்ந்து அவ்வாறே பொறுப்புணர்வுடன் வாழ்ந்துகாட்டியவர் .சுப.மா. என்பதனை அவருடைய படைப்புக்களின் வழி நின்று தமிழண்ணல்  தெளிவுபடுத்தியுள்ளார்.

****************

செவ்வாய், 28 மே, 2019

தலையங்கத்தின் சுவடுகள் - Tamil Journalism - 2

தலையங்கத்தின் சுவடுகள் - Tamil Journalism - 2


        ”1921 –ம் ஆண்டு ஒரு பத்திரிகையில் இவர் எழுதிய தலையங்கங்கள் இவர் எப்படி நாட்டுப்பற்றோடு சமயக் கருத்துகளையும் குழைத்துக் கொடுத்தார் என்பதனை எடுத்துக்காட்டும். ’சகோதரிகளே ! சகோதரர்களே எதற்கும் அஞ்ச வேண்டாம் அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை என்ற திருவாக்கு நமது தமிழ் நாட்டில் பிறந்ததன்றோ ? தமிழ் மக்களே ! எழுங்கள் ! அஞ்சாதேயுங்கள். பொன், பொருள், பூமி, காணி, மனைவி, மக்கள், உற்றார், பெற்றார் மீது கவலை வேண்டா. திடீரென மரணம் நேர்ந்தால் நம் உயிர்ச்சார்பும் பொருட் சார்பும் உடன் வருமோ ? எல்லாவற்றையும், எல்லாரையும் காக்க ஓர் ஆண்டவன் இருக்கிறான். அவன்மீது பாரத்தைச் சுமத்தி வந்தேமாதர முழக்கத்தோடுஅஞ்சாமைஎன்னும் ஞான வாளேந்தி எழுங்கள்.
        ஒத்துழையாமை இயக்கத்தில் தலைப்பட்டிருப்போர் உடல் பொருள் ஆவி மூன்றையும் கருதாது சேவை செய்ய முந்துதல் வேண்டும்.  . . . தம் பொருட்டு வாழ்ந்து இறப்போர் அடைவது நரகம். பிறர் பொருட்டு வாழ்ந்து இறப்போர் அடைவது மோட்சம். இவ்வுண்மை உணர்ந்தோர் தேச சுதந்திரத்துக்கு எவ்விதத் துன்பத்தையும் ஏற்க ஒருப்படுவர். தேசத்துக்காகச் சில துன்பங்களை ஏற்றே தீரல் வேண்டும். துன்பங்களுக்கு அஞ்சித் தேசத்தை மறப்பது பெரும் பாவம். (தமிழ்த்தென்றல் திரு.வி.. .23-24) என எழுதியுள்ளதனை டி.எம் சௌந்தரராஜன் அழகாக எடுத்துக்காட்டியுள்ளார். உயிரை விட நாடு பெரிதென அவர் ஊட்டிய நெஞ்சுரத்தை அவ்வளவு எளிதில் எவரும் நீக்கி விட முடியாது என்பதற்கு எடுத்துக்காட்டாக இத்தலையங்கம் கட்டமைக்கப்பட்டுள்ளதனைக் கண்டு மகிழலாம்.
குடியரசு
        பகுத்தறிவுப் பகலவன் சமூகக் காவலர் எனப்போற்றப்படும் ஈ.வெ.ரா 1925 மே 24 ஆம் நாள் இவ் இதழைத் தொடங்கினார். சமதர்மம் (1934), பகுத்தறிவு (1935) புரட்சி (1934) ரிவோல்ட் (1928) உண்மை (1970). விடுதலை இதழைத் தன்மான இயக்க நாளிதழாக மாற்றினார். அவருடைய ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு பேச்சும் சமூக நீதிக்கான விதைகளாகவே அமைந்தன.
        குடியரசு இதழின் தொடக்கத்தில் ஒவ்வொரு வகுப்பும் முன்னேற வேண்டும். அதை அறவே விடுத்து வெறும் தேசம் தேசம் என்று கூக்குரலிடுவது எமது பத்திரிகையின் நோக்கமன்று என்றும் மக்களுக்குள் சுயமரியாதையும், சமத்துவமும் சகோதரத்துவமும் ஓங்கி வளரவேண்டும் என்றும் உயர்வு தாழ்வு என்னும் உணர்ச்சியே நமது நாட்டில் வளர்ந்துவரும் சாதிச் சண்டை என்னும் நெருப்புக்கு நெய்யாய் இருப்பதால் இவ் வுணர்ச்சி ஒழித்து அனைத்துயிர் ஒன்றென்று எண்ணும் உண்மை அறிவு மக்களிடம் வளரவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்” (தமிழ் இதழியல் சுவடுகள் ப.163) என மா.சு. சம்பந்தன் குறிப்பிடுகிறார். இத் தலையங்கத்தின் நாட்டு விடுதலையை சமூக விடுதலைக்கு முக்கியத்துவம் அளித்த பெரியாரின் சிந்தனையைக் காணமுடிகிறது.
        அரசியல் நிலைகளையும்  தாம் எதிர்கொண்ட போராட்ட நிலைகளையும் தலையங்கமாக வடித்தார் பெரியார். “சிறுபான்மையினரின் முன்னேற்றத்தைக் கண்டு கல்வி கற்ற பிராமணரல்லாதாரிடையே ஒருவகை விழிப்புணர்ச்சி தோன்றி பி. தியாகராய செட்டியார், டாக்டர் டி.எம். நாயர் ஆகியோர் முயற்சியில் 1916 ஆம் ஆண்டில் பொதுவாக ஜஸ்டிஸ் கட்சி என்றழைக்கப்பட்ட நீதிக்கட்சி உருவெடுத்தது (முதல் நாளிதழ்கள் மூன்று ப.62) என்னும் செய்தி தலையங்கமாக  குடியரசு (18.10.1925) இதழில் வெளிவந்தது. இத் தலையங்கத்தின் வழி ஒரு கட்சியின் பின்னணியினைக் கூறி தமது தொண்டர்களுக்கு விழிப்பூட்டிய நிலையினையும் காணமுடிகிறது.
ஸ்ரீ சுப்ரமணிய பாரதி கவிதா மண்டலம்
        புதுவை முரசு (வாரம்) , ஸ்ரீ சுப்ரமணிய பாரதி கவிதா மண்டலம் (திங்கள்), குயில் (புத்தகம், பெயர்ப்பன்னூல், திங்கள், தினசரி, கிழமை, திங்களிருமுறை) எனப் பல இதழ்களை நடத்தியவர் பாவேந்தர் பாரதிதாசன். பாவேந்தர் பாரதிதாசன் 1935 ஆண்டு ஸ்ரீ சுப்ரமணிய பாரதி கவிதா மண்டலம். என்னும் இதழைத் தொடங்கினார். இதில் தலையங்கமாகக் கவிதைகளும்  இடம்பெற்றுள்ளன.

                தனிமைச் சுவையுள்ள சொல்லைஎங்கள்
                தமிழினும் வேறெங்கும் யாங் கண்டதில்லை

என்ற வரிகளும்

        பீடுற்றார் மேற்கில் பிறநாட்டார் என்பதெல்லாம்
        கூடித்தொழில் செய்யும் கொள்கையினால் தோழர்களே !
        வாடித் தொழிலின்றி வறுமையாற் சாவதெல்லாம்
        கூடித் தொழில்செய்யாக் குற்றத்தால் தோழர்களே

என்ற வரிகளும்

        வெள்ளம்போல் தமிழர் கூட்டம் வீர்ங்கொள் கூட்டம் ! அன்னார்
        உள்ளத்தால் ஒருவரேமற் றுடலினால் பலராய்க் காண்பார்
        கள்ளத்தால் நெருங்கொணாதே? எனவையம் கலங்கக் கண்டு
        துள்ளும்நாள் எந்நாள் உள்ளம் சொக்கும்நாள் எந்தநாளோ?

என்ற வரிகளும் தலையங்கக் கவிதைகளில் கவிதா மண்டலத்தில் வெளிவந்துள்ளது (இலக்கிய இதழ்கள் ப.26) எனக் க.சந்திரசேகரன் குறிப்பிடுகிறார். இவ்வாறு மக்களுக்கு உணர்ச்சியூட்டும் வகையில் தலையங்கக் கவிதை வடித்த பாவேந்தர் சூழலுக்கேற்றவாறு உரைநடையிலும் உணர்வூட்டிய நிலையினையும் காணமுடிகிறது. ”வாளேந்து மன்னர்களும்  மானியங்கொள் புலவர்களும், மகிழ்வாய், தாளேந்திக் காத்த நறுந்தமிழ் மொழியைத் தாய் மொழியை ஏந்திக் காக்குநர் யார் ? நண்ணுநர் யார் ? என அயலார் நகைக்கும் போதில் தோளேந்திக் காத்த எழிற் சுப்ரமணிய பாரதியார் நாமம் வாழ்க எனவும் தமிழ்க்கவியில் உரைநடையில் தனிப்புதுமைச் சுவையூட்டம் தந்து சந்த அமைப்பினிலே ஆவேசம், இயற்கையெழில், நற்காதல் ஆழம் காட்டித் தமைத்தாமே மதியாத தமிழர்க்குத் தமிழறிவில் தறுக்குண்டாக்கிச் சுமப்பரிய புகழ் சுமந்த சுப்ரமணிய பாரதியார் நாமம் வாழ்க” ( தமிழ் இதழியல் சுவடுகள், .134) என்று தலையங்கம் எழுதியுள்ளதனைச் சுட்டிக்காட்டுகிறார் டாக்டர் மா. அண்ணாதுரை.  உரைநடையில் கவிதைத் தொனியும், கவிதையில் உரைநடைத் தொனியும் தோன்றும் வகையில் மக்களை எளிதில் சென்றடையும் வகையில் தலையங்கம் எழுதியவர் பாவேந்தர் எனத் தெளியலாம்.

திராவிட நாடு

        பேரறிஞர் அண்ணா நா வன்மை நாடாண்டாதாகத் தான் உலகம் அறியும். ஆனால் அவருடைய தலையங்கங்களுக்கு அவரைத் தலைவராக்கியதில் முக்கியப் பங்குண்டு என்பதற்கு அவருடைய இதழ்ப்பணிகளே சான்றாகின்றன. 1936 இல் பாலபாரதி 1937 இல் நவயுகம், 1938 இல் விடுதலை 1942 இல் திராவிட நாடு (வாரம்) 1949 இல் மாலைமணி 1953 இல் நம்நாடு 1958 இல் ஹோம் லாண்ட் 1963 இல் காஞ்சி 1966 இல் ஹோம் ரூல் என அவருடைய இதழாசிரியர் பணி தொடர்ந்தது.

        காற்றடிக்குது கடல் குமுறுது. கப்பலும் பிரயாணம் தொடங்கிவிட்டது ! இருண்ட வானம், சுருண்டு எழும் அலைகள், மை இருட்டு, ஆனாலும் பிரயாணம் நடந்தே தீர வேண்டும் ! கொந்தளிப்பிலும் கப்பல் சென்றுதானாக வேண்டும். கடமை அழைக்கும்போது காலத்தினால் விளையும் கஷ்டத்தைச் சாக்காகக் கூறித் தப்பித்துக்கொள்வது மன்னிக்க முடியாத குற்றமாகும். எனவே கொந்தளிப்பு மிக்க இவ்வேளையில்திராவிட நாடுதமிழர்க்குப் பணியாற்றப் புறப்படுவதற்காகத் தமிழர் அமைதியும் ஆனந்தமும் குடிகொண்ட காலத்தில் ஆதரிக்கும் அளவை விடச் சற்று அதிகமாகத் தமது ஆதரவை, ‘திராவிட நாட்டுக்குக் காட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்”- என்று அண்ணாகொந்தளிப்பில்என்ற தலைப்பில் தமதுதிராவிட நாடு (8-3-1942) முதல் தலையங்கத்தின் முதல் பகுதியில் குறித்துள்ளார் (தமிழ் இதழியல் சுவடுகள் ப.176) என சம்பந்தனார் குறிப்பிட்டுள்ளதன் வழி தலையங்கத்தின் வலிமையினையும் அண்ணாவின் சொல்லாற்றலையும் அறியலாம்.

        ஒரு வலிமையான அணியை (ஆட்சியை) நீக்க வேண்டுமானால் அதற்கு எவ்வளவு வலிமையாகப் போராடவேண்டும் என்பதனைத் தம் தொண்டர்களுக்கு அறிவுறுத்துகிறார். இதற்கு உடல் வலிமை மட்டும் போதாது மன வலிமை தான் முதல் தேவை என்பதனை அறிவுறுத்தும் வகையில் தலைப்பாககொந்தளிப்புஎன வைத்துள்ள அருமையினையும் காணலாம். இதன் வழி தமிழருக்கு நேரும் துன்பத்தைக் கண்டு பொறுத்துக்கொள்ள முடியாது என ஒவ்வொருவரையும் கொந்தளிக்க வைத்து திராவிட ஆட்சியினை நிலைநாட்டிய பேரறிஞரின் அண்ணாவின் பெருமையினை இத் தலையங்கத்தின்வழி அறியலாம்.
தினத்தந்தி
        தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் (1905-1981) மதுரையில் தினத்தந்தி இதழின் முதல் பதிப்பினைத் (1942 நவம்பர் திங்களில்) தொடங்கினார். இன்று படிப்படியாக தமிழகமல்லாத பகுதிகளிலும் பதிப்பிக்கும் இதழாக வளர்ந்து விட்ட பெருமைக்குரிய இதழாகத் திகழ்கிறது. ”1940 களில் இந்தியாவில் ஒவ்வொரு நாள் காலையிலும் ஒரு நாளிதழை வாசகர்களுக்கு அளித்த பெருமை தினத்தந்திக்குரியது. பிற மொழிகளில் நாற்பதாண்டுகளுக்குப் பின்னரே நடந்த இத்தகைய முயற்சிகளுக்குத் தினத்தந்தியே முன்னோடி. (தமிழ் இதழ்கள்- விடுதலைக்குப் பின் ப. 21)” என்னும் கூற்று இங்கு எண்ணத்தக்கது. இவ்வாறு அனைத்து மொழிகளுக்கும் முன்னோடியாகத் திகழும் தமிழ்ப்போல இதழியல் வரலாற்றில் பிற இதழ்களுக்கு முன்னோடியாக விளங்கியது தினத்தந்தி என்பதனை அறியலாம்.
        எளிய நடைக்கு உரிய இதழாக மட்டுமின்றி  தாளின் தேவைக்கும்  பிறரை எதிர்பாராது தாங்களே உற்பத்தி செய்துக்கொண்ட பெருமைக்கும் முன்னோடியாகத் திகழ்ந்தது தினத்தந்தி. இதனைத்தினத்தந்தி தனக்கெனக் காகிதத்தைத் தயாரிக்கும் முயற்சியை மேற்கொண்டமை தமிழ் இதழியல் வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வாகும். 1962 இல் தினத்தந்தி திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அரிய நாயகிபுரத்தில் சன் காகித ஆலையை நிறுவியது (தமிழ் இதழ்கள்- விடுதலைக்குப் பின் ப. 20)” என்னும் கூற்று உறுதிப்படுத்துகிறது.
        எளிய மக்களும் படித்து மகிழும் வகையில் எளிய நடையில் அமைந்த இதழாக இருந்ததனாலேயே அனைவரையும் சென்றடைந்தது. படிக்காதவரும் இவ் இதழின் வழி படிக்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொண்ட பெருமையும் இவ் இதழுக்குண்டு. ”பத்திரிகை என்பது இலக்கியமல்ல. அதனை அவசர அவசரமாகப் படிக்க வேண்டியுள்ளது எனவே அதன் மொழிநடை கட்டமைக்கப்பட வேண்டும் என்பதில் சி.பா. ஆதித்தனார் உறுதிப்பாட்டுடன் இருந்தார். தலையங்கத்திற்குத் தனிநடையும் செய்திகளுக்குத் தனி நடையும் வகுத்த அவரது செயல் மிகப் புதுமையானது. (தமிழ் இதழ்கள்- விடுதலைக்குப் பின் ப. 29) என சசிகலா குறிப்பிடுவது இங்கு எண்ணத்தக்கது. இந்த எண்ணமே தினந்தந்தியினை எளிய மக்கள் அனைவரும் தம் இதழாக எண்ணிப் போற்றும் நிலைக்கு வழிவகுத்தது.
        தலையங்கம் என்பது எளிமைக்கானது அன்று. அது அருமைக்குரியது. எனவே ஆசிரியர் அதற்குப் பொறுப்பேற்கிறார். தலையங்கம் நாளிதழின் உயிர்நாடியாக இருப்பதனால் அதில் கருத்துப்பிழையோ இலக்கணப்பிழையோ ஏற்படாத வகையில் அமைதல் வேண்டும் என அறிவுறுத்துகிறார் தமிழ் இதழியல் முன்னோடி ஆதித்தனார்.  அவர் கூறிய கூற்றின்வழி இன்றும் எளிய மக்களுக்குரிய வகையில் செய்திகளும் உலக நடப்புகளை அறிந்துகொள்ள விழையும் மக்களுக்குரியதாக தலையங்கமும் வெளிவருவதனைக் காணமுடிகிறது. 
        மதமாற்றம் உலகளவில் மறைவாகவும் வெளிப்படையாகவும் நடந்துவரும் நிலையினை தலையங்கப்பொருளாக எடுத்துக்கொண்டுள்ளதற்கு பின்வரும் தலையங்கம் எடுத்துக்காட்டாகிறது. “இந்தியாவில் சிறுபான்மை மதத்தினர் குறிப்பாக கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் எவ்வளவோ சலுகைகள். அவர்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் அண்டை நாடான பாகிஸ்தானுடன் நல்லுறவை வளர்ப்பதற்காக இந்தியா நெருங்கிச் சென்று கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அங்குள்ள இந்து மதத்தினரும் கிறிஸ்தவ மதத்தினரும் மற்றும் சிறுபான்மை சமுதாயத்தினரும் படும்பாடுகள் தொடர்பாக வெளிவரும் செய்திகளைக் கேட்டால் நெஞ்சே வெடித்துவிடும் போலிருக்கிறது. இவர்களை எல்லாம்கபீர்கள்அதாவது இறை நம்பிக்கை இல்லாதவர்கள் என்ற தலைப்பில்தான் பாகிஸ்தான் வைத்துள்ளது.  இதைவிட பெரிய கொடுமைஇந்து இளம் பெண்களும் கடத்தப்பட்டு அவர்கள் இஸ்லாம் தழுவ வேண்டும் என்று நிர்ப்பந்தப்படுத்தி அவர்களை மதம் மாற்றி முஸ்லிம் இளைஞர்களுக்கு திருமணம் நட்த்தி வைக்கிறார்கள். சமீபத்தில் ரிங்கள் குமாரி, டாக்டர் லலிதா குமாரி ஆஷாகுமாரி ஆகிய 3 இந்து பெண்கள் கடத்தப்பட்டு முஸ்லிம்களாக மாற்றப்பட்டு இஸ்லாமிய இளைஞர்களுக்கு கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்கப்பட்டனர். அவர்களின் பெற்றோர் தங்கள் மகள்களை மீட்டுத் தர வழக்குத் தொடர்ந்தனர். அந்தப் பெண்களும் கோர்ட்டில் வந்து கண்ணீர்விட்டுக் கதறி எங்கள் உயிருக்கு ஆபத்து இருக்கிறது எங்கள் பெற்றோருடன் போக விரும்புகிறோம் என்று கெஞ்சினர். ஆனால் நீதிபதிகள் அந்தப் பெண்களைக் காப்பகத்திற்கு அனுப்பிவிட்டனர். . . .
        ஒவ்வொரு ஆண்டும் பாகிஸ்தானில் 800 கிறிஸ்துவப் பெண்களும் 450 இந்து பெண்களும் கடத்தப்பட்டு கட்டாயம் மதம் மாற்றப்படுவதாக செய்திகள் வருகிறது. இந்துக்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் இழைக்கப்படும் கொடுமை யாருக்கும் கேட்கவில்லையா ? அரசியல் கட்சிகள் என்ன செய்கிறார்கள் ? இந்து கிறிஸ்துவ அமைப்புகள் கொதித்து எழ வேண்டாமா ? மத்திய அரசாங்கம் தீர விசாரித்து பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்து இதுபோல் இனி ஒரு சம்பவம் நடக்காமல் இருக்க சர்வதேச அமைப்புகளிடம் புகார் செய்திருக்க வேண்டாமா? என்பதுதான் மக்களின் ஆழ்மனதில் இருந்து வெளிவரும் கவலை தோய்ந்த குரல் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஒருவர் (தினத்தந்தி 28.04.2012) என்னும் தலையங்கப்பகுதி இன்றும் சர்வாதிகாரப் போக்குடன் செயல்படும் பாகிஸ்தானின் கொடுமையினை உலகம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பதனைப் படம்பிடித்துக்காட்டுகிறது. எந்த மக்கள் விழித்துக்கொள்ள வேண்டும் ? எந்த அரசு அதற்கு ஆவன செய்ய வேண்டும் ? எந்த அரசு ஏமாற்றிக்கொண்டிருக்கிறது ? யார் ஏமாந்துக் கொண்டிருக்கிறார்கள் ? அதற்குரிய தீர்வென்ன ? என அனைத்தையும் தலையங்கத்தில் உள்ளடக்கிய சிறப்பினை இத் தலையங்கத்தின் வழி அறியலாம்.

தமிழ் முரசு
        சிலம்புச் செல்வர் ம.பொ. சிவஞானம் அவர்களின் தமிழ் முரசு  இதழ் 1946 ஆம் ஆண்டு மே மாதம் புத்தகம் என்னும் பெயரில் வெளிவந்தது. “தமிழ் முரசு பத்திரிகை என்ற பெயரால் முதன்முதலில் வராமல்புத்தகம் எனும் பெயரால் வெளிவரவேண்டியதாயிற்று. ஏன் எனில் அக்காலத்தில் காகிதப் பஞ்சம் காரணமாக, புதிதாகப் பத்திரிகை தொடங்குவதற்குப் பிரிட்டிஷ் அரசு அனுமதிக்கவில்லை. மாதம் ஒரு புத்தகம் எனும் பெயரில் பத்திரிகை பற்றிய அறிவிப்பும் நியூஸ் பிரிண்ட் பேப்பரும் இல்லாமல் நடத்தும் ஒரு வழி பின்பற்றப்பட்டது” (இலக்கிய இதழ்கள் ப.92) எனப் பெ.சு. மணி குறிப்பிடுகிறார். இதன்வழி எவ்வகை இடர்ப்பாடு நிகழ்ந்தபோதும் இதழ் தொடங்குவதில் இருந்த நாட்டம் குறையாது செயல்படுத்திய சிலம்புச்செல்வரின் கொள்கை உறுதியினை எண்ணி மகிழலாம்.
        தலையங்கம் அன்றாடச் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதாக அமைதல் வேண்டும். மக்கள் மனதில் புலம்பும் புலம்பல்களுக்கு விடை காண்பதாக அமைதல் வேண்டும். இவ்வாறு தேசியகீதம் குறித்த எண்ணங்களை தலையங்கம் ஆக்கினார் ம.பொ.சி.  தமிழகத்தைப் பொறுத்தவரையில் எந்தப் பாடல் தேசிய கீதமாவதானாலும் அதைத் தமிழில் மொழிபெயர்த்துப் பாடச் செய்ய வேண்டும். அப்போதுதான் பாட்டின் கருத்தை, மக்கள் புரிந்து கொள்ளமுடியும் புரிந்துகொள்ள முடியாத ஒரு மொழியில் தேசிய கீதத்தை உருப்போட்டு ஒப்புவிக்கச் செய்வதால், யாருக்கும் தேசபக்தி வந்துவிடாது. சென்னை அரசாங்கத்தார் இதைப் பற்றிச் சிந்தித்து ஆவன செய்வார்கள் என்று நம்புகிறோம்” (இலக்கிய இதழ்கள் ப.110) என்னும் 12.09.1948 இல் வெளியானதமிழில் தேசிய கீதம்என்னும் தலையங்கக் கட்டுரை புதுமையானதாகவும் புரட்சிகரமானதாகவும் அமைந்ததாகக் குறிப்பிடுகிறார் பெ.சு.மணி. நாட்டுப்பண்ணை பொருள் புரிந்து படித்தால் ; பாடினால் நாட்டுப்பற்றினை வளர்க்க முடியும் என்னும் கருத்தினைத் தலையங்கத்தில் பதிவு செய்துள்ளமையை இங்கு எண்ணி மகிழலாம்.  தேசிய கீத்த்தைப் பாடுவோர் அதன் பொருள் புரியாமலே அழகாகப் பாடி வருகின்றனர். இதன் பொருளை உணர்ந்து குழந்தைகள் பாடினால் ஒவ்வொரு குழந்தையும் தேசப்பற்றுடன் வாழமுடியும் என்னும் கருத்தினை அன்றே பதிவு செய்துள்ள அருமையினைக் காணமுடிகிறது.
தின மலர்
        டி.வி. ராமசுப்பையர்(1908-1984) அவர்களின் முயற்சியால் உருவான இந்த இதழ் 06.09.1951 இல் திருவனந்தபுரத்தில் தொடங்கப்பட்டது. இதழ் தொடங்குவது எவ்வளவு கடினம் என்பதனை உணர்ந்தவர்களே இதழைத் தொடங்கினர். ஏனெனில் பிரச்சினைகளை எதிர்க்கொண்டாலொழிய பிரச்சினைகளைத் தீர்க்க இயலாது என்பதனை உணர்ந்திருந்தனர். அவ்வரிசையில் டி.வி.எஸ் அவர்களுக்கு முக்கியப் பங்குண்டு. பிறமொழி பேசும் மாநிலத்திலேயே தமிழ் நாளிதழைத் தொடங்கி வெற்றிகண்டவர் அவர். ”தொடக்கக் காலத்தில் தினமலர் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள வெகுவாகப் போராடி உள்ளது. மலையாள மொழி பேசும் நாட்டில் தொடங்கப்பட்ட இத்தமிழ் நாளிதழ் அச்சுக்கோர்ப்பவர்களுக்காக மிகுதியும் செலவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானது” (தமிழ் இதழ்கள்- விடுதலைக்குப் பின் ப. 33) என்னும் கூற்று இங்கு எண்ணத்தக்கது.
        மக்களின் கவனத்தை ஈர்ப்பதில்      உலகச் செய்திகளைக் காட்டிலும் உள்ளூர் செய்திகள் முக்கிய இடம் பெறும் என்பதனை உணர்ந்து செயல்பட்டது தினமலர். எனவே எளிதில் மக்களைச் சென்றடைந்தது. ”சுதந்திரத்திற்குப் பின் தோன்றி மிகப்பெரும் வளர்ச்சியை எட்டியுள்ள தமிழ் நாளிதழ் தினமலர் என்பது குறிப்பிடத்தக்கது. தினமலரைப் பற்றிக் குறிப்பிடுகையில் எஸ்.எஸ். சோமையாஜீலு என்னும் இதழாளர்கவர்ச்சிச் செய்திகள் பரபரப்பான செய்திகள் இவையே பத்திரிக்கையின் இலக்கணம் என்று இருந்த காலத்தில் வட்டாரச் செய்திகள், வட்டார மக்களுடைய குரல், தேவைகள், கோரிக்கைகள், வளர்ச்சி இவையே செய்திகள். இவற்றுக்கும் கவர்ச்சியுண்டு என்று மக்களுக்கு ஒரு கல்வியைத் தந்து ருசியை உருவாக்கித் தினமலர் வளர்ந்தது என கடல் தாமரை என்னும் நூல் குறிப்பிடுகிறது. (தமிழ் இதழ்கள்- விடுதலைக்குப் பின் ப. 32)
        தினமலர் தனது முதல் தலையங்கத்தில்டி.வி.ஆர். ஜன சமூகம் இன்னல்கள் நீங்கி இன்பநிலை அடைவதற்கு எமது சக்திக்கு இயன்ற அளவு தொண்டாற்றும் ஒரே நோக்கத்துடன் தினமலர்ப் பத்திரிக்கையைத் தொடங்கியிருக்கிறோம் என்று குறிப்பிடுகிறார்.” (கடல்தாமரை ப.86)  இக்கூற்றின் வழி மக்களுக்குத் தொண்டாற்றும் வகையில் செயல்படுவதே இதழியல் அறம் எனத் தலையங்கத்திலேயே கூறியுள்ளதனைக் காணமுடிகிறது.
தமிழ்ச்செல்வி
        தமிழ் இலக்கிய ஆர்வலர்களின் அறிவுப்பசியாறும் வகையில் உருவான இவ்விதழ்        1960 ஆம் ஆண்டு இலக்கியத் திங்கள் இதழாக வெளிவந்தது. “ இவ்விதழ் 87 வைசியர் தெரு, புதுச்சேரி என்ற முகவரியிலிருந்து வெளிவந்துள்ளது. இவ்விதழின் உரிமையாளராகவும் பதிப்பாசிரியராகவும் திரு. திவ்வி சந்தனசாமி என்பவர் விளங்கி உள்ளார்” (இலக்கிய இதழ்கள் ப.256).
        தமிழர்கள் தமிழில் சிந்திக்க வாய்ப்பின்றி பின்னுக்குத் தள்ளப்படும் நிலை உருவானபோதே தமிழர்கள் தங்களை உயர்பதவிகளிலிருந்து ஒதுக்கிக்கொள்ளும் நிலை தொடங்கிவிட்டது. ”நாட்டின் நல்லறிஞர் கருத்துரைகளைத் தமிழ் மக்களுக்கு வழங்கி அவர்தம் மனநிலையை வளர்க்கவும் அவரைத் தனித்துச் சிந்திக்கவும், செயல்படவும் தூண்டுவதுடன் நற்றமிழ் வழக்கு மக்களிடையே வழங்கச் செய்வதும் தமிழ்ச்செல்வியின் முதல் கடமை. அவற்றிற்கான எல்லாத் தொண்டினையும் தமிழ்ச்செல்வி மேற்கொள்வாள்” (இலக்கிய இதழ்கள் ப.257) எனக் கூறியுள்ளதனை இளங்கோவன் எடுத்துக்காட்டியுள்ளார். இத்தலையங்கம் இந்நாளுக்கும் ஏற்புடையதாக அமைந்துள்ளது. பள்ளியில் நன்கு படித்த முதல் வகுப்பில் தேறிய மாணாக்கர் பொறியியல் கல்லூரிகளில் ஆங்கிலத்தில் படிக்க இயலாமல் தற்கொலை செய்துக் கொள்ளும் அவலம் இன்றும் செய்தியாகின்றன. இதற்குக் காரணம் தமிழர்கள் தமிழில் கற்க வாய்ப்பில்லாது போனதே என்பதனை இங்கு எண்ணவேண்டியுள்ளது.
தீபம்
        குறிஞ்சி மலரால் குளிரூட்டிய நா.பார்த்தசாரதி அவர்களால் 1965 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் வெளிவந்த திங்கள் இதழ் தீபம். தீபத்தின் ஒளி தமிழகத்தில் பரவியதால் இவர் தீபம் நா.பா. என்றே இலக்கிய ஆர்வலர்களால் அழைக்கப்பட்டார்.
        நா.பா. தீபம் இதழின் இரண்டாவது தலையங்கத்தில் இவ் இதழுக்காகத் தாம் உழைத்து வரும் அருமையினைமெய் வருத்தம் பாராமல் பசி நோக்காமல் கண் துஞ்சாமல் எவ்வெவர் தீமையும் போட்டியும் பொறாமையும் பாராமல் கருமமே கண்ணாக நான் என்தீபத்தைமேலும் மேலும் நன்றாகப் பிரகாசிக்கச் செய்யும் காரியங்களைச் செய்து விடாப்பிடியாக முயன்றுகொண்டிருக்கிறேன். எனக்கு இன்றும்இனி என்றும் இது ஒரு நோன்புதவம்” (இலக்கிய இதழ்கள் ப.276) எனக் கூறியுள்ளதனை எடுத்துக்காட்டுகிறார் சுப்புலட்சுமி இராசமுருகன். ஒவ்வொரு இதழாசிரியரும் தமிழர் நலனில் மிகுந்த ஈடுபாடு கொண்டு அதற்காகவே தம் வாழ்வை முழுதும் அர்ப்பணித்துக்கொண்ட நிலையினை இத் தலையங்கத்தின் வழி அறியலாம்.
நிறைவாக
        தலையங்கங்கள் மக்களின் வழித்தடத்தைச் செதுக்கிச் செம்மையாக்கியதில் முக்கிய இடம் பெற்றுள்ளதனைக் காணமுடிகிறது. தமிழ் மக்களின் நெஞ்சத்தில் மொழிப்பற்றையும் நாட்டுப்பற்றையும் விதைப்பதிலேயே தலையங்கங்கள் கண்ணும் கருத்துமாய் இருந்ததனை அறிந்துகொள்ளமுடிகிறது. ஒவ்வொரு இதழாசிரியரும் தமிழ்மக்களின் நலனில் ஈடுபாடு கொண்டு  எழுதப்பட்ட தலையங்கங்கள்தான் நாட்டுவிடுதலைக்கும் சமூகவிடுதலைக்கும் துணைநின்றன எனத் தெளியலாம்.
******************************

தலையங்கத்தின் சுவடுகள் - Tamil Journalism - 1


தலையங்கத்தின் சுவடுகள் - Tamil Journalism - 1
        ஒரு அரசின் எண்ணங்களையோ ஒரு நிறுவனத்தின் எண்ணங்களையோ மக்களுக்குக் கொண்டு செல்வது என்பது முரசறைவதில் தொடங்கி இன்று கணினி (உலாப்பேசியில்) வழி செல்வது வரை வளர்ந்துவிட்டது. செய்திகளைத் தேடி மக்கள் வந்த நிலை மாறிவிட்டது. மக்களைத்தேடிச் செல்வதில் செய்திகள் முன்னிற்கின்றன. இதற்காக ஒவ்வொரு செய்தி நிறுவனத்தாரும் முந்திக்கொள்ள விழைகின்றனர். காலத்தால் முந்திக்கொள்ளும் நிலையைக் கொண்டே தங்களைத் தரமுடையவர்களாக்க் காட்டிக்கொள்ளும் நிலை இருந்தது. இன்று வானொலி தொலைக்காட்சி ஊடகங்களினால் இத்தகைய நிலை மாறிவிட்டது. மின்னல் செய்தி என்னும் தலைப்பில் நிகழ்வு நடந்த ஒரிரு நிமிடங்களிலேயே செய்திகளைச் சென்று சேர்ப்பதில் ஊடகங்கள் கவனம் செலுத்துகின்றன. எவ்வாறெனினும் செய்திகளைச் சென்று சேர்ப்பதே இதழ்களின் பணியாக இருப்பது தெளிவு    கருத்துக்களை மக்களிடையே பரப்புவதற்காகத் தோன்றிய இதழ்களுக்கு கிறித்துவ சமயப் பரப்பலே அடிப்படையாயிற்று. ”1578 ஆம் ஆண்டில் கேரளப் பகுதியில் உள்ள கொல்லத்தில் போர்த்துகீசிய பாதிரிமார்கள் 16 பக்கங்களைக் கொண்டகிறிஸ்டியன் டாக்டிரின்என்ற தமிழ்ப் பிரசுரத்தை வெளியிட்டனர். (தமிழ் இதழ்கள்- விடுதலைக்குப் பின் ப. 2-3) என்னும் கூற்று இங்கு எண்ணத்தக்கது.
இதழாளர்கள்
        செய்திகளைக் கொண்டு சேர்ப்பது இதழ்களின் தொடக்கப்பணியாக இருந்தாலும் பயனுடைய, தரமானச் செய்திகளைத் தருவது அதனுடைய வளர்ச்சி நிலையாக அமைந்தது.       சமூக அக்கறை கொண்டவர்களே இதழாளர்களாவதற்குரிய தகுதியினைப் பெறுகின்றனர். பொருளுக்காகவும் புகழுக்காகவும் இதழ்களைத் தொடங்குவதால் அதன் தரத்தினைப் பாதுகாக்க இயலாது. சதி என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை ஒழித்த ராஜாராம் மோகன் ராய் இதழ்களின் வழி சமூகச் சிந்தனைகளுக்கு உரமூட்டினார். இந்திய மொழி இதழியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் மிகச் சிறந்த சமூகச் சிந்தனையாளரும் சீர்திருத்தவாதியுமான ராஜாராம் மோகன் ராய்  என நாதிக். கிருஷ்ணமூர்த்தி, இந்திய இதழியலில் (தமிழ் இதழ்கள்- விடுதலைக்குப் பின் ப. 1) குறிப்பிடும் கூற்று இங்கு எண்ணத்தக்கது. “தம்முடைய சமுதாயச் சீர்திருத்தப் பணிக்காகவே இராஜராம் மோகன்ராய் 1821-ல் சம்பத் கமுதி என்ற பெயரில் வங்காள இதழைத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து மீரத்-அல்-அக்பர் என்ற பாரசிக வார இதழைத் தொடங்கினார். இரு பத்திரிகைக்கும் அவரே ஆசிரியராகப் பொறுப்பேற்று வெற்றியுடன் நடத்தினார் (இதழின் வளர்ச்சியும் மொழி பெயர்ப்பும் ப. 147) எனக் கு.முத்துராசன் குறிப்பிடுகிறார்
புலானாய்வில் இதழ்கள்
        மக்களுக்கு உண்டாகும் குறைகளை நீக்கவே இதழ்கள் தோன்றின. முதலில் தகவலைத் தெரிவிக்கும் ஊடகமாகத் தொடங்கிய இதழ்கள் மக்களுக்குரிய தேவைகளை அரசுக்கும் , அரசுக்குத் தேவையானத் தகவல்களை மக்களுக்கு அளிப்பதற்கும் உரிய கருவிகளாக மாறியுள்ளன. மக்களுக்குரிய குறைகளைத் தீர்க்க வேண்டிய பாதுகாக்க வேண்டியவை தம் நிலையிலிருந்து வழுவியபோது அவர்களுக்கு இதழ்கள் துணைநின்றன. அவற்றுள் புலனாய்வு இதழ்கள் முக்கிய இடம் பெறுகின்றன. இந்தியாவில் முதலில் தோன்றிய இதழே மக்களின் எண்ணங்களை வெளிப்படுத்தி விழிப்புணர்வு ஊட்டும் வகையில் அமைந்தது.      இந்தியாவில் 1780 இல் ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி என்பவரால் வெளியிடப்பட்ட பெங்கால் கெசட் என்னும் இதழ் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஊழல்களை வெளியிட்டது என்று அறியமுடிகிறது. இந்தியாவின் முதல் இதழ் பெங்கால் கெசட் அந்த முதல் இதழிலேயே புலனாய்வு இதழ்களுக்கான விதை ஊன்றப்பட்டது என்று கருதலாம். (தமிழ் இதழ்கள்- விடுதலைக்குப் பின் ப. 93) இக் கூற்றின்வழி மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண்பனவாகவே இதழ்கள் விளங்கியதனை அறிந்துகொள்ள முடிகிறது.
        விடுதலைக்குப் பின்னர் ஆங்கிலேயரை எதிர்க்க வேண்டிய அவசியமில்லாமல் போனது. எனினும் இந்தியருக்கு எதிராக இந்தியரே செயல்பட்ட நிலையினைக் கண்டிக்கும் வகையில் புலனாய்வு இதழ்கள் பெரும் பங்காற்றின. ஏழைகள் காவல்நிலையங்களுக்குச் செல்வதைக்காட்டிலும் இதழ்களை நாடுவதன் வழி தீர்வு காண இயலும் என எண்ணினர். அவ் எண்ணம் சிறப்பாகச் செயல்பட்டதால் பல புலானாய்வு இதழ்கள் தோன்றின. ”தமிழில் புலனாய்வு இதழை முதன்முதலில் வெளியிட்ட பெருமை ஜுனியர் விகடனைச் சேரும். (தமிழ் இதழ்கள்- விடுதலைக்குப் பின் ப. 93)” என்னும் கூற்று இங்கு எண்ணத்தக்கது.
இதழ்களின் போக்கு
        மக்களுக்கு நன்றியுணர்வுடன் திகழ வேண்டிய இதழ்கள் சில நேரங்களில் ஆட்சியாளர்களின் பிடியில் சிக்கிக்கொண்டு நடுவுநிலைமையிலிருந்து வழுவி விடுகின்றன. இன்றைய நிலையிலேயே அவ்வாறெனின் வெள்ளையரின் ஆட்சிக்காலத்தில் இதழாளர்களின் நிலை எத்துணைக் கொடுமையுடையதாக இருந்திருக்கும் என்பதனை ஒருவாறு உணரலாம். அரசாட்சி செய்தோர் கடுமையானச் சட்டங்களால் இதழாசிரியர்களை முடக்கிப்போட்டு, அரசுக்கு சாமரம் வீசும் பணிப்பெண்களாக இதழ்களை பயன்படுத்திக் கொண்டனர். ”இந்திய விடுதலைக்குமுன் 1979 இல் வெல்லஸ்லி பிரபு முதன்முதலில் இதழ்களுக்கான ஒழுங்கு முறையினைச் சட்டமாகக் கொணர்ந்தார். அதில் அவர் ஆறுவிதிமுறைகளை வகுத்தார். அதன்படி ஒவ்வொரு இதழிலும் அச்சிடுவோர், ஆசிரியர், உரிமையாளர் பெயர்களை வெளியிடுதல், அரசின் தலைமைச் செயலாளரிடம் தங்களது முகவரியைத் தெரிவித்தல், அச்சிடப்படும் செய்திகளைத் தலைமைச் செயலரிடம் காட்டி ஒப்புதல் பெறுதல் ஆகியன சட்டமாக்கப்பட்டன. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் இதழ் வெளியிடக்கூடாது என்பதும் அரசுச் செயலாளர் இதழ்களின் கட்டுப்பாட்டாளராக இருப்பார் என்றும் சட்டமாக்கப்பட்டது.  இவ் விதிகளை மீறுவோர் நாடு கடத்தப்படுவார் என்ற தண்டனையும் வகுக்கப்பட்டது.” (தமிழ் இதழ்கள்- விடுதலைக்குப் பின் ப. 13-14) என்னும் கூற்று இங்கு எண்ணத்தக்கது. இத்தகைய வலிமையானச் சட்டங்களுக்கு உடன்பட்டே இதழினை நடத்த வேண்டிய நிலை இருந்தது.
        மக்களாட்சி மலர்ந்த பிறகு செய்திகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைகள் படிப்படியாக தளர்ந்தன. இதன் விளைவாகவே இதழ்கள் இன்று ஓரளவுக்குச் சுதந்திரமாகச் செயல்படுகின்றன. அரசைச் சாராத இதழ்களுக்கு அரசு விளம்பரங்கள் கொடுப்பது போன்ற நிலைகளால் மட்டுமே முடக்கப்படுகின்றன. இத்தகைய நிலையினை எதிர்கொள்ள விரும்பாத இதழ்கள் ஆட்சிக்கேற்ப தங்கள் சாயலை மாற்றிக் கொள்ளும் நிலையும் நிலவிவருகிறது.
நடமாடும் செய்தி நிறுவனங்கள்
        செய்திகளைப் பெறுதல் என்பது தொழில்நுட்பம் வளராத காலத்தில் மிகுந்த இடர்ப்பாடாகவே இருந்தது. அத்தகையச் சூழலை எதிர்கொள்வதற்குச் செய்திகளைப் பெறுவதற்கென ஒரு நிறுவனத்தின் தேவை அவசியமானது. அவ் எண்ணத்தின் விளைவாகவே செய்தி நிறுவனங்கள் தோன்றின. ”இந்தியச் செய்தி நிறுவனங்களின் தந்தை என்றழைக்கப்படும் கே.சி.ராய் என்பவர் அசோசியேட்டட் பிரஸ், பிரஸ் ட்ரஸ்ட் ஆகிய செய்தி நிறுவனங்களையும் தோற்றுவித்த முன்னோடி ஆவார். (தமிழ் இதழ்கள்- விடுதலைக்குப் பின் ப. 12)” என்னும் கூற்று இங்கு எண்ணத்தக்கது.
        எல்லா இடங்களிலும் செய்தி இருந்த நிலையினை செய்தியாளர் மட்டுமே அறிவார். அவர் மட்டுமே செய்திகளைச் சேகரித்து அளிக்கும் நிலை இருந்தது. ஆனால் இன்று எவர் வேண்டுமானாலும் செய்தியினை அனுப்பும் வகையில் தொழில்நுட்ப வளர்ச்சி நினைத்துப்பார்க்க இயலாத வகையில் வளர்ந்து விட்டது. சமூக ஆர்வம் உடைய ஒவ்வொருவரும் செய்தியாளராக மாற முடியும் என்னும் நிலையினையும் இங்கு எண்ணி மகிழலாம். தொடர்வண்டியில் உணவு ஒழுங்காக வழங்கப்படவில்லை, பேருந்தில் சில்லரை கொடுக்கப்படவில்லை, இரவில் சாலை விளக்கு ஒளியூட்டவில்லை, பகலில் சாலை விளக்கு வீணாக ஒளியை உமிழ்ந்து கொண்டிருக்கிறது.  இரைச்சல் தொந்தரவு எனப் பல நிலைகளில் செய்திகள் சமூக ஆர்வலர்களின் வழி செய்தி நிறுவனங்களை நோக்கி வருவது வாடிக்கையாகி விட்டதனையும் இங்கு எண்ணி மகிழலாம்.
தலையங்கத்தின் தேவை
        காலந்தோறும் செய்திகளும் செய்தியாளர்களும் செய்தி நிறுவன்ங்களும் மக்களின் தேவையினை ஈடுசெய்யும் வகையில் வளர்ந்து வந்துள்ள நிலையினை மேற்கூறிய வளர்ச்சிநிலைகளின் வழி அறியலாம்.  செய்திகள் அறிவித்தல் அறிவுறுத்தல், மகிழ்வித்தல் என்னும் நிலையிலிருந்து இன்று ஆராய்தல் என்னும் நிலைக்கு வந்துவிட்டது. ஏனெனில் இன்று செய்திகளை அறிந்து கொள்வதில் இடர்ப்பாடு இருப்பதில்லை.  எனவே உண்மையான நிலவரங்களை மட்டுமே அறிந்து கொள்வதிலேயே மக்கள் ஆர்வம் கொள்கின்றனர். இதழ்களைப் படிப்பவர்கள் ஏற்கெனவே அறிந்த செய்தியின் விவரங்களை அறிவதற்கோ அல்லது நம்பகத்தன்மையை உறுதி செய்துக்கொள்ளவோதான் பெரும்பாலும்  செய்தித்தாள்களை அணுகும் நிலை உண்டாகிவிட்டது.  மக்களுக்குத் தெரிவிக்கும் நிலையிலிருந்து தெளிவிக்கும் சூழலுக்கு இதழ்கள் வந்துவிட்டன. எனவே தலையங்கம் அத்தகையத் தேவையினை நிறைவு செய்வதில் முதலிடம் பெறுகின்றன.
        ஆங்கிலச் செய்தித்தாள்களில் இடம்பெறும் கட்டுரைகளைவிட தமிழ்ச் செய்தித்தாள்களில் கட்டுரைகள் குறைவாக இடம்பெறுகின்றன. கட்டுரைகள் இடம்பெறுவதற்கான கவனம் கூடுதலாகத் தேவைப்படுவதாலும் மக்களின் ஆர்வம் அதிகம் இல்லாது போனதனாலும் இந்நிலையினை இதழாளர்கள் பின்பற்றக்கூடும். எனினும் நாளிதழின் தரம் அத்தகையக் கட்டுரைகளைக் கொண்டே அமைகிறது. இத்தகையத் தரத்தினை மேம்படுத்துவதில் தலையங்கம் முக்கியத்துவம் பெறுகின்றன. அவ்வாறு தலையங்கத்தின் வழி, தங்களை நிலை நிறுத்திக் கொண்ட ஒரு சில இதழ்களையும்  ஒரு சில இதழாளர்களையும் இனிக் காண்போம்.
சஞ்சிகைகளில் தலையங்கம்
        சஞ்சிகைகள் எனப்படும் வார, திங்கள் இதழ்கள் மக்களிடம் மிகுந்த செல்வாக்கைப் பெற்றிருந்தன. 1928 இல் ஆனந்தவிகடன் இதழை எஸ்.எஸ்.வாசனும் 1941 இல்- கல்கி இதழைரா. கிருஷ்ண மூர்த்தியும் 1947 இல் குமுதம் இதழைஎஸ்..பி. அண்ணாமலையும் 1948 இல் கல்கண்டு இதழை தமிழ்வாணனும்1977 இல் குங்குமம் இதழை சா. விஸ்வநாதனும் 1978 இல் இதயம் பேசுகிறது இதழை மணியனும் 1978 இல் சாவி இதழை சா.விஸ்வநாதனும் தொடங்கினர்.
        சஞ்சிகைகளின் தலையங்கம் பொதுவாகச் சிறியனவாக இருக்கும். சஞ்சிகையில் ஒதுக்கப்படும் இடம், சஞ்சிகை வெளியிடும் நாள் ஆகியவற்றிற்கேற்பச் சஞ்சிகைகளின் தலையங்கம் அமைவதுண்டு. தலையங்கம், எதைப் பற்றி எப்படி அமைய வேண்டும் என்பதைச் சஞ்சிகை ஆசிரியர் முடிவு செய்வார். ஏனெனில் தலையங்கம் என்பது சஞ்சிகை வெளியீட்டாளரின் அல்லது ஆசிரியரின் கருத்துகளைத் தெளிவாக வகுத்துரைக்கும் கட்டுரையாகும் (தமிழ் இதழ்கள்- விடுதலைக்குப் பின் ப. 48) என்கிறார் சசிகலா. சஞ்சிகைகள் எனப்படும் இதழ்கள் நாளிதழ்கள் அல்லாதனவாக இருப்பதனால் அவற்றுக்குரிய காலம் போதுமானதாக அமைந்துவிடுகிறது. எனவே அவ் இதழின் ஆசிரியர் உரிய காலத்தை எடுத்துக்கொண்டு நாளிதழ்களில் வெளிவந்த தலையங்கத்தையும் ஆய்ந்து கருத்தினை வெளியிடமுடிகிறது. எனவே சஞ்சிகைகளின் தலையங்கம் தீர்வினைத் தெள்ளத்தெளிவாக எடுத்துரைப்பதாக அமைகிறது.
இலக்கிய இதழ்களில் தலையங்கம்
        தமிழர்களின் பண்பாட்டையும் மொழியின் பெருமையினையும் எடுத்தியம்பும் இலக்கியங்களை தமிழர்களுக்கு எடுத்துச்செல்ல வேண்டிய பொறுப்பு இலக்கியவாதிகளுக்கே உரியது என்னும் நிலை வந்துவிட்டது. தமிழ்மொழியின் பெருமையினை அறியாது பிறமொழிகளைச் சிறப்பாக எண்ணியபோதெல்லாம் தமிழன் தன்னைத்தானே தாழ்த்திக் கொண்டான். அதனால்தான் வடமொழி செல்வாக்கும் ஆங்கில மொழிச் செல்வாக்கும் தலை தூக்கியது. தமிழர்கள் அடிமைகளாயினர். இந்நிலையைக் கண்ட இலக்கிய ஆர்வலர்கள் இதழ்களில் இலக்கியத்தின் பெருமையினை உணர்த்த விழைந்தனர். அதன் விளைவாகவே இலக்கிய இதழ்கள் முகிழ்த்தன. ஒவ்வொரு இதழும் பிறந்தபோது அவ் இதழின் ஆசிரியர்களின் முழக்கங்களே தலையங்கமாக வெளிவந்தன. அதில் அவ் இதழின் நோக்கமும் பணியும் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.
மகளிர் இதழ்களில் தலையங்கம்
        சுகுண போதினி, ஸ்திரி தர்மம், ஜகன் மோகினி, சிந்தாமணி, மாதர் மறுமணம், மங்கை, மங்கையர் மலர், சுமங்கலி, ராஜம், பெண்மணி என மகளிர் இதழ்கள் பல வெளிவந்துள்ளன.
        தலையங்கம் பற்றி மா.ரா. இளங்கோவன் அவர்கள் சுவை பயக்கும் தலைப்புகள் தந்து தலையங்கம் எழுதும் பெரும்பாலான பருவ இதழ்கள் வாசகர்களிடையே மிக்க செல்வாக்குப் பெறுவதைக் காணமுடிகிறது என்கிறார். இக்கருத்து ராஜம் இதழுக்கும் பொருந்துவதாகும்எனக் கஸ்தூரி குறிப்பிடுகிறார் (மகளிர் இதழ்கள்,.266). இதன்வழி மகளிர் இதழ்கள் தலையங்கம் எழுதி வந்த நிலையினை அறிந்துகொள்ள முடிகிறது. இதழ்களின் செல்வாக்குத் தலையங்கத்தின் வழி அமைவதனையும் உணரமுடிகிறது.
சுதேசமித்திரன்
        மனிதன் தான் எத்தகைய உலகில் வாழ்கிறான் எனத் தெரியாமலே வாழ்ந்து கொண்டிருக்கிறான். உரிமைகளையும் கடமைகளையும் அறியாத மனிதன் அடிமையாகவே வாழ நேரிடுகிறது. இதனை உணர்ந்த சான்றோர்களின் முயற்சியால் தான் நாடு அடிமைத்தளையிலிருந்து விடுபட்டது. இந்திய நாட்டின் விடுதலைக்கு  சுதேசமித்திரன் நாளிதழின் பங்கு குறிப்பிடத்தக்கது. மகாத்மா காந்தியடிகள் உரிய பயணச்சீட்டு இருந்தும் வெள்ளையராக இல்லாத ஒரே காரணத்தால் இரயிலில் இருந்து இறக்கி விடப்பட்டார். அந்தச் சூழல்தான் வெள்ளையனை இந்தியாவையே விட்டு வெளியேற்றும் வலிமையினைக் மகாத்மாவுக்குக் கொடுத்தது. அவ்வாறு ஒரு சூழல்தான் ஜி.சுப்பிரமணிய ஐயரை இந்து நாளிதழைத் தொடங்கத் தூண்டியது. “சர். டி. முத்துசாமி ஐயர் என்பவர் உயர்நீதி மன்ற நடுவணர் பதவி பெற்றதைக் குறித்து ஆங்கிலோஇந்திய இதழ்கள் வெறுப்புக்கணைகளை விடுத்த காரணத்தால்தான் 1878 இல் ஆங்கிலத்தில் இந்து பத்திரிகை தோன்றியது. (முதல் நாளிதழ்கள் மூன்று ப.26). இதனை வெளியிட்டதோடு அமையாமல் தமிழ் மக்களுக்கும் செய்திகளை அறிவிக்க வேண்டியதன் அவசியத்தினை உணர்ந்தார் ஐயர். “ ஆங்கிலம் அறியாத மக்களும் நாட்டு நடப்புகளை அறிந்துகொள்ள வேண்டும் என்னும் காரணத்தினால்தான்இந்துவைத் தோற்றுவித்த ஜி.சுப்பிரமணிய ஐயர் தமிழில் சுதேசமித்திரனையும் தோற்றுவித்தார் (முதல் நாளிதழ்கள் மூன்று ப.26) என்னும் கூற்று மக்களுக்கு அறிவூட்டும் கடமை இதழாளர்க்கு இருந்ததனை தெளிவுபடுத்துகிறது.
        ”1889 ஆம் ஆண்டில் வெளிவந்த சுதேசமித்திரன் தான் முதல் தமிழ் நாளிதழ் என்பது தெளிவு. அது 1889 ஆம் ஆண்டு முதல் 1916 ஆம் ஆண்டு வரைச் சுமார் இருபத்தேழாண்டு காலம் போட்டி இதழ்கள் ஏதுமில்லாமல் தனியாட்சி செலுத்தியது. (முதல் நாளிதழ்கள் மூன்று ப.30). இதழ் தொடங்குவதும் அதைத் தொடர்ந்து நடத்துவதும் மிகவும் கடினமானதாக இருந்த காலத்திலேயே சுதேசமித்திரன் தனியாட்சி நடத்தி தமிழர்களுக்கு நாட்டு நடப்பினை அறியவைத்த பெருமையினை அறிந்துகொள்ளமுடிகிறது.
        தென் இந்தியாவில் தேசிய கட்சிக்கு மூலபலமாக சுதேசமித்திரன் பத்திரிகையொன்றுதான் ஆரம்பம் முதல் இன்று வரை ஒரே நெறியாக நிலை தவறாமல் நின்று வேலை செய்து கொண்டு வருகிறதென்ற செய்தியைத் தமிழ்நாட்டில் யாரும் அறியாதாரில்லை.
        ஸ்ரீ மான் காந்தியின் கூட்டத்தாரும் உண்மையாகவே தேசநலத்தை விரும்புகிறார்களாதலால், சுதேசமித்திரன் பத்திரிகை அவர்களை எவ்வகையிலும் புண்படுத்த மனமில்லாமல், ஸ்வஜனங்களென்ற அன்புமிகுதியால் அவர்களை நாம் மிக மதிப்புடன் நடத்தவேண்டுமென்ற நியாயத்துக்கு இத்தருணத்தில் சுதேசமித்திரன் ஓரிலக்கியமாகத் திகழ்கிறது. (முதல் நாளிதழ்கள் மூன்று ப.53-54) என 30.11.1920 இல் வெளிவந்த இதழில் மகாகவி பாரதியார் தலையங்கம் எழுதியுள்ளார். இதன்வழி இதழ்களின் துணையோடே அக்கால அரசியலும் நகர்ந்ததனை அறியலாம். ஊடகத்தின் துணையின்றி தலைவர்கள் மக்களை அடைதல் இயலாது. எனவே ஊடகத்தை அரசியல்வாதிகள் தம் கைப்பிடியில் வைத்திருக்க எண்ணுவது எக்காலத்தும் நிகழ்ந்து வரும் உண்மை நிலையினை அறிந்துகொள்ள முடிகிறது. தலைவர்களிடையே ஊடகங்கள் இருந்த நிலைமாறி ஊடகங்களுக்கிடையே தலைவர்கள் சிக்கிக்கொண்டுள்ள நிலையின் வழி ஊடகங்களின் பெருக்கத்தினை அறியலாம்.
சித்தாந்த தீபிகை
        சித்தாந்த தீபிகை, கலைக் கதிர், புலமை, மொழியியல், தமிழ்க்கலை, தமிழாய்வு/உயராய்வு, Tamil Culture, நாட்டுப்புறவியல்/ நாட்டார் வழக்காற்றியல், திராவிடவியல் ஆய்விதழ், வரலாறு எனப் பல தமிழ் ஆய்வு இதழ்கள் வெளிவந்துள்ளன.
        சித்தாந்த தீபிகையின் தலையங்களுள் மிக நீண்டதுபழமையும் புதுமையும்எனும் தலைப்பிலானது. இது 1897 நவம்பர் 21 இல் வெளிவந்தது. ஆறு பக்கங்களைக் கொண்டது”(தமிழ் ஆய்வு இதழ்கள்,.14). அன்றைய காலகட்ட்த்தில் தமிழர்களின் வாழ்வில் சடங்குகள் புகுந்து கொண்டு பேயாட்டம் ஆடின. மூடநம்பிக்கையே இறைநம்பிக்கை என்னும் பெயரில் தவறாகப் புகுத்தப்பட்டிருந்த நிலையினைக் கண்டு உள்ளம் வருந்திய சிலர் அச் சடங்குகளை எதிர்த்தனர். பெண்களைக் கல்வி கற்க விடாமல் வீட்டுக்குள் பூட்டி வைத்து அவள் அறியாமலேயே அவளுக்கு திருமணம் செய்து அவள் உணராமலேயே அவளைக் கைம்பெண்ணாக்கி அவள் வாழ்க்கை என்றால் என்ன என அறியும் பக்குவம் வந்தபோது சமூகம் அவளை அலங்கோலமாக்கி முடக்கி வைத்த நிலையினை எடுத்துரைக்கும் வகையில் கட்டுரைகள் வெளிவந்தன.
        சமூகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் அத்தகைய சிந்தனைகளே தலையங்கமாக எழுதியுள்ளதனைவிதவா விவாஹத்தைப் பற்றிப் பேசுவோமாக. கிரந்தாராய்ச்சி செய்து ஸ்வதந்திராபிப்பிராயமுள்ளவர்களும் பண்டிதர்களும் இந்த வழக்கம் (ஸ்திரி புனர் விவாகம்) முன் காலத்தில் ஹிந்து தேசத்தில் தெரியாததல்லவென்று தாராளமாய் ஒப்புக் கொள்வார்கள் . . . . உயிர்க்கதஞ் செய்தலே பாபம், உயிர்க்கிதஞ் செய்தலே புண்ணியமெனக் கொள்ளப்பட்டிருக்கிறது. பலவந்தமாய் வைதவ்யாசாரத்தையனுஷ்டிக்கும் படி செய்தலினால் அநேக இடங்களில் பெருந்துன்பத்திற்குக் காரணமாய் இருக்கிறதென்று தெரிகிறது.” (தமிழ் ஆய்வு இதழ்கள்,.17) என்னும் தலையங்கம் எடுத்துக்காட்டியுள்ளது. கைம்பெண் மறுமணத்துக்குப் போராடிய சமூகக்காவலர்களின் எண்ணங்களுக்கு இத்தகைய தலையங்கங்கள் துணைசெய்துள்ளதனை எண்ணி மகிழலாம். மக்களிடம் புரையோடிப்போன சிந்தனைகளை வேரோடு அறுத்து பல பெண்களின் வாழ்வைக்காத்த இத்தகையத் தலையங்கங்கள் என்றும் நினைத்துப்பார்க்க வேண்டியன எனத் தெளியலாம்.
கலைமகள் (புதுவை)
        1913 ஆம் ஆண்டு வெளிவந்த இவ் இதழுக்கு புலவர் கி. பங்காருபத்தர் ஆசிரியராக விளங்கினார். தமிழறிஞர்கள் பலர் தம் உயிரை விட தமிழை மிகுதியாக நேசித்தனர். அவ்வாறு வாழ்ந்த காரணத்தால் தமிழர்க்கும் தமிழுக்கும் இன்னல் விளைந்தபோது அவர்களால் அமைதி காக்க இயலவில்லை. அத்தருணத்தில் தமிழர்கள் யாரை எதிர்க்க வேண்டுமோ அவர்களுக்கே துணைநின்றதைக் கண்டு உள்ளம் வருந்திய தமிழறிஞர்கள் பலர்.  அத்தகைய அடிமை நிலையிலேயே வாழப்பழகி சுகம் கண்ட தமிழர்களுக்காகவும் தம்முடைய வளமானப் பண்பாட்டை மறந்து சமயப்பற்றின்றி வாழும் தமிழர்களுக்காகவும் கலைமகள் இதழைத் தொடங்கினார் பங்காருபத்தர்.
        வேடிக்கையான செய்திகளைச் சொல்லிப் பிறரைக் களிப்பித்தற்காக யாம் பத்திரிகை நட்த்த வந்தோமில்லை. தமிழ் வளர்ச்சி பெற வேண்டுமென்பதும் தமிழ் மக்கள் தமிழறிவு பெற்றுத் தழைக்க வேண்டுமென்பதும் இப்போது நிலைகுலைந்து நிற்கும் தமிழணங்கு முன்போல் தலையெடுக்க வேண்டுமென்பதுமே கலைமகளின் முக்கியக் கருத்தாகும்” (இந்திய விடுதலைக்கு முன் தமிழ் இதழகள் ப. 11) எனக் கூறியுள்ளதனை பழ.அதியமான் எடுத்துரைத்து சைவப்பயிர் தழைக்க வந்த தமிழ் மழை என இவ் இதழைப் போற்றியுள்ளார். சைவமும் தமிழும் தமிழர்களின் பரம்பரைச் சொத்து. அதனைப் பிறர் கொள்ளையடித்துக் கொண்டு போக அறியாமையினால் அதனைப் பார்த்துக்கொண்டு ஏங்கி நிற்கும் தமிழரின் குற்றங்களைக் களையும் வகையிலேயே இவ் இதழ் தோன்றியதனை அறியலாம்.
தேசபக்தன்
        1917ஆம் ஆண்டு திசம்பர் திங்கள் 17 ஆம் நாள் தமிழ்த்தென்றல் திரு.வி. கலியாணசுந்தரனாரால் தொடங்கப்பட்ட இதழ் தேசபக்தன். 1920 அக்டோபர் திங்கள் 22 ஆம் நாள் நவசக்தி இதழையும் தொடங்கினார். எளிமையே அருமை என்பதனை உணர்ந்து செயல்படுத்திய பெருமைக்குரிய தமிழறிஞர் இவர். தம்முடைய எழுத்து நடையால் அனைவரையும் படிக்கத் தூண்டியவர். அருமையானத் தலையங்கத்திலும் எளிமையைக் கையாண்டவர். “திரு.வி.. தலையங்கத்தை ஆசிரியக் கருத்து அல்லது ஆசிரியக்கட்டுரை  என்றே எழுதுவார்.” (முதல் நாளிதழ்கள் மூன்று ப. 123)
        தமிழ்ப்பற்றும் நாட்டுப்பற்றும் தம் இரு கண்களாகக் கொண்டு செயல்பட்டவர் திரு.வி.. எனவே நாட்டுநலன் குறித்து தேசபக்தனில் வெளிவந்த தலையங்கங்களை எதிர்காலத்தில் அனைவரும் அறிந்துக்கொள்ள வேண்டும் என எண்ணி அதனை நூலாக்கினார். “தேசபக்தனில் வெளியானத் தம்முடைய தலையங்கங்களில் பலவற்றைத் தொகுத்துத்தேசபக்தாமிர்தம்என்னும் நூலொன்றும் வெளியிட்டார். (முதல் நாளிதழ்கள் மூன்று ப. 123). இக்கூற்றின் வழி நாளைய தலைமுறையினரிடம் திரு.வி.. கொண்டிருந்த ஈடுபாட்டினை அறியலாம்.
        தாய்மொழிக் குறித்த சிந்தனைகளை விதைக்க வேண்டியதன் அவசியத்தினை உணர்த்த விழைந்த திரு.வி.. தமிழர்கள் துளியும் தாய்மொழிப்பற்றின்றி வாழ்வதனைக் கண்டு மனம் வருந்தினார். எனவே தமிழ்ப்பற்றை வலியுறுத்துவதனையே தலையங்கப்பொருளாகக் கொண்டார். ”இங்கிலாந்து தேசமும் இங்கிலீஷ் பாஷையும் என்னும் தலையங்கத்தில் பாஷாபிமானமில்லாதவர் தேசாபிமானம் இல்லாதவர் என்று வற்புறுத்திக் கூறியுள்ளார். மக்கள் தொகையாலும் நிலப்பரப்பாலும் இந்தியாவின் ஒரு மாகாணத்துக்கும் ஈடாகாத அளவுக்குச் சுருங்கியதான இங்கிலாந்து ஆளும் நாடாக மாறியதன் காரணத்தை எண்ண வேண்டும் என்று குறிப்பிடும் அவர், அந்நாட்டு மனவெழுச்சியையும் ஒற்றுமையையும் எண்ணிப்பார்த்து நமக்கும் அந்த இயல்புகள் வேண்டும் என்று வலியுறுத்துகின்றார். எந்த மொழியையும் எந்த நாட்டவரையும் பழிக்காத மனம் கொண்டவர் அவர். பொதுக்கூட்டங்களில் தேச நலத்தை வேண்டிப் பேசுவோர் தாய்மொழியை மறந்து ஆங்கிலத்தில் பேசுவது குறையாகும் என்கிறார். தமிழ் நாட்டுத் தலைவர்கள் பலர், ஆங்கில மொழியின் மீது மோகம் கொண்டு தமிழில் நன்கு பேசும் ஆற்றல் கொண்டிருந்த போதிலும் ஆங்கிலத்திலேயே பேசுவது உண்மையான பயனைத் தராமல் போகும் என்பதைத் தெளிவுபடுத்த முற்படும் அவர்இத்துணை நாளாக இங்கிலீஷில் பேசிப்பேசி வளர்த்த தேசபக்தி போலியாக முடிவுற்றதைத் தலைவர்கள் உணர்ந்து நடப்பார்களாக (முதல் நாளிதழ்கள் மூன்று ப. 127) எனத் தேசபக்தன் (06.12.1919) நாளிதழில் தலையங்கம் எழுதியுள்ளார். தாய்மொழிப் பற்றால் ஒரு சிறிய நாடு உலகாண்ட நிலையைக்கூறி தாய்மொழிப்பற்றுடன் வாழ அறிவுறுத்தியுள்ள திரு.வி..வின் எழுத்தாற்றலுக்குச் சான்றாக இத்தலையங்கம் அமைந்துள்ளது.