தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

செவ்வாய், 28 மே, 2019

மொழிப் பயன்பாட்டில் கவனம் - Tamil Language skills


மொழிப் பயன்பாட்டில் கவனம்

முனைவர் ம.ஏ. கிருட்டினகுமார், உலாப்பேசி :9940684775

மொழி ஓர் இனத்தின் விழி.அவ்விழிகுருடாயினும் கேடில்லை என எண்ணும் நிலையாலேயே தமிழ்மொழி அனைத்து நிலைகளிலும் பின்தங்கியுள்ளதனைக் காணமுடிகிறது.கல்விச்சாலைகளே மொழியறிவை ஊட்டுவதில் முதலிடம் பெறுகின்றன.அத்தகைய பெருமையுடைய கல்வி நிறுவனங்களிலேயே தமிழுக்குரிய இடம் மறுக்கப்பட்டுவிட்டது.தமிழர்க்கு விளைந்த இக்கொடுமைபோல் உலகில் வேறு எவர்க்கும் தாய்மொழி மறுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.தமிழ்மொழிக்கு எதிராகச் செயல்படுவோரில் சிலர் தமிழராகவே இருப்பது அதனினும் கொடுமை.இந்நிலை மாறவேண்டுமானால் மொழிப் பயன்பாட்டில் கவனம் செலுத்துவது அவசியமாகின்றது என எண்ணியதன் விளைவாகவே இக்கட்டுரை எழுகிறது.

மரபை மறத்தலே கேடு

எழுத்துக்களைக் கற்றுணர்ந்து எவ்வகைப் பிழையுமின்றி எழுதும் முயற்சியால் தமிழ் எழுத்துக்கள் நிலைபெற்றுவிட்டன.எழுத்துக்கள் மரபாகிவிட்டது போல் ஒவ்வொரு நிலையிலும் தமிழர்க்குரிய மரபைக் காத்துநின்றால் மட்டுமே மொழிக்குரிய சிறப்பினைக் காத்தல் இயலும். அந்நிய நாகரிகத்தால் தமிழர்ப் பண்பு மாறிவிடுமாயின் அப்பண்பாட்டிற்குரிய சொல்லும் வழக்கிழந்து பின்னாளில் தமிழ்ச்சொல்லா என்னும் ஐயம் ஏற்படும் நிலை உண்டாகும். இந்நிலைக்கு எடுத்துக்காட்டாக இன்று பல சொற்களை அடுக்க இயலும்.

மொழி என்பது செய்தி பரிமாற்றத்திற்குரிய கருவியே. எனவே அம்மொழிக்குரிய இலக்கணம் அனைத்தையும் அறிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை மொழியால் இருவர்க்கிடையே செய்திப் பரிமாற்றம் நிகழ்ந்தால் போதுமானது  எனக்கூறும் போக்கினையும் காணமுடிகிறது. இக்கூற்று இலக்கண வளமும் இலக்கிய வளமும் இல்லாத மொழியார்க்கு உரியது.இதனைத் தமிழுக்கு ஏற்புடையதாக ஆக்கிக்கொள்ள விழைதல் தமிழினத்துக்குச் செய்யும் கேடேயாகுமன்றி வேறில்லை.அவ்வாறு மொழியில் கவனம் செலுத்த மறந்ததனாலேயே இன்றைய குழந்தைகளுக்கு அந்நிய மொழிகளைக் காட்டிலும் தாய்மொழி கடுமையானதாகிவிட்டது.

நன்கு வளர்ந்த பயிர் நிலங்களுக்கே வேலி தேவை.தரிசு நிலங்களுக்கு வேலி தேவையில்லை.எனவே தரிசு நிலத்தார் வேலி எவர்க்கும் தேவை இல்லை என்னும் விதியினை பொதுமையாக்கினர். பயிருடையோரிடமிருந்து பயிரைக் களவாடும் முயற்சியாகவும் நிலமுடையோர் செழிப்பதனைத் தடுக்கும் முயற்சியாகவும் மட்டுமே இந்நிலை  அமையும் என்பதனை உணர்வுடையோர் உணர்வர். தமிழ் இலக்கிய நிலத்தினை இலக்கண வேலியிட்டுக் காத்தாலன்றி தமிழ் மொழியைக் காத்தல் இயலாது என்பதனை உணர்ந்து இலக்கணத்தையும் இலக்கியத்தையும் பயிற்றுவிக்க வேண்டியது அவசியமாகின்றது.

        ’மரபு நிலை திரியின் பிறிதி பிறிதாகும்” – (தொல்.நூ. 1591)
என்னும் நூற்பாவின் வழி மரபின் அவசியத்தினை உணர்த்துகிறார் தொல்காப்பியர்.எவ் இடங்களில் எல்லாம் மரபு ஒழிந்ததோ அங்கெல்லாம் தமிழர்க்கான அடையாளங்களும் மறைந்து வருவதனைக் காணமுடிகிறது.தமிழரின் உணவு முறைகளில் ஏற்பட்ட மாற்றத்தினாலேயே தினை, வரகு, சாமை என்பன போன்ற உணவு முறைகள் மறைந்து இன்று அச்சொற்களே அருகிவிட்ட நிலையினையும் காணமுடிகிறது. வீடு கட்டும் நிலையில் மாற்றம் ஏற்பட்டதால் திண்ணை என்னும் சொல்லே  மறைந்துவிட்டது. இந்நிலைக்குக் காரணம் திண்ணையுடைய வீடுகளைக் கட்டாததனாலேயே என்பதனையும் உணரலாம். இவ்வாறு தமிழருடைய வாழ்க்கை முறையில் இடையூறாகப் புகுந்த மாற்றங்கள் அனைத்தும் தமிழருடைய மரபினை மறைத்து தமிழ்மொழியின் வளத்தைக் குன்றச்செய்வதனை உணர்வுடையோர் உணர்வர். எனவே மொழியைக் காக்க வேண்டுமாயின் மரபைக் காப்பதில் கவனம் வேண்டும் எனத் தெளியமுடிகிறது.

திரை செய்யும் குறை

        தமிழ் மொழி வளர்ச்சிக்குப் பெருந்துணை செய்ய வேண்டிய திரைப்படங்கள் இன்று தமிழ் மொழியின் வளத்தைச் சிதைத்து வருவதனைக் காணமுடிகிறது.அரை நூற்றாண்டுக்கு முன் திரையிடப்பட்ட திரைப்படங்கள் தமிழைக் கற்றுக்கொடுத்தன.படிக்காதவர்கள் மிகுதியாக வாழ்ந்த அக்காலத்திலேயே திரையின் வழி தமிழ்மொழியை வளர்த்த கலைஞர்கள் உண்டு.இன்றைய திரைத்துறையினர் பிறமொழிக் கலப்போடு உடலுக்கும் உயிருக்கும் கேடு விளைவிக்கும் மரபு நிலை மாற்றங்களையும் புகுத்துவதையே மரபாகக் கொண்டு செயல்படுகின்றனர். இத்தகைய குறைபாடுகள் சமூகத்தைச் சீர்கெடுக்கும் என்பதனையும் அச்சமூகத்திலேயே திரைத்துறையினரின் தலைமுறைகளும் வாழ்கின்றனர் என்பதனையும் திரைத்துறையினர் எண்ண மறந்துவிடுகின்றனர். இனி வரும் காலங்களிலேனும் தமிழ் மொழிக்கும் மரபுக்கும் கேடு நிகழாது திரைத்துறைப் பயணிக்க வேண்டும் என்பதில் மிகுந்த கவனம் செலுத்தினால் மட்டுமே மொழிப்பயன்பாடு சீராகும் என்பதனை உணரமுடிகிறது.

        இசை திரிந்து இசைப்பினும் இயையுமன் பொருளே
        அசை திரிந்து இயலா என்மனார் புலவர்   – (தொல்.நூ. 1141)

என்னும் நூற்பா இசை எவ்வாறு அமையினும் பொருள் திரியாது இலக்கியம் படைத்தல் வேண்டும் என்னும்கொள்கையுடையவர்களாக தமிழர்கள் வாழ்ந்திருந்ததனை புலவர்கள் கூற்றின் வழி நிறுவுகிறார் தொல்காப்பியர். இதன் வழி இன்றைய திரைத்துறையினர் மொழிப்பயன்பாட்டில் கவனம்வைத்து பொருளுடைய உரையாடல்களையும் பாடல்களையும் இயற்றி மொழிக்கும் இனத்துக்கும் பெருமை சேர்ப்பாராயின் மொழி வளம் பாதுகாக்கப்படும் எனத் தெளியலாம்.

மொழி வளம்

        தமிழ்மொழி செயற்கை மொழியன்று ; இயற்கை மொழி. வாயைத் திறத்தலால் ஆ – காரம் பிறப்பதன் வழி உலக மக்கள் அனைவர்க்கும் உரிய இயற்கை மொழியாகத் தமிழ் திகழ்வதனை எண்ணி மகிழலாம்.மொழியின் பழமையே மொழி வளத்திற்குச் சான்றாகும்.ஏனெனில் காலத்தின் வளர்ச்சிக்கேற்ப மொழியும் வளர்ந்துகொண்டே செல்லும் என்பது உலகியல் வழக்கு.அவ்வாறு தமிழ்மொழியில் சொல் வளம் மிகுந்திருந்ததனை தொல்காப்பியர் பல நூற்பாக்களில் எடுத்துக்காட்டுகிறார்.  மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உயிரினங்களை வரையறுத்த பெருமை தமிழர்க்கு இருந்ததனை

மாற்றரும் சிறப்பின் மரபியல் கிளப்பின்
பார்ப்பும், பறழும், குட்டியும், குறளும்
கன்றும், பிள்ளையும், மகவும் மறியும் என்று
ஒன்பதும் குழவியோடு இளமைப் பெயரே – (தொல்.நூ. 1500)

என்னும் நூற்பா தெளிவுற எடுத்துரைக்கிறது.அனைத்து உயிரினங்களின் இளமைப் பெயர்களையும் உள்ளடக்கியுள்ள தமிழரின் பெருமையினை இந்நூற்பாவின் வழி அறிந்துகொள்ளமுடிகிறது.இதன்வழி மொழிப்பயன்பாட்டில் சிறந்து விளங்கிய தமிழரின் திறத்தையும் இங்கு எண்ணிமகிழலாம்.அத்தகைய வளமான சொற்களை மீட்டு மீண்டும் வழக்கில் பயன்படுத்தினால் தமிழரின் மொழிப்பயன்பாடு மேலும் சிறந்து விளங்கும் எனத் தெளியமுடிகிறது..

இயற் பொருளும் குறிப்புப் பொருளும்
சொல்லால் பொருளை அறிதலும் பொருளால் சொல்லை அறிதலும் இயற்கை நிகழ்வு. ஆனால் ஒரே சொல்லானது தெரிநிலையால் ஒரு பொருளினையும் குறிப்பால் வேறொரு பொருளையும் குறிப்பிடும் வகையில் தமிழ் இலக்கியங்களில் இறைச்சி, உள்ளுறை எனப் பல நுட்பங்கள் கையாளப்பட்டுள்ளதனையும் காணமுடிகிறது.

தெரிபுவேறு நிலையலும் குறிப்பின் தோன்றலும்
இரு பாற்றென்ப பொருண்மை நிலையே  – (தொல்.நூ. 642)

என்னும் நூற்பா ஒரு சொல் இயல்பிற்றாய் மொழிதலின் போது ஒரு பொருளையும் சூழலுக்கேற்றார் போல் மொழிதலின் போது வேறொரு பொருளையும் குறிப்பிடுவதாகக் காட்டுகிறது. ’நீ நல்லா இரு’ , நீ மட்டும் முன்னேறினால் போதும்’ என்னும் இரு சொற்றொடர்களும் வாழ்த்துப் பொருளில் மட்டுமல்லாது இகழ்ச்சிப் பொருளிலும் அமைகிறது. இத்தகைய சொற்கள் இன்றைய நடைமுறை வழக்கிலேயேநிலவிவருகின்றன.அத்தகைய சொற்களை ஆய்ந்து தமிழ் அகராதியில் மதிப்பிற்கேற்ற வகையில் இணைப்பதும் தமிழ்மொழிப் பயன்பாட்டிற்குப் பெரிதும் துணை நிற்கும் எனத் தெளியலாம்.

உயர்திணைப் பயன்பாடு

தமிழர்கள் மட்டுமே உயர்திணைக்கு எதிராகத் தாழ்திணை என வரையறுக்காது அஃறிணை எனப் பெயரிட்டனர்.அவ்வாறு திணை, பால், எண், இடம் என ஒவ்வொன்றிலும் ஓர் ஒழுங்கு முறையினைப் பின்பற்றிய இனம் தமிழினமே. இதற்குச் சான்றாவன எழுத்து ஆவணங்களான  இலக்கணங்களே.ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மொழியை வரையறுத்த இனம் தமிழினம் என்பதற்குத் தொல்காப்பியம் அருமையான சான்றாகத் திகழ்வதனைக் காணமுடிகிறது.

அவ்வழி ,
அவன் இவன் உவன்என வரூஉம் பெயரும்
அவள் இவள் உவள் என வரூஉம் பெயரும்
அவர் இவர் உவர் என வரூஉம் பெயரும்  – (தொல்.நூ. 647)

என்னும் நூற்பா உகரச் சுட்டு வழக்கில் இருந்ததனை உணர்த்துகிறாது.இன்று ‘உ’ கரச் சுட்டு வழக்கிழந்துவிட்டது.ஆயினும் கிராமங்களில் உதோ வருகிறார் என இடைப்பட்ட இடத்தில் வருவோரைக் குறிப்பிடும் நிலை இருப்பதனைக் காணமுடிகிறது.கற்றோர்க்குரிய மொழி வளம் கல்லாதோரிடையே புதைந்திருப்பதனையும் அதனை மீட்கும் முயற்சியில் மொழியறிஞர்கள் ஈடுபட வேண்டியதன் அவசியத்தினையும் இதன் வழி உணரமுடிகிறது.

ஊடகங்களில் தமிழ்

        நாளிதழ், வானொலி, தொலைக்காட்சி, கணினி, உலாப்பேசி என நாளுக்கு நாள் ஊடகங்கள் வளர்ந்து வருகின்றன.எனவே மொழியால் இயங்கும் இவ் ஊடகங்களுக்கு மொழியை வளர்ப்பதில் பெரும்பங்குண்டு எனத் தெளியலாம். ஆனால் இவ் ஊடகங்களில் தரமானதாகக் கருதப்படும் செய்திகளிலேயே  செய்திகள் வாசிப்பது, உயர்மட்டக் குழு, பேச்சு வார்த்தை, என்னும் சொற்றொடர்கள் தவறாக வழக்கத்தில் இடம்பெற்று வருகின்றன. இவை போன்ற தவறான சொற்களின் பயன்பாட்டால் இளைய தலைமுறையினர் தவறாகவே மொழியைக் கற்றுக்கொள்கின்றனர்.எனவே ஊடகங்களின் மொழிப்பயன்பாட்டிலும் தமிழறிஞர்கள் கவனம் கொண்டு திருத்த வேண்டியதும் அவசியமாகின்றது.

பிழையின்றி எழுதல்

        மொழியைப் பிழையின்றி எழுதவும் படிக்கவும் துணைசெய்வது இலக்கணம்.இலக்கண அறிவைப் பெற்றவரே தகவல் தொடர்புப் பணிகளில் ஈடுபடவேண்டும்.ல – ள – ழ, ர – ற, ன – ந – ண, என்னும் வேறுபாடுகளை முறையாகக் கற்பிக்க வேண்டும்.இன எழுத்துக்களின் துணைகொண்டே பல பிழைகளைத் தவிர்க்க இயலும் என்பதனை

தங்கம் – க –கரத்திற்கு ங – கரம் இணையாதல்
மஞ்சள் – ச – கரத்திற்கு ஞ – கரம் இணையாதல்
பண்டம் – ட – கரத்திற்கு ண – கரம் இணையாதல்
தந்தம் – த – கரத்திற்கு ந – கரம் இணையாதல்

என்பது போன்ற எடுத்துக்காட்டுகளின் வழி விளக்குதல் வேண்டும்.வல்லின எழுத்துக்களின் பின் வல்லின எழுத்துக்கள் வரக்கூடாது எனத் தெளிவுறுத்தவேண்டும்.இத்தகைய அடிப்படையான கூறுகளைக் கற்பித்தாலே மொழிப்பயன்பாடு குறையற்றதாகிவிடும் எனத் தெளியலாம்.

மொழிப்பற்றும் வெறியும்

ஒற்றுமையுடன் வாழ வேண்டும்.மொழி வெறி கூடாது என நல்லிணக்கம் குறித்துப் பேசுவோர் அனைவரும் தத்தமது தாய்மொழியின் மீது வெறி கொண்டவர்களே.வஞ்சக எண்ணம் படைத்தோர், பிறர்க்கு அறிவுரை கூறும்போது தாய்மொழிப் பற்றினை வெறியெனக் குறிப்பிடுவர். புத்தகங்களைப் படிப்பதை உயிர்மூச்சாக எண்ணி படித்துக்கொண்டே இருப்பவர் மீது பொறாமை கொண்டு அவர்களை இழிவுபடுத்தும் வகையில் புத்தகப்புழு எனக் குறிப்பிடுவது போன்ற செயலே இது. மனிதநேயத்தால் ஒன்றுபட்டு வாழ வழிகாட்டிய தமிழ்மொழியின் பெருமிதத்தைத் தாங்கிக் கொள்ள இயலாது தமிழை அழிக்கப் போராடும் வரலாறு காலந்தோறும் நிகழ்ந்து வருகிறது. எத்தடை வரினும் அத்தடைகளைத் தகர்த்து வாழும் பெருமைக்குரியதாகத் தமிழ்மொழி திகழ்வதனாலேயே தமிழ் ’தெய்வத்தமிழ்’ எனப் போற்றபடுவதனையும் இங்கு எண்ணி மகிழலாம்

நிறைவாக

மொழிப்பயன்பாட்டில் கவனம் செலுத்த வேண்டுமாயின் மொழியை அடித்தளமாகக் கொண்டு செயல்படும் நிறுவனங்களை சீர்படுத்தலேமுதல் பணியாக அமைதல் வேண்டும்

தமிழில் பிழையின்றிப் பேசுவது என்பது தமிழர்களுக்கே அரிதாகி விட்ட நிலையினை இன்றைய ஊடகங்கள் மெய்ப்பித்து வருகின்றன.எனவே ஊடகப்பணிகளில் தமிழறிஞர்களையே பணிக்கமர்த்த வழிவகை செய்தல் வேண்டும்.

அனைத்துப் பாடங்களும் ஆங்கில மொழியில் இருக்க மொழிப் பாடம் மட்டும் தாய்மொழியில் இருப்பதனால் மாணாக்கர்களுக்கு மொழிப்பாடம் கடினமானதாகி விடுகிறது.எனவே தற்சிந்தனை வளரும் பருவமான கல்லூரிப் பருவம் வரை தாய்மொழியிலேயே கல்வி கற்க வழிவகை செய்தல் வேண்டும். தாய்மொழிச் சிந்தனையால் எதனையும் கற்றுச் சிறக்க முடியும் என்பதற்குச் சென்ற தலைமுறையினரே சான்றாவதனை இன்றைய தலைமுறைக்கு எடுத்துரைக்க வேண்டியதும் அவசியமாகின்றது.

பிற மொழி பேசும் மக்கள் பெரும்பாலும் பிறமொழிக் கலப்பில்லாமல் பேசுவதனையே கற்றோர்க்குரிய இலக்கணமாகக் கொண்டிருக்கின்றனர்.ஆனால் தமிழரோ பிற மொழிக்கலந்து பேசுவதனையே நாகரிகமாகக் கொண்டிருப்பதனை கல்வி நிலையங்களிலேயே காணமுடிகிறது.எனவே தாய்மொழியில் பேசுவதனையே பெருமையாகக் கருதும் வகையில் அரசானது பணிக்குஅமர்த்தும்போது, தமிழ்மொழியில் கற்றோர்க்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என வலியுறுத்த வேண்டியுள்ளது.

தமிழ் இனத்தைக்காக்கவேண்டுமாயின் தமிழ் மொழியின் பெருமையினை நிலைநாட்ட வேண்டும்.தமிழ்மொழியின் வளத்தைக் காக்க வேண்டுமாயின் மொழிப்பயன்பாட்டில் தமிழர் அனைவரும்ஒருங்கே கவனம் செலுத்த வேண்டும்.மேலும் அதற்கான மொழியுணர்வுடன்வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தெளியமுடிகிறது.
**********




திருக்குறளில் குறிப்பறிதல் - Thirukkural 7


திருக்குறளில் குறிப்பறிதல்

(முனைவர் ம.ஏ. கிருட்டினகுமார், உலாப்பேசி : 99406 84775)

தமிழர் மறை எனப் போற்றுதற்குரிய பெருமை கொண்ட நூல் தெய்வப்புலவர் அருளிய திருக்குறள்.இந்நூல் வெண்பா இலக்கணத்திற்கு மட்டுமேயன்றி வாழ்வியல் நிலைக்கும் எடுத்துக்காட்டாக நின்று மானிட இனத்திற்கே வாழ்வியல் இலக்கணமாகத் திகழ்கின்றது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே படைக்கப்பட்ட நூல் திருக்குறள்  எனப் பொதுவாகக் கூறினாலும் அதற்கும் முற்பட்டதாகவே இந்நூலினை எடுத்துக்காட்ட இயலும். இவ்வாறு நிறுவுதற்கு அந்நூலில் பொதிந்துள்ள சொல்வளமே சான்றாகின்றது.அத்தகைய சொல்வளம் கொண்ட நூலாகத் திருக்குறள் திகழ்வதனை நிறுவவேண்டும் என்னும் விழைவினாலேயே இக்கட்டுரை அமைகிறது.திருக்குறளின் ஒவ்வொரு சொல்லும் விரித்துரைக்கும் வல்லாரைக்கொண்டு பத்து, நூறு, ஆயிரம் என விரிந்துகொண்டே பொருள் விளக்கும் ஆற்றலுடையது.எனவே திருக்குறளில் ‘குறிப்பறிதல்’ என்னும் அதிகாரங்கள் மட்டுமே இக்கட்டுரைக்கு ஆய்வு எல்லையாகக் கொள்ளப்படுகிறது.

சொல்லாய்வின் தேவைகள்

மொழியின் வளத்தை அம்மொழியில் உள்ள இலக்கியங்களின் தன்மையைப் பொருத்தே அறிந்துகொள்ளமுடிகிறது.அவ்வகையில் திருக்குறளின் பணி அளப்பரியது. மொழி, இன, நிற வேறுபாடின்றி அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் இயற்றப்பட்ட இந்நூலைப் போல் வேறு நூல் முன்னும் இல்லை பின்னும் இல்லை என்பதனை உணர்ந்துகொள்ள முடிகிறது. எனவே திருக்குறள் சொல்லாய்வின் வழி தமிழ்மொழியின் சிறப்பினை உணர்ந்து தமிழர் தம் அறிவை மென்மேலும் விரிவு செய்துகொள்ள இயலும் எனத் தெளியமுடிகிறது. தெய்வப்புலவரின் உள்ளக்கருத்தினை உணர்ந்துகொள்ளுதல் எவராலும் இயலாது எனினும் எப்பொருளிலெல்லாம் ஒரு குறளைப் புரிந்துகொள்ள இயலும் என்பதற்கான வழிகாட்டுதலைத் தொடர்வதற்கான முயற்சியாகவே இவ் ஆய்வு அமையும் எனக்கொள்ளமுடிகிறது.

பொய்யா விளக்கு

எக்காலத்தும் எவ்விடத்தும் பொய்க்காத உண்மைப் பொருளை உணர்த்தும் சொற்களை உள்ளடக்கியதாக விளங்குவது திருக்குறள். திருக்குறளில் ‘குறிப்பு அறிதல்’ என்னும் அதிகாரம் பொருட்பாலில் மட்டுமின்றி காமத்துப்பாலிலும் இடம்பெறும் சிறப்புடைய ஒரே அதிகாரமாக இடம்பெறுவதனைக் காணமுடிகிறது. குறிப்பினை அறியும் திறன் அக வாழ்விற்கும் புறவாழ்விற்கும் அடிப்படையாகிறது எனத் திருவள்ளுவர் உணர்த்துகிறார்.’நுண்ணுதின் நோக்கும் திறன்’ அற வாழ்விற்கு மட்டுமின்றி புறவாழ்விற்கும் இன்றியமையாதது.வல்லார்களின் பார்வை எல்லோரும் பார்ப்பது போல் இயல்பாக அமைவதில்லை.எனவே சிலரை எவராலும் வெற்றிகொள்ள இயலுவதில்லை.வீட்டில் தாயும் நாட்டில் தலைவனும் மக்களின் குறிப்பினை அறிந்து செயல்படும் திறத்தினாலேயே அவர்களை இறையோடு ஒப்பிட்டு உயர்த்துவதனைக் காணமுடிகிறது. சான்றோர் இவ்விருவரின் திறத்தையும் உணர்ந்து அறத்தையும் மறத்தையும் போற்றி  வாழ வழிகாட்டுவதனையும் இலக்கியங்கள் உணர்த்தி நிற்கின்றன.

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு (தி.299)
என்னும் திருக்குறள் வாய்மையின் திறத்தைப் போற்றி நிற்கின்றது.சான்றோர்கள் எக்காலத்தும் பொய்யாத சிறப்புடைய உண்மையின் ஒளியினையே விளக்காகக் கொள்வதனை இக்குறள் எடுத்துரைக்கிறது.இருள் எத்துணை காலத்ததாயினும் எத்துணை வலிமையுடையதாயினும் ஒரு சிறிய ஒளி அத்துணை இருளையும் நீக்கிவிடுவதனைக் காணமுடிகிறது.ஒரு பூட்டப்பட்ட அறைக்கு மட்டுமே இது சான்றாவதில்லை.இருள் நிறைந்த மனதிற்கும் இப்பொருளினை பொருத்திப்பார்ப்பதன் வழி ஒளியின் பெருமையினை உணர்ந்துகொள்ளமுடிகிறது.அகத்தில் ஒளி வீசும் ஒரே விளக்கும் உண்மை என்னும் விளக்கு.என்றும் அணையாத அவ்விளக்கைக் கண்டுபிடித்தவர் திருவள்ளுவர்.இவ்வாறு ஒவ்வொரு நிலையிலும் மானிடரின் குறிப்பினை அறிந்து செயல்பட்டால் வாழ்க்கை சிறப்பாக அமையும் என்பதனை உணர்ந்துகொள்ளமுடிகிறது.

திருவள்ளுவரின் குறிப்பறிதல்

        குறிப்பு அறியும் திறத்தை அகத்திணையாகவும் புறத்திணையாகவும் கொள்ள வழி செய்கிறது திருக்குறள். ஏனெனில் முதல் குறிப்பறிதல் (71 ஆவது அதிகாரம்) அரசனை நல்வழிப்படுத்தும் பொருட்பாலிலும் இரண்டாவது குறிப்பறிதல் (110 ஆவது அதிகாரம்) காதல் வாழ்வைப் போற்றும் காமத்துப்பாலிலும் இடம்பெற்றிருப்பதனைக் காணமுடிகிறது. இவ்வாறு இரு வெவ்வேறு வகையான நுட்பங்களை உணர்த்த எவ்வாறு ? எத்தகைய ?சொற்களைக் கையாண்டார் என்பதனை அறிவதே ஆய்வுக்குரிய முன்னோட்டமாக அமைகிறது. எனினும் திருக்குறளை ஆய்வோர் எத்தகையோர் ? எந்நிலையில் ?எப்படியெல்லாம் பொருள் கூற இயலுமோ அத்துணைக்கும் வாய்ப்பளிக்கிறது.எனவே மூன்றாம் வகுப்பு முதல் முனைவர் பட்டம் வரை திருக்குறளைப் பாடப்பொருளாகக் கொண்டுள்ளதனை உணர்ந்துகொள்ளமுடிகிறது.எம்மானுடர்க்கும் பொருந்தும் வகையில் உலகப்பொதுமறையாகத் திருக்குறள் விளங்குவதற்கு ‘ ’குறிப்பறிதல்’ என்னும் அதிகாரமும் சான்றாவதனைக் காணமுடிகிறது.
வாழ்வியல் சூத்திரங்கள்

        ஒலியினைக் காட்டிலும் ஒளியின் வேகம் சிறப்புடையது என அறிவியலார் குறிப்பிடுவர்.அவ்வாறே வாயொலியினைக் காட்டிலும் கண்ணின் ஒளி சிறப்புடையதாக அமைகிறது என்பதனையே சூத்திரமாக்கி எடுத்துரைக்கிறார் தெய்வப்புலவர்.

        ஆக்கமும் கேடும் அதனால் வருதலால் காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு (தி. 642)
என்னும் திருக்குறள் சொல்லே அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணமாக விளங்குவதனை எடுத்துரைக்கிறது. எனவே அரசாட்சி  செய்வதற்கும் மனையாட்சி செய்வதற்கும் உரியோர் பேச்சில் கவனம் கொண்டு குறிப்பினை அறியும் திறனுடையவர்களாக விளங்கவேண்டியதன் அடிப்படையினை இக்குறளின் வழி உணர்த்தியுள்ளதனைக் காணமுடிகிறது. பேசாத சொற்களுக்கு நீ அடிமை.பேசாத சொற்களுக்கு நீ ஆண்டான் என்பதனையும் இங்கு எண்ணி மகிழலாம்.

உலகிற்கு அணி

        வீட்டின் அழகு நாட்டினை அழகாக்குவது போலவே நாட்டின் அழகு உலகினை அழகாக்குகின்றது.இவ்வாறு நலம் விளைவிக்கும் சிறப்பினை, அந்நாட்டினையும் வீட்டினையும் காக்கும் பொறுப்புடைய தலைமக்களாலேயே நிகழ்வதனைக் காணமுடிகிறது.

        அக வாழ்வாயினும் புறவாழ்வாயினும் உணர்ச்சிப்பெருக்கே காதல் மிகுவதற்கும் மோதல் மிகுவதற்கும் அடிப்படைக் காரணமாக இருப்பதனைக் காணமுடிகிறது.எனவே நாட்டை ஆளும் அரசனாயினும் வீட்டை ஆளும் பெண்ணாயினும் பொறுமையோடு தம் கடமையை செய்வதனைப் பொருத்தே சிறப்படைகின்றனர்.

கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும் மாறாநீர் வையக்கு அணி (தி. 701)
என்னும் திருக்குறள் பேசாது நின்று குறிப்பறியும் திறனுடையாரே சிறப்புடையர் எனத் தெளிவுறுத்துவதனைக் காணமுடிகிறது.உணர்ச்சிவயப்பட்டு சொற்கள் வெளிப்படும்போது அதில் பிழைகள் ஏற்படுவது இயல்பானதாகவே அமைகிறது.அத்தகைய சூழலில் குறிப்பறியும் திறமுடையோரே ஒருவரின் நிலையினை அறிந்து உறுதுணைசெய்தல் வேண்டும்.அத்தகைய நுட்பத்தினை அறிந்தவரையே “கூறாமை நோக்கிக் குறிப்பறிவான்” எனக் குறிப்பிடுகிறார் திருவள்ளுவர். இவ்வுலகின் இயல்பினைக் கூறும் போது ”மாறாநீர் வையம்” எனக் குறிப்பிடுகிறார். இவ்வுலகில் நான்கில் மூன்று பங்கு நீர் என்றும் மாறாது நிற்கும் நிலையினையும் ”வை” என்பது இவ்வுலகில் இறைவன் உயிர்களை உரியவாறு வைத்த நிலையினையும் குறிப்பிட்டுள்ள திறத்தின் வழி அறிந்துகொள்ளமுடிகிறது.

     இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு நோய்நோக்கொன்று அந்நோய் மருந்து (தி. 1091)
நோய்க்கு மருந்தாவது பிறிதொன்றே ; ஆனால் இங்கு நோய் தரும் நோக்கே மருந்தினையும் தருகிறது எனக் குறிப்பிடுகிறார் திருவள்ளுவர். உயிர் நீக்கும் குறிப்பும் உயிர் காக்கும் குறிப்பும் உடையது தலைவியின் நோக்கு என்பதனையே “இருநோக்கு” என்னும் சொல்லால் குறிப்பிட்டுள்ளதனைக் காணமுடிகிறது.இவ்விரண்டு குறளும் குறிப்பு அறியும் திறமுடையோரே தம் கடமையில் அணியாகத் திகழும் சிறப்புடையராகின்றனர் எனத் திருவள்ளுவர் தெளிவுபடுத்தியுள்ளதனை எண்ணி மகிழலாம்.பார்வையே சரியில்லை எனக் கூறும் வழக்கமும் இங்கு எண்ணத்தக்கது.பார்வையின் வழி நடத்தையை அறிய இயல்வதனையும் இங்கு எண்ணமுடிகிறது.
குறிப்பறிவோர் தெய்வமாவர்

        பிறர் உணர்வை புரிந்துகொண்டு செயலாற்றும் நல்லோரை தெய்வத்துக்கு இணையாகப் போற்றுவதனைக் காணமுடிகிறது. தாம் கூற வந்த பொருள் எவ்வகையிலேனும் தாழ்நிலையினை உண்டாக்கிவிடுமோ என எண்ணித் தயங்குவாரின் நிலையினை உணர்வானை “ஐயப்படாது அகத்தது உணர்வான்” எனக் குறிப்பிடுகிறார் திருவள்ளுவர். உள்ளத்தின் நிலையினை உண்டாக்கிய தெய்வம் மட்டுமேயன்றி உடன் நிற்கும் ஆள்வோரும் அறிவாராயின் அவர்கள் தெய்வத்தோடு ஒப்பிட்டுக் கருதப்படுவர் என்பதனை

ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத் தெய்வத்தோடு ஒப்பக் கொளல் (தி. 702)
என்னும் குறள் உணர்த்தி நிற்கின்றது.அவ்வாறே தன் உள்ளத்தின் நிலையை வெளிப்படுத்த விழையும் தலைவி சொற்களால் கூறின் பிழை ஏற்பட்டுவிடுமோ எனக் குறிப்பால் சிறு நோக்கு நோக்குகிறாள்.அந்நோக்கினை உணர்ந்துகொள்ளும் தலைவனின் இன்பம் காமத்தால் பெறும் இன்பத்தில் செம்பாதியாக இல்லாமல் மிகுந்து நிற்கிறது. இதனை

கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில் செம்பாகம் அன்று ; பெரிது (தி. 1092)
என்னும் குறள் உணர்த்தி நிற்கின்றது.“செம்பாகம்” என்னும் சொல் காமத்தால் பெறும் இன்பத்தின் அரை நிலை என்பதனை உணர்த்துகிறது.செம்பாகத்தை விட மிகுதி எனத் தலைவியின் நோக்கினை அருமையினை புலப்படுத்த விழையும் சொல்லாக அமைவதனையும் காணமுடிகிறது. களவு காலத்தில் தலைவியின் நோக்கு சிறிதாகவே அமைவதும் அந்நோக்கே பெருங்காதலை ஏற்படுத்தும் அழகினையும் “சிறு நோக்கம்” என்னும் சொல்லால் புலப்படுத்தியுள்ளதனையும் காணமுடிகிறது. தலைவியின் நோக்கு காதலின் நோக்கத்தினை நிறைவேற்றும் அழகினையும் இங்கு எண்ணி மகிழலாம்.உணர்வுகளை வரையறுத்தல் இயலாதென்பதனை உணர்த்தும் வகையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதனையும் இங்கு எண்ணவேண்டியுள்ளது.‘அளவிலா புகழ்’ ‘’ அளவிலா அன்பு’ என்பதனையும் இங்கு எடுத்துக்க்காட்டமுடிகிறது.

குறிப்புணர்வாரே விரும்பத்தக்கார்

        ஒருவரின் மனக்குறிப்பினை உணர்ந்துகொண்டு செயல்படும் அறிவுடையோரை அவையில் அமர்த்திக்கொள்ளுதல் வேண்டும் என அறிவுறுத்துகிறார் திருவள்ளுவர்.“யாது கொடுத்தும் கொளல்” என்னும் சொற்களின் வழி குறிப்பறிவோரின் சிறப்பினைத் தெளிவுறுத்துகிறார் திருவள்ளுவர். உயிரைக்கொடுத்து அந்நட்பைப் பெறுதல் வேண்டும் என இலக்கிய நோக்காகக் கூறாமல் வேறு எதையும் கொடுத்துக் கொளல் வேண்டும் என இலக்கணம் வகுத்துள்ள திறத்தையும் இங்குக் காணமுடிகிறது. எல்லோராலும் விரும்பப்படும் பொருளைக் கொடுத்துக் குறிப்பறியும் திறனுடையோரை அவையில் இடம்பெறச்செய்தால் அவர்களே நாட்டில் துன்பம் ஏற்படாதவாறு காப்பர் என்கிறார் திருவள்ளுவர். இவ்வாறு மக்கள் உணர்வை உணரும் திறத்தோடு பகைகொண்டு நல்லோர் போல் நடிப்போர் நிலையினையும் அறியும் திறத்தாரையே “குறிப்பின் குறிப்புணர்வார்” எனக் குறிப்பிடுவதாகக் கொள்ளமுடிகிறது.

குறிப்பின் குறிப்புணர் வாரை உறுப்பினுள் யாது கொடுத்தும் கொளல் (தி. 703)
என்னும் குறள் “உறுப்பினுள்” எனக்குறிப்பிடுவதன் வழி எவ்வுறுப்பாயினும் கொடுத்தல் நன்று என்னும் நுட்பத்தினையும் உணர்த்தி நிற்கின்றது.

        அகவாழ்வில் குறிப்பினால் தன் உள்ளக்கருத்தினை வெளிப்படுத்தும் தலைவி இறைஞ்சி நிற்பதனை குறிப்பினால் குறிப்பறியும் திறனோடு ஒப்பிட்டுக் காணமுடிகிறது.இத்தகைய செயல் தலைவியில் காதலை வளர்க்கும் திறத்தினை “யாப்பினுள் அட்டிய நீர்” என்னும் சொற்களால் உணர்த்தியுள்ளார் திருவள்ளுவர்.

நோக்கினாள் ; நோக்கி இறைஞ்சினாள் ; அஃதவள் யாப்பினுள் அட்டிய நீர் (தி. 1093)
என்னும் திருக்குறள் பயிர் வளர பாத்தியில் நீர் வார்த்தல் போல் காதல் வளரத் தலைவியின் நோக்கும் இறைஞ்சி நிற்கும் பண்பும் உரம் சேர்ப்பதனை உணர்த்தி நிற்கிறது.

பொறியும் புலனும்

        ஐம்பொறிகளும் ஐம்புலன்களின் திறத்தைக்கொண்டே மதிப்பிடமுடிகிறது. கண்ணிருந்தும் காட்சியறியாதிருப்பினும், செவியிருந்தும் கேளாதிருப்பினும், மூக்கிருந்தும் முகராதிருப்பினும், வாயிருந்தும் சுவையாதிருப்பினும் மெய்யிருந்தும் உற்றறியும் திறனில்லாது இருப்பினும் அப்பொறிகளால் பயனில்லை. எனவே பொறியினைக்கொண்டே புலனின் திறம் புலப்படுகிறது.குறிப்புணரும் வல்லமையுடையார் பொறிகளில் பிறரைப்போல் இருப்பினும் புலனறிவால் பிறரை விஞ்சி நிற்பர் என்பதனை “உறுப்போரனையரால் வேறு” எனக் குறிப்பிடுகிறார் தெய்வப்புலவர்.

குறித்தது கூறாமைக் கொள்வாரோடு ஏனை உறுப்போ ரனையரால் வேறு (தி. 704)
என்னும் திருக்குறளில் தான் கூற வந்தததைக் கூறாதிருப்பவரின் உள்ளக்குறிப்பை அறியும் ஆற்றலுடையவரைக்  “குறித்தது கூறாமைக் கொள்வார்” எனக் குறிப்பிடுகிறார்.

        தன் விருப்பத்தினைக் கூறாது குறிப்பால் அறிவிக்கும் திறமுடைய தலைவியின் மாண்பினை அறிந்த தலைவன் தலைவியின்  நிலையினை அறிந்து பெருமிதம் கொள்கிறான்.

யான்நோக்குங் காலை நிலன்நோக்கும்; நோக்காக்கால் தான்நோக்கி மெல்ல நகும் (தி. 1094)
என்னும் திருக்குறள் இந்நிலையினைப் படம்பிடித்துக்காட்டுகிறது.தலைவன் தன்னைக் காணவேண்டும் என்பதற்காகவே நிலத்தை நோக்குவதும் தன்னைக் காணாத போது தலைவனைக் காண்பதும் தலைவியின் அறிவுத்திறத்தைப் புலப்படுத்துகிறது.”மெல்ல நகும்” என்னும் உடன்பாட்டுச்சொல் தலைவியின் விருப்பினை உணர்த்தும் சொல்லாக நிற்பதனைக் காணமுடிகிறது.

கண்ணே ஆயுதம்

        குறிப்பறிதலில் கண்ணுக்கு இணையான உறுப்பில்லை எனத் திருவள்ளுவர் வரையறுத்துக் கூறியுள்ளதனை

குறிப்பின் குறிப்புணரா வாயின் உறுப்பினுள் என்ன பயத்தவோ கண் ? (தி. 705)
என்னும் திருக்குறளின் வழி அறிந்துகொள்ளமுடிகிறது.”என்ன பயத்தவோ” என்னும் சொற்கள் எதுவும் பயனில்லை என்னும் பொருளை உணர்த்தி நிற்கின்றது. எனவே கண்ணைக் கொண்டே கருத்தை அறிதல் வேண்டும் என்னும் நுட்பமும் இங்கு  உணர்த்தப்படுகிறது.

குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண் சிறக்கணித்தாள் போல நகும் (தி. 1095)
என்னும் திருக்குறள் தலைவியின் நாணத்தையும் காதலையும் கண்கள் வெளிப்படுத்தி நிற்கும் நிலையினை எடுத்துரைக்கிறது.தலைவன் தலைவியின் நோக்கைக் கொண்டே குறிப்பினை அறிந்துகொள்வான்.எனினும் தலைவியின் நாணமே அவளைத் தடுக்கிறது.குறிப்பினை வெளிப்படுத்தும் கடப்பாடும் இருக்கிறது.எனவே கண்களைச் சுருக்கிச் சிரித்த நிலையினை “சிறக்கணித்தால் போல நகும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.இதன்வழித் திருவள்ளுவரின் உளவியல் நுட்பத்தை வெளிப்படுத்தும் சொல்நயத்தையும் இங்குக் காணமுடிகிறது.

ஒல்லை உணரப்படும்

        பளிங்கு தனக்கென ஒரு நிறமின்றி அதனைச் சார்ந்ததன் வண்ணமாக மாறும் இயல்புடையது என்பர்.எண்ணம் - சொல் - செயல் - பழக்கம் - வழக்கம் – குணம் என்னும் படிநிலைகளே மனிதரின் ஆளுமையினை உருவாக்குகின்றன எனக்கொள்ளமுடிகிறது.முகத்தின் வழியே கொண்டே ஒருவரின் ஆளுமையினை அறிந்துகொள்ளும் நிலை இருப்பதனை தெய்வப்புலவர் திருவள்ளுவர் உணர்த்துகிறார்.இன்றும் ஆளுமையினை முகத்தின் வழி விளங்கிக்கொள்ள வேண்டும் என்னும் அடிப்படையிலேயே நேர்முகத்தேர்வு நிகழ்வதனைக் காணமுடிகிறது. அரசுக்கு உறுதுணையாகும் குறிப்பறியும் அமைச்சர்கள் அவ்வாறு தேர்வு செய்யும் நிலையினை உணர்ந்தவராக இருந்ததனையே

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம் (தி. 706)
என்னும் திருக்குறள் உணர்த்தி நிற்கின்றது.எண்ணத்தை முகம் காட்டுவதனையே “அடுத்தது காட்டும் பளிங்கு” என்னும் சொல்லாக்கத்தின் வழித் தெளிவுபடுத்தியுள்ளார் திருவள்ளுவர்.அகவாழ்விலும் அவ்வாறே முகத்தைக் கொண்டு குறிப்பறியும் தன்மையினைக் காணமுடிகிறது. தலைவியின் சொல் கடுஞ்சொல்லாயினும் உண்மைக்காதல் உண்டாயின் பகைமை இல்லாத்தன்மையினை எளிதில் அவள் முகமே வெளிப்படுத்திவிடுகிறது என்பதனை 

உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல் ஒல்லை உணரப்படும் (தி. 1096)
என்னும் திருக்குறள் உணர்த்தி நிற்கின்றது.காதல் கொண்டு வெளிப்படும் கடுஞ்சொல்லினை “செறாஅர் சொல்” எனக்குறிப்பிட்டுள்ள திறனை இங்குக் காணமுடிகிறது.முகத்தின் அழகைக் கொண்டு அகத்தின் குறிப்பினை உடனே அறியும் திறனை “ஒல்லை உணரப்படும்” என்னும் சொல்லின் வழி உணர்த்தியுள்ள திறமும் புலப்படுகிறது.

உறாஅர் போன்று உற்றார்

        அகத்தின் சிறப்பினை முகத்தின் சிறப்பே காட்டிவிடும் என்பதனை உணர்த்திய திருவள்ளுவர்
அம்முகத்தினும் குறிப்பறியும் சிறப்பு வேறு உறுப்பிற்கு இல்லை என்பதனை

முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ ? உவப்பினும் காயினும் தான்முந்துறும் (தி. 707)
என்னும் திருக்குறளின் வழி உணர்த்தியுள்ளார்.இன்பத்தையும் துன்பத்தையும் வெளிப்படுத்தும் கண்ணாடியாக முகமே முன்னின்று உரைப்பதனை “தான் முந்துறும்” என்னும் சொற்களால் உணர்த்தியுள்ளதனைக் காணமுடிகிறது. காதலிலும் மாற்றத்தை உற்றார் அறிந்துகொள்ளும் நிலையினை

செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும் உறாஅர் போன்றுஉற்றார் குறிப்பு (தி. 1097)
என்னும் திருக்குறளின் வழி உணர்த்துகிறார் திருவள்ளுவர். சிறுமையான சொற்களைப் பேசுதலும் பகைவர் போல் நோக்குதலும், நடந்துகொள்ளுதலும் அன்பினைக் குறிப்பால் உணர்த்துவதற்காகச் செய்யும் தலைவியின் செயலே என்பதனை “உறாஅர் போன்று உற்றார்” என்னும் சொல்லின் வழி உணர்த்திக்காட்டியுள்ளார் திருவள்ளுவர்.

முகமே அகமாகும்

        குறிப்பறியும் திறனுடையார் முகத்தின் வழியே அகத்தினை அறிந்துகொள்வர். அவர்களுக்கு சொல்லோ செயலோ தேவையில்லை என்பதனை

முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி உற்றது உணர்வார்ப் பெறின் (தி. 708)
என்னும் திருக்குறளின் வழி எடுத்துரைக்கிறார் திருவள்ளுவர். அவ்வாறே காதலியின் முகத்தில் உண்டாகும் புன்னகை அவள் அழகினை வெளிப்படுத்துவதோடு அன்பையும் குறிப்பால் உணர்த்தும் என்பதனை

அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப் பசையினள் பைய நகும் (தி. 1098)
என்னும் திருக்குறள் எடுத்துரைக்கிறது. தலைவியின் மென்மையான புன்னகையே அவளின் அழகினையும் காதலுக்குரிய உள்ளக்குறிப்பினையும் தலைவனுக்கு எடுத்துரைக்கும் என்பதனை “பசையினள் பைய நகும்” என்னும் சொற்களின் வழி உணர்த்தியுள்ளதனைக் காணமுடிகிறது.

பகைமையும் கேண்மையும்

        அகம் புறம் என்னும் இரு வாழ்விலும் பகையும் நட்பும் இயல்பானதாகவே அமைகிறது. குறிப்பறியும் திறனுடையார் கண்களையே அளவிடும் கருவியாகக் கொண்டு அளவிட்டு விடுவதனை

பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின் வகைமை உணர்வார்ப் பெறின்(தி. 709)
என்னும் திருக்குறளின் வழி உணர்த்துகிறார் திருவள்ளுவர்.கண்களைப் பார்த்துப்பேசும் மனிதர்களையே நேர்மையானவர்களாகக் குறிப்பிடும் வழக்கமும் இங்கு எண்ணத்தக்கது. அவ்வாறே காதலிப்போரும் கண்ணைப் பாராது அயலவர் போல கண்டுகொள்ளாது நடக்கும் தன்மையினை

ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் காதலார் கண்ணே உள (தி. 1099)
என்னும் திருக்குறள் எடுத்துரைக்கிறது. தம் காதலை உற்றார் ,பகைவர் என்னும் வேறுபாடின்றி அனைவரிடமும் மறைப்பதே காதலரின் தன்மையாகிறது. அவ்வாறு காதலிப்போர் பிறர் முன் தம் காதலரை அறியாதார் போல் கண்டுகொள்ளாது நிற்கும் நிலையினை இக்குறள்  “ஏதிலார் போலப் பொது நோக்கு” என்னும் சொற்றொடரால் உணர்த்தியுள்ளதனைக் காணமுடிகிறது.

சொற்களால் பயனில்லை

        கண்ணைப் பார்த்துப் பேசும் வழக்கமே உயர்ந்தது என்னும் வழக்கம் உலகளவில் பின்பற்றப்படும் அறநெறியாக விளங்குகிறது. திருவள்ளுவர் இக் கண்களையே குறிப்பறியும் அளவுகோலாகக் காட்டும் நிலையினை

நுண்ணியம் என்பர் அளக்கும்கோல் காணுங்கால் கண்ணல்லது இல்லை பிற (தி. 710)
என்னும் திருக்குறள் எடுத்துக்காட்டுகிறது.குறிப்பினைக் கண்களால் அறியும் திறமுடையாரை “நுண்ணியம் என்பார்” என்னும் சொல்லால் குறிப்பிட்டுள்ளதனைக் காணமுடிகிறது. அவ்வாறே காதலுக்கும் கண்ணே சிறந்த உறுப்பாக நின்று உள்ளக்கருத்தினை அறிந்துகொள்ளத் துணைசெய்கிறது என்பதனை

கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல (தி. 1100)
என்னும் திருக்குறள் உணர்த்துகிறது. சொற்கள் கூறாததையும் கண்கள் கூறிவிடும் நுட்பத்தினை ”கண்ணொடு கண்ணினை நோக்கு” என்னும் சொல்லாட்சி உணர்த்தி நிற்பதனைக் காணமுடிகிறது.

தமிழர் மறை

        குறிப்பறிதல் என்னும் ஒரு நிலையிலேயே திருவள்ளுவரின் நுண்மாண்நுழைபுலத்தினை அறிந்துகொள்ளமுடிகிறது.இக் குறிப்பறியும் திறன் எந்நாட்டவர்க்கும் எம்மனிதர்க்கும் உரிய பொது வழக்காகவே நிலவுவதனையும் உணர்ந்துகொள்ளமுடிகிறது.எனவே, உலகத்திலேயே எத்தகைய வேறுபாடுமின்றி எக்காலத்தவர்க்கும் வழிகாட்டும் பெருமையுடைய ஒரே நூலாகத் திருக்குறள் திகழ்வதனைக் காணமுடிகிறது.இன்று உலகமே திருக்குறளைத் தலைமேல்வைத்துக் கொண்டாடுவதன் வழி இதனை உணர்ந்துகொள்ளமுடிகிறது.அறிவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாடுகளெல்லாம் இந்நூலினை மொழிபெயர்த்துக் கற்பிப்பதன் வழி இந்நூலின் பெருமையினை அறிந்துகொள்ளமுடிகிறது. தெய்வப்புலவர் அருளிய இத்திருக்குறள் ஒவ்வொரு பொருளுக்கும் ஏழே சீரில் இலக்கணம் வகுத்த பெருமைக்குரிய நூலாகத் திகழ்வதாலேயே இந்நூல் ‘உலகப் பொதுமறை’  எனப் போற்றப்படுவதனைக் காணமுடிகிறது. உலகத்திற்கே பொதுமறையாக விளங்கும் பெருமையுடைய இந்நூலினை ‘தமிழர் மறை’யாக ஏற்றிப் போற்றுதல் தமிழர் கடன் எனத் தெளியமுடிகிறது.

நிறைவாக

கண்டாரால் விரும்பப்படும் தன்மை எனக் குறிப்பிடப்பெறும் ’திரு’ என்னும் அடைமொழியைக் கொண்டே தெய்வப்புலவர் அருளிய குறள் ’திருக்குறள்’ என்னும் சிறப்புடன் விளங்குவதனை உணர்ந்துகொள்ளமுடிகிறது. தமிழ் இலக்கிய வரலாற்றின் இருண்ட காலத்தில் தோன்றிய அற விளக்கான திருக்குறள் எக்காலத்தவர்க்கும் ஒளியினை ஊட்ட வல்லதாக விளங்குவதனையும் உணர்ந்துகொள்ளமுடிகிறது.

அற வாழ்விற்கான சூத்திரங்களாக அமையும் திருக்குறளில் சொல்லாய்வு என்பது திருக்குறளின் சொல்வளத்தைக் காணும் முயற்சியாகவே அமைகிறது.இம் முயற்சிக்கும் பயிற்சிக்கும் வழிகாட்டும் சிறப்புடைய நூலாகத் திருக்குறள் திகழ்கிறது எனத் தெளியமுடிகிறது.

திருக்குறளில் சொல்லாய்வு என்பது தெய்வப்புலவரின் உள்ளத்திறனை அறிந்துகொள்ளும் முயற்சியாகாது ; ஏனெனில் அறிதலும் இயலாது என்னும் வாய்மையையும் உணர்ந்துகொள்ளமுடிகிறது.

’குறிப்பறிதல்’ என்னும் தலைப்பு இரு வேறு அதிகாரங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.இந்நுட்பமே இந்நூலின் பெருமைக்குச் சான்றாவதையும் உணரமுடிகிறது.இவ்வழியில் திருக்குறளை மேன்மேலும் ஆய்ந்தால் சொல்வளத்தையும் பொருள்வளத்தையும் கையாண்ட திறம் புலப்படும் என உணரமுடிகிறது.

அரசாட்சி செய்யும் அரசனுக்கு மட்டுமின்றி காதல் வழி நிற்கும் காதலர்க்கும் குறிப்பறியும் திறனாலேயே சிறப்பும் வெற்றியும் உண்டாகும் என்பது புலப்படுத்தப்படுகிறது.

குறிப்பறிதலுக்கு முகமும் ; முகத்தில் கண்ணும் அளவீட்டுக் கருவியாக நிற்பதனை உணர்த்துகிறார் திருவள்ளுவர். எனவே அக்கருவிகளால் மனிதர்களை அளந்து விழிப்புடன் வாழ வழிகாட்டியுள்ளதனையும் உணர்ந்துகொள்ளமுடிகிறது.

குறிப்பறியும் திறனுடையாரின் இயல்பினையும் குறிப்பறியும் திறனுக்குரிய நுட்பத்தினையும் திருவள்ளுவர் பல்வேறு சூழல்களில் விளக்கியுள்ள திறத்தின் வழி சொல்லாட்சித் திறன் புலப்படுகிறது.

        காலத்திற்கேற்ப வெவ்வேறு பொருள் கொடுக்கும் வல்லமை கொண்ட சொற்களால் புனையப்பட்ட நூலாகத் திருக்குறள் விளங்குவதனை ’குறிப்பறிதல்’ என்னும் அதிகாரங்கள் மெய்ப்பித்துள்ளதனை அறிந்துகொள்ளமுடிகிறது. 

திருக்குறளின் அருமையினை ஆய்வதன் வழி இக்காலத்து மாணாக்கர் தமிழ்மொழியிடமிருந்து விலகி நிற்கும் போக்கும் பிறமொழியை அரவணைத்துக்கொள்ளும் மாயையும் விலகும் எனத் தெளியமுடிகிறது. இதன் வழி தமிழர்கள் தமிழுணர்வுடையோராவர் எனவும் உணர்ந்துகொள்ளமுடிகிறது.
***********

மொழிக்கு அரணாகும் வேற்றுமைக் கோட்பாடுகள் - Language Castle


மொழிக்கு அரணாகும் வேற்றுமைக் கோட்பாடுகள்
(முனைவர் ம.ஏ.கிருட்டினகுமார்

      ”யாப்பு மொழியின் காப்பு” என்பர் சான்றோர்.அவ்வழி மொழிப் பயிரைக் காக்கும் வேலியாக நிற்பது இலக்கணமே எனத் தெளியமுடிகிறது.மொழியின் இயல்பையும் பெருமையினையும் உணர்த்தி நிற்கும் இலக்கணக்கூறுகள் பல.இலக்கணக் கூறுகளைக் கொண்டே மொழியின் பழமையினையும் வளமையினையும் அறிந்துகொள்ளமுடிகிறது.அவ்வகையில் தொல்காப்பியத்தின் வேற்றுமைக் கோட்பாடுகளின் இன்றியமையாமையினை அறிய விழைந்ததன் விளைவாகவே இக்கட்டுரை அமைகிறது.

வேற்றுமை இலக்கணம்

வேற்றுமை என்னும் சொல்லின் பொருள் இலக்கணத்தில் மட்டுமே இனிக்கக் கூடியதாக அமைகிறது. ஒரு பெயருக்கும் அடுத்து வரும் சொல்லுக்கும் இடையே பொருள் வேறுபடும் தன்மையை வேறுபடுத்திக் காட்டும் பண்பினைக் கொண்டதாலேயே வேற்றுமை எனக் குறிப்பிடப்படுகிறது. “எல்லா சொல்லும் பொருள் குறித்தனவே” என்னும் எழிலினையும் இங்கு எண்ணி மகிழலாம்.சொல்லின் ஆக்கத்திற்கு எழுத்துக்களின் சேர்க்கை துணைபுரிவது போலவே தொடரின் ஆக்கத்திற்கு வேற்றுமை உருபுகள் துணையாகின்றன.எனவே இலக்கண முன்னோடியான தொல்காப்பியர் சொல்லதிகாரத்தில் கிளவியாக்கத்திற்குப் பின் வேற்றுமையியலைக் கட்டமைத்துள்ளதனைக் காணமுடிகிறது.

இதன் இதன் இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதன் அவன் விடல்

என்னும் தொடர் எவ்வகையிலும் பொருளுடையதாகக் கொள்ளுதற்கு இயலவில்லை.ஏனெனில் வேற்றுமை உருபுகள் இங்கு இடம்பெறாதாதே காரணம் எனத் தெளியலாம். இத்திருக்குறளை

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்

எனச் சீராக எழுதிப் பயிலும் போது அத்திருக்குறளின் சொல்லழகும் பொருளழகும் விஞ்சி நிற்பதனைக் காணமுடிகிறது. இங்கு இரண்டாம் வேற்றுமையும், மூன்றாம் வேற்றுமையும், ஏழாம் வேற்றுமையும் பெயருடன் கூடுங் காலத்து அப்பெயருக்கு பின் நின்று பொருளுணர்த்தியுள்ளதனைக் காணமுடிகிறது.

வேற்றுமை வழிய பெயர்புணர் நிலையே (தொல்காப்பியம் : 116)
என்னும் நூற்பா வேற்றுமை உருபுகள் அமையும் நிலையினைத் தெளிவுபடுத்துகிறது.


ஒட்டுக்களே உருபுகள்

        பெயர்ச்சொல்லுக்கும் வினைச்சொல்லுக்கும் இடையே பொதிந்துள்ள பொருளினைத் தெளிவுபடுத்தும் வகையில் பெயர்ச்சொல்லோடு பின் ஒட்டுக்கள் அமையும்.அவ்வாறு அமையும் ஒட்டுக்களையே உருபுகள் என இலக்கணவியலார் குறிப்பிடுவதனைக் காணமுடிகிறது. அவ்வேற்றுமைகளை

வேற்றுமை தாமே ஏழென மொழிப (தொல்காப்பியம் : 546)
விளிகொள் வதன்கண் விளியொடு எட்டே (தொல்காப்பியம் : 547)
அவை தாம் /பெயர் ஐ ஒடு கு /இன்அது கண்விளி என்னும் ஈற்ற(தொல்காப்பியம் : 548)

என வரையறுக்கிறார் தொல்காப்பியர்.

எ.கா.கந்தன், கந்தன் + ஐ, கந்தன் + ஒடு, கந்தன் + கு, கந்தன் + இன், கந்தன் + அது, கந்தன்+ கண், கந்தனே.

எழுவாய் வேற்றுமை

எவ்வகையிலும் மாறுதல் இன்றி நிற்கும் பெயரே எழுவாய் என்னும் முதல் வேற்றுமையாக அமைகிறது.ஒரு தொடர் எழுவதற்கு வாயிலாக அமையும் பெயரே எழுவாய் எனக் குறிப்பிடப்படுகிறது.  உருபின்றி பெயர் மட்டுமே நிற்கும் வேற்றுமை எழுவாய் என்பதனை

அவற்றுள் ./ எழுவாய் வேற்றுமை பெயர் தோன்று நிலையே (தொல்காப்பியம் : 549)
என்னும் நூற்பாவின் வழி தெளிவுறுத்துகிறார் தொல்காப்பியர்.
”கந்தன் இலக்கணம் படித்தான்”. என்னும் சொற்றொடர் கந்தனின்றி செயபடுபொருளும் காரியமும் (படித்தான் என்னும் பயன் நிலை பெறும் இடமான பயனிலையும்) தொடர இயலாது என்பதனை இங்கு  உணர்த்தி நிற்கின்றது. எழுவாய் இன்றி தொடர் எழுதல் இல்லை எனத் தெளியமுடிகிறது.ஒரு தொடர் முழுமை பெற எழுவாய் அமைதல் வேண்டும் என வரையறுத்துள்ளதனையும் இதன்வழி அறிந்துகொள்ளமுடிகிறது.

தோன்றா எழுவாய்

        எழுத்து வழக்கில் மட்டுமின்றி பேச்சு வழக்கிலும் இயல்பாகவே தோன்றா எழுவாய் இன்றியே பயன்படுத்தும் போக்கு நிலவி வருவதனைக்காணமுடிகிறது. “கந்தன் கல்லூரிக்குச் சென்றானா ?என்னும் வினாவிற்குச் “சென்றான்” என்னும் விடையே நிறைவானதாக அமைந்துவிடுகிறது. இங்கு  எழுவாய் தோன்றாவிடினும் பொருளை உணர்த்தி விடுகிறது. இவ்வாறு உணர்வதற்கும் யார் ? எங்கு ?என்னும் வினாக்கள் ஒளிந்து நிற்பதனையும் அதற்கு வேற்றுமை உருபுகளே விடையாகத் தொக்கி விளக்குவதனையும் காணமுடிகிறது.


செயப்படு பொருள் வேற்றுமை – ஐ

ஐ என்னும் ஒரெழுத்தொரு மொழி தலைவனைக் குறித்து நிற்பது போல் வேற்றுமையிலும் சிறப்பிடத்தைப் பெற்று நிற்கிறது.செயப்படும் பொருளை உணர்த்தி நிற்கும் வேற்றுமையாதலால் செயப்படுபொருள் வேற்றுமை எனக் குறிப்பிடப்படுவதனையும் அறிந்துகொள்ள முடிகிறது.

இரண்டாகுவதே , ஐ எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி / எவ்வழி வரினும் வினையே வினைக்குறிப்பு / அவ்விரு முதலின் தோன்றும் அதுவே (தொல்காப்பியம் : 555)
என்னும் நூற்பா வினை மற்றும் வினைக்குறிப்பு என்னும் நிலைக்களத்தில் தோன்றுவதனைத் தெளிவுறுத்துகிறது.

        ”கந்தன் இலக்கணத்தைப் படித்தான்” என்னும் தொடரில் செயபடுபொருள் வேற்றுமையான ஐ செய்யப்படும் பொருளான வினையை உணர்த்தி நிற்பதனைக் காணமுடிகிறது.

உடனிகழ்வு - கருவி வேற்றுமை – ஒடு

        உடன் நிகழும் நிகழ்வுக்குரிய வேற்றுமையாக ‘ஒடு’ வேற்றுமை அமைவதனால் இப்பெயர் பெற்றுள்ளதனைக் காணமுடிகிறது.கந்தனொடு வந்தான் என்னும் சொற்றொடொருக்கு உரிய வேற்றுமையின் தெளிவினை இங்கு உணர்த்தியுள்ளார் தொல்காப்பியர்.ஒரு சொற்றொடரில் செய்யப்படும் தொழிலில் பயன்படுத்தப்படும் கருவியினை உணர்த்தும் வேற்றுமையாதலால் கருவி வேற்றுமை எனவும் ‘ஒடு’ குறிப்பிடப்படுகிறது.

மூன்றாகுவதே / ஒடுவெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி / வினைமுதல் கருவி அனைமுதற்று அதுவே (தொல்காப்பியம் : 557)

என்னும் நூற்பா இதனை வரையறுக்கிறது. வினை முதலையும்  கருவியையும் அடிப்படையாகக் கொண்டு இவ் வேற்றுமை அமைகிறது.

”கந்தன் வேலொடு போர் செய்தான்” என்னும் சொற்றொடர் ’ஒடு’ என்னும் வேற்றுமையின் நிலைக்களனை உணர்த்தி நிற்பதனைக் காணமுடிகிறது.ஒடு என்னும் வேற்றுமையின் செல்வாக்கு இன்றைய பயன்பாட்டில் மறைந்து ஆல் என்னும் உருபே பயன்பாட்டில் நிற்பதனையும் காணமுடிகிறது.‘கந்தன் வேலால் போர் செய்தான்’ எனக் குறிப்பிடுவதன் வழி இக்கால வழக்காக ’ஒடு’ என்னும் வேற்றுமை ‘ஆல்’ என மாற்றம் பெற்றுள்ளதனையும் அறிந்துகொள்ளமுடிகிறது.

கொடை - குறி வேற்றுமை – கு

        கொடைப்பொருளுக்கு உரிய வேற்றுமையாகக் ‘கு’ அமைவதனால் கொடை வேற்றுமை எனப்படுகிறது.ஒன்றற்கு பயன்படுமாறு அமைவதனால் இவ்வேற்றுமை கொடைப்பொருளாவதனையும் இங்கு எண்ணத்தக்கது.அவ்வகையில் மட்டுமின்றி சொற்றொடர்க்குரிய குறிக்கோளினை உணர்த்தி நிற்கும் வேற்றுமையாவதனாலும் குறி வேற்றுமை எனவும் குறிப்பிடப்படுகிறது. “கு” என்னும்  வேற்றுமை உருபு பெயரினைச் சுட்டுதலையே நோக்கமாகக் கொண்டு ஏற்றுக் கோடல் பொருளில் அமைகிறது.

நான்காகுவதே / கு எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி / எப்பொரு ளாயினும் / கொள்ளும் / அதுவே (தொல்காப்பியம் : 559)

”புகழுக்குப் படித்தான்” என்னும் சொற்றொடர் புகழினைப் பெறும்  வினையுடைமையை உணர்த்தி நிற்பதனைக் காணமுடிகிறது.

ஐந்தாம் வேற்றுமை – இன்

ஒப்புமைப் பொருளை உணர்த்தியும் ஒப்புமைப் பொருளால் வேறுபடுத்தியும்  நிற்கும் வேற்றுமை உருபாகின்றது.

ஐந்தாகுவதே /இன் எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி /இதனின் இற்றுஇது என்னும் அதுவே                                                                     (தொல்காப்பியம் : 561)
என்னும் நூற்பா இதனைப் போன்றது, இதனினும் சிறந்தது, இதனை நீங்கியது என ஒப்புமைப் படுத்தி வேறுபடுத்திக்காட்டும் சிறப்பினை உணர்த்தி நிற்கின்றது.

உடைமை வேற்றுமை – அது

அன்புடைமை, அறிவுடைமை, அருளுடைமை என்னும் உடைமைகள் மனிதர்க்கு வேண்டிய அடிப்படையான உடைமைகள்.என்பதனாலேயே உடைமை எனத் திருவள்ளுவர் சுட்டியுள்ளதனைக் காணமுடிகிறது.அவ்வாறு அமையும் உடைமைகளை உணர்த்தி நிற்கும் வேற்றுமைச் சொல்லாகவே ‘அது’ என்னும் உருபு நிற்கின்றது.

ஆறாகுவதே / அது எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி / தன்னினும் பிறிதினும் இதனது இது எனும் / அன்ன கிளவிக் கிழமைத் ததுவே (தொல்காப்பியம் : 563)

தன்னுடன் ஒட்டிய உடைமையை உணர்த்தி நிற்பதனை தற்கிழமை என்றும் (முகத்தது பொலிவு) தன்னிடமிருந்து பிரிந்து நிற்கும் உடைமையை உணர்த்தி நிற்பதனை பிறிதின் கிழமை (செவியது தோடு) என்றும் குறிப்பிடுவர்.

இட வேற்றுமை – கண்

        செயல் நடைபெறும் இடத்தினை உணர்த்தி நிற்கும் வேற்றுமையினை இட வேற்றுமை எனக் குறிப்பிடுவர்.‘மலைக் கண் அருவி” என்னும் சொற்றொடரில் இடத்தை உணர்த்தி நிற்பதனைக் காணமுடிகிறது.

ஏழா குவதே / கண் எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி /வினைசெய்  இடத்தின்  நிலத்தின்  காலத்தின் / அனைவகைக் குறிப்பின் தோன்றும் அதுவே         (தொல்காப்பியம் : 565)

என வரையறுக்கிறார் தொல்காப்பியர். வினை நிகழும் பின்னணியினையும்  நிலத்தையும்  காலத்தையும் குறிப்பாக வெளிப்படுத்தும் தன்மையினை உணர்த்தி நிற்கும் எனத் தெளிவுறுத்துகிறார் தொல்காப்பியர்.

விளி வேற்றுமை

தனி உருபின்றி விளியை ஏற்கும் பெயரிலேயே தெளிவாகத் தோன்றும் வேற்றுமையே விளி வேற்றுமை என்பதனை

விளியெனப் படுப கொள்ளும் பெயரொடு / தெளியத் தோன்றும் இயற்கைய என்ப
(தொல்காப்பியம் : 603)
என்னும் நூற்பாவின் வழித் தெளிவுறுத்துகிறார் தொல்காப்பியர். ஈறு திரிதல்
(கந்தனே),  ஈற்றயல் நீடல் (கந்தா), கெடுதல் (கந்த) , இயல்பாதல் (கந்தன்) என விளி உருபுகள் அமையும் முறையையும் தெளிவுறுத்துகிறார் தொல்காப்பியர்.

உருபும் பயனும் உடன் தொக்கத்தொகை

        வேற்றுமைப் பொருளை விரித்துக் கூறும் பொழுது உருபுகளின் தன்மைக்கேற்ப பெயர்ச்சொல்லின் ஈற்றில் தொகையாக நிற்கும் சொற்கள் பலவாறு பிரிந்து பொருள் தரும் என்கிறார் தொல்காப்பியர்.
வேற்றுமைப் பொருளை விரிக்குங் காலை / ஈற்றுநின்று இயலும் தொகைவயின் பிரிந்து / பல்ஆ றாகப் பொருள்புணர்ந்து இசைக்கும் / எல்லாச் சொல்லும் உரிய என்ப (தொல்காப்பியம் : 567)
என்னும் நூற்பா உருபுகள் மட்டுமின்றி சொற்களும் பொருளுடன் புணர்ந்து வரும் எனத் தெளிவுறுத்துகிறார் தொல்காப்பியர்.தயிருக்கு உரிய குடம், என உருபும் பயனும் உடன் தொக்கி வருவதனைக் காணமுடிகிறது.இதனையே உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை என இலக்கணவியலார் பின்னாளில் குறிப்பிட்டுள்ளதனையும் காணமுடிகிறது.

வேற்றுமைப் பொருட்பாகுபாடுகள்

        வேற்றுமை உருபுகள் இவையென்றும் அவற்றிற்குரிய பொருள் இவை என்றும் வரையறுத்த தொல்காப்பியர் அவற்றை உரிய வகையில் பயன்படுத்தும் வகையில் பொருட்பாகுபாடுகளையும் வரையறுத்துள்ளதனைக் காணமுடிகிறது.

இரண்டாம் வேற்றுமை – ஐ – காப்பு முதலாக 28 பொருளும் அன்ன பிறவும்
மூன்றாம் வேற்றுமை – ஒடு – அதனின் இயறல் முதலாக 11 பொருளும் அன்ன பிறவும்
நான்காம் வேற்றுமை – கு – வினையுடைமை முதலாக 10 பொருளும் அன்னபிறவும்
ஐந்தாம் வேற்றுமை – இன் – வண்ணம் முதலாக 17 பொருளும் அன்ன பிறவும்
ஆறாம் வேற்றுமை – கண் – கண் முதலாக 19 பொருளும் அன்ன பிறவும்

என வரையறுத்துள்ள சிறப்பு தமிழ் இலக்கணத்தின் சீரான இயல்பினை எடுத்துக்காட்டுவதாக அமைகிறது.இதன்வழி தொடர்களை அமைக்கும் முறையையும் பொருள்களை உணர்த்தும் முறையையும் தொல்காப்பியர் சுட்டிக்காட்டப்பட்டுள்ள திறம் மொழிக்கு அரணாகும் எனத் தெளியமுடிகிறது.

நிறைவாக

        தொல்காப்பியரின் வேற்றுமையியலின் வழி எச்சொற்கள் எவ்வாறு எவ்வுருபுகளுடன் எப்பொருளில் புணரும் என இலக்கணம் வகுத்த நிலையின் வழி வேற்றுமைகள் மொழிக்கு அரணாவதனை உணர்ந்துகொள்ளமுடிகிறது.

        எழுவாய் செயபடுபொருள் பயனிலை எனத் சொற்றொடரமைப்பு முறையாக அமைவதைப் போன்றே அவற்றிற்கு உரிய உருபுகளின் வழி மேலும் தொடரின் பொருளைத் தெளிவுறுத்த முடிவதனைக் காணமுடிகிறது. தொல்காப்பியர் வரையறுத்துள்ள படி முறையாக உருபுகளைக் கையாளும் சிறப்பினைப் பொருத்தே மொழியின் இயல்பும்  கட்டமைப்பும் சீராக அமையும் எனத் தெளியமுடிகிறது.

        தொல்காப்பியர் முன்னோர்  வழி நின்று இலக்கணம் அமைத்ததோடு நில்லாமல் பின்னோர் இலக்கண வரையறை செய்யவும் வழிவகுத்துள்ளார். ஒவ்வொரு வேற்றுமைக்கும் உரிய வகையில் பிற பொருட்பாகுபாடுகளையும் ஏற்றுக்கொள்ள வழிவகை செய்து ’அன்ன பிறவும்’ எனக் கூறியுள்ளதனைக் காணமுடிகிறது.காலத்திற்கேற்ப மொழி மாற்றம் தேவைப்படும் என்பதனை நன்குணர்ந்தவர் தொல்காப்பியர் என இதன்வழி அறிந்துகொள்ள முடிகிறது.

வேற்றுமையின்றி தொடருக்குரிய பொருள் முழுமை பெறாது என்பதனால் முறையாக ஒவ்வொரு வேற்றுமையினையும் அதற்குரிய பொருளினையும் பொருட்பாகுபாடுகளையும் உணர்த்தியுள்ளதன் வழி மொழியினைக் கையாளும் முறையினைத் தொல்காப்பியர் தெளிவுபடுத்தியுள்ளதனைக் காணமுடிகிறது.

        இலக்கணமின்றி மொழியினைக் காத்தல் இயலாது என்பதனை உணர்ந்தே தொல்காப்பியர் தொல்காப்பியத்தைப் படைத்துள்ளார் என்பதற்குச் சான்றாக வேற்றுமைக்கோட்பாடுகள் அமைந்துள்ளது எனத் தெளியமுடிகிறது.
***********