தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

திங்கள், 21 செப்டம்பர், 2020

மகாகவி பாரதியாரின் தேசப்பற்று - Great Poet Barathiar's Patriotism

 

பாரதி காட்டும் தேசப்பற்று

     எத்தனை முறை பேசினாலும் அத்தனை முறை இனிக்கும் பாடல்கள் மகாகவியின் பாடல்கள். அத்தகைய முண்டாசுக் கவிஞன் விண்ணுலகத்தை ஆட்கொண்டு (99) தொண்ணூற்றொன்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்றும் அந்தசக்தி தாசன்பேசப்படுகிறார் எனில் அதற்குக் காரணம்கவிதை உணர்வல்லவிடுதலை உணர்வு. ஒரு சமூகத்தின் உள்ளக்குமுறலைக் கண்டு உள்ளம் கொதித்து எழுதுகோலில் மையினை ஊற்றாமல் இரத்தத்தை ஊற்றிப் பாடல் பாடினான். வழி தேடினான் ; முடியாமல் வாடினான். காந்தக் கவிஞனின் எழுத்துக்கள் கந்தகமாய் மாறின. மெல்லினம் கூட வல்லினமாய் மாறின. வல்லின எழுத்துக்கள் ஆயுத எழுத்துக்களாயின. அதனால்தான் வெள்ளை அரசாங்கம் இவனுடைய எழுத்துக்களை ஆயுதங்களாய் எண்ணின ;  கைது செய்ய நரி போல் வலை பிண்ணின..

     காற்றைக் கைது செய்ய முடியாமல் மாற்று வழி தேடின.  எட்டப்பர்களையும் யூதாஸ்களையும் விலை கொடுத்து வாங்கிய வெள்ளை அரசாங்கத்தின் ஆசை வார்த்தைகளை நம்பி மோசம் போனவர்கள் எத்தனையோ பேர் இவரைக் காட்டிக்கொடுக்கமுன்வந்தனர். நல்லவர்களுக்குத் துணை நிற்பதற்கு அஞ்சி வெள்ளையர்களுக்குத் துணை நின்றனர் சிலர். அஞ்சியவர்கள் ஆங்கிலேயர்களுடன் கைகோத்து தலை நிமிர்ந்தனர். விலை போகும் அவர்களை எண்ணி  மகாகவி வாடினார் ; பின்பு பாடினார்.

நெஞ்சு  பொறுக்குதில்லையே !  இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால் அஞ்சி அஞ்சி சாவார். இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலேஎன்றார். தம்மை அறியாமலே தீமைக்குத் துணைநின்ற அவர்களைத் திருத்த முயன்றார்.

இந்தியர்களைப் பிரித்தாளும் நரியின் சூழ்ச்சியினை அறிந்தான்; வெள்ளையன் ; நம் நாட்டைக் கொள்ளையடித்த கொள்ளையன். நம் நாட்டு வீர்ர்களை விலைகொடுத்து வாங்கினான். போதையால் ; தீய பாதையால்.  இந்தியர்கள் எப்படி ஏமாந்தனர் என்பதற்கு ஒரு சிறிய கதை. முயல் கிடைக்கும் என எண்ணிய நரி ஒரு குகையுள் சென்றது. அங்கு சென்றபிறகுதான் அது முயல் வாழும் இடமல்ல புலியின் குகை என்று அறிந்தது. ஒரு புலியிடம் சிக்கிக்கொண்டோமே? என்ன செய்வது எனத் தயங்கியது. உடனே தந்திரம் செய்தது. புலியிடம், என்னுடைய பலம் உனக்குத் தெரியுமா? எனக் கேட்டது. நம்முடைய குகைக்குள் நரி ஏன் வந்திருக்கிறது ? என எண்ணிய புலியின் எண்ணத்தைக் கணித்தது. என்னைக் கண்டால் இந்தக்காட்டில் எல்லோரும் நடுங்குவார்கள் என்றது நரி. புலி அப்படியா? என்றது. ‘நம்பவில்லை என்றால் என் பின்னால் வாஎனக் கூறியது நரி. நரி முன்னால் நடக்க பின்னால் புலி பின் தொடர்ந்தது. காட்டில் உள்ள விலங்குகள் மான்,முயல், காட்டெருமை என அனைத்தும் அஞ்சி ஓடின. தன்னைக்கண்டுதான் பிற விலங்குகள் ஓடுகின்றன என்பதனைப் புலி அறியவில்லை. நரியின் தந்திரம் புரியவில்லை. அதுபோலத்தான் குறுநிலமன்னர்களின் ஆளுமையை, இந்திய ஆட்சியாளர்களின் திறத்தை வெள்ளையர்கள் ஏமாற்றித் தமதாக்கிக்கொண்டனர்.

அப்படி ஏமாறாத புலிகள்தான் உயிருக்கு அஞ்சாத தியாகிகள், தன் உயிரைக்காட்டிலும் நாடு பெரிதென எண்ணிய நல்லோர்கள். அடிவாங்கிக்கொண்டு தலையில் இரத்தம் வடிந்தாலும் தலைமுறை வாழவேண்டும் என எண்ணினர். உப்பு காய்ச்சும் போராட்டத்தில் விடுதலை வீர்ர்கள் ஒன்றுகூடிப் போராடினர் போராட்டம் என்பது அமைதியான முறையில் சகிப்புத்தன்மையுடன் எதனையும் பொறுத்துக்கொள்வது.  

அப்படிப்பட்ட வீரர்களால் விடுதலைப் பயிர் செழித்தது. ‘தண்ணீர் விட்டா வளர்த்தோம்சர்வேசா  இப்பயிரை கண்ணீரால் காத்தோம் . கருகத் திருவுளமோ.’ எனப் பாடினார். உப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் அமைதியான முறையில் போராடிய விடுதலை வீரர்களைக் குதிரையில் வந்த ஆங்கில அரசின் வீரர்கள் (தமிழர்கள்தான் ஆங்கில அரசின் காவலர்களாக) தடியுடன் தாக்க வருகிறார்கள். வேகமாக அவர்கள் வருவதைப் பார்த்தவுடன் சிதறிஓடாது எதிர்கொண்டனர். எல்லோரும் படுத்துக்கொள்ளுங்கள் என்றார் ஒருவர். குதிரைகள் மனிதர்களை மிதிப்பதில்லை என்றார். அவ்வாறே குதிரைகள் ஓடிவந்து நின்றுவிட்டன. ஆங்கில அதிகாரி தனது வீரர்களுடன் திரும்பிச்சென்றார். குதிரைகளுக்கு இருக்கும் மனிதாபிமானம் கூட இல்லாமல் ஆங்கிலேயன் இந்தியரைச் சித்திரவதை செய்தான். எத்தனையோ உயிர்கள் பறிபோயின.

ஆங்கிலேயருக்கு அஞ்சி வாழ்வதும் கெஞ்சி வாழ்வதும் வீரர்களால் இயலாது. எனவே பராசக்தியிடம் கேட்கிறார். “தசையினைத் தீச்சுடினும் சிவசக்தியைப் பாடும் நல் அகங்கேட்டேன். நசையறு மனங்கேட்டேன். நித்தம் நவமென சுடர்தரும் உயிர்கேட்டேன். அசைவறு மதி கேட்டேன். இவை அருள்வதில் உனக்கெதும் தடையுளதோஎன வேண்டுகிறார்.

      ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வுஎன்றார். யார் ஆங்கில அரசுக்குப் பணிந்தார்களோ அவர்களுக்குப் பதவிகள் கிடைத்தன. அந்த அடிமை வாழ்வின் சுகத்தை விரும்பி பலரும் தங்களை அடிமைகளாக மாற்றிக்கொண்டனர். அவர்களியக் கண்டு

என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்

என்று மடியும் எங்கள் அடிமையின்மோகம்

என வருந்திப்பாடுகிறார். ஆங்கிலேயன் கையில் நாட்டைக்கொடுத்து விட்டு அடிமையாக வாழ்வது எவ்வளவு இழிவு. ஆளத் தெரியாத உங்கள் நாட்டை ஆள்வதற்கு வந்திருக்கிறோம் என்றான் வெள்ளையன். நம் செல்வத்தை திருடிச்சென்ற கொள்ளையன்.

பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு

என்பதை உணர்வீராக. எம்மை நன்கு ஆண்டதால்தான் எத்தனைச் செல்வங்கள் குவிந்திருக்கின்றன.  வ்வுண்மையை உணராமல் இங்கே வந்து எம்மை ஆள்வீர் எனக் கூறுவது எத்தகைய மூடத்தனம் எனப் பாடினார் மகாகவி. தன்னுடைய நாடு தனதென்று அறியாமல் வெள்ளையனுக்கு அடிமையான இந்தியர்களின் அறியாமையைக் காண்கிறார் பாரதியார். மனம் வருந்திப் பாடுகிறார்

பாரத நாடு பழம்பெரும்நாடு நீரதன் புதல்வர் ; இந்நினைவகற்றாதீர்

என்றார். ஆங்கிலேயர்களின் கொடுஞ்செயல்களால் மிரண்டுபோன இந்தியர்களால் ஆங்கில அரசை எதிர்க்கும் எண்ணம் வரவில்லை. என்னால் என்ன செய்துவிட முடியும் என வருந்தினார்கள்.

இந்தியர்களில் பலர் சாம்பல்களாக தங்களைக் கரைத்துக்கொண்டிருந்தபோது சிலர் மட்டும் விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அத்தகைய விடுதலை வீரர்களின் தியாக உணர்வால் தான் இந்தியா வெளிச்சம் பெறப்போகிறது என உணர்ந்தார்.

அக்னிக் குஞ்சொன்று கண்டேன் ; அதை ஆங்கொரு காட்டிடை பொந்திடை வைத்தேன் ; வெந்து தணிந்தது காடு ; தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ ;தத்தரிகிட த்ததரிகிட தித்தோம் ;தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்னப்பாடுவது வீரத்தழலான விடுதலை வீரர்களைக் கண்டதன் வெளிப்பாடே. அவர்களைக் கண்டு மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கிறார் மகாகவி. ஒவ்வொருவரும் விடுதலை உணர்வுடன் மாறும்போதுதான் நாடு நலம்பெறும் என்பதனை கவிதையாக மட்டுமின்றி உரைநடையாகவும் எழுதினார்.  விடுதலை உணர்வு விதைகளை தரணியெங்கும் தூவிவிட்டார்.

 குடும்ப பாசத்தைக்காட்டிலும் நாட்டுப்பாசம் மகாகவியிடம் விஞ்சி நின்றது. ‘சுதந்திர தேவி உன்னைத் தொழுதிடல் மறக்கிலேனேஎனப் பாடினான். ஆங்கில அரசின் கொடுமையைப் பார்த்து ஓடியவர்களை எல்லாம் தடுத்து நிறுத்தினார்.  வீரத்தாய்ப்பாலை தமிழ்ப்பாலின் வழி ஊட்டினார் மகாகவி. “மனதில் உறுதி வேண்டும். வாக்கினிலே இனிமை வேண்டும். நினைவு நல்லது வேண்டும். நெருங்கின பொருள் கைப்பட வேண்டும். கனவு மெய்ப்படவேண்டும். கைவசமாவது விரைவில் வேண்டும். தனமும் இன்பமும் வேண்டும். தரணியிலே பெருமை வேண்டும்என வேண்டியதையெல்லாம் பாடாலாய் பாடி அனைவர்க்கும் உணர்த்தினார்.

விடுதலை உணர்வு என்றால் என்ன? எதற்கும் யாரையும் எதிர்பாராமல் தன்னிறைவுடன் வாழ்வது என்பதை அன்றே சொல்லிவைத்தார் பாரதி. எப்போது ஒருவரை எதிர்பார்த்துவிடுகிறோமோ, அப்போதே அடிமைத்தனம் தொடங்கிவிடுகிறது. மற்றவர்களுக்கு கொடுத்து வாழ்வதே விடுதலை வாழ்வு.

தாய்நாட்டின் மீது பற்றில்லாது வாழ்வோரைபிறர் வாடப் பல செயல்கள் செய்யும்வேடிக்கை மனிதர்என்கிறார்.  வேடிக்கை மனிதரைப்போலே வீழ்வேன் என்று நினைத்தாயோஎன்றார்.

வாழ்வதற்குப் பொருள் வேண்டும் எனப் பாடியதோடு நில்லாமல் வாழ்வதிலும் பொருள் வேண்டும் என்றும் பாடினார் மகாகவி. இவை இரண்டையும் உணர்ந்து விடுதலை உணர்வுடன் வாழ்வோம்.