தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

புதன், 2 செப்டம்பர், 2020

கடவுள் இருக்கும் இடம் - God is living in

 விவேக  சிந்தாமணியில் கடவுள் இருக்கும் இடம்


    ஒரு நாத்திகரும் ஆத்திகரும் பேசிக்கொண்டிருக்கின்றனர்.

முதலாமவர் : ஏனப்பா எது கேட்டாலும் கடவுள் பார்த்துக்கொள்வார் என்கிறாய்? உனக்குத் தன்னம்பிக்கையே இல்லையா? 

இரண்டாமவர்: ஏன்,   இருக்கிறதே என்றார்

முதலாமவர் : பிறகு ஏன் கண்ணுக்குத்தெரியாத கடவுளை நம்புகிறாய்?

இரண்டாமவர்: என்ன ஓய்! நீர் ஏன் முகத்தில் முகமூடி போட்டிருக்கிறீர்.?

முதலாமவர் :கரோனா வைரஸ் தான் மாட்டிக்கொள்ளச்சொன்னது.

இரண்டாமவர்:  கண்ணுக்குத் தெரியாத வைரஸைஎப்படி நம்புகிறீர்?

 முதலாமவர் :இருப்பதாகச் சொல்கிறார்கள் நம்புகிறேன்

இரண்டாமவர்: நாங்களும் அப்படித்தான் கடவுள் இருப்பதாகச் சொன்னார்கள் நம்புகிறோம்.

முதலாமவர் :நம்புங்கள். ஆனால் கடவுளைப் பார்த்திருக்கிறீரா?

இரண்டாமவர்: நீர் கொரோனாவைப் பார்த்திருக்கிறீரா?

முதலாமவர் :உம்.அன்று தொலைக்காட்சியில் பார்த்தேன்.

இரண்டாமவர்: யார் சொன்னார்கள்?

முதலாமவர் :விஞ்ஞானிகள் நுண்ணோக்கியில் கண்டு சொன்னார்கள்

இரண்டாமவர்: அதேதான். அதற்குரிய நுண்ணோக்கியால் பார்த்தார்கள். அப்படித்தானே?

முதலாமவர் :ஆமாம். 

இரண்டாமவர்: அப்படியென்றால் அந்த விஞ்ஞானி எத்தனை ஆண்டு காலம் படித்துப் பட்டம் பெற்றிருப்பார். அந்தக் கருவியை எப்படிப் பயன்படுத்தவேண்டும் எனக் கற்றிருப்பார். அதனால்தானே பக்குவமாகப் பார்க்கிறார்.

முதலாமவர் :ஆமாம்

இரண்டாமவர்: அழிக்கக்கூடிய ஒரு கிருமியைக் காண்பதற்கே இத்தனை முயற்சி தேவையெனில் ஆக்கக்கூடிய கடவுளைப் பார்க்க எத்தனை முயற்சி தேவை.

முதலாமவர் :அப்படியென்றால். அதற்கான முயற்சியிருந்தால் பார்க்கமுடியுமா.?

இரண்டாமவர்: விஞ்ஞானி செய்யும் தவத்தை விட பல மடங்கு தவமிருந்த மெய்ஞ்ஞானிகளால் மட்டுமே பார்க்கமுடியும்.

முதலாமவர் :அப்படியென்றால் உன்னைப் போன்றோருக்குத்தான் காட்சியளிப்பாரா ? எம்மைப் போன்றோருக்குக் காட்சி அளிக்கமாட்டாரா?

இரண்டாமவர்: கடவுள் எங்கும் தான் நிறைந்திருக்கிறார். அதைப் பார்ப்பதற்குரிய கண்கள் தான் வேண்டும். முப்பரிமாண படத்தை வெறுங்கண்ணால் பார்த்தால் இது படமா? என்பது போல் தோன்றும். அதற்குரிய கண்ணாடியைப் போட்டுக்கொண்டால் . கண் இமைக்காமல் பார்க்கிறோம் அல்லவா?

முதலாமவர் :ஆம். 

இரண்டாமவர்: அவ்வளவுதான்.. சரி நீ கடவுளைப் பார்த்திருக்கிறாயா?

முதலாமவர் :இல்லை நீ?

இரண்டாமவர்: ஆம் நான் பிறந்தது முதல் இப்போதுவரை கடவுளுடன் தான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். 

முதலாமவர் : அப்படியா/

இரண்டாமவர்: என்னைப் பெற்றவள் ; என்னைக்காப்பவள் என்னுடைய தாய் தான் கடவுள்.

முதலாமவர் :அப்படியென்றால் தாய் தான் கடவுளா?

இரண்டாமவர்: தாய்மையும் கடவுள். தாயிடம் மட்டுமல்ல, அனைத்து உயிர்களிடமும் இருப்பார். சூரியனின் ஒளி எல்லா குளத்திலும் தெரிகிறது. அதுபோலத்தான் எல்லா உயிர்களிடமும் இறைவன் இருக்கிறான்.

முதலாமவர் :கடவுள் எப்படி இருப்பான்? பார்க்கமுடியாதா?

இரண்டாமவர்: கடவுளை ஆராய்ச்சி செய்ய வேண்டாம். முழுமையாக நம்பினால் போதும்.

 முதலாமவர் :அப்படியென்றால்?

இரண்டாமவர்: எல்லா உயிர்களிடமும் ஈசன் உள்ளதாக விவேக சிந்தாமணி குறிப்பிடுகிறதே.

மயில்குயில் செங்கா லன்னம் வண்டுகண் ணாடி பன்றி
 
அயிலெயிற் றரவு திங்க ளாதவ ணாழி கொக்கோ
 
டுயரும்விண் கமலப் பன்முன் றுறுகுண முடையோ நன்மை
 
இயலுறு புவியோர் போற்று மீசனென் றெண்ண லாமே. (54) 

முதலாமவர் : இவற்றில் எப்படி இருக்கிறது

இரண்டாமவர்: மயிலில் அழகில், குயிலின் குரலில், அன்னத்தின் நடையில், வண்டின் வலிமையில், கண்ணாடியின் உண்மையில், பன்றியின் பழகும் தன்மையில், பாம்பின் உறுதியான கடியில், திங்களின் ஒளியில், ஆதவனின் வெப்பத்தில், நதிகளை ஏற்றுக்கொள்ளும் கடலில், கொக்கின் உறுதியில்,  உயர்ந்திருக்கும் விண்ணில்,  நீரின் அளவிற்கேற்ப உயரும் தாமரையில்  அனைத்துக் குணங்களிலும் இறைவன் இருப்பதை உணரலாம்.

முதலாமவர் :நன்றி!

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக