நிலைக்கும் கற்கோவில் கட்டிய முதல்வன் – முதலாம் மகேந்திரவர்மன்
செங்கல், மரம், உலோகம், சுண்ணாம்பு எனக் கோவில்கட்டிய காலத்திலிருந்து மாறுபட்டு கல்லால் கோவில் கட்டியவன் மகேந்திரவர்மன்(ஆட்சிக்காலம்,பொது ஆண்டு 600-630). மலைகளைக் குடைந்து கோவில்கட்டும் புதிய கட்டிடக்கலையை உலகிற்கு அறிமுகப்படுத்தியவன். சங்ககாலத்தில் கட்டிய கோவில்கள் செங்கல், மரம், சுண்ணாம்பால் கட்டப்பட்டவை. எனவே, அவைகாலப்போக்கில் சிதலமடைந்து அழிந்தன. இயற்கைச் சீற்றங்களாலும், மனிதர்களுடைய தீய எண்ணத்தாலும், தீ பரவலாலும் அழிந்த கோவில்கள் எண்ணற்றவை. உலகத்தையே படைத்த இறைவனுக்கு அழியாத கோவில் கட்டவேண்டும் என எண்ணினான் மகேந்திரவர்மன். எனவே, காலத்தால் அழியாத கற்கோவில்களை உருவாக்கினான். கல்லிலேயே கடவுள் சிற்பங்களை உருவாக்குதில் வல்லவனாகவும் திகழ்ந்தான். சிற்பக் கலைஞர்களைக் கொண்டு நுணுக்கமான சிலைகளை கல்லில் செதுக்கச்செய்தான். இத்தகைய புதுமையான கோவிற்கலையைக் கண்டு மக்கள் வியந்தனர். விசித்திரமான இச்செயல்களைச் செய்தததால் ‘விசித்திர சித்தன்’ எனப் போற்றப்பட்டதனைக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. மகேந்திரவர்மனின் இத்தகைய அரும்பணியால் ‘பல்லவர்களே கற்கோவிலின் முன்னோடிகள்’ என்னும் பெயர் வரலாற்றில் நிலைபெற்றது. மண்டகப்பட்டு, வல்லம், தளவானூர், மகேந்திரவாடி, மாமல்லபுரம் ஆகிய இடங்களில் மகேந்திரவர்மன் கட்டிய கோவில்கள் பல்லவர்களின் புகழினை நிலைநிறுத்துகின்றன.
மன்னர்கள் போர்க்கலைகளில் மட்டுமே வல்லவர்களாக இருந்த காலத்தில், மகேந்திரவர்மன் போர்க்கலையில் மட்டுமின்றி சிற்பக்கலையிலும், ஓவியக்கலையிலும் சிறந்து விளங்கினான். எனவே, கற்கோவில்களின் மேற்புறத்தில் ஓவியங்களைத் தீட்டினான். இன்றும் புதுக்கோட்டை சித்தன்ன வாசலில் தீட்டிய ஓவியங்கள் நிறம்மாறாமல் இருப்பதனைக் காணமுடிகிறது. குளங்களில் தாமரைப் பூக்களும், சுற்றி நாட்டியாமாடும் பெண்களும் என அழகழான ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. மேலும், மகேந்திரவர்மன் ‘தக்ஷின் சித்ரா’ என்னும் ஓவியக்கலைக்கான இலக்கணத்தை வரைந்தான். எனவே, ‘சித்திரகாரப்புலி’ எனப் போற்றப்பட்டான். தலைநகர் காஞ்சியில் மகேந்திரவர்மன், கட்டிய கைலாசநாதர் கோவில் இன்றும் அவனுடைய கலைப்பற்றினை பறைசாற்றுகிறது.
குடுமியான் மலையில் உள்ள கல்வெட்டுகள் மகேந்திரவர்மனின் இசைத்திறனை வெளிப்படுத்துகின்றன. நாடகக்கலையிலும் சிறந்து விளங்கியவன் மகேந்திரவர்மன் என்பதனை அவனுடைய ’மத்த விலாசப் பிரகசனம்” என்னும் நாடகநூல் எடுத்துரைக்கிறது.
கலைகளில் சிறந்துநின்ற மகேந்திரவர்மன் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக ‘மகேந்திரமங்கலம்’ என்னும் நகரத்தை உருவாக்கினான். மேலும் அங்கு ‘சித்திரமேக தடாகம்’ என்னும் குளத்தை வெட்டினான். பக்தியில் சிறந்து விளங்கியதால் சிவனடியார்களும் வைணவர்களும் இவனுடைய ஆட்சிக்காலத்தில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர். இவ்வாறு பக்தியும் கலைகளும் சிறந்து விளங்கிய நல்லாட்சியாக மகேந்திரவர்மனின் ஆட்சி அமைந்ததனைக் கல்வெட்டுகள் புலப்படுத்துகின்றன.
****************