பாரதி நீர் சொல்லில் மட்டுமல்ல பெயரிலும் தீ வைத்திருந்தீர்
அதனால் தான் நாங்கள் அடிமை இருட்டிலும் வெளிச்சத்தைப் பெற்றோம்
உன் கனவெல்லாம் மெய்யானது பாரதி. எங்கும் விடுதலை.
புதுமைப்பெண்கள் இரவிலும் நடக்கின்றார் ; எத்தடையாயினும் கடக்கின்றார்.
‘வந்தே மாதரம் என்போம்’ என்றீர். அதனையே மந்திரச்சொல்லாய் மாற்றிக்கொண்டோம்
பயம் கொல்லச்சொன்னீர் – தேசம் துணைநிற்குமென நம்மவர் அச்சத்தையும் உலகோர் அச்சத்தையும் ஒருங்கே கொன்றோம்.
பகை வெல்லச் சொன்னீர் – பகை நாடுகளும் பாராட்ட வரிசையில் நிற்கச் செய்தோம்
வெள்ளிப் பனி மலையின் மீதுலவச் சொன்னீர் – சுற்றுலா தளமாக்கி உறவுகளோடு உலவச்செய்தோம்
கடல் முழுதும் கப்பல் விடச்சொன்னீர் – கப்பலுடன் விமானமும் பறக்கச்செய்தோம்
பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்யச்சொன்னீர் – கோயில்கள் கட்டி வியக்கச் செய்தோம்
பாரததேசமென்று தோள் கொட்டச் சொன்னீர் – நாடெங்கும் ‘ வந்தே மாதரம்’ முழங்கச் செய்தோம்.
பாலம் அமைக்கச் சொன்னீர் - பாலங்களோடு பாதாளங்களையும் கட்டச்செய்தோம் – பறக்கும் ரயிலில் பயணம் செய்தோம்
வீதி சமைக்கச் சொன்னீர் – பாறைகளைக் குடைந்து 8 வழி வீதிகளைச் சமைத்துவைத்தோம் – நான் கு எல்லைகளையும் இணைக்கச்செய்தோம்
வங்க நதியால் மையநாடுகளில் பயிர் செய்யச்சொன்னீர் – நதிகளை இணைத்துவிட்டோம் ; பயிர்களை செழிக்க வைத்தோம்
பல பொருளைத் தோண்டி எடுக்கச்சொன்னீர் – சொக்கத்தங்கம் முதல் கருப்புத்தங்கம் வரை அனைத்தையும் எடுத்து வைத்தோம். அதில் மின்சாரத்தால் ஒளிரவிட்டோம்
எட்டுத்திசை சென்று விற்கச்சொன்னீர் – கோதுமை முதல் மருந்துகள் வரை அனைத்தையும் கொடுத்துவிட்டோம்
எண்ணும் பொருளைக் கொண்டுவரச்சொன்னீர் – திறன்பேசி முதல் மின்கல வாகனம்வரை அனைத்தையும் கொண்டு வந்துவிட்டோம்
உலகமே விருப்பத்துடன் நம்மருள் வேண்டச்சொன்னீர் – இன்று நம் தலைமையை உலகமே நாடச்செய்தோம் ; ஒன்றாகக் கூடச் செய்தோம்
கோதுமை வெற்றிலைக்கு மாற்றச்சொன்னீர் – எல்லோருக்கும் கோதுமையினை பகிர்ந்தளித்தோம் ; நாடியோர் பசி நீக்கச் செய்தோம்.
மராட்டியக் கவிதைக்கு சேரத்துத் தந்தங்கள் தரச்சொன்னீர் – நாங்கள் யானையையே பரிசளித்து மகிழ்வித்தோம்.
காசியையும் காஞ்சியையும் இணைக்க கருவி செய்யச்சொன்னீர் – காசினியையே இணைக்கும் கருவி செய்தோம் ; அதில் காணவும் செய்தோம்
ராசபுதானத்து வீரர்க்கு கன்னடத்தங்கம் அளிக்கச்சொன்னீர் – தங்கப்பதக்கங்களை அளித்தே மகிழ்ந்தோம்
ஆடை மற்றும் உடைகளை குவிக்கச்சொன்னீர் – குவித்துவைத்தோம் ; அகதிகளுக்கும் பகுத்து தந்தோம்
காசினி வணிகர்க்கு கொடுக்கச் சொன்னீர் – கொடுத்துவிட்டோம் – அள்ளிக் கொடுத்துவிட்டோம்
ஆயுதம் செய்யச் சொன்னீர் - விடுதலை நாள் அணிவகுப்பில் நம் நாட்டு துப்பாக்கிகளைக் கொண்டே ஒலிக்கச் செய்தோம் – விண்ணை அதிரச்செய்தோம்
காகிதம் செய்யச்சொன்னீர் – பிறநாடுகளும் மதிக்கும் வகையில் பணக் காகிதங்களை செய்துவிட்டோம் ; மதிப்பைக் கூட்டிவிட்டோம்
ஆலைகள் வைக்கச்சொன்னீர் – மருத்துவத்தேவைக்கான ஆலைகள் முதல் பல ஆலைகள் வைத்தோம்
கல்விச்சாலைகள் வைக்கச்சொன்னீர் – உலகத் தரத்தினில் அயல்நாட்டினர் வந்து கற்கும் வகையில் கல்விச்சாலைகள் வைத்தோம்
ஓயுதல் செய்யோம் என்றீர் – உலக நாடுகளே அழைத்து, பணி கொடுக்கும் அளவிற்கு ஓய்வை மறந்துவிட்டோம் – பறக்கும் ட்ரோனை விட்டோம்
தலை சாயுதல் செய்யோம் என்றீர் – தோல்வி என்னும் சுவடே இன்றி பகைவரை எல்லை தாண்டியே விரட்டிவிட்டோம் – வந்தால் நோவாய என மிரட்டிவிட்டோம்
உண்மைகள் சொல்வோம் என்றீர் – எந்த நாடு எந்த நாட்டுடன் பகைகொண்டாலும் உண்மை நிலைக்கச் சொன்னோம் அதையும்உரக்கச் சொன்னோம்.
வண்மைகள் செய்யச் சொன்னீர் – உலகமே கண்டு மகிழும் வகையில் விமான தளங்கள் செய்தோம் – வள நிலங்கள் செய்தோம்
குடைகளும் படைகளும் செய்யச் சொன்னீர் – படைகளைச் செய்தோம். பிறநாடுகளுக்கு பயிற்சியும் செய்தோம்
கோணிகளையும் இரும்பாணிகளையும் செய்யச்சொன்னீர் – பிறநாடுகளுக்கு செயற்கை கோள்கள் செய்தோம் – அவற்றை விண்ணில் உலவச்செய்தோம்
வண்டிகளும் அஞ்சி நடுங்கும் கப்பல்களை செய்யச்சொன்னீர் – விண்ணைக் கிழிக்கும் ராக்கெட்டுகள், போர் செய்யும் நீர்மூழ்கிக் கப்பல்கள் என ஓட்டச்செய்தோம்
மந்திரம் கற்கச்சொன்னீர் ; வேதபாட சாலை அமைத்தோம் – யோக சோலை அமைத்தோம்.
வினைத்தந்திரம் செய்யச் சொன்னீர் – உலகமே நம் தேசத்தை நட்பு நாடாகக் கொள்ளச்செய்தோம் ; வறுமையை வெல்லச் செய்தோம்
வானை அளக்கச்சொன்னீர் – வானின் நிலையை அறியச்செய்தோம் – வானெல்லை வகுக்கச் செய்தோம்.
கடல் மீனை அளக்கச்சொன்னீர் – மீனவன் எப்போது செல்ல வேண்டும் என முன் கூட்டியே அறிவித்தோம் – உயிர் காத்தோம்
சந்திர மண்டலத்தியல் கண்டு தெளியச்சொன்னீர் – சந்திர மண்டலத்தில் நீருள்ளதையே கண்டறிந்தோம் ; ஆய்வைத் தொடர்ந்தோம்
சாத்திரம் கற்கச் சொன்னீர் – சாத்திரத்தோடு தோத்திரமும் கற்கச் செய்தோம் ; அதன் வழியே நிற்கச் செய்தோம்
காவியம் செய்திடவும் காடுகள் வளர்த்திடவும் வேண்டுமென்றீர் - பாலைவனங்களையும் சோலைவனமாக்கச் செய்தோம் ; கவி பாடச் செய்தோம்
கலையும் உலையும் வளர்க்கச்சொன்னீர் –கலைகளோடு தொழில் நுட்பம் வளர்த்து உலகுக்கே உருக்காலை சமைத்தோம்
சாதி இரண்டென்றீர் ; நேர்மையர் மேலோர் என்றீர் - கீழவர் மற்றோர் என்றீர்; மேலோரை ஒன்றிணைத்தோம் ; மற்றோர்க்கு வாய்ப்பளித்தோம்.
நம் பெருமை நாம் அறிவோம் ; பிறர் அறிய வழிவகுப்போம்.