தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

ஞாயிறு, 26 மே, 2019

அகநானூற்றில் நெய்தல் பதிவுகள் - Classical Sangam Literature - Agananooru


அகநானூற்றில் நெய்தல் பதிவுகள்

முனைவர் ம.ஏ.கிருட்டினகுமார், தமிழ்ப் பேராசிரியர் (துணை), தாகூர் கலைக் கல்லூரி , புதுச்சேரி. உலாப்பேசி : 99406 84775

அன்பின் ஐந்திணைகளில் வாழ்ந்த அனைத்து மக்களையும் உள்ளடக்கிய இலக்கியங்களாகவே சங்க இலக்கியங்கள் திகழ்கின்றன. அவற்றுள் எட்டுத்தொகை நூல்களுள் அகப்பொருளில் சிறந்து நின்ற நானூறு பாடல்களை உடைய தொகுப்புக்கு அகநானூறு என்னும் பெயர் இடப்பட்டுள்ளது. தமிழர்ப் புலமைக்குச் சான்றாகும் இவ்விலக்கியம் அமைப்பு முறையிலும் சிறப்புடையதாகிறது. (நானூறு பாடல்களுள் ஒற்றை இலக்கப் பாடல்கள் (1,3,5…) பாலை எனவும், 2,8 இலக்கப் பாடல்கள் (2,12,22 … 8,18,28 … குறிஞ்சி எனவும் , 4 இலக்கப் பாடல்கள் (4,14,24 …)முல்லை எனவும், 6 இலக்கப் பாடல்கள் (6,16,26…) மருதம் எனவும் 10 இலக்கப் பாடல்கள் (10,20,30 …) நெய்தல் எனவும் வகுத்திருப்பது இவ்விலக்கியத்திற்கு மற்றுமொரு சிறப்பு. எண்ணைக் கொண்டே பாடலை அறிவதற்கு இந்நூல் வழிவகை செய்துள்ளதனை எண்ணி மகிழலாம். அத்தகைய அகநானூறு, நெய்தல் நிலம் குறித்த இலக்கியப் பதிவுகளை எங்ஙனம் வரலாற்று ஆவணமாக எடுத்தியம்புகிறது என்பதனைக் காண விழைந்ததன் விளைவாகவே இக்கட்டுரை அமைகிறது.

நிலமும் உயிர்களும்

ஒவ்வொரு திணைக்கும் உரிய முதற்பொருள், கருப்பொருள் உரிப்பொருள் கொண்டே பாடல்களைப் பாடிய சிறப்பினை சங்க இலக்கியங்கள் வழி உணரமுடியும்.

முதற்பொருள்

        நிலமும் பொழுதும் முதற் பொருளாவன. கடலும் கடல் சார்ந்த இடமுமான நெய்தல் நிலத்தில் வாழ்ந்த மக்கள் கடலையே உழுமிடமாகக் கொண்டு உணவுக்கும் தொழிலுக்கு வழிவகை செய்துகொண்டதனைக் காணமுடிகிறது.

பரதவர்கள் பரந்த கடலையே தாம் வாழிடமாகக் கொண்டிருந்தாலும் அவர்களுடைய வீடு சிறிதாக இருந்ததனை

பெருங்கடல் வேட்டத்துச் சிறுகுடி பரதவர் (அ.நா.140 : 1)

என்னும் அடிகளில் எடுத்துக்காட்டுகிறார் அம்மூவனார்.

நிலவைப்போன்ற மணல் நிறைந்த தெருக்களில் புல்லால் வேயப்பட்ட குடிசைகளுடைய புலால் நாற்றம் வீசக்கூடியதும் பிறரால் இது ஊர் என அறியமுடியாத சிறுமையுடையதாகவும் இருந்த நிலையினை

நிலாவின் இலங்கு மணல்மலி மறுகில்
புலாலம் சேரி புல்வேய் குரம்பை
ஊரென உணராச் சிறுமையொடு ­­­­_______    (அ.நா.200 : 1-3)

என்னும் அடிகளில் பரதவர் வாழ் நிலையை எடுத்துக்காட்டுகிறார் உலோச்சனார்.

கடற்கரை ஓரத்தில் மீனவர்கள் வாழும் இடமான பாக்கம் என்பது பெரிய புலால் நாற்றம் கமழ்கின்ற சிறிய குடிகளை உடைய ஊராக இருந்ததனை

இரும் புலாக் கமழும் சிறுகுடிப் பாக்கத்துக் (அ.நா.70 : 2)

என்னும் அடிகள் உணர்த்துகின்றன.

நெடு நீர் இருங் கழிக் கடுமீன் கலிப்பினும் (அ.நா.50 : 2)

மிகுந்த நீருடைய பெரிய உப்பங்கழியில் சுறா முதலிய கொடிய மீன்கள் செருக்கித்திருந்திய காலம்.

பரதவர்கள் வாழ்க்கை மீன்களைக் கொல்லும் கொடிய தொழிலினை உடையதாகப் புலவர் சுட்டிக்காட்டுகிறார். குறுகிய இறப்பினையுடைய குடிசையில் வாழ்பவர்கள். அவர்கள் எறிந்த உளி பட்டு பெரிய மீன் புண்பட்டு அதன் குருதி கடல் நீரின் நிறம் மாறுபட்ட காட்சியினை

குறியிறைக் குரம்பைக் கொலைவெம் பரதவர்
எறிஉளி பொருத ஏமுறு பெருமீன்
புண் உமிழ் குருதி புலவுக் கடல் மறுப்பட (அ.நா. 210 : 1-3)

என்னும் அடிகளில் எடுத்துக்காட்டுகிறார்.

கருப்பொருள்

        நெய்தல் திணைக்குரிய மக்களுக்குக் கருவாக நின்று துணை செய்த கருப்பொருள்கள் வழியே நெய்தல் நிலத்தின் கூறுகள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. நெய்தல் நிலத்திற்குரிய சுறாவினை

கொடுந் தாள் முதலையொடு கோட்டு மீன் வழங்கும்
இருங்கழி இட்டுச் சுரம் . . . . . (அ.நா.80 : 1-2)

என்னும் அடிகளில் எடுத்துக்காட்டப்படுகிறது. வளைந்த காலினையுடைய முதலையொடு கொம்பினையுடைய சுறாமீன் உலவித் திரியும் கரிய உப்பங்கழிகளைக் கொண்ட சிறிய வழியாகிய சுரம்.

நீர் பெருகிய உப்பங்கழியில் கூரிய பற்களுடைய பாம்பினொடு வலிமையான சுறாக்களும் சுழன்று திரிந்ததனை

கழியே ஓதம் மல்கின்று; வழியே
வள்எயிற்று அரவொடு வயமீன் கொட்கும் (அ.நா.340 : 9-10)

என்னும் அடிகள் எடுத்துக்காட்டுகின்றன.

உப்பங்கழியில் உள்ள சுறாமீன் பாய்ந்து தன் கொம்பால் தாக்கியதால் புண்பட்ட காலினையுடைய கோவேறு கழுதை நீரினையுடைய நீண்ட கரிய உப்பங்கழிக்குச் செல்ல முடியாத நிலையினை

கழிச்சுறா எறிந்த புண்தாள் அத்திரி
நெடுநீர் இருங்கழிப் பரிமெலிந்து, அசைஇ (அ.நா.120 : 10-11)

என்னும் அடிகள் எடுத்துக்காட்டுகின்றன. சுறாவின் வலிமையினையும் கோவேரி கழுதையின் துன்ப வாழ்வினையும் எடுத்துக்காட்டும் நுட்பத்தையும் இங்கு காணமுடிகிறது.

ஆமையும் நண்டும்

நிறைந்த சூல் கொண்ட ஆமையானது அடும்புக் கொடி தன் நிலையிலிருந்து சிதையுமாறு இழுத்து வளைந்த உப்பங்கழியிடத்து வெண்மையான மணல்மேட்டின் பக்கத்தே அதனைச் சேர்த்தது. யானைக் கொம்பினால் செய்த வட்டு போன்ற வடிவமுடைய புலால் மணக்கும் முட்டையை ஈன்று பிற உயிர்கள் அறியாத வகையில் மணலுள் புதைத்து வைத்தது. ஆண் ஆமை அம்முட்டையினின்று உயிர்த்தெழுந்த குஞ்சினைக் காத்து நின்றது. இத்தகைய பெருமையுடைய ஆமையின் வாழ்வினை

அடும்புகொடி சிதையவாங்கி, கொடுங்கழிக்
குப்பை வெண்மணற் பக்கம் சேர்த்தி
நிறைச்சூல் யாமை மறைத்து ஈன்று, புதைத்த
கோட்டுவட்டு உருவின் புலவுநாறு முட்டை
பார்ப்புஇடன் ஆகும் அளவை, பகுவாய்க்
கணவன் ஓம்பும் கானல் ________(அ.நா.160 : 3-8)

என்னும் அடிகள் எடுத்துரைக்கின்றன. இங்கு ஆண் ஆமையினைக் கணவன் எனக் குறித்துள்ள அழகினையும் காணமுடிகிறது. நெய்தல் நில உயிரினமான நண்டினுடைய வாழ்வினைப் படம்பிடித்துக் காட்ட விரும்பிய மருதனிள நாகனார்

அகல் இலை நாவல் உண்துறை உதிர்த்த
கனிகவின் சிதைய வாங்கிக் கொண்டு தன்
தாழை வேர் அளை வீழ்துணைக்கு இடூஉம்
அலவற் காட்டி _______________        (அ.நா.380 : 4-7)

எனப் பாடுகிறார். அகன்ற இலையினையுடைய நாவல் மரத்தின் அடியில் வீழ்ந்து கிடந்த கனியினை அதன் அழகு சிதையும்படி இழுத்துச் சென்று தாழையின் வேர்ப்பக்கத்தில் தன் வளையிலுள்ள அன்புடைய தன் பெண் ஞெண்டிற்குத் தரும் ஆண் நண்டு எனக் கூறியுள்ளதன் வழி நண்டு வாழ்க்கையினைப் புலவர் ஆய்ந்த திறத்தினை அறிந்துகொள்ளமுடிகிறது.

குதிரைகள் மக்களின் வணிக வாழ்விற்கும் வீர வாழ்விற்கும் பெருந்துணையாகி நின்றன. எனவே குதிரைகளைப் பாதுகாப்பதில் நெய்தல்நில மக்களும் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டதனை

நூல் அமை பிறப்பின் நீல உத்தி
கொய்ம்மயிர் எருத்தம் பிணர்ப்படப் பெருகி
நெய்ம்மிதி முனைஇய கொழுஞ்சோற்று ஆர்கை
நிரல் இயைந்து ஒன்றிய செலவின், செந்தினைக்
குரல்வார்ந் தன்ன குவவுத்தலை, நல்நான்கு
வீங்குசுவல் மொசியத் தாங்கு நுகம் தழீஇ
பூம்பொறிப் பல்படை ஒலிப்பப் பூட்டி
மதியுடை வலவன் ஏவலின், இகுதுறைப்
புனல் பாய்ந்தன்ன வாம்மான் திண் தேர்க்
கணைகழிந் தன்ன நோன்கால் வண்பரி (அ.நா.400 : 5-14)

என்னும் அடிகளின் வழி எடுத்துக்காட்டுகிறார் உலோச்சனார். தேரில் பூட்டப்பட்ட குதிரைகள் நூல் இலக்கணப் படி பிறந்த பிறப்பினை உடையன. நீல மணியாலான நெற்றிச் சுட்டியையும் கொய்யப்பெற்ற மயிர் அடர்ந்த பிடரியையும் உடையன, வரிசையாக ஒரே நிலையில் ஓடும் ஓட்டத்தையும், சிவந்த நிறத் தினையின் கதிர்கள் நீண்டு வளைந்தாற் போன்ற கழுத்தையும் உடையன. கொள்ளுடன் நெய் ஊற்றி மிதித்துச் செய்யப்பெற்ற கவளத்தை உண்ண மறுத்துக் கொழுவிய சோற்றை உண்ட அக்குதிரைகளின் பருத்த கழுத்தில் பல வடங்கள் ஒலிக்கும்படி நுகத்தடியில் பூட்டி, அறிவுடைய பாகன் செலுத்த தாழ்ந்த துறையின்கண் நீர் தாவிச்செல்வது போன்று அம்புபோல் பாய்ந்து தாவிச் சென்றதாகக் காட்டும் அழகினை எண்ணி எண்ணி இன்புறலாம். வலிமை பொருந்திய சுறா மீன் தாக்கியதால் புண்பட்ட குதிரையானது தளர்ந்த நடையுடன் செல்வதனை

வயச்சுறா எறிந்தென, வலவன் அழிப்ப
எழில்பயம் குன்றிய சிறைஅழி தொழில
நிரைமணிப் புரவி விரைநடை தவிர (அ.நா.190 : 12-14)

என்னும் அடிகளில் எடுத்துக்காட்டுகிறார் உலோச்சனார். இதன் வழி மக்கள்குதிரைகளுடன் நெருங்கி வாழ்ந்தவர்கள்  நிலையினை உணர்ந்துகொள்ளமுடிகிறது.

உரிப்பொருள்

நெய்தலுக்குரிய உரிப்பொருள் இரங்கல். அகநானூறு தலைவனுக்காக இரங்கும் தலைவியின் நிலையினை

மதர் எழில் மழைக்கண் கலுழ, இவளே
பெருநாண் அணிந்த சிறுமென் சாயல்
மாண் நலம் சிதைய ஏங்கி _____ (அ.நா.110 : 6-8)

என்னும் அடிகளின் வழி புலப்படுத்துகிறார் நக்கீரர்.  மிக்க நாணத்தையும் ஐம்பொறிகளாலும் நுகரும் மென்மைத் தன்மையையும் உடைய தலைவி தன் மிகுந்த அழகு கெடும்படி குளிர்ச்சி பொருந்திய கண்கள் கலங்க இடைவிடாது அழத் தொடங்கியதை எடுத்துக்காட்டியுள்ளதன் வழி இரங்கல் தன்மையின் வலிமையினை உணரமுடிகிறது.

தொழில்

        ஒவ்வொரு நிலத்திற்கும் ஒவ்வொரு தொழில் இயற்கையாகவே அமைந்துவிடுகிறது. இயற்கை வளங்களான தாவரங்களை மட்டுமின்றி விலங்குகளையும் பறவைகளையும் உண்ணும் காலம் தொடங்கியது முதலே அவற்றை வேட்டையாடுவதும் தொழிலாகிவிட்டதனைக் காணமுடிகிறது

        கரிய கடலிலே கொழுத்த மீனைப் பிடிக்கும் பரதவர்கள் இருள் நீங்குதற்குத் தம் தோணியில் விளக்குகளைக் கொளுத்திக்கொண்டு செல்லும் நிலையினை

__________  இரவின் இருங்கடல் மடுத்த
கொழுமீன் கொள்பவர் இருள் நீங்கு ஒண்சுடர் (அ.நா.100 : 6-7)

என்னும் அடிகளின் வழி புலப்படுத்துகிறார் புலவர். உணவுக்குச் சுவையூட்டும் உப்பினை மதிப்புடைய பொருளாக வணிகம் செய்த நிலையினைக் காணமுடிகிறது.

உப்பு ஒய் உமணர் அருந்துறை போக்கும் (அ.நா.30 : 5)

என்னும் அடிகள் உப்பு வணிகர் உப்பு  மூட்டைகளை ஏற்றிக் கொண்டு அரிய துறைகளைச் செலுத்தும் நிலையினை எடுத்தியம்புகிறது.

உப்பு நெல்லுக்கு நிகராக இருந்த நிலையினை
நெல்லின் நேரே வெண்கல் உப்பு எனச்
சேர் விலைமாறு கூறலின் _______(அ.நா.140 : 7-8)

”நெல்லும் உப்பும் நேரே ஊரீர்!
கொள்ளீ ரோ” எனச் சேரி தொறும் நுவலும் (அ.நா.390 : 8-9)

என்னும் அடிகள் புலப்படுத்துகின்றன.

நெய்தல் நில மக்கள் வீரத்துடன் தம் கடமையைச் செய்த நிலையினை அவர்கள் செய்த தொழிலின் வழியே அறியமுடிகிறது. பெரிய படகினையுடைய பரதவர்கள் கடற்பரப்பில் தம்மைத் தாக்காவாறு கொல்லும் தன்மையுடைய சுறாமீனை ஒதுக்கி விட்டு நீருள் மூழ்கி வலம்புரிச் சங்கினை எடுக்கும் வீரத்தை

இலங்கு இரும் பரப்பின் எறிசுறா நீக்கி,
வலம்புரி மூழ்கிய வான் திமிற் பரதவற் (அ.நா.350 : 10-11)

என்னும் அடிகளின் வழி புலப்படுத்துகிறார் சேந்தன் கண்ணனார்.

ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் சிறுவர்களும் தங்களால் இயன்ற தொழிலினைச் செய்து வந்ததனை அகநானூறு எடுத்தியம்புகிறது. நெய்தல் நிலப் பெண்கள் காயவைத்த பல்வகை மீன்களைப் பறவைகளிடமிருந்து காத்ததை

பல் மீன் உணங்கற் படு புள் ஓப்புதும் (அ.நா.80 : 6)

என்னும் அடிகள் எடுத்துக்காட்டுகின்றன. ஆண்களுக்கு நிகராக குடும்பத்தை முன்னிறுத்துவதில் பெண்களும் பங்கு கொண்டிருந்ததனை

ஓங்கு திரைப் பரப்பின் வாங்குவிசைக் கொளீஇ
திமிலோன் தந்த கடுங்கண் வயமீன்
தழைஅணி அல்குல் செல்வத் தங்கையர்
விழவுஅயர் மறுகின் விலை எனப் பகரும் (அ.நா.320 : 1-4)

என்னும் அடிகளின் வழி புலப்படுத்துகிறார் சீத்தலைச் சாத்தனார். உயர்ந்தெழும் திரை ஒலிக்கும் கடற்பரப்பில் மீன்பிடிக்கும் படகினைக் கொண்ட தமையனார்கள் வலைவிரித்து அஞ்சாத தன்மையுடைய வலிமையான மீன்களைப் பிடித்து வருவர். தழையாடை உடுத்திய அழகிய அல்குலையுடைய தங்கைகள் திருவிழாக்கள் நடைபெறும் தெருக்களில் அவற்றை விற்று வருவர் என்பதனை இவ்வடிகள் உணர்த்தி நிற்கின்றன.

கொழுமீனாகிய உணவை உண்ட சிறுவர்கள் கருமையான சேற்றுக் குழம்பினையுடைய வயலில் வைகறையில் வேட்டைக்குச் சென்றதனை அறியமுடிகிறது.

கொழுமீன் உணங்கற் படு புள் ஓப்பி
எக்கர்ப் புன்னை இன் நிழல் அசைஇ (அ.நா.20 : 2-3)

என்னும் அடிகள் கொழுப்புடைய மீன் உலர்ந்து வற்றலாய் காயும்போது வந்து வீழுகின்ற பறவைகளைக் கடற்பரப்பில் மணல் மேட்டிலுள்ள புன்னை மரங்களின் இனிய நிழலில் தங்கி விரட்டி ஓட்டிய நிகழ்வு எடுத்துக்காட்டப்படுகிறது. நெய்தல் நில மக்களுள் சிறுவர்களும் வேட்டையாடுவதைத் தொழிலாகக் கொண்டிருந்ததனை

        கொழுமீன் வல்சிப் புன் தலைச் சிறாஅர்
        நுண்ஞாண் அவ்வலைச் சேவல் பட்டென (அ.நா.290 : 3-4)

என்னும் அடிகளின் வழி உணரமுடிகிறது.


பட்டினச் சிறப்புகள்

        சேரநாட்டின் கடற்கரைக்கண் உள்ளதொரு பட்டினத்தில் உள்ள ஊர் தொண்டி. இவ்வூரின்  வளமையினை

பழந் திமில் கொன்ற புது வலைப் பரதவர்
மோட்டு மணல்அடைகரைக் கோட்டு மீன் கெண்டி,
மணம் கமழ் பாக்கத்துப் பகுக்கும்
வளம் கெழு தொண்டி அன்ன இவள் நலனே (அ.நா.10 : 10-13)

பழைய படகின் அழிவினைப் போக்கி புதிய வலையினையுடைய பரதவர் உயர்ந்த மணலையுடைய கரைப்பக்கத்தில் ஒதுங்கிக்கிடக்கும் சுறாமீனை அறுத்துத் தாமும் தின்று மணம் கமழ்கின்ற பாக்கத்தில் பலர்க்கும் பகுத்துக்கொடுக்கும் வளம் பொருந்திய தொண்டி என்னும் பட்டினத்தைப் போன்ற அழகுடையவள் தலைவி. இப்பாடலில் தலைவியின் அழகும் ஊர் வளமும் ஒருங்கே புலப்படுத்தப்படுகிறது.

குளிர்ந்த ஒளியினையுடைய முத்துக்களைப் பரந்து வரும் கடல் அலைகள் கொணர்ந்து வரும். அம்முத்துக்கள் விரும்பும் நடையுடைய குதிரைகளின் கால்களை வடுப்படுத்தி அவற்றை மேற்செல்லாது தடுத்து நிறுத்தும் வளமுடையது கொற்கை என்பதனை

இவர்திரை தந்த ஈர்ங்கதிர் முத்தம்
கவர்நடைப் புரவி கால்வடுத் தபுக்கும்
நல்வேர் வழுதி கொற்கை __________ (அ.நா.130 : 9-11)

என்னும் அடிகள் புலப்படுத்துகின்றன. இதன்வழி கொற்கையின் வளத்தினை அறிந்துகொள்ளமுடிகிறது.

கழுமலம் என்பது பாவங்களைக் கழுவக்கூடிய இடம் என்னும்  பொருளுடையது. செல்வத்தைக் கொடுத்து பாவங்களைக் கழுவிய வள்ளலான குட்டுவனின் நிலையினை

கொய்சுவற் புரவிக் கைவண் கோமான்
நல்தேர்க் குட்டுவன் கழுமலத்து அன்ன      (அ.நா.270 : 9-10)

என்னும் அடிகள் எடுத்துக்காட்டுகின்றன. கத்திரிகையால் கொய்து மட்டம் செய்யப்பெற்ற பிடரி மயிரினையுடைய குதிரைகளையும் நல்ல தேர்களையும் கொடுத்து மகிழும் வள்ளலான குட்டுவனுடைய ஊர் கழுமலம் எனக் குறிப்பிடப்படுகிறது. கொடை கொடுக்கும் போது ஏதோ ஒன்றைக் கொடுத்தால் போதும் என எண்ணாது சிறப்பானவற்றையே கொடையாகக் கொடுத்த தமிழர்களின் சிறப்பினையும் இங்கு எண்ணி மகிழலாம்.

தாவரங்கள்

செடி, கொடி, மரம் என ஒவ்வொரு தாவர இனங்களும் வெவ்வேறு நன்மைகளைத் தருகின்றன. அவற்றின் உயரத்திற்கேற்ப வாழ்நாளும் பயன் தரும் நிலையும் மாறுபடுகிறது. இவற்றினை உணர்த்தும் வகையில் தாவரங்களின் நிலையினை அகநானூற்றுப் பாடல்கள் எடுத்துரைத்துள்ளன.

நிழல், இலை, தழை, பூ, காய், கனி எனப் பல்வேறு நன்மைகளை அளிக்கும் பெருமையுடைய தாவரங்களில் புன்னை மரத்தின் சிறப்புகள்பல இடங்களில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. மென்மையான அரும்புகள் மலர்ந்த முடம்பட்ட முதிர்ந்த புன்னை மரம் பெரியதான கரிய கிளையுடன் வளர்ந்துள்ளதனை

முடவு முதிர் புன்னைத் தடவு நிலை மாச்சினை (அ.நா.10 : 3)

என்னும் அடிகள் எடுத்துக்காட்டுகின்றன. தலைவியின் கண்களை நெய்தல் பூவோடு ஒப்பிடுதல்

நெய்தல் உண்கண் பைதல கலுழ (அ.நா.10 : 5)

நெய்தல் பூ போன்ற மை உண்ட அவள் கண்கள் வண்டினால் மலர்ந்த நெய்தல் பூவினைப் புறமுதுகிட்டு ஓடச் செய்யும் அழகிய கண்கள் என்பதனை

வண்டு வாய் திறந்த வாங்கு கழி நெய்தற்
போது புறங்கொடுத்த உண்கண் (அ.நா.130 : 12-13)

என்னும் அடிகள் உணர்த்துகின்றன. இங்கு நெய்தல் பூவோடு தலைவியின் கண்களை ஒப்பிட்டுள்ள திறத்தின் வழி நெய்தல் பூவைக் காணாதவரும் அப்பூவின் அழகினை உணரும் வகையில் பாடப்பட்டுள்ளதனைக் காணமுடிகிறது.

காலையில் மலர்கள் மலரும் அழகினை எடுத்துக்காட்ட விழைகிறார் குறுவழுதியார். செருந்தியின் அரும்பிய மொட்டுக்கள் இதழ் விரியத் தேன் மணங்கமழும் குவளை மலர்களோடு சேர்ந்து தானும் தண்ணென மலரும் என்பதனை

கள்நாறு காவியொடு தண்ணென மலரும் (அ.நா.150 : 11)

என்னும் அடிகள் வழி புலப்படுத்துகிறார் புலவர்.

………………………………………………………………………………………………….. புதுவது
பொன் வீ ஞாழலொடு புன்னை வரிக்கும் (அ.நா.70 : 8-9)

என்னும் அடிகள் புதிதாக மலர்ந்த பொன்னிறமுடைய புலிநகக் கொன்றையின் பூக்களோடு புன்னையின் பூக்களும் தரையில் சித்திரம் தீட்டினாற் போல் உதிர்ந்து அழகு செய்வதனைக் காட்டுகிறார் புலவர்.

ஒண் பல் மலர கவட்டு இலை அடும்பின்
செங்கேழ் மென்கொடி ________ (அ.நா.80 : 8-9)

என்னும் இவ்வடிகள் கடம்பத்தின் வளர்ச்சி நிலையினை எடுத்துக்காட்டுகிறது. கடம்பானது ஒளி பொருந்திய மலர்களையும் கவடுபட்ட இலையினையும் உடையது. கடம்பின் செந்நிறமான மெல்லியகொடி கழி முள்ளி தழைத்திருக்கும் கடலின் கரையடியில் வளர்ந்திருந்ததனை எடுத்துக்காட்டுகிறார் புலவர்.

மின் இலைப் பொலிந்த விளங்கு இணர் அவிழ்பொன்
தண் நறும் பைந்தாது உறைக்கும் (அ.நா.80 : 11-12)

என்னும் அடிகள் பொன்போலும் மணங்கமழும் பசுமையான பூந்தாதுகளை உதிர்க்கின்ற புன்னை மரங்கள் அடர்ந்திருந்ததை எடுத்துக்காட்டுகிறது.

நுண் தாது பொதிந்த செங்காற் கொழு முகை
முண்டகம் கெழீஇய மோட்டுமணல் அடைகரை (அ.நா.130 : 3-4)

என்னும் இவ்வடிகள் நுண்ணிய பூந்தாது மூடிய சிவந்த காம்பினையும் கொழுவிய மொட்டினையும் உடைய கழிமுள்ளிச் செடிகள் மணலால் ஆன உயர்ந்த நீரடை கரையின்கண் வளர்ந்திருப்பதனை எடுத்துக்காட்டுகிறார் புலவர்.

புலால் நாற்றத்தைப் போக்கி நறுமணத்தைப் பரப்பும் தாழையானது பேய் போன்ற தலையினையும் சுரசுரப்புடைய அடிப்பாகத்தையும் பற்கள் போன்ற முட்களுடைய நீண்ட மடல்களுடன் தம் வயிற்றுப்பகுதியில் பல மலர்களை தூய்மையாக மலரச் செய்ததனை

பேஎய்த் தலைய பிணர் அரைத் தாழை
எயிறுடை நெடுந்தோடு காப்ப, பல உடன்
வயிறுடைப் போது வாலிதின் விரீஇ (அ.நா.130 : 6-8)

என்னும் அடிகளின் வழி எடுத்துக்காட்டுகிறார் வெண்கண்ணனார். இவ்வடிகளின் வழி செடி கொடிகளுடன் வாழ்ந்து அவற்றை நேசித்து நுணிகி ஆய்ந்த புலவர்களின் திறத்தை தெள்ளிதின் உணரமுடிகிறது.

காற்று

        தமிழர்கள் இயற்கை அனைத்தையும் உணர்ந்த்து உணர்ந்து பெயரிட்ட சிறப்புக்குரியவர்கள். அவற்றுள் காற்றும் முக்கிய இடம் பெறுகிறது. நான்கு திசையிலிருந்து வீசிய காற்றுக்கும் (தெற்கு – தென்றல், வடக்கு – வாடை, மேற்கு – கோடை, கிழக்கு – கொண்டல்)  பெயரிட்டுள்ளனர். நெய்தல் நிலத்தில் கொண்டல் காற்றின் சிறப்பினைப் பல புலவர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர்.

…..      ……      …….      ….. கொண்டலொடு
குரூஉத் திரைப் புணரி உடைதரும் எக்கர் (அ.நா. 10 : 8-9)
கொண்டல் இடு மணல் குரவை முனையின் (அ.நா.20 : 7)
அழிதக வந்த கொண்டலொடு …. (அ.நா.40 : 7)

பிரிந்திருப்பார் அழிதற்குக் காரணமாகி வந்த கீழ்க்காற்று எனக் குறிப்பிட்டுள்ளதன் வழி கொண்டலின் இனிமையினை உணர இயலும்.

பறவைகள் வாழ்க்கை

        பறவைகள் மரங்களையே வீடுகளாகக் கொண்டு காலையில் இரை தேடி மாலையில் வீடு திரும்பும் சீரான வாழ்வினைப் புலவர்கள்.

மீன் ஆர் குருகின் மென்பறைத் தொழுதி
குவைஇரும் புன்னைக் குடம்பை சேர (அ.நா.40 : 2-3)

என்னும் அடிகள் இக்கூற்றை மெய்ப்பிக்கின்றன. மீனை உண்ணும் மெல்லிய சிறகுடைய பறவைக் கூட்டம்  திரண்ட பெரிய மரத்திலுள்ள கூடுகளிற் போய்ச் சேர்ந்தது என்னும் பொருளின் வழி தன் குஞ்சுகளுக்கு உணவளித்த திறமும் வெளிப்படுகிறது.

        பரதவர்கள் மட்டுமின்றி கடல்வாழ் பறவைகளும் மீன்களால் உயிர் வாழ்ந்ததனை கடற்சிறுகாக்கையின் வாழ்வின் வழி எடுத்துக்காட்டுகிறார் புலவர்.

        கடற்சிறுகாக்கை காமர் பெடையொடு
        கோட்டுமீன் வழங்கும் வேட்டம்மடி பரப்பின்
        வெள் இறாக் கனவும் நள்ளென் யாமத்து (அ.நா.170 : 10-12)

என்னும் அடிகள் பரதவர் மீன் வேட்டைக்குச் செல்லாத சுறாமீன் திரிகின்ற கடற்பரப்பின்கண் வெண்மையான இறால் மீனைப் பிடித்து உண்பதாகச் சிறிய கடற் காக்கை கனாக் காணும் நிலையினை எடுத்துக்காட்டுகிறது. இதன்வழி கடற்காக்கையின் வாழ்வை நன்காய்ந்த திறம் புலப்படுகிறது.

        தாழ்ந்து பறக்கும் தன்மையுடைய நாரையானது செந்நிறப் பூவினையுடைய புலிநகக் கொன்றையின் கருநிறக் கொம்பின் பெரிய கிளையில் தனித்திருக்கும் தன் குஞ்சினை நினைத்து நீலமணி போன்ற நெய்தற் பூக்களையுடைய கரிய உப்பங்கழியினின்று மேலே பறந்ததனை

        செவ்வீ ஞாழற் கருங்கோட்டு இருஞ்சினைத்
        தனிப்பார்ப்பு உள்ளிய தண்பறை நாரை
மணிப்பூ நெய்தல் மாக்கழி நிவப்ப (அ.நா.240 : 1-3)

என்னும் அடிகளின் வழி நாரையின் வாழ்வைப் படம்பிடித்துக்காட்டுகிறார் புலவர். முதிய மரத்தை விடுத்து ஒரு பொழுதும் நீங்காது தங்குகின்ற முழங்கும் வாயையுடைய முதுமையடைந்த பேராந்தை விரைவாகத் தன் குரலெடுத்து குழறி ஒலிப்பதனை

முதுமரத்து உறையும் முரவுவாய் முது புள்
கதுமென குழறும், கழுது வழங்கு ____________        (அ.நா.260 : 12-13)

என்னும் அடிகளில் ஆந்தையின் வாழ்வை எடுத்துக்காட்டுகிறார் புலவர். வலையில் சேவல் (கொக்கு) அகப்படுகிறது. அதனால் வருத்தமுற்ற பெடையின் நிலையினை

நுண்ஞாண் அவ்வலைச் சேவல் பட்டென,
அல்குறு பொழுதின் மெல்குஇரை மிசையாது
பைதல் பிள்ளை தழீஇ, ஒய்யென
அம்கண் பெண்ணை அன்புற நரலும் (அ.நா.290 : 4-5)

என்னும் அடிகள் எடுத்துக்காட்டுகின்றன. நுண்ணிய கயிற்றினாலானாகிய வலையில் சேவல் அகப்பட்டது. பசிய கால்களையுடைய அதன் பெடையானது இரையினைத் தின்னாது தனித்து வருந்தித் தன் குஞ்சினைத் தழுவியபடி அழகிய இடமான பனை மரத்தின் கண் அன்பு மேலிட ‘ஒய்’ என்னும் ஒலி செய்யும் என கொக்கின் வாழ்க்கையினைப் படம்பிடித்துக்காட்டியுள்ளார் நக்கீரர்.

அன்றில் பறவை

        காதலர்களின் இணைவினை எடுத்துக்காட்டுவதற்குப் புலவர்களுக்குப் பெரிதும் துணை செய்த பறவைகள் அன்றில். இதன் வழி அன்றில் பறவையின் இணை பிரியா வாழ்வினை தெள்ளிதில் உணர இயலும்.

அன்றில் பறவையானது பொன் போன்ற நிறமுடைய நறுமலர்கள் உதிர்ந்து பரவிக்கிடக்கும் புன்னை மரங்கள் கொண்ட சோலையில் பல்வேறு மீன்களை உண்ணும் நாரையுடன் முற்றத்தில் தங்கியிருக்கும் என்பதனை

இனமீன் அருந்து நாரையொடு பனைமிசை
அன்றில் சேக்கும் முன்றில் பொன் என
நன்மலர் நறுவீ தாஅம்
புன்னை நறும்பொழில் _____ (அ.நா.360 : 16-19)

என்னும் அடிகளின் வழி புலப்படுத்துகிறார் புலவர்.

மனை சேர் பெண்ணை மடி வாய் அன்றில்
துணை ஒன்று பிரியினும் துஞ்சா காண் …            (அ.நா.50 : 11-12)

இரவில் வீட்டினைச் சார்ந்துள்ள பனைமரத்தில் வாழும் வளைந்த வாயினையுடைய அன்றில்கள் கூடியிருக்குமேயன்றி துணை சிறிது பிரியினும் கண் உறங்காத நிலையினை எடுத்துக்காட்டியுள்ளதன் வழியும் அன்றில் பறவையின் வாழ்வின நன்குணரமுடிகிறது.

சமூக அமைப்பு

நெய்தல் நில மக்கள் தம் வாழ்க்கை தம் கையில் என்னும் நோக்குடன் வாழ்ந்தவர்கள். பிறரிடம் நிறைகண்டு அதனைப் போற்றி தம்மிடம் குறை கண்டு அதனை நீக்கி அன்புடன் வாழ்ந்த பெருமிதம் கொண்டவர்கள். இதனை

கொடுந் திமிற் பரதவர் வேட்டம் வாய்த்தென
குறுங்கண் அவ்வலைப்பயம் பாராட்டி (அ.நா.70 : 1,3)

என்னும்  அடிகள் உணர்த்தி நிற்கின்றன. இவ்வடிகள் தங்கள் பெருமையால் தான் மீன் நிறைவாகப் பிடிக்க நேர்ந்ததென எண்ணாது வலையைப் பாராட்டிய நிலையினை இவ்வடிகள் எடுத்துக்காட்டுகின்றன.

நெல் அரியும் உழவர் நெற்கதிர்களுள் கூடுகட்டி வாழும் சிறு பறவைகளும் பிற உயிரினங்களும் ஓடி உய்யும் பொருட்டு அவற்றின் பின்புறம் பறையொலித்த நிலையினை

வெண்ணெல் அரிநர் பின்றைத் ததும்பும்
தண்ணுமை வெரீஇய தடந்தாள் நாரை (அ.நா.40 : 13-14)

என்னும் அடிகள் எடுத்துக்காட்டுகின்றன.

நெய்தல் மக்களில் ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் வணிகம் செய்து குடும்பத்தின் நிலையினைப் போற்றியுள்ளனர். உப்பு விற்று வாங்கி வந்த நெல்லால் ஆக்கப்பட்ட சோறினை தன் தந்தைக்குக் கொடுத்த நிலையினை

உப்பு நொடை நெல்லின் மூரல் வெண்சோறு
அயிலை துழந்த அம் புளிச் சொரிந்து
கொழுமீன் தடியொடு குறுமகள் கொடுக்கும் (அ.நா.60 : 4-6)

என்னும் அடிகள் எடுத்துக்காட்டுகின்றன.

பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் பூச்சூடி தம்மைக் காத்துக் கொண்டனர். உப்பங்கழியில் மலர்ந்திருக்கும் கொழுவிய இதழ்களை உடைய நீலப்பூக்களைப் புலிநகக் கொன்றைப் பூக்களுடன் சூடிக் கொண்டதனை

இனமீன் வேட்டுவர் ஞாழலொடு மிலையும் (அ.நா.270 : 3)

என்னும் அடிகளில் எடுத்துக்காட்டுகிறார் சாகலாசனார்.

காதல் என்பது கொண்டோர்க்கு இன்பத்தையும் காதலரைச் சார்ந்தோர்க்குத் துன்பத்தையும் அளிப்பது. எனவே பிறர் மனம் புண்படக் கூடாதென ஒழுகிய காதல் ஒழுக்கம் அறத்தோடு நிற்றலால் சிறப்புடையதாயிற்று. தலைவியின் நாணத்தை அறிந்த தலைவன் தம் ஏவலரைப் போகச் செய்துவிட்டு தனியனாய் காத்திருக்கும் நற்பண்பினை

        கடுந்தேர் இளையரொடு நீக்கி, நின்ற
நெடுந்தகை நீர்மையை _____________  (அ.நா.310 : 1-2)

என்னும் அடிகளின் வழி எடுத்துக்காட்டுகிறார் நக்கீரர்.

பெரியோர்கள் காதலை எதிர்த்தது அன்புடன் வளர்த்த பிள்ளைகள் பின்னாளில் துயருடக்கூடாது என்பதனாலேயே., மகிழ்ச்சியாக வாழ்வாரெனில் எவரும் தடுத்திலர். சிறுவயதில் எடுக்கும் முடிவுகள் தவறாகவே அமையும் என்பதனால் காதலிப்பதை தடுத்த முதியோரின் நிலையினை

மூத்தோர் அன்ன வெண் தலைப் புணரி
இளையோர் ஆடும் வரிமனை சிதைக்கும் (அ.நா.90 : 1-2)

என்னும் அடிகள் எடுத்துக்காட்டுகின்றன. முதியோரைப் போன்ற வெண்மையான தலை பொருந்திய திரையையுடைய கடல், இளம் பெண்கள் செய்து விளையாடும் மணல் வீட்டை அழிக்கும் என்னும் உவமையின் வழி புலப்படுத்தப்பட்டுள்ளதனை எண்ணி மகிழலாம்.

தலைவி தலைவனிடம் கொண்ட காதலை தோழியானவள் செவிலியிடம் கூற செவிலி நற்றாயிடம் கூறி திருமணம் செய்துவிப்பதே அறத்தொடு நிற்றல். அவ்வாறு முறையோடு படிப்படியாக காதலை வெளிப்படுத்தும் பாங்கினை

அன்னை அறியினும் அறிக ; அலர்வாய்
அம்மென் சேரி கேட்பினும் கேட்க; (அ.நா.110 : 1-2)

என்னும் அடிகள் எடுத்துக்காட்டுகின்றன. அலர் பேசும் ஊர்மக்கள் அறிந்தாலும் அறியட்டும் எனக்கூறித் தலைவியின் காதலை வெளிப்படுத்தி திருமணத்திற்கு வழிவகை செய்யும் தோழியின் அறிவு நுட்பத்தையும் இங்கு காணலாம். அவ்வூர் அழகியதாகவும் மக்கள் மென்மையான குணமுடையவர்களாகவும் இருந்ததனை அம்மென்சேரி எனக் குறிப்பிட்டுள்ள அழகினையும் இங்கு காணமுடிகிறது.

அலைகளை உடைய குளிர்ந்த கடலாகிய சுரத்தில் தான் பிடித்து வந்த பலவகை மீன்களை திண்மையான படகின் விளக்கொளியில் காட்டுவதனையும் நீருண்ணும் குளிர்ச்சியான துறையில் வாழும் தெய்வத்தை வழிபடும் நிலையினையும்

திரைச்சுரம் உழந்த திண் திமில் விளக்கில்
பல்மீன் கூட்டம் என்னையர் காட்டிய
எந்தையும் செல்லுமார் இரவே, அந்தில்
அணங்குடைப் பனித்துறை கைதொழுது ஏத்தி (அ.நா.240 : 5-8)

என்னும் அடிகளின் வழி எடுத்துக்காட்டுகிறார் புலவர்.

பேடைகளையும் சேவல்களையும் தெய்வம் வாழும் மரத்தின் கண் முள்ளால் கட்டப்பெற்ற கூட்டினுள்  வளர்த்ததனை

கடவுள் மரத்த முள்மிடை குடம்பைச்
சேவலொடு புணராச் சிறுகரும் பேடை       (அ.நா.270 : 12-13)

என்னும் அடிகள் புலப்படுத்துகின்றன. இவ்வடிகள் மரங்களை தெய்வமாக எண்ணி வழிபட்ட திறத்தையும் எண்ணி மகிழலாம்.

கடல் தெய்வமே கரையில் நின்று நெய்தல் நில மக்களைக் காப்பதாக எண்ணி தெய்வ நம்பிக்கையுடன் வாழ்ந்த திறத்தை

வண்டுபடத் ததைந்த கண்ணி, நெய்தல்
தண் அரும் பைந்தார் துயல்வர, அந்தி
கடல்கெழு செல்வி கரை நின்றாங்கு (அ.நா.370 : 10-12)

என்னும் அடிகள் எடுத்துக்காட்டுகின்றன.

நன்றிக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் நாய்களை வளர்க்கும் பழக்கம் சங்க காலம் முதலே வழக்கில் இருந்ததனை

விளிஅறி ஞமலி குரைப்ப, வெரீஇய
மதர்கயல் மலைப்பின் அன்னகண் எமக்கு (அ.நா.140 : 9-10)

என்னும் அடிகள் எடுத்துக்காட்டுகின்றன. உப்பை விற்கும் பெண்ணின் குரலை வேறொரு குரல் என அறிந்து குரைக்கும் நாயைக் கண்டு அஞ்சிய அவளுடைய கயல் மீன் போன்ற கண்கள் போரிட்டுக் கொண்டதாகக் காட்டுகிறார் அம்மூவனார்.

கொடை வளமுடைய மக்கள் நிலை

தமிழர்கள் பிறர்க்குக் கொடுத்து மகிழும் பண்புடையவர். அறம் செய்வதனையே முதன்மையாகக் கொண்டவர். பிறர் பசியாறிய பின் தான் பசியாறும் இயல்பினை உடையதனாலேயே தாயுள்ளம் கொண்ட தமிழர் எனப் பிறரால் குறிப்பிடப்படுகினறனர்.  இக்கூற்றுக்கு அரண் சேர்ப்பவராய் நெய்தல் நில மக்கள் வாழ்ந்துள்ளனர்.

பகுத்துண்ணும் வாழ்வையே தம் வாழ்வாகக் கொண்டிருந்தவர்கள் பரதவர்கள். அழிந்த படகால் கடல் வேட்டைக்குச் செல்ல இயலாததால் ஒதுங்கிய சுறாமீனை பகுத்து உண்ணும் காட்சியினை அம்மூவனார் படம்பிடித்துக்காட்டுகிறார். நெய்தல் நிலத் தலைவன் கொடுப்பதனையே வாழ்வாகக் கொண்டு சிறந்திருந்ததனை
__________________________________________ விரிதிரைக்
கண்திரள் முத்தம் கொண்டு ஞாங்கர்த்
தேன் இமிர் அகன் கரைப் பகுக்கும்
கானல் அம் பெருந்துறைப் பரதவன்_______ (அ.நா.270 : 11-14)

என்னும் அடிகள் உணர்த்துகின்றன. பரந்தகன்ற திரைக்கடலில் திரண்ட வடிவினையுடைய முத்துக்களை வாரிக்கொண்டு வந்து  வண்டுகள் ஒலிக்கும் அகன்ற கரையிடத்து ஊர்ப்பக்கம் பலருக்கும் பகுத்துக் கொடுக்கும் இயல்பினை உடையவனாக இருந்ததனைக் காணமுடிகிறது.

தமக்குக் கிடைத்த மீனை விற்றுவிட்டு தாம் மட்டுமே வளமுடன் வாழ வேண்டும் என எண்ணாது முதலில் இரந்தவர்க்குக் கொடுத்துவிட்டுப்பின் விற்கச் சென்ற நெய்தல் நில மக்களின் கொடை நிலையினை

பெருங்களம் தொகுத்த உழவர் போல
இரந்தோர் வறுங் கலம் மல்க வீசி
பாடு பல அமைத்து, கொள்ளை சாற்றி
        கோடு உயர் திணி மணல் துஞ்சும் துறைவ (அ.நா.30 : 9-12)

என்னும் அடிகள் எடுத்தியம்புகின்றன. இரந்தோரின் கலம் நிறையக் கொடுத்த சிறப்பினையும், அவ்வாறு கொடுத்து பின் பல கூறுகளாக இட்டு விற்ற பின்  கரை உயர்ந்த செறிந்த மணற் பரப்பில் படுத்து உறங்கிய நிலையும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. அறச் செயல்கள் செய்து வாழ்வோர் அமைதியான உறக்கத்தைப் பெற்று வாழ்வர் என்பதும்  இங்குச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதனை உணரமுடிகிறது.

கொழுங்கண் அயிலை பகுக்கும் துறைவன் (அ.நா.70 : 4)

என்னும் அடி தனக்குக் கிடைத்த கொழுவிய கண்களுடைய அயிலை மீன்களை எல்லோர்க்கும் பகுத்துக் கொடுத்த தலைவனின் நிலையினை இவ்வடிகள் எடுத்துக்காட்டுகிறது.

விருந்தோம்பல்
       
        வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்னும் பெருமைக்குச் சங்க கால மக்களே சான்றாகின்றனர். விருந்தோம்பலில் சிறந்திருந்த தமிழரின் பண்புக்கு நெய்தல் நில மக்களும் சான்றாவதனை

        துறையும் மான்றன்று பொழுதே; சுறவும்
        ஓதம் மல்கலின், மாறுஆ யினவே
எல்லின்று; தோன்றல்! செல்லாதீம் ___ (அ.நா.300 : 16-18)

என்னும் அடிகளின் வழி உணரமுடிகிறது. பொழுது மயங்கி இருள் சூழ்ந்தது. நீர்த்துறைக்கண் அலைபெருகி வெள்ளம் மிகுதலால் சுறாக்களும் துன்பத்தை உண்டாக்கும். இற்றைப்பொழுது  எம் இல்லத்தில் விருந்தினர் போல் தங்கிச் செல்க எனத் தலைவி தலைவனிடம் வேண்டுகிறாள். இதன் வழி விருந்தினரைப் போற்றிய திறமும் போல் தலைவனைத் தங்க வைத்த தலைவியின் திறமும் புலப்படுகிறது. மக்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும் உணவிட்டு மகிழ்ந்தவர்கள் தமிழர்கள். துகாத்த திறத்தினை

பசுமீன் நொடுத்த வெண்நெல் மாஅத்
தயிர்மிதி மிதவை ஆர்த்துவம் நினக்கே (அ.நா.340 : 14-15)

என்னும் அடிகள் உணர்த்துகின்றன. பசுமீனை விற்று அதற்கு மாறாக வாங்கிவந்த வெள்ளிய நெல்லை இடித்து ஆக்கிய மாவில் தயிரிட்டுப் பிசைந்த உணவினை குதிரைகளுக்குக் கொடுத்த நெய்தல் நில மக்களின் மாண்பும் புலப்படுகிறது

பேச்சு வழக்கு

உதோ என்னும் வழக்கு சங்க காலம் முதலே இருந்துவந்ததனை நெய்தல் நில மக்களின் வாழ்வின் வழி அறிந்துகொள்ளமுடிகிறது.

உதுவ காண், அவர் ஊர்ந்த தேரே    (அ.நா.330 : 12)
உவக்காண் தோன்றும் எம் சிறுநல் ஊரே! (அ.நா.350 : 15)

என்னும் அடிகள் இடைப்பட்ட தூரத்தைக் குறிக்க உகரச் சுட்டைப் பேச்சு வழக்கில் பயன்படுத்தியுள்ளதனைக் காணமுடிகிறது. இன்றும் இவ்வழக்கு நாட்டுப்புறங்களில் பேச்சுவழக்கில் உள்ளதனை எண்ணி மகிழலாம்.

ஆடை
தமிழர் நாகரிகம் மலர் நாகரிகம் எனக் குறிப்பிடப்படுவதற்குக் காரணம் மலர்களையே அவர்கள் ஆடையாகவும் அணிகலனாகவும் குறியீடாகவும் கொண்டதனாலேயே என்பதனை உணரமுடியும். இயற்கையோடு ஒட்டி வாழ்ந்த நிலையினையும் உடல்நலத்தைப் பாதுகாத்து மணமுடைய வாழ்க்கை வாழ்ந்ததனையும் இதன் வழி அறிந்துகொள்ள முடிகிறது.

அழகிய மலர்களாலான பசிய தழையாடையை அழகு பொருந்த உடுத்திக் கொண்டமைக்கு

மணிப் பூம் பைந்தாழை தைஇ, அணித்தகப்
பல் பூங்கானல் அல்கினம் வருதல் (அ.நா.20 : 9-10)

என்னும் அடிகள் சான்றாகின்றன.தழையாடை அணிந்திருந்த பெண்களின் நிலையினை

பாசடைக் கலித்த கணைக்கால் நெய்தல்
விழவு அணி மகளிர் தழை அணிக் கூட்டும் (அ.நா.70 : 11-12)

என்னும் அடிகள் எடுத்துக்காட்டுகின்றன. பசுமையான இலைகளையும் தழைத்த திரண்ட தண்டுகளையும் உடைய நெயதல் பூக்களை விழாவிற்குத் தம்மை அலங்காரம் செய்து கொள்ளுகின்ற பெண்கள், தங்கள் தழையாடைக்கு அழகு செய்யும் பொருட்டு பறித்துச் செல்வதனையும்  இவ்வடிகள் உணர்த்துகின்றன.

விளையாட்டு

        விளையாட்டு மக்களுக்குப் பொழுதுபோக்காக மட்டுமின்றி உடல் நலத்தையும் உள்ள வளத்தையும் போற்றுவதனையே நோக்காகக் கொண்டது இதனை நெய்தல் நில மக்கள் விளையாடிய விளையாட்டுகளின் வழி அறிந்துகொள்ளமுடிகிறது.

செக்கர் ஞெண்டின் குண்டு அளை கெண்டி (அ.நா.20 : 3)

சிவந்த நண்டின் ஆழமான வளைகளை அகழ்ந்து எடுத்தல்

ஞாழல் ஓங்கு சினைத் தொடுத்த கொடுங் கழித்
தாழை வீழ் கயிற்று ஊசல் தூங்கி (அ.நா.20 : 5-6)

வளைந்த உப்பங்கழியிலுள்ள தாழையின் விழுதுகளாலான கயிற்றால் ஞாழல் மரத்தினது உயர்ந்த கிளையிற் கட்டிய ஊசலில் ஆடுதல்

கொண்டல் இடு மணல் குரவை முனையின் (அ.நா.20 : 7)

கீழ்க்காற்று கொண்டு வந்து குவித்த மணலில் குரவைக் கூத்தாடுதல்

திரை உழந்து அசைஇய நிரைவளை ஆயமொடு
உப்பின் குப்பை ஏறி, எல்பட
வருதிமில் எண்ணும் துறைவனொடு_____ (அ.நா.190 : 1-3)

வரிசையாக வளையல் அணிந்த மகளிர் கடல் அலையில் விளையாடிக் களிப்புற்று தளர்ச்சியடைந்தனர். அவர்களுடன் மைந்தர்கள் உப்பு மேட்டில் ஏறி நின்று இருளும் மாலைப்பொழுதில் கரைக்குத் திரும்பும் படகுகளை எண்ணிக் கொண்டிருத்தல்

விளையாட்டு ஆயமொடு வெண்மணல் உதிர்த்த
புன்னை நுண் தாது பொன்னின் நொண்டு (அ.நா.230 : 6-7)

புன்னை மரம் வெண்மையான மணற்பரப்பில் உதிர்த்திட்ட நுண்ணிய பூந்தாதுவினைப் பொன் என எண்ணி அதனை முகந்தெடுத்து சிற்றில் இழைத்துக் கூடி விளையாடுதல்

வளைவாய்க் கோதையர் வண்டல் தைஇ (அ.நா.370 : 1)

மாலையணிந்த பேதை மகளிர் சிற்றில் இழைத்து விளையாடிவிட்டு வீடு திரும்புதல்

என நெய்தல் நில மக்களின் விளையாட்டுகளை அகநானூற்றுப் பாடல்கள் எடுத்துக்காட்டியுள்ளன. இவை அனைத்துக்கும் உடலுக்கும் உள்ளத்துக்கும் கேடு விளைவிக்காததும் அறிவுப்புலமையை மேம்படுத்துவதாகவும் அமைந்துள்ளதனை எண்ணி மகிழலாம்.


புலவர்களின் உயிர் இரக்கம்

        சங்க இலக்கியப் புலவர்கள் இயற்கையைப் பாடும் புலமை உடையவர்களாக மட்டுமின்றி இயற்கையை நன்கு கற்றவர்களாகவும் திகழ்வதனை அறிந்துகொள்ளமுடிகிறது. ஒவ்வொரு விலங்கினுடைய வாழ்வையும் தாவரங்களுடைய வாழ்வையும் எவ்வாறு நுட்பமாகக் கண்டறிந்தனர் என்பதனை இன்றைய அறிவியலாளர்களும் வியந்து போற்றுகின்றனர்.

        இயற்கை வளத்தை அழிக்கும் மனிதனின் செயல்களைக் குறிப்பிடவும் புலவர்கள் தயங்கியதே இல்லை. மனிதன் இயற்கையை உண்டு தான் வாழமுடியும் என்பதனால் அதனை மறுக்கவும் இயலாது பாடியுள்ளதனைக் காணமுடிகிறது.

பெரிய கடற் பரப்பில் இறால் மீன்கள் நடுங்கும்படி மீன்களை முகக்கும் கொடிய தொழிலையுடைய மீனவன் என்பதனை

பெருங்கடற் பரப்பில் சேயிறா நடுங்க
கொடுந்தொழில் முகந்த செங்கோல் .. ….   (அ.நா.60 : 1-2)

என்னும் அடிகள் எடுத்துரைக்கின்றன. மீனவன் தொழிலே மீன் பிடிப்பது தான் என்பதனை எடுத்துக்காட்டும் நெய்தல் புலவர் குடவாயிற் கீரத்தனார் பிற உயிர்களைக் கொல்வதனை கொடுந்தொழில் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதன் வழி புலவருடைய இரக்கப்பண்பினைக் காணமுடிகிறது.

        பரதவர்கள் மீன்பிடித்தலையே தம் முதன்மைத் தொழிலாகக் கொண்டு வாழ்பவர்கள். வலையிறுக்கும் பெருங்கயிறு கட்டப்பட்ட குறுகிய கண்களுடைய அழகிய வலையில் கடலின் பெருமை குன்றப் பல வகை மீன்களைப் பிடிக்கும் பரதவர்களால் கடல்வளம் தன் இயல்பை இழப்பதனை

        நெடுங்கயிறு வலந்த குறுங் கண் அவ்வலை
கடல் பாடு அழிய, இன மீன் முகந்து (அ.நா.30 : 1-2)

என்னும் அடிகளில் வழி எடுத்துக்காட்டுகிறார் முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன். தலைவன் துன்பத்தை தீர்க்க பாங்கனை வேண்டுகிறான். சேற்றில்சிக்கி வண்டியை இழுக்கும் எருது போல் தான் வருந்துவதனை

        கை பூண் பகட்டின் வருந்தி (அ.நா.140 : 15)

என்னும் அடிகளின் வழி எடுத்துக்காட்டுகிறார் அம்மூவனார். இவ்வடிகள் வழி எருதின் துன்பத்தைக் கண்டு புலவர் வருந்தியுள்ளதனை உணரமுடிகிறது.

வலிமைகளை மட்டுமே பெரிதாகப் போற்றாது வீரர்களின் வலியையும் பாடியவர்கள் புலவர்கள். கோசர்கள் படை வீரத்தில் சிறந்து நின்றிருந்ததனை அவர்கள் முக அமைப்பில் அமைந்த வீர வடுக்களின் வழி புலப்படுத்துகிறார் புலவர்.

இரும்பு இடம் படுத்த வடுவுடை முகத்தர் (அ.நா.90 : 11)

என்னும் இவ்வடி இரும்பால் செய்யப்பட்ட படைக்கலன்கள் உண்டாக்கிய வடுக்களையுடைய முகத்தினைக் கொண்ட அஞ்சாமையையுடைய கோசர்கள் எனக் குறிப்பிடுகிறது. அவர்களுடைய வலிமையையும் அவர்களுக்கு உண்டான காயத்தால் ஏற்பட்ட வலியினையும் உணர்ந்து பாடியுள்ள புலவர்களின் திறத்தினையும் இங்கு எண்ணி மகிழலாம்..

புராணப் பதிவுகள்

அலர் மிகுந்த ஊரில் தலைவியைக் காக்கும் பொருட்டு தலைவன் மணமுடிக்க வருகிறான். அச்செய்தி ஊர் வாயினை மூட உதவும் நிலையினை இராமனின் கட்டளையால் பறவைகளின் ஒலி நின்ற புராணத்தின் வழி எடுத்துக்காட்டப்படுகிறது. இதனை

        வெல்போர் இராமன் அரு மறைக்கு அவித்த
        பல்வீழ் ஆலம் போல
ஒலி அவிந்தன்று, இவ் அழுங்கள் ஊரே (அ.நா.70 : 15-17)

என்னும் அடிகள் உணர்த்துகின்றன.

அழகுடையதும் அவியாத வேள்வித் தீயினை உடையதுமான செல்லூரின் கண் மதம் பொருந்திய யானைக் கூட்டம் போர்க்களத்தில் அழித்து அரசர் குலத்தை அடியோடு அறுத்தழித்தவன் பரசுராமன் என்னும் புராணத்தை

கெடாஅத் தீயின் உருகெழு செல்லூர்
கடாஅ யானைக் குழூஉச்சமம் ததைய
மன்மருங்கு அறுத்த மழுவாள் நெடியோன்

என்னும் அடிகளில் எடுத்துக்காட்டுகிறார் மருதனிளநாகனார். தாம்விரும்பிய பொருளை எடுத்துரைக்க புராண நிகழ்வுகளை எடுத்துகாட்டிய புலவரின் திறத்தினை இங்கு நன்குணரமுடிகிறது.

நிறைவாக

சங்க இலக்கியங்கள் தங்க இலக்கியங்களாக என்றும் போற்றப்படுவதற்கான காரணம் அவை மக்களின் வாழ்வை எடுத்தியம்பும் வரலாற்று ஆவணங்களாகத் திகழ்வதனாலேயே எனத் தெளியமுடிகிறது. அகநானூற்றுப் பாடல்கள் வைப்பு முறையால் மட்டுமின்றி அகப்பொருளை எடுத்துரைப்பதிலும் தனித்துவத்துடன் விளங்குவதனைக் கற்றுணர முடிகிறது.

தமிழர்கள் முதல், கரு, உரி எனப் பொருளை வகுத்து வாழ்ந்த திறத்தினை ஒவ்வொரு பாடலிலும் வெளிப்படுத்தியுள்ளதன் வழி அகநானூற்றுப் புலவர்களின் திறம் தெள்ளிதின் புலப்படுகிறது.

தமிழர்கள் தாவரங்களையும் பறவைகளையும் போற்றிப் பாதுகாத்த திறத்தினாலேயே இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழ்ந்தனர் எனத் தெளிவதற்கு அகநானூற்றுப் பாடல்களே சான்றாகின்றன.

        சங்க கால மக்களின் பேச்சு வழக்கு இன்றும் நடைமுறையில் இருந்து வருவதனை அகநானூற்றுச் சொற்களின் வழி அறிந்துகொள்ளமுடிகிறது. இதன் வழி தமிழ்மொழியின் சிறப்பினை நன்குணரமுடிகிறது.         நெய்தல் நில மக்கள் ஏழ்மையிலாயினும் வளமையினாலும் அறநெறி தவறாது வாழ்ந்த திறத்தினை அகநானூறு எடுத்துக்காட்டியுள்ளது.

        எல்லா உயிர்களிடமும் அன்பு காட்டி மனிதர்களைப் போலவே காத்த பெருமையினை நாய், கோழி, குதிரை வளர்ப்பின் வழி புலப்படுத்தியுள்ளனர் அகநானூற்றுப் புலவர்கள். நெய்தல் வாழ்வைப் படம்பிடித்துக் காட்டிய புலவர்கள் உயிர் இரக்கத்துடன் பாடல் புனைந்த திறத்திற்கு அகநானூற்றுப் பாடல்கள் துணைசெய்துள்ளதனைக் காணமுடிகிறது.

        உடல் நலத்திற்கும் உள்ள நலத்திற்கும் நன்மை செய்யும் விளையாட்டுக்களை சங்க இலக்கியமான அகநானூற்றைக் கற்பதன் வழி உணர்ந்துகொள்ள இயலும் எனத் தெளியமுடிகிறது.
       
உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்னும் வேறுபாடு கருதாது அனைவருடைய வாழ்வுக்கும் முதன்மை அளித்து படம்பிடித்துக்காட்டும் பெருமையுடையவர்களாகச் சங்கப் புலவர்கள் திகழ்ந்தனர். இதற்கு அகநானூற்றுப் புலவர்களே சான்றாவதனை உணரமுடிகிறது.

அகநானூறு அன்பின் ஐந்திணையின் வழி சங்க கால மக்களில் சமூக வாழ்வை படம்பிடித்துக்காட்டும் வரலாற்றுப்பெட்டகமாகத் திகழ்கிறது எனத் தெளியமுடிகிறது.
*************************



சிறுபஞ்ச மூலத்தில் அணிநலன்கள் - Classical Literature Cirupanja moolam


சிறுபஞ்ச மூலத்தில் அணிநலன்கள்

முனைவர் ம.ஏ. கிருட்டினகுமார், தமிழ்ப் பேராசிரியர் (துணை), புதுச்சேரி
உலாப்பேசி : 9940684775

        சங்க இலக்கியங்கள் தங்க இலக்கியங்கள் எனப் போற்றப் பெறுவதற்கான காரணங்கள் பல. தங்கம் என்றும் தனித்தன்மை வாய்ந்ததாக தீயில் கூட மெருகேறும் தன்மையுடையதாக விளங்குவதைப்போலவே எக்காலத்தும் நிலைத்து நிற்கும் பெருமையுடையனவாக சங்க இலக்கியங்கள் திகழ்ந்தன ;திகழ்கின்றன ; திகழும். அத்தகைய இலக்கியங்களின் பெருமைக்கு அணி சேர்க்கும் சிறப்புடையனவாக பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அமைந்துள்ளன. அத்தகைய இலக்கியங்களுள் சிறுபஞ்ச மூலத்தின் அணிநலன்களைக் காண விழைந்ததன் விளைவாகவே இக்கட்டுரை அமைகிறது.
சிறுபஞ்ச மூலம்
        சிறுமையை உண்டாக்கக் கூடிய பஞ்சத்தின் (வற்கடம்) கொடுமையினை அறுக்கும் மாரி போல் பெருமையுடையதாதலால் இந்நூல் சிறுபஞ்ச மூலம் எனக் குறிக்கப்படுகிறது.மழை வந்தால் எல்லா வளமும் தானே கிடைக்கும் என்பதும் மழை பொய்ப்பின் எத்தகைய வளமுடைய நாடும் குன்றும் என்பதும் தெய்வப் புலவர் திருவள்ளுவரின் வாக்கு.
        கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
        எடுப்பதூஉம் எல்லாம் மழை                                  (திருக்குறள் – 15)

என்னும் குறள் மழை எவ்வாறு கெடுக்கும் எவ்வாறு கொடுக்கும் என்பதன் பெருமையினை அளபெடையின் வழி விளக்கியுள்ளதும் இங்கு எண்ணத்தக்கது.இக்கூற்றினை நன்கு உணர்ந்த காரியாசான் உடல் நிலையின் வறுமையைப் போக்க மழை பொழிவதுபோல் உள்ள நிலையின் வறுமையைப் போக்கும் வழிமுறைகளைப் பாடல்களாகப் பொழிந்துள்ளார். இதனை
        ஒத்த ஒழுக்கம் கொலைபொய் புலால்களவொடு
        ஒத்த இவைஅல ஓர்நால்இட்டு – ஒத்த
        உறுபஞ்ச மூலம்தீர் மாரிபோல் கூறீர்
        சிறுபஞ்ச மூலம் சிறந்து              (சி.ப.மூ. பா – 2)

என்னும் பாடல் வழி புலப்படுத்துகிறார்.சிறுபஞ்ச மூலம் என்பது சிறிய ஐந்து வேர்களைக் (கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி) கொண்ட மூலிகை.அது எப்படி உடலுக்கு நன்மை செய்யுமோ அப்படி இந்நூலிலுள்ள வெண்பா ஒவ்வொன்றிலும் ஐந்து கருத்துக்கள் உளத்திற்கு நன்மை செய்கின்றன எனவும்குறிப்பிடப்படுகிறது.இப்பாடலில் நூலின் இயல்பினைக் குறிக்கும் போதே மாரி போல் பஞ்சத்தைத் தீர்க்கும் எனக் கூறியுள்ளதன் வழி எடுத்துக்காட்டு உவமை பொருந்தியுள்ளதனையும் காணமுடிகிறது.
காரியாசானின் கவித்துவம்
        சிறுபஞ்சமூலத்தை இயற்றிய காரியாசான் இலக்கிய நிலையில் சிறந்திருப்பதற்குக் காரணம் அந்நூலில் அமைந்துள்ள இலக்கணக் கட்டமைப்பே என்பதனை உணரமுடிகிறது. தொகை நிலைச் செய்யுளுக்குரிய இலக்கணத்தை
        தொகை நிலைச் செய்யுள் தோன்றக் கூறின்
        ஒருவர் உரைத்தவும் பல்லோர் பகர்ந்தவும்
        பொருள் இடம் காலம் தொழில் என நான்கினும்
        பாட்டினும் அளவினும் கூட்டிய வாகும்                       (தண்டி-பொது :5)
என்னும் பாடல் வரையறுக்கிறது.அவ்வகையில் ஒரே பொருளான அறநெறிகளை மையமாகக் கொண்டு அளவடி வெண்பா வடிவில் பாடப்பெற்றுள்ளதனையும் காணமுடிகிறது.சிறுபஞ்சமூலத்தின் பாடல்கள் செய்யுள் அமைப்பு முறையால் மட்டுமின்றி பொருளாலும் சிறந்து விளங்குவதனைக் காணமுடிகிறது.இவ் இரண்டிற்கு அப்பாலும் அணிநயத்திலும் சிறப்புறும் வகையில் பாடலைப் புனைந்துள்ளார் காரியாசான். தன்னுடைய நூல் அறியாமை என்னும் இருளிலிருந்து அறிவுடைமை என்னும் நிலைக்கு அழைத்துச் சென்றதனை
        மல்லிவர்தோண் மாக்காயன் மாணாக்கன் மாநிலத்துப்
        பல்லவர் நோய்நீக்கும் பாங்கினால் – கல்லா
        மறுபஞ்சந் தீர் மழைக்கை மாக்காரி யாசான்
        சிறுபஞ்ச மூலஞ்செய் தான்.                          (சி.ப.மூ. பா – 7)

என்னும் பாயிரப் பாடல் எடுத்துக்காட்டியுள்ளது.இப்பாடலில் வேற்றுமையணி பொதிந்துள்ளதனைக் காணமுடிகிறது.கொடுக்கும் பண்பால் மாரியும்
(மழை) காரியும் (காரியாசான்) ஒன்றுபோல் இருப்பதனை எடுத்துக்காட்டி மாரி பயிர்களைக் காப்பதனையும்  காரி உயிர்களைக் காப்பதனையும் எடுத்துக்காட்டுகிறார். முதலில் இரண்டிற்கும் உள்ள ஒற்றுமையைக் கூறி பின்னர் வேறுபடுத்தும் பெருமையினை எடுத்துக்கூறுவது என்னும் நிலையினைக் காணமுடிகிறது.
        கூற்றினும் குறிப்பினும் ஒப்புடை இருபொருள்
        வேற்றுமைப் படவரின் வேற்றுமை அதுவே
(தண்டி –பொரு – வேற்றுமை : 1)
என்னும் தண்டி  இலக்கண நூற்பா வேற்றுமையணிக்கு வரையறை கூறியுள்ளதும் இங்கு எண்ணத்தக்கது.
அணி நயம்
        மொழியின் பெருமை சொல்லாலும் பொருளாலும் மட்டுமின்றி அதனை எடுத்துரைக்கும் முறையாலும் சிறப்படைகிறது.அத்தகைய சிறப்பினையே அணி இலக்கணம் எனத் தனி இலக்கணம் அமைத்தனர் தமிழர்.மொழி வளம் உடையோரால் மட்டுமே அணி நலத்துடன் கூடிய பாடலைப் படைக்க இயலும்.அணிநயம் உடைய பாடலே காலம் கடந்து நிற்கும் பெருமையுடையனவாகத் திகழும் என்பதற்கு இலக்கணமாக சிறுபஞ்சமூலம் இயற்றப்பட்டுள்ளதனைக் காணமுடிகிறது. அணிகளுக்கெல்லாம் தாயாக விளங்கும் உவமை அணியின் நிலையினை
        உயர்ந்ததன் மேற்றே உள்ளுங் காலை (தொல்.:1224)
என்னும் நூற்பா எடுத்துரைக்கிறது.உவமை என்பது எல்லோர்க்கும் எளிதில் விளங்கிக்கொள்ளும் வகையில் அமைவதோடு மட்டுமின்றி உயர்ந்த பொருளுடனே ஒப்பிடவேண்டும் எனவும் வரையறுக்கிறது தொல்காப்பியம். அவ்வாறு உவமிக்கப்படும்போது பெருமை சிறுமை என்னும் நோக்கில் இல்லாது மனக் குறிப்பின் வழி தோன்றும் நிலையினை
பெருமையும் சிறுமையும் சிறப்பின் தீராக்
குறிப்பின் வரூஉம் நெறிப்பாடுடைய (தொல். :1231)

என்னும் நூற்பாவின் வழி புலப்படுத்துகிறார் தொல்காப்பியர்.  காரியாசானும் அவ்வாறே தம் குறிப்பிற்கேற்றவாறு உவமையைக் கையாண்டுள்ளதனை
        குளந்தொட்டுக் கோடு பதித்துவழி சீத்து
        உளந்தொட் டுழுவயல் ஆக்கி – வளந்தொட்டு
        பாகு படுங்கிணற்றோ டென்றிவ்வைம் பாற்படுத்தான்
        ஏகுஞ் சுவர்க்கத் தினிது                               (சி.ப.மூ. பா – 66)

என்னும் பாடலின் வழி அறிந்துகொள்ளமுடிகிறது. மக்களுக்கும் விலங்குகளுக்கும் பயனளிக்கும் - குளங்களை வெட்டி ; மரங்களை நட்டு ;  நடந்து செல்வதற்கான பாதையினை சீர்செய்து ; தரிசு நிலங்களை விளைநிலமாக மாற்றி, கிணற்றை உண்டாக்கும் செயலைச் செய்பவன் உயர் நிலையினை அடைவான் எனக் கூற விழைகிறார் காரியாசான். அத்தகைய பண்புடையோர் பெருமை அடையும் நிலையினைத் தாம் குறிப்பால் அறிந்த சுவர்க்கத்தை அடைவர் எனக் குறிப்பிட்டுள்ளதனைக் காணமுடிகிறது.அறியாத ஒன்றினை அறிந்ததன் வழி சொல்வதே உவமையின் பெருமையாகும்.அத்தகையநற்பண்புடையோர் சுவர்க்கத்தினை அடைவர் எனக் குறிப்பிட்டுள்ளதனையும் உணரமுடிகிறது.
உருவக அணி
        உவமிக்கப்படும் பொருளுக்கும் உவமைப் பொருளுக்கும் வேற்றுமை இல்லாதவாறு கூறுவது உருவகம் எனக் குறிக்கப்படுகிறது.
        உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து
        ஒன்றென மாட்டின் அஃது உருவகம் ஆகும்           (தண்டி- பொரு :35)

என்னும் நூற்பா உருவகத்திற்கு இலக்கணம் வகுத்துள்ளதனைக் காணமுடிகிறது. தன்மானம் என்பது குடும்ப மானமே என்பதனை உணர்ந்து தன்னலம் விழையாது தன்னைச் சார்ந்தார் நலமே பெரிதென எண்ணும் கற்புடைய பெண்ணானவள் கணவனுக்கு அமிர்து ; கற்ற செருக்கின்றி கற்றதன் பயனறிந்து பணிவுடன் வாழ்பவன் உலகத்தார்க்கு அமிர்து ; நன்மையை மட்டுமே செய்யக்கூடிய நாடு அங்குள்ள அனைத்து உயிர்களுக்கும் அமிர்து ; மேகத்தைத் தொடும் கொடியுடைய வேந்தன் அந்நாட்டிற்கே அமிர்து. சேவகனும் மன்னனின் எண்ணமறிந்து செயல்படத்தக்கானாயின் அவன் வேந்தனுக்கு அமிர்து  என்பதனை
        கற்புடைய பெண்ணமிர்து கற்றடங்கி னான்அமிர்து
        நற்புடைய நாடமிர்து நாட்டுக்கு – நற்புடைய
        மேகமே சேர்கொடி வேந்துஅமிர்து சேவகனும்
        ஆகவே செய்யின் அமிர்து                     (சி.ப.மூ. பா – 4)

என்னும் பாடலின் வழி உணர்த்தியுள்ளார்.அமுது போன்ற பெண் எனக்குறிப்பிடாது அமிர்தே பெண் எனவும் அமிர்து போன்ற நாடெனாது நாடமிர்துஎனவும்உருவகப்படுத்தியுள்ளதனையும் காணமுடிகிறது.
பின்வரு நிலை அணி
        ஒரு செய்யுளில் முதன்மை அழகாவது சொல்லழகே.இதனை வலியுறுத்தும் வகையிலேயே எதுகை, மோனை, இயைபு, முரண் எனப் பல நயங்கள் கையாளப்படுள்ளதனைக் காணமுடிகிறது.ஒரு செய்யுளில் ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்து அப்பாடலின் சிறப்புக்குப் பெருந்துணையாக நிற்பதனையும் காணமுடிகிறது.அவ்வாறு செய்யுளில் அழகு சேர்க்கும் நயத்தை பின்வருநிலையணி எனக் குறிப்பிடப்படுகிறது. இதனை
        முன்வரும் சொல்லும் பொருளும் பலவயிற்
        பின்வரும் என்னிற்பின்வரு நிலையே                        (தண்டி- பொரு : 41)

எனத் தண்டியலங்காரம் குறிப்பிடுகிறது.அவ்வாறு வரும் சொற்கள் ஒன்றுபோலிருப்பினும் பொருளால் மாறுபடுவதுண்டு.அவ்வாறு அமையும் அணி சொற்பின் வருநிலையணி எனக் குறிப்பிடப்படுகிறது.

        உடம்பொழிய வேண்டின் உயர்தவம் ஆற்றீண்டு
        இடம்பொழிய வேண்டுமேல் ஈகை – மடம்பொழிய
        வேண்டின் அறிமடம் வேண்டேல் பிறர்மனை
        யீண்டின் இயையும் திரு                                       (சி.ப.மூ. பா – 6)

என்னும் சிறுபஞ்சமுலப் பாடல் உடம்பு (பிறப்பு) ஒழிய (பொழிய) வேண்டுமெனில் உயர் தவத்தைச் செய்ய வேண்டும். இருக்கும் இடம் புகழ் பெருக (பொழிய) வேண்டுமாயின் மற்றவர்களுக்குக் கொடுத்து வாழ வேண்டும் எனவும் கருணை நிறைய (பொழிய) வேண்டுமாயின் அறிவின் வழி நடத்தல் வேண்டும் எனவும்  மூன்று இடங்களில் பொழிய என்னும் சொல்லைப் பயன்படுத்தியுள்ளதனைக் காணமுடிகிறது. பொழிய என்பது ஒழிய, பெருக, நிறைய என்னும் பொருளைக் குறித்து இப்பாடல் சிறப்புற புனையப்பட்டுள்ளது தெளிவாகிறது.
        சொல்லும் பொருளும் ஒன்று போலவே அமைந்து பாடல் சிறப்புறத் துணை செய்யும் நயத்தினை சொற்பொருட்பின்வரு நிலையணி எனக் குறிப்பிடுவர்.
        படைதனக்கு யானை வனப்பாகும் பெண்ணின்
இடைதனக்கு நுண்மை வனப்பாக் – நடைதனக்குக்
கோடா மொழிவனப்புக் கோற்கதுவே சேவகர்க்கு
வாடாத வன்கண் வனப்பு                             (சி.ப.மூ. பா – 7)

என்னும் இப்பாடலில் நால்வகைப் படைக்கு யானைப்படை அழகாகும் (வனப்பாகும்).பெண்ணின் இடைக்கு மெல்லிய தன்மை அழகாகும் (வனப்பாகும்).ஒழுக்கத்திற்கு மாறாத சொல் அழகாகும் (வனப்பாகும்).ஆட்சி நடத்தும் செங்கோலுக்கும் கூறியதை நிறைவேற்றும் மாறாத சொல்லே அழகாகும் (வனப்பாகும்).படை வீரர்க்கு வாடாத வீரமே அழகாகும் (வனப்பாகும்) எனக் கூறுகிறார் காரியாசான்.இப்பாடலில் வனப்பு என்னும் சொல் சொல்லாலும் பொருளாலும் ஒன்று போலவே அமைந்து பாடலுக்கு நயம் சேர்த்துள்ளதனைக் காணமுடிகிறது. அவ்வாறே கண்ணுக்கு அழகு கருணையால் என்றும்  காலுக்கு அழகு இரப்பதற்குப் பிறரிடம் செல்லாததால் என்றும் ஆய்வுக்கு அழகு முடிவைனைத் தெளியக் கூறுதல் என்றும் இசைக்கு அழகு நன்றெனக் கூறுதல் என்றும் புகழுடைய வேந்தனுக்கு அழகு மக்களை வாட்டாது வளமாகக் காத்தல் என்றும் காரியாசான் அறிவுறுத்துவதனை

கண்வனப்பு கண்ணோட்டங் கால்வனப்புச் செல்லாமை
எண்வனப்பு இத்துணையாம் என்றுரைத்தல் – பண் வனப்புக்
கேட்டார்நன் றென்றல் கிளர்வேந்தன் தன்னாடு
வாட்டான்நன் றென்றல் வனப்பு                      (சி.ப.மூ. பா – 9)

என்னும் பாடல் எடுத்துக்காட்டுகிறது.இப்பாடலிலும் அழகு என்னும் பொருளுடைய வனப்பு என்னும் சொல் மீண்டும் மீண்டும் வந்து அணி சேர்த்துள்ளதனை அறிந்துகொள்ளமுடிகிறது.

முரண் அணி
        முரண் என்பது ஒரு சொல்லுடன் அதற்கு எதிர்மாறான சொல்லினை அமைத்தல்.செய்யுளின் நயத்திற்கு முரண் தொடையும் சிறப்பு சேர்ப்பதனாலேயே கீழ்க்கணக்கு  நூல்கள் முரண் தொடையினைக் கையாண்டு சிறப்புற்றிருப்பதனைக் காணமுடிகிறது. முரண் என்பதனைத் தண்டி ஆசிரியர் விரோதம் எனக் குறிப்பிட்டு
        மாறுபடு சொற்பொருள் மாறுபாட்டு இயற்கை
        விளைவுதர உரைப்பது விரோதம் ஆகும்     (தண்டி- பொரு :81)

என இலக்கணம் வரையறுத்துள்ளதனைக் காணமுடிகிறது. காரியாசானும்  சொல், பொருள் என்னும் இரு நிலைகளில் முரணை அமைத்து பாடியுள்ளதற்கு
               
பூத்தாலும் காயா மரமுள நன்றறியார்
மூத்தாலு மூவார்நூல் தேற்றாதார் – பாத்திப்
புதைத்தாலும் நாறாத வித்துள பேதைக்கு
உரைத்தாலுஞ் செல்லாது உணர்வு                   (சி.ப.மூ. பா – 23)

என்னும் பாடல் சான்றாகின்றது.பூத்தால் காய்க்க வேண்டும் என்பது இயற்கையின் பொது இயல்பு.அவ் இயற்கையினின்று மாறுபட்ட சில மரங்களும் உண்டு.அம்மரங்களைப் போல் கற்றுத் தெளியாதவர் மூத்தாலும் அறிவினால் முதிர்ச்சி அடையாதவராகவே இருப்பர். கடினப்பட்டு பாத்தி கட்டி விதைத்தாலும் முளைக்காத வித்தும் உண்டு .அவ்வாறே எதையும் ஏற்க மனமில்லாத ஆணவம் உடைய பேதைகள் எத்தனை நன்மை தரக்கூடிய சொற்களை எவ்வளவு உணர்ச்சியுடன் எடுத்துரைப்பினும் உணர்வற்றவராக இருப்பர். இப்பாடலில் பூத்தாலும் என்னும் சொல்லுக்கு முரணாக பூக்காது என்னும் சொல் அமையாது காயாது என்றும் மூத்தாலும் என்னும் சொல்லுக்கு முரணாக மூவாது என்றும் புதைத்தாலும் என்னும் சொல்லுக்கு முரணாக எழுகின்ற என்னும் சொல் அமையாது நாறாத என்றும் உரைத்தாலும் என்னும் சொல்லுக்கு முரணாக உரைக்காத என்னும் சொல் இடம்பெறாது  செல்லாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதனைக்  காணமுடிகிறது. இதன் வழி ஒரே பாடலில் சொல்லாலும் பொருளாலும் முரண் நயத்தைக் காரியாசன் கையாண்டுள்ளதனை அறிந்துகொள்ளமுடிகிறது.

இயல்பு நவிற்சி அணி

        செய்யுளுக்கு அழகு என்பது அதன் எளிமைத் தன்மையினாலும் அமைதல் உண்டு.உள்ளதைக் கூறுதல் என்பதும் செய்யுளுக்கு அணி சேர்க்கும் என்பதனைப் புலவர்கள் தங்கள் செய்யுளின் வழி நிறுவியுள்ளனர்.இவ்வகைச் செய்யுளை தன்மை அணி எனத் தண்டி ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
       
        எவ்வகைப் பொருளும் மெய்வகை விளக்கும்
        சொன்முறை தொடுப்பது தன்மையாகும்                      (தண்டி- பொரு : 28)

என இயல்பான நிலையினை அதற்குரிய சொற்களால் உரைக்கும் நயத்தையே தன்மை அணிக்குரிய இலக்கணமாக தண்டியாசிரியர் வரையறுத்துள்ளதனைக் காணமுடிகிறது.நாக்கின் சுவையினைக் கட்டுப்படுத்த இயலாது அளவுக்கு அதிகமாக உண்பது தீமையினையே உண்டாக்கும் இதனை உணர்ந்து உண்ணாது நோற்பது உடலுக்கும் மனதுக்கும் இயல்பான நன்மையை உண்டாக்கும். விருந்தினர் மனம் நோகாதவாறு வரவேற்பது இல்லறத்தார்க்கு இயல்பாகும்.எளியாரை இகழ்ந்துரைத்தல் தீய குணமுடையோர்க்கு இயல்பாகும்.பிறருடைய இல்லத்தை (மனைவியை) நாடாதது நன்று தீதுணர்ந்த அரியவர்க்கு இயல்பாகும்.பிறர் கையிலிருந்து பெற்று உண்ணாத கொள்கை பெரியவர்க்கு இயல்பாகும் என்கிறார் காரியாசான்.

        உண்ணாமை நன்றுஅவா நீக்கி விருந்துகண்மாறு
        எண்ணாமை நன்றுஇகழல் தீதெளியார் – எண்ணின்
        அரியர்ஆ வார்பிறர்இல் செல்லாரே உண்ணார்
பெரியார் ஆவார்பிறர் கைத்து                                        (சி.ப.மூ. பா – 52)

என்னும் இப்பாடல் உடல் மற்றும் மனதின் இயல்பினையும், இல்லறத்தாரின் இயல்பினையும், தீயோரின் இயல்பினையும், அரியவரின் இயல்பினையும் பெரியவரின் இயல்பினையும் தெளிவாக எடுத்துரைக்கிறது. இப்பாடலில் உள்ளதை உள்ளவாறே எடுத்தியம்புள்ள திறத்தினை அறியமுடிகிறது.

நிறைவாக

        இலக்கண வகையுள் அணி இலக்கணமே இலக்கியத்தின் நயத்திற்குப் பெருந்துணையாக நிற்பதனால் புலவர்கள் அணி இலக்கணத்துடன் பாடல்களைப் புனைந்துள்ளதனைக் காணமுடிகிறது.
அவ்வரிசையில் காரியாசான் அறத்தின் பொருளை அணிநயத்துடன் பாடியுள்ள திறத்திற்குச் சான்றாக
சிறுபஞ்சமூலம் படைக்கப்பட்டுள்ளதனை அறிந்துகொள்ளமுடிகிறது.

        சிறுபஞ்சமூல நூலின் இயல்பினைக் கூற வந்த காரியாசான் மாரி போல் இந்நூல் உலகத்தவர்க்கு நன்மையைச் செய்யும் என்னும் நோக்கில் இயற்றப்பட்டுள்ளதனைக் குறிப்பிட்டுள்ளதன் வழி உவமையணியினைத் தொடக்கம் முதலே கையாண்டுள்ளதனைக் காணமுடிகிறது.
       
        இந்நூலின் பாயிரமானது உடலுக்கு மருந்து நன்மை செய்வது போல் உளத்திற்கு மருந்தாக சிறுபஞ்சமூலப் பாடல்கள் அமைந்துள்ளதனை எடுத்துக்காட்டுகிறது.இதன்வழி பாயிரப் பாடலும் அணிநலத்துடனே அமைந்துள்ளதனையும் அறிந்துகொள்ள முடிகிறது.

        உள்ளதை உள்ளவாறே கூறும் இயல்பு நவிற்சி முதல் அணிகளுக்குத் தாயாக விளங்கும் உவமை அணி வரை பல்வேறு அணி நயங்களைக் கொண்டதாக சிறுபஞ்ச மூலம் சிறப்பதனைக் காணமுடிகிறது.

        சொல்லால் மட்டுமின்றி பொருளாலும் சிறக்கச் செய்யும் அணி நலன்களான பின்வரு நிலை, முரண், உருவகம் எனப் பல அணிநலன்களைக் கையாண்டுள்ளதன் வழி சிறுபஞ்சமூலம்சிறந்த அற இலக்கியமாக மட்டுமின்றி அணி இலக்கியமாகவும் சிறக்கிறது எனத் தெளியமுடிகிறது.

******************