தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

ஞாயிறு, 26 மே, 2019

வள்ளலார் நோக்கில் கருணை -Vallalar Ramalinga adigal


வள்ளலார் நோக்கில் கருணை



முனைவர் ம.ஏ. கிருஷ்ணகுமார், தமிழ்ப் பேராசிரியர் (துணை),  புதுவை – 605008. உலாப்பேசி : 99406 84775)



        திரு அருட் பிரகாச வள்ளலார் எனப் போற்றப்பெறும் இராமலிங்க அடிகளின் (05.10.1823-30.01.1874) இலக்கியக்கொடை அறநெறிக்கு மட்டுமின்றி அருள்நெறிக்கும் இட்டுச்செல்லும் பெருமையுடைத்து. பக்தி நெறியில் நின்று புரட்சித் துறவியான வள்ளலாரின் ’திருவருட்பா’ முழுதும் கருணைமயமாகவே திகழ்கின்றது. பக்தி நெறிக்கு அடித்தளமாகும் உயிர் இரக்கம் குறித்த மிகச்சில குறிப்புகளை மட்டும் எடுத்துக்காட்டி வள்ளலாரின் இலக்கியக் கொள்கையாக கருணையே முன் நிற்பதை எடுத்துரைக்க எண்ணியதன் விழைவாகவே இக்கட்டுரை அமைகிறது. 



வள்ளலாரும் கருணையும்



        வள்ளலார் அனைத்து உயிர்களிடமும் கருணை கொண்டிருந்ததற்கு அவருடைய பாடல்களே அகச் சான்றுகளாகின்றன. வள்ளலாருடைய இலக்கியங்களில் கருணையை நீக்கிவிட்டு பொருள் காண விழைதல் பயனுடைத்தன்று. கருணையுடன் பார்த்தலே கண்ணின் பயன் என்பதனாலேயே இறையானது கண்ணினை மட்டும் எப்போதும் ஈரத்துடன் படைத்துள்ளது. இவ் உண்மையினை உணர்ந்து அனைத்து உயிர்களிடமும் இரக்கம் கொள்ள வேண்டும் என்பதனையே வள்ளலார் தம் பாடல்களில் வழி உணர்த்த விழைகிறார். மனித உயிர்களிடம் மிகுந்த கருணை கொண்ட வள்ளலார் விலங்குகள் மற்றும் பயிர்களின் வாட்டத்தையும் கண்டு மிகவும் வருந்துகிறார். ‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடி’யது ஏனெனில் பயிர் வாட்டத்தால் உயிர் வாட்டம் நிகழும் என்பதை உணர்ந்தேயாம். இதன் வழி வள்ளலாரின் கருணையினைத் தெற்றெனத் தெளியலாம்.



பதவி இருந்தால் – சாவே போ ய்விடும்



வயிற்றைக் கிள்ளும் பசிக்கொடுமையிலிருந்து மட்டுமின்றி உடலிலிருந்து உயிரைப் பிடுங்கி எறியும் மரணக் கொடுமையிலிருந்தும் விடுபட வழிகாட்டுகிறார் வள்ளலார்.



வனைந்துவனைந் தேத்துதும்நாம் வம்மின்உல கியலீர்

        மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்

புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன்

        பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே (ஞானசரியை – 1:4,5)



என்னும் இப்பாடலின் வழி மனித உயிர்களிடம் கொண்ட கருணையின் உச்சத்தை அறியமுடிகிறது. மனிதனைக் கடைத்தேற்ற தம் நிலையிலிருந்து இறங்கி ; இரங்கி சத்தியம் செய்யும் அருமையினையும் காணமுடிகிறது.



சித்திருந்து னித்திருந்து விழித்திருந்தால் மரணமிலாப் பெருவாழ்வைப் பெறலாம். சாகாக்கலை வேகாக்கால் போகாப்புனல் இவை மூன்றையும் முறையே பின்பற்றினால் மரணக் கொடுமையிலிருந்து நீங்க இயலும் என வழிகாட்டுகிறார். காற்றையும் நீரையும் சீராக்கும் திறத்தில்  பயிற்சி பெற்றால் சாகாக் கலை தானே வாய்க்கும் என்பதனை இதன் வழி உணர்த்தியுள்ளார் வள்ளலார். முதல் மூன்று சொற்களின் பொருளை உணர்ந்து பின்பற்றினால் அம்முதலெழுத்துக்களே பின் வரக் கூடிய மூன்று சொற்களின் முதலெழுத்துக்களின் பொருளை அளித்துவிடும் என்னும் சொல்லழகினையும் இங்கு எண்ணி மகிழலாம்.



கடவுள் உள்ளம்



        மனிதன் தான் செய்யும் நன்மையாலும் தீமையாலும் கடவுளும் விலங்குமாக மதிப்பிடப்படுகிறான். மனிதன் மட்டுமே அனைத்து உயிர்களையும் காக்கும் வல்லமையோடு படைக்கப்பட்டுள்ளான். மாறாக அனைத்து உயிர்களும் மனிதனுக்குத் துணை நிற்கும் வகையில் மனிதன் தன்னை வடிவமைத்துக் கொண்டது மனிதனுடைய சுயநலப்போக்கின் உச்சமாக அமைகின்றது. அவ்வாறின்றி மனிதன் கருணையுடன் வாழ வேண்டுமென்பதனை



எவ்வுயிர்த் திரளும் என்னுயிர் எனவே

எண்ணிநல் இன்புறச் செயவும்

அவ்வுயிர் களுக்கு வருமிடை யூற்றை

அகற்றியே அச்சநீக் கிடவும்

செவ்வையுற் றுனது திருப்பதம் பாடிச்

சிவசிவ என்றுகூத் தாடி

ஒவ்வுறு களிப்பா லழிவுறா திங்கே

ஓங்கவும் இச்சைகாண் எந்தாய் (பிள்ளைச் சிறு விண்ணப்பம், தி.பெ.தி. பா.6)



என்னும் பாடலின் வழி உணர்த்தியுள்ளார் வள்ளலார். மனிதன் பிற உயிர்களுக்கு நன்மை செய்யும் உள்ளத்தாலேயே இவ் வாழ்வு  பயனுடை வாழ்வாக அமையும் என்பதனையும் பிற உயிர்களுக்குக் கேடு செய்யும் வாழ்வு அழிவுறும் வாழ்வு என்பதனையும் தெளிவுறுத்தியுள்ளதைக் காணமுடிகிறது. தமிழ் இலக்கணத்தில் குழந்தையை அஃறிணை விகுதி கொடுத்து ‘குழந்தை அழுகிறது ; சிரிக்கிறது ; விளையாடுகிறது’ எனக் கூறக் காரணம் அக் குழந்தை மனிதத் தன்மைக்குரிய கருணையினை அறியாததாலேயே எனக் குறிப்பிடுவதும் இங்கு எண்ணத்தக்கது. “யாரிடத்தில் தயவு அதிகப் பட்டிருக்கின்றதோ, அவரிடத்தில் கடவுளிருக்கின்றார்.” (சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம், வள்ளலார் கண்ட சாகாக்கலை.ப.9) என்னும் கூற்றும் இங்கு எண்ணத்தக்கது.



விருப்பு வெறுப்பின்மை



        வாழ்க்கை விருப்பினாலும் வெறுப்பினாலும் கேடுடையதாகிறது. எனவே அருளாளர்கள் பற்றின்றி வாழும் வாழ்வினையே மேற்கொண்டனர். இவ் உலக வாழ்க்கையில் பற்றின்றி வாழும் பற்றுடையோரிடமே அனைவரும் சேர்ந்து வாழ விரும்புகின்றனர். தன்னலத்துடன் வாழ்வது பர வாழ்வுக்கு மட்டுமின்றி இக வாழ்வுக்கும் கேட்டினை மட்டுமே உண்டாக்கிவிடுகிறது. எனவே தாமரை இலையின் நீர் போல் வாழ்வோரே வாழ்வில் குறையின்றி வாழ்வதனையும் காணமுடிகிறது. வள்ளலார் அவ்வாறே உயிர்களிடம் இரக்கம் கொண்டு வாழ்ந்தார். மக்கள் பெரிதும் விரும்பும் பணத்தில் பற்றின்றி வாழ்ந்த நிலையினை



பணத்திலே சிறிது மாசையொன் றிலைநான்

                படைத்தவப் பணங்களைப் பலகால்

கிணற்றிலே எறிந்தேன் குளத்திலும் எறிந்தேன்

                கேணியில் எறிந்தனன் எந்தாய்

குணத்திலே நீதான் கொடுக்கின்ற பொருளை

                எறிகலேன் கொடுக்கின்றேன் பிறர்க்கே

கணத்திலே எல்லாங் காட்டுநின் அருளைக்

                கண்டனன் இனிச்சொல்வ தென்னே    (பி.சி.வி. தி.பெ.தி. பா.3)



என்னும் பாடலின் வழி எடுத்துக்காட்டியுள்ளார். இறைப் பற்று ஒன்றே மற்ற பற்றினை எல்லாம் நீக்குமாதலால் இறைச் சிந்தனையுடன் வாழ வேண்டும் என்பதனையும் இப்பாடலின் வழி புலப்படுத்தியுள்ளார். “எந்த ஜீவர்களிடத்தில் தயா விருத்தியாகிய அருள் விசேஷம் விளங்குகின்றதோ, அந்த ஜீவர்களிடத்தில் கடவுள் விளக்கம் விசேஷமாயிருக்கும். மற்றவர்களிடத்தில் காரியப்படாது. ஆதலால் மலஜல சங்கல்ப காலங்களில் தவிர மற்ற காலங்களில் கடவுளிடத்தில் அன்பும் ஜீவர்களிடத்தில் பக்தியும் செலுத்த வேண்டும். பக்தியென்பது மன நெகிழ்ச்சி, மன உருக்கம், அன்பு என்பது ஆன்ம நெகிழ்ச்சி ; ஆன்ம உருக்கம்” (வ.க.சா. ப.10) என ம.பொ.சி எடுத்துக்காட்டியுள்ளதனையும் இங்கு எண்ணி மகிழலாம்.



சன்மார்க்கமும் மரணமிலாப் பெருவாழ்வும்



        சன் மார்க்கம் என்பது உண்மை வழி. உண்மை ஒன்றே என்றும் நிலைபெறுவது. அதன் வழி நின்றாலன்றி எவ்வுயிரையும் காத்தல் இயலாது. எனவே சன்மார்க்கம் என்னும் நல் மார்க்க சங்கத்தைத் (1865)  தோற்றுவித்து அதில் அனைவரும் சேர வேண்டும் என அனைத்து உயிர்களிடமும் கருணை கொண்டு வேண்டுகிறார்.



“சிறந்திடும் சன்மார்க்கம் ஒன்றே பிணி. மூப்பு, மரணம்

சேராமல் தவிர்த்திடுங்காண் தெரிந்து வம்மின் இங்கே” (திருவருட்பா.ஞானசரியை-25:3)



என்னும் இப்பாடலடிகளின் வழி உயிர் வாழ்வை நோகச் செய்யும் பிணி, மூப்பு, மரணம் இவை மூன்றிலிருந்து விடுதலை பெற்று வாழ வழிகாட்டியுள்ளார். “சன் மார்க்கி பெறுகின்ற ஒரே இலாபம் மரணமிலாப் பெருவாழ்வு – அதாவது செத்துப் பிறவாத பேரின்ப சித்தி நிலை”  (வ.க.சா. ப.10) என்கிறார் ம.பொ.சி.  சன்மார்க்கத்தின் நெறி நின்றால் பிறப்பு இறப்புகளை வென்று பேரின்பப் பெருவாழ்வு வாழ முடியும் எனத் தெளிவுறுத்துகின்றார் வள்ளலார்.



உயிர்களின் சமன்பாடு



        வினைப் பயனுக்கேற்ப உலகில் உயிர்கள் தோன்றுவதும் மறைவதும் இயற்கை. உயிர்களின் பிறப்பு பை, முட்டை, நிலம், வேர்வை என்னும் நான்கு நிலைகளில் நிகழ்வதனை



பைகளின் முட்டையிற் பாரினில் வேர்வினில்

        ஐபெற வமைத்த வருட்பெருஞ் சோதி     (அருட்பெருஞ்சோதி அகவல், தி.பெ.தி. அடி.361)



என்னும் அடிகளின் வழி புலப்படுத்துகிறார் வள்ளலார். உயிர்கள் அனைத்தும் ஒன்று தான் உடல் மட்டுமே பிறக்கும் இடத்தின் வழி வேறுபடுகிறது. எனவே அனைத்து உயிர்களையும் ஒன்றெனப் போற்றி கருணையுடன் வாழ வேண்டியதன் அவசியத்தினையும் உணர்த்துகிறார்.



சொர்க்கத்திற்கு வழி



        தான் மட்டுமே உலகில் வாழத் தகுதியுடையவர் என எண்ணி பிற உயிர்களைப் பற்றிய சிந்தனை இல்லாது வாழும் கயவரைக் கண்டு மனம் வருந்துகிறார் வள்ளலார்.



பட்டினி கிடப்பாரைப் பார்க்கவு நேரீர்

                பழங்கஞ்சி யாயினும் வழங்கவும் நினையீர்

எட்டிபோல் வாழ்கின்றீர் கொட்டி போற் கிளைத்தீர்

எத்துணை கொள்கின்றீர் பித்துலகீரே     (உறுதி கூறல், தி.பெ.தி. பா.2 அடி.3-4)



எனக் கருணையில்லாத மனம் பித்து மனம் என்பதைத் தெளிவுறுத்துகிறார். ”நம்முடைய தலைவராகிய கடவுளை நாம் அடைவதற்கு அவர் எழுந்தருளியிருக்கும் கோட்டையின் சாவியாகிய அருள் வேண்டும். இவ்வருள் அன்பினாலல்லது வேறு வகையால் அடைவது அரிது. அவ்வன்பு ஜீவகாருண்யத்தால் அல்லது வேறு வகையால் வராது.. ..  அந்நிய உயிர்களுக்கு இம்சை உண்டாகாமல் நடத்தலே ஜீவகாருண்யம். இதுதான் சித்தி பெறுவதற்கு முதற்படியாயிருக்கிறது” (வ.க.சா. ப.15) என ம.பொ.சி. மேற்கோள் காட்டுவது இங்கு எண்ணத்தக்கது.

உணவும் கருணையும்



        வயிற்றுப் பசி தீர்த்தல் தலையாய அறம். நிறைவு கொடுக்கக் கூடிய ஒரே அறமாகத் திகழும் பசி நீக்குதலையே தம்முடைய அடிப்படைக் கடனாக எண்ணியவர்  வள்ளலார். எனவே சத்திய தரும சாலையை நிறுவினார். அவர் ஏற்றிய அடுப்பு (1867) இன்றும் பலர் பசியைத் தீர்த்து வருகிறது.  எந்நிலையிலும் எவரும் பசித்திருக்கக் கூடாது என எண்ணி அதற்கான வழி வகை செய்த வெள்ளாடை உடுத்திய துறவியின் அருஞ்செயலை எவராலும் எண்ணிப்பார்க்கக் கூட இயலாது.  இதற்குக் காரணம் உயிர்களிடம் காட்டிய கருணையே என உணரலாம்.



        உணவு அளிக்காதிருத்தல் மட்டும் பாவமன்று. உணவு அளவுக்கு அதிகமாக உண்ணுவதும் பாவம் எனக் கருதியவர் வள்ளலார். ஏனெனில் அளவுக்கு அதிகமான உணவு பிற உயிர்களின் உடைமை என எண்ணியவர் வள்ளலார். பசிக்காக மட்டுமே உண்ணவேண்டும் ; சுவைக்காக உண்ணுதல் கூடாதென தன் அடியார்களுக்கு வாழ்ந்து வழிகாட்டியுள்ளதனை

“உற்றதா ரணியில் எனக்குல குணர்ச்சி

                உற்றநாள் முதல் ஒரு சிலநாள்

பெற்றதாய் வாட்டம் பார்ப்பதற் கஞ்சிப்

                பேருண வுண்டனன் சிலநாள்

உற்றவர் நேயர் அன்புளார் வாட்டம்

                உறுவதற் கஞ்சினேன் உண்டேன்

மற்றிவை அல்லால் சுக உணாக் கொள்ள

                மனநடுங் கியதுநீ அறிவாய்”   (தி.பெ.தி. பிள்ளைப் பெரு விண்ணப்பம்:43)

என்னும் பாடலின் வழி உணர்த்தியுள்ளார். தாய் மனமும் விருந்துக்கு அழைத்தோர் மனமும் நோகாதிருக்கவே உணவு நிறைவாக உண்டதனை எடுத்துக்காட்டியுள்ளார் வள்ளலார். மன வாட்டம் தீர வேண்டுமாயின் வயிற்றின் வாட்டத்தை நீக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ள நிலையும் எண்ணத்தக்கது. ’ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல்’ என்பதை நன்கு உணர்ந்து பிற உயிர்களின் பசியாற்றுதல், நோய் நொடிகள் அகல உதவி செய்தல், அறியாமையை அகற்றுதல் போன்ற ஜீவ தயவுப் பணிகளை எந்தவித எதிர்பார்ப்பும் உள்நோக்கமும் இன்றித் தொடர்ந்து செய்ய வேண்டும். (கவனகர் முழக்கம்,திச.2013 ப.27) என்னும் கொள்கையுடன் வாழ்ந்த வள்ளலாரின் பெருமையினை  கனகசுப்புரத்தினம் எடுத்துரைப்பதையும் இங்கு எண்ணி மகிழலாம்.



நாடாள்வோரின் தகுதி



        வீடு சிறக்க மட்டுமின்றி நாடு சிறக்கவும் உலகம் சிறக்கவும் அடிப்படையாக வேண்டியது கருணையே. அக் கருணை மனப்பான்மை இல்லாததாலேயே போரும் பூசலும் விரவிகிடக்கிறது. இதனைத் தீர்க்கவே அரசு கோடிக்கணக்கான பொருள் வளத்தையும் உயிர் வளத்தையும் இழந்து வருகிறது. எனவே அருளுடைய ஆட்சி மலர வேண்டுமென்பதனை

கருணையிலா ஆட்சி கடுகி ஒழிக

அருணயந்த சன்மார்க்க ராள்க – தெருணயந்த

நல்லோர் நினைத்த நலம்பெறுக நன்றுநினைத்

தெல்லோரும் வாழ்க விசைந்து                (சமரச நிலை, தி.பெ.தி. பா.4)

என்னும் பாடலின் வழி தெளிவுறுத்துகிறார் வள்ளலார். நல்லோர் வாழும் வகையில் ஆட்சி நடைபெற்றாலே உயிர் வளமும் இயற்கை வளமும் செழிக்கும் என்பதனையும் இதன் வழி உணர்த்தியுள்ளதனைக் காணமுடிகிறது.



வள்ளலாரின் பெருங்கருணை

        மரணமிலாப் பெருவாழ்வைப் பெற்ற வள்ளலார் தம்முடைய தவப்பயன் அனைத்து உயிர்களுக்கும் உரியதாக அமையவேண்டும் என எண்ணினார். ’ஆடையிலே மணம் புரிந்த மணவாளனாகிய’ இறைவன் அனைத்து உயிர்களிடமும் கருணை கொண்டு காக்க வேண்டுமென  

எல்லார்க்குங் கடையாகி இருந்தேனுக் கருள்புரிந்தே

எல்லார்க்குந் துணையாகி இருக்கவைத்தாய் எம்பெருமான்

எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்றாய் இவ்வண்ணம்

எல்லார்க்கும் செய்யாமை யாதுகுறித் திசையெனக்கே (வேண்டுகோள் தி.பெ.தி. பா.67)

என்னும் பாடலின் வழி வேண்டுகிறார். கடையவனாக இருப்பினும் அனைத்து உயிரிடமும் கருணை கொண்டால் எம்பெருமான் தானே உவந்து அருள் கொடுப்பான் என்பதனைத் தம் வாழ்வின் வழி உணர்த்தியுள்ளதனைக் காணமுடிகிறது.



இறை அச்சம்



        இயற்கை உண்மை, இயற்கை விளக்கம், இயற்கை இன்பம் என இயற்கைப் பேராற்றலின் கருணையினை உணர்ந்த வள்ளலார் அவ் அருட்பெருஞ்ஜோதியின் ஒளியில் மூழ்கினார். அச் சோதியின் பெருமையினை உலகுக்கு எடுத்துரைத்தார். அப் பேராற்றலிடம் கொண்ட மதிப்பே அவருக்கு அச்சத்தை உண்டாக்கிற்று. அவ் அச்சமே ஆணவத்தை அழித்து கருணையினைப் பெருக்கியுள்ளதனை

கையுற வீசி நடப்பதை நாணிக்

                கைகளைக் கட்டியே நடந்தேன்

மெய்யுறக் காட்ட வெருவிவெண் துகிலால்

                மெய்எலாம் ஐயகோ மறைத்தேன்

வையமேல் பிறர்தம் கோலமும் நடையும்

                வண்ணமும் அண்ணலே சிறிதும்

பையநான் ஊன்றிப் பார்த்ததே இல்லைப்

                பார்ப்பனேல் பயமிகப் படைப்பேன் (திருவருட்பா :3461)

என்னும் பாடலின் வழி புலப்படுத்துகிறார் வள்ளலார். பெரியோர்களிடம் கொள்ளும் அச்சம் ’அஞ்சுவது அஞ்சல்’ எனக் குறிப்பிடும் அழகினையும் அதனாலேயே தனிப்பெருங்கருணையின் பெருமையினை உணரமுடியும் என்பதனையும் தெளிவுறுத்தியுள்ளார்.



நிறைவாக



நோக்கு என்பதே கருணையுடையதாக அமைய வேண்டும் என்னும் நோக்கிலேயே ’திருவருட்பா’ அருளப்பட்டுள்ளதனை உணரமுடிகிறது. மனித உயிர், விலங்கு, பயிர் என அனைத்து நிலைகளிலும் அக்கருணை வளர்ச்சியடைவதே வாழ்வின் பயனாகும் என்பதனை வள்ளலார் தெளிவுறுத்தியுள்ளார்.



எவையெல்லாம் துன்பமோ அவற்றையெல்லாம் நீக்க எண்ணிய கருணையே வள்ளலாரின் கருணை. மருத்துவர் உடற் பிணியை நீக்குவர். ஞானிகள் உயிர்ப் பிணியை நீக்குவர். வள்ளலார் இவ் இரண்டுக்குமே மருத்துவராக நின்று வழிகாட்டியுள்ள திறத்தினை உணரமுடிகிறது.



வீட்டு நலம் நாட்டு நலம், உலக நலம் என ஒவ்வொரு படிநிலையிலும் கருணை செழிக்க வேண்டியதன் அவசியத்தினை வள்ளலாரின் பாடல்கள் தெள்ளிதின் உணர்த்துகின்றன.



வாழையடி வாழை என வந்த திருக்கூட்டத்தின் தலைமையிடத்தைப் பெற்ற திருவள்ளுவர், திருமூலர், திருஞான சம்பந்தர், மாணிக்க வாசகர், பட்டினத்தார், தாயுமானவர் அருளாளர்கள் வரிசையில் வள்ளலார் உயிர்களின் கடைத்தேற்றத்திற்குப் பாடுபட்ட கருணையாளராகத் திகழ்கிறார் என்பதனை உணர்வுடையோர் உணர்வர்.

*****************


கம்பதாசனின் முற்போக்குச் சிந்தனைகள் - Kambadasan


கம்பதாசனின் முற்போக்குச் சிந்தனைகள்

முனைவர் ம.ஏ. கிருட்டினகுமார். தமிழ்ப்பேராசிரியர் (துணை), புதுச்சேரி -8 உலாப்பேசி – 99406 84775

        கவிஞர்கள் பிறப்பதில்லை உருவாகிறார்கள் என்பது முற்போக்குச் சிந்தனை. கவிஞர்கள் உருவாவதில்லை பிறக்கிறார்கள் என்பது பிற்போக்குச் சிந்தனை ; தன்னம்பிக்கையின் அடிப்படையில் உருவாவது முற்போக்குச்சிந்தனை. பிறர் அல்லது பிறவற்றின் மீது நம்பிக்கைக் கொள்வது பிற்போக்குச் சிந்தனை எனக் கருதப்படுகிறது. இது மனிதப் படைப்புகளுக்குப் பொதுவானவை ; படைப்பாளிக்குச் சிறப்பானவை.

        காலத்துக்குக் கட்டுப்படாத கவிஞர்களாக வாழ விழைந்த விடுதலைப் போக்குடைய கவிஞர்களுள் ஒருவர் கம்பதாசன்.  உணர்வுள்ளவனே கவிஞனாக முடியும் என்பதற்கு இலக்கணமாக வாழ்ந்தவர் இவர் என்பதனை அவர்தம் கவிதைகள் எடுத்துரைக்கின்றன. ரோஜா செடிகளில் உள்ள  முட்களைக் கண்டு இரங்கி அம்முட்களின் வலியைப் பாடிய கவிஞன் என்பதன் வழி இக் கவிஞனின் முற்போக்குச் சிந்தனையைக் காண முடிந்தது. இந்நோக்கில் அவர்தம் கவிதைகளைக் காண விழைந்ததன் விளைவாகவே இக்கட்டுரை அமைகிறது.  ஆய்வின் வரையறை கருதி கம்பதாசனின் கவிதைத் திரட்டு நூல் மட்டுமே ஆய்வெல்லையாக அமைகிறது.

பொதுவுடைமை

        வியர்வையும் குருதியும் மனிதர் அனைவர்க்கும் ஒன்றாயினும் தம் சூழ்ச்சியாலே உயர்வு தாழ்வு உண்டாக்கி சிலர் வாழ பலர் வீழ  கயவர்கள் உண்டாக்கி விட்ட பிரிவினையைக் கண்டு வருந்துகிறார் கவிஞர். மனித உணர்வுகளும் (இன்பம், துன்பம்) உணர்ச்சிகளும் (வலியும், சிரிப்பும்) ஒன்றாயிருக்க மனித வெறுமையை வெளிப்படுத்தும் வேற்றுமைகள் எதற்கு என்பதனை

மண் பாண்டம் செய்யும் குயவனும் – புது ; மனைகட்ட்டித் தந்திடும் கொத்தனும்

எண்ணெய் விளைத்திடும் வாணியன் – சிகை ; எழிலுறச் செய்திடும் நாவிதன்;

புண்ணைத் துடைக்கும் மருத்துவன் – கல்வி ; போதிக்கும் பள்ளியின் ஆசானும்

கண்ணுக்குத் தோற்றம் வேறாயினும் – அவர் ; காணும் பசியே சமத்துவம் (க. க. தி. ப.63)



என்னும் பாடலடிகளின் வழி புலப்படுத்துகிறார் கவிஞர். பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட பசிக் கொடுமை அனைவருக்கும் பொதுவாய் இருக்க, அதனை ஒழிக்க அனைவரும் ஒன்று சேர்ந்து உழைக்காது ஆண்டான் அடிமை எனப் பிளவுபடுத்தி வாழும் போக்கைக் கண்டு கவிஞர் வருந்தும் நிலையினைக் காணமுடிகிறது.

        மனிதன் தன் வணிக நோக்கத்திற்காக கண்டுபிடித்த பணமே இன்று மனிதனின் உயர்வு தாழ்வை நிர்ணயிக்கிறது. செல்வத்தால் உயர்வுதாழ்வு பாராட்டுவது உள்ளத்தால் ஒன்றுபடாத போக்கினாலேயே எனலாம். தொழிலால், சாதியால், மதத்தால் வேறுபட்டு வாழ்ந்தாலும் மனிதன் என்னும் போக்கில் ஒன்றுபட்டு வாழ்வதே ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்பதனை நினைவில் இருத்தி  அனைவர்க்கும் உரிமை பொதுவானது என உணர்ந்து வாழக் கவிஞர் வலியுறுத்துவதனை

அடிமை இல்லாத வழி : அடிமை என இனித் தமிழகத்தில் – சிறு  அணுவுமிலா விதம் செய்திடுவோம் ; முடிமன்னராகித் தமிழரெல்லாம் – நகை; முழங்கச் சுதந்திர மெய்திடுவோம் (க. க. தி. ப.48)



என்னும் பாடலடிகள் எடுத்தியம்புகின்றன.  மனிதர்கள் அன்புடன் வாழ்ந்தால் பொதுவுடைமை தானே வந்துவிடும் என்கிறார் கவிஞர். ஏழ்மையைப் போக்க சோம்பலைப் போக்கி உழைப்பில் கவனம் செலுத்த  வேண்டும் என்கிறார்.  அது மட்டுமின்றி உழைப்பதில் மட்டுமின்றி பொருளைப் பெறுவதிலும்  அனைவருக்கும் சமத்துவம் வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார். இதனை

ஏழை இலை மோழி இலை கொட்டு முரசே :எல்லோரும் சமமெனவே கொட்டு முரசே

வாழும்வகை அன்பெனவே கொட்டு முரசே ; வையமது பொதுவுடைமை கொட்டு முரசே

 (க. க. தி. ப.61)



என்னும் பாடலடிகள் எடுத்துரைக்கின்றன. இவ்வாறு அன்புடன் வாழ்ந்தால் வையம் பொதுவுடைமைச் சமுதாயமாக மாறும் என்பதனைப் புலப்படுத்துகிறார்.



புதுக்குரல்

        முற்போக்குச் சிந்தனையின்  வெளிப்பாடு எழுத்தும் பேச்சுமே. அதன் தொடக்கம் அரிதானது  ஆனால் அதன் தொடர்ச்சி இடையறாதது என்பதனை

நகையுறுத்தி நாண் மலரை விழிக்கச் செய்யும் ; நல்லஅருணன் போன்றஒரு விழிப்பினாலே

தொகை தொகையாய் எழுங்கடலின் திரைகள் ; தூமதிநேர் போர்ச் சங்கம்ஊத வந்தோம் (க. க. தி. ப.1)

என்னும் பாடல் வழி எடுத்துரைக்கிறார். பழைய புராணங்களில் உள்ள மூடநம்பிக்கைகளை முடக்கி சமுதாயத்தில் நிலவும் கொடுமைகளை ஒழித்து தன் உணர்ச்சிகளை எழுத்தாக்கி புதிய சமுதாயம் மலர வழி வகுப்பவனே கவிஞனாகிறான். இக் கூற்றினை உறுதி செய்யும் வகையில் கம்பதாசனின் முழக்கமாக இப்பாடல் புனையப்பட்டுள்ளதனைக் காணமுடிகிறது.

        கவிஞர்கள் தன்னம்பிக்கையினையே உடைமையாகக் கொண்டவர்கள். தன்னம்பிக்கை உடையவர்களே பிறர்க்கும் தன்னம்பிக்கையினை ஊட்ட முடியும். கவிஞர்களுக்கு வழிகாட்டும் கவிஞனாக நின்று வழிகாட்டும் இயல்பினை

இந்திய நாட்டினிலே – இந்நாள் ; இருக்கும் உண்மைக் கவி

என்றன் வடிவமன்றிப் – பிறிது ; என்ன இருக்குதையா ? (க. க. தி. ப.53)

என்னும் பாடலடிகளின் வழி நன்கு புலனாகிறது. மகாகவி பாரதியாரும்

புவியனைத்தும் போற்றிடவான் புகழ்படைத்துத் ;       தமிழ்மொழியைப் புகழி லேற்றுங்

கவியரசர் தமிழ்நாடுக் கில்லையெனும் ; வசையென்னாற் கழிந்த தன்றே! (ஓலைத்தூக்கு , பாரதியார்)

எனப் பாடியுள்ளதனையும் இங்கு எண்ணி மகிழலாம். கவிஞர்களுக்கே உரிய கல்விச் செருக்கு அவர்களுடைய கவிதையில் வெளிப்படுவதே அவர்களுடைய கவிப் பெருமைக்குச் சான்றாவதனையும் உணரமுடிகிறது.

கடவுளின் பெயரால் சிலரை ஒதுக்கிவைக்கும் கொடுமையைக் கண்டு கவிஞர் உளம் பதைக்கிறார். கடவுளுடன் ஒப்பிடத்தக்க உழைப்பாளிகளைத் துச்சம் என எண்ணினால் தலை வீழும் எனக் கவிஞருக்கே உரிய மிடுக்குடன் சீறுவதனை

நலமுறவே உழைப்பவர்க்கே உணவு வேண்டும் ;       நியாயமிது ;நியாயமிது ; நியாயமிஃதே

அலவெனவே மறுப்பவர்கள் கடவுள் ஏனும் ;   அடுத்தகணம் அவர் தலை எம்காலில் வீழும்

( க. க. தி. ப.2)

என்னும் அடிகள் உணர்த்துகின்றன. உழைக்கும் மெலியோர் பசித்திருக்க உழைக்கா வலியோர் கொழுத்திருக்கும் நிலையினைக் கண்டு பாடிய பாடலாக இதனைக் காணமுடிகிறது.



இனியொ ருவிதி செய்வோம் – அதை ; எந்த நாளும் காப்போம்

தனியொரு வருக் குணவில்லை யெனில் ; ஜகத்தினை யழித்திடுவோம் – வாழ்க

(பாரத ஸமுதாயம், பாரதியார்)



என்னும் மகாகவியின் பாடலையும் இங்கு எண்ணி மகிழலாம். உலகம் என்பது எல்லா உயிர்களுக்கும் பொதுவானது. அதனை ஒரு சிலரே கொள்வாராயின் அத்தகைய உலகம் இல்லாதிருத்தலே நன்று எனக்கூறுகிறார் மகாகவி. அந்த ஏழை தனி மனிதரையே உலகாகக் காணும் போக்கு கவிஞர்களுக்கே உரியது என்பதனை இங்கு காணமுடிகிறது.



        கடவுள் தான் எல்லா உயிர்களையும் படைத்தார். ஆபத்துக்கு உதவுவார் என முழங்கும் ஆத்திகர்களிடம் வறுமையில் இருப்பவர்களுக்கு ஏன் கடவுள் இரங்குவதில்லை எனக் கேட்கிறார் கவிஞர்.



கண்ணன் இருந்தானாம் –திரௌபதி ; கட்டத் துகில் தந்தானாம்

உண்மையாய் அவனிருந்தால் – எனக்கே ; ஓர் கந்தை தாரானோ ? (க. க. தி. ப.52)



என்னும் பாடலடிகளின் வழி தம் எண்ணத்தை வெளிப்படுத்துகிறார்.  ஏழைகளுக்கு ஆடை கிடைக்க வேண்டும் என எண்ணும் கவிஞரின் குரலை இங்கு காணமுடிகிறது. விதி என்று சோம்பிக் கிடத்தலால் பயனில்லை. மதியைக் கொண்டு முன்னேறுவீர் என அறிவுறுத்துவதனை



வெண்மேகத் தீ வெனவே – சோம்பி ; விதியென் றிருப்பவரே

மின்மேக மாகிடுவீர் – இடிபோல்; மிளிர்வீர் செய்கையிலே (க. க. தி. ப.61)



என்னும் பாடலடிகள் உணர்த்துகின்றன. வாழ்க்கை என்பது மகிழ்ச்சியுடன் வாழ வேண்டியது. அச்சத்துடன் பிறர்க்கு அடிமையாக வாழும் வாழ்க்கை இழிவானது. அவ்வாறு வாழ்வதைவிட வீரத்துடன் சாதலே நன்று என்பதனை



நாளுக்கு நூறுமுறை – அஞ்சி ; நாய்போல் வாழ்வதிலும் . . .

தோளுயர்த்திச் சாவின் – முத்தம் ; சூடுவோம் ஓர் முறையே (க. க. தி. ப.66)



என்னும் அடிகளின் வழி உணர்த்துகிறார். பிறரை அண்டி நின்று எச்சிலை உண்டு வாழ்வதிலும்போராடி உரிமை பெற்று வாழவேண்டும். இல்லையெனில் அப்போராட்டத்தில் உயிர்விடினும் பெருமையதே என வீரத்துடன் வாழ அறிவுறுத்தியுள்ளதனைக் காணமுடிகிறது.



        எளியோர்க்கு வாழ்வு தர அனைவரும் முயல வேண்டும். அம்முயற்சிக்கு இடையூறாக எவர் வரினும் அவரை எதிர்கொள்ளும் துணிவு வேண்டும் என்பதனை



கர்த்தன் எதிர்த்தாலும் –புரட்சிக் ; காற்றிலே பஞ்சாவான் (க. க. தி. ப.67)



என்னும் அடிகளின் வழி புலப்படுத்துகிறார். எந்தத் தலைவனாலும் புரட்சிக்கு முன் பஞ்சாவான் எனக் கூறும் கவிஞரின் புதுக்குரலை இங்கு எண்ணி வியக்கலாம்.



ஒளியை மட்டுமே போற்றும் கவிஞர்களிலிருந்து மாறுபட்டு இருளைக் கொஞ்சி உரிமையுடன் அழைக்கும் கவிஞரின் குரலை



வண்ணான் சாலினிலே – நீலம் ; வைத்துக் கரைத்தது போல்

என்றன் இமைகளிலே – முத்தம் ; இட்டு இரா இனிக்க



என்னும் அடிகள் படம்பிடித்துக் காட்டுகின்றன. எல்லோர்க்கும் பொதுவான நிலத்தை வலியோர் வளைத்ததனால் எளியோர் நிலமின்றி வாழும் அவலநிலையினை

நீங்கள் சிலபேர் நிலம்படைத்தோர் ; நாங்கள் பலபேர் ஏர் உழுவோர்

நீங்கள் சிலபேர் விருந்துண்போர் ; நாங்கள் பலபேர் பசித்திருப்போர் (க. க. தி. ப.68)



என்னும் அடிகளின் வழி உணர்த்துகிறார். இப்பாடலின் வழி இந்நாட்டின் நிலையைப் படம்பிடித்துக் காட்டுகிறார் கவிஞர். குணம் கொண்டு ஒற்றுமையாக வாழ்ந்த மக்கள் இன்று பணத்தால் பிரிந்து வாழும் சூழலைக் கண்டு வருந்துகிறார். அப் பணமே இன்று அரசியலையும் கடவுளையும் வாழ வைப்பதனை



காசு இல்லையெனில் – அரசியல் ; கட்சி இருக்காது

பூசை இல்லையெனில் – கோயிலி பூசாரியும் உண்டோ ? (க. க. தி. ப.186)



என்னும் அடிகளில் உணர்த்துகிறார். இவ்வாறு ஒவ்வொரு நோக்கிலும் தனக்கென ஒரு மாறுபட்ட புதுக்குரலை ஒலித்த பெருமைக்குரியவராக கவிஞர் திகழ்வதனைக் காணமுடிகிறது.

உழைப்புச் சுரண்டல்

        உழைப்பாளிகளின் வாழ்வை நிர்ணயிக்கும் ஆற்றல் பொருளுள்ளோரிடமே இருக்கிறது. அதனால்தான் உழைப்போரின் வாழ்வு எந்நாளும் ஏழ்மையிலேயே இருக்கிறது. உழவர்கள் கடினப்பட்டு விளைவிக்கும் பொருள்களை இடைத்தரகர் நிர்ணயிப்பதால் உழவர்களுக்கு எந்நாளும் பொருள் நிறைவாகக் கிடைப்பதில்லை. வணிகம் செய்பவர்கள் எளிதில் செல்வந்தராகி விடுகிறார்கள். இக்கொடுமையை எதிர்த்து நிற்கும் உழவர்களின் பொருட்களை வாங்காது இடைத்தரகர்கள் செய்யும் கொடுமையால் விளைந்த பொருள்கள் குப்பைக்குச் செல்கின்றன. இதனால் இடைத்தரகர்களை எதிர்க்காது வாழ வேண்டிய அவல நிலையினை

பொருளும் உழைப்பும் இருவர்க்கம் – இடையில் ;       போந்த தரகரும் வேண்டுமோ ? (க. க. தி. ப.207)

என்னும் பாடலடிகளின் வழி எடுத்துக்காட்டுகிறார்.  உணவை ஆக்குபவர்களை அழவைக்கிறார்கள் ; வணிகர்களை வாழ வைக்கிறார்கள். தரகர்களின் நேர்மையற்ற செயலால் ஏழ்மை தொடர்வது தொடர்கதையாகிவிட்டது என்பதனைக் கவிஞர் புலப்படுத்துகிறார்.

உழைப்பை உறிஞ்சும் கொடுங்கோலனாகத் ஷாஜாகான் திகழ்ந்ததனை  கவிஞர் எடுத்துக்காட்டுகிறார்.

-------------------------------------------------------- கை தன்னில் ;   எடுத்தேன் கல்லுளி ! அமைத்தேன் தாஜ் !

நின்று கண்டமன்னன் மிகமெச்சினான் – என்கையை ; நீட்டென்றான் நீட்டினேன் வெட்டிவிட்டான்

 (க. க. தி. ப.147)

எனக் கூறும் தாஜ்மகாலின் தலைமைச் சிற்பியின் வெகுளியை இப்பாடலின் வழி புலப்படுத்துகிறார் கவிஞர். மன்னனின் கட்டளைக்கு இணங்கி சிற்பி தன் திறத்தையெல்லாம் கூட்டி எழிலுறக் கட்டிய கட்டிடத்தைக் கண்ட மன்னன் வியந்தான் ; பாராட்டினான் ;  கையை நீட்டென்றான் ; வெட்டினான். மன்னன் தன்னலத்தால் தாஜ்மகாலை விட சிறந்த கலைக்கோயில்களைக் கட்டிவிடக் கூடாதென செய்த அச்செயல் முதலாளித்துவப் போக்கின் உச்சமாக நிற்பதனைக் காணமுடிகிறது.  வரலாற்றில் இடம்பெற வேண்டிய சிற்பியின் இடம் மறைக்கப்பட்டது. வரலாற்றில் இகழப்பட வேண்டிய ஷாஜகானின் நிலை புகழப்பட்டது. தாஜ்மகால் காதலின் பெருமையைக் கூறும் சின்னமாக மட்டுமின்றி உழைப்புச் சுரண்டலின் வடிவமாகவும் திகழ்வதனைக் கவிஞர் எடுத்துக்காட்டியுள்ளார்.

தன் உலகம், தன் நாடு, தன் ஊர், தன் உறவு, தன் குடும்பம் , தன் நலம் என நாளுக்கு நாள் சுருங்கிவரும் கேட்டினைக் கண்டு வருந்துகிறார் கவிஞர். இதனால் தான் தொழிலாளியின் உழைப்பில் முதலாளி வளம் பெருக்கிக் கொள்கிறான். இதனை



அன்பைத் திருகிப் பிழிந்தென்றன் ;  இருவிழி சிந்திய நீர்த்துளியைப்

பண்ணைச் செல்வன் பையில் வெள்ளிப் ; பணமென மாற்றிய விதியிதுவே (க. க. தி. ப.183)



என்னும் அடிகளின் வழி புலப்படுத்துகிறார் கவிஞர்.

பலியாகிக் கால்கைகள் உடல்கள் சிந்தும் ; பச்சைரத்தம் பரிமாறி இந்த நாட்டைச்

சலியாத வருவாயும் உடைய தாகத் ; தந்ததெவர் ?அவரெல்லாம் இந்த நேரம்

எலியாக முயலாக இருக்கின் றார்கள் ! ;ஏமாந்த காலத்தில் ஏற்றங் கொண்டோன்

புலிவேஷம் போடுகின்றான் ! பொதுமக் கட்குப் ; புல்லளவு மதிப்பேனும் தருகின் றானா ?

(புரட்சிக் கவி)பாரதிதாசன்)

என்னும் பாவேந்தரின் பாடல் கவிஞர் உள்ளத்துக்கு உரம் சேர்க்கும் அழகினைக் கண்டு மகிழலாம்.





கொல்லன்

        மனிதன் படைத்த சிலைகளில் எல்லாம் கடவுளைக் காணும் மனிதன் அதைச் செய்யும் கொல்லரின் வாழ்க்கையைக் கண்டு கொள்ளது வாழும் நிலையினைக் கண்டு மனம் வருந்துகிறார். உழைப்புக்கேற்ற ஊதியம் இன்றி வருந்தும் கொல்லனின் வாழ்வினை

இருக்குதெனும் ஒட்டுவயி றேற்ற மார்பு ;      இடையினிலே கந்தலுடை துடையோ தூண்கள்

சுருக்கிருளில் பனிசிந்தும் காட்சி தன்னைக் ;   கருமேனி வியர்வையிலே காட்டும் கொல்லன் ( க. க. தி. ப.4)

என்னும் பாடலடிகள் வழி எடுத்துரைக்கிறார். கொல்லனின் வியர்வை உழைப்பின் வெளிப்பாடாக புலப்படுவதால் கண்ணுக்குக் குளிர்ச்சி தரும் பனியோடு ஒப்பிட்டுள்ளதனையும் இங்கு எண்ணி மகிழலாம்.

        ஊருக்கெல்லாம் சோறிடும் உழவனுக்குச் சோறில்லாது வாடும் நிலைபோல் கொல்லனின் நிலைமையை

        எருதுக்கும் குதிரைக்கும் லாடம் அடித்து அதன் உயிரை வளர்க்கும் கொல்லனின் காலுக்குச் செருப்பின்றி வாடும் நிலையை

வண்டியிலே பூட்டெருது குதிரை லாடம் ;      வழங்கிடினும் தன்காலில் செருப்பும் அற்றான்

(க. க. தி. ப.4)

என்னும் பாடலில்  வழி படம்பிடித்துக் காட்டுகிறார். தமிழர்கள் பெரும்பாலும் பிறரின் நலம் நாடுவரே ஒழிய தற்காப்புக்கு என எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதில்லை. வெளிநாட்டவர் பாதுகாப்புக்கு முதலிடம் கொடுப்பர். தமிழரோ பாதுகாப்புக்கு முக்கியத்துவமே அளிக்கமாட்டார். இது ஏழ்மையால் வந்த விளைவே என எண்ணி வருந்தும் கவிஞரின் உளப்பாங்கினை இப்பாடல் எடுத்தியம்புகிறது.

3.2 பரவர் பாட்டு

        கடலை மட்டுமே வாழும் பரதவரின் வாழ்வைப் பார்க்கிறார் கவிஞர். எப்போது மீண்டு வருவோம் எனத் தெரியாது கடலுக்குள் செல்லும் பரதவரின் நிலையில்லா  வாழ்க்கையை

விடிவெள்ளி நம்விளக்கு ஐலேஸா ; விரிகடலே பள்ளிக்கூடம் ஐலேஸா

துடிக்கும் அலை நம் தோழர் ஐலேஸா ; சூழ்முகிலின் நீழல்குடை ஐலேஸா           (க. க. தி. ப.5)

என்னும் பாடலில் வழி எடுத்துரைக்கிறார்.     நாள்தோறும் பல பாடங்களைக் கற்றுத்தரும் பள்ளிக்கூடம் தான் கடல் என்பதனையும் தோழர் கூட்டம் துடிப்புடன் செயல்படுவதனை தொடரும் அலைகளில் காணமுடிகிறது எனக் கூறியுள்ள கவிஞரின் திறம் எண்ணத்தக்கது. விடி வெள்ளி விளக்காகவும் சூழ் முகிலே குடையாகவும்  கொண்டு வாழும் பரதவர்களின் நிலையினை எடுத்துக்காட்டுகிறார் கவிஞர். . ’வெள்ளி நிலாவே விளக்காய் எரியும் கடல் தான் எங்கள் வீடு’ (படகோட்டி –திரைப்படம்) என்னும் கவிஞர் வாலியின் பாடலையும் இங்கு எண்ணி மகிழலாம்.

ரிக்‌ஷாக் காரன்

        ஒரே நாட்டில் பலர் ஏழைகளாய் சிலர் செல்வந்தர்களாய் வாழும் ஏற்றத்தாழ்வைப் போக்க வேண்டும். ஏழை முதுகில் செல்வந்தர் பயணம் செய்வதில் உடன்பாடு இல்லாத கவிஞர் ரிக்‌ஷா காரனின் வாழ்வின் வழி ஏழ்மையின் வலியைப் புலப்படுத்துகிறார். விலங்குகளைப் பூட்டி வாகனமாக்கிக் கொண்ட மனிதன் சூழ்ச்சியாலும் செல்வ வளத்தாலும் மனிதனையே விலங்காக்கி அடிமைப்படுத்தி விட்டதனை எடுத்துக்காட்டுகிறார். வீழ்ச்சி பெற்ற எந்நிலையிலும் எழுச்சி பெறக் கூடாதென பொறுமையாக வாழக்கற்றுக் கொடுக்கும் சூழ்ச்சியினை

மனிதனை மாடாய் ஆக்கிவிட்டு – என்னை :    மரணத்தின் வழியில் ஓடவிட்டு

புனிதமாய் அஹிம்சை பேசுகின்றார் ! அன்னோர் ;      புலைச்செயல் போக்கிடும் நாள்வருமோ ?

 (க. க. தி. ப.5)

என்னும் பாடலின் வழி எடுத்துரைக்கிறார். கவிஞர் கண்ட கனவு இன்று நிறைவேறியுள்ளது. வண்டி இழுக்கும் காலம் மாறி வண்டி ஓட்டும் காலம் வந்துவிட்டது. சாக்கடை அள்ளும் தோழர்களைத் தவிர எல்லோரும் விடுதலைப் பெற்று விட்டது கவிஞர்களின் முழக்கமே எனக் கருதவும் முடிகிறது.



மனித ருணவை மனிதர் பறிக்கும் ; வழக்கம் இனியுண்டோ ?

மனிதர் நோக மனிதர் பார்க்கும் ; வாழ்க்கை யினியுண்டோ?- புலனில்

வாழ்க்கை யினியுண்டோ ? – நம்மில் அந்த ; வாழ்க்கை யினியுண்டோ

(பாரத ஸமுதாயம், பாரதியார்)



என்னும் மகாகவியின் பாடலையும் இங்கு எண்ணி மகிழமுடிகிறது. மனிதரை அடிமை செய்யும் வாழ்வு அறிவில்லாத வாழ்க்கை எனக் கூறும் மகாகவியின் நுட்பத்தைனையும் இப்பாடல் எடுத்துரைக்கிறது.



படகோட்டி

பிறரை கரை சேர்க்க அன்றாடம் உழைக்கும் படகோட்டியின் வாழ்க்கை கரை சேராது வருந்தும் நிலையைக் காண்கிறார் கவிஞர். கடவுள் உள்ளார் எனில் ஏற்றத்தாழ்வு ஏன். உண்ண ஒரு வேளைக் கஞ்சி இன்றி பலர் வாட உண்டது செரிக்காமல் உடல் நோக வாழும் நிலையினை எவ்வகையிலும் ஏற்க இயலாது என்பதனை

என்னைப்போல் இன்னவரும் எல்லாம் வல்ல ;         ஈசனருட் படைப்பன்றோ ? இந்தப் பாரில்

இன்பந்தான் பிறரடைய ஒருவர் துன்பம் ;      ஏற்பதுவோ ? இதிலுள்ள நீதி என்ன (க. க. தி. ப.10)

என்னும் பாடலின் வழி புலப்படுத்துகிறார். பசியின்றி மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் எனப் பொங்கும் கவிஞரின் மனநிலையினை இப்பாடலின் வழி அறிந்துகொள்ள முடிகிறது.



தினைத்துணையும் பயனின்றிப் பசித்த மக்கள் ;        சிறிதுகூழ் தேடுங்கால்,பானை ஆரக்

கனத்திருந்த வெண்சோறு காணும் இன்பம் ;   கவின்நிலவே உனைக்காணும் இன்பம் தானோ!       (புரட்சிக் கவி பாரதிதாசன்)

என்னும் பாவேந்தர் பாடலையும் இங்கு எண்ணத்தக்கது. நிலவைக் காணும் இன்பத்தை பசித்த மக்கள் சோறு காணும் இன்பத்தோடு ஒப்பிடும் புரட்சிக் கவியின் கவி உள்ளத்தை எண்மன ஓட்டத்தையும் இங்கு எண்ணி மகிழலாம்.

நெல் அறுப்போன்

        அனைத்து உயிர்களுக்கும் இயற்கை படைத்த செல்வங்களை ஒரு சிலர் மட்டும் உரித்தாக்கிக்கொண்டு பிறரை வறுமையில் வாடவைக்கும் இழிவினைக் காண்கிறார் கவிஞர். எல்லா உயிர்களிடமும் அன்பு கொண்டு பிறருக்காக உணவு ஆக்கும் கடமை செய்வோன் உழவரே. அவர்களே வறுமையால் வாடும் சூழல் வளர்ந்துவிட்ட கொடுமையினைக் காண்கிறார்.  கவிஞரே உழவராகி

கொலைகாரனாகிவிட்டேன் ; உண்மை ! பெற்ற ;       குழந்தைகளைக் கொல்லுகிறேன் உண்மை ! உண்மை !

தலத்தோரே, தூக்கிலெனை யிடுவீர் ! ஆனால் ;        சாகடிக்கும் பசிதன்னைச் சமைத்தோன் முன்னே ! (க. க. தி. ப.12)

எனப் பாடுகிறார். தன் குழந்தையைப்போல் பயிரைப் பார்க்கும் உழவன் தன் வயிற்றுக்காக அக்குழந்தையை அறுப்பது போல் எண்ணுவது கவிஞரின் மென்மை உள்ளத்தைக் காட்டுகிறது. ’வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய’ வள்ளலாரை இங்கு நினைவுறுத்துகிறார் கவிஞர்.

பசி வந்த பின்னால் பத்தும் பறந்து போகும் என்னும் கூற்றிற்கேற்ப நற்குணமும் மாறிவிடுவதனை இந்த அடிகள் எடுத்துரைக்கின்றன. எனினும் இப்பாவச் செயலுக்கு அப்பசியைப் படைத்த இறைவனையே நியாயம் வழங்குமாறு வேண்டுகிறார். இதன்வழி உழைப்பாளிகளின் செயல்கள் யாவும் சரியென்றே புலப்படுத்தும்  கவிஞரின் உள்ளப்பாங்கினையும் அறிந்துகொள்ளமுடிகிறது

ஒட்டன்

        உழைப்பின் வலிமை மாற்றத்தில் தெரியும். எந்த ஒரு மாற்றமும் உழைப்பால் கிடைத்த செல்வமே. சக்கரம் உலக மாற்றத்தின் புரட்சிக்கு மிகுந்த துணையாகி நின்றது எனில் அதன் வலிமையை நன்கு உணரலாம். பெருநகரங்களை நகரங்களோடும் நகரங்களைக் கிராமங்களோடும் இணைத்து அனைவரும் முன்னேற வழிவகுத்த அந்த உழைப்பாளிகளின் கருகிய கைகளையும் ஒடுங்கிய கால்களையும் சிந்திப்பதற்கு இச்சமுதாயத்தில் ஒருவருமில்லை என்பதனை

பாலை நிலமெனத் தேகம் சுண்ட – பெரும்;     பாடுபட்டுப் பாதை போடுகின்றோம் !

கூலிபெறாத மழையது போல் – நாங்கள் ;      கொட்டுரோம் ரத்தக் கண்ணீர் புவியில் (க. க. தி. ப.)

என்னும் பாடலடிகளின் வழி எடுத்துரைக்கிறார். சுட்டெரிக்கும் வெயிலும் சுண்டி இழுக்கும் ரத்தத்தையும் பொருட்படுத்தாது தாரினும் கருகும் ஒட்டர்களின் நிலையை படம்பிடித்துக் காட்டுகிறார் கவிஞர்.

மாமிகு பாதைகளே உமை இப்பெரு ; வையமெலாம் வகுத்தார் – அவர்

ஆமை எனப்புலன் ஐந்தும் ஒடுங்கிட ; அந்தியெலாம் உழைத்தார்

(நீங்களே சொல்லுங்கள், பாரதிதாசன்)

எனப் பாவேந்தர் பாடியுள்ளதனையும் இங்கு எண்ணி மகிழலாம்.

பிச்சைக்காரன்

        அன்பினை வெளிப்படுத்தும் அருமையான மொழி ஈதல். இழிவினை வெளிப்படுத்தும் அருமையான மொழி இரத்தல். ஒன்று நிகழாவிடில் மற்றொன்றில்லை எனினும் பிச்சைக்காரர்களின் வாழ்க்கை சாலை ஓரங்களிலேயே ஓரங்கட்டப்பட்டு விடுவதனைக் காண்கிறார் கவிஞர். அவர்கள் ஒரு சாண் வயிறை நிரப்ப நாள் முழுதும்பிச்சை எடுத்தும் வயிறு நிரம்பாது வருந்தும் நிலையினை

கண்ணிளைப் பாறிடத் தூக்கமுண்டு – அற்பக் ;         கழுதை இளைபாறிடத் துறையுமுண்டு

பண்ணிளைப் பாறிடத் தாளமுண்டு – எங்கள் ; பசியிளைப்பாறிட உண்டோ இடம் ? (க. க. தி. ப.18)

என்னும் பாடலடிகள் வழி எடுத்துக்காட்டுகிறார். பிச்சை எடுப்பவனும் மனிதன் தான் என எண்ணி அவர்களுக்கு உதவாவிட்டாலும் இழிவாக நடத்துகின்ற கொடுமையினைக் காண்கிறார் கவிஞர். ஐந்தறிவு உடைய விலங்குகள் எல்லாம் தம் இனத்தை அரவணைத்து வாழ ஆறறிவுடைய மனிதன் மட்டும் தன் இனத்தை வெறுத்து வாழ்வதேன் என்பதனை

ஆடொடு ஆடு மேய்கின்றதே – பாயும் ; ஆறொடு ஆறு சேர்கின்றதே

நாடிய மனிதன் மனிதனையே – வெறுத்து ;     நன்மை செய்யாதது ஞாயம்தானா ? (க. க. தி. ப.22)

என்னும் அடிகளின் வழி வினா எழுப்புகிறார். பிறக்கும் போது கடவுளிடமும் மருத்துவரிடமும்  உயிரைக்காக்க பிச்சை கேட்பது தொடங்குகிறது. கற்கும் போது அறிவைப் பெற ஆசிரியரிடம் பிச்சை கேட்பது வளர்கிறது. பணியின் போது சம்பளம் பெற முதலாளிகளிடம் பிச்சை எடுப்பது தொடர்கிறது. இறப்பின் போது உடலைப் புதைக்க  இடுகாட்டில் பிச்சை எடுப்பதுடன் முடிகிறது. இவ்வாறு பிச்சை என்பது ஏதேனும் ஒரு வகையில் வாழ்வில் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. இதனை உணராமல் செல்வத்தை மட்டுமே வேண்டும் பிச்சைக்காரர்களை ஏளனமாகப் புறந்தள்ளும் நிலை கொடுமையானது எனப் புலப்படுத்துகிறார் கவிஞர்.  

        இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து ;     கெடுக உலகியற்றி யான் (திருக்குறள் :1062)

என்னும் திருவள்ளுவரின் மொழியும் இங்கு எண்ணத்தக்கது.

பெண்ணுரிமை



        பிறப்பைக் கொடுத்த பெண் இனத்தின் முன்னேற்றத்தை முடக்கி வாழும் ஆண்களின் நிலையைக் கண்ட கவியுள்ளம் வாடுகிறது.  பெண் இனத்தை மீட்காவிட்டால் வீடும் நாடும் சீர்கெடும் என்பதனை



உச்சிக் கிளை தனில் நின்றபடி – பாதம் ; ஊன்றியே வந்த அடிமரத்தை

அச்ச மிலாமலே வெட்டுலகே !நாளை ; அடையும் கதிநீ அறிகுவையோ (க. க. தி. ப.165)



என்னும் பாடலடிகளின் வழி உணர்த்தியுள்ளார். மனிதனே மனிதனுக்கு கேடு செய்துகொள்ளும் வகையில் சாதி, மதம் , என்னும் பிரிவினைகளை உண்டாக்கினான். இக் கேடு போதாதென தன்னுடன் வாழும் பெண்ணுக்கே கேடு விளைவிக்கும் வகையில் அவளை அடிமைப் படுத்தி வாழும் எண்ணம் கொண்டு வாழ்வதனைக் கவிஞர் இப்பாடலின் வழி புலப்படுத்தியுள்ளார்.



எச்சரிக்கை

        தொழிலாளிகளின் உழைப்பில் தான் இந்த உலகமே புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் உழைப்பை உறிஞ்சி வாழ்வோர் கூட அவர்கள் முன்னேற்றத்தில் சிறிதும் அக்கறை காட்டாது வாழ்வதனாலேயே ஏற்றத்தாழ்வு உண்டாகிறது. இந்த ஏற்றத்தாழ்வின் நிலை மிகும் போது புரட்சி வெடிக்கிறது. அவ்வாறு தொழிலாளிகளை வருத்தும் சூழல் தொடருமாயின் தொழிலாளர் ஆட்சி மலரும் என எச்சரிக்கிறார் கவிஞர். தொழிலாளர்கள் ஆட்சியைப் பிடிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை என்பதனை

நத்தை இடத்திலே முத்தெழுங்கால் ;   நாற்றச் சகதியில் பூ எழுங்கால்

உத்தமர் ஆகிய தொழிலாளர் ; உளத்தில் உலகாள் உரமெழாதோ ? (க. க. தி. ப.24)

என்பதனை இப்பாடலின் வழி நிறுவுகிறார். தகுதி இல்லாதவர்கள் எல்லாம் உயர்ந்த பதவியை வகிக்கும் போது உழைப்பை உருக்கி உலகம் செய்த மக்கள் உலகாளக் கூடாதா எனக் கேட்கும் கேள்வி கவிஞரின் புரட்சி சிந்தனையை வெளிப்படுத்துவதாக அமைகிறது.

ஓடப்ப ராயிருக்கும் ஏழையப்பர் ; உதையப்ப ராகிவிட்டால் ஓர் நொடிக்குள்

ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி ; ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப்பா நீ (உலகப்பன் பாட்டு, பாரதிதாசன்)

என்னும் பாவேந்தரின் பாடலையும் இங்கு எண்ணி மகிழலாம்.

வறுமை



        செல்வமுடையோரிடம் செல்வம் வளர வளர வறுமையுள்ளோரிடம் வறுமை வளர்ந்துகொண்டே இருக்கிறது. வறுமை என்பது சதி. எல்லா பொருளும் எல்லோர்க்காகவும் படைக்கப்பட்டிருக்கிறது என்னும் பொதுவுடைமை மறைக்கப்பட்டதனால் வந்த கேடு. ஓர் இனம் வாழ பல இனம் வீழா சூழ்ச்சியால் உண்டான போக்கே வறுமை என்பதனை



கடவுள் ரத்தத்தில் ;உண்ணும் இருகக் கூழ்க்காய் – அவர் ;

உடல்பொருள் ஆவிய தெல்லாம் ; பண்ணைச் செல்வருக் கீந்து – ஆலை  பட்ட கரும்பென வாகி ; கண்ணீர் உகுக்கையில் கண்டேன் – ஐயோ  கலந்திருந்தது ரத்தம் ! – அதில் ; கடவுள் துடித்திடக் கண்டேன் (க. க. தி. ப.29)

என்னும் பாடலின் வழி புலப்படுத்துகிறார். கடவுளைச் சிலைகளில் காணாது வறியவர்கள் சிந்தும் ரத்தத்தில் காணும் கவிஞரின் முற்போக்குச் சிந்தனையை இப்பாடல் வெளிப்படுத்துகிறது.  ‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்’ என்னும் அறிஞர் அண்ணாவின் கூற்றும் இங்கு எண்ணத்தக்கது.



கரும்புத் தோட்டத்திலே – அவர் ; கால்களும் கைகளும் சோர்ந்து விழும்படி

வருந்துகின்றனரே – ஹிந்து ; மாதர்தம் நெஞ்சு கொதித்துக் கொதித்துமெய்

சுருங்குகின்றனரே – அவர் ; துன்பத்தை நீக்க வழியில்லை யோவொரு

மருந்திதற் கிலையோ – செக்கு ; மாடுகள் போலுழைத் தேங்குகின் றாரந்தக். . . (பிஜித் தீவிலே ஹிந்து ஸ்திரீகள், பாரதியார்)

என்னும் மகாகவியின் கவி உள்ளத்தையும் இங்கு எண்ணி மகிழலாம். இந்தியாவிலிருந்து கொண்டே பிஜித் தீவை கண் முன் காட்டி இரங்கவைக்கும் கவித்திறனும் இங்கு ஒப்பிடத்தக்கது

மூட நம்பிக்கை



        முடமாகிப் போன நம்பிக்கை நடக்க முடியாத போது தன்னை நிலை நிறுத்துக்கொள்ள சடங்குகளைப் பிடித்துக் கொண்டது. இது நம்பிக்கை உடையோர்க்கு வழிபாடாகவும் நம்பிக்கையற்றோர்க்கு ஏமாற்று வேலையாகவும் புலப்பட்டது.  வாயில்லா உயிரான ஆடுகளையும் கோழிகளையும் பலி கொடுப்பதனை ஏற்க இயலாத கவிஞர் பலி ஆடாகவே மாறி



சாவில் மறைவதற்கு – நாங்கள் ; சற்றுமே அஞ்சவில்லை!

பூவில் பிறந்தயாவும் – மரணப் ; பொன்னடி சேரல் திண்ணம் !

நோவுறும் மக்களுக்கு – மருந்து ; நூறுண்டு செம்மை பெற!

‘காவு’ கொடுப்பதினால் – கடலில் ; காண் அலை நின்றிடுமா ? (க. க. தி. ப.110)



எனக் கேட்கிறார்.  ஆட்டினையோ மாட்டினையோ கோழியையோ பலி கொடுத்தால் கேட்பதற்கு யாருமில்லை ; கூறு போட்டுத் தின்பதற்கு பலருண்டு. அதனால்தான் இந்நிகழ்வினைத் தடுக்க இயலாது போய்விட்டது என்பதனைக் கவிஞர் இப்பாடலின் வழி உணர்த்துகிறார்.



        சடங்குகள் என்னும் பெயரில் ஆணாதிக்கத்தையே நிலைநிறுத்தும் போக்கினையும் கண்டிக்கிறார் கவிஞர். ஆணுக்கு எது தேவையோ அதை மட்டும் சடங்காக்கி வாழும் நிலையினை



மகமதியன் என்றால் தலை மழுக்க லாக்கி ; மாட்டுமொரு குல்லாவும் சின்னமானால்

அகத்தினிலே அவர்மனைவி என்றுள்ள பெண்கள் ; அருங்கூந்தல் வளர்ப்பதிலே அர்த்தமுண்டோ ?



புனிதமிகு இந்துவெனப் பூணூல் சாற்றி ; போதெல்லாம் கீதைசொல்லல் சின்ன மானால்

கனிவுடனே அவர்மனைவி என்ற பெண்கள் ; கவின்தோளைப் பூணூலே தழுவி டாதோ ?

(க. க. தி. ப.69)



என்னும் பாடலின் வழி புலப்படுத்துகிறார். சடங்குகள் என்பது ஒரு சிலரை ஒதுக்கித் தாழ்வானவர்கள் என உணர்த்துவதற்காகவே ஏற்படுத்தப்பட்டது என்பதனை வேறு வேறு மதங்களின் சடங்குகளின் வழி உணர்த்தியுள்ள கவிஞரின் திறம் போற்றத்தக்கது. ஏனெனில் கவிஞர் சடங்குகளைச் சாடினாரேயன்றி மதங்களைச் சாடவில்லை என்பது இங்கு எண்ணத்தக்கது.





தமிழ்



        மொழிப் பற்றுடையவரே சமூகப்பற்றுடனும் நாட்டுப்பற்றுடனும் வாழமுடியும். கவிஞரின் முற்போக்குச் சிந்தனைக்கு அவருடைய மொழிப்பற்றே காரணமாவதனை



எந்தன் நாடு தமிழ்நாடு ; என்றும் காப்பேன் நெறியோடு

எந்தன் மொழியே தமிழாகும் ; இனிக்கும் ! எனக்கே உயிராகும் (க. க. தி. ப.295)



என்னும் பாடலடிகளின் வழி உணர்த்துகிறார். தமிழர்கள் தமிழர்க்குத் துணை செய்யும்போக்கு வளர வேண்டும் என எண்ணுகிறார் கவிஞர். தமிழன் நிலை உயர வேண்டுமானால் தமிழர் பண்பு மாறாது வாழவேண்டும் என்பதனை



பச்சைரத்தம் பரிமாறிப் பண்புள்ள தமிழ்தான்

பாரெங்கும் புகழ்மேவப் பணிசெய்து வாழ்வோம் (க. க. தி. ப.52)



என்னும் அடிகளின் வழி உணர்த்துகிறார்.  கவிதையின் தன்மை குறித்து  கூற விழைகிறார் கவிஞர். கவிதை என்பது சொல்லடுக்கு மட்டுமல்ல. அது ஒரு ஆழ்ந்த பொருளின் உள்ளடக்கம். அது மக்களுக்குத் தேவையான கருத்துக்களை மக்களிடமிருந்து எடுத்து மக்களுக்கே கொடுக்கும் அழகியல் என உணர்த்துவதனை



குழந்தையே சிந்திய பருக்கைகளைக் ; கொத்திப் பசியாறும் கோழியைப் போல்

இழந்த கருத்து தனைக் கூட்டி ; இன்பம் அடைவது கவிதையடா (க. க. தி. ப.52)



என்னும் அடிகள் எடுத்துக்காட்டுகின்றன. கவிஞன் இந்த உலகின் அறிவுப் பசியைத் தீர்க்கும் வல்லமை உடையவனாக இருக்க வேண்டுமென்பதனை  பசியாறும் கோழியின் நிலை கொண்டு விளக்கியுள்ள அருமையினைக் கண்டு மகிழலாம்.



கவிதை அழகானது. எவ்வளவு அழகானது எனில் உழைப்பாளியின் உழைப்பைப் போல் அழகானது என்பதனை

   குலைவீசும் பசியினிலே ஏரை ஓட்டும் ; குடியான மக்களிடம் கவிதை கண்டேன் (க. க. தி. ப.17)

என்னும் அடிகளில் எடுத்துரைக்கிறார் கவிஞர். கவிதை அழகினைக் கூட உழைப்பின் அழகில் காணும் கவிஞரின் கவி உள்ளத்தை இங்கு எண்ணி மகிழலாம்.

        மிலார் (கிளை), குலாலன்(குயவன்), ஒட்டன்(சாலை போடுபவர்), கையேந்திகள் (பிச்சைக்காரர்), தரளம் (முத்து), மோழை (மடமை) கழறுவாய் (சொல்வாய்) என்னும் சொற்களைக் கையாண்டுள்ளதன் வழி தமிழ்க் கவிதையாக மட்டுமின்றி தமிழைத் தாங்கும் கவிதையாகவும் சிறப்பதனைக் காணமுடிகிறது.





நிறைவாக



கவிஞர்கள் உணர்ச்சிப் பிழம்பாக நிற்பதற்கு கவிதை என்னும் ஆயுதத்தைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்பவர் கம்பதாசன் என்பதற்கு அவருடைய கவிதைகளே சான்றாகின்றன.



கம்பதாசன் தன் இனத்தையும் தன் மொழியையும் முன்னுக்குக் கொண்டு வரவேண்டும் என்னும் போக்கில் முழு கவனம் செலுத்தியுள்ளதனைக் காணமுடிகிறது.



பொதுவுடைமைச் சிந்தனையுடைய கவிஞர் உழைப்பாளிகளுக்காகவும் எளியவர்களுக்காகவும் குரல் கொடுப்பதாகவே தம் எழுத்துக்களை வடிவமைத்துக் கொண்டுள்ளதனை அறிந்துகொள்ள முடிகிறது.



ஆழமான கருத்துக்களையும் எளிய சொற்களில் கூறியுள்ள கவித்திறம் கவிஞரின் சிறந்த மொழி நடைக்குச் சான்றாகின்றது.



அடிமை இந்தியாவையும் விடுதலை இந்தியாவையும் கண்ட கவிஞர் சமூக விடுதலைக்கும் பொருளாதார விடுதலைக்கும் வழிகாட்ட முனைந்துள்ள திறம் போற்றற்குரியது.



பொதுவுடைமைக்காகப் போராடிய கவிஞர் தம் கவிதைகளின் வழி மக்கள் சமத்துவத்திற்கான பாதையில் செல்ல வளமான பாதையினை வகுத்திருக்கிறார் எனத் தெளியமுடிகிறது.



வழக்கில் இல்லாத பல சொற்களை மீட்டுக் கொணரும் தமிழ் ஆர்வத்தையும் அவர்தம் கவிதைகள் பறைசாற்றுகின்றன. இதன் வழி கவிஞரின் தமிழ்ப்பற்றையும் புலமையும் ஒருங்கே உணர்ந்துகொள்ள முடிகிறது.

                                ********  





சுருக்க விளக்கம்



கவிஞர் – கம்பதாசன்

க.க.தி – கம்பதாசன் கவிதைத் திரட்டு (தொகுப்பாசிரியர் : சிலோன் விஜயேந்திரன், அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை -4 பதிப்பு :1987)