தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

சனி, 30 செப்டம்பர், 2023

இந்திய நெப்போலியன் சமுத்திர குப்தர்

 

இந்திய நெப்போலியன் சமுத்திர குப்தர்

குப்தவம்சத்தின் ஆட்சியினைப் பிரயாகை (அலகாபாத்) கல்வெட்டு எடுத்துரைக்கிறது.  இக்கல்வெட்டின்வழி பிரயாகை முதல்  காஞ்சிபுரம் வரை ஆட்சி செய்த  சமுத்ரகுப்தரின் வீரம் புலப்படுகிறது.  ஸ்ரீகுப்தர் (பொது ஆண்டு 240-280) இவ்வம்ச ஆட்சியினைத் தொடங்கியதால் குப்தவம்சமாயிற்று. அவரைத்தொடர்ந்து கடோத்கஜர்(பொ.ஆ.280-319), முதலாம் சந்திரகுப்தர் (பொ.ஆ.319-335) , எனத் தொடர்ந்துவந்த இவ்வாட்சியில் சமுத்திரகுப்தர் (பொ.ஆ. 335- 375) சிறந்துவிளங்கினார்.   தில்லி, உத்தரப்பிரதேசம், இராஜஸ்தான், அசாம், வங்காளம், நேபாளம், பஞ்சாப் , தமிழகம் எனப் பல இடங்களில் தம்முடைய செல்வாக்கினை நிறுவினார். மன்னர் பரம்பரையினையே தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள்கொண்டுவந்தார். எனவே, பேரரசராகத் திகழ்ந்தார். நூற்றுக்கும் மேற்பட்ட போர்கள் செய்து நூற்றுக்கணக்கான விழுப்புண் பெற்றார். அதனால் ‘பராக்கிரமன்’ என்னும் பட்டத்தைப் பெற்றார். உலகத்தையே தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவேண்டும் என எண்ணினார். ‘தரணி பந்தம்’ என்பதனையே தன்னுடைய கொள்கையாகக் கொண்டிருந்தார். அச்யுதா, நாகசேனா, கணபதி நாகா எனப்பல மன்னர்களை வெற்றிகொண்டார். அவர்கள் மன்னிப்புகேட்கவே  மீண்டும் அவர்களையே தன்னுடைய கட்டுப்பாட்டுற்குட்பட்ட ஆட்சியாளராக்கினார். இவர்கள் மூவருடைய பெயரும் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பலமன்னர்களை வென்றாலும் இவர்களுடைய பெயர் மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஏனெனில்,  சந்திரகுப்தரின் தந்தை   இறப்பிற்குப்பின்  இம்மூவருமே பெருங்கலகம் விளைவித்தனர்.  இவருடைய எதிரிகள் கனவில் கண்டு அஞ்சும் அளவிற்கு வீரத்தில் சிறந்துவிளங்கினார் சமுத்திரகுப்தர்.  உலகவரலாற்றில் நெப்போலியன் போல்  பலபோர்களில் வென்றதால் சமுத்திரகுப்தரை ‘இந்திய நெப்போலியன்’ எனக் குறிப்பிடுவர்.

இலங்கை அரசன் மேகவர்மன் கயாவில் ஒரு மடம் கட்டிக்கொள்ள ஒப்புதல் வேண்டினார். அதற்காக சமுத்திரகுப்தருக்குப் பரிசுப்பொருட்களைக்  கொடுத்ததற்கான சான்றுகளும் உள்ளன. வெற்றிகளைக் குவித்த சமுத்திரகுப்தர் தன்னுடைய வெற்றியை எதிரிகள் அறியவும்   சிற்றரசர்கள் அறியவும் அசுவமேத யாகம் நடத்தினார்.  போரில் பல மன்னர்களை வெற்றிகொண்டதால் ‘மன்னர்களை வீழ்த்துபவர்’ எனப் போற்றினர். கவிதைகள் இயற்றி புலமையில் வல்லவராக விளங்கியதால்  இவரைக் ‘கவிஞர்களின் அரசர்’ எனவும்  போற்றினர். போரில் மட்டுமின்றி கலைகளிலும் ஆர்வம்கொண்ட சமுத்திரகுப்தர் பக்தியை வளர்ப்பதற்கும்  சமஸ்கிருத இலக்கியங்களை வளர்ப்பதற்கும் பணிசெய்தார். சமுத்திர குப்தர் இசையிலும் ஆர்வம் கொண்டிருந்தார். இதனை அவர்வெளியிட்ட தங்கநாணயங்கள்வழி அறியமுடிகிறது.  அந்நாணயத்தில்  வீணைவாசிப்பதைப்போல் அவருடைய உருவம் பொறிக்கப்பட்டிருக்கிறது. ஒரு மன்னனுக்கு உரிய குணங்கள் இப்படி இருந்தால் நலம் என வாழ்ந்துகாட்டியவர் சமுத்திரகுப்தர் என வரலாறு குறிப்பிடுகிறது.

அதியமான் செய்த பிழை

 

அதியமான் செய்த பிழை

 

புகழெனின் உயிரைக் கொடுப்பது உயர்ந்தோர் போக்கு. பசியெனின் உணவைக் கொடுப்பது  நல்லோர் போக்கு.  திறமெனின் பரிசு கொடுப்பது செல்வர் போக்கு. இம்மூன்று கொள்கையினையும் உடையவராகவே தமிழரசர்கள் திகழ்ந்தனர் என்பதனைச் சங்க இலக்கியங்கள் உணர்த்துகின்றன. ஒவ்வொருவருடைய திறத்தை அறிந்து பரிசு கொடுப்பது ஒரு கலை. அவ்வாறு மக்களின் ஒவ்வொரு கலையினையும் ஊக்குவிப்பவனாக அரசன் இருந்தான். அதனால்தான் ஓவியம், பாட்டு, இசை, சிற்பம் எனப் பல கலைகள் வளர்ந்தன. அதனால்தான் சித்திரக்காரர்களும் பாணர்களும் புலவர்களும் சிற்பிகளும் அரசனிடம் பொருள்பெற்று வாழ்ந்தனர். அரசர்கள், இத்திறமுடையோரை ஊக்குவிக்கும்வகையில் உளம் மகிழ வரவேற்று அக்கலைஞர்களுக்குப் பரிசளித்தனர். பரிசு பெற்றவர்கள் மீண்டும் மீண்டும் வந்தாலும் முதல்நாள் பார்த்து மகிழ்ச்சியுடன் வரவேற்றதைப் போலவே வரவேற்று பரிசளித்தார்கள். அதியமான் நெடுமான் அஞ்சி அத்தகையோரில் சிறந்து விளங்கினான் என்பதனை

ஒருநாள் செல்லலம் ; இருநாள் செல்லலம்

பலநாள் பயின்று  பலரொடு செல்லினும்

தலைநாள் போன்ற விருப்பினன் மாதோ (புறநானூறு – 101)

ஏன்னும் புறநானூற்றுப்பாடல் எடுத்துக்காட்டுகிறது. இப்பாடலில் அரசனின் உயர்ந்த பண்பினை இருநிலைகளில் உணர்த்துகிறார் தமிழ்மூதாட்டி ஔவையார். பலநாள் சென்றாலும் வரவேற்பான் என்பது ஒன்று. பலரோடு சென்றாலும் வெறுப்படையாது விருப்புடன் அளிப்பான் என்பது மற்றொன்று. இவ்வாறு அள்ளிக்கொடுக்கும் அதியமானை அனைவரும் புகழ்வர் என்பதனை உணர்த்துகிறார் ஔவையார்.

இவ்வாறு, தத்தமது கலைகளில் திறம் மிகுந்தார்க்கும் இடைப்பட்டார்க்கும் இளையார்க்கும் ஒன்றுபோலவே பரிசளிப்பது நன்றன்று என எண்ணுகிறார் புலவர் பெருஞ்சித்திரனார்.  அரசனின் பெருமைக்கு நிலவில் உள்ள கலங்கம்போன்று இச்செயல்பாடு குறைபாடுடையதே எனப் புலவர் பெருஞ்சித்திரனார் குறிப்பிடுகிறார். ஒருமுறை அதியமானை காணச்சென்ற பெருஞ்சித்திரனார் அரசனைக்  காணக் காத்திருக்கிறார். அரசன் பணியின் காரணமாக அவரைக் காணமுடியவில்லை. இருப்பினும், உரிய பணியாட்களிடம் பெருஞ்சித்திரனார்க்குப் பரிசினைக் கொடுத்துவிடப் பணிக்கிறார். அவ்வாறு, காணாது கொடுக்கும் பரிசினை இழிவாகக் கருதுகிறார் பெருஞ்சித்திரனார்.

காணாது ஈந்த இப்பொருட்கு யான் ஓர்

வாணிகப் பரிசிலன் அல்லேன் ; பேணி

தினை அனைத்து ஆயினும், இனிது  அவர்

துணை அளவு அறிந்து நல்கினர் விடினே ( புறநானூறு- 208)

எனப்பாடி மறுக்கிறார். பெருஞ்சித்திரனார், பரிசு குறையினும் குறையில்லை.  அரசன் தன் புலமையினைக் காணாது கொடுத்ததே குறை என எண்ணுவதனைக் காணமுடிகிறது. புலமையினை அறிதலே பொருளினும் பெரிது என எண்ணிய புலவரின் ஆளுமையினையும் இப்பாடல் உணர்த்திவிடுகிறது.

           

மருத்துவ முன்னோடி தமிழர்

 

மருத்துவ முன்னோடி தமிழர்

 

            மருத்துவத்திற்குத் தேவையான வேதியியல் பொருட்கள் அனைத்தும் கண்டுபிடிப்பதற்கு முன்னரே மக்களைப் பல்வகையான நோய்களிலிருந்து காப்பாற்றியவர்கள் தமிழர்கள். போர்கள் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாகவே எண்ணி வாழ்ந்த வரலாறே தமிழர் வரலாறு. போர்களால் காயங்களும் மரணங்களும் இயல்பான அக்காலகட்டத்தில் மருத்துவர்களே பல உயிர்களைக் காப்பாற்றினர். அம்மருத்துவர்கள் அறுவை சிகிச்சையையும் மேற்கொண்டுள்ளனர். தாவரங்களை உயிர்காக்கும் வரங்களாக ஆக்கிய பெருமை இம்மருத்துவர்களுக்கு இருந்தது. ஒவ்வொரு தாவரத்தையும் மூலிகைத் தாவரம், நிவாரணத்தாவரம் சீரமைக்கும் தாவரம் என வகுத்து மருத்துவம் பார்த்துள்ளனர். மருத்துவர் மன்னர் பரம்பரைக்கு மட்டுமின்றி அனைத்து மக்களுக்கும் நெருக்கமானவராகவே இருந்தனர். மருத்துவர்கள் இரவுபகல்பாராது எக்காலத்தும் தம்மை மருத்துவத்தொழிலுக்காக அர்ப்பணித்திருந்தனர். சங்க இலக்கியக்காலத்தில் மக்களை நோக்கி மருத்துவம் செய்த அருமையினைக் காணமுடிகிறது. மருத்துவர் நோயாளியைக்காண தம் மருத்துவப்பெட்டியுடன் வந்துவிடுவார். மருத்துவர், நோயாளியின் நோயினை அறிந்து அங்கேயே மருந்து தயாரித்து பிழைக்கவைத்துவிடுவார். அந்த அளவிற்கு மருத்துவர்கள் மனித உடலையும் மருந்து உருவாக்குவதையும் அறிந்திருந்தனர். மனித உயிர்களைப் போற்றும் அன்பும் ஆர்வமும் அவர்களுடைய பண்பாகவே இருந்தது. நோய்கள் குறைவாக இருந்ததனால் மருத்துவர்களும் குறைவாகவே இருந்தனர். மருத்துவர் வீட்டினை அனைத்து மக்களும் அறிந்திருந்தனர். மருத்துவர்கள் மனிதர்களை மட்டுமின்றி மருந்தினை அளிக்கும் மரங்களையும் காத்தனர். இவ்வாறு அன்புடன் விளங்கியதனை

            மரம் சா மருந்தும் கொள்ளார் (நற்றிணை-226)

என்னும் பாடலடிகள் உணர்த்துகின்றன. மரத்தைக் கொன்று மக்களைக் காக்கும் பணியினைச் செய்யாத மருத்துவர்களின் அறத்தையும் இங்கு காணலாம். அவர்கள் கொடுக்கும் மருந்து மூன்று நாட்களில் குணமளித்துவிடும் சிறப்பு வாய்ந்தனவாக இருந்ததனை, ‘விருந்தும் மருந்தும் மூன்று நாள்’ என்னும் பழமொழி எடுத்துக்காட்டுகிறது. ஏனெனில்  நோய்க்கான காரணத்தையும் அதன் தன்மையையும் அறிந்து அதனைத் தீர்க்கும் வழியினை அறிந்து உடலுக்கு ஏற்றவாறு மருத்துவம் பார்த்தனர்.

                        மருந்து ஆய்ந்துகொடுத்த அறவோன் போல (நற்றிணை – 136)

என்னும் பாடலடிகள் இதனை உணர்த்துகிறது. இவ்வாறு நொய்யச்செய்யும் (மெலியவைக்கும்) நோய்களுக்கும் ஒரே இடத்தில் பிணித்துவிடும் (முடக்கிவிடும்) பிணிகளுக்கு மட்டுமின்றி அறுவை சிகிச்சையும் செய்துள்ளனர். அதனால்தான் போர்க்களத்தில்  புண்பட்டவர்களுக்கு மருத்துவம் செய்துக் காத்துள்ளனர். ஊசியைக் கொண்டு அறுபட்ட இடங்களைத் தைத்த திறத்தினை

            மீன் தேர் கொட்பின் பனிக்கயம் மூழ்கிச்

            சிரல் பெயர்ந்தன்ன நெடுவள் ஊசி

            நெடுவசி பரந்த வடுவாழ் மார்பின் (பதிற்றுப்பத்து – 42)

என்னும் பாடல் உணர்த்துகிறது. மீன்கொத்திப்பறவையின் அலகானது குளத்தில் உள்ள மீனைக்கவ்வ  உள்சென்று வெளிவருவது போல மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்த நுட்பத்தை அறியமுடிகிறது. வலிதெரியாமல் மருத்துவம் செய்யவேண்டும் என எண்ணிய தமிழ் மருத்துவர்களின் அருமையும் புலனாகிறது.