மருத்துவ முன்னோடி தமிழர்
மருத்துவத்திற்குத் தேவையான வேதியியல் பொருட்கள் அனைத்தும் கண்டுபிடிப்பதற்கு முன்னரே மக்களைப் பல்வகையான நோய்களிலிருந்து காப்பாற்றியவர்கள் தமிழர்கள். போர்கள் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாகவே எண்ணி வாழ்ந்த வரலாறே தமிழர் வரலாறு. போர்களால் காயங்களும் மரணங்களும் இயல்பான அக்காலகட்டத்தில் மருத்துவர்களே பல உயிர்களைக் காப்பாற்றினர். அம்மருத்துவர்கள் அறுவை சிகிச்சையையும் மேற்கொண்டுள்ளனர். தாவரங்களை உயிர்காக்கும் வரங்களாக ஆக்கிய பெருமை இம்மருத்துவர்களுக்கு இருந்தது. ஒவ்வொரு தாவரத்தையும் மூலிகைத் தாவரம், நிவாரணத்தாவரம் சீரமைக்கும் தாவரம் என வகுத்து மருத்துவம் பார்த்துள்ளனர். மருத்துவர் மன்னர் பரம்பரைக்கு மட்டுமின்றி அனைத்து மக்களுக்கும் நெருக்கமானவராகவே இருந்தனர். மருத்துவர்கள் இரவுபகல்பாராது எக்காலத்தும் தம்மை மருத்துவத்தொழிலுக்காக அர்ப்பணித்திருந்தனர். சங்க இலக்கியக்காலத்தில் மக்களை நோக்கி மருத்துவம் செய்த அருமையினைக் காணமுடிகிறது. மருத்துவர் நோயாளியைக்காண தம் மருத்துவப்பெட்டியுடன் வந்துவிடுவார். மருத்துவர், நோயாளியின் நோயினை அறிந்து அங்கேயே மருந்து தயாரித்து பிழைக்கவைத்துவிடுவார். அந்த அளவிற்கு மருத்துவர்கள் மனித உடலையும் மருந்து உருவாக்குவதையும் அறிந்திருந்தனர். மனித உயிர்களைப் போற்றும் அன்பும் ஆர்வமும் அவர்களுடைய பண்பாகவே இருந்தது. நோய்கள் குறைவாக இருந்ததனால் மருத்துவர்களும் குறைவாகவே இருந்தனர். மருத்துவர் வீட்டினை அனைத்து மக்களும் அறிந்திருந்தனர். மருத்துவர்கள் மனிதர்களை மட்டுமின்றி மருந்தினை அளிக்கும் மரங்களையும் காத்தனர். இவ்வாறு அன்புடன் விளங்கியதனை
மரம் சா மருந்தும் கொள்ளார் (நற்றிணை-226)
என்னும் பாடலடிகள் உணர்த்துகின்றன. மரத்தைக் கொன்று மக்களைக் காக்கும் பணியினைச் செய்யாத மருத்துவர்களின் அறத்தையும் இங்கு காணலாம். அவர்கள் கொடுக்கும் மருந்து மூன்று நாட்களில் குணமளித்துவிடும் சிறப்பு வாய்ந்தனவாக இருந்ததனை, ‘விருந்தும் மருந்தும் மூன்று நாள்’ என்னும் பழமொழி எடுத்துக்காட்டுகிறது. ஏனெனில் நோய்க்கான காரணத்தையும் அதன் தன்மையையும் அறிந்து அதனைத் தீர்க்கும் வழியினை அறிந்து உடலுக்கு ஏற்றவாறு மருத்துவம் பார்த்தனர்.
மருந்து ஆய்ந்துகொடுத்த அறவோன் போல (நற்றிணை – 136)
என்னும் பாடலடிகள் இதனை உணர்த்துகிறது. இவ்வாறு நொய்யச்செய்யும் (மெலியவைக்கும்) நோய்களுக்கும் ஒரே இடத்தில் பிணித்துவிடும் (முடக்கிவிடும்) பிணிகளுக்கு மட்டுமின்றி அறுவை சிகிச்சையும் செய்துள்ளனர். அதனால்தான் போர்க்களத்தில் புண்பட்டவர்களுக்கு மருத்துவம் செய்துக் காத்துள்ளனர். ஊசியைக் கொண்டு அறுபட்ட இடங்களைத் தைத்த திறத்தினை
மீன் தேர் கொட்பின் பனிக்கயம் மூழ்கிச்
சிரல் பெயர்ந்தன்ன நெடுவள் ஊசி
நெடுவசி பரந்த வடுவாழ் மார்பின் (பதிற்றுப்பத்து – 42)
என்னும் பாடல் உணர்த்துகிறது. மீன்கொத்திப்பறவையின் அலகானது குளத்தில் உள்ள மீனைக்கவ்வ உள்சென்று வெளிவருவது போல மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்த நுட்பத்தை அறியமுடிகிறது. வலிதெரியாமல் மருத்துவம் செய்யவேண்டும் என எண்ணிய தமிழ் மருத்துவர்களின் அருமையும் புலனாகிறது.