திருக்குறள் காட்டும் செல் நெறிகள்
திருக்குறள் பெருமை
நூல் என்பது ஆடையைப் புனைந்து
மானத்தைக் காப்பது மட்டுமல்ல. மனிதரின் தன்மானத்தைக் காக்கும் பெருமையுடைய
புத்தகங்களையும் நூல் எனவே அழைத்த பெருமை தமிழரையே சாரும். தமிழ் படித்தவன்
சாவதில்லை.ஏனெனில் மகாகவியும் கம்பரும் இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பதனை சான்றோர்
அவையில் காண இயலும். சான்றோர்கள் உடல் அளவில் வாழவிட்டாலும் தம் உயரிய
கருத்துகளால் இன்றும் தம் நூலில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அத்தகைய நூல்களே
இன்றும் ’இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல்’ போல் நமக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கின்றன. நூலானது எதற்காக எழுகிறது என
எண்ணும்போது அவை படைப்பாளிகளின் படைப்புத்திறனைக் காட்ட மட்டும் எழுவதில்லை
சமூகத்திற்கு வழிகாட்டும் வகையில் கற்பித்தல், அறிவுறுத்தல், அறிவித்தல்,
நெறிகாட்டல் என்னும் நிலைகளில் அமைவதைக் காணலாம். இவ்வாறு எழும் நூல்கள் ஏதேனும்
ஒரு கருத்தினையோ பல கருத்துகளையோ உள்ளடக்கியதாக அமையும்.
தெய்வப்புலவர் அருளிய திருக்குறளில் இல்லாத கருத்துகளே இல்லை எனச்
சொல்லக்கூடிய அளவிற்கு அனைத்துக் கருத்துகளையும் உள்ளடக்கியதாக அமைகிறது. பொதுவாக
இந்நூலிலுள்ள அறத்துப்பால் குடிகளுக்கும் பொருட்பால் அரசருக்கும் காமத்துப்பால்
காதலர்க்கும் கூறப்பட்டதுபோல் தோன்றிடினும் எப்பாலையும் எவர்க்கும்
பொருத்தமுடையதாகக் கொள்ளமுடியும். காமத்துப்பாலை தலைவன் தலைவிக்குரிய அன்பு
வாழ்க்கை என மட்டும் நோக்காது இறைவனுக்கும் மனிதனுக்குமான அருள் வாழ்க்கை எனக் கூறப்படும்
நிலையினையும் காணமுடிகிறது. எனவே ‘ எல்லாப் பொருளும் இதன் பால் உள’ என இந்நூல் போற்றப்படுகிறது.
இந்நூலிலுள்ள அனைத்து கருத்துகளுமே வழிகாட்டுதலுக்குரிய பெருமையுடையதாயினும் இன்று
பெரியோரின் பெருமையினை மறந்துவாழும் இளையோருக்கு அவர் பெருமையினை நிலைநிறுத்தவேண்டும்
என்னும் நோக்கிலேயே இக்கட்டுரை அமைகிறது.
கட்டுரையின் நெறிமுறைகளுக்கேற்ப 1.நீத்தார் பெருமை 2. பெரியாரைத் துணைகோடல்
3. பெரியாரைப் பிழையாமை 4. மெய் உணர்தல் 5. தவம் என்னும் ஐந்து அதிகாரங்கள்
மட்டுமே இக்கட்டுரைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
நீத்தாரே வாழ்வார்
நீத்தார் என்பவர் உலகப் பற்றுகளை நீத்தாரையே குறிக்கும். உயிரை நீத்தவரைக்
காட்டிலும் வாழும்போதே தன்னலத்தை விட்டு பிறர்நலம் போற்றி வாழ்ந்த பெரியோரையே
உயர்ந்தவராக தமிழுலகம் குறிக்கிறது. ஏனெனில் பிறப்பு உண்டாகும் போதே இறப்பும்
உறுதி செய்யப்பட்டுவிடுகிறது. இதற்கிடையே வாழும் நாளையே வாழ்நாள் எனக்
குறிப்பிடப்படுகிறது. இந்த வாழ்நாள் என்பது தனக்காக வாழும் நாளை உள்ளடக்கியதாகாது.
பிறர் நலம் போற்றி வாழ்ந்து ஏழைகளின் நெஞ்சில் நீங்கா இடம் பெறும் நாட்களையே
வாழும் நாட்களாகக் கொள்ளப்படும். இப்படி வாழ்ந்த சாந்த சீலர்களாலேயே இன்றும் இவ்
உலகம் பெருமையுடையதாகத் திகழ்கிறது. இவ்வாறு தன்னலத்தை விட பிறர் நலம் போற்றி
வாழும் பெருமையுடையோரையே தெய்வப்புலவர் நீத்தார் எனக் குறிப்பிடுகிறார். எவ்வகை
படைப்பாயினும் உயர்ந்த கருத்துகளை உள்ளடக்கியதாக அமைந்தால் அப்படைப்பும்
உயர்ந்ததாகி விடுகிறது. ஒருவருடைய பெருமை அவருடைய பதவியால் அறியப்படுவது போலவே
அந்நூலின் உள்ளடக்கத்தைக் கொண்டே அந்நூலின் பெருமை அமைகிறது. அவ்வாறே ஒழுக்க வழியில் நின்று உலகப்பற்றுகளை நீத்தாரின்
பெருமையினைக் கூறும் போது அந்நூலின் பெருமையும் உயரும் என்பதனை
“ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு” (திருக்குறள்-21)
எனக் கூறுகிறார் தெய்வப்புலவர். அவ்வாறு உலகப்பற்றுகளைத் துறந்த துறவிகளின்
பெருமையினை அளவிட்டுக் கூறமுடியாது. உலகம் தோன்றிய காலத்திலிருந்து இறந்தவர்களின்
எண்ணிக்கையை கணக்கிடல் போன்றது துறவிகளின் பெருமை அளவிட நினைப்பது எனக் குறிப்பிடுகிறார்.
இதன்வழி எவர் ஒருவர் தனக்காக வாழக்கூடாது என எண்ணுகிறாரோ அவர் அனைவர்
நெஞ்சங்களிலும் வாழ்பவராகிறார். எனவே பெருமையுடைய வாழ்வு வாழ வேண்டுமானால்
தன்னலத்தை ஒழிக்க வேண்டும். பிறர்நலத்தைப் போற்ற வேண்டும் என வழிகாட்டுகிறார்.
மனமும் குணமும்
ஒரு பிறவியில் வளமாக வாழ
வேண்டும் என எண்ணும்போதே உயர்ந்த கல்வி கற்கவும் செறிந்த வளம் பெறவும் படாதபாடு
படவேண்டியுள்ளது. இதற்காக மனதை அடக்கி முன்னேற்றப்பாதையில் செல்வதற்கே இன்றைய
இளைஞர்கள் தடுமாறுகின்றனர். எனவே அவர்கள்
ஆன்மிகத்திற்கு வருவதனை விரும்புவதில்லை. எனினும் அனைத்து பிறவியிலிருந்தும்
விடுதலைபெற எவ்வளவு உழைக்கவேண்டும் என அறிவுறுத்துகிறார் திருவள்ளுவர். சொல்வதைச் சொல்லி வைப்போம் என நினைத்தே
இக்கருத்தை முன்வைக்கிறார். பின்னாளில் இதை ஏன் சொல்லவில்லை என கேட்டுவிடக்கூடாது
என்பதற்காக அனைத்தையும் கூறிவிட்டு தேவையானவர்கள் தேவைப்படுவனவற்றை எடுத்துக்கொள்ள
வழிவகை செய்துள்ளார் திருவள்ளுவர்.
பணம், புகழ், பதவி இவை மூன்றும் இப்பிறவிக்கு அவசியம். இதனைப் பெறுவதற்கு
வெறும் உழைப்பு மட்டும் போதாது. மற்றவர் துணையும் அவசியம். மேலும் இவை மூன்றும்
நிலையாக இருப்பதும் அல்ல. நிலையாக இருப்பினும் ஆசையினை மிகுவிக்குமே அன்றி
குறைப்பதும் இல்லை. ஆனால் எப்பிறவியிலிருந்தும் விடுதலை பெற வேண்டுமெனினும் மறுமை
வாழ்வில் வளமாக இருக்க வேண்டுமெனினும் ஐம்புலன்களை ஒடுக்கினால் போதும்.
ஐம்புலன்களை ஒடுக்க எவருடைய உதவியும் தேவையில்லை. தன்னை அடக்கினால் போதும். தன்னை
அடக்குவது என்பது மனதை அடக்குவது. மனம் ஒரு குரங்கு அதை அறிவு என்னும் ஒரு சிறு
குச்சியைக் கொண்டு அடக்கிவிடமுடியும். திருவள்ளுவர் அறிவினை அங்குசமாகவும்
ஐம்புலன்களை ஐந்து யானைகளாகவும் காட்டுவதனை
உரனென்னும் தோட்டியான்
ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து (திருக்குறள்-24)
என்னும் குறள் எடுத்துக்காட்டுகிறது. புலி, சிங்கம் போன்ற வலிமையான
விலங்குகளையும் வேட்டையாடி அடக்கிவிடும் மனிதன் தன்னிடமுள்ள ஐம்புலன்களை அடக்கிவிட
முடியாது தவிக்கிறான். மனம் எங்கே இருக்கிறது என்பதையே கண்டுபிடிக்க இயலாத
மனிதனுக்கு அதனை அடக்குவது என்பது கடினம்தான் என்றாலும் அதற்கான வழிமுறைகளை
பெரியோர் காட்டியுள்ளதனைப் பின்பற்றினால் எளிதில் அடக்கிவிடக்கூடும். எனினும்
அத்தகைய பெரியோரின் வாய்மொழிகளை கேட்கும் பக்குவமின்றி சிறியோராகவே திகழ்வதனைக்
கண்ட திருவள்ளுவர்
செயற்கரிய செய்வார் பெரியர்
சிறியர்
செயற்கரிய செய்கலா தார் (திருக்குறள்-26)
எனக் கூறுகிறார். இக் குறளின் வழி
பெரியோர் யார்? சிறியோர் யார்? என்னும் வினாக்களுக்கு விடையினையும் ஈந்துள்ளார்.
பெரியோரை அவருடைய செயலால் அறிந்துகொள்ள இயலும் எனக் குறிப்பிட்டவர் அவருடைய
வாய்மொழியாலும் அறிந்துகொள்ள இயலும் எனவும் சுட்டிக்காட்டுகிறார்.
மெய்யும் பொய்யும்
ஒருவரை நல்வழிப்படுத்தும் ஆசிரியர் அவருடைய வாழ்நாள் முழுதும்
கையைப்பிடித்துக்கொண்டு செல்ல இயலாது. அவ்வாறே மாணாக்கரும் ஆசிரியருடன் செல்லமுடியாது.
ஆனால் ஆசிரியருடைய வாய்மொழியை எப்போதும் தன்னுடனேயே கொண்டுசெல்ல இயலும்.
உலகியலுக்கு வழிகாட்டும் ஆசிரியரைப் போலவே அருளியலுக்கு வழிகாட்டும் குருக்களும்
தன்னுடைய சீடருக்கு எப்போதும் வழிகாட்ட இயலாது. அத்தகையோர் தம் மறை மொழியினால்
(மந்திரம்) சீடரை நல்வழிப்படுத்துவர். அத்தகைய மந்திர சொற்களையே தம் அருளியல்
பயணத்திற்குரிய பயணச்சீட்டாகக் கொள்ளவேண்டும். அவ்வாறு நல்வழிகாட்டும் குருவினையே
இந்த உலகம் என்றும் போற்றும். பொய்யான குருமார்களின் செயல் காலத்தை வென்று
நிற்காது. அவர் வாழும் காலத்திலேயே இன்னல் சூழும். எனவே பொய்யானவர்களையும்
மெய்யானவர்களையும் கண்டுகொள்ள அவர்களுடைய உண்மையான சொற்களை அறிந்தாலே போதும்
என்பதனை
நிறைமொழி மாந்தர் பெருமை
நிலத்து
மறைமொழி காட்டி விடும் (திருக்குறள்-28)
என்னும் குறளின் வழி வெளிப்படுத்தியுள்ளார். முதலில் தொலைவில் நின்று செயலால் காணவும்
அண்மையில் சென்று வாய்மொழியால் தெளிந்தும் குருவினைத் தேர்வுசெய்யுமாறு அறிவுறுத்துகிறார்.
இருவழியாலும் தெளிந்த பின்னர் ஐயம் உண்டாயின் அவருடைய உயர் பண்பின்வழி அறியலாம்.
எல்லா உயிரையும் ஓர் உயிராகக் காணும் நிலையினைக் கொண்டு அவருடைய மேன்மையினை உணரலாம்.
அவ்வாறு அனைத்து உயிருக்கும் நன்மை செய்யும் பெருமை உடையவரையே திருவள்ளுவர்
அந்தணர் எனக் குறிப்பிடுகிறார். இதனை
அந்தணர் என்போர் அறவோர்மற்
றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான் (திருக்குறள்-30)
என்னும் குறள் எடுத்தியம்புகிறது. அந்தணர் என்பவர் உயர்ந்தகுலத்தைச்
சார்ந்தவர் என்பதனை அவர்கள் எவ்வுயிரையும் தம்முயிராகக் கொள்ளும் குணத்தைக் கொண்டே
உணரவேண்டும் என்பதனைத் தெளிவுறுத்துகிறார்.
பெரியார் துணையே துணை
அறத்தின் வழி வாழ்வதே
வாழ்வாகும். இதனை அறியாது பொருளை மட்டுமே பெரிதெனெ நினைத்து அறத்தை மறந்து வாழ்வதனால்
செல்வம் பெருகுமே அன்றி இன்பம் பெருகாது. அல்லவை தேய அறம் பெருக வேண்டுமாயின் பெரியோரின் துணை அவசியமாகும். எனவே அத்தகைய
பெரியோரை ஆய்ந்து தேர்ந்து நட்பு கொண்டாலே போதும் இன்பம் தானே வந்தடையும் என்பதனை
உணர்த்தும் வகையில்
அறனறிந்து மூத்த அறிவுடையார்
கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல் (திருக்குறள்-441)
என்னும் குறளை எடுத்துரைக்கிறார். அத்தகைய பெரியோரின் நட்பானது உற்ற நோயினை
நீக்குவதோடு மீண்டும் அந்நோய் ஏற்படாதவாறு காக்கும் தன்மையது எனத்
தெளிவுறுத்துகிறார். ஏனெனில் தம் வாழ்நாளில் தமக்கு ஏற்பட்ட கடினமான அனுபவங்களால் சிக்கலிலிருந்து மீள்வதற்கான எளிய
வழிகாட்டுதல்களை அவர்கள் வழி அறிந்துகொள்ள இயலும். எத்தனையோ முன்னோர்கள் தம்முடைய
உயிரைக் கொடுத்ததன் விளைவாகவே இன்று நாம் வளமான காய் கனிகளைச் சுவைத்து
வாழமுடிகிறது என்பதனை இங்கு எண்ணி மகிழலாம்.
கண்ணீரும் தண்ணீரும்
ஒருவன் குடி தண்ணீர் வேண்டி தன்னுடைய ஊரில் கிணறுதோண்ட முடிவெடுத்தான்.
அப்போது அவனுடைய தந்தையார் தானும் வருவதாகக் கூறினார். உனக்கு ஒன்றும் தெரியாது.
நான் பார்த்துக் கொள்கிறேன் எனக்கூறி தான் மட்டும் சென்றான். ஒருஇடத்தில் 10 அடி தோண்டி தண்ணீர் கிடைக்காததால்
வேறோரிடத்தில் 10 அடி தோண்டினான். அங்கும் தண்ணீர் கிடைக்காததால் வேறோரிடத்தில்
தோண்டநினைத்தான். அப்போது அந்தப் பக்கம் சென்ற பெரியவர் நீ தோண்டிய இடத்திலேயே
தோண்டு என்றார். ஒரு அடி தோண்டியவுடனே பதினோராவது அடியில் தண்ணீர் கிடைத்தது.
அப்போது தான் தந்தையை நினைத்துக் கொண்டு பெரியாரின் துணை எவ்வளவு அவசியம்
என்பதனைத் தெளிந்துகொண்டான். அந்தப்பெரியவரின் பேச்சையும் கேட்காமல்
இருந்திருந்தால் தோல்வியினையே தழுவியிருப்பான். இதனால் கண்ணீர் மட்டுமே
எஞ்சியிருக்கும் . தண்ணீர் கிடைத்திருக்காது என்பதன் வழி பெரியார் துணையின் பெருமையினை
அறியலாம்.
கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்
ஆற்று பவர்கண் இழுக்கு (திருக்குறள்-893)
என்னும் குறளை இங்கு எண்ணி மகிழலாம்.
இடிப்பும் கெடுப்பும்
இடித்தொழுகல் என்பது தவறினைத்
திருத்தும் பண்பினைக் குறிக்கும். தவறியவர்களின் தவறினைச் சுட்டிக்காட்டி
நல்வழிப்படுத்தும் போக்கினையே இது குறிக்கிறது.
இத்தகைய அறிவுடையோரைப் பெற்றவரே தம்தம் தொழிலில் சிறந்து விளங்கமுடியும்.
அத்தகைய பெரியோரைப் பெறாத ஒருவரை எவரும் கெடுக்க வேண்டும் என எண்ணத் தேவையில்லை.
அவரே தம் அழிவினை ஏற்படுத்திக் கொள்வர் என்பதனை
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும் (திருக்குறள்-448)
என்னும் குறளின் வழி அறிவுறுத்துகிறார் திருவள்ளுவர். அத்தகைய பெரியோரின்
துணையாலேயே ஒருவர் தம்முடைய நிலையில் சிறந்து விளங்கமுடியும். இல்லாவிடில் துன்பம்
விளையும்போது அதனை எதிர்கொள்ளத் துணிவின்றி தோல்வியினையே துணையாகக்
கொண்டுவாழ்வார். ஒரு தொழிலைத்
தொடங்குவோர்க்கு எவ்வாறு முதலீடு அவசியமோ அது போல பெரியாரின் துணை அவசியம்
என்பதனைத் தெளிவுறுத்துகிறார் திருவள்ளுவர். பெரியோரின் துணையின்றி வாழ்பவர் எவ்வாறு பகைவர்
எவரும் இல்லாமலே கெட்டுப்போவார்களோ அவ்வாறே பெரியாரின் துணையினைக் கைவிடுவோரும்
கெட்டுப்போவர். இது முதல்நிலையினைக் காட்டிலும் தீமை பயப்பது. ஏனெனில் பெரியாரின்
துணையினால் பாதுகாப்போடு வாழ்ந்தவர் அந்நட்பினைக் கைவிட்டால் பாதுகாப்பின்றி
வாழும் சூழல் ஏற்படும். இது பல பகைவரால் விளையும் தீமையினை விட கேட்டினை
விளைவிப்பதாக அமையும். தாய்க் கோழியிடமிருந்து விலகிச் செல்லும் குஞ்சு
பருந்துக்கு இரையாவது போலவே பெரியார் துணையினை விட்டவர் அவர்களுடைய எதிரிகளுக்கு
எளிதில் இலக்காவர் என்பதனை திருவள்ளுவர் உணர்த்துகிறார்.
பெரியாரைப் பிழையாமை
செயற்கரிய செய்வார் பெரியார்
எனப் பெரியாருக்கு இலக்கணம் வகுத்த திருவள்ளுவர் அத்தகைய பெரியாரைப்
பிழையாதிருத்தலின் அவசியத்தினையும் உணர்த்துகிறார். பிழையாதிருத்தல் என்பது
அவருடைய செயலை இகழாதிருத்தல் என எளிதாக எடுத்துரைக்கிறார். மரங்களிலிருந்து
உயிர்க்காற்றைப் (ஆக்ஸிஜன்) பெற முடியும் எனக்கூறிய போது அதனைக் கேளாது மரங்களை
வெட்டினர். இன்று புவி வெப்பமயமாவதனை உணர்ந்து இயற்கையைப் பாதுகாக்க பல்வேறு
முயற்சிகள் செய்யப்பட்டு வருவதனைக் காணமுடிகிறது. பெரியவர்கள் இயற்கை சூழலுடன்
வாழ்ந்து இயற்கை உணவை உண்டு வாழ்ந்தனர். இப்பெருமையினை உணராது அவர்களுடைய செயலைப்
பழித்ததன் விளைவாகவே இன்று பல சிக்கல்களில் இளைய சமுதாயம் சிக்குண்டு கிடப்பதனைக்
காணமுடிகிறது. இன்று அந்நிலையினை உணர்ந்து காற்றையும், நீரையும் காக்க பல்வேறு
முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முன்னோரின் அறிவுரையைக் கேட்காததனால்
இன்று செயற்கை மழையினை உருவாக்கவும் சூரியஒளி மின்சாரத்தைப் பயன்படுத்தவும்
துணிகின்றனர். இவையாவும் நல்முயற்சியே எனினும் பெரியாரின் சொற்களை இனியேனும்
பாதுகாக்கத் தவறினால் மனித இனமே வாழ இயலாத நிலைக்குப் போய்விடும் என்பதனை
உணர்த்தும் வகையில்
ஆற்றுவார் ஆற்றல் இகழாமை
போற்றுவார்
போற்றலு ளெல்லாம் தலை (திருக்குறள்-891)
எனக் கூறியுள்ளதனைக் காணமுடிகிறது. இயற்கை முறையில் விளைந்த உணவுகளை உண்ணாது
செயற்கை முறையால் (கார்பைடு வைத்து மாம்பழங்களைப் பழுக்கவைத்தல்) விளைந்த உணவுகளை
உண்பதால் அடையும் கேடுகளையும் இங்கு எண்ணி பெரியார் காட்டிய வழியினை அனைத்து
நிலைகளிலும் பின்பற்ற வேண்டும் என்பதனை உணரலாம். சூரிய வழிபாட்டின் பெருமைகளை
உணர்ந்து அதனால் கிடைக்கும் மின்சாரத்தைச் சேமித்துப் பயன்படுத்தினால் அணுசக்தி
நிலையங்களைக்கூட மூடிவிட்டு பாதுகாப்பாக வாழ இயலும். எனவே இயற்கையைப் போற்றிய
பெரியோரை என்றும் வணங்கி வாழ்த்த வேண்டுமென்பதனை உணரலாம்.
அறிவும் ஆண்மையும்
ஆண்மை என்பது ஆளும் தன்மையினையே
குறிக்கிறது. அதனாலேயே பெண்ணுக்கும் ஆண்மை உண்டு எனக் கூறுவது உண்டு. அவ்வாறே
பெண்மை என்பது இரக்கத்தன்மையினைக் குறிப்பதனால் ஆணுக்கும் பெண்மை உண்டு எனக்
குறிப்பிடப்படுகிறது. ஆண்மை என்பதனை அடக்கும்தன்மை எனக் கொண்டு பிறரை அடக்க
நினைத்தால் அதனால் கேடு மட்டுமே விளையும் என்பதில் ஐயமில்லை. உலகையே அச்சுறுத்தி
தன்னாட்சிக்குக் கீழ் கொண்டுவர வேண்டும் என நினைத்த ஹிட்லர் தற்கொலை செய்து
கொண்டதே இதற்குச் சான்றாக அமைகிறது. இத்தகைய ஆண்மை நிலையினை அறிவுடைய ஆண்மையாகக்
கருத இயலாது. நல்லோரின் பேச்சைக் கேட்காது தானே உலகை ஆளவேண்டுமென எண்ணி அனைவரையும்
அடக்கநினைத்தவனுக்கு ஆறடி மண்ணே போதுமானதாக இருந்ததனை உணர்த்தும் வகையில்
குன்றன்னார் குன்ற மதிப்பின்
குடியொடு
நின்றன்னார் மாய்வர் நிலத்து (திருக்குறள்-898)
என்னும் குறள் அமைகிறது. பெரியோரை மதிக்காது உலகத்தையே தன் கட்டுக்குள் கொண்டு
வந்த வீரன் இன்று கொடுங்கோன்மைக்கு மட்டுமே அடையாளமாகக் காட்டப்படுவதனை இங்கு எண்ண
வேண்டியுள்ளது.
பெரியோர் சினந்தால்
பெரியவர்கள் தவறைத் திருத்த
முயல்வர். தவறியவர்களை தண்டிக்க நினையார். ஆனால் திருந்த எண்ணாத கயவர்களைக்
குறித்து அவர்கள் கவலைகொள்ள மாட்டார். ஏனெனில் அவர்களை மாற்றுதல் இயலாது.
அவர்களுடையே செயலே அவர்களுக்குப் பாடம் கற்பிக்கும் என ஒதுங்கிவிடுவர். எனினும்
அத்தகைய பொறுமை குணம் கொண்டோரையும் வருத்தும் அளவிற்கு கேடு நிகழுமாயின் அவர்கள்
பொறுத்துக்கொள்ள மாட்டார். ஏழைகளுக்கு கேடு நிகழும்போது அதனைப் பார்த்துக்
கொண்டிருக்க அவர்களால் இயலாது. இதற்கு எடுத்துக்காட்டாக அன்னாஹசாரே அவர்களைக்
குறிப்பிடலாம். அந்நியனிடமிருந்து விடுதலை பெற்ற இந்தியர்கள் இன்று
இந்தியர்களாலேயே சுரண்டப்படுவதனைக் கண்டு பதறினார். அதனால் அறப்போராட்டம்
உருவானது. இன்று இந்திய முழுதும் ஊழல் ஒழிப்பு குறித்த சிந்தனை பரவிவிட்டது.
இதனால் அரசும் தனக்கு ஏற்படக்கூடிய இழிநிலையை உணர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை
மேற்கொண்டு லோக்பால் சட்டத்தை ஒருவாறு நிறைவேற்ற முயற்சிக்கிறது. ஆட்சி, புகழ், பணம் அனைத்தும் இருந்தாலும் பெரியோர்
சினந்தால் அடிபணிந்தே ஆக வேண்டும் என்பதனை இந்நிகழ்ச்சி எடுத்துக்காட்டியுள்ளது.
இதனையே தெய்வப்புலவர் திருவள்ளுவர்
இறந்தமைந்த சார்புடைய ராயினும்
உய்யார்
சிறந்தமைந்த சீரார் செறின் (திருக்குறள்-900)
எனக் கூறியுள்ளார். இளைஞர் இயக்கமே அன்னாஹசாரே பின் நின்றிருந்ததைக் கண்டு
அரசு நடுங்கியதே பிறர் நலம் காணும் தவமுடையார் வலிமை என்பதனை உணரலாம். இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கு முன்னர் கூறிய இவ்வாக்கு இன்றைக்கும் பொருத்தமுடையதாக அமைந்துள்ளதனை
இங்கு எண்ணி மகிழலாம்.
மெய்யறிவின் தேவை
பொய்யறிவு என்பது பொய்யான இவ்
உலகத்தில் வாழத் தேவையான அறிவாகும். நிலையில்லாத மாற்றத்தைக் கொண்ட மாய உலகம் இது
என்பதனாலேயே இவ் உலகைப் பொய் எனப் பெரியோர் குறிப்பிடுகின்றனர். ஆனால் இந்த
உலகத்தில் வாழ்வதற்கே பள்ளிக்கல்வி, உயர்நிலை கல்வி, உயர் கல்வி எனப் பல கல்வி
தேவைப்படுகிறது. இந்த ஒரு பிறவி
வாழ்க்கைக்கே இவ்வளவு உழைக்க வேண்டியிருக்கிறதெனில் எத்தனை பிறவி உள்ளதோ அத்தனைப்
பிறவிகளிலிருந்தும் விடுதலைப் பெற வேண்டுமாயின் எவ்வளவு உழைக்க வேண்டியிருக்கும்
என்பதனை உணர்த்துவதே மெய்யறிவு. இம் மெய்யறிவு முயற்சியில் ஈடுபடுவோர் இவ்
உலகப்பற்றுகளிலிருந்து நீங்குவர். எப்போது இந்த உலகப் பற்றை நீக்கக்கூடிய திறம்
வாய்க்கப்பெற்றதோ அவர்களை யாரும் ஏமாற்ற முடியாது. அவர்கள் பாசத்திலிருந்து
விடுபட்டவர்கள். அவர்கள் இன்னார் இனியார் என்று காணாது உண்மைப் பொருளை மட்டுமே
காண்பர். இந்நிலைக் கைவரப்பெறுதல் அரிது. அதனை விடுத்து இன்றைய இளையோர்க்கு
வழிகாட்டும் வகையில் மெய்யறிவினை எளிதாக உணர்த்த விழையும் திருவள்ளூவர்
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு (திருக்குறள்-355)
என்கிறார். இதன்வழி இவ் உலகில் ஏமாறாது வாழ்க்கை நடத்த வேண்டுமானால்
எச்செயலிலும் ஆய்ந்து பின்னர் ஈடுபடவேண்டும் என அறிவுறுத்துகிறார். வீணான
சாமியார்களிடம் சிக்கிக்கொண்டு தம்முடைய இளமையினையும் கல்வித்திறனையும் இழக்கும்
நிலை பெருகிவருகிறது. ஒரு சில மாய வித்தைகளை உண்மையெனக் கொண்டு பெற்றோரை விடுத்து
செல்லும் கொடுமையும் நடந்தேறி வருகிறது. உண்மையான குருவானவர் எவருடைய திறனையும்
வீணடிக்கமாட்டர்ர். திறனை பெருக்குவதே உண்மையான குருவின் பணியாகும். இதனை உணராது
தம் வாழ்க்கையை ஒரு போலிச் சாமியாரிடம் இழந்து வாடும் நிலையினையும் காணமுடிகிறது.
எனவே இறைவன் அருளைப் பெற இறைவனை வணங்கினாலே போதும். கடமையினை ஒழுங்காகச் செய்தாலே
இறைவன் அருளைப் பெற முடியும் என்பதனை உணரவேண்டும்.
பிறப்பென்னும் பேதைமை
பிறப்பு கொடிது. ஏனெனில் இறப்பு
கொடிது. எப்போது பிறப்பு உண்டாகிறதோ அப்போதே இறப்பும் உறுதி செய்யப்பட்டு
விடுகிறது. இறைவனிடம் இருக்கும் ஆன்மா அதன் வினைப் பயனுக்கேற்ப ஒரு உருவத்தையோ உடலையோ
பெற்று இவ் உலகத்தில் வாழ்கிறது. எனவே
அருளாளர்கள் பிறப்பே வேண்டாமென்று இறைவனாகிய செம்பொருளை வேண்டினர். எவன் ஒருவன்
இறைவனுடைய அருளாலேயே பிறவி உண்டாகிறது என எண்ணுகிறானோ அவன் எவ் உயிர்க்கும் தீங்கு
செய்யான். எவ் உயிர்க்கும் தீங்கு செய்யாத போது இறைவன் அருள் கிட்டும். இறையருளால்
பிறப்பு என்னும் பேதைமை நீங்கும். இதனையே
பிறப்பென்னும் பேதைமை நீங்கச்
சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு (திருக்குறள்-358)
என்னும் குறளால் உணர்த்துகிறார் தெய்வப்புலவர். பிறப்பை பேதைமை எனக் கூறக்
காரணம் அது அறியாமையின் உரு. ஒவ்வொரு பிறவியிலும் தன்னுடைய முயற்சியாலேயே
ஓரறிவிலிருந்து ஆறறிவு வரை வளர்ந்து மனிதராகி இறையருளைப் பெற முடியும். ஆறறிவு
இருக்கும் மனிதருள்ளும் செம்பொருளைக் காண விழையும் முயற்சி சிலருக்கே உரியதாகும்.
ஏனெனில் பேதைமை என்னும் மடமை அவர்களுக்கு இறைப் பெருமையினை மறைத்து உலக
இன்பங்களையே பெரிதாகக் காட்டும் என்பதனை ஒருவாறு உணரலாம். இத்தகைய பேதைமையினை
ஒழிக்க எளிய வழியினைக் காட்டுகிறார் திருவள்ளுவர். அறிவை மறைக்கும் காமம், தன்னை
மறைக்கும் சினம், கண்ணை மறைக்கும் மயக்கம் (மாயை) இவை மூன்றையும் விடுத்தால்
மெய்யறிவைப் பெற முடியும் என்பதனை
காமம் வெகுளி மயக்கம்
இவைமூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய் (திருக்குறள்-360)
என்னும் குறளின் வழி எடுத்துக்காட்டுகிறார். ஆசைப்பட்டதை அடைவதற்காக எத்தகைய
செயலையும் செய்யத் தூண்டும் காமமும் பிறருடைய அழிவிலேயே தன்னுடைய வாழ்வு
இருக்கிறது என எண்ணும் சினமும் தன் தவறை யாரும் உணரமாட்டார் எனச் செயல்படும்
மயக்கமும் தான் ஒருவரை மெய்யறிவிலிருந்து விலக்கிவைக்கிறது என்பதனைத்
தெளிவுறுத்துகிறார் திருவள்ளுவர்.
தவ வாழ்க்கை
பெரியோரை மதித்தொழுக வேண்டும்
என அறிவுறுத்துவதற்காக நீத்தார் பெருமையினையும் பின் பெரியோர்களால் விளையும் பயன்
பெரிது என்னும் கருத்தினை உணர்த்தும் வகையில் பெரியாரைத் துணைக்கோடலையும் பெரியார்
துணையின்றி வாழ்வதனால் விளையும் கேட்டினை உணர்த்தும் வகையில் பெரியாரைப்
பிழையாமையினையும் உணர்த்தியுள்ளார். அவ்வாறு ஒழுகும் மக்களை நல்வழிப்படுத்தும்
வகையில் மெய்யுணர்தலை உணர்த்தினார். இவ்வாறு தங்கள் நிலையினை மேம்படுத்திக்
கொண்டவர்கள் வாழ்க்கையே பயனுடைய வாழ்க்கையாக அமையும். அத்தகையோர் விரும்பியதைப்
பெற்று வாழும் வகையில் தவ வாழ்க்கைக்குரிய வழியினையும் எடுத்தியம்புகிறார்
திருவள்ளுவர். தவ வாழ்க்கை என்பது
துறவிகளுக்கு மட்டுமே உரியது என எண்ணி இல்லறத்தார் பிற உயிர்களைக் கொன்று வாழ்வது
தூய வாழ்வாகாது. இதனை உணர்த்தும் வகையில்
உற்றநோய் நோன்றல்
உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு (திருக்குறள்-261)
எனக் கூறியுள்ளார். பிற உயிர்களுக்கு தீங்கு செய்யாமையே தவத்திற்கு உருவாகும்
என்பதனை இதன்வழி உணர்த்துகிறார். தவ வாழ்க்கை என்பது பிற உயிர்களுக்கு கேடு
விளைவிக்காதிருத்தாலே என்பதனை உணர்த்திய திருவள்ளுவர் அதற்கு முன் பொறுமையுடன்
வாழ்தலின் அவசியத்தினை உணர்த்துகிறார். உற்ற நோயினை பொறுத்தல் என்பது உள்ளத்தால்
வரும் நோயினையும் உடலால் வரும் நோயினையும் பொறுத்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தினை
உணர்த்தியுள்ளார்.
ஒன்னாரும் உவந்தாரும்
அறவாழ்க்கையினை மேற்கொள்வோரே தவ
வாழ்க்கை வாழ்பவராகிறார். பிறர் நலம் போற்றும் அவ் அறவாழ்வுக்கு இடையூறு ஏற்படும்
வகையில் எவரேனும் துன்பம் விளைவிப்பாராயின் அப்பகைவரை (ஒன்னாரை) அந்த அறமே
கொன்றுவிடும். இவ் வல்லமை தவ வாழ்க்கை மேற்கொண்டவர்க்கு இயற்கையாகவே அமையும்
என்பதனை
ஒன்னார்த் தெறலும் உவந்தாரை
ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும் (திருக்குறள்-264)
எனக் கூறுகிறார். இதனால் தவ வாழ்க்கை வாழ்வோர்க்கு உதவுவோர் எண்ணிக்கைப்
பெருகிவருகிறது. தவ வாழ்க்கை மேற்கொள்ள இயலாதவர்
தவ வாழ்க்கை மேற்கொள்வாருக்கு துணைசெய்து புண்ணியத்தைத் தேடிக் கொள்ள
விழைகின்றனர். நன்மைக்குத் துணைசெய்வோர் அதற்குரிய பலனை அடைவர் என்பதனையும்
தவவாழ்க்கை மேற்கொள்வோரால் அத்தகைய பயனை எளிதில் அளிக்க முடியும் என்பதனையும்
இதன்வழி உணர்த்துகிறார் திருவள்ளுவர். தவவாழ்க்கை மேற்கொண்ட சித்தர்களின் நிழல்
படுவதனாலேயே நோய் குணமான வரலாறெல்லாம் இக்கூற்றுக்கு வலிமை சேர்ப்பதாக அமைகிறது. அருளியல்
நோக்கில் காணுகையில் தவ வாழ்க்கை மேற்கொண்டவர் தன்னுடைய உலகப்பயணத்தை
முடிவுசெய்யும் வல்லமையினையும் பெற்றுவிடுகின்றனர். அவ்வாறே அருளாளர்கள் அனைவரும் இறைவனடி
சேர்ந்ததனை ஒருவாறு உணரலாம். உலகியல் வாழ்க்கையிலும் கூற்றத்தினை வெல்வதற்கு
தவவாழ்க்கைத் துணைசெய்கிறது. தவவாழ்க்கை என்பது தூயவாழ்க்கை. வருமுன் காக்கும்
வாழ்க்கை. இதனால் ஒருவருடைய ஆயுளை நீட்டித்துக் கொள்ள முடியும் என்பதனையும்
உணரலாம். இதனையே தெய்வப்புலவர்
கூற்றம் குதித்தலும் கைகூடும்
நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு (திருக்குறள்-269)
எனக் கூறியுள்ளார். இவ்வாறு தவ வாழ்க்கையினை மேற்கொள்பவர்கள் சிலராக
இருப்பதனாலேயே இந்த உலகில் சிலர் வளமாக வாழ்வதனைக் காணமுடிகிறது. இவர்கள் பலராக
வேண்டுமெனில் தவத்தை மேற்கொள்ளும் நிலையும் பெருகவேண்டும் என்பதனை உணர்த்துகிறார்
திருவள்ளுவர்.
நிறைவாக
தெய்வப்புலவர் திருவள்ளுவர்
அருளிய திருக்குறள் எக்காலத்துக்கும் எச்சமயத்தார்க்கும் எந்நிலையிலும்
வழிகாட்டுவதாக அமைந்துள்ளது. எக்குறளையும் உலகியல் நோக்கிலும் அருளியல் நோக்கிலும்
காண வழிவகுப்பது திருக்குறள் ஒன்றே என்பதனாலேயே திருக்குறள் ’பொய்யாமொழி’ எனப் போற்றப்படுகிறது. மெய்ப்பொருள் என்பது உலகியல்
நோக்கில் உண்மையினையும் அருளியல் நோக்கில் இறைவனையும் சுட்டுகிறது. அதுபோலவே தவம்
என்பது கடமை உணர்வினையும் இறை உணர்வினையும் விளக்குவதாகக் கொள்ளலாம். இதன்வழி
நோக்கிற்கேற்ப வாக்கு அமையும் பெருமை திருக்குறளுக்கு உண்டென்பதனை உணர்வுடையார்
உணர்வர். எவ்வாறெனினும் இன்றைய இளைஞர்களுக்கு வழிகாட்டும் வகையிலும் படைப்பாளிகளை
மேலும் திருக்குறளில் ஆழங்கால்படவும் வழிவகுத்திட்ட இத் தமிழ் வேள்வியில் தங்களை
ஈடுபடுத்திக்கொண்டுள்ள தமிழ்நெஞ்சங்களுக்கு தமிழன்னையின் அருள் கிடைக்கும் என்பதில்
எள்ளளவும் ஐயமில்லை.
******