ஒரு நாட்குறிப்பு
வரலாற்று ஆவணமானது.
ஆனந்தரங்கம் பிள்ளை 1709 ஆம் ஆண்டு
சென்னையிலுள்ள பெரம்பூரில் பிறந்தவர். இளம்வயதில் தந்தையின்
வணிகத்திற்குத் துணையாக நின்றவர். பன்மொழிப்புலமை பெற்ற இவர், ஃப்ரெஞ்சு
கவர்னராக விளங்கிய துய்ப்ளேவிடம் துபாஷியாகப் (மொழி பெயர்ப்பாளராகப்) பணியாற்றியவர். ஆனந்தரங்கப்பிள்ளை
ஆட்சியாளர்களின் முடிவெடுக்கும் கொள்கைகளுக்கும் துணைநின்றவர். ஃப்ரெஞ்சு ஆட்சிக்கும் இந்திய மக்களுக்கும் இடையே பாலமாகத்
திகழ்ந்தவர். 1736 ஆம் ஆண்டிலிருந்து அவர் இறந்த நாளான 1761
ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம்நாள்வரை குறிப்பு எழுதினார். இருபத்தைந்து
ஆண்டுகள் எழுதிய அக்குறிப்பே “ஆனந்தரங்கப்பிள்ளை டைரி” எனக் குறிப்பிடப்படுகிறது. ஆனந்தரங்கம்
பிள்ளை தன் நாட்குறிப்பேட்டைப் விளம்பரப்படுத்தவில்லை. சரியாகப்
பாதுகாக்கவும் இல்லை. எனவே அவர் இறந்தபின் அவருடைய குறிப்புகள் செல்லரித்து இருந்தன. எண்பதைந்து ஆண்டுகளுக்குப் பிறகு
1846 ஆம் ஆண்டு வருவாய் இலாகா தலைவராக இருந்த அர்மான்ட் கால்ஸ் என்பவர் நகல் எடுத்துப்
பாதுகாத்தார். 1892 ஆம் ஆண்டு சென்னை ஆவணச்சேவைகள் அமைப்பு கால்ஸின் நகலிலிருந்து
நகல் எடுத்துக்கொண்டது. இவ்வாறு படிப்படியாக நகலெடுக்கப்பட்டு இன்று நல்ல வரலாற்று
ஆவணமாக அச்சிடப்பட்டிருக்கிறது.
“ஆனந்தரங்கப்பிள்ளை தன்னுடைய காலத்திய நாகரிகத்தின், கலாசாரத்தின், பழக்க வழக்கங்களின்
வரலாற்றை எழுதி உள்ளார். இந்திய ஐரோப்பிய வியாபாரிகள், காலனிவாதிகள், தளபதிகள், போர் வீர்ர்கள், இந்திய
மன்னர்கள், குடியானவர்கள், கைவினைஞர்கள் ஆகியோரை
அவர் கூர்ந்து கவனித்து வந்துள்ளார். ஐரோப்பிய சமுதாயத்தின்
புதிய சிந்தனைகளையும் இயந்திரங்களையும் ஆசிய நாடுகளில் புகுத்துகின்ற சரித்திரக் கடமையை
ஆற்றிய புதிய காலனி ஆதிக்க அரசு உருவாக்கத்தையும், முகலாய
சாம்ராஜ்யத்தின் சிதறும் போக்கினையும் அவர் விவரித்துள்ளார். சதிகள், போர் விவரங்களையும், சமூக, அரசியல்
எண்ணங்களையும் மதநம்பிக்கைகளையும் அவருடைய நாட்குறிப்பேட்டில் காணலாம்” என ”ஆனந்தரங்கப்பிள்ளை
வாழ்க்கையும் நாட்குறிப்பும்” என்னும் நூலில் டாக்டர். என். ரங்கநாதன்
குறிப்பிடுகிறார். ”உரைநடையில் முதற்பெரும் தமிழ் நூல், இன்றுவரையும்
கூட நம் மொழியில் நீண்ட உரைநடை நூல் பிள்ளையின் நாட்குறிப்பே” என ஆனந்தரங்கப்
பிள்ளை கால அரசியலும் சமுதாயமும்” என்னும் நூலின் ஆசிரியர் இர. ஆலால சுந்தரம்
குறிப்பிடுகிறார். நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் மிக்க பிரெஞ்சு நாட்டுப் பாரீஸ்டர்
பட்டம் பெற்ற புதுவை ஞானதியாகு அவர்கள் ”ஆனந்தரங்கம் பிள்ளை
தினசரி, சிறுகதைக் கொத்து அல்ல, சரித்திர
நூலுமல்ல. அன்றாடம் பார்த்ததையும், கேட்டதையும்
குறைக்காமலும் மிகைப்படுத்தாமலும் கற்பனா சக்தியை உபயோகிக்காமலும், உள்ளதை
உள்ளபடியும் அவருக்குத் தோன்றியவாறும் அவர் அதில் குறிப்பிட்டிருக்கிறார்” எனக் கூறியுள்ளார்.
**************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக