தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

செவ்வாய், 21 ஜனவரி, 2020

Vanidasan- Kavignar Eru. - Each word is Golden

வாணிதாசன் பாட்டு ஒவ்வொன்றும் பொன்

கவிஞரேறு வாணிதாசனார் தமிழர்ப்பண்பாடு குறித்துப் பாடிய பாட்டு பொன்னுக்கு இணையானது எனப்பாடியுள்ளார் பாவேந்தர்.

எல்லாரும் நல்லார் என்றுஎண்ணுவார் இன்றமிழ்
வல்லகவி வாணிதாசனார்அல்லும்
பகலும் தமிழர்தம் பண்பாடு பற்றிப்
புகலும் பாட்டு ஒவ்வொன்றும் பொன்

எத்திராசலு என்கின்ற அரங்கசாமி புதுவை மாநிலத்தில் உள்ள வில்லியனூரில் 22.07.1915ஆம் ஆண்டு பிறந்தார். ரமி, வாணிதாசன் என்னும் இருபுனைப்பெயர்களுள் வாணிதாசன் என்னும் பெயரே நிலைபெற்றுவிட்டது. பாவேந்தரின் இல்லத்தில் தனியாகத் தமிழ்ப்பாடம் கற்றுக்கொண்டவர். ‘விதவைக்கொருசெய்தி’  என்னும் கவிதை அறிஞர் அண்ணாவின்திராவிடநாடுஇதழில் வெளிவந்தது. அதனைப் படித்துவிட்டு அறிஞர் அண்ணாவே பாராட்டினார். பி.டி.க்கு இணையான சி..பி. பயிற்சித் தேர்வில் வெற்றிபெற்ற பின்னர் 1942-இல் ஆசிரியப்பணி. தமிழில்வித்துவான்பட்டம் பெற்றதும் புதுவை கல்வே கல்லூரிக்குத் தமிழ்ப்பேராசிரியராக மாற்றப்பட்டார்.. தென்னார்க்காடு மாவட்டத் தமிழாசிரியர் கழகத்தலைவர் புலவர்..அரங்கநாதம்பிள்ளை கவிஞருக்குப் பாராட்டு விழா நடத்திகவிஞரேறுஎன்னும் பட்டத்தை வழங்கினார். அப்பட்டமே நிலைபெற்றது. தமிழ், தெலுங்கு, ஆங்கிலம்,ஃப்ரெஞ்சு என நான்கு மொழிகளை அறிந்தவர்.

       தமிழை உயிரென எண்ணிப் பாடும் தமிழ்ப்பரம்பரையில் வந்த கவிஞரேறு தமிழ்மொழியின் அருமையினை இயன்ற இடங்களில் எல்லாம் பாடிச்செல்கிறார்.
                   
உளம்வாட்டும் கொடும் துயரை மாற்றுகின்ற
ஓசைநிறை பாட்டெங்கள் தமிழ்ப்பாட்டேயாம்

எனத் தமிழின் அருமையினைப் பாடியுள்ளார்.

உளம் வாட்டும் கொடும் துயரை மாற்றுகின்ற எளிமையாகப் பாடும் கவிவல்லார் என்பதற்குச் சான்றுமயிலாடு பாறை மகளிர் கலை மன்றம்என்னும் அடிகளே சான்று. உவமை நலம் பாடுவதில் முரண்பட்ட கவிஞர். கைகளைத் தாமரையாகக் காட்டும் கவிஞர் பலர். இவரோ

வாயில் வருபவர் முன்னே   வணங்கி வரவேற்கும் கைபோல்
சாயல் குறையாக் குளத்துள்        தாமரைக் கூம்பி அழைக்கும்

என்னும் அடிகளில்கைகளைப் போன்ற தாமரைஎனப்பாடுகிறார். பெற்றோரைப் போற்றவேண்டியதன் முக்கியத்துவத்தினை உணர்த்தும் சிந்துக்கவிதை

       பெற்ற அன்னைதந்தையேஎன்றும் பேசும் செல்வம் ஆகுமே
       மற்ற செல்வம் யாவுமேநாட்டில் வந்து வந்து போகுமே.

காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. அது உயிரைப்போல் சென்றால் மீளாது என்பதனை உணர்த்தும் கவிதை
       வெறுநாள் போக்கல் அறிவின்மை; வேலையை முடித்தலே நன்மை
என்னும்அடிகளின்வழிஉணர்த்துகிறார்.

பெண்ணுக்குக் கல்வி நலமே நலம் என்பதனை,
கன்றைப் போல ஓடி ஆடிக் கருத்தாய்ப் படிக்க வேண்டும் பாப்பா
என்றும் இதுவே பெண்ணின் அடிமை இன்னல் தவிர்க்கும் நல்வழி ஆமே

நாட்டின் நலன் குடும்ப நலத்தின் அருமையினைக் கொண்டே அறியமுடிகிறது என்பதனை,

பார் சிறக்க நல்விளைச்சல் ஒன்று மட்டும் போதா
பஞ்சமின்றிச் செழித்திருக்கக் குடும்ப நலம் தேவை.
தமிழ் மொழியின் அருமையினைப் பாடுவதில் தணியாத தாகம் கொண்டவர். தமிழின் தொன்மையினை

வானெழுந்த நீள்கதிரும் மாக்கடலின் வீச்சும்
ஏனெழுந்தது என்று எதுவும் எண்ணமிடா நாளில்
தேனெழுந்த செந்தமிழே ! நீஎழுந்தாய்

எனப்பாடியுள்ளார்.  தமிழச்சி, கொடிமுல்லை, தொடுவானம், எழிலோவியம், எழில்விருத்தம் என்னும் கவிதைப்படைப்புகளோடுவாணிதாசன் கவிதைகள்’ ‘பாட்டரங்கப் பாடல்கள் என்னும் தொகுப்பும் புகழ்பெற்றவை.

       பொதுவுடைமைச் சிந்தனைகள் நிறைந்தவர் என்பதனை இவருடைய கவிதைகள் பகரும். அதனால் வேற்றுமை சூழல் தகரும்.
      
       அரசனுக்கும் ஆண்டிக்கும் வேறுவேறு சட்டதிட்டம் அற்றுலகம் வாழவேண்டும்

எனப்பாடியுள்ளார். ஏழையின் பேச்சுக்கு உரிய மதிப்பு கிடைப்பதில்லை  சிந்தனைக்கு கவி வடிவம் கொடுத்துள்ளதனை

ஊரார்கள் நமை எல்லாம் உமி என நினைத்தார் போலும்

என்னும் அடிகளின் வழி புலப்படுத்துகிறார். மேலும் காட்டின் வறட்சி நிலையினை ஏழைமக்களின் வாழ்வோடு ஒப்பிட்டுக் காட்டுகிறார்.

கிடைத்த போதுண்டு சோறு கிடைக்காதபோது சோங்கி
நடுத்தெரு வாழும் ஏழை மக்கள்போல் நாளும் வானம்
கொடுத்த போதுண்டு வெயில் கொளுத்தும்போது ஏற்றுச் சோங்கி
அடுத்தவர்க்கு உதவிசெய்தே அழிவேற்றுக் கிடக்கும் காடே

என்னும் கவிதை அழகு எண்ணி வியக்கத்தக்கது. பெண்களுக்குரிய உரிமையினைக் கொடுத்துப்போற்ற வேண்டும் என்பதனை

       பொரியுண்டை என உம்முள்ளே பெண்களை நினைத்தீர் போலும்

என்கிறார். மேலும்  பொதுவுடைமைத் தத்துவத்தினை இயன்ற இடங்களில் எல்லாம் தூவிவிட்டுச்செல்கிறார்.

மொட்டு பலவகையானாலும் அதன் முருகு தரும் சுவை ஒன்றென்றாள்

எளிய உவமை நயத்தால் கருத்தினை விளக்குகிறார் கவிஞரேறு. 1974 ஆகஸ்டு  ஏழாம்நாள் இயற்கை எய்தியபோது வாணிதாசனாரின் உடலுக்குப் புதுவையிலுள்ளசேலியமேட்டிற்குவந்து உவமைக்கவிஞர் சுரதா அஞ்சலி செலுத்தினர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக