தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

புதன், 2 டிசம்பர், 2020

வேலு நாச்சியார் - வீரத்தமிழ் ராணி - Great Tamil Queen Velu Naachiyaar

 

செப்பேடுகளைச் செதுக்கிய எழுதுகோல்

       வரலாறு – சமூகத்தைப் புரட்டிப்போடும் வலிமை உடையது. உண்மைகளைப் பொய்களாகவும் பொய்களை உண்மையாகவும் காட்டிவிடும் வரலாறுகள் வாழ்க்கைப் பதிவுகளாகிவிடுகின்றன. வரலாறுகள் வெற்றிபெற்றவர்கள் மட்டுமே எழுதக்கூடிய ஆவணமாகிப் போனதனால் தோல்வியடைந்த வீரர்களின் வீர வரலாறு காணாமல் போனது. அத்தகையவர்களின் உண்மையான வரலாறுகளைத் தேடிக்கண்டுபிடித்துப் பதிவுசெய்வது வாழ்நாளின் பயனாகவே கொள்ளவேண்டி இருக்கிறது. அத்தகைய அரும்பணியினைச் செய்ய விழைந்துள்ள இந்நூலாசிரியர் கலைவரதன் அவர்களுக்குப் பாராட்டுக்கள்.

       வரலாறு என்னும் சொல், வந்த வழி என்னும் பொருளினை உள்ளடக்கியது. இனத்தின் பெருமை அவ்வினத்தின் வரலாற்றினைக் கொண்டே உணரமுடியும். இதனை பல்வேறு சூழலில் நன்கு உணர்ந்துள்ளார் இந்நூலாசிரியர். மத்திய கலால் துறையில் ஆய்வாளராகப் பணியாற்றி பணி நிறைவு பெற்றுள்ளதால் பட்டறிவுக்குப் பஞ்சமில்லை என்பதனை ஒருவாறு உணர்ந்துகொள்ளமுடியும். எதைச் சொல்வதனாலும் சான்றாவணத்துடன் சொல்லவேண்டும் என்னும் பாடம் அவருக்குக் கை வந்த கலை. ஏனென்றால் அவர் கலைவரதனன்றோ ?. எனவே தான், வீரமங்கை ராணி வேலு நாச்சியாரின் (வீமராவேநா) வாழ்க்கை வரலாற்றினைப் பதிவு செய்திட விழைந்தவர் குற்றம் குறை நிகழாதவாறு படங்களுடன் தம் கருத்துக்களைப் பதிவிட்டுள்ளார்.

       தமிழினத்தின் பண்பாட்டைக் காக்கும் நோக்கில் வீமராவேநா. வரலாற்றை நூலாக்க விழைந்துள்ளது நூலாசிரியரின் இனப்பற்றை எடுத்துக்காட்டுகிறது. வீரம் விளைந்த மண், பெண்ணின் பெருமை என்னும் இருகூற்றையும் இருப்புப்பாதை போல இந்நூல் எடுத்துரைக்கிறது. பெண்ணை அழகுப் பதுமைகளாகவே எடுத்துக்காட்டி முடக்கிவைத்துவிட்ட இச்சமூகத்தில் பெண்ணின் பெருமையினை ; வீரத்தினை ; அறிவுத்திறத்தை எடுத்துக்காட்ட விழைந்துள்ள இம்முயற்சி பாராட்டத்தக்கது.

       தமிழர்களின் வீரம் வரலாற்றில் பெரும்பாலும் எடுத்துரைக்கப்படவில்லை. காரணம், எழுதியவர்கள் தமிழர்களாய் இல்லை என்பதனைத் தவிர வேறில்லை. அவர்களுள் மிகச்சிலர் தமிழர்களின் வீரத்தை இருட்டடிப்பு செய்துள்ளதனை வரலாற்றின் வழி கற்றுணர்ந்துள்ளார். அக்குறைகளைக் களையவே இந்நூலை வடித்துள்ளார். தமிழர்களை எந்நாளும் ; எவரும் வீரத்தால் வெற்றிகொண்டார்கள் என்பதனை எங்கும் பார்க்கவே இயலாது. மாறாக, தமிழரை எதிர்த்து நின்றவர்களின் தோல்விகளையே பெரிதாக வரலாறு எடுத்துரைக்கிறது. மாவீரன் அலெக்ஸாண்டர் முதல் கஜினி முகம்மது வரை பலரும் தமிழர்களிடம் தோற்றதை வரலாறு எடுத்துரைக்கவில்லை. துரோகத்தால் வெற்றிகொள்வதும் தோல்விக்கே நிகராகும். தொடக்கம் முதலே தமிழர் வீரம் எடுத்துரைக்கப்படவில்லை. ஆங்கிலேயரை எதிர்த்த வீமராவேநா. வரலாறும் முறையாக வரலாற்றில் பதிவுசெய்யப்படவில்லை.

       சிவகங்கையை ஆண்ட முத்துவடுகநாதப்பெரிய உடையாத்தேவரின் மறைவுக்குப் பின் மக்களைக் காக்க யாருமில்லாத சூழல் உருவானது. அத்தகைய இக்கட்டான சூழலில் மறைவிடத்தில் இருந்துகொண்டே படையைத் திரட்டி மீண்டும் ஆட்சியைப் பிடித்தார் வீமராவேநா.  இவ்வரலாற்றை காலப்பின்னணியுடன் எடுத்துக்காட்டுகிறார் நூலாசிரியர். ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சியினை அறியாது நம்மவர்களே நம்மைக் காட்டிக்கொடுத்த வரலாறுகள் எண்ணிலடங்கா. அவ்வாறு பல துரோகங்களை எதிர்கொண்டு வெற்றிநடையிட்ட வீமராவேநா. புகழினை இந்நூல் சிறப்புற எடுத்துரைக்கிறது.

       உயிரை விடத் தன்மானம் பெரிது. வீரம் என்பது ஆயுதங்களில் இல்லை உள்ளத்தில் இருக்கிறது என நிறுவிய வீமராவேநா.-இன் படைத்தளபதிகளும், வீராங்கனைகளும், பொதுமக்களும் வாழ்ந்துச்சிறந்ததனை எடுத்துக்காட்டியுள்ளார் நூலாசிரியர்.  ‘வரிகேட்டு வந்தான் நெறிகெட்டுப்போனான்’ என்னும் தலைப்பில் வீமராவேநா- இன் பன்மொழிப்புலமை எடுத்துக்காட்டப்பட்டுள்ளது அருமை. வீரபாண்டிய கட்டபொம்மனும் ஜாக்சன் துரையும் பேசிக்கொள்ளும் காட்சி போல மன்னர் முத்துவடுக நாதருக்கும் கும்பெனி லார்டு டீகாட்டுக்கும் பேசும் காட்சியைக் காட்டுவது சிறப்பு.   ‘பிஞ்சு இதயத்தில் மிஞ்சிய தியாகம்’ என்பது போன்ற துணைத்தலைப்புகள் கவிதை நடையில் அமைந்துள்ளது இந்நூலுக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது. மருது சகோதரர்களின் பண்பு, உடையாளின் வீரம், குயிலியின் தியாகம் என ஒவ்வொரு வரலாற்றுப்பாத்திரத்தையும் எடுத்துரைத்துள்ள சிறப்பு போற்றத்தக்கது. ஒவ்வொரு காட்சியினையும் அழகுற எடுத்துள்ளதனை சுவைஞர்கள் (வாசகர்கள்) இந்நூலினைப் படித்து இன்புற வேண்டும் என்னும் கருத்தினை உள்ளத்தில் கொண்டே நூலின் அருமையினை விளக்கிக்கூறவில்லை.

       திசம்பர் திங்கள் இருபத்தைந்தாம் நாள் (25.12.1796) தம் வீரப்பயணத்தை நிறைவு செய்துகொண்ட வீமராவேநா.-இன் புகழினை இந்நூலில் ஒவ்வொரு காட்சியாகப் படம்பிடித்துக்காட்டியுள்ளார். இனி திசம்பர் இருபத்தைந்தாம் தமிழர் தன்மானம் காக்கும் நாளாக ; பெண்ணின் பெருமை பேசும் நாளாகக் கொண்டாடவேண்டும் என்னும் விழைவை இந்நூல் ஏற்படுத்துகிறது. அவ்வகையிலும் இந்நூலாசிரியரின் முயற்சி போற்றத்தக்கது.

       சிவகங்கைக்குச் சென்று அரண்மனையினையும், வீமராவேநா- இன் திருவுருவத்தினையும்,   மன்னர் பட்டியலையும், சமாதியினையும், நினைவுத்தூண்களையும் படமாக இணைத்துள்ளது சான்றாதாரத்திற்குப் பெரிதும் துணைபுரிகின்றது. இந்நூலின் சுருக்கத்தை ‘மானம் காத்த மங்கை நாச்சியார்’ என்னும் கவிதையாகவும் இந்நூலில் இணைத்துள்ளது இவருடைய கவிப்புலமைக்குச் சான்று.

       பணிநிறைவுபெற்றபின் வாழ்க்கையே முடிந்துவிட்டதுபோல் சோர்வடையும் இயல்பிலிருந்து முற்றிலும் மாறுபட்டு புதுமையான வாழ்க்கையைத் தொடங்கியிருக்கக்கூடிய நூலாசிரியருக்குப் பாராட்டுக்கள். முன் அறுபது அரசாங்கத்திற்காகப் பணி செய்தவர் பின் அறுபதில் நாட்டின் பெருமையினை ; இனத்தின் அருமையினை ; மொழியின் வளமையினைக் காப்பதற்காகச் செலவிடவேண்டும் என வாழ்த்துவதில் பெருமையடைகிறேன்.

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக