தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

செவ்வாய், 22 நவம்பர், 2022

அரசியல் அமைப்பு நாள் - நவம்பர் 26 (CONSTITUTION DAY - NOVEMBER 26)

Indian Parliament Pdf in Tamil

ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசியல் சாசனம் என்னும் இந்திய அரசியலமைப்பு நாள் நவம்பர் 26 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்தியா என்பது தாய். அதன் குழந்தைகள் மாநிலங்கள். குழந்தைகளுக்கு ஏதேனும் பாதிப்போ குழந்தைகளுக்கிடையே ஏதேனும் பாதிப்போ வந்தால் தாய்போல் மத்திய அரசு காக்கும். மாநில அரசுகளால் கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலை உருவானால் மத்திய அரசின் உதவியை நாடும். தம்பியை அண்ணன் அடித்துவிட்டால், தம்பி தாயின் உதவியை நாடுவதுபோல் மத்திய அரசை மாநில அரசுகள் உதவிகள் கேட்கும். அந்நிய நாட்டினர் ஊடுருவல், தீவிரவாதம், குண்டுவெடிப்பு, வெள்ள பாதிப்பு, நில நடுக்கம், கலவரங்கள், போராட்டங்கள் என அனைத்து இடர்பாடுகளுக்காகவும் மாநில அரசு மத்திய அரசினை அணுகும். சில மாநிலங்களின் நிலம், மக்கள், வேலைவாய்ப்பு, நிர்வாகம், என அனைத்துக் காரணங்களையும்கொண்டு மக்களின் வேண்டுகோளுக்கிணங்க தேவைகளுக்கேற்ப மாநிலத்தை இரண்டாகப் பிரித்தும் அல்லது ஒன்றாகச்சேர்த்தும் நிர்வாகம் சீரடைய மத்திய அரசு உதவும். இவ்வாறு ஒவ்வொரு மனிதரின் வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்கும் துணைநிற்க உருவாக்கப்பட்டதே இச்சட்டம்.  ஒரு குடும்பத்தின் ஒழுங்குமுறைபோல இந்நாட்டை நல்வழிப்படுத்த உருவாக்கப்பட்டதே அரசியலமைப்புச் சட்டம்.

            இந்திய மக்கள்  மக்களாட்சி முறையில் மக்களே ஆளும் வகையில் ஏற்றத்தாழ்வின்றி சரிநிகர்சமானமாக வாழ்வதற்காகவே இவ் அரசியல் அமைப்பு அமைந்துள்ளது. அனைவருக்கும் ஒரே வகையான வாய்ப்பு வழங்கப்படவேண்டும் என்பது கொள்கை. மனிதர்கள் அனைவரும் மதிக்கப்படவேண்டும். அதுபோலவே நிலம், கடல், மலை, நதி அனைத்தும் மதிக்கப்படவேண்டும்.  அனைவரின் தேவைக்காகவுமே அவை உள்ளன. அனைவருக்கும் உடுக்க உடை, இருக்க இடம், உண்ண உணவு உறுதி செய்யப்படவேண்டும். மக்கள் அனைவரும் நோயற்ற ; நலமான வாழ்வுவாழும்வகையில் அரசு செயல்படவேண்டும் எனக் குறிப்பிடுகிறது.

            இந்திய நாட்டில் எங்கு செல்லவும், பேசவும், கற்கவும், சங்கம் அமைக்கவும், அச்சுறுத்தாமல் அமைதியாக வாழவும்,  விருப்பமுடடைய முறையான தொழில்கள் செய்து பிழைக்கவும் பிறசமயங்களைக் குறைகூறாது தம் சமயங்களைப் பின்பற்றி வாழ்தலுக்கான உரிமையும் வழங்கப்பட்டுள்ளது.

            ஆயுதங்கள் மட்டுமின்றி எவ்வகையிலும் பிறருக்கு அச்சமூட்டும் வகையில் நடக்கவும், பிறரை வற்புறுத்தும் வகையில் வேலை வாங்குதலும் சிறார்களைப் பணியில் சேர்த்தலும் கால்நடைகளை வன்கொலை செய்வதும் சுற்றுச்சூழலைக் கெடுப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.

             அரசியலமைப்புச் சட்டத்தை மதித்தல், நாட்டுக்கொடி, நாட்டுப்பண்,  ஆகியனவற்றை மதித்து நடப்பதும், ஒற்றுமையுடன் வாழ்தல், நாட்டைக்காக்க  முன்வருதல், பெண்களை மதித்தல், பண்பாட்டைப் போற்றுதல், மரபுகளைக் காத்தல் பொதுச்சொத்துக்களைக் காத்தல் போன்றவை இந்திய மக்களின் கடமையாக்கப்பட்டுள்ளது.

            கடமையைச் செய்வது முதற்பணி ; உரிமை பெறுவது இரண்டாம் பணி

இந்திர அரசியல் அமைப்பு   1949 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் நாள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவ்வமைப்பினை ஏற்படுத்த  இரண்டு ஆண்டுகள் 11 மாதங்கள் 18 நாட்கள் தேவைப்பட்டது. 395 பிரிவுகளும் எட்டு அட்டவணைகளும் இருந்தது. இன்று பன்னிரண்டு அட்டவணைகளாகிவிட்டது. உலகிலேயே பெரிதானதாகவும் கையால் எழுதப்பட்டதாகவும் அமைந்துள்ளது. இந்த சாசனத்தில் ஒரு இலட்சத்து பதினேழாயிரத்து முந்நூற்று அறுபத்தொன்பது சொற்கள் உள்ளன. இதனை நாடாளுமன்ற நூலகம் ஹீலியம் வாயுவால் பாதுகாத்து வருகிறது.  

இருபத்து இரண்டுமொழிகளை அலுவலக மொழியாக அரசியலைப்பு சாசனம் குறிப்பிட்டுள்ளது சிறப்பு. பிரிட்டன், அயர்லாந்து ஜப்பான், அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, கனடா என பத்து நாடுகளில் உள்ள சட்டங்களில் சிறந்தனவற்றை தேர்வு செய்து ஆக்கப்பட்டுள்ள இந்திய அரசியலமைப்புச்சட்டம் சிறப்பாக அமைகிறது

அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவராக நின்றவர் டாக்டர் அம்பேத்கர். இந்திய அரசியலமைப்பு (சாசனம்)  தந்தை எனக் குறிப்பிடப்படுகிறார்.

அண்ணல் அம்பேத்கரின் பெருமையினை உணர்த்தும் வகையிலும் இச்சாசனத்திற்காகப் பாடுபட்ட அனைவருக்கும் நன்றி கூறும் வகையிலும் பாரதப்பிரதமர் நரேந்திரமோடி 2015 ஆம்ஆண்டு நவம்பர் 26 ஆம் நாளை அரசியலமைப்பு சாசன நாளாகக் கொண்டாடும் திட்டத்தைத் தொடங்கினார்.  

.           . இந்திய அரசு சிறப்பாகச் செயல்பட  நாட்டின் முதல் குடிமகனாராகிய குடியரசுத்தலைவர் முதல் அனைத்து மக்களுக்களுக்கான கடமைகளையும் உரிமைகளையும் அரசியலமைப்பு சாசனம் நிர்ணயித்துள்ளது. இத்தகைய சட்டங்களை உள்ளடக்கியுள்ளதால் இந்நாளை இந்தியச் சட்ட நாளாகவும் கொண்டாடப்படுகிறது. நம்மைக் காக்கும் அன்னை பாரதத்தை நாமும் காக்க உறுதிகொள்வோம். ஒற்றுமையுடன் வெல்வோம்.

சனி, 19 நவம்பர், 2022

கம்பன் பாடிய கீதை - மொழியாக்கத்தின் அருமை


 

            கம்பன் பாட்டும் கீதை சாரமும்

 

கம்பன் கவிச்சக்கரவர்த்தி. கம்பன் கவிதைக்குக் கொம்பன். விருத்தம் பாடும் விருத்தன் கம்பன். என்றெல்லாம் புகழப்படும் கம்பன் சிறந்த மொழியாக்கம் செய்பவராகவும் திகழ்ந்துள்ளார்.

தமிழ்க் குழந்தைகளுக்கு கீதையின் சாரம் உணர்த்தப்படவேண்டும் என எண்ணுகிறார் கம்பர். தன்னம்பிக்கை இழக்கும் பொழுதெல்லாம் கடவுளின் துணை எப்போதும் இருக்கிறது என நம்பிக்கையூட்டும் பாடலை எழுத விரும்புகிறார். அப்படி எழுதப்பட்ட பாடலை, ஒழுங்காகப் படித்தாலோ அல்லது கற்றுக்கொடுத்தாலோ தோல்வி எண்ணமோ, தற்கொலை எண்ணமோ, கடமையில் கவனக் குறைவோ விளையாது. ஓராண்டுக்கு 1 லட்சத்து 64 ஆயிரம் பேர் தற்கொலை செய்துகொள்கின்றனர். இதனைத் தடுக்கமுடியும்.  நாட்டிலேயே உயர்ந்த தொழிலாகக் கருதப்படும் மருத்துவத் தொழிலிலேயே கவனக் குறைவால் ஆண்டுதோறும் 50 இலட்சம் பேர் இறக்கின்றனர். இப்பாடலைப் படித்து  உணர்ந்தால் தர்மத்தை அறிந்து தன்னம்பிக்கையுடன் வாழமுடியும்.

இராமனின் பெருமையினை உணர்த்த விழைந்த கம்பர், அனுமன் வாயிலாக

‘பிணி வீட்டுப் படலத்தின் எண்பத்தோறாவது பாடலை, எவராலும் எட்ட முடியாத பெருமையுடையவனாக இராமன் திகழ்வதனைப் பாடுகிறார்.

 அறம்தலை நிறுத்தி வேதம் அருள் சுரந்து அறைந்த நீதி

திறம் தெரிந்து உலகம் பூண செந்நெறி செலுத்தித் தீயோர்

இறந்து உகநூறி தக்கோர் இடர் துடைத்து ஏக ஈண்டுப்

பிறந்தனன் தன் பொற்பாதம் ஏத்துவார் பிறப்பு அறுப்பான்

எனப் பாடியுள்ளார். அறத்தை நிறுத்த ; வேதத்தின் அருள் பொழியும் நீதியை உலகம் உணர்ந்து ஏற்றுக்கொள்ள; நல்லோர் செம்மையாக வாழ ; தீயோர் வீழ்ந்தொழிய ; தகுதியுடையோர் துயர் துடைக்க ; இவ்வுலகில் பிறந்தான்.  அத்தகைய இராமனின் பொற்பாதங்களை வணங்குவோர்க்கு பிறவித்துயர் இல்லை எனப்பாடியுள்ளார் கம்பர். இத்தகைய அரும்பொருளை உணர்த்தும் பாடல்  கீதையின் சாரமாக விளங்கும் பாடலின் மொழியாக்கப் பாடலாக அமைகிறது. இராமனும் கிருஷ்ணனும் ஒரே நோக்கத்திற்காக இவ்வுலகில் அவதாரம் எடுத்ததனை இப்பாடல் உணர்த்திவிடுகிறது.  “அறம் வெல்லும் பாவம் தோற்கும்” என்னும் கொள்கையே அது.

பவித்ராணாய சாதூநாம்

விநாசாயச துஷ்க்ருதாம்

தர்ம ஸம்சாத்பநார்த்தாய

சம்பவாமி யுகே யுகே

என்னும் பகவத் கீதையின் சாரத்தைத் தான் கம்பர் மிக அழகான தமிழில் பாடியுள்ளார். “பவித்ராணாய சாதூநாம்”  என்றால் தூய்மையான அருள்பொழியும் வேதப்பொருளை உணர்த்த  ; “விநாசாயச துஷ்க்ருதாம்” என்றால் தீயவர்களை ஒழிக்க ; “தர்ம ஸம்சாத்பநார்த்தாய” என்றால் தர்மத்தை நிலைநாட்ட ; “சம்பவாமி யுகே யுகே” ; ஒவ்வொரு காலத்திலும் தோன்றுகிறேன்.

 

இது மொழிபெயர்ப்பு அல்ல ! அருமையான மொழியாக்கம். கீதையின் சாரத்தைத் தமிழாக்கம் செய்துள்ள கம்பனின் புலமை அருமைதானே

            நன்றி ! வணக்கம்.