நற்றமிழரே வணக்கம்
தன்னிகரில்லா தமிழ்மொழி நமதே
தரணியை ஆள்வோம் நாளை நமதே
தன்னிகரில்லா தமிழ்மொழி நமதே
தரணியை ஆள்வோம் நாளை நமதே
காளமேகப்புலவரின் தனித்திறம்
முனைவர் ம.ஏ. கிருட்டினகுமார்,
தமிழ்த் துறைத் தலைவர், அறிஞர் அண்ணா அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, காரைக்கால் - 609 605. பேச : 9940684775
சொல்நயம் பொருள் நயம் நிறைந்த மொழிகளுள் தலையாயது தமிழ்மொழியே. இதற்கு அதனுடைய தொன்மையும் வளமையுமே அடிப்படை. இதனை நிறுவும் வகையில் தமிழில் பல நூல்கள் விளங்குகின்றன. பொருட்சுவையுடன் கற்றோர் மனம் களிக்கும் வகையில் சொல்லாடல் செய்வது அணிநலமாகிறது. அவ் வரிசையில் சிலேடை எனப்படும் இரட்டுற மொழிதல் முக்கிய இடம் பெறுகிறது. இதனைக் கையாள்வதில் காளமேகப்புலவரின் இடத்தினை அறிய விழைந்ததன் விளைவாகவே இக்கட்டுரை அமைகிறது. காளமேகப்புலவரின் தனிப்பாடல்களில் இடம்பெற்றிருக்கும் சிலேடைப் பாடல்கள் மட்டுமே இக்கட்டுரைக்குரிய வரையறையாக அமைகிறது.
அணி நலம் தன்மை முதல் பாவிகம் வரை அமைந்த 35 அணிகள் ஒவ்வொன்றிற்கும் உரிய தனித்தன்மையினை அவற்றுள் அமையும் வகைகளுடன் தண்டி ஆசான் தம் அலங்காரத்தில் எழிலுற எடுத்தியம்புகிறார். இதன்கண் அமையும் சிலேடை அணியினை ஒருவகைச் சொற்றொடர் பலபொருட் பெற்றி தெரிவுதர வருவது சிலேடை ஆகும் எனக்குறிப்பிடுவதோடு
அதுவே செம்மொழி பிரிமொழி என இருதிறப்படும் எனக் கூறியுள்ளார். இதன்வழி பகுக்காதிருப்பின் ஒரு பொருளும் பகுப்பின் ஒரு பொருளும் என இருபொருள்பட அமையும் என்கிறார். இதனை தமிழ்மொழியில் அமைந்த வளமான சொற்களைக் கொண்டு தெளிவுபடுத்தியுள்ளார் தண்டியாசிரியர். சொற்களைக் கையாளும் சுவைநலமே அணிநலமாகிறது என்னும் தண்டியாசிரியர் காட்டிய சிலேடை அணி இலக்கணத்தின் நெறி பிறழாது பாடியுள்ளார் கவி காளமேகம்.
காளமேகமான வரதன் கவிவலார் அணிநலத்துடனே பாடல் அமைக்க இயலும். எனினும் சிறப்புற அமையும் சிலேடை போன்ற அணிநலன்களை உடைய கவிதைகளைப் புனைவது நுண்மாண்நுழைபுலம் உடையோராலேயே இயலும். காக்கை தன் குஞ்சுக்கு உணவூட்டி மகிழ்வதைப்போல (சக்தி)தேவியின் உமிழ்நீரை தமிழ்நீராகப் பெற்று கவி பாடியவர் காளமேகம் என்பது அவர்தம் வரலாறு. அவருடைய கவிதைகளைப் புனைந்திருக்கும் சிறப்பு இவ் வரலாறினை ஏற்றுக்கொள்ள வழிவகுக்கிறது. இருப்பினும் மறுக்கும் வாய்ப்பு இல்லாமல் இல்லை. அக்கவிதைகளை விட சிறப்பாகக் கவிபுனையும் ஆற்றலுடையோர்க்கு அத்தகுதி உண்டு என்பதில் ஐயமில்லை.
இளமையில் வேலை தேடி தகுதிக்கேற்ற வேலைகிடைக்காது சுயநலத்திற்காக சமயம் மாறி இயல்பான மனிதனாகவே வாழ்ந்த வரதன் காளமேகமானதனை வாசவயல் நந்தி வரதா திசையனைத்தும் வீசு கவிகாள மேகமே என்னும் அடிகள் எடுத்துக்காட்டுகின்றன. தேவியின் அருளால் தமக்குக் கிடைத்த அருளின் வல்லமையினை அறிந்து பிறர்(அதிமதுரக்கவிராயர்) ஆணவத்தைத் தடுக்க முனையும் போது வெளிப்படுத்தியதனை இம்மென்னு முன்னே எழுநூறும் எண்ணூறும் அம்மென்றால் ஆயிரம்பாட் டாகாதோ - சும்மா இருந்தா லிருந்தே னெழுந்தேனே யாமாயின் பெருங்காள மேகம் பிளாய் (பா:9)
என்னும் பாடல் எடுத்துரைக்கிறது. இத்தகைய சிறப்புடைய காளமேகம் இரட்டுறப் பாடிய பாடல்கள் புனைந்துள்ளார்.
இரட்டுற மொழிதல் (சிலேடை)
சிலேடை என்பது இயல்பாக உணர்தல் குறிப்பாக உணர்தல் என்றும் இருவகையில் பொருள்கொள்ள முடிகிறது. ஆங்கிலத்தில் பழமொழிகளை புதிர்மொழிகளை மரபுசொற்களைக் கொண்டு பேசுவது சிறப்பு எனக் குறிப்பிடப்படுகிறது. இம் முறையினை தமிழ்ப் புலவர்கள் இயல்பாகவே தம் மொழி நடையில் கையாண்டனர். அத் திறனுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக அமைவது இரட்டுறமொழிதல் அணி. இரண்டு பொருள்பட வருதல் இரட்டுற மொழிதல் என்றும் இரண்டோ இரண்டு பொருளுக்கு மேற்பட்டோ பொருள்தருமாயின் சிலேடை எனவும் குறிக்கப்படுகிறது. பெரும்பான்மையாக இரண்டுபொருள்பட அமைவதனால் சிலேடையினை இரட்டுறமொழிதல் எனப் பொதுவாகக் குறிப்பிடப்பெறுகிறது. சிலேடை என்பது இரண்டு பொருளுக்கு மேற்பட்டும் அமையும் என்பதற்குச் சான்றாக (இருபத்துஇரண்டு பாடல்களில்) இரண்டு பாடல்களைப் பாடியுள்ளார் காளமேகப்புலவர். இவ் இரண்டு பாடல்கள் (67,69) மூன்று பொருளுக்குரியதாகப் பாடப்பட்டுள்ளது புலவர்களின் திறனை அறியும் பொருட்டு ஒரு சொல்லைக் கொடுத்து கவி பாடச் சொல்வது பழங்கால வழக்கு. அவ்வாறு புதியவர்களை ஏற்றுக்கொள்ள மனமில்லாத அவைப்புலவர்கள் இழிவான சொற்களைக் கொடுத்து கவிபாடச் சொல்வர். அச் சொற்களை தம் திறனால் வேறுபட்ட பொருளை உணர்த்தும் வகையில் பாடி பாராட்டுப் பெற்ற புலவர்களையும் வரலாறு எடுத்துக்காட்டுகிறது. சிலர் தம்மை இழிவு படுத்த எண்ணிய புலவர்களை இருபொருள் பட அமையும் சொல் கொண்டு குறிப்பாக இழித்துரைப்பதும் உண்டு. திருமலைராயன் அவையில் இருந்த புலவர்கள் தம்மைக் கவிராயர்கள் எனச் செருக்குடன் குறிப்பிட்டுக் கொண்டதை ஏளனம் செய்யும் வகையில் வாலெங்கே நீண்ட வயிறெங்கே முன்னிரண்டு காலெங்கே உட்குழிந்த கண்ணெங்கே சாலப் புவிராயர் போற்றும் புலவீர்கா ணீவிர் கவிராயர் என்றிருந்தக் கால் (பா:10)
எனப்பாடினார். கவி என்பது குரங்கு என்னும் பொருளைத் தருவதனைச் சுட்டி இவ்வாறு பாடி கவிராயர்களின் செருக்கினை ஒடுக்கிய திறத்தினை இப்பாடலின் வழி அறியமுடிகிறது. ஒரு சொல்லுக்குரிய பொருளை மாற்ற அச்சொல்லைப் சேர்த்தும் பிரித்துப் பாடிய கவிஞரின் திறத்தினை ‘களிப் பாக்கு’ - ‘களிப்பாக்கு’ (பா.22) ‘விளக்குமாறு’ - ‘விளக்கும் ஆறு’ (பா.40) என்னும் பாடல்கள் எடுத்துக்காட்டுகின்றன. இவ்வாறின்றி ஒரு பாடலை இருபொருளுக்குரிய வகையில் பாடிய சிறப்பினையே இரட்டுற மொழிதல் நலமாகக் இக்கட்டுரையில் கொள்ளப்பட்டுள்ளது.
வைக்கோலும் யானையும்
நிறத்தாலும் உருவத்தாலும் ஒருங்கே எண்ணிப்பார்க்க இயலாத வைக்கோலையும் யானையையும் இணைத்து வாரிக் களத்தடிக்கும் வந்துவின்பு கோட்டைபுகும் போரிற் சிறந்து பொலிவாகும் – சீருற்ற செக்கோல மேனித் திருமலைரா யன்வரையில் வைக்கோலு மால்யானை யாம். (பா.49)
எனப்பாடியுள்ளார். நெற்களத்தை போர்க்களத்தோடும் நெற்கோட்டையை கோட்டையோடும் நெற்போரை போரோடும் ஒப்பிட்டுக் காட்டியுள்ள திறம் காளமேகப் புலவரின் தனித்தன்மையினை எடுத்துக்காட்டுகிறது. இப்பாடலில் உள்ள சொற்களை அவ்வாறே பொருள் கொள்ளும் வகையில் புனையப்பட்டுள்ளதால் செம்மொழி சிலேடையாவதனை அறியமுடிகிறது.
பாம்பும் எலுமிச்சையும் பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் அச்சத்தால் உடல் சூடாகும். எலுமிச்சை சூட்டைத் தணிக்கும். இவ்வேறுபாட்டைத்தவிர ஒப்புமை படுத்த இயலாத இவை இரண்டையும் ஒப்பிட்டு பெரியவிட மேசேரும் பித்தர்முடி யேறும் அரியுண்ணு முப்புமே லாடும் - எரிகுண மாம் தேம்பொழியும் சோலைத் திருமலைரா யன்வரையில் பாம்பு மெலுமிச்சம் பழம் (பா.52)
எனப் பாடியுள்ளார். பெரிய விடமுடையதனையும் பெரிய இடத்தில் மரியாதையின் பொருட்டு கொடுக்கும் வழக்கினையும் ஒப்பிடுகிறார். அடியவரின் அன்புக்குப் பித்தனாகிய சிவபெருமானின் முடியில் இருப்பதனையும் பித்தத்தினைத் தெளிவிக்க பித்துடையோரின் தலையில் தேய்க்க முடியேறுவதனையும் ஒப்பிடுகிறார். காற்றைப் புசித்து வாழும் இயல்புடையதனையும் உப்பில் ஊறப்போட்டு ஊறுகாயாகப் பயன்படுத்தப்படுவதனையும் ஒப்பிடுகிறார். எரிக்கும் சினத்தை உடையதும் எரிச்சலைத் தருகின்ற சாறினை உடையதும் என இவ்வாறு பல குணங்களுடன் பாம்பினையும் எலுமிச்சையினையும் ஒப்பிட்டுக் காட்டுகிறார் கவி காளமேகம். விடம் இடம் என பிரித்துப் பொருள் கொண்டாலும் சொற்கள் புணர்வதில் எத்தகைய இலக்கண வேறுபாடு இல்லாததனால் இப்பாடல் செம்மொழி சிலேடைக்குரியதாவதனைத் தெளியமுடிகிறது.
நாயும் தேங்காயும் நாய் பெற்றத் தெங்கம்பழம் என்பது பழமொழி. ஒன்று மற்றொன்றிற்குப் பயன்படாது இருப்பதனை எடுத்துக்காட்ட இத்தொடரை முன்றுறையரையனார் கையாண்டுள்ளார். ஆனால் அவை இரண்டுக்கும் உள்ள பொருத்தத்தினைப் பாடுகிறார் கவி காளமேகம்.
ஓடு மிருக்குமத னுள்வாய் வெளுத்திருக்கும் நாடுங் குலைதனக்கு நாணாது – சேடியே தீங்காய தில்லாத் திருமலைரா யன்வரையில் தேங்காயு நாயுநேர் செப்பு (பா:55)
என்னும் பாடலின்வழி ஓடுடையது என்பதனை ஒடும் இருக்கும் எனக்குறிப்பிட்டு நாய்க்குப் பொருத்தமாக ஒடுவதும் இருப்பதுமான செயலைச் செய்யும் எனக் குறிப்பிடுகிறார். உள்வாய் தேங்காய்க்கும் நாய்க்கும் வெளுத்திருப்பதனைச் சுட்டிக்காட்டுகிறார். காலில் தண்ணீர் ஊற்றியோர்க்கு தலையால் வணங்கி சுவையானநீரைக் கொடுப்பதற்கு ஒன்றாக இல்லாது குலையாகக் கொடுப்பதற்கு நாணாது எனத் தேங்காய்க்கும் தன்னுடைய விருப்பினையும் வெறுப்பினையும் குலைத்து(குரைத்து) வெளிப்படுத்த நாணாது என நாய்க்கும் பொருத்தமான பொருளுடன் சுவையாக இணைத்துப் பாடியுள்ள திறத்தினை இப்பாடல் வெளிப்படுத்துகிறது.
செம்மையான ஒப்பீடுகளுடன் அமைந்துள்ள இப்பாடலில் இடம்பெற்றுள்ள சொற்களைப் பிரிக்காமல் பொருள் அறிய இயல்வதனால் செம்மொழி சிலேடைக்கு உரிய பாடலாகிறது.
மீனும் பேனும் தண்ணீரில் வாழும் மீனும் தலையில் வாழும் பேனும் வாழும் வகையால் முற்றிலும் முரணாக அமைகிறது. பொதுவாக மனிதன் மீனை வருத்தி உணவாக்கிக் கொள்கிறான். பேன் மனிதனை வருத்தி உயிர்வாழ்கிறது. இரண்டினையும் ஒப்பிட்டுப் பார்க்கவே இயலாது என்னும் எண்ணத்திலிருந்து மாறுபட்டு சிறப்பாகத் தம் கற்பனைச் செய்து பாடியுள்ளதனை மன்னீரி லேபிறக்கு மற்றலையி லேமேயும் பின்னீச்சீர் குத்தும் பெருமையால் – சொன்னேன்கேள் தேனுந்து சோலைத் திருமலைரா யன்வரையில் மீனும்பே னுஞ்சரியா மே. (பா:56)
இப்பாடல் வெளிப்படுத்துகிறது. நிலை பெற்ற நீரிலே பிறக்கும் தன்மையுடைய மீனும் தலையினை நிலையாகப் பெற்றிருக்கும் ஈறிலிருந்து பிறக்கும் பேனையும் ஒப்பிட்டு அவை நிலைபெறும் தன்மையினைச் சுட்டுகிறார் கவிஞர். அலையில் மேய்வதனையும் தலையில் மேய்வதனையும் சுட்டி மேய்வதில் உள்ள ஒற்றுமையினை எடுத்துக்காட்டுகிறார். பின்தொடர்ந்து நீந்திவந்து குத்தும் இயல்புடைய மீனையும் பெண்கள் பேன் இருப்பதனை உணர்ந்த பின் ஈச் என்னும் ஒலியுடன் குத்துவதனையும் பொருத்திக் காட்டி சுவைக்கச்செய்துள்ளார்.
வெற்றிலையும் வேசையும் காளமேகம் பாடிய 22 பாடல்களுள் பாம்பிற்கு மூன்றும் வேசைக்கும் மூன்றும் எனப் பாடியுள்ளார். இதனை நோக்குகையில் அவற்றின் கொடுமையினை உணர்த்தும் வகையில் பாடியுள்ளதாகவே நோக்கமுடிகிறது. மீளளாக தீண்டும் விடத்தின் அருமை கருதி பாடப்பட்டுள்ளதாகவும் கொள்ளலாம். காலத்தைக் காட்டும் கண்ணாடியே இலக்கியம் எனக் குறிப்பிடுவதன்வழி நோக்குகையில் திருமலைராயன் காலத்தில் வேசைகள் பரவலாக இருந்த தன்மையினையும் அறியமுடிகிறது.
வெற்றிலையினையும் பெண்ணினையும் கொடி என்னும் வகையால் ஒருங்கே எண்ணிப்பார்க்கமுடியும். இப் பொதுவான எண்ணத்தினின்று மாறுபட்டு அதன் பயன்பாட்டினைக் கொண்டு ஒப்பிட்டுள்ளதனை கொள்ளுகையா னீரிற் குளிக்கையான் மேலேறிக் கிள்ளுகையாற் கட்டிக் கிடக்கையால் – தெள்ளுபுகழ்ச் செற்றலரை வென்ற திருமலைரா யன்வரையில் வெற்றிலையும் வேசையா மே (பா:59)
இப்பாடல் எடுத்துக்காட்டுகிறது. நீரினை மிகுதியாகக் கொள்வதும் பொருளுடையோர் விருப்பத்திற்கேற்ப கொள்ளும் தன்மை உடையவராக அமைவதும் கொள்ளுதலுக்குரிய பொருளாக அமைகிறது. வெற்றிலையை நீரில் தூய்மைபடுத்துவது வேசை நீரில் குளிப்பதோடு ஒப்பிடப்பட்டுள்ளது. வெற்றிலையை மெல்வதற்கு முன் கிள்ளுவதனை வேசை நகத்தால் கிள்ளுவதுடனும் வெற்றிலையை கட்டாகக் கட்டுவது வேசையை மூடக்காமத்தால் கட்டுவதோடு ஒப்பிடுகிறார். இவ்வாறு இரு தொழிலுக்கும் உரிய செயலினை திறம்பட சிலேடையாகக் காட்டிய கவித்திறத்தினை இப்பாடலின்வழி அறியமுடிகிறது.
ஆடியும் அரசும் ஆடி தன்னை மறைத்துக் கொண்டு தம்மை நாடி வருபவர்களை முன்னிறுத்தும் சிறப்புடையது. அரசன் தன்னலத்தை பின்னிறுத்தி மக்கள் நலத்தை முன்னிறுத்தும் சிறப்புடையன். இத்தகைய பொதுத்தன்மையோடு பல ஒப்புமைகள் உடையதனை யாவருக்கும் ரஞ்சனைசெய் தியாவருக்கு மவ்வவராய் பாவனையாய்த் தீதகலப் பார்த்தலால் மேவும் எதிரியைத்தன் னுள்ளாக்கி யேற்ற ரசத்தால் சதிருறலா லாடியர சாம் (பா:60)
என்னும் பாடலின்வழி தெளிவுபடுத்துகிறார் கவிஞர். ஆடியானது பிறருக்கு மகிழ்ச்சி உண்டாக்குவது போல அரசனும் மகிழ்ச்சியினை உண்டாக்குகிறான் என ஆடியுடன் அரசனை ஒப்பிடுகிறார். ஒருவருடைய உண்மையான முகத்தை அவராலேயே உணரும் தன்மையினை ஆடி காட்டிவிடுகிறது. அதுபோல அரசன் தம்மிடம் வரும் மக்களின் தன்மைக்கேற்ப விளங்கும் சிறப்புடையன் என்பதனை எடுத்துக்காட்டுகிறார். ஆடியானது தீமை அகல்வதற்குரிய மங்கலப் பொருளாகப் பார்க்கப் படுவது. அவ்வாறே அரசனும் நாடி வந்தவரின் தீமையைப் போக்குகிறான். எதிர்ப்படுவோரை தனக்குள் வாங்கி வெளிப்படுத்துவதைப் போல அரசன் தன்னை எதிர்ப்போரை வென்று தனக்குரியவனாக மாற்றி விடுகிறான். ஆடி தன்னுடைய ரசத்தால் சிறப்படைவதைப் போல அரசன் தன்னிடமுள்ள பொருளால் சிறக்கிறான் என்பதனை ஒப்பிட்டுக் காட்டியுள்ள திறத்தினைக் இப்பாடலில் காணமுடிகிறது.
குதிரையும் காவிரியும் குதிரையும் காவிரியும் ஓடும் நலத்தால் உடையோர்க்கு நன்மை சேர்க்கும் சிறப்புடையன. இவற்றோடு அவை வடிவத்திலும் ஒத்திருப்பதனை ஓடுஞ் சுழிசுத்த முண்டாகும் துன்னலரைச் சாடும் பரிவாய்த் தலைசாய்க்கும் – நாடறியத் தேடு புகழான் திருமலைரா யன்வரையில் ஆடுபரி காவிரியா மே (பா:62)
என்னும் பாடலின் வழி எடுத்துகாட்டியுள்ளார் கவி காளமேகம். சிறப்பான குதிரையானது அதன் சுழி கொண்டு இருத்தல் போல சிறப்புப் பொருந்திய காவிரி நீர்ச்சுழிகளுடன் காணப்படுவதனை ஒப்பிட்டுகிறார். குதிரை எதிரிகளை சாய்க்கும் திறனுடையது. காவிரி தன்னிடம் வருவோரை தூய்மை படுத்துவது எனக் கூறி இரண்டிற்குமிடையே உள்ள வேறுபாட்டையும் சுட்டுகிறார். தன் தலைவனிடம் தலைசாய்க்கும் தன்மையுடையது குதிரை. குதிரை வாயிலிருக்கும் அலை போன்ற நுரையினை மடக்கி வீசும் தன்மைஉடையது காவிரி. இவ்வாறு பொருத்தப்பாடும் வேறுபாடும் அமைவதனை இப்பாடல் எழிலுற எடுத்தியம்புகிறதுஇப்பாடலில் பரிவாய்த் தலை சாய்க்கும் என ஒரு பொருள் கொண்டும் பரி வாய்த்து அலை சாய்க்கும் என பொருள் கொள்ள வேண்டியுள்ளதனால் இப்பாடல் பிரிமொழி சிலேடைக்குரியதாக அமைகிறது. இப்பாடலில் ஓடும், சுழி உடையது, சாடும், சாய்க்கும் என நான்கு பொருள் விளங்கும் வகையில் பாடப்பட்டுள்ளது.
நிறைவாக கவிஞர்கள் பலர் தம் புலமைத் திறத்தால் புகழ் பெற்றிருந்த காலத்திலேயே அவர்களை விஞ்சி சிறப்பிடம் பெற்றுத் திகழ்ந்தவர் காளமேகப் புலவர் என்பதற்கு அவருடைய பாடல்களே சான்றாகின்றன.
கொடுத்த சொல்லைக் கொண்டு அரைநொடிக்குள் பாடும் வல்லமை கொண்டதனால் எமகண்டப் புலவர் எனப் போற்றப்பட்ட இப்புலவர் சிலேடைப் பாடுவதிலும் வல்லவராகத் திகழ்ந்தார்.
தண்டியாசிரியர் வழியிலேயே சிலேடை அணியுடன் கூடிய பாடல்களைப் புனைந்த காளமேகப் புலவர் பெரிதும் செம்மொழிச் சிலேடையினையே கையாண்டுள்ளார்.
சொல்நயத்தாலும் பொருள்நயத்தாலும் பாடும் வல்லமை கொண்ட இப்புலவர் கற்பனை ஊற்றாகத் திகழ்ந்தவர் என்பதற்கு எண்ணிப்பார்க்க இயலாத பல ஒப்புமைகளை எடுத்துக்காட்டியுள்ளதன் வழி தெளியமுடிகிறது.
பெரும்பான்மையான பாடல்களில் மூன்று ஒப்புமைகளை எடுத்துக் காட்டியுள்ளார். சிலபாடல்களில் மட்டும் அதனினும் மிகுதியாகப் பாடியுள்ளார்.
எச் சொல்லாயினும் எப்பொருளாயினும் அவ்வாறு பாடல் புனையும் வல்லமை பெற்ற இப்புலவர் பெரும்பாலும்(20 பாடல்கள்) இரு பொருளுக்குரிய சிலேடை பாடல்களையே பாடியுள்ளார். சிறுபான்மையாக (2 பாடல்கள்) மூன்று பொருளுக்குரிய சொல் அமைப்பில் பாடியுள்ளார். இதன்வழி கற்போரின் மனம் களிக்கும் வகையில் எளிதாகப் பாடல் புனைந்துள்ள கவிநோக்கினை அறியமுடிகிறது.
ஒருபாடலைச் சுவைப்பதற்குரிய காலத்தைக் காட்டிலும் சிலேடைப் பாடலை சுவைப்பதற்கு கூடுதல் காலமும் கூடுதல் புலமையும் அவசியமாகின்றது. சுவைப்பதற்கே இவ்வாறெனின் இயற்றுவதற்கு எத்தகைய புலமையும் திறமும் அவசியம் என்பதனை எளிதில் உணரலாம். அவ்வாறு இயற்றப்படுவதும் எளிதில் மனதில் பதிவதுமானப் பாடல்களைப் பாடியவர்கள் சிலரே. அச்சிலரில் இத்தகையப் பாடல்களைச் சிறப்பாகப் புனைந்த காளமேகப் புலவர் சிலேடைப் பாடல்கள் பாடுவதில் வல்லவர் என்பதோடு முதலிடத்திற்குரியவர் என்பதனை அவருடைய பாடல்கள் வழி உணரமுடிகிறது.
முனைவர் ம.ஏ. கிருட்டினகுமார்
தமிழ் விரிவுரையாளர்
தாகூர் கலைக் கல்லூரி
புதுச்சேரி : 605008
பேச : 9940684775
காளமேகப்புலவரின் தனித்திறம்
சொல்நயம் பொருள் நயம் நிறைந்த மொழிகளுள் தலையாயது தமிழ்மொழியே. இதற்கு அதனுடைய தொன்மையும் வளமையுமே அடிப்படை. இதனை நிறுவும் வகையில் தமிழில் பல நூல்கள் விளங்குகின்றன. பொருட்சுவையுடன் கற்றோர் மனம் களிக்கும் வகையில் சொல்லாடல் செய்வது அணிநலமாகிறது. அவ் வரிசையில் சிலேடை எனப்படும் இரட்டுற மொழிதல் முக்கிய இடம் பெறுகிறது. இதனைக் கையாள்வதில் காளமேகப்புலவரின் இடத்தினை அறிய விழைந்ததன் விளைவாகவே இக்கட்டுரை அமைகிறது. காளமேகப்புலவரின் தனிப்பாடல்களில் இடம்பெற்றிருக்கும் சிலேடைப் பாடல்கள் மட்டுமே இக்கட்டுரைக்குரிய வரையறையாக அமைகிறது.
அணி நலம்
தன்மை முதல் பாவிகம் வரை அமைந்த 35 அணிகள் ஒவ்வொன்றிற்கும் உரிய தனித்தன்மையினை அவற்றுள் அமையும் வகைகளுடன் தண்டி ஆசான் தம் அலங்காரத்தில் எழிலுற எடுத்தியம்புகிறார். இதன்கண் அமையும் சிலேடை அணியினை
ஒருவகைச் சொற்றொடர் பலபொருட் பெற்றி
தெரிவுதர வருவது சிலேடை ஆகும்
எனக்குறிப்பிடுவதோடு
அதுவே
செம்மொழி பிரிமொழி என இருதிறப்படும்
எனக் கூறியுள்ளார். இதன்வழி பகுக்காதிருப்பின் ஒரு பொருளும் பகுப்பின் ஒரு பொருளும் என இருபொருள்பட அமையும் என்கிறார். இதனை தமிழ்மொழியில் அமைந்த வளமான சொற்களைக் கொண்டு தெளிவுபடுத்தியுள்ளார் தண்டியாசிரியர். சொற்களைக் கையாளும் சுவைநலமே அணிநலமாகிறது என்னும் தண்டியாசிரியர் காட்டிய சிலேடை அணி இலக்கணத்தின் நெறி பிறழாது பாடியுள்ளார் கவி காளமேகம்.
காளமேகமான வரதன்
கவிவலார் அணிநலத்துடனே பாடல் அமைக்க இயலும். எனினும் சிறப்புற அமையும் சிலேடை போன்ற அணிநலன்களை உடைய கவிதைகளைப் புனைவது நுண்மாண்நுழைபுலம் உடையோராலேயே இயலும். காக்கை தன் குஞ்சுக்கு உணவூட்டி மகிழ்வதைப்போல (சக்தி)தேவியின் உமிழ்நீரை தமிழ்நீராகப் பெற்று கவி பாடியவர் காளமேகம் என்பது அவர்தம் வரலாறு. அவருடைய கவிதைகளைப் புனைந்திருக்கும் சிறப்பு இவ் வரலாறினை ஏற்றுக்கொள்ள வழிவகுக்கிறது. இருப்பினும் மறுக்கும் வாய்ப்பு இல்லாமல் இல்லை. அக்கவிதைகளை விட சிறப்பாகக் கவிபுனையும் ஆற்றலுடையோர்க்கு அத்தகுதி உண்டு என்பதில் ஐயமில்லை.
இளமையில் வேலை தேடி தகுதிக்கேற்ற வேலைகிடைக்காது சுயநலத்திற்காக சமயம் மாறி இயல்பான மனிதனாகவே வாழ்ந்த வரதன் காளமேகமானதனை
வாசவயல் நந்தி வரதா திசையனைத்தும்
வீசு கவிகாள மேகமே
என்னும் அடிகள் எடுத்துக்காட்டுகின்றன. தேவியின் அருளால் தமக்குக் கிடைத்த அருளின் வல்லமையினை அறிந்து பிறர்(அதிமதுரக்கவிராயர்) ஆணவத்தைத் தடுக்க முனையும் போது வெளிப்படுத்தியதனை
இம்மென்னு முன்னே எழுநூறும் எண்ணூறும்
அம்மென்றால் ஆயிரம்பாட் டாகாதோ - சும்மா
இருந்தா லிருந்தே னெழுந்தேனே யாமாயின்
பெருங்காள மேகம் பிளாய் (பா:9)
என்னும் பாடல் எடுத்துரைக்கிறது. இத்தகைய சிறப்புடைய காளமேகம் இரட்டுறப் பாடிய பாடல்கள் புனைந்துள்ளார்.
இரட்டுற மொழிதல் (சிலேடை)
சிலேடை என்பது இயல்பாக உணர்தல் குறிப்பாக உணர்தல் என்றும் இருவகையில் பொருள்கொள்ள முடிகிறது. ஆங்கிலத்தில் பழமொழிகளை புதிர்மொழிகளை மரபுசொற்களைக் கொண்டு பேசுவது சிறப்பு எனக் குறிப்பிடப்படுகிறது. இம் முறையினை தமிழ்ப் புலவர்கள் இயல்பாகவே தம் மொழி நடையில் கையாண்டனர். அத் திறனுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக அமைவது இரட்டுறமொழிதல் அணி. இரண்டு பொருள்பட வருதல் இரட்டுற மொழிதல் என்றும் இரண்டோ இரண்டு பொருளுக்கு மேற்பட்டோ பொருள்தருமாயின் சிலேடை எனவும் குறிக்கப்படுகிறது. பெரும்பான்மையாக இரண்டுபொருள்பட அமைவதனால் சிலேடையினை இரட்டுறமொழிதல் எனப் பொதுவாகக் குறிப்பிடப்பெறுகிறது. சிலேடை என்பது இரண்டு பொருளுக்கு மேற்பட்டும் அமையும் என்பதற்குச் சான்றாக (இருபத்துஇரண்டு பாடல்களில்) இரண்டு பாடல்களைப் பாடியுள்ளார் காளமேகப்புலவர். இவ் இரண்டு பாடல்கள் (67,69) மூன்று பொருளுக்குரியதாகப் பாடப்பட்டுள்ளது
புலவர்களின் திறனை அறியும் பொருட்டு ஒரு சொல்லைக் கொடுத்து கவி பாடச் சொல்வது பழங்கால வழக்கு. அவ்வாறு புதியவர்களை ஏற்றுக்கொள்ள மனமில்லாத அவைப்புலவர்கள் இழிவான சொற்களைக் கொடுத்து கவிபாடச் சொல்வர். அச் சொற்களை தம் திறனால் வேறுபட்ட பொருளை உணர்த்தும் வகையில் பாடி பாராட்டுப் பெற்ற புலவர்களையும் வரலாறு எடுத்துக்காட்டுகிறது. சிலர் தம்மை இழிவு படுத்த எண்ணிய புலவர்களை இருபொருள் பட அமையும் சொல் கொண்டு குறிப்பாக இழித்துரைப்பதும் உண்டு. திருமலைராயன் அவையில் இருந்த புலவர்கள் தம்மைக் கவிராயர்கள் எனச் செருக்குடன் குறிப்பிட்டுக் கொண்டதை ஏளனம் செய்யும் வகையில்
வாலெங்கே நீண்ட வயிறெங்கே முன்னிரண்டு
காலெங்கே உட்குழிந்த கண்ணெங்கே சாலப்
புவிராயர் போற்றும் புலவீர்கா ணீவிர்
கவிராயர் என்றிருந்தக் கால் (பா:10)
எனப்பாடினார். கவி என்பது குரங்கு என்னும் பொருளைத் தருவதனைச் சுட்டி இவ்வாறு பாடி கவிராயர்களின் செருக்கினை ஒடுக்கிய திறத்தினை இப்பாடலின் வழி அறியமுடிகிறது. ஒரு சொல்லுக்குரிய பொருளை மாற்ற அச்சொல்லைப் சேர்த்தும் பிரித்துப் பாடிய கவிஞரின் திறத்தினை ‘களிப் பாக்கு’ - ‘களிப்பாக்கு’ (பா.22) ‘விளக்குமாறு’ - ‘விளக்கும் ஆறு’ (பா.40) என்னும் பாடல்கள் எடுத்துக்காட்டுகின்றன. இவ்வாறின்றி ஒரு பாடலை இருபொருளுக்குரிய வகையில் பாடிய சிறப்பினையே இரட்டுற மொழிதல் நலமாகக் இக்கட்டுரையில் கொள்ளப்பட்டுள்ளது.
வைக்கோலும் யானையும்
நிறத்தாலும் உருவத்தாலும் ஒருங்கே எண்ணிப்பார்க்க இயலாத வைக்கோலையும் யானையையும் இணைத்து
வாரிக் களத்தடிக்கும் வந்துவின்பு கோட்டைபுகும்
போரிற் சிறந்து பொலிவாகும் – சீருற்ற
செக்கோல மேனித் திருமலைரா யன்வரையில்
வைக்கோலு மால்யானை யாம். (பா.49)
எனப்பாடியுள்ளார். நெற்களத்தை போர்க்களத்தோடும் நெற்கோட்டையை கோட்டையோடும் நெற்போரை போரோடும் ஒப்பிட்டுக் காட்டியுள்ள திறம் காளமேகப் புலவரின் தனித்தன்மையினை எடுத்துக்காட்டுகிறது. இப்பாடலில் உள்ள சொற்களை அவ்வாறே பொருள் கொள்ளும் வகையில் புனையப்பட்டுள்ளதால் செம்மொழி சிலேடையாவதனை அறியமுடிகிறது.
பாம்பும் எலுமிச்சையும்
பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் அச்சத்தால் உடல் சூடாகும். எலுமிச்சை சூட்டைத் தணிக்கும். இவ்வேறுபாட்டைத்தவிர ஒப்புமை படுத்த இயலாத இவை இரண்டையும் ஒப்பிட்டு
பெரியவிட மேசேரும் பித்தர்முடி யேறும்
அரியுண்ணு முப்புமே லாடும் - எரிகுண மாம்
தேம்பொழியும் சோலைத் திருமலைரா யன்வரையில்
பாம்பு மெலுமிச்சம் பழம் (பா.52)
எனப் பாடியுள்ளார். பெரிய விடமுடையதனையும் பெரிய இடத்தில் மரியாதையின் பொருட்டு கொடுக்கும் வழக்கினையும் ஒப்பிடுகிறார். அடியவரின் அன்புக்குப் பித்தனாகிய சிவபெருமானின் முடியில் இருப்பதனையும் பித்தத்தினைத் தெளிவிக்க பித்துடையோரின் தலையில் தேய்க்க முடியேறுவதனையும் ஒப்பிடுகிறார். காற்றைப் புசித்து வாழும் இயல்புடையதனையும் உப்பில் ஊறப்போட்டு ஊறுகாயாகப் பயன்படுத்தப்படுவதனையும் ஒப்பிடுகிறார். எரிக்கும் சினத்தை உடையதும் எரிச்சலைத் தருகின்ற சாறினை உடையதும் என இவ்வாறு பல குணங்களுடன் பாம்பினையும் எலுமிச்சையினையும் ஒப்பிட்டுக் காட்டுகிறார் கவி காளமேகம். விடம் இடம் என பிரித்துப் பொருள் கொண்டாலும் சொற்கள் புணர்வதில் எத்தகைய இலக்கண வேறுபாடு இல்லாததனால் இப்பாடல் செம்மொழி சிலேடைக்குரியதாவதனைத் தெளியமுடிகிறது.
நாயும் தேங்காயும்
நாய் பெற்றத் தெங்கம்பழம் என்பது பழமொழி. ஒன்று மற்றொன்றிற்குப் பயன்படாது இருப்பதனை எடுத்துக்காட்ட இத்தொடரை முன்றுறையரையனார் கையாண்டுள்ளார். ஆனால் அவை இரண்டுக்கும் உள்ள பொருத்தத்தினைப் பாடுகிறார் கவி காளமேகம்.
ஓடு மிருக்குமத னுள்வாய் வெளுத்திருக்கும்
நாடுங் குலைதனக்கு நாணாது – சேடியே
தீங்காய தில்லாத் திருமலைரா யன்வரையில்
தேங்காயு நாயுநேர் செப்பு (பா:55)
என்னும் பாடலின்வழி ஓடுடையது என்பதனை ஒடும் இருக்கும் எனக்குறிப்பிட்டு நாய்க்குப் பொருத்தமாக ஒடுவதும் இருப்பதுமான செயலைச் செய்யும் எனக் குறிப்பிடுகிறார். உள்வாய் தேங்காய்க்கும் நாய்க்கும் வெளுத்திருப்பதனைச் சுட்டிக்காட்டுகிறார். காலில் தண்ணீர் ஊற்றியோர்க்கு தலையால் வணங்கி சுவையானநீரைக் கொடுப்பதற்கு ஒன்றாக இல்லாது குலையாகக் கொடுப்பதற்கு நாணாது எனத் தேங்காய்க்கும் தன்னுடைய விருப்பினையும் வெறுப்பினையும் குலைத்து(குரைத்து) வெளிப்படுத்த நாணாது என நாய்க்கும் பொருத்தமான பொருளுடன் சுவையாக இணைத்துப் பாடியுள்ள திறத்தினை இப்பாடல் வெளிப்படுத்துகிறது.
செம்மையான ஒப்பீடுகளுடன் அமைந்துள்ள இப்பாடலில் இடம்பெற்றுள்ள சொற்களைப் பிரிக்காமல் பொருள் அறிய இயல்வதனால் செம்மொழி சிலேடைக்கு உரிய பாடலாகிறது.
மீனும் பேனும்
தண்ணீரில் வாழும் மீனும் தலையில் வாழும் பேனும் வாழும் வகையால் முற்றிலும் முரணாக அமைகிறது. பொதுவாக மனிதன் மீனை வருத்தி உணவாக்கிக் கொள்கிறான். பேன் மனிதனை வருத்தி உயிர்வாழ்கிறது. இரண்டினையும் ஒப்பிட்டுப் பார்க்கவே இயலாது என்னும் எண்ணத்திலிருந்து மாறுபட்டு சிறப்பாகத் தம் கற்பனைச் செய்து பாடியுள்ளதனை
மன்னீரி லேபிறக்கு மற்றலையி லேமேயும்
பின்னீச்சீர் குத்தும் பெருமையால் – சொன்னேன்கேள்
தேனுந்து சோலைத் திருமலைரா யன்வரையில்
மீனும்பே னுஞ்சரியா மே. (பா:56)
இப்பாடல் வெளிப்படுத்துகிறது. நிலை பெற்ற நீரிலே பிறக்கும் தன்மையுடைய மீனும் தலையினை நிலையாகப் பெற்றிருக்கும் ஈறிலிருந்து பிறக்கும் பேனையும் ஒப்பிட்டு அவை நிலைபெறும் தன்மையினைச் சுட்டுகிறார் கவிஞர். அலையில் மேய்வதனையும் தலையில் மேய்வதனையும் சுட்டி மேய்வதில் உள்ள ஒற்றுமையினை எடுத்துக்காட்டுகிறார். பின்தொடர்ந்து நீந்திவந்து குத்தும் இயல்புடைய மீனையும் பெண்கள் பேன் இருப்பதனை உணர்ந்த பின் ஈச் என்னும் ஒலியுடன் குத்துவதனையும் பொருத்திக் காட்டி சுவைக்கச்செய்துள்ளார்.
வெற்றிலையும் வேசையும்
காளமேகம் பாடிய 22 பாடல்களுள் பாம்பிற்கு மூன்றும் வேசைக்கும் மூன்றும் எனப் பாடியுள்ளார். இதனை நோக்குகையில் அவற்றின் கொடுமையினை உணர்த்தும் வகையில் பாடியுள்ளதாகவே நோக்கமுடிகிறது. மீளளாக தீண்டும் விடத்தின் அருமை கருதி பாடப்பட்டுள்ளதாகவும் கொள்ளலாம். காலத்தைக் காட்டும் கண்ணாடியே இலக்கியம் எனக் குறிப்பிடுவதன்வழி நோக்குகையில் திருமலைராயன் காலத்தில் வேசைகள் பரவலாக இருந்த தன்மையினையும் அறியமுடிகிறது.
வெற்றிலையினையும் பெண்ணினையும் கொடி என்னும் வகையால் ஒருங்கே எண்ணிப்பார்க்கமுடியும். இப் பொதுவான எண்ணத்தினின்று மாறுபட்டு அதன் பயன்பாட்டினைக் கொண்டு ஒப்பிட்டுள்ளதனை
கொள்ளுகையா னீரிற் குளிக்கையான் மேலேறிக்
கிள்ளுகையாற் கட்டிக் கிடக்கையால் – தெள்ளுபுகழ்ச்
செற்றலரை வென்ற திருமலைரா யன்வரையில்
வெற்றிலையும் வேசையா மே (பா:59)
இப்பாடல் எடுத்துக்காட்டுகிறது. நீரினை மிகுதியாகக் கொள்வதும் பொருளுடையோர் விருப்பத்திற்கேற்ப கொள்ளும் தன்மை உடையவராக அமைவதும் கொள்ளுதலுக்குரிய பொருளாக அமைகிறது. வெற்றிலையை நீரில் தூய்மைபடுத்துவது வேசை நீரில் குளிப்பதோடு ஒப்பிடப்பட்டுள்ளது. வெற்றிலையை மெல்வதற்கு முன் கிள்ளுவதனை வேசை நகத்தால் கிள்ளுவதுடனும் வெற்றிலையை கட்டாகக் கட்டுவது வேசையை மூடக்காமத்தால் கட்டுவதோடு ஒப்பிடுகிறார். இவ்வாறு இரு தொழிலுக்கும் உரிய செயலினை திறம்பட சிலேடையாகக் காட்டிய கவித்திறத்தினை இப்பாடலின்வழி அறியமுடிகிறது.
ஆடியும் அரசும்
ஆடி தன்னை மறைத்துக் கொண்டு தம்மை நாடி வருபவர்களை முன்னிறுத்தும் சிறப்புடையது. அரசன் தன்னலத்தை பின்னிறுத்தி மக்கள் நலத்தை முன்னிறுத்தும் சிறப்புடையன். இத்தகைய பொதுத்தன்மையோடு பல ஒப்புமைகள் உடையதனை
யாவருக்கும் ரஞ்சனைசெய் தியாவருக்கு மவ்வவராய்
பாவனையாய்த் தீதகலப் பார்த்தலால் மேவும்
எதிரியைத்தன் னுள்ளாக்கி யேற்ற ரசத்தால்
சதிருறலா லாடியர சாம் (பா:60)
என்னும் பாடலின்வழி தெளிவுபடுத்துகிறார் கவிஞர். ஆடியானது பிறருக்கு மகிழ்ச்சி உண்டாக்குவது போல அரசனும் மகிழ்ச்சியினை உண்டாக்குகிறான் என ஆடியுடன் அரசனை ஒப்பிடுகிறார். ஒருவருடைய உண்மையான முகத்தை அவராலேயே உணரும் தன்மையினை ஆடி காட்டிவிடுகிறது. அதுபோல அரசன் தம்மிடம் வரும் மக்களின் தன்மைக்கேற்ப விளங்கும் சிறப்புடையன் என்பதனை எடுத்துக்காட்டுகிறார். ஆடியானது தீமை அகல்வதற்குரிய மங்கலப் பொருளாகப் பார்க்கப் படுவது. அவ்வாறே அரசனும் நாடி வந்தவரின் தீமையைப் போக்குகிறான். எதிர்ப்படுவோரை தனக்குள் வாங்கி வெளிப்படுத்துவதைப் போல அரசன் தன்னை எதிர்ப்போரை வென்று தனக்குரியவனாக மாற்றி விடுகிறான். ஆடி தன்னுடைய ரசத்தால் சிறப்படைவதைப் போல அரசன் தன்னிடமுள்ள பொருளால் சிறக்கிறான் என்பதனை ஒப்பிட்டுக் காட்டியுள்ள திறத்தினைக் இப்பாடலில் காணமுடிகிறது.
குதிரையும் காவிரியும்
குதிரையும் காவிரியும் ஓடும் நலத்தால் உடையோர்க்கு நன்மை சேர்க்கும் சிறப்புடையன. இவற்றோடு அவை வடிவத்திலும் ஒத்திருப்பதனை
ஓடுஞ் சுழிசுத்த முண்டாகும் துன்னலரைச்
சாடும் பரிவாய்த் தலைசாய்க்கும் – நாடறியத்
தேடு புகழான் திருமலைரா யன்வரையில்
ஆடுபரி காவிரியா மே (பா:62)
என்னும் பாடலின் வழி எடுத்துகாட்டியுள்ளார் கவி காளமேகம். சிறப்பான குதிரையானது அதன் சுழி கொண்டு இருத்தல் போல சிறப்புப் பொருந்திய காவிரி நீர்ச்சுழிகளுடன் காணப்படுவதனை ஒப்பிட்டுகிறார். குதிரை எதிரிகளை சாய்க்கும் திறனுடையது. காவிரி தன்னிடம் வருவோரை தூய்மை படுத்துவது எனக் கூறி இரண்டிற்குமிடையே உள்ள வேறுபாட்டையும் சுட்டுகிறார். தன் தலைவனிடம் தலைசாய்க்கும் தன்மையுடையது குதிரை. குதிரை வாயிலிருக்கும் அலை போன்ற நுரையினை மடக்கி வீசும் தன்மைஉடையது காவிரி. இவ்வாறு பொருத்தப்பாடும் வேறுபாடும் அமைவதனை இப்பாடல் எழிலுற எடுத்தியம்புகிறது
இப்பாடலில் பரிவாய்த் தலை சாய்க்கும் என ஒரு பொருள் கொண்டும் பரி வாய்த்து அலை சாய்க்கும் என பொருள் கொள்ள வேண்டியுள்ளதனால் இப்பாடல் பிரிமொழி சிலேடைக்குரியதாக அமைகிறது. இப்பாடலில் ஓடும், சுழி உடையது, சாடும், சாய்க்கும் என நான்கு பொருள் விளங்கும் வகையில் பாடப்பட்டுள்ளது.
நிறைவாக
கவிஞர்கள் பலர் தம் புலமைத் திறத்தால் புகழ் பெற்றிருந்த காலத்திலேயே அவர்களை விஞ்சி சிறப்பிடம் பெற்றுத் திகழ்ந்தவர் காளமேகப் புலவர் என்பதற்கு அவருடைய பாடல்களே சான்றாகின்றன.